திங்கள், 1 அக்டோபர், 2018

முதியோர் தினச் சிந்தனைகள்.



அக்டோபர் முதல்தேதி சர்வதேச முதியோர்தினம்  

நான் முன்பு போட்ட முதியோர் தினப் பதிவுகளைப் படித்துப் பார்த்தேன். அதிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.   

  கனவில் வந்த காந்திஜி  என்ற பதிவில்    முதியோர் பற்றிய    கேள்விக்கு   என் பதில்.

கனவில் வந்த காந்திஜி  என்ற தொடர் பதிவு
 தேவகோட்டை கில்லர்ஜி   அழைப்பு . ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை அழைத்தார்கள் அப்படி என்னை அழைத்தவர் சகோ துரை செல்வராஜூ அவர்கள்.

4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

//முதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால்  நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள்.

 அவர்களில் ஏழை முதியோர்கள், ஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்கக் கூடாது என்று அரசாங்கமே  அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க  உணவு, உடை, மருத்துவ வசதி,  அன்பாகப் பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.//

1. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?

வணக்கம் காந்திஜி , வாழ்க வளமுடன்.

நான் இருக்கும் வீட்டைச் சுற்றி கணபதி இருக்கிறார்.  அவரை வணங்கினால்  துன்பம், கர்மவினைகள், மீண்டும், மீண்டும் பிறந்து துன்புறுவது  எல்லாம் கிடையாது  என்று   விவேக சிந்தாமணி நூல் கூறுகிறது.அதனால் அவரைத் தினம் வணங்குவதால்   காந்திஜி! எனக்கு மறுபிறவி கிடையாது.

அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

10.எல்லாமே  சரியாகச் சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய் உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன  பிறவி வேண்டுமென
இறைவன் கேட்டால்?

//காந்திஜி ! முதல் கேள்வியிலேயே சொல்லிவிட்டேன் , எனக்கு மறுபிறவி கிடையாது என்று . அப்படியும் இறைவன் கொடுத்தால் அவன் விருப்பம். என்னை எப்படிப் படைக்கவேண்டுமோ அப்படிப் படைத்துக் கொள்ளட்டும்.//

இப்படிப் பதில் அளித்து இருந்தேன். இன்று மீண்டும் படித்துப் பார்த்தேன். 

கடைசிக் கேள்விக்கு இப்படியும் பதில் சொல்லலாம் என்று நினைப்பு வந்தது.

இறவாத இன்ப அன்பு 
வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 
அறவாநீ ஆடும் போதுன்
அடியின் கீழ் இருக்க 

என்றார் காரைக்கால் அம்மையார். அதுபோல்  எனக்கு மீண்டும் பிறப்பு இருந்தால் இறைவனை மறக்காமல் இருக்க வரம் வேண்டும், எப்படி பிறக்க வைத்தாலும் என்று கேட்பேன்.

எனக்கு ஏற்பட்ட துனபங்களையும், துயரங்களையும் தாங்கும் வலிமையை இறைபக்திதான் தந்தது.  இந்த மன உறுதியைத் தந்தது என் தாய்.

'//சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' என்றார் திருவள்ளுவர்.


போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர் துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள்.

எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும் துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும்  இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை சேர்த்தார்கள்.
என் தாயாருக்கு அப்போது வயது 40.//

தாய்மை என்ற பதிவு 2009 ல் போட்ட பதிவிலிருந்து.

நாளை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாள்.
அவர் மீது குண்டு பாய்ந்தபோதும் அவர் உச்சரித்தது ராம மந்திரம்.


இன்னும் சில முதியோர் சிந்தனை:-
உலகசுகாதாரதினம்  உலக சுகாதார தினம் ஏப்ரல், 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக சுகாதார தினத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவது முதுமையும் ஆரோக்கியமும்.  இந்தப் பதிவிலிருந்து  எடுத்தது கீழே:-

இனிமையும் மகிழ்ச்சியும், வேண்டும் என்றால் -அதுவும் முதுமையில் எல்லோர் நட்பும்,உதவியும் வேண்டும் என்றால் -சினம் தவிர்க்க வேண்டும்.
கவலையும் ஒரு நோய் தான் .

