வெள்ளி, 19 அக்டோபர், 2018

கொலுப்பார்க்க வாருங்கள் -7

அம்மனுக்குப் பின்னால் உள்ள திருவாச்சி, கிரீடம்  கழுத்து நகை பட்டை(காசுமாலை)   கணவர் செய்தது.

கொலுப்பார்க்க வாங்க தொடர் பதிவில் விஜயதசமியுடன் நவராத்திவிழா நிறைவு அடைவதால் சில நவராத்திரி நினைவுகள்.
ஒவ்வொரு வருடத்தில் என் கணவர்  சரஸ்வதி பூஜைக்கு அம்மன் செய்வார்கள்  அதில் சில   அம்மன்களைப் பார்க்கலாம்.  மஞ்சள் அரைத்து அம்மன்  முகம் செய்வது வழக்கம் எங்கள் குடும்பத்தில்.  அதை மாற்றி சந்தனத்தில் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்கள் என் கணவர்.  திருவெண்காடு, மாயவரத்தில் கண் கொசு நிறைய மழைக்காலத்தில் வரும் அது அம்மனை மிகவும் தொந்தரவு செய்தது அதனால் சந்தனத்தில் செய்தார்கள்.

மஞ்சளில் செய்த முகம்
அதிராவிற்காக :-  பாட புத்தகங்கள்,சாமி புத்தகங்கள், கலை இலக்கியப்  புத்தகங்களை அடியில் வைத்து அதன் மேல் வெள்ளை ஆடை அணிவித்து அதன் மேல அம்மன் அமைப்போம்., சரஸ்வதி பூஜை அன்று. விஜயதசமி அன்று கலைத்து புத்தகத்தை எடுத்துப் படிப்போம். வடை, காப்பரிசி கண்டிப்பாய்ச் செய்வார்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களைப் படிக்க வைப்பார்கள் அன்று.

இந்த அம்மனும் மஞ்சள்தான்

இந்த அம்மன் சந்தனத்தில் செய்த அம்மன். ஒருவருடம் அம்மன் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் சுழலும்படி அமைத்து இருந்தார்கள் என் கணவர் , கைகள் அமைத்தார்கள் இந்த வருடத்தில் அமர்ந்த கோலத்தில்
பின்னால் இருக்கும் திருவாச்சி, தாமரை  என் கணவர் செய்தது, வீணை மகன் செய்தான் , நின்ற கோலத்தில் அமைத்த அம்மன்.
மகனுடைய ஊருக்குப் போனபோது முதன் முதலில் கொலு வைத்த போது  என் கணவர் செய்த அம்மன். அங்கு கிடைத்தவைகளை வைத்து அம்மனைச் செய்தார்கள். தலை கிரீடத்திற்கு கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கும் மணி.
மகன், வரைந்த ஓவியங்கள், பேரன் பேத்தி செய்த கைவேலைகள் பின்னால் ஜன்னல் திரைசீலையில் மாட்டப்பட்டு இருக்கிறது.

வயல் வெளி மலைத்தொடர் எல்லாம் மகன் வரைந்தது. ஊர் அமைப்பு நானும் என் கணவரும். பிள்ளைகள் இல்லாமல் நாங்கள் மட்டும் இருக்கும் போது செய்தவை. ஐப்பசி மாதம் விழா நடக்கும் மாயவரத்தில். அப்போது முழுக்குக் கடை என்று கடை போடுவார்கள் அப்போது அந்தக் கடைகளில் வாங்கி சேர்த்தவை. ஊரில் இருக்கும் மணிக்கூண்டு மகன் செய்தது..

மாயவரத்தில் நாங்கள் இருந்த இடத்தில் வேறு யாரும் கொலு வைக்காத காரணத்தால் குழந்தைகள் வரவு கொலு பார்க்க அதிகமாய் இருக்கும். அவர்கள் பார்க்க விரும்புவது பார்க், ஊர் அமைப்பு, மலை, அருவி இவைதான் அதனால் அவர்களுக்காக சிரமத்தைப் பார்க்காமல் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரி அமைப்போம்.  

