ஞாயிறு, 9 மே, 2010

அன்பின் வழி

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்


அன்பு - அந்த சொல்லில்தான் எத்தனை தெம்பு. ‘கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை,
நினைத்துப் பார் பார் அது தரும் தெம்பை’ அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்புதான் உலக மகா சக்தி! அன்பு என்பது புனிதமானது!. அன்பு என்பது தெய்வமானது!
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது என்ற பழைய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது யாருக்காவது முழுப் பாடலும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

அன்பின் வழி,அன்பு மேலீட்டால் செய்யப்படும் வேலை, நிச்சயமாக நல்ல வலிமையான ஒனறுதான்.(நன்றி -’அன்னையின் அருள்மலர்கள்’)

உலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும் தாயாக விளங்கும் இறைநிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

”உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்த பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.

ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கொண்டாடுவோம்.”வேதாத்திரி மகரிஷி

ஒவ்வொரு வீட்டிலும் தாய்தான் தெய்வம்.

தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்!
அன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.

அன்பின் வழியது உயிர்நிலை.

திங்கள், 3 மே, 2010

சிறுசிறு அரும்புக்கு குறும்புகள் வளருது ,ஓ மைனா மைனா !

ஊரில் இருக்கும் போது சின்ன கண்ணனை நினைக்காத நாள் இல்லை. எப்போது அவனைப் பார்ப்போம்,அவனை அள்ளி அணைப்போம் என்று மனமும்,உடலும் துடித்துக் கொண்டு இருந்தது. ஊரில் இருக்கும் போது தினம்’ வீடியோ சாட்டில்” அவனைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்ததால் குழந்தை தாத்தா,ஆச்சியை தெரிந்து கொண்டு தாவி வந்து அணைத்துக் கொண்டு இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்.

பத்து நாட்கள் கைப்பிடிக்குள் அடங்கி இருந்தான்,பின் கையிலிருந்து நழுவி கீழே தவழுவதில்
ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டான்.கொஞ்சம் முன்னால் வந்து இருந்தால் கைப்பிடிக்குள் இருந்து இருப்பான். வீடு முழுவதும் தவழுவதும் ,பின் நம்மை வந்து பார்த்து சிரிப்பதும் என்று விளையாடுவான்.நாளுக்கு நாள் சிறு அரும்புக்குக் குறும்புகள் வளர்கின்றன.

கண்ணனின் கண்ணாம்பூச்சி:

வேக வேகமாய் தவழ்ந்து மேஜைக்கு அடியில், சமையல் அறையில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்து சிரிப்பான். நான் அவனைப்பார்த்து செல்ல கண்ணன், செல்ல குட்டி எங்கிருக்கான்,காணோமே என்று கேட்டால் இந்தாயிருக்கேன் என்று சொல்வது போல் எட்டிப் பார்த்து சிரித்து விளையாடுகிறான்.இந்த விளையாட்டை திரும்ப திரும்ப எல்லோரிடமும் விளையாடச் சொல்லி கேட்பான்.

படுக்கையில் படுத்தால் ரஜாயில் முகத்தை புதைத்துக் கொண்டும் பின் வெளியில் முகத்தை எடுத்தும் வேடிக்கை காட்டுகிறான் நமக்கு.வீட்டில் சமையல் அறையை தவிர எல்லா இடங்களிலும் தரை விரிப்பு உள்ளதால் அவனுக்கு சாவி கொடுத்து விளையாடும் பொம்மைகள் விளையாட முடியாது. ரிமோட் கார்களும் சாவி கொடுக்கும் பொம்மைகளும் இருந்தாலும் அவன் விளையாடுவது பில்டிங் செட்டில் உள்ள இரண்டு பிளாக்குகளை வைத்துக் கொண்டு தான். சமையல்அறையில் போய் அவற்றைத் தட்டி விளயாடுவான்

எதில் எதில்லெல்லாம் சத்தம் வருகிறதோ அதிலெல்லாம் தட்டுவான். எனக்கு சிற்பக் கலைஞர் கல்லை தட்டிப் பார்த்து சிற்பம் செய்ய சரிப்படுமா என்று பார்ப்பது போல் தோன்றும். என் மகன்,’ உன் பேரன் நல்ல கல் உடைக்கிறான் பார்’ என்பான்.

ஒவ்வொரு பருவத்திலிலும் விளையாடும் விளையாட்டை எல்லாம் நான் அவனிடம் செய்து மகிழ்ந்தேன்.’ கீரி கீரி நண்டு பிடி, கீரிப் பிள்ளை நண்டு பிடி’,’தாப்பூ தாமரைப் பூ.’’கீரை கடை, பருப்புகடை’,’ சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு’,’ஆ குத்து அம்மா குத்து ,பூங்குத்து பிள்ளயார் குத்து, பிடிகுத்து என்று சொல்லும் போது அவன் பிஞ்சு கையை நம் கைகளில் அடக்கி கொண்டால் சிரி,சிரி என்று சிரித்து கையை வெளியே பிடுங்கி எடுத்து மறுபடியும் வைக்க வருகிறான். இப்போது யானை மாதிரி முன்னும் பின்னும் போகிறான், அதனால் ’யானை யானை அம்பாரி யானை பாடுகிறேன்’ சிரிக்கிறான் கால்களில் படுக்க வைத்துக் கொண்டு ஊஞ்சல் ஊஞ்சல் என்று ஆட்டினால் மகிழ்கிறான்.விளையாட்டு சாமான்களை அடுக்கி வைத்து இருக்கும் டப்பாவை கவிழ்க்கும் விளையாட்டு மிகவும் பிடித்தது.

அவனை வைத்துக் கொண்டு தோசை சுடும் போது’ தோசை அம்மா தோசை’ பாடினால் ரசிக்கிறான்.’காக்கா காக்கா மை கொண்டா’ பாட முடியாது இங்கு காக்காவே இல்லை,மைனா தான் நிறைய இருக்கு .ஊர்க் குருவிக்கு இல்லை தட்டுபாடு.கிளி இல்லை, அணில் நிறைய உள்ளது. மலை அணில் (நிறம் பிரவுன் கலர்) 1அடிஉயரம் உள்ளது.சாம்பல் நிற அணில் முக்கால் அடி உள்ளது. வீட்டிலிருந்து அவனை வாசலுக்கு தூக்கி வந்து ’ மைனா மைனா மை கொண்டா, காடை குருவி மலர் கொண்டா அணிலே அணிலே பழம் கொண்டா’ என்று பாடுவேன். வா வா சொல்லி கொடுத்து இருக்கிறேன் குருவி,மைனா,அணிலைப் பார்த்தால் உடனே வா வா என்பான். மரங்கொத்தி பறவை பைன் மரத்தில் உட்கார்ந்து சத்தம் கொடுப்பதை ரசிப்பான். வீட்டின் கதவை திறந்தாலே அலை அடிக்கும் சப்தம் தான். மரங்களில் காற்று நுழைந்து எழுப்பும் சத்தம் நன்றாக இருக்கிறது.(இன்னிசை பாடி வரும் பாடல் நினைவுக்கு வருகிறது)

சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு பாடினால் சாய்ந்து ஆடுகிறான். கைவீசு அம்மா கை வீசு கடைக்கு போலாம் கை வீசு பாடலுக்கு பொருத்தமாய் இங்கு கடைகள் ஏராளம். மிட்டாய் வாங்கலாம் கை வீசு க்கு ஏற்றாற்போல் நிறைய மிட்டாய்க் கடைகள் உள்ளன.மெதுவாய்த் தின்னலாம்.(மெதுவாய் தின்கும் மிட்டாய்கள் தான் ஏராளம்) சொக்காய் வாங்கலாம் கை வீசுக்கு நிறைய வித விதமாய் துணிக்கடைகள் உள்ளன. கை வீசுவதுடன் ’கை வீச்சும்’ இருந்தால் சொக்காய் சொகுசாய் போடலாம். சொகுசாய் வாழலாம்.

மேலே இரண்டு பல் ,கீழே இரண்டு பல் வந்து இருக்கிறது. அதற்கு உடம்பு படுத்துகிறது. அதனால் அழும் போது எல்லாம் புதிது புதிதாக் விளையாடி பல் முளைக்கும் துன்பத்தினால் அவன் படும் எரிச்சலை மறக்க செய்வோம்.வீட்டின் அமைப்பு கீழ் தளம் ,மேல் தள்ம் என்று இருப்பதால் அவனின் படுக்கை அறை மேலே உள்ளது. அவனை தாத்தா ஆடும் நாற்காலியில் வைத்து கொண்டு ஆட்டி தூங்க வைத்து அவன் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்தால் சிறிது நேரத்தில் விளையாடும் ஆசையில் விழித்து விடுவான்.


விழித்து விட்டால் பார்ப்பதற்கு மானிட்டர் கீழே உள்ளதால் உடனே போய் எடுத்து மறுபடியும் தூங்க வைப்பார்கள் தாத்தா.தாத்தா ஆச்சியிடம் விளையாடிக் கொண்டு இருந்தாலும் அம்மாவைப் பார்த்து விட்டால் சிறிது நேரம் அம்மாவிடம் கொஞ்சி அம்மாவை மகிழ்வித்து விட்டு வருவான்.

அப்பாவின் தலைமுடியைப்(கண்ணாடியையும்) பிடித்து இழுத்து விளையாடுவது என்றால் மட்டில்லா மகிழ்ச்சி.

பாட்டில் விருப்பம் அதிகம் செல்ல கண்ணனுக்கு. உண்ணும் போதும் உறங்கும் போதும் காரில் பயணிக்கும் போதும் பாடல்கள் வேண்டும். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பாடல்கள் வேண்டும்.காரில் பயணிக்கும் போது அவனை தனியாக தானே கார் சீட்டில் வைக்க வேண்டியதாய் உள்ளது. முதலில் அமைதியாய் விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போது அதிலிருந்து வெளியில் வர அழுகிறான்,எங்களைத் தூக்கச் சொல்லி.அவன் அப்பா ராக ஆலாபனை செய்து லட்டு,பட்டு என்று அவ்வப்போது கூப்பிட்டால் அப்பாவை கழுத்தை வளைத்துப் பார்த்து சிரித்து மறுபடியும் பாடு என்று சொல்கிறான்.

நான் பழைய சினிமா பாடல்கள் ராகத்தில் தாலாட்டு பாடல்களை நானே புனைந்து பாடினால் ரசித்து சிரித்து நம்மை அங்கீகரித்து உற்சாகப் படுத்துகிறான். அவன் தாத்தா,’ பாட்டு பித்தனாய் இருக்கிறானே இப்படி எல்லோரையும் அங்கீகரித்து உற்சாகப் படுத்தினால் எல்லோரும் பெரிய பாடகர்கள் ஆகிவிடுவார்கள்’ என்று சொல்கிறார்கள். பாராட்டுதானே எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது.

அவன் விரும்பி கேட்கும் பாடல்கள் அடுத்த பதிவில்.