தைப்பூச சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை
ஞாயிற்றுக்கிழமை அரிசோனாவில் இருக்கும் "ஸ்ரீ மகா கணபதி' ஆலயத்தில் நடந்த தைப்பூசவிழாவில் கலந்து கொண்டோம். உற்சவ முருகனுக்கு திருவாச்சி செய்யும் பாக்கியம் முருகன் அருளால் மகன் , மருமகளுக்கு கிடைத்தது. ஆலயகுருக்களும், நிர்வாகத்தினரும் கேட்டு கொண்டதால் மகன் மகிழ்ச்சியாக செய்து கொடுத்தான்.
மகனுடன் மருமகளும் சேர்ந்து இந்த திருவாச்சியை உருவாக்கிகொண்டு இருக்கிறார்கள்.
அலுவலக வேலை முடிந்தவுடன் மாலை நேரம் இதை செய்வார்கள் ஒரு வாரம் ஆனது .
கோவிலில் உற்சவ முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். சிறிய காணொளிதான்
கோவிலுக்கு எடுத்து செல்லும் முன்
மூலவர் பிள்ளையாருக்கு முன் உற்சவர் முருகன்
நானும் மருமகளும் ,மருமகளின் அம்மாவும் பால்குடம் எடுத்தோம்.
அமேசான் மூலம் மஞ்சள் புதுபுடவை வாங்கினாள் மருமகள்.
எங்களுக்கு காப்பு கட்டி, பாலை எங்களை குடத்தில் ஊற்ற வைத்து மேலே தேங்காய் வைத்து மஞ்சள் துணி கொண்டு கட்டி பூ , பொட்டு வைத்து நம்மிடம் கொடுத்தார்கள். "வயதானவர்கள் தலைக்கு மேல் தூக்க முடிந்தால் தூக்கி செல்லுங்கள் இல்லையென்றால் வேண்டாம்" என்று சொன்னார், கோவிலை விட்டு வெளியே வரும் போது மட்டும் தலையில் வைத்து கொண்டோம், அப்புறம் கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் நுழையும் போது தலையில் வைத்து கொண்டோம். பால் குடம் எடுப்பது இது இராண்டாவது தடவை. எதிர்பார்க்காமல் முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு. இரண்டு கொரியன் , ஒரு அமெரிக்கர் பால் குடம் எடுத்தார்கள்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகரா! என்று சொல்லி கொண்டு கோவிலை வெளிபக்கமாக வலம் வந்து பின் யாகசாலையில் ஆறுபடை வீடு முருகனின் புகைப்படங்கள் வைத்து இருந்தார்கள் அவரை வலம் வந்து கோவிலுகுள் போனோம்.
மகனும் பேரனும் விபூதி காவடி எடுத்தார்கள்.
காவடி எடுக்கும் முன் காப்பு கட்டிக் கொள்வது, காவடியில் ஒரு பக்கம் விபூதி, ஒருபக்கம் சந்தனம் அவர்களை செம்பில் நிரப்ப சொன்னார்கள்.
காவடி தயார் செய்து கொண்டு இருக்கும் போது நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பிள்ளையார் பாடல் இரண்டு, காவடி சிந்து பாடல் ஒன்று ஆடி நிறைவு செய்தார். நன்றாக ஆடினார்.
இன்னொருவர் முருகன் பாடல்கள் பாடினார். ஒரு அம்மா சரவண பொய்கையில் நீராடி பாடினார்கள்.
காவடி எடுத்து போனவர்கள் மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் வந்தார்கள்.
முதலில் காவடி அப்புறம் பால்குடம். பால்குடம் வரும் வரை காத்து இருந்து எல்லோரும் சேர்ந்து கோவிலுக்குள் போனோம்
அபிஷேகம் செய்யும் சமயத்தில் முருகன் பாடல் பாடினான் பேரன்.
அதுவும் முருகன் கேட்டது போல தான் இருந்தது.
சனிக்கிழமை ஒரு விழாவில் பாடினான், அதை கேட்ட மகனின் நண்பர் தைப்பூசத்திற்கு பேரனை முருகன் பாடல் பாட கேட்டு கொண்டார். உடனே பேரனின் பாட்டு டீச்சரிடம் முருகன் பாடல் கேட்டோம். அவன் பாட்டு டீச்சர் முருகன் பாடல் சொல்லி தர வில்லை இதுநாள் வரை. கேட்டவுடன் அவர் அருமையான பாட்டு பாடி அனுப்பினார். அதை இரவு பயிற்சி செய்து மறுநாள் பாடி விட்டான் முருகன் அருளால். மனப்பாடம் செய்ய நேரம் இல்லை, அதனால் பார்த்து பாடுகிறான். மருமகள் பதிவு எடுத்து கொடுத்து இரவு 12 மணி வரை பயிற்சி செய்ய வைத்து பாட வைத்து விட்டாள்.
"வேலோடு வந்தெங்கள் வினை தீரப்பா" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்தது. திருச்செந்தூர் முருகன் அனைவரின் வினை துன்பத்தை களைய வேண்டும்.
தைப்பூசத்து அன்று எடுத்த படங்கள்
அபிஷேக காட்சிகளை படம் எடுக்க முடியவில்லை, என் செல்போன் மருமகளின் தோழியிடமிருந்தது. நாங்கள் பால்காவடி எடுத்து வரும் படங்கள் அவர் எடுத்தார். அபிஷேகத்தை கணினி நாற்காலியில் அமர்ந்து நல்ல வசதியாக தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர்கள் முன் பக்கம் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தார்கள். நான் கொஞ்சம் அமர்ந்தும், நின்றும் பார்ப்பதால் யாருக்கும் மறைக்காமல் கடைசியாக அமர்ந்து கொண்டேன்.
தீபாரதனையை அனைவரும் எடுத்து கொள்ள காட்டுகிறார்.
நிறைவாக பிரதாசம் கொடுத்து கோவில் விழாக்களில் எல்லாம் உற்சவருக்கு அலங்காரம் செய்து தர வேண்டும் என்று வாழ்த்தினார்கள். "பேரனை எங்கே என்றார் குருக்கள்" காலை முதல் குழந்தைகள் கோவிலில் அமர்ந்து இருந்தார்கள் நிறைவு பெற்றதும் கோவிலுக்கு முன்புறம் நாய் குட்டிகள் நிறைய இருந்தது அந்த குட்டிகள் விளையாடும் அழகை பார்க்க போய் விட்டார்கள். சில குழந்தைகள் குட்டி செல்லத்தோடு விளையாடினார்கள். பேரன் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தான்.
பிள்ளைகள் பாரதி சொன்னது போல இருந்தது மகிழ்ச்சி
"உயிர்களிடத்தில் அன்பு வேணும்-
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்"
தைப்பூசவிழா மிக சிறப்பாக நடந்தது. அனைவருக்கும் பாயசம், வடையுடன் ருசியான சாப்பாடு. தேங்காய் பழத்தோடு பஞ்சாமிர்த பிரதாசம் கொடுத்தார்கள்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------