சுண்டல் என்றால் முகம் சுளிக்கும் குழந்தைகளுக்கு வருட வருடம் இனிப்புகள் வேறு வேறு வாங்குவேன். ஒருவருடம் பாதுஷா, ஒருவருடம் ஜாங்கிரி, மூன்று வர்ண மைதா கேக், அவர்களுக்கு பிடித்த பிஸ்கட் என்று. என்று இந்த இனிப்புகள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும். எல்லோர் வீடுகளிலும் சுண்டல் செய்வார்கள் குழந்தைகளுக்கு மாறுதலாக இருக்கட்டுமே என்று.

மற்ற நாட்களில் வந்தால் அன்று என்ன பிரசாதமோ அதுவே கொடுக்கப்படும். அவை தீர்ந்து விட்டால், சாக்லேட், பொட்டுக்கடலை பொடி ( சீனி போட்டு திரித்து வைத்து இருப்பேன்.)


சிலவருடங்கள் படிகள் அமைக்காமல் இப்படி அலமாரியிலேயே வைத்து இருக்கிறோம்.

தினம் ஒரு கோலம் பித்தளை தட்டில் போடுவேன், சரஸ்வதி பூஜை அன்று தாமரை இடம் பெறும்.
இந்த மலை  அமைந்து இருக்கும்  பீடம் கல்யாணம் ஆகி புதுக்குடித்தனம் வந்த போது பாட்டில்கள் வைக்க வாங்கிய மர அலமாரி. அதன் மேல்  இரும்பு வலை அடித்து மண் சிமெண்ட் வைத்து எவர்சில்வர் வாளி மீது மலை அமைத்தார்கள் என் கணவர். அதன் மேல் வைக்கும் கோவிலுக்குள்  அருள்பாலிக்கும்  சாமிகள்  ஓவ்வொரு  வருடமும்  மாறும். ஒரு முறை சிவலிங்கம், பிள்ளையார் என்று. கோவிலுக்குள் விளக்கு அமைத்து சாமி தெரிகிறமாதிரி வைப்பார்கள். மலை மேல் அருவியிலிந்து தண்ணீர் வரும்.
மலைமேல் கோபுரவாசலில் இருக்கும் பலீபீடம், படிகளில் நிற்கும் மனிதர்கள் மகன் சாக்பீஸில் செய்தவை.

மலை ரயில் போவது போல்  அமைத்த  பழனி மலை கோவில் இது.
ஒவ்வொரு பொம்மைகளும்  எடுத்து வைக்க வசதியாக படியை விட்டு முதலில் எடுத்து வைக்கப்படுகிறது.

வைக்கோல் வருடா வருடம் மாற்றுவேன். மாயவரத்தில் இருந்த போதும், திருவெண்காட்டில் இருந்த போதும் வைக்கோல் கிடைத்தது.

இவை அனைத்தும் ஒரு பெட்டிக்குள் இருக்கும் பொம்மைகள்.

இந்த கூட்டத்தில் இருக்கும் நாரதரைத்தான் விஜயதசமி அன்று படுக்க வைத்து விடுவோம். நவராத்திரி விழா நிறைவு பெற்று விட்டது அடையாளமாய்.
மறுநாள் எல்லாம் டிரங்க் பெட்டிக்குள் போய்விடும். அடுத்த முறை நல்லபடியாக இறங்கி வாங்க என்ற பிரார்த்தனைகளுடன்.

இறைவன் அருளால் அடுத்த வருடம் கொலுவிருக்க வரவேண்டும்.
தொடர் பதிவுகளைப் படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

தீயவைகள் அழிந்து நல்லவைகள் பெருகட்டும்.
விஜயதசமி அனைவருக்கும் வெற்றியைத் தரட்டும்.
                                                            வாழ்க வளமுடன்.

35 கருத்துகள்:

 1. படங்கள் அனைத்தும் நல்லதொரு தரிசனம்.

  அழகாக விளக்கிய விடயங்கள், உங்கள் வீட்டில் அனைவரும் கலை'ஞானம் அறிந்தவர்களாக இருப்பது இறைவன் அளித்த வரம்.

  தொடரட்டும் மீண்டும் அடுத்த கொலுவில் காண்போம்
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.
   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
   உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 2. கொலு எடுத்து வைத்து, பின்னர் உள்ளே வைப்பது என்பதானது பெரிய பணி. இதனை எங்கள் அனுபவத்தில் கண்டுள்ளோம். நீங்கள் கூறியுள்ள விதம் எங்கள் வீட்டில் அப்போது நாங்கள் அடுக்கியதை நினைவுபடுத்தியது. இதுதொடர்பாகவே தனியாக ஒரு பதிவு எழுதிவருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
   கொலு பொம்மைகளை எடுப்பது, படிகளில் அமைப்பது, மீண்டும் அவற்றை பத்திரபடுத்துவதும் பெரியவேலைதான்.முதலில் எடுத்து அடுக்க கஷ்டமாய் இருந்தாலும் மீண்டும் நவராத்திரி நிறைவு பெற்று எடுத்து வைத்தவுடன் ஒரு வெறுமை வந்து ஒட்டிக் கொள்ளும் மனதில்.
   உங்கள் பதிவை படிக்க காத்து இருக்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. குடும்பத்தினர் அனைவரது கைவண்ணத்திலும் உருவான கொலுப்படங்களின் தொகுப்பும் அனுபவப் பகிர்வும் அருமை. சிறுவர்களுக்காகவே சிரத்தை எடுத்து உருவாக்கிய மலைக்கோவில், அருவி, பூங்கா மற்றும் அலங்காரங்கள் மிக அழகு. பாராட்டுகள். விஜயதசமி வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   என் பிள்ளைகள் சின்ன வயதில் அமையத்த பூங்கா,, ஊர் அமைப்பு, மலைக்கோவிலும் அழகாய் இருக்கும் அது போட்டோ ஆல்பமாய் இருக்கிறது அதையும் எடுத்து பகிர வேண்டும் சமயம் கிடைக்கும் போது.
   உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
   விஜயதசமி வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 4. திருவாச்சி கிரீடம் காசுமாலை சிறப்பு.

  சந்தனத்தில் அம்மன் முகமும் சிறப்பு. நாங்கள் புத்தகங்களை அம்மன் முன் அடுக்கி வைப்போம். சரஸ்வதி பூஜைக்குஎல்லாம் நாங்கள் படம் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக அம்மன் முகம் வரைந்து கைகளும் அமைத்து வழிபடுவது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   எங்கள் அம்மா வீட்டில் தேங்காயில் வெள்ளி அம்மன் முகம் வைப்பார்கள்.
   சரஸ்வதி பூஜை சமயம் புத்தகங்கள் அடுக்கி அதில் அம்மன் படம் வைத்து அதற்கு புடவை கட்டி விடுவார்கள் புதுபுடவை.வண்ணத்தில் இருக்கும். அதை வீட்டில் பெரிய பெண் குழந்தைக்கு கொடுத்து விடுவார்கள்.

   என் மாமியார் வீட்டில் எப்போது அம்மனுக்கு வெள்ளை புதுதுணி வாங்கி புத்தக அடுக்கின் மீது வைப்பது வழக்கம். மஞ்சள் அரைத்து அதை தேங்காயில் ஒட்டி அதற்கு கண்ணுக்கு, பூண்டு பற்கள் அல்லது பஞ்சு வைத்து கருவிழிக்கு மிளகு வைப்பார்கள் உதட்டுக்கு சிவப்பு குங்குமம் வைத்து விடுவார்கள் அது பார்க்க அம்மன் படத்தில் வரும் அம்மன் போல் பயமுறுத்தும் அதை மாற்றியவள் நான்.
   உங்களுக்கு அழகாய் வரை வருகிறது முகத்தில் கண், உதடு எல்லாம் அழகாய் வரையுங்கள் என்று சாந்து டப்பா வாங்கி கொடுப்பேன், அலங்காரம் செய்ய ஊக்கப்படுத்துவேன். அதனால் சாருக்கு உற்சாகம் ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் மாறுதல்கள் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் அழகை அடுத்த வருடம் வரை பார்க்க ஆசைபட்டு அதை கரைக்கவும் சம்மதிக்கவில்லை.
   அன்று செய்த அம்மனை கரைத்து விடுவது வழக்கம், பிள்ளையார் போல் அதையும் மாற்றி விட்டார்கள். அடுத்த வருடம் வேறு அம்மன் செய்யும் போது மட்டும் கலைப்பார்கள்.

   நீக்கு
 5. குழந்தைகளுக்காக சிரமம் எடுத்து ஸ்வீட் வாங்கி வைப்பதும், பார்க் முதலானவை அவர்கள் ரசிக்க என்று சிரமம் பார்க்காமல் அமைப்பதும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைகள் மட்டும் தான் இந்த மலை, அருவி, பார்க் ரசிப்பார்கள் .
   பெரியவர்கள் அன்றுதான் ஒன்றாய் சந்திக்கிறோம் வேறு கதைகள் பேசுவார்கள்.
   குழந்தைகள் கொலு எடுத்து வைக்கும் வரை பத்து நாளும் என் வீட்டில்தான் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். ஒரு முறை பறக்கும் கழுகு கட்டி தொங்க விட்டோம் அன்று தங்கள் நண்பர்களையும் அழைத்து வந்து விட்டார்கள்.
   மகன் வந்து இருந்த போது ரயில் வைத்து இருந்தோம் சத்தம் கொடுத்துக் கொண்டு போவதை எங்கிருந்து அந்த சத்தம் வருது என்று ஆச்சிரியமாய் கேட்பார்கள்.
   பத்து நாளும் வீடு கல கல என்று இருக்கும்.மாயவரத்தை விட்டு வந்து விட்டேன் ஆனால் நினைவுகள் அந்த ஊரை சுற்றியே.

   நீக்கு
 6. பித்தளைத்தட்டில் கோலம் ஸூப்பர். பளிச்சென்று அழகாய்த் தெரிகிறது. மலை, அதன்மேல் கோவில்... ஸாரின் கைவண்ணங்கள் ஒவ்வொன்றிலும். அவரின் கற்பனைத்திறன் ஆச்சர்யப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 7. பித்தளை தட்டு அம்மா கொடுத்த அண்டா மூடி. மொசைக் தரையில் கோலம் அழகாய் தெரியாது அதனால் அதில் போட ஆரம்பித்தேன். அதையும் குழந்தைகள் ரசிப்பார்கள்.உங்கள் கருத்துக்கு நன்றி.
  சார் வீட்டு கொலுவில் நிறைய வீடுகள் அட்டையில் அவர்கள் அண்ணன், தம்பி எல்லோரும் செய்து வைத்து இருப்பார்கள். அதற்கு பெயர் எழுதி வைத்து இருப்பார்கள்.
  சாரிடம் சொன்னேன் உங்கள் பாராட்டை மகிழ்ந்தார்கள்.
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. கை வண்ணமும் கலை வண்ணமும் காட்டுகின்றன - ஒவ்வொரு படமும் ...

  அழகு.. அழகு...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. தாம்பாளத்தில் தாமரை!...

  அழகு ஓவியம்...

  தாங்கள் குறையாகக் கொள்ளக் கூடாது...

  தாங்கள் பித்தளைத் தட்டு என்றூ குறிப்பிட்டிருக்கின்றீர்கள்...

  பொதுவாக பித்தளைத் தட்டுகள் (வட்டில்) இருந்தாலும் -
  இந்த வடிவத்திலுள்ளதை தாம்பாளம் என்று தானே சொல்வோம்...

  தற்காலத்தில் இளம் பிள்ளைகளுக்கு இது மாதிரியான பழைமையான பொருட்களின் சரியான (வட்டார ) வழக்கு சொற்களைச் சொல்லித் தர வேண்டும் என்பது என்னுடைய ஆவல்...

  தினமும் சாப்பிடும் வட்டிலையே தமிழர்கள் பெரும்பாலோர் பிளேட் என்கின்றார்கள்..
  குவளை என்பதே மறந்து போயிற்று.. டம்ளர் (என்ன பாஷை அது?..) என்றார்கள்.. அதுவும் போய் கிளாஸ் என்றாகி விட்டது...

  தமிழ் தான் கசக்கின்றதே தவிர - தாவா, கடாய், ஸ்பூன், நைஃப், ரைஸ், பட்டர், ஆயில், மில்க், பட்டர் மில்க்... என்றெல்லாம் சமையல் காணொளிகளில் கேட்கும்போது -
  மனம் தாள முடியவில்லை...

  அட!..
  அன்ன கரண்டி (எவ்வளவு அழகு!..) என்பதை ரைஸ் ஸ்பூன் என்றால் தான் தேனாகத் தித்திக்கின்றது...

  இன்னும் சொல்லலாம்.. இருப்பினும் இதை ஏன் சொல்கின்றேன் என்றால்

  இருபது வருடங்களுக்கு முன் எனக்கும் புறச் சமயத்தவர் ஒருவருக்கும் தர்க்கம்...

  தாங்கள் கோலம் இட்டிருக்கின்றீர்களே - தாம்பாளம் ..
  இதனை அவர் வெத்தலை பாக்குத் தட்டு என்றார்...

  நான் - அப்படியில்லை... தாம்பாளம் என்று தான் இதைச் சொல்வது என்றேன்..

  அவர் ஒத்துக் கொள்ளாமல் போய் விட்டார்..

  நான் யோசித்தேன்.. அவருக்கு அந்த ரகசியம் தெரியாமல் இருந்திருக்கின்றது..

  நம்முடைய இல்லங்களில் எந்த விசேஷமானாலும் இந்தத் தட்டு நிறைய வெற்றிலைச் செல்லத்தை - தாம்பூலத்தை வைத்துக் கொடுத்ததனால்

  இந்த பித்தளைத்தட்டு - தாம்பூலம்.. தாம்பூலத்தட்டு - தாம்பாளத்தட்டு என்றாகியிருக்கலாம்..

  அவர்களிடம் தாம்பூலம் வழங்கும் கலாச்சாரம் இல்லாததால்
  தாம்பூலம் என்ற வார்த்தையை அவர் அறிந்திருக்கவில்லை..

  மலர்களையும் குங்குமத்தையும் சூட்டிக் கொள்ளுதல்..
  ஆபரணங்களைப் போல தாம்பூலத்தைத் தரித்துக் கொள்ளுதல்...

  சொல்லும் பொருளும் -- என்ன இனிமை!..

  தாம்பாளத்தட்டோ - தாம்பூலத்தட்டோ
  மங்கலப் பொருட்களை அதில் வைத்து விட்டால்
  அதன் பேர் சீர்வரிசை என்றாகி விடுகின்றது...

  சீர்வரிசை தாங்கி வரும் பெண்கள் - அவர்களுடன் வரும் ஆண்கள்..

  கூடவே நாகஸ்வர இன்னிசை!...

  நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்..
  சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்!...

  இதைத்தான் மங்கலம் என்றார்கள்..

  ஆங்கிலத்தின் பின்னால் போய் அழகியலை இழந்தது தான் மிச்சம்!..

  இன்னும் எவ்வளவோ சொல்லலாம்..

  வாழ்க நலம்.. வளர்க நலம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது சரிதான். தட்டு என்று சொல்லமாட்டார்கள்.
   தாம்பாளம்தான். தட்டு என்றால் தட்டுபாடு ஏற்படும் என்று சிலர் நம்பினார்கள்.
   சாப்பாட்டு தாம்பாளம், வெற்றிலைபாக்கு வைக்கும் தாம்பாளம் என்று தான் சொல்வது வழக்கம்.சீர்வரிசை தட்டு என்று சொல்லவிடமாட்டார்கள் சில பெரியவர்கள். சீர்வரிசை தாம்பாளங்கள் என்று தான் சொல்வார்கள்.

   வழக்கத்தில் உள்ளதை பயன் படுத்துகிறோம்.

   இப்போது அப்படி பேசும் பெரியோர் சிலர்.
   முன்பெல்லாம் பித்தளை, சில்வர் தாம்பாளங்களில் சீர்வரிசைப் பொருட்களை அடுக்கி சபையில் வைத்தார்கள்

   //சீர்வரிசைத் தட்டுகள், ஆரத்தி தட்டுகள், ஜுவல்ஸ் ஸ்டாண்ட் இவற்றை எல்லாம் மணவீட்டினருக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் வீட்டிலேயே வித்தியாசமாகத் தயாரிக்கலாம்//

   என்று விளம்பரம் வருகிறது வித விதமாய் அலங்கார தட்டுக்கள் செய்து மணமேடையில் வைக்கிறார்கள்.

   சீர்வரிசை தட்டு இவ்வளவு வைக்க வேண்டும் என்று மணவிழா சடங்கு முறைபுத்தகத்திலேயே எழுதி வைத்து இருக்கிறார்கள். இப்போது.
   இளையதலைமுறைக்கு அப்படித்தான் பதிவாகும்.   //சொல்லும் பொருளும் -- என்ன இனிமை!..//

   எப்படி சொல்லவேண்டும் என்ற பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவருக்கும் மாறு பட்டாலும்.சொல்லும் பொருளும் புரிந்து சொல்லும் போது இனிமைதான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. நம்முடைய இல்லங்களில் எந்த விசேஷமானாலும் இந்தத் தட்டு நிறைய வெற்றிலைச் செல்லத்தை - தாம்பூலத்தை வைத்துக் கொடுத்ததனால்

   இந்த பித்தளைத்தட்டு - தாம்பூலம்.. தாம்பூலத்தட்டு - தாம்பாளத்தட்டு என்றாகியிருக்கலாம்..//

   நீங்கள் சொல்வது சரிதான் .

   அப்படி ஆகி இருக்கலாம்.

   நீக்கு
 12. தங்களது கால்வலி குறைந்துள்ளதா!...

  விரைவில் நலம் பெறவேண்டும்..
  வளர்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கால்வலி குறைந்து இருக்கிறது.
   நீங்கள் சொன்னது போல் செய்தேன்.
   மருந்துகள் எடுத்துக் கொள்கிறேன்.
   உங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 13. பழனி மலை வெகு அற்புதம். பலமுறை பார்த்தேன் :) சரஸ்வதியின் அழகு கூடிக்கொண்டே போகிறது. அடுத்தவருடமும் சிறப்பாக வருவார். நாரதரைத் தேடிக் கண்டுபிடித்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   நாரதரை தேடி காண்டு பிடித்து பார்த்து விட்டது மகிழ்ச்சி.
   அம்மன் அடுத்த முறை சிறப்பாக வருவார் என்று தேனாக இனிக்க வாழ்த்து சொன்னதற்கு நன்றி நன்றி.

   நீக்கு
 14. கோமதி அக்கா, நான் ரொம்ப லேட்டூ.. இருப்பினும் ரெயின் புறப்படுமுன் வந்துவிட்டேன், இங்கு ஹொலிடே என்பதால் பிசியாகிட்டேன்ன்..
  மாமாக்குள்ளும் இப்படி ஒரு கலைவண்ணம் இருப்பதைப் பார்த்து வியக்கிறேன், மிக அழகாக ஒவ்வொரு வருடமும் செய்திருக்கிறார் அம்மனை, நீங்க சொல்லாவிட்டால் ஏதோ கோயில் சிலை எனவே எண்ணியிருப்பேன்.

  ஒவ்வொரு அம்மனுக்கும் முகம் அழகாக வந்திருக்கு, அதிலும் அமெரிக்கா அம்மன் மிக அழகு.. வெள்ளை உடை என்பதாலோ என்னமோ ஜொலிக்கிறா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   தாமதமாக வந்தாலும் உங்களின் உரையாடல் மகிழ்ச்சி.
   ரயில் உங்களுக்காக தான் காத்து இருக்கிறது அடுத்த பதிவிடாமல்.
   விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்தது மகிழ்ச்சி.ஏஞ்சலுக்கும் வரமுடியவில்லை போலும்.
   மாமாவின் அம்மன் அலங்காரங்களை பாராட்டியதை மாமாவிடம் சொன்னேன், மகிழ்ந்தார்கள்.

