ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கழுகுமலை


என் கணவர் சிறு வயதில் பள்ளி விடுமுறையின்போது  தன் சித்தப்பா  வசித்த
கழுகுமலைக்கு அடிக்கடி போவார்களாம்.  அங்குள்ள வெட்டுவான் கோவிலுக்கு சித்தப்பாவின் மகன்களுடன் போவார்களாம். கல்லூரி ஆசிரியரான பிறகு மாணவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சுற்றுலா போயிருக்கிறார்கள்.  எப்போதும் எங்களிடம் அந்த கோவிலைப்பற்றி சொல்லி எங்களுக்கும்  கழுகுமலையைப் பார்க்கும் ஆசையை  ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்தமுறை என் மகன் அதற்கும் பயணத்திட்டம் வகுத்து இருந்தார்.  நாங்கள் அங்கு போனோம்.

திருநெல்வேலி  அருகே உள்ள கோவில்பட்டியிலிருந்து  சங்கரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபது கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.

கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை

1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி  திருக்கோயில்
2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்
3.சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்,சமணர் கல்வெட்டுக்கள்

 வெட்டுவான் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டிலிருந்து 9ஆம்
நூற்றாண்டுக்குள் வெட்டப்பட்ட இந்து கோயிலாகும். மகாபலிபுரம் போல
பாறையைக்  குடைந்து செய்யப்பட்ட குடைவரை கோவிலாகும். இது மலைமீது உள்ளது. இப்போது  தொல்லியல் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

 முதலில் இதைப் பார்க்கப் படிகள் ஏறிப் போய் விட்டோம். அங்கு வேலி போட்டு பூட்டுபோட்டு பூட்டி இருந்தார்கள்.  ஏமாற்றத்துடன் தூரத்தில் இருந்தே பார்த்தோம். சில பள்ளிச் சிறுவர்கள் மலை மீது ,ஊசி வெடி வெடித்துக் கொண்டு இருந்தார்கள்.சில  சிறுவர்கள் கம்பி வேலியின் அடிவழியாகப் படுத்துக்கொண்டே உள்ளே போய் சாதனை புரிந்த மாதிரி பார்த்து வந்தார்கள்.



வெட்டுவான் கோயில்- தூரப்பார்வையில்
 பாதுகாப்பற்ற பழைய இறங்கும் வழி













வெட்டுவான் கோவில் - ஓவியம் :- என் கணவர்.

நாங்கள் சற்றுமேலே உள்ள மலையில் செதுக்கப்பட்ட சமணர் உருவச்சிலைகளைப் பார்க்கப் போனோம்.

கழுகுமலைப் பாறைகளில் சமணதீர்த்தங்கரரின் உருவச்சிலைகள் வெட்டப்பட்டுள்ளன.


தீர்த்தங்கரர்கள்


தலைக்கு மேற்பகுதியில் குடைகளுடன் தீர்த்தங்கரர்கள்  பத்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.




  பார்ஸ்வநாதர் ,  கோமடேஸ்வரர், பத்மாவதி, அம்பிகா  ஆகியோருக்கு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. 




                                                        கோமடேஸ்வரர்

பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இங்கு  காணப்படுகின்றன 



சமண முனிவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன  

உள்ளே கல் படுக்கைகள்

சமணர் குகைக்குச்செல்லும்வழி




அதன் அருகில் ஒரு அம்மன்  கோவிலும், சாஸ்தா கோவிலும் உள்ளன.



சுவாமிக்கு முன்பு யானை வாகனச்சிலை உள்ளது, பெரிய உருவத்துடன்  கதாயுதத்தை வைத்துக் கொண்டு ஒரு உருவச்சிலை உள்ளது. குதிரையில் சாஸ்தா உட்கார்ந்து இருப்பது போல்  உருவச்சிலை உள்ளது. உள்ளூரில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் வந்து சூடம் ஏற்றி கும்பிட்டார்,

அக்கோயிலின் அருகே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தோம். இந்த இடத்திற்கு மேலே மலை உச்சிக்குப் போகும் வழி உள்ளது. மலைக் குன்றின் உச்சியில் சிறிய பிள்ளையார் கோவில் உள்ளது.,

