புதன், 21 டிசம்பர், 2016

அன்னை படியளந்தாள் !”மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய லீலை” என்று காலண்டரில் போட்டு இருந்தது. என் தங்கை ஒவ்வொரு வருடமும்  அந்தத் திருவிழாவைப் பார்க்கவரும்படி அழைப்பாள். போனது இல்லை. இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த திருவிழாவின் பெயர் ’அஷ்டமி சப்பரம்’ என்கிறார்கள்.

மீனாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு வரும் வழிஎல்லாம் அரிசி இறைத்து வருகிறாள் அன்னை.  அதைப் பெற்றுக் கொண்டு நம் அரிசிப் பானையில் போட்டு வைத்துக் கொண்டால் உணவுக்கு ப்பஞ்சம் இல்லையாம்.

இன்று வீடுகளில் கத்திரிக்காய், நெல்லிக்காய், பச்சை மொச்சை சேர்த்துக் கொள்ளவேண்டுமாம் சமையலில்.
இவ்வளவுதான் எனக்கு விவரம் தெரியும். மேலும் விவரங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். 


சுவாமி, அம்மன் வருவதைக் கட்டியம்கூற வரும் காளைமாட்டுடன் முரசுஅறைபவர்.
அடுத்து ஒட்டகம் (முகத்தைத் திருப்பிக் கொண்டது
பற்களைக் காட்டியது 

அடுத்து ”பார்வதி” யானை
பள பள என்று மின்னும் முகபடாம்
அடுத்து, பிள்ளையார், முருகன் வர, பின்னால் சுவாமி, அம்மன் சப்பரம்

சுந்தேரசன், பிரியாவிடை
சுவாமி, அம்மன் சப்பரம் முக்கு திரும்பும் காட்சி. 
வாழைப்பழம், அன்னாசிப்பழங்களைத் தோரணமாய்க் கட்டி இருந்தது. தெருமுனை திரும்புவதை பார்ப்பது நல்லதாம்.

சிவன் அடியார்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு  வந்தார்கள்.


மீனாட்சி அம்மன் தேர், தெருமுனை திரும்பும் காட்சி

திருவிழா என்றால் குழந்தைகளுக்குப் பலூன் இல்லையென்றால் எப்படி?
சவ்மிட்டாய்க்காரர் வழியில் வைத்துவிட்டுப் பிரசாதம் வாங்கப் போய் விட்டார். 
வழியெல்லாம் புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்
எல்லோர் வீட்டு வாசலிலும் தேர்க் கோலங்கள்


உலகமக்கள் எல்லோரும், சகல ஜீவராசிகளும் அன்னையின் அருளில் நலமோடு வாழ வேண்டும்,
                                                               வாழ்க வளமுடன்!
                                                              -----------------------------------

திங்கள், 19 டிசம்பர், 2016

என்ன பார்வை ! என்னபார்வை!

எங்கள்  வீட்டுக்கு வந்த பறவை - கழுகு இனத்தை சேர்ந்த  வல்லூறு  விரைவாக பறக்ககூடிய பறவை. 290 கி.மீ 

//வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்துபுறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.//

நன்றி விக்கிமீடியா.


 எங்கள் வீட்டுக்கு தண்ணீர் குடிக்க குளிக்க வந்தது நேற்று. 

மார்கழி வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகம் அதனால் தண்ணீர் தாகம் வெயிலின் வெப்பம் தணிக்க  தண்ணீரில் சிறிது நேரம் அமர்வு. 
இந்தப் பக்க பார்வை
அந்தப் பக்கம் பார்வை
ஜன்னல்வழியாக என்னைப் படம் எடுக்கிறாயா? என்று ஒரு மேல் நோக்கிய பார்வை
                              சரி, சரி  தண்ணீர்  குடித்துவிட்டுப் போகிறேன்.

                                                         வாழ்க வளமுடன்!
*********************************************************************************

வியாழன், 15 டிசம்பர், 2016

மார்கழி நினைவுகள்

நாளை  மார்கழி , மனம் குளிர் மார்கழி.
மனமும், உடலும் குளிரும் ,  மார்கழி என்றாலே.
அதிகாலை  இறைவழிபாடு  கோவில்களில் .
வீடுகளில் பூஜைகள் சிறப்பாக நடைபெறும். 
மார்கழி மாதம் முழுவதும் இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் தனிச்சிறப்பு. மார்கழியின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் மார்கழி மாதம் எழுதிய பதிவுகளை  மீண்டும் படித்துப்பார்த்தேன். எவ்வளவு பேர் அந்த பதிவுகளைப் படித்து இருக்கிறார்கள் என்று  பார்த்தேன்.  படித்தவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது. 

பாவை நோன்பு   படித்தவர்கள் எண்ணிக்கை 515

//தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை :-
1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை,
2. ஆண்டாள் அருளிய திருப்பாவை.
3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு.

சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்கவில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல விருத்தி உரையில் இருக்கிறது. அந்தப்பாடல்:-

“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”//

மார்கழிக் கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 16846

//எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. .


தஞ்சாவூர் தலையாட்டி   பொம்மைக்  கோலம்
நான் வரைந்த கண்ணன் கோலம்

கண்ணபிரான், ’மாதங்களில் நான் மார்கழி’ என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார். தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.
இறைவனைத் தொழுவதற்காகச் சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.

வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனிமேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும், ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள், திருப்பாவையில்.


Image result for மாணிக்கவாசகர்Image result for ஆண்டாள்
நன்றி - கூகுள்

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார். உலகச் செயல்களைத் தொடங்குவதற்குப் பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியைத் திருவெம்பாவையில் கூறுகிறார்.//


மாணிக்கவாசகர்  தன்னை நாயகியாகவும், இறைவனை நாயகராகவும் பாடி இருக்கிறார்.

பழைய கோலங்கள் படித்தவர்கள் எண்ணிக்கை 6031

//மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி?   அதற்குள் என்ன இருக்கிறது?  என்று நினைக்கிறீர்களா? அந்தக் கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல  சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.

பொக்கிஷத்தைப்  பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன், நான் சின்ன வயதில்  கோலங்கள் போட்ட நோட்டுகளை.  தொட்டாலே கிழிவது போல் உள்ளது.   வார, மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள்  சேகரித்து வைத்து இருக்கிறேன்.

என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள்  என்று இருக்கிறது.  இப்போது  இணையத்தில் கோலங்களைப் பார்த்து,  பிடித்த கோலத்தைப் போடுகிறேன்.//

மார்கழி மாத நிகழ்வுகள்  படித்தவர்கள்  922
மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்.  இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள். மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களைச் செய்கிறது.

இசை, வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் , மனதில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

மார்கழி சிறப்புகள்  படித்தவர்கள் எண்ணிக்கை 1061

//மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர,குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டுக் கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் சிறு வயதில் போன மாதிரி இல்லை. //மார்கழி மாதம் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு எண்ணெய் எடுத்துப் போய் விளக்கு போட்டு விட்டு  வந்து பாட்டு கேட்பது வழக்கம். எத்தனை பாடல்கள் சேகரிப்பு! இப்போது தொலைக்காட்சியில் எல்லாப் பாடல்களும் கேட்பதால் கேசட்டுகள் டப்பாவில் அடைபட்டு இருக்கிறது. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் பாடல்கள் போட்டுக் கேட்டேன்.


                            எனது கேசட் கையேடு (பாட்டு விவரங்கள்)

மார்கழி வந்து விட்டால்  முன்பு வானொலியில்  திருப்பாவை, திருவெம்பாவைப்பாடல்கள், பாடல்களுக்கு விளக்கவுரைகள் கேட்பேன், அலைவரிசையை மாற்றி மாற்றி திருச்சி, சென்னை,  என்று கேட்பேன், பின் பண்பலையில் காரைக்கால் வானொலியில் கேட்பேன். 
திருப்பாவை, திருவெம்பாவை கேஸட் பாடல்களை டேப்ரிக்காடரில் ஒலிக்கவிட்டு விட்டு வேலைகளைப் பார்ப்பேன்.  இப்போதும் காலை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

மார்கழிக்குப் புதுப் பதிவு ஒன்றும் எழுதவில்லை  பழைய பதிவுகளைப் படிக்க லிங்க் கொடுத்து இருக்கிறேன்.

மார்கழிப் பதிவுகளைப் படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

                                                            வாழ்க வளமுடன்.
*********************************************************************************

சனி, 10 டிசம்பர், 2016

ஜோதி வழிபாடு, தீபத்திருநாள்

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!
கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

அறிவை ஒளிக்கு உதாரணமாய் சொல்கிறார்கள். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேஜோமய ஆனந்தமே!’ என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.

’அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தமாகி இருள் தீர விலங்கு பொருள் யாது? அந்தப்
பொருளினை யாம் இறைஞ்சி நிற்பாம்.’

‘தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள்எந்நாளோ?’ 

என்றெல்லாம் தாயுமானவர் ஜோதிமயமான இறைவனைப் பாடுகிறார்.
காயத்ரீ மந்திரம் :-  நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும்  இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னை விட மேலாக ஒன்றும் இல்லாததும். நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீகப் பரம் பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.’என்று இறைவனை ஒளிக்கடவுளாய் உணர்த்துகிறது.

’எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக’ என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் ’தீபமங்கள ஜோதி நமோ நம’ என்று 
முரு கனைப்பாடுகிறார். 

வள்ளலார் தீப வழிபாடு செய்தார். 

’ஏகாந்த மாகிய ஜோதி--என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி--என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி!

அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே 
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே 
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று கூறி வள்ளலார் இறைவனை வழிபட்டார்

அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியைத்  தந்த இறைவா எனப் பாடுகிறார்.

கருங்குழியில் வீட்டில் ஒருநாள் இராமலிங்க அடிகள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே, எண்ணெய்ச் செம்பென நினைத்துத்  தண்ணீர்ச் செம்பை எடுத்து விளக்கில்  ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கெரிந்த இந்த  அற்புதத்தை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

அப்பாடல்:-:

’மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும், புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்!
நெய்விளக்கே போன்றொருதண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே.’

அறுபத்து மூன்று நாயன்மார்களில்  ஒருவரான கணம்புல்லர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் தான் என்னமோ அவர் தான் பிறந்த இருக்குவேளூர் இறைவனுக்கு விளக்கெரித்துத் தொண்டு செய்தார்.வறுமை வந்த போதும் கணம்புல் என்னும் ஒருவகைப் புல்லை அறுத்து விலைக்கு விற்றுத் திருவிளக்கு ஏற்றி வந்தார்.ஒரு நாள் புல் விற்கவில்லை அதையே திருவிளக்குக்கு இட்டு எரிக்கமுற்பட,அதுவும் போதாமையால் தம் திருமுடியை விளக்கில் மடுத்து எரித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெற்றார்.

நமி நந்தி அடிகள் என்னும் நாயனார் தண்ணீரில் விளக்கு எரித்து இருக்கிறார்.

மசூதியில் விளக்கேற்றி அது விடிய விடிய எரிவதைப் பார்ப்பதில் ஷீரடி சாய்பாபாவிற்கு மகிழ்ச்சி. அதற்காக பக்கத்தில் உள்ள இரண்டு கடைகளில் இலவசமாக எண்ணெய் பெற்று வந்தார். ஒருநாள் அந்த வியாபாரிகளின் எண்ணம் மாறியது. ‘நாம் இலவசமாக எண்ணெயைக் கொடுத்து பக்கிரி என்ன விளக்கேற்றுவது? இனி நாம் எண்ணெய் கொடுக்கக் கூடாது. எண்ணெய் இல்லை என்று சொல்லிவிடவேண்டும்’என்று அவர்கள் பேசி வைத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு
பாபா அக் கடைகளுக்குப் போனார்.’ஒரு துளி எண்ணெய் கூட இல்லை. இனி மேல்தான் வர வேண்டும்’ என்று அந்த வியாபாரிகள் கூறினார்கள்.

பாபா கிணற்றடிக்குச் சென்று நீர் இறைத்து அந்த குவளையில் ஊற்றி நன்றாகக் கழுவினார். பின்,அதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்றார். அந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்றினார்.

முன்னிலும் பிரகாசமாய் விளக்கு எரிந்ததாய் சாயி சரிதம் கூறுகிறது. 

இசை மேதை தான்சேன் தன் இசையால் விளக்குகளை ஏற்றியதாக வரலாறு உள்ளது.


தீபத்திருநாள், 

தீபங்கள் ஒளி வீசும் நாள். கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். மாலை  நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும். தீப வழிபாடு இங்கு மிகவும் போற்றப் படுகிறது. 

சர்வாலய தீபம்:

சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியைத் தூண்டி,விளக்கை பிரகாசப்படுத்தியது. இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவால யத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவாலயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாகத் தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.

விஷ்ணுதீபம்

விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.

ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கார்த்திகை விரதம்:

முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும். பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலூட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.

விளக்கு வழிபாட்டின் பயன்:

கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.
-தாயுமானவர்

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை. 

கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

 எல்லோருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !

எல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் !
                                                                     வாழ்க வளமுடன் !