   நீக்கு
 15. //அதிராவிற்காக :- பாட புத்தகங்கள்,சாமி புத்தகங்கள், கலை இலக்கியப் புத்தகங்களை அடியில் வைத்து அதன் மேல் வெள்ளை ஆடை அணிவித்து அதன் மேல அம்மன் அமைப்போம்.,//

  மிக்க நன்றி கோமதி அக்கா, நாங்கள் வீட்டுப் பூசை அன்றுதான் அனைத்தையும் வைத்து, பூசை முடிந்ததும் புத்தகங்களை எடுத்துக் கொஞ்ச நேரம் படித்த பின்பே சாப்பிடுவோம், முழுநாளும் வைப்பதில்லை இப்படி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரஸ்வதி பூஜைக்கு வைக்கும் புத்தகங்களை விஜயதசமி பூஜையின் போதுதான் பூஜை செய்து விட்டு எடுத்து படிப்போம்.
   சரஸ்வதி பூஜை அன்று படிக்க கூடாது என்பார்கள்.

   நீக்கு
 16. சாறிக் கலர் சூப்பராக இருக்கு. கோமதி அக்காவும்தான்.

  //சிலவருடங்கள் படிகள் அமைக்காமல் இப்படி அலமாரியிலேயே வைத்து இருக்கிறோம்.//

  இதுவும் நல்ல ஐடியாத்தான், அப்படியே வருடம் முழுக்க அதுக்கு ஒரு கேட்டின் போட்டு வைத்து விட்டிடலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புடவை, அக்கா இருவரையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.
   நீங்கள் சொல்வது போல் நிறைய பொம்மைகள் அலங்கார கண்ணாடி தடுப்புக்குள் வந்து விட்டது. மீதி மேலே பரணில் இருக்கிறது எடுத்து நவராத்திரிக்கு வைக்க வேண்டும்.
   எடுத்து செய்ய முடியாத போது நீங்கள் சொல்வது போல் நிரந்தர கொலு வைத்து தினம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

   விடுமுறை முடிந்து வந்து பழைய பதிவை படித்து கருத்துகளை சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி.

   நீக்கு
 17. மிகத்தாமதமாக வருகிறேன் கோமதி. ஒவ்வொரு வரியும் அர்த்தமுள்ளதாக
  அத்தனை செய்திகளும் அமிர்தம்.
  சாரின் கைவண்ணத்தை நீங்கள் ஊக்குவித்தது மிகவும் நன்மை.
  காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும்
  கைகொடுக்கும் தர்ம பத்தினியாக நீங்கள் இருப்பது எத்தனை இனிமை அம்மா.
  தாம்பாளம் அருமையான வார்த்தை.

  பல நல்ல நிகழ்வுகளைக் கண்முன் நிறுத்துகிறது.
  சரஸ்வதி அம்மன் அழகோ அழகு.

  குடும்பம் முழுவதும் கலையறிவு ,ஞானம் அந்தத் தாய் அருளினது. என்றும் நிலைத்து வழிமுறையாக வளர வேண்டும்.
  நேற்று பேரன் பாட்டுக் கச்சேரி இருந்தது.இன்று ஆங்கில இசைக்கருவி ஒன்றை
  இசைக்கிறான்.
  உங்கள் பேரன் சபரியின் படம் கண்டு மகிழ்ந்தேன்.
  வரும் நவராத்திரி நல்லபடியாக அமைய வாழ்த்துகள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   20 தேதி சபரி மிருதங்க அரங்கேற்றம் செய்தான்.
   உங்கள் பேரனும் பாட்டு கச்சேரி செய்தது அறிந்து மகிழ்ச்சி.
   உங்கள் அன்பான கருத்துக்கள் மனதை மகிழ செய்கிறது.
   அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 18. அம்மன் முகங்களும் அலங்காரங்களும் அழகோ அழகு! மிக அருமையான கொலு. அபாரமான உழைப்பு. நவராத்திரி கொலு பற்றி ஏழு பதிவுகள் போட்டிருக்கீங்களா? ஒவ்வொன்றாய்ப் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
   முதலில் கஷ்டபட்டாலும் கொலுவிற்கு வரும் குழந்தைகள், பெரியவர்கள் முகம் மலர்ந்து சொல்லும் வார்த்தைகள் மனதுக்கு மகிழ்ச்சி, பலம் தருகிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 19. கொலுஅனைத்தும் கண்டு மகிழ்ந்தேன் .

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
  கொலுவை பார்த்து மகிழ்ந்தது மகிழ்ச்சி தருகிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு