சனி, 15 பிப்ரவரி, 2014

திருக்கண்ணபுரப் பெருந்திருவிழா

         //மன்னுபுகழ்க்  கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
         தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
         கன்னிநன்மா  மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
         என்னுடைய இன்னமுதே இராகவனே தாலே தாலேலோ//
                                                                      
                                                                                     - குலசேகராழ்வார்

     
                               
                                  

                                 
                               
9.2.2014 ஆம்தேதி திருக்கண்ணபுரம் சென்று இருந்தோம். அன்று அங்கு கருட சேவை, அரையர் சேவை  நடைபெற்றது. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.

திருக்கண்ணபுரம் போக நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் பஸ்ஸில் திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்கி 2, கி,மீ போக வேண்டும்.நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 7 கி,மீ தூரம். மாயவரத்திலிருந்து சன்னா நல்லூர்வழியாக திருப்புகலூர் வரலாம்.குடவாசலிருந்தும் பஸ் வசதி உண்டு.

மூலவர்: நீலமேகப் பெருமாள், செளரிராஜன்,
                   நின்ற திருக்கோலம்
உத்ஸ்வர் : செளரிராஜ பெருமாள்.
தாயார் : கண்ணபுர நாயகி (ஸ்ரீ தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி)
                  தனிக்கோயிலில் நாச்சியார் இருக்கிறார்.
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி  
விமானம் : உத்பலாவதக  விமானம்.
கண்வமுனிவர், கருடன், தண்டக மஹரிஷிஆகியோருக்கு காட்சி கொடுத்து இருக்கிறார் இத தலத்தில்.

இத்தலப் பெருமாள் கையில் சக்கரம் , இடது புறம் ஆண்டாள், வலதுபுறம் பெருமாள் மணந்து கொண்ட பத்மாவதி தாயார் என்ற செம்படவ அரசகுமாரியும்  உள்ளனர்.  உற்சவ பெருமாள் கன்யாதானம் வாங்க கையேந்திய நிலையில் காட்சி அளிக்கிறார்.

கோயிலின் பெருமைகள் ;

  1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.

2. திருமங்கையாழ்வாருக்கு  திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.

3.  ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை  காட்டுவதாக வாக்களித்ததைக் காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால் செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.

4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.

5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.  மஹரிஷிகளின்  பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த  கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.

6.  முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த  பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார். மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது  மூலஸ்தானத்தில்  வெண்பொங்கல்  வாசனை நிரம்பி இருந்தது. அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர். தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .

மங்களாசாஸனம்:            பாசுரங்கள்
பெரியாழ்வார் -                   71
ஆண்டாள்         -                   535
குலசேகராழ்வார் -            719- 729
திருமங்கையாழ்வார் _    1648-1747- 2067- 2078- 2673  (72)
நம்மாழ்வார்                   -     3656-3666
மொத்தம்                               128 பாசுரங்கள்.

’திருக்கண்ணபுரத்தில் பெருந்திருவிழா நடக்கிறது, ஒரு நாள் போய் வருவோம்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் என் கணவர். ஜெயா தொலைக்காட்சியில் திருவரங்கம் 100 என்று  பேசிக்கொண்டு இருக்கிறார் (அது மறு ஒலிபரப்பு)திரு. வேளுக்குடி திரு.கிருஷ்ணன் அவர்கள் . அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது இடையில் கண்ணபுரத்தில்  விழாவில் மாலை 4.30 6.30 வரை பேசுகிறார் என்ற செய்தியைச் சொன்னார்கள். கருட சேவை நிகழ்ச்சி,கிருஷ்ணன் அவர்களின் பேச்சு இரண்டையும்  பார்த்து விடலாம் என்று அங்கு போய் வந்தோம்.
                               

                                          


                             
முதலில் கோவில் வாசலில் உள்ள புனித புஷ்கரணியைப் படம் எடுத்துக் கொண்டோம்.
 திருக்குளத்துக்குஅருகில் தசாவதார மண்டபம் ஒருபக்கம் ராமர் பட்டாபிஷேகம்-  மறு பக்கம் அனுமன் ராமரை வணங்கும் காட்சி- சித்திரம் வரையப்பட்டு இருக்கிறது.
                                       
                                                               ராஜகோபுர வாயில்
                               
                                       

                                      
ஆண்டாள் சந்நதி- இங்கு தான் திரு. கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம்  நடந்தது

ஆண்டாள் சந்நதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களின் பேச்சைக் கேட்க அமர்ந்து விட்டோம் . அவர் பேச ஆரம்பித்து விட்டார். ’திருக்கோளூர் பெண் பிள்ளை  வார்த்தைகள்’ என்ற தலைப்பில்  பேசினார்.உபன்யாசத்தில் இருந்து நிறைய செய்திகள் தெரிந்துகொண்டோம்.

திருக்கோளூர்  பெண்பிள்ளை வரலாறு

திருக்கோளூர்  என்ற ஊருக்கு   இராமானுஜர் சென்ற போது அங்கிருந்து ஒரு பெண் பிள்ளை ஊரை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்தார். இராமானுஜர் , ’தாயே !நான் ஊருக்குள் வரும் போது நீங்கள் வெளியேறக்  காரணம் என்ன ? ’என்றபோது.  ’காலம் தோறும் தோன்றிய திருமாலடியார்கள் சாதித்தது
போல் நான் சாதிக்கவில்லை’,  என்று கூறி அவர்கள் செய்த செயல்களைப் பட்டியலிட்டு கூறினார். இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றிலிருந்து   சான்றோர்கள் செய்த 81  அருஞ்செயலகளை   கவிதையாக  வடிவில் கூறினார்.

இராமானுஜரும், திருக்கோளூர் சான்றோர்களும் அந்த பெண் பிள்ளை பணிவையும், ஞானத்தையும் கண்டு வியந்து அவர் திருமாலடியார்களைப் பற்றி பாடிய கவிதைகளை ”திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்” என்று குறிப்பிடுகிறார்கள் . அந்த 81  பாடல்கள் பற்றித் தான் தொடர் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார்.

 முந்தின நாள்  தான் பேசியதின் தொடர்ச்சியாக  29 வது  கேள்வியிலிருந்து பேச ஆரம்பித்தார். தங்குதடையற்ற அருவி போன்ற பேச்சு. 44 வது கேள்வியுடன் முடித்துக் கொண்டார், மற்றவை நாளை என்று.

நாங்கள் போன அன்று பேசிய பெண்பிள்ளையின் கேள்விகள் இவை
:
29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே!
31,குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!
34, இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36,இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார்போலே!
37,அவனுரைக்கப்  பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.மண்பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43. பூசக்கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!

4.30மணியிலிருந்து 6.30 வரை இரண்டு மணி நேரம் மிக அருமையாக பேசினார். நேரம் போனதே தெரியவில்லை. குறிப்புகள் எடுத்துக்கொண்டேன் அவற்றையும் பகிர்ந்தால் இன்னும் பதிவு பெரிதாகி விடும்.
 இவ்வளவு நாளாய் அவர் பேசிய சொற்பொழிவுகளைத்  தொலைக்காட்சிகளில் (விஜய், ஜெயா, பொதிகை)   கேட்டு மகிழ்ந்த நாங்கள் நேரில் கேட்டு மகிழ்ந்தோம்.
                                     

இறைவன் புகழ் பாடிய அவரை அனைவரும்பெரியவர், சின்னவரென்று பேதம் இல்லாமல் எல்லோரும் பாதம் பணிந்து வணங்கினர்.
                                 

                                  


பிறகு கோவில் உள்ளே போய் செளரிராஜப்பெருமாளைச் சேவித்தோம். அவருக்கு மலர் கிரீடம், மலரில் ஆடை அணிந்து இருந்தார்கள். அவ்வளவு அழகு. கையில்  தீயவரை அழிக்க  தயாராக வீசும்  நிலையில் சக்கரம். அதை பட்டர் அழகாய் தீப ஒளியில் ஒவ்வொருவருக்கும் பொறுமையாய் கதை சொல்லி, காட்டுகிறார்.  ஒரு வயதான அம்மா எல்லோரும் பொறுமையாக உள்ளே போங்கள் பொறுமையாய் பாருங்கள் அவசரம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நிம்மதியாக  பொறுமையாக பெருமாளை தரிசித்தோம்.

அடுத்து தாயார் சந்நதி சாந்தமும் மகிழ்ச்சியும் ததும்பிய முக பாவத்துடன் கண்ணபுர நாயகி தன் கருணை பொருந்திய கண்களால் எல்லோர்க்கும் அருள்மழை பொழிந்து கொண்டு இருக்கிறார்.

                                

கருட சேவை:

 அலங்காரம் செய்து அழகாய் காட்சி அளித்தார் செளரிராஜ பெருமாள். அவருக்கு எதிரில் கருடன் இருந்தார். தனியாக பார்த்தோம். கருடன் மேல் இன்னும் வைக்கவில்லை.
                            

                                      
                                    


அரையர் சேவை:

  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்த அரையர்சேவை சாதிக்க  ஒருவர் மட்டும் வந்து இருந்தார்.அவர் அழகாய் பாசுரங்களை   அபிநயம் செய்தும், தாளத்தை இடை இடையே  இட்டும் பாடினார். மிக  மென்மையான குரல். அழகிய தோற்றம்.

அது முடிந்த பின் இரண்டு பெண் குழந்தைகள் பரதநாட்டியம் ஆட அமர்ந்து இருந்தனர்.ஆனால் வெகு நேரம் ஆகி விடும் என்பதால் இருந்து பார்க்கவில்லை.இரவு கார் ஓட்டி வர சிரமம் என்பதால் கிளம்பி வந்து விட்டோம். தங்கும் இடம் இருக்கிறது. கோவில் வாளகத்தில் விசாரித்த போது  இடம் இல்லை என்றார்கள். அறைகள் கோபுர வாசல் பக்கமே இருக்கிறது.

                                                           தங்கும் அறைகள்


சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்  பாடல் எப்போதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்

”திருக்கண்ணபுரம் செல்வேன்,
கவலை எல்லாம் மறப்பேன். 
கண்ணனின் சந்நிதியில் 
எந்நேரமும் இருப்பேன்.”

 அது போல் அமைதியான கோவில் அழகான பெருமாள், எந்நேரமும் அங்கு இருக்க ஆசைதான்.

                                                             வாழ்க வளமுடன்

                                                                 =============

          

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காஞ்சி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

   


காஞ்சி விநாயகர் விமானம்

கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். பழைய கோவில்களைப்  பழமை மாறாமல் கும்பாபிஷேகம் செய்யலாம்.  அப்படி ஒரு சில கோவில்கள் தான்  பழமை மாறாமல் இருக்கிறது.

நம் வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளை அடித்து பழுது அடைந்தவைகளை சரி செய்வது போல் கோவில்களுக்கும் 12 ஆண்டுக்கு ஒருமுறை  தெய்வசிலைகளுக்கு கீழ் உள்ள மருந்துகளைப் புதிதாக வைத்து, கலசங்களில் உள்ள தானியங்களை மாற்றி, கோபுரங்களில் உள்ள புல், செடிகளை களைந்து சுத்தம் செய்து மீண்டும் தெய்வங்களுக்கு  ஹோமம் எல்லாம் செய்து, சக்தியை மேம்படுத்துவது என்பார்கள் கும்பாபிஷேகத்தை.

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காஞ்சி விநாயகருக்கு 9 ம் தேதி கும்பாபிஷேகம் ஆனது.  6 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, , கணபதி ஹோமம், நவகிரஹக ஹோமம்,கோபூஜை,  கஜபூஜை, தன் பூஜை எல்லாம் நடைபெற்றது. 7 -ம் தேதி , 8 -தேதிகளில் தினம் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று 9-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் ஆனது.

                         
  யாகசாலையில்தங்ககவசத்தில்காஞ்சிவிநாயகரின் கடம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
                           
                          
                                                                    யாகசாலை
                          
                                                  யாகசாலையில்  பூஜை
                          
                       மருந்து வெண்ணெயுடன் சேர்த்து இடிக்கப்படுகிறது.
                             
யாகசாலையிலிருந்து மூலஸ்தான விநாயகருக்கு சக்தி ஊட்டப்படுகிறது.
                             
                                     யாகசாலை பூஜை நிறைவு பெறுகிறது
                           
                               விநாயகமூர்த்தி கடத்திற்கு பூஜை நடக்கிறது.
                              
                                                        கடம் புறப்பாடு
                            
                                  விநாயகர் விமானகலசத்திற்கு அபிஷேகம்
                            
                                    முன் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம்

கோவில் வரலாறு:

முன்பு ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் சைவ மரபில் தோன்றிய சாலிய பெருமக்கள் நெசவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வணிகம் செய்து வளமுடன் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் அவ்வூரை ஆண்ட மன்னனின் தீய எண்ணங்கண்டு , படையெடுப்புக்கு அஞ்சிய சாலிய மக்கள் ஒன்று கூடி காஞ்சிபுரத்தை விட்டு வேளியேற என்னும் போது அவர்கள் வணங்கி வந்த விநாயகர் பெருமான் தன்னையும் தங்களோடு அழைத்து செல்லுமாறு அவர்கள் கனவில் தோன்றி அசரீரி கூற்று மூலம் கூறவே அவர்களும் அவ்வூரைவிட்டு கிளம்பும் போது அவ்விநாயகர் பெருமானையும் தலையில் சுமந்து கொண்டு வந்தனர். வரும் வழியில் ஒருநாள் ஓரிடத்தில் இரவு விநாயகரை இறக்கி வைத்து விட்டுத் தங்கி மறுநாள் புறப்படும்போது விநாயகரை தூக்க முயன்ற போது அவ்விநாயகரை அசைக்க முடியவில்லை. விநாயகப்பெருமானே தமக்கென்று அவ்விடத்தைத்  தேர்வு செய்து கொண்டு ஸ்தாபிதம் ஆகி விட்டார். அந்த இடத்திலேயே சாலியப்பெருமக்கள் ஒன்று கூடி விநாயகருக்கு ஆலயம் எழுப்பி வணங்கி வந்தனர். (அந்த இடம் தான் தற்போது  மயிலாடுதுறை , கூறைநாடு பெரியசாலிய தெருவில் உள்ள ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம் ஆகும்,) 

சாலிய பெருமக்கள் ஆலயத்தை சுற்றிலும் தங்களுக்கு வீடு அமைத்துக் கொண்டு குடி அமர்ந்தனர். அந்த இடத்திலேயே சாலியபெருமக்கள் குலத்தொழிலான நெசவுத் தொழில் செய்து கூறைச் சேலைகளை உருவாக்கி வணிகம் செய்து பொருள் ஈட்டி சிறப்புடன் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான சிவநேசநாயனார் என்பவர் சாலிய குலத்திலே தோன்றியவர். இவர் சிரத்தையுடன் சிவத்தொண்டு புரிந்தவர். இவர் வழியில் வந்த சாலிய சமூகத்தினர்களுக்குச் சொந்தமான இவ் விநாயகர் காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்து கோயில் கொண்டுள்ளதால் ஸ்ரீ காஞ்சி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

-இதற்கு முன்பு நான் பகிர்ந்து கொண்ட
 ’விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை’ என்ற  பதிவில் இட்சதீபம் நடந்த  புனுகீஸ்வரர் கோவிலைப் பற்றி  சொன்னேன் அல்லவா? அதுவும் இவர்கள் கோயில் தான். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் 1883 -ம் வருடம்  சிவநேசநாயனார் மரபு வழி வந்த கூறைநாடு சாலிய மகா சமூகத்தால் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது என்று புனுகீஸ்வரர் கோவிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

 ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் காம்பீலி வட்டம் காம்பீலி நகரத்தில் தோன்றிய நேசநாயனார் சாலிய மரபில் வந்தவர். சிவனையும் சிவ அடியார்களை நேசித்தபடியால் இவர் சிவநேசநாயனார் என்று அழைக்கப்பட்டார். அவர் புனுகீஸ்வரர் கோவிலில் காம்பீலியிலிருந்து எடுத்து வந்த விநாயகரையும், தண்டாயுதபாணியையும் பிரதிட்டை செய்தார் என சொல்லப்படுகிறது. ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்கு இவர்கள் சிறப்பாக் குருபூஜை செய்கிறார்கள்.

சாலியர்களுக்கு சொந்தமான கோவில்கள்: 

1.முதன்மையான் கோவில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த விநாயகர் கோவில் ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம்
2.கீழஒத்தசரகு சித்தி புத்தி விநாயகர்
3.வடக்கு சாலிய தெரு ஸ்ரீ செல்வவிநாயகர்
4செங்கழுநீர் விநாயகர் ஆலயம்
5.ஸ்ரீ வெள்ளதாங்கி அய்யனார் ஆலயம்
6.கல்லக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
7.காவிரிக்கரை காசி விஸ்வநாதர் ஆலயம் (கூறைநாடு)
8.குருக்கள் பண்டாரத்தெரு, ஸ்ரீ கனக மாரியம்மன் ஆலயம்
9. தனியூர் சாலியதெரு தாமோதர விநாயகர் ஆலயம்
10. தெற்கு சாலியதெரு ஸ்ரீ வெற்றி விநாயகர்.

ஆண்டு தோறும் எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடக்கும்.


  காஞ்சி விநாயகர் கோவில் உட் பிரகாரத்தில் வரையப் பட்ட படங்கள்.
சிவக்குடும்பம்

வியாசபாரதம் எழுதும் பிள்ளையார்

அகத்தியரின்  கமண்டலத்தைக் கவிழ்க்கும் காக்கைப் பிள்ளையார்
ஒளவையிடம் மெதுவாய் நிதானமாய் பூஜை செய், உன்னைக் கயிலைக்கு என் துதிக்கையில் கொண்டு விடுகிறேன் என்று சொல்லும் பிள்ளையார்.

ஒளவையார் அருளிய அகவல்
கோயிலுக்குள் மேல் கூரையில் 63 நாயன்மார்கள் ஓவியம்.
மூன்று நாட்களும் தேவார இன்னிசைக் கச்சேரி சிறப்பாக நடந்தது. சிவக்குமார் ஓதுவார் குழுவினரால்.

மயிலாடுதுறை வந்ததிலிருந்து இந்த கோவில்களும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களும் எங்கள் வாழ்க்கையில்  ஒரு அங்கமாய் விட்டனர். எங்களுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் பேரக்குழந்தைகளுக்கு என்று மூன்று தலைமுறை தொடர்ந்து இவர்களின் நட்பு நீடிக்கிறது. 

                                                                 வாழ்க வளமுடன்!


திங்கள், 10 பிப்ரவரி, 2014

விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை!

                       விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
                      விளக்கினின் முன்னே வேதனை மாறும்
                      விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
                      விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
                                                                                        -- திருமந்திரம். 1818.

தினமும் தான் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோம். வெள்ளி என்றால் இன்னும் கொஞ்சம் விசேஷம். அதுவும் தைவெள்ளி, ஆடிவெள்ளி என்றால் மிக விசேஷம் கோவில்களில். வீடுகளிலும் வெள்ளி என்றால் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வது, விளக்கு பூஜை செய்வது என்று இருக்கும்.

  என் அம்மாவுக்கு எல்லா வெள்ளிக்கிழமையும் விசேஷம் தான். . ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கு பூஜையில் லட்சுமி அஷ்டோத்திரம், விளக்கு போற்றி, துளசிமாதா ஸ்லோகம், திருவிளக்கு அர்ச்சனை எல்லாம் செய்யவேண்டும் - அதுவும் காலையில்.  முதலில் என் அக்கா - அக்காவுக்கு திருமணம் ஆனவுடன் - அடுத்து நான். எனக்குப் பிறகு என் தங்கைகள் செய்தார்கள். சிறுமியாக இருந்தபோது அதன் முக்கியத்துவம் தெரியவில்லை, அப்போது எல்லாம் அன்றைய நாளில் வரும் விகடனைப் படிக்கமுடியவில்லையே என்றுதான் இருக்கும். சீக்கிரம் பூஜை முடிக்க வேண்டும், விகடன் படிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியாது. ஆனால் இப்போது அம்மா சொல்லிக்கொடுத்த விளக்கு பூஜையின்  அருமையை  உணர்ந்தவள்.


 


எங்கள் குடும்பங்களில் பெண் கல்யாணத்திற்கு கொடுக்கும், வெள்ளிக்குத்து விளக்கு, வெண்கலக்குத்து விளக்கைப் புகுந்த வீட்டுக்குப் போனபின் முதல் முதலில் ஏற்றும்போது அதற்கு வடைமாலை சார்த்தி, பாயசம் வைத்து வணங்க வேண்டும்.  முன்பு எல்லாம் தினமும் விளக்கை விளக்கி அதற்கு பொட்டு வைத்து வணங்க வேண்டும். காலம் செல்லச்செல்ல, திங்கள்கிழமை, வியாழக்கிழமை மட்டும் விளக்குவது  வழக்கம் ஆகிவிட்டது.


தை கடைவெள்ளி அன்று (7/2/2014)எங்கள் ஊரில் உள்ள அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் கோயிலில் லட்சதீபம் நடைபெற்றது. கடந்த 20 வருடங்களாக நடத்தி வருகிறார்கள்.   இதனை   நடத்துபவர்கள்: - ஸ்ரீபுனுகீஸ்வரர் ஆலய உழவாரப் பணி மன்றம், சிவனடியார் திருக்கூட்டம், இந்துசமய தத்துவ விசாரணை மையம், மற்றும் ஸ்ரீபுனுகீஸ்வரர் ஆலயநிர்வாகம்.

வருடாவருடம் அதில் என் கணவர் திருவிளக்கு வழிபாட்டைப்பற்றிப் பேசுவார்கள். இறைவன் அருளால் 20 வருடங்களாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். புனுகீஸ்வரகோவிலில் நடக்கும் வார வழிபாட்டு மன்றம் நடத்தும் ஆண்டுவிழாவிலும் 30 வருடமாய் பேசிவருகிறார்கள். 

அன்று திருக்கயிலை பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமகா
சந்நிதானம் வந்து விளக்கேற்றி துவக்கி வைப்பார்கள். இந்த முறை
திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள் வந்து விளக்கேற்றி அருளுரை வழங்கினார்.

                                    

                                     
                                    
                                      

 கொடிமரத்திற்கு நேரே அழகாய்ப் பெரிய குத்துவிளக்கு
அலங்கரிக்கப்பட்டு இருந்தது அநத விளக்கை முதலில் ஏற்றி
இலட்சதீபத்தை  தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைக்க , கோவில் முழுவதும் மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் விளக்கு ஏற்றத்
தொடங்கினர்.சுமார் ஒருமணி நேரத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோவில்

முழுவதும் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது.

எப்படி விளக்கு ஏற்றவேண்டும், எந்த உலோகங்களில் ஏற்றினால் நல்லது
என்ன எண்ணெய் ஊற்றி ஏற்றினால் நல்லது.  விளக்கை எப்படி துலக்குவது என்று எல்லாம் பேசினார்கள், பெரியபுராணத்தில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும்நன்மைகளைக் கூறும் பாடல்கள், திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் என்றும்,பேசினார்கள் அதன் பின்  பேராசிரியர் பெருமக்கள் பேசினார்கள். முதலில்பேசிய பேராசிரியர் என் கணவர்.

                               

கோவிலில் விதவிதமாய்க் கோலங்கள் போட்டிருந்தார்கள் பெண்கள்.
தெய்வ உருவங்களை அழகாய் வரைந்து, அதைச் சுற்றிலும் விளக்கு வைத்து
இருந்தார்கள்.
                           
     

                                     

                                                                                                                            

                            
                                       

                                     

                                     
                                     
                                         

மக்களை மாலை நேரம்  கோவிலுக்கு வரவழைக்க இது போன்ற விழாக்களால் தான் முடியும் போல்! அவ்வளவு மக்கள் கூட்டம்.  விளக்கு எரிக்க எண்ணெய் இல்லாமல் எவ்வளவு கோவில் இருள் அடைந்து கிடக்கிறது. அங்கு எல்லாம் இப்படி இலட்சதீபம் ஏற்ற வாரீர் என்று போட்டு எண்ணெயை வாங்கிச் சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் ஏற்றலாம்.


(’தீபத் திருநாள் திருக்கார்த்திகை’  என்ற பதிவில்  திருவிளக்குப்பாடல்கள்,
நாயன்மார்களும், ஆழவார்களும், நம் முன்னோர்களும் பாடிய பாடல்கள்
தொகுப்பு உள்ளது.

ஜோதி வழிபாடு’ என்ற பதிவில் விளக்கேற்றி அற்புதம் புரிந்தவர்களைப் பற்றிக்
குறிப்பிட்டு இருக்கிறேன். படிக்காதவர்கள் படித்துப்பார்த்து உங்கள்
கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்.)
                                                        
குருக்கள் சாந்தநாயகிக்கு அழகாய் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து
இருந்தார்.

                                           

                                              புனுகு பூனை பூஜித்த புனுகீஸ்வரர்.

கோவில் கோபுரம் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அன்று நடந்த விழா சிறப்பு படங்கள் உங்கள் பார்வைக்கு:
 
     




அக இருளை விலக்கி, அங்கு ஒளி பொருந்திய இறைவனைக்
குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

                                                                   வாழ்க வளமுடன்.
                                                                              ------------