கவலைக்கு கவலை கொடுக்க வேண்டும். இவனை, இவளைக் கவலைப்பட செய்யமுடியவில்லையே என கவலை நம்மைப் பார்த்து ஓட வேண்டும் .அப்போது நம்மிடமிருந்த நோய் ஒடிவிடும். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். கவலையைப் போக்க வழி - வேண்டாத சிந்தனை,எல்லோரிடமும் ஏதாவது எதிர்பார்ப்பு ஆகியவற்றை விட்டுவிடுவது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்
முடிந்தால் கவலை. அப்படி ஆகி விடுமோ, இப்படி ஆகி விடுவோமோ என்ற அச்சத்தால் கவலை உருவாகிறது. கவலைப்படாமல் இருந்தால் நலமாக வாழலாம்.

முதியோர்கள் எல்லோரிடமும் நல் உறவு வைத்துக் கொண்டால், ஒவ்வொருவருக்கும் ஏற்ற முறையில் பேசிப் பழகினால் நல்லது. உதாரணம்- குழந்தைகளிடம் குழந்தைகள் மாதிரி பேசுவது. இளவயதுக்காரர்களிடம் அவர்களுக்குப் பிடித்த கிரிக்கெட், மற்றும் பல விஷயங்களைப் பேசுவது.

அவர்களும், ’இந்த பெரிசுக்கு வேலை இல்லை, நம்மை அறுக்கிறது” என்று சொல்ல மாட்டார்கள்.’அந்த தாத்தா, பாட்டிக்கு எல்லா உலக விஷயங்களும் தெரியும், மிக நன்றாகப் பேசுவார்கள், நேரம் போவதே தெரியாது அவர்களுடன் பேசினால்’என்று கூறுவார்கள்.  
சிறியவர்களிடம் பெரியவர்களும் உலக விஷயங்களை அறிந்துகொள்ளலாம். சிறியவர்களும் அதனால் மகிழ்வார்கள்.

முதியவர்கள் பொருளாதாரத்தில் தன்நிறைவு பெற்று இருந்தால் எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாய் இருக்கலாம், அதற்கு முதுமைக்கு வேண்டிய பொருளை இளமையில் சேமித்து வைத்து இருக்க வேண்டும் . பிறர் கையை எதிர்பார்த்து இருப்பதே முதுமையில் நோயாகிவிடும்.

இப்போது எல்லா முதியவர்களும் தனியாகத் தான் வாழவேண்டி உள்ளது. அது காலத்தின் கட்டாயம் ஆகி விட்டது. பிள்ளைகள் வெளி நாட்டில் பெற்றோர் இங்கு என்று இருக்கும்போது அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். நாம் தன்னம்பிக்கையுடன் வாழ்வை நடத்திச் சென்றால் அவர்கள் அங்கு நலமாய் வேலை செய்வார்கள். முன்பு இருந்த முதியவர்களுக்குக் குழந்தைகளை அடிக்கடி பார்க்கவோ, பேசவோ வசதி வாய்ப்பு இல்லை .ஆனால் இப்போது நமக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. அதில் திருப்தி பெற்றுக் கொள்ளவேண்டியது தான்.
சிறியவர்களிடம் பெரியவர்களும் உலக விஷயங்களை 
அறிந்துகொள்ளலாம். சிறியவர்களும் அதனால் மகிழ்வார்கள்.