இதற்கு என் கணவரும் மகனும் மட்டும் போய் வந்தார்கள். உச்சிக்கு செல்ல படிக்கட்டுக்கள் சில இடங்களில் கட்டி இருக்கிறார்களாம்,  சில இடங்களில் பாறைகளில் வெட்டப்பட்டு  உள்ளனவாம்.  சில இடங்களில் பாதை வழுக்குப் பாறையாக இருக்குமாம்,

மலைவழி


உச்சிப்பிள்ளையார்

உச்சிக் கோவிலுக்கு நாள்தோறும் வழிபாடு இருப்பது போல் தெரியவில்லையாம் .வழியில் குரங்குகள் நிறைய இருக்கின்றனவாம். எங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவ்ரும், மகனும் மட்டும் போனதால் அவர்கள் வரும் வரை நானும் என் பேரனும் சமையல் சாமான்கள் வைத்து சமைத்து சாப்பிடும் விளையாட்டு விளையாடினோம். அவர் பருப்பு சாதம், தோசை, சப்பாத்தி  செய்து கொடுத்தார். மிக்ஸியில் ஜூஸ் போட்டு கொடுத்தார்.  நான் சஷ்டி விரதம் இருந்தாலும் குழந்தை கற்பனையில் செய்து தந்த உணவை வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை. ரசித்து உண்டேன். காற்று சுகமாய் வீசியது. அருமையான இயற்கை சூழல். எல்லாம் மனதுக்கு  மிக  மிக ரம்மியமாக இருந்தது.



பாறை நிற்கும் அழகை பார்த்தால் அதை தள்ளி உருட்டி விளையாட எண்ணம் வரும்.    தள்ள முயற்சிப்பது -- மருமகளும், மகனும்.


வெட்டுவான் கோவிலை பார்க்க முடியாத வருத்ததோடு இறங்கினோம்.
 அப்போது கீழே இருக்கும் சுற்றுலாப் பூங்காவைப்  பார்த்துக் கொள்ளும் பணியாளரிடம் ‘பூட்டி இருக்கிறதே’ என்று கேட்ட போது, அவர் தொல்லியல் துறை வழிகாட்டியின்  செல் நம்பரைக்  கொடுத்து உதவினார் .அவருக்கு போன் செய்தபோது  அவர்  பஸ்ஸில் வந்து கொண்டு இருப்பதாய் சொன்னார்.

அவர் வரும் வரை நான் பேரனை   அழைத்துக் கொண்டு அங்குள்ள குழந்தைகள் பூங்காவில் விளையாடினேன். சீ-ஸா  பலகையில் உள்ளூர் குழந்தையும் பேரனும் விளையாடினார்கள்.அந்தப்பக்கம்  அந்தக் குழந்தையின் அருகில் அதன்அப்பாவும், இந்தப்பக்கம்பேரனுக்கு  அருகில் நானும் இருந்து கைகளால் பலகையை அழுத்தி அவர்கள் விளையாட உதவினோம். இரண்டு குழந்தைகளும் ரசித்து சிரித்து விளையாடினார்கள்.



பின் தொல்லியல் துறை வழிகாட்டி வந்தார், மீண்டும் படிகளில் ஏறி வெட்டுவான் கோவிலுக்குச் சென்றோம்.

இந்த இடத்திற்கு செல்வதற்கு புதிதாக படிகள் வெட்டப்பட்டுள்ளன.
படிகளுக்கு கைப்பிடிக் கம்பிகள் வைத்து இருக்கிறார்கள். முன்பு இங்கு
செல்வதற்கு வழி  ஆபத்துக்குரியதாக இருந்ததாம்.

நேரே இருந்து தோற்றம்


குடைவரைக்கோயில் பிள்ளையார்

 கோவிலிலின் உள்ளே . ஒரு விநாயகர் சிலை இருக்கிறது.  முன்பு அந்த இடத்தில் சிவலிங்கம் இருந்தாகக் கூறுகிறார்கள். கோவிலின் விமானத்தில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலை சுற்றி வந்தால் சிற்பங்கள் காணலாம். கோவிலின் உள்ளே இருந்த பிள்ளையாருக்கு, வழிகாட்டி பூஜை செய்து காண்பித்தார்.

சிவன் மான், மழு தாங்கிய தோற்றம்.


விமானம்

வழிகாட்டியுடன்
குன்றின் அடிவாரத்தில் ஒரு ஊருணி இருக்கிறது.

ஊருணி


மலையின் தென்புறத்தை ஒட்டி அருள்மிகு கழுகாசல மூர்த்தி (முருகன்)  திருக்கோவில் உள்ளது. அருணகிரி நாதர் இத்தலத்து முருகன் மேல் திருப்புகழ் பாடி இருக்கிறார். கழுகாசல மூர்த்தி விபூதி  அலங்காரத்தில்  சிரித்தமுகத்தோடு காட்சி அளித்தார். முருகனுக்கு நேரே நிறைய  பெண்கள் அமர்ந்து திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் எல்லாம் பாடிக் கொண்டு இருந்தார்கள்..நாங்கள் அங்கு சென்ற அன்று கந்தசஷ்டியின் 5ஆம் நாள். அங்கு 6 நாளும் சூரசம்காரம் நடைபெறுமாம்.  காகிதம், மூங்கில் கொண்டு செய்த -சூரர்கள் போல்  தோற்றம் கொண்ட கவசத்துக்குள்  மனிதர்கள் இருந்தார்கள்.
நான்கு சூரர்கள் இருந்தார்கள் அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன.











அங்கு திரண்டு இருந்த மக்கள் எங்களை சம்காரம் பார்த்து விட்டுப் போங்கள் என்றார்கள் .நாங்கள் இரவுக்குள்  மதுரை போக வேண்டும் என்பதால் அதைப்
பார்க்க முடியவில்லை. திருவிழாவுக்கு கடைகள் நிறைய போட்டு இருந்தார்கள்.

இளநீர் வாங்கி குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என் மகன் , மருமகள் இருவரும் காமிராவில் ஆசை தீர படங்கள் எடுத்தார்கள். அவ்வளவையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைதான். . ஆனால் பதிவு நீண்டு விடும்.
கல்வெட்டு, கோமடேஸ்வரர், சமணகல்படுக்கை,  சாஸ்தா கோவில் உச்சிபிள்ளையார் , சீசா-பலகை படங்கள் எல்லாம் என் கணவர் செல்லில் எடுத்தது.

 கழுகுமலை ! பார்க்க வேண்டிய இடம் .

                                                       _________________________

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டுப்பொங்கல்


தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர் வாக்கு.  இரண்டு பேர் பேசிக் கொண்டால் உனக்கு , பெண் இருக்கிறாளே மாப்பிள்ளை பார்க்கிறாயா என்று கேட்டு விட்டு  அவரே சொல்வது, தை பிறந்தால் வழி பிறக்கும் .இப்போ பார்க்க ஆரம்பித்தால் நல்லது நடக்கும் என்பது தான் .

என் அம்மா சேர்த்து வைத்த பழைய சினிமாப்பாடல் தொகுப்பிலிருந்து எடுத்த பாடல்களை சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தைபிறந்தால் வழி பிறக்கும் படத்தில் பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் மிக நன்றாக இருக்கும். செளந்தராஜன் அவர்களும், பி. லீலா அவ்ர்களும் பாடி இருப்பார்கள்.

தை பொறந்தால் வழி பொறக்கும்  தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல்விளையும்         தங்கமே தங்கம்
ஆடியிலே வெத வெதைச்சோம்     தங்கமே தங்கம்
ஐப்பசியில்  களை எடுத்தோம்         தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு                  தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு        தங்கமே தங்கம்
கன்னியரின் மனசு போல                  தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி                             தங்கமே தங்கம்
வண்ணமணிக் கைகளிலே               தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி           தங்கமே தங்கம்
முத்துச் சம்பா நெல்லுக்குத்தி           தங்கமே தங்கம்  
முத்தத்திலே சோறு பொங்கி            தங்கமே தங்கம்
குத்துவிளக்கேத்தி வச்சு                     தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்        தங்கமே தங்கம்


தை பிறந்தும் விவசாயிகள்  விதைத்த விதை வீடு வந்து சேராமல்  அவ்ர்கள் அரசாங்கம் கொடுக்கும் நிவாரண உதவியை நாடும் அவல நிலை உள்ளது. கார்த்திகையில் கதிராகி, கழனியெல்லாம் பொன்னாவிளைந்த நெல்மணிகள் வீடு வந்து சேர்ந்தால் இந்த பாட்டில் உள்ளது போல் எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்து இருப்பார்கள். விவசாயிகளில் சிலருக்கு மகிழ்ச்சி: பலருக்கு கஷ்டம்.

மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகி, விவசாய மக்கள் வாழ்வு உயர வேண்டும்.

அந்தக் காலத்தில்  கிராமத்தில் உழவு மாடு இரண்டு, வண்டி மாடு இரண்டு ,பசு மாடு இரண்டு  என்று எல்லா வீடுகளிலும் பெரும்பாலும்  இருக்கும். ஏர் பிடித்து உழ காளைமாடு, இரண்டு  இருக்கும்




 பசு மாடு   இரண்டு இருக்கும். அதன் பால் வீட்டு தேவைகளுக்கும்  மிகுதியான பாலை அக்கம் பக்கம் கொடுத்தால் ,அந்த பணத்தில் அதுகளுக்கு தீனி போட உதவும் என்பார்கள். பசு மாட்டுக்கு லட்சுமி என்று பெயர் வைத்து அதை அன்போடு வளர்ப்பார்கள்.



பக்கத்தில்   அங்கும் இங்கும் போய் வர வண்டியும் இரண்டு மாடுகளும் இருக்கும். வயலுக்கு உரம் அடிக்க   அதற்கு தனி வண்டியும் வண்டி மாடுக்ளும் இருக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில்  அண்ணனும் ,தங்கையும்  தன் குடும்ப உறுப்பினர் ஆகி விட்ட வண்டி மாடுகளிடம் தன் மனதில் உள்ளதை வண்டியில் போய்க்கொண்டே பாடுவது போல்  பாட்டை மருதகாசி அவர்கள் எழுதி இருப்பார்கள்.

அண்ணன் தம்பி உறவு  எப்போதும் உண்டு .தன் சகோதரிகளுக்கு சீர் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். சில வீடுகளில் பொங்கல் சீர்வரிசையை வண்டிகட்டிக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வயலில் விளைந்த  புத்தரிசி, கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகள், வெற்றிலை பாக்கு, பழம், என்று பொங்கல் சீர்  இறக்கி, புகுந்தவீட்டில் பெண்ணின் பெருமையை  உயர்த்துவார்கள்.

வட மாநிலங்களில் ராக்கி அன்று ரட்சை சகோதரனுக்கு கட்டி அவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வது போல் காலம் எல்லாம் சகோதரனின் பங்களிப்பு மிக முக்கியம்.

 எனக்கும் என் தம்பி பொங்கலுக்குப் பணம் அனுப்பி விடுவார். 

இந்த பாட்டில் கவிஞர் மருதகாசி ,சீரைப் பற்றி எல்லாம் எழுதி இருப்பார். கேளுங்கள்.

வண்டி மாடு பாட்டு:

அண்ணன் : சொல்லட்டுமா ? சொல்லட்டுமா?
ரச்கசியத்தை       சொல்லட்டுமா? 
துள்ளியோடும்    காளைகளா
உள்ளபடி                சொல்லட்டுமா?

அருமையாக வளர்த்தாலும்
வரிசை வம்மை கொடுத்தாலும் 
புருஷன் வந்த கையோட 
பொறந்தவீடு மறந்து விடும்.

ஏரில் காளைகள்பூட்டி பாடும் பாட்டு:
’மகாதேவி’ படத்தில் :

ஏரு பூட்டுவோம் - நாளை 
சோறு ஊட்டுவோம் -இந்த
ஏழைகளெல்லாம் ஒன்றாக சேர்ந்து
கொடியை நாட்டுவோம்- வெற்றி கொடியை நாட்டுவோம்.
வாழப் பிறந்தவன் வாழ்ந்திடவும் 
வறுமைப்பிணியாவும் நீங்கிடவும் 
வானம் மாரி பொழிந்திடவும் 
மானாபி மானமே -தானாக - ஓங்கிட
பாடு பள்ளு பாடு -துணிஞ்சி துள்ளி ஆடு- என்றும்
பால் போல் பொங்க வேணும் நம்பநாடு
நல்ல காலம் வந்ததாலே- இனி 
எல்லை-மீறி - இன்ப வாழ்வு - என்று ஓங்கவே

அந்தக் காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள்  ஏறுதழுவுதல்   என்ற வழக்கம் இருந்தது.  அதில் வெற்றி பெறும் ஆணுக்குப் பெண்ணை மணம் முடிக்கும் பழக்கம்  இருந்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் :

 அஞ்சாத சிங்கம் என் காளை -இது
பஞ்சாய் பறக்க விடும் ஆளை 

என்று  பாட்டு வரும்.


இப்படி உழவுக்கும், தொழிலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், வீரத்திற்கும் உதவியாக இருக்கும் மாட்டுக்கு இன்று மரியாதை செய்யும் நாள் ,மாட்டுப் பொங்கல். கடுமையாக உழைக்கும் பெண்ணையும் ஆணையும் மாடாய் உழைக்கிறார் என்று சொல்லி மாட்டுக்குப் பெருமை சேர்க்கிறோம்.




இன்று திருவள்ளுவர்  தினம்  தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம்.

வள்ளுவர் வகுத்து கொடுத்த வாழ்க்கை நெறிப்படி வாழந்தாலே நாம் அவருக்கு செய்யும் சேவை.

 உழவைப் பற்றி திருவள்ளுவர்  சொன்ன குறள்:

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

என்று உழவு தொழில் சிறந்தது என்கிறார்.மேலும் அவர்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல்பவர்.

என்றார்

விளைநிலங்களை துண்டு போட்டு விற்காமல் விவசாயம்  செய்தால் நாடு நலம் பெறும் -வீடும் நலம் பெறும்.




                                                          வாழ்க வளமுடன்


                                                                   ---------------

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல் -பாகம்-2

திண்ணையில் நான்  வரைந்த கோலம்

பொங்கல், பொங்கல் என்று ஒரு வழியாக நல்லபடியாக பால் பொங்கியது.
உங்கள் வீடுகளில் நல்லபடியாக பால் பொங்கியதா?  தீபாவளி என்றால் பலகாரங்கள் செய்வது., பொங்கல் என்றால் வீட்டைசுத்தம் செய்வது.

 வீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது.  வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது.  பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது  என்று எவ்வளவு வேலை.
(கார்ட்டூன் -கணவர் வரைந்தது)

 சீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று.  இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால்  அப்படித்தான் ஆகி விடும்.

நம் அம்மா காலத்தில் (திருநெல்வேலி பக்கம்) பழைய வீடுகளில் அட்டாலி என்று பொருட்கள் வைக்கும் பலகையால் ஆன தட்டு இருக்கும். அதைக் கூட விடாமல் கழட்டி அதைக் கழுவி சுத்தம் செய்து அதில் எல்லாம் கோலம் போடுவார்கள். அதுவும் புது சுண்ணாம்பு வாங்கி, அதை வெந்நீரில் போட்டு பின் அதை மாக்கோலம் போடுவது போலவே கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு  துணியைச் சுண்ணாம்பு தண்ணீரில் நனைத்து அழகாய் கோலம் போடுவார்கள்.  (நான் தேங்காய் நாரை பிரஷ்  மாதிரி செய்து அதைக் கொண்டு கோலம் போடுவேன் )

 சுண்ணாம்புக் கோலம் அழியாமல் இருப்பது மட்டும் அல்ல- நல்ல கிருமி நாசினியும் கூட. அதனால் வீட்டின் எல்லா அறைகளிலும் பெரிது பெரிதாய் சுண்ணாம்புக் கோலம் போடுவார்கள். அப்போது உள்ள தரையில் கோலம் பளிச் என்று தெரியும்.  பொங்கல் அன்று  முற்றம் அல்லது முன் வாசலில்   நாலு பக்கம் வாசல் மாதிரி பட்டை அடித்து அதன் ஒரங்களில் காவிப் பட்டை அடித்து  நடுவில் மாக் கோலம் போட்டு சூரியன் சந்திரன் எல்லாம் வரைந்து  அதில் கட்டி அடுப்பு வைத்து பொங்கல் வைப்பார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின் கேஸ் அடுப்பில் பொங்கல்  வைத்து விளக்கு முன் சாமி கும்பிட்டு என்று மாறுகிறது காலம்.

புதிதாக வந்த காய்கறிகள், புத்தரிசியில் பொங்கல், கரும்பு, மஞ்சள் இஞ்சி என்று உடலுக்கு பலமளிப்பது எல்லாம் தை மாதத்தில்  .கிடைக்கிறது.





மஞ்சள் கொத்து எங்கள் வீட்டு
தோட்டத்து தொட்டியில் விளைந்தது.
 நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி சொல்லவும்,  பயிர் வளம் பெருக நமக்கு உதவும் சூரியனுக்கு நன்றி சொல்லவும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

நாங்கள் கொண்டாடிய பொங்கல் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.





                                      மொட்டை மாடியில் சூரிய பூஜை





 



                                          பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

                                                              வாழ்க வளமுடன்!

                                                                   -------------------

வெள்ளி, 11 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல் !


பொங்கல் வாழ்த்து படம் வரைந்தவர் என் கணவர்


பொங்கிடுவோம்  உயிர் உணர்ந்து  புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம்  நாடனைத்தும்  பொறுப்பாட்சி  வளம் கண்டு
பொங்கிடுவோம்  சமுதாயப் பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம்  மக்கள் குலம் போர் ஒழித்து அமைதி பெற.

                                                        ---வேதாத்திரி மகரிஷி

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

                                                      ---- திருவள்ளுவர்.


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச்சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

                                                       ------திருவெம்பாவை

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

                                                    ------- திருப்பாவை 

இந்த இரு பாவைப்பாடல்களைப் பாடினால் மழை பொழியும்
என்பது நம்பிக்கை.


பொங்கல் திருநாள் இந்த ஆண்டு  முன்பு போல்   இல்லை.  பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை.  தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.

திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது.

அது :  துணிப்பை என்பது எளிதானது.
            தூரஎறிந்தால் உரமாவது
            பிளாஸ்டிக் என்பது அழகானது
           விட்டு எறிந்தால் விஷமாவது 

என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

   பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும்.  மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள்.   அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை.  சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.

தரிசு  நிலங்களில் கொண்டு போடும் குப்பைகளில் பெரும்பாலும் பாலிதீன் பைகள் தான்.   மரம், செடி கொடியெல்லாம் பிளாஸ்டிக் பூ பூத்தது போல்  இருக்கிறது. இந்த கவர்கள் தான் மரம் ,செடி, கொடிகளை அலங்கரிக்கிறது.

தூர் வாரப்படாத குளம், குட்டைகளில் குடிநீர் பாட்டில்களும்,  பாலீதீன் கவர்களும்தான் மிதக்கிறது.  அல்லியும்,  தாமரையும் வளர வேண்டிய குளத்தில் பாலீதீன் பைகள் நிரம்பிக் கிடக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில்  ஒரு பெரிய கிணறு இருக்கிறது அதில்  முன்பெல்லாம் மீன்களுக்குப் பொரி   போட்டுவிட்டு அந்தகவரை அப்படியே அதில் போட்டு விடுவார்கள்.  அப்படியே குடிநீர் பாட்டிலையும் போட்டுவிடுவார்கள். இந்த ஜனவரி 1ஆம்தேதி அங்கு போனபோது  அந்த



கிணற்றை பச்சை துணி வலையால் போட்டு மூடி  இருந்ததைப் பார்த்தோம்..  தண்ணீர் தூய்மையாக இருந்தது. அதைப் பார்த்தவுடன்  நீர் நிலைகளை இப்படிதான் காப்பாற்றவேண்டுமோ என்ற எண்ணம் வந்து விட்டது.

 நீர் ஆதாரத்தை பெருக்க, பாலீதீன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவோம்.

மழைக்காக கூட்டு பிராத்தனைகள்  ,. மழை தவம் எல்லாம் நடக்கிறது.
இறைவனின் கருணை மழை பொழிந்து  உழவர்களின் கஷ்டங்கள் நீங்கி
மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் இனிமை சேர்த்து, இன்பம் பெருக செழிப்புடன் வாழ்க வளர்க! வாழ்க வளமுடன்!

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
                                                                ________

சனி, 5 ஜனவரி, 2013

கன்னியாகுமரி




எங்கள் மகனுடன் குலதெய்வம் கோவிலுக்குப்  போய் விட்டு, பின் நாங்கள்
 கன்னியாகுமரிக்கு  டாக்ஸியில். பயணம் புறப்பட்டோம். என் மகன் பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு அணை எல்லாம் போக ஆசைப்பட்டான். ஆனால் டாக்ஸி டிரைவர் அங்கு தண்ணீர் இல்லை , டேம் திறக்கவில்லை என்றார்.  அதனால் நேரே கன்னியாகுமரிக்குப் போனோம்.

 நான் சிறு வயதில் நாகர் கோவிலில் இருந்த போது   உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது கன்னியாகுமரிக்கு அடிக்கடி போவோம்.  அப்போது காந்தி மியூஸியம் மட்டும் தான் உண்டு.  விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை கட்டிய பிறகு போகவே இல்லை.  இப்போது தான் நேரம் வாய்த்தது.






அங்கு போய் சேர்ந்த போது  விவேகானந்தர் பாறைக்கு மட்டும் தான் போட் போகும், திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்குப் போகாது, சீக்கிரம் போங்கள், 4 மணிக்கு மேல் டிக்கட் கிடையாது என்றார்கள்.   நாங்கள் மாலை  சூரியன் மறைவதையும் பார்க்க நினைத்தோம்.  அதற்கு ஏற்ற மாதிரி போனோம்.

மாலை மூன்று மணி சமயம் டிக்கட் வாங்கி வரிசையில் நின்று பின் போட்டில் போய்  ஏறினோம்.  லைஃப் ஜாக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அழுக்கு அடைந்து பார்க்கவே அசிங்கமாய் இருந்தது  அதை கையில் எடுத்துக் கொண்டு போய் அமர்ந்தோம். ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவ, மாணவிகள் மலையாளம் கலந்த தமிழில் பேசி அந்த சூழலை கலகலப்பாக்கினார்கள்.  ஐயப்பபக்தர்களும்  நிறைய இருந்தார்கள்.  படகு போகும் போது தாழப் பறந்த கிருஷ்ணபருந்துகள் மிக அழகாய்  இருந்தன.  அலைகளின் ஆர்ப்பரிப்புக்கு மேல் மக்களின் பேச்சு சத்தம் நிறைந்து இருந்தது..


 1892ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ பாத பாறை என்னும்  இந்த இடத்திற்கு நீந்தி வந்து  தியானம் செய்தாராம். அதனால் இந்த  இடத்தில் விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டது.



விவேகானந்தர்   மண்டபத்துக்குள் போனவுடன்  மக்கள் அமைதி காத்தனர்.  ஏனென்றால் அங்கு அமைதி காக்க சொல்லிப் போட்டு இருந்ததுதான். ஒரு பக்கத்தில் சாராதாதேவி படமும், இன்னொரு  பக்கத்தில்  ராமகிருஷ்ணர் படமும் சிறு மண்டபம் போல் தோற்றமளிக்கும் இடத்தில் இருந்தது.

மண்டபத்தில்  நடு நாயகமாய் கம்பீரமாய்க் கைகளைக் கட்டிக் கொண்டு நெடிய அழகிய தோற்றத்தில் ஒளி பொருந்திய கண்களால் நம்மைப் பார்த்துக் கொண்டு நின்றார் விவேகானந்தர்.

 மண்டபத்தின் கீழ்ப்பகுதியில் மக்கள் தியானம் செய்ய ஒரு இடம் இருக்கிறது. உட்கார்ந்து தியானம் செய்யலாம்.

தியான மண்டபத்திற்கு  நேரே  கன்னியாகுமரி அம்மன் பாதம் அழகாய் அங்கு இருக்கிறது. பாதங்களில் நகங்களுக்கு சிவப்பு வண்ணம் தீட்டி இருப்பது மேலும் அழகூட்டுகிறது.  கண்ணாடித்  தடுப்பு வழியாக அம்மன் பாதத்தை தரிசிக்க வேண்டும்.

எல்லா மொழிகளிலும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடும் புத்தகங்கள் கிடைக்கிறது.  நான் ” வாழக் கற்றுக்கொள்! !” என்ற புத்தகமும் ”அருள்நெறிக் கதைகள்” என்ற புத்தகமும் வாங்கினேன். நினைவுப் பரிசுகள் விற்பனை செய்யும் கடையும் அங்கு இருக்கிறது.

விவேகானந்தர் பாறையின் ஒருபுறத்தில் மழை நீர் சேகரிப்பு செய்வதற்கு ஒரு குளம்போல் கட்டி  இருந்தார்கள் .அது நிறைய கொள்ளளவு  கொண்டது.
அந்த நீர் சேகரிப்பில் காற்று அடிக்கும் போது அலை அடித்தது  நீர்ப் பரப்பில் அந்த அலைகளைப் பார்கக மிக அழகாய் இருந்தது. அந்த இடத்தில் த்ண்ணீர் தேவையை மழை நீர் சேகரிப்பு பூர்த்தி செய்கிறது.

மழை நீர் சேகரிக்கும் பகுதி

விவேகானந்தர் பாறையில் இருந்து கன்னியாகுமரி நகரின் தோற்றம்

குமரி அம்மனை நாங்கள் தரிசிக்க முடியவில்லை.  விடுமுறை ஆனதால் கூட்டம் நிறைய இருந்தது.  நீண்ட வரிசை இருந்தது.  இரவுக்குள் திருநெல்வேலி செல்லவேண்டியிருந்ததால் காத்திருக்க நேரமில்லை.

 சூரியன் மறைவு பார்க்க போன இடத்திலும் ஏமாற்றம். அங்கு மேகம் மறைத்துக் கொண்டே இருந்தது. பேரன் மட்டும் மணலில் எந்த எதிர்ப்பார்ப்பு இன்றி மகிழ்ச்சியாக விளையாடினான். நமக்கு தான் அம்மன் தரிசனம் இல்லை, சூரியன் கடலில் மறைவதை பார்க்க வில்லை என்ற  ஏமாற்றமும்  வருத்தமும் ஏற்பட்டது.. அந்த நேரம் பேரனைப் பார்த்து போது நாமும் குழந்தையாக இருந்தால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இப்படி மணலில் விளையாடி  மகிழ்ச்சியாக இருப்போம் அல்லவா என்ற   எண்ணம்  எழுந்தது  உண்மை.

எங்கள் கார் கடல்   மணலில் மாட்டிக் கொண்டது . பக்கத்தில் இருந்த மீனவர்கள் வந்து உதவி செய்தபின் எங்கள் பயணம்  மீண்டும் திருநெல்வேலியை நோக்கி தொடர்ந்தது. ( கார்  மணலில் இருந்து ரோட்டுக்கு வரும் வரை பேரனுடன் மண்ணில் விளையாடினேன்.)

அடுத்த முறை கன்னியாகுமரி  அம்மனை எப்படியும் தரிசிப்போம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டோம்



----------------