வியாழன், 5 மே, 2016

ஒருநாள் ஒருபொழுது!

பொதுவாக ஒவ்வொருவரும் காலையில் படுக்கையை விட்டு எழும் போது இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

நான் எங்கள் மன்றத்தில்  செய்யும் பிரார்த்தனையை சொல்லிக் கொள்வேன் காலையில்,  அது : --

//அருட்பேராற்றல்  இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்,  எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்,  உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும்  வழி நடத்துவதாகவும் அமையுமாக//

இன்பமோ, துன்பமோ அவன் பொறுப்பு என்று போய் கொண்டு இருக்கிறது என் வாழ்க்கை.

மத்தியதர மக்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் ஒரு நாள் பொழுது  வழக்கம் போல் போகும்.  ஆனால் சாமானியர்கள் என்று சொல்லப்படுபவர்கள்  அன்றாடக்காச்சி என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஒவ்வொரு மாதிரிதான் போகும். தினம் ஒரே மாதிரி இருப்பது  இல்லை.

ஒரு நாள் தொலைக்காட்சிப்பெட்டியில் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன், அன்று என் மனநிலை ஒன்றிலும் லயிக்கவில்லை.
புதியதலைமுறை சேனலில்  ” சாமானியர்களுடன் ஒரு நாள் ” என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.  அது சீனி மிட்டாய், சவ் மிட்டாய், பப்ரமிட்டாய் என்று சொல்லபடுகிற  மிட்டாயை செய்து அதை விற்று வாழ்க்கை நடத்துபவரைப்பற்றி. 

 ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்து மிட்டாய் செய்வது முதல் அவர் சைக்கிளில் போய் பக்கத்து கிராமத்தில் விற்பதையும், பின் வீட்டுக்கு வருவது வரை  காட்டினார்கள்.

கடையில் போய் இரண்டு கிலோ சீனி வாங்கி வந்தார் ,  சீனியை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு வீட்டின் பின்புறம்  உள்ள  விறகு அடுப்பில் வைத்து காய்ச்சுகிறார், காய்ச்சும் போதே நல்ல  ரோஸ் கலர் சேர்க்கிறார்.(மிட்டாய் கலர் என்றே அழைப்பார்கள் ரோஸ் கலரை) கரண்டியின் பின்புறம் வைத்து கிண்டி விடுகிறார்.  கம்பி பதத்தில் ரெடியானவுடன்   பக்கத்தில் இருக்கும் ஒரு வழு வழு என்று சிமெண்ட் போட்ட திண்ணையில் தண்ணீர் விட்டு கழுவி விட்டு சீனி கலவையை அதில் விடுகிறார் அவர் மனைவி அதை துணி சுருட்டுவது போல( பாயை சுருட்டுவது போல்) சுருட்டி பின்  நீட்டி மடித்து அதனை மரக் கம்பில் சுற்றி அதன் மேல் பாலீதீன் கவரை சுற்றிக் கொடுக்கிறார் கணவனிடம்.
கணவர் ஒரு பை, கூடை எல்லாம் எடுத்து கொண்டு சைக்கிளில் பயணிக்கிறார். சீனி மிட்டாய் சீனி மிட்டாய் என்று கூவி கொண்டு போகிறார்.
சென்னைக்கு அருகில் உள்ள  ஒரு கிராமத்தில் நிற்கிறார். குழந்தைகள் அவர் குரலைக் கேட்டு  ஓடி வருகிறார்கள் அவர்கள் கையில் காசு இல்லை , அவர்கள் கையில் கொஞ்சம் சுருட்டிய முடி இருக்கிறது அதை பையில் போட சொல்கிறார் பின் அதன் அளவுக்கு ஏற்ற மாதிரி மிட்டாய் கொடுக்கிறார்.

சில குழந்தைகள் மதுபாட்டில் கொடுத்து மிட்டாய் வாங்கி செல்கிறார்கள்.
மிட்டாய்காரர் சொல்கிறார் அப்பாவின் மது பாட்டில் குழந்தைகளுக்கு மிட்டாயாகிறது என்று. குழந்தைகளிடம் நிறைய கொண்டு வாருங்கள் நிறைய மிட்டாய் தருகிறேன் என்கிறார்.

மிட்டாய்க்கார ர் பாட்டில்களை கடையில் போட்டு காசு வாங்கி கொண்டு அரிசி, காய்கறி மற்றும் தன் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கி செல்கிறார்.

வாங்கி போன பொருட்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார். மனைவியிடம்.  தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு உணவு சமைக்கிறார் மனைவி. பின் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். அதன் பின் குழந்தைகள் விளையாட போய்விடுகிறார்கள்.

கணவனும் மனைவியும் பையில் இருந்த தலைமுடியை எடுத்து சுத்தம் செய்து சவுரிமுடி செய்கிறார்கள். மனைவி நாளை கொண்டு வரும் முடியில்தான் சவுரி ரெடியாகும் என்கிறார் .
இப்படி ஒருநாள் பொழுது போகிறது.

மிட்டாய் விற்பனை நன்கு நடந்தால்தான் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லது.இவர் சும்மா சவ் மிட்டாயை இழுத்து பிய்த்து மட்டும் கொடுக்கிறார். முன்பு சவ் மிட்டாய் விற்றவர்கள் போல் அழகாய் பலகலரில் மிட்டாய் செய்து மாலை, வாட்ச் எல்லாம் செய்து கொடுத்தால் நன்றாக விற்பனை ஆகலாம்.இப்போது காலமும் மாறி விட்டது கிராமத்து குழந்தைகளும் பைவ்ஸ்டார் சாக்லேட், மற்றும் வித விதமாய் குழந்தைகளை கவர விளம்பரங்களுடன் வரும் மிட்டாய்களை வாங்கி சாப்பிட பழகி விட்டதால் இந்த சவ் மிட்டாய் மவுசு குறைந்து விட்டது.


முன்பு  சவ் மிட்டாய்காரார் இரண்டு மூன்று கலரில் பள பள என்று இருக்கும் சவ் மிட்டாயை  கொண்டு வருவார். அவர் வைத்து இருக்கும் தடியில் மேல் புறம் பொம்மை இருக்கும் அதன் கையில் தாளம் இருக்கும் அதை தட்டிக் கொண்டே மிட்டாய் விற்பார்.  (பொம்மை மிக அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்) காசுக்கு ஏற்ற மாதிரி, வாட்ச், கழுத்துக்கு மாலை, செயின், எல்லாம் வித விதமாய் செய்து தருவார்.  நான் சிறுமியாக இருக்கும் போது இந்த மிட்டாய் வாங்கி சாப்பிடத் தடை இருந்தாலும்   ஏதாவது ஒருசமயம் தடை விலக்கப்பட்டு  போனால் போறது இன்று ஒருநாள் மட்டும் அடிக்கடி கேட்க கூடாது என்று வாங்கி கொடுக்கப்படும்.

இந்த முறை அழகர் திருவிழாவில் ஒரு மிட்டாய்க்காரரைப் பார்த்தேன் அழகரும் அவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டதால்  அழகரை வணங்கி விட்டு  மிட்டாய்காரரை  படம் எடுக்கலாம் என்றால் அவர் நகர்ந்து விட்டார். அவர் முதுகுபக்கம்  சாய்த்து வைத்து இருந்த பொம்மையை எங்கோ பார்த்து போல் இருக்கே என்று  நினைத்த போது  திருப்பரங்குன்றத்தில்  ஒரு முறை பொம்மை மிட்டாய்காரரை  போட்டோ எடுத்தது நினைவு வந்தது. அவரே தான் இவர்.  


                                            அழகர் திருவிழாவில் எடுத்த படம்


                                             திருப்பரங்குன்றத்தில் எடுத்தபடம்




                                        என் கணவர் வரைந்த  கணினி ஓவியம்.


உறவோடு உறவாடி  என்ற இந்த பதிவில்  திருப்பரங்குன்றத்தில் காதணிவிழாவிற்கு போய் இருந்த நிகழ்வுகளையும் திருப்பரங்குன்றத்தில் நடந்த விழாக் காட்சிகளையும், மிட்டாய்காரர் பற்றிய செய்திகளையும் காணலாம்.. 
                                          வாழ்க வளமுடன்!