முதியவர்களும் குழந்தை போல:-

முதியவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்கள் ஏதாவது உதவி செய்ய முன் வந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்குத் தெம்பைக் கொடுக்கும். தினம் சிறிது நேரம் அவர்களுடன் பேசுவது நல்லது. சாப்பிட்டீர்களா என்று கேட்பது, அவர்களுடன் உணவு அருந்துவது , மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களாய் இருந்தால் அதை நேரத்திற்குச் சாப்பிட்டார்களா என்று கேட்பது நல்லது. அப்போது நம் மேல் எல்லோரும் பாசமாய், அன்பாய் இருக்கிறார்கள் என்பதே அவர்களை மேலும் உற்சாகப் படுத்தும்.

ஏதோ முதுமை காரணமாக, அல்லது நோயின் தாக்கத்தால் கோபமாய் வார்த்தைகளைப் பேசினால் அதைக் கேட்காதது போல் நடந்து கொள்ள வேண்டும். குழந்தை போல் பிடிவாதம் பிடிக்கும் முதியவர்களை (குழந்தைக்கு தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காகக் குறும்புகள் செய்யும்) ஏதாவது நோயைச் சொல்லித் தன்னை எப்போதும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கும் முதியவர்களுக்கு எதைப் பற்றியும் யோசிக்க இடம் கொடுக்காமல் அவர்களை வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடச் செய்து அவர்களைச் சுறுசுறுப்பாய் இயங்க வைத்தால் நலமாக இருப்பார்கள்.

                                                     வாழ்க வளமுடன்.

32 கருத்துகள்:

  1. >>> இனிமையும் மகிழ்ச்சியும், வேண்டும் என்றால் -அதுவும் முதுமையில் எல்லோர் நட்பும்,உதவியும் வேண்டும் என்றால் - சினம் தவிர்க்க வேண்டும்.
    கவலையும் ஒரு நோய் தான் .. <<<

    நிறைவான வார்த்தைகள்...

    மீள்பதிவின் கருத்துகள் அருமை...

    வாழ்க நலம்.. வளர்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  2. எனக்குத் தான் வயசே ஆகலை! இன்னும் பிறக்கவே இல்லை! ஆகவே முதியோர்களுக்கான இந்தப் பதிவின் படி முதியோர்களிடம் நடந்துக்கணும்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

      உங்களுக்குதான் வயசே ஆகவில்லையே!
      இது முதியவர்களுக்கு மட்டும் இல்லை, முதியவர்களுடன் வாழும் சிறியவர்களுக்கும் தான்.
      (குழந்தைகளுக்கும்)
      உங்கள் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. அருமை சகோ அழகிய ஆலோசனைகள் இதற்கு எனது தொடர்பதிவும் காரணமாய் இருந்ததில் மகிழ்ச்சி.

    இந்நாளில் முதியோர்களை கை விடமாட்டோம் என்று உறுதி ஏற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கேள்விகளும் அருமையான கேள்விகள்.
      உங்கள் கருத்துக்கும், உறுதிமொழிக்கும் நன்றி.

      நீக்கு
  4. சர்வதேச முதியோர் தினத்துக்கான (மீள்) பதிவு அருமை. காந்திஜியின் நீங்கள் நிற்கும் புகைப்படமும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. முதல் பாரா விஷயத்தில் ஒரு உண்மை இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு முதியவர் இருக்கிறார். ஓரிரு வருடங்கள் முன்பு வரை அவர் தனிமையில் மிக் வாடினார். அவரவருக்கு இருக்கும் சொந்த வேலை, கவலைகளில் அவரைப் பார்க்கச் செல்வோர் குறைந்து கொண்டே வர, அவர் மனா ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டார்.

    நான் அவருடன் மிகவும் பொறுமையுடன் பேசுவேன் ன்பதால் எனக்கு அடிக்கடி தொலைபேசி ஒரே கேள்வியையே பலமுறை கேட்பார். இன்னும் சிறு அச்சிறு விஷயங்களில் எல்லாம் குழந்தை போல சந்தேகம் கேட்பார்.

    அவருக்கு வாட்ஸாப் அறிமுகம் செய்துவைத்தேன். குடும்பக் குழுவில் சேர்த்து விட்டேன். மிக விரைவாக அலைபேசியின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டவர் எங்கள் குடும்ப க்ரூப்பில் மிகவும் உற்சாகமாக பங்கெடுத்துக் கொள்கிறார். பழையாய் தனிமை உணர்வுகள் அவரிடம் இல்லை. இது வாட்சாப்பினால் நான் கண்டா ஒரு நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், நீங்கள் சொல்வது சரிதான்.
      நிறைய வீடுகளில் நேரம் இல்லை முதியவர்களுடன் பேச
      அதனால்தான் அரசாங்கம் மூலம் பேசுவதற்கு ஆள் ஏற்படுவதாய் சொன்னேன்.
      பேச ஆள் கிடைத்தால் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்தினர் ஆலோசனை கேட்கவில்லை என்றாலும் அரசாங்கம் முதியவர்களின், திறமைகள், ஆலோசனைகளை கேட்டால் நாடு நலம்பெறும் முதியவர்களும் தன்னம்பிக்கையுடன் மகிழ்வாய் இருப்பார்கள்.


      நீங்கள் செய்த செயல் மிகவும் நல்ல செயல்.இப்போது அந்த முதியவர் மகிழ்ச்சியாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      அவருக்கு உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் இருக்கட்டும்.

      நீக்கு
    2. //எங்கள் வீட்டில் ஒரு முதியவர் இருக்கிறார்.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம்.. எங்கள் வீட்டில் என்றால் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பவர் எல்லோ.. இது எங்கள் உறவில் அல்லது எங்களுக்கு தெரிஞ்ச என வரோணும்:))..

      இந்தக் கதையை நீங்க ஏற்கனவே சொல்லி நானும் படிச்சிருக்கிறேனாக்கும்:).

      நீக்கு
    3. அதிரா சொல்லுவது போல திருத்தி வாசித்துக் கொள்ள நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!!!

      நீக்கு
    4. எனக்கும் படித்த நினைவாக இருந்தது அதிரா.
      நினைத்துக் கொண்டேதான் இருந்தேன். நினைவு படுத்தியதற்கு நன்றி.

      நீக்கு
    5. அதிரா நீங்கள் சொல்லுவது சரிதான். ஸ்ரீராம் எல்லோரையும் தன் வீட்டவர் போல நினைக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!!!!!

      கீதா

      நீக்கு
    6. ஸ்ரீராம் பாராட்டுகள்!! அந்த முதியவரை மீண்டும் ஆக்டிவாக்கியதற்கு!! மனமார்ந்த வாழ்த்துகளும்!

      கீதா

      நீக்கு
    7. கீதா, ஸ்ரீராமை பற்றி கருத்து சொன்னதற்கு.
      ஸ்ரீராம் எல்லோரையும் நல்லபடியாக தன் வீட்டார் போல்தான் பார்த்துக் கொள்கிறார்.

      நீக்கு
  6. வீட்டில் சீனியர் மெம்பர்கள் இருந்தால் அவர்களுக்குக் கொஞ்சம் காது கொடுத்தாலே போதும். அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கொஞ்சம் நேரம் செலவழித்துக் கேட்க ஆளிருந்தாலே அவர்களுக்கு போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், நீங்கள் சொல்வது உண்மை.
      வயதில் மூத்தவர்கள் பேசுவதை கேட்டாலே போதும்.
      அவர்கள் கையை பிடித்து ஆதரவாய் பேசி அன்பாய் ஒரு புன்னகை புரிந்தால் போதும்.
      வயதானவர்களை வைத்தியம் பார்க்கும் மூப்பியல் வைத்தியர் நடராஜன் அவர்கள் இதை தான் தன் கட்டுரைகளில் அடிக்கடி சொல்லி வருகிறார்.
      நீங்கள் கூட தினமலரில் வந்த அவர் கட்டுரையை ஒரு முறை முகநூலில் பகிர்ந்து இருக்கிறீர்கள்.

      உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. எந்த நாட்டு வக்ஸ் மியூசியத்தில காந்தி தாத்தாவோடு நிக்கிறீங்க கோமதி அக்கா?.. அழகான கலர் சீலை.. அழகாக இருக்கிறீங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      அமெரிக்கா போய் இருந்த போது மகன் அழைத்து போன வகஸ் மியூசியம், வாஷிங்டன் என்று நினைக்கிறேன். நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
  8. கேள்வியும் பதிலும் அழகு..

    நான் எப்பவுமே நினைப்பது.. நமக்குள் ஒருநாள் நிலைமை இப்படி ஆகும்.. நமக்கும் வயதாகும்.. நமக்கும் நடை தளரும்.. எழும்ப முடியாமல் இருக்கும்.. இப்படி எல்லாம் நினைத்தே நான் முதியோரைக் கண்டால் என்னால் முடிந்தவரை அவர்களுக்காகச் செலவிடுவேன் நேரத்தை... காலம் கடுகதி எக்ஸ்பிரஸ்போல ஓடுது.. அதனால முதுமை என்பது வெகு தொலைவில் இல்லை:(..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, நீங்கள் சொல்வது உண்மை.
      நிறைய பேருக்கு நமக்கும் வயதாகும் என்ற எண்ணம் இல்லையே!
      என் அம்மா சொல்வார்கள் பழுத்தஓலை விழுந்தது கண்டு குருத்தோலை சிரித்தது என்று ஒருநாள் அதுவும் பழுத்து விழும் என்று தெரியாமல்.

      காலம் வேகமாய் தான் ஓடுகிறது யாருக்காவும் நிற்பது இல்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. கடைசி பத்தி மிகவும் சிறப்பு...

    அருமை அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      கடைசி பத்தியை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

      நீக்கு
    2. அருமையான சிந்தனைகள். காலம் ஓடும் ஓட்டத்தில் பலருக்கு
      அம்மா அப்பாவுக்கு வயதானதே நினைவில் தெரிவதில்லை.

      அப்போது நினைப்பேன் நான் என் மூத்தோரிடம் கனிவாக இருந்தேனா என்று.

      சிலசமயம் சிறையில் அடைபட்ட நினைப்பு வந்திருக்கிறது.
      ஆனால் நிலைதவறி பெரியவர்களை மதிக்காமல் இருந்ததில்லை,.
      நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்துதானே வளருகிறார்கள்.

      பெரியவர்களும் புரிந்து நடக்கவேண்டும். சிறியவர்களும் அப்படியே.
      அருமையான சிந்தனைகளை, அதுவும் நாற்பது வயதில் அப்பாவைப் பறி கொடுத்த மாவை நினைத்தால் மனம் மிகக் கலங்குகிறது.
      கோமதி என்றும் நல்லெண்ணாமும் ,நல் வார்த்தைகளும் உங்களைக் காக்கும்.

      நீக்கு
    3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      நம்மைவிட வயதானவர்கள் இருந்த போது நாம் அவர்களுக்கு குழந்தையாக இருந்தோம் வயதானது தெரியவில்லை நமக்கும்.(அத்தை, மாமா, அம்மா, அப்பா) இப்போது யாரும் இல்லை வயதானநினைப்பும் தனிமையில் வாடும் நினைப்பும் வருகிறது.

      அம்மாவின் கண்டிப்பும், அப்பாவின் கனிவும் கிடைக்கபட்டவள்.
      அம்மா அப்பாவின் பிரிவை தாங்கி கொண்டு தம்பி, தங்கைகளை வளர்த்து ஆளாக்கினார்கள். மனம் கலங்கும் போதெல்லாம் அம்மாவை நினைத்துக் கொள்வேன்.

      பெரியவர்களிடம் சிறியவர்கள் கற்றுக் கொள்வது போல், சிறியவர்களும் போரியவர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டியது இப்போது நிறைய இருக்கிறது.
      ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு காலத்தை ஓட்ட வேண்டும். முன்பு வயதானால் கிருஷ்ணா, ராமா என்று இருக்க வேண்டியது தானே ? என்று கேட்பார்களாம். ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் காலத்து ஏற்ற மாதிரி நம்மை மாற சொல்கிறார்கள்.
      மாறி வரும் உலகு. மாறிதான் ஆகவேண்டும்.

      உங்கள் அருமையான அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  10. அழகான மீள் பதிவு கோமதிக்கா. கருத்துகள் அனைத்தும் சிறப்பு. காந்தி தாத்தாவுடன் நிற்கும் படம் வெகு அருமை!

    ஆமாம் அக்கா முதியோர்களுடன் நாம் கொஞ்ச நேரம் செலவழித்தாலே போதும். அவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொண்டுவிடுவர். கண்டிப்பாகப் பொறுமை வேண்டும். முதியவர்கள் சிலர் நல்ல ஆக்டிவாகத் தங்களை வைத்துக் கொண்டு தாங்களே வெளியில் சென்று எல்லோருடனும் பழகி வருபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் இயலாமை காரணத்தால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலும் வருமல்லவா..அப்போது அவர்களுக்கு வேண்டியது அன்பு...அக்கறை. நமக்கும் வயதாகுமே...எனவே நாம் அதை நினைத்துக் கொண்டு செய்தாலே போதும்....நல்ல பதிவு அக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      .

      //இயலாமை காரணத்தால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலும் வருமல்லவா..அப்போது அவர்களுக்கு வேண்டியது அன்பு...அக்கறை. நமக்கும் வயதாகுமே...எனவே நாம் அதை நினைத்துக் கொண்டு செய்தாலே போதும்...//


      நீங்கள் மிக அழகாய் சொன்னீர்கள் கீதா.

      அருமையான கருத்துக்கு நன்றி கீதா.



      நீக்கு
  11. நல்ல கருத்துகள். முதியவர்களுக்கு முகநூல் வலைப் பக்கங்கள் துணையாக விளங்குவதை காணமுடிகிறது. அறிவுரை சொல்வது பழம் பெருமை பேசுவது இவற்றை தவிர்த்தல் நல்லது. இன்றைய குழ்ந்தைகள் இவற்றை விரும்புவதில்லை. நாம் நம்முடைய பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் எதிர்காலத்தில் குழந்தைகள் நம்மிடம் நடந்து கொள்ளும்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் முரளிதரன் , வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    பேசுவதை விட செயல் முக்கியம் தான்.
    விதை எப்படியோ செடி அப்படி என்பார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //கவலைக்கு கவலை கொடுக்க வேண்டும். இவனை, இவளைக் கவலைப்பட செய்யமுடியவில்லையே என கவலை நம்மைப் பார்த்து ஓட வேண்டும் .அப்போது நம்மிடமிருந்த நோய் ஒடிவிடும். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். கவலையைப் போக்க வழி - வேண்டாத சிந்தனை,எல்லோரிடமும் ஏதாவது எதிர்பார்ப்பு ஆகியவற்றை விட்டுவிடுவது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்
    முடிந்தால் கவலை. அப்படி ஆகி விடுமோ, இப்படி ஆகி விடுவோமோ என்ற அச்சத்தால் கவலை உருவாகிறது. கவலைப்படாமல் இருந்தால் நலமாக வாழலாம்.//
    மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    இவற்றை மனவளகலையில் கற்றுக் கொண்டது.
    வேதாத்திரி மகரிஷி சொன்னவைதான்.

    அரவிந்தர் அன்னை சொன்னது எதிர்பார்ப்பு இருக்ககூடாது என்பது.

    இடுக்கண் வரும் போது சிரிக்க சொன்னது நம் வள்ளுவர்.

    அச்சம் கொள்ளகூடாது அப்பர், பாரதி எல்லாம் சொன்னதை தான் சொன்னேன் மனோ சாமிநாதன்.


    இவை எல்லாம் எனக்கு சொல்லிக் கொண்டவைதான். வயதாகிவிட்ட்தே!

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு