சனி, 7 மார்ச், 2015

பெண்மையைப் போற்றுவோம் !

நாளை  சர்வதேச மகளிர் தினம்:-

//பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.

சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.

அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.//

நன்றி- தினகரன்.

மகளிர்தினத்தை சிறப்பு செய்யும் விதமாய் நான் சந்தித்த, படித்த சில பகிர்வுகள் இங்கு:-

போன மாதம் மதுரை போய் இருந்தேன் அப்போது  பள்ளி அருகில்  கடைவிரித்திருந்த அம்மாவை பார்த்தவுடன் என் இளமைக்கால நினைவுகள் வந்தன. அவர்களுடன் பேசியபோது  கிடைத்த சில செய்திகள் :-

பள்ளிப் பருவத்தில் குழந்தைகளுக்கு வீட்டில் எவ்வளவு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தாலும் பள்ளி அருகில் விற்பதை வாங்கித் தின்றால் தான் மகிழ்ச்சி , திருப்தி ஏற்படும்.
பள்ளி அருகில் தான் முன்பு எவ்வளவு விற்பனைக்குக் காத்திருக்கும் ! ஐஸ்கட்டியைத் தேங்காய்ப்பூப் போல் துருவி குச்சியில் வைத்து (கலர் கலராக பாட்டில்களில் இருக்கும் கலர்களை)நாம் கேட்கும் கலர்களை அதன்மேல் ஸ்பிரே செய்து தருவார்கள். கமர்கட், தேங்காய்பர்பி, கடலைமிட்டாய், மாங்காய், நெல்லிக்காய், தேன்மிட்டாய், இலந்தவடை, குச்சிமிட்டாய், பென்சில் மிட்டாய் , சேமியா ஐஸ், பால் ஐஸ், இன்னும் எத்தனை எத்தனை வகை ஐஸ்கள்.
இப்போது சுத்தம் சுகாதாரம் என்று பள்ளி அருகில் எதுவும் விற்கக் கூடாது என்று  சொன்னதால் குழந்தைகளை இடைவேளையின் போதும் வெளியில் விடுவது இல்லை.
பள்ளியின் வாசலில் சுத்தமாக பாட்டில்களில் மிட்டாய், பொரிஉருண்டை, மற்றும் பாக்கெட்களில் உள்ள தின்பண்டங்களை வைத்துக் கடைவிரித்து இருந்த அம்மாவிடம் பள்ளி பிள்ளைகள் வாங்கத் தடை உள்ளதே ! நீங்கள் இங்கு கடை போட்டு இருக்கிறீர்களே விற்குமா? என்று கேட்டால் பள்ளிக்கு கொண்டுவந்து விடும் பெற்றோர்களுடன் வரும் பிள்ளைகள் கேட்கும் , அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார்கள். என் பேரப் பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்குக் காவலாக இங்கு இருக்கிறேன். தினம் 10 ரூபாய் விற்றால் போதும் அம்மா இங்கு, அப்புறம் பள்ளிவிட்ட பின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு பார்க் போய் விற்பேன் என்றார்கள்.
வயதான காலத்தில் தன் மகளுக்குப் பாரமாய் இருக்கக் கூடாது . அவளுக்கு உதவியாய் ஏதாவது சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

லட்சிய பெண்மணியைப் போற்றுவோம்.

இப்படி மகிழ்ச்சியுடன் குடும்பத்திற்கு உழைக்கும் பெண்மணியைப் போற்றுவோம்,

 வயது முதிர்ந்தாலும் வீட்டில் முடங்கிக் கிடக்கமல் தன்னால் முடிந்த உதவிகளை வீட்டுக்கு  செய்ய பனங்கிழங்கு விற்கும்  வயதான தாயை வணங்குவோம். 

கட்டிடத்தை பார்த்துக் கொள்ளும் ஒரு அம்மா - (என் போட்டோ வேண்டாம் தாயி என்று சொல்லி விட்டார்கள். )கொஞ்சம் சாமான்களை வைத்துக் கொண்டு நளபாகம் செய்து கொள்ளும் அம்மா வியக்க வைத்தார்.கட்டிடம் முடிவடைந்து விட்டது அதனால் வெளியில் சமைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்களாம். கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டு  காவலுக்குப் படுத்துக் கொள்ளும் அம்மாவின்  கஷ்டங்கள் விலகி நன்றாக இருக்க வேண்டும்.

இந்தப் படம்  ’அமுதசுரபி’ இதழ் பொன்விழா ஆண்டில் நடத்திய குறுநாவல் போட்டியில் வென்ற  ’விதைநெல்’- நாவலின் அட்டைப்படம். வயதானலும்  சுறு சுறுப்பாய் வேலை செய்யும் மூதாட்டி என்னை கவர்ந்தார்.

நம்பிக்கைக்குரிய சாதனை :_

//அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர்கள் அரிதாகி வரும் காலம் இது. அவரவர் வாழ்க்கையைப் பார்க்கவே நேரம் போதவில்லை என அலுத்துக்கொள்பவர்களும் அதிகம். இவர்களுக்கு மத்தியில் சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களுக்கு மரியாதை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திரிபுரா ஃபவுண்டேஷன். ஆபத்தான சூழ்நிலையில் துணிச்சலாக இறங்கி பிறரைக் காப்பாற்றிய குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘ஹோப் ஹீரோ’ விருதுதான் அது. இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் குக்கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளும் உண்டு! சாகச சந்தானலட்சுமி!

திருச்சி மாவட்டம், ஆதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தானலட்சுமி எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஆற்றில் மூழ்கப் போன இரண்டு தோழிகளைத் துணிச்சலாக ஆற்றில் குதித்துக் காப்பாற்றி இருக்கிறார்! 

‘‘அன்னிக்கு ஆத்துல அதிக தண்ணி போயிட்டு இருந்துச்சு. ரெண்டு புள்ளைகள் திடீர்னு ‘காப்பாத்துங்க’ன்னு கத்துனாங்க. ஒரு புள்ள காலு சேத்துக்குள்ள சிக்கிருச்சு... இன்னொரு புள்ள அதோட தோள் மேல உட்கார்ந்துருக்கு. அங்க நல்லா நீச்சல் தெரிஞ்சவ நான்தான். யோசிக்காம குதிச்சேன். எவ்வளவு இழுத்தும் ரெண்டு புள்ளைகளாலயும் வெளிய வர முடியல... வேற வழியில்லாம, ஆழமா நீந்திப் போய் சேத்து மண்ணை விலக்கிவிட்டேன். அஞ்சு நிமிசம் அப்படி செஞ்ச பிறகுதான் கால் ரெண்டும் வெளிய வந்துச்சு. அப்படியே தூக்கிவிட்டேன்’’ என துணிச்சல் சம்பவம் குறித்து விவரிக்கும் சந்தானலட்சுமியின் ஆசை - ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரி ஆகி சேவை செய்வது!

‘‘இன்னிக்கு நாட்டுல நிறைய வன்முறை நடக்குது. கொலை, கொள்ளை அதிகமாகிடுச்சு. இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்னா நான் போலீசாகணும்’’ என உறுதிபட பேசும் சந்தானலட்சுமியின் பெற்றோர் விவசாயக் கூலிகள். நீச்சல், மரம் ஏறுதல், யோகா உள்பட பன்முகத் திறமைகள் கொண்ட சிறுமியாக இவர் இருப்பதில் அம்மா பெரியநாச்சிக்குப் பெருமை... ‘‘சின்ன வயசுல இருந்தே பொறுப்பா வளர்ந்துட்டா. அடுத்தவங்களுக்கு ஏதாவது உதவின்னா முத ஆளா நிப்பா... இந்த விருது அவளுக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்’’ என்கிறார் அம்மா.

பொறுப்புள்ள புவனேஸ்வரி! :=

திருவள்ளூர் மாவட்டம், முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவரது அத்தை மகள் சுஜாதா மனவளர்ச்சி குன்றியவர். தனியாக எந்த ஒரு அன்றாடச் செயலையும் செய்ய இயலாது. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் அவளது பெற்றோர் புவனேஸ்வரியின் வீட்டில் படிப்பதற்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த நாள் முதல் சுஜாதாவின் பெறாத தாயாகவே மாறி கவனித்து வருகிறார் புவனேஸ்வரி. பேச்சு, விளையாட்டு, உணவு என எல்லாச் செயல்பாடுகளுக்கும் புவனேஸ்வரி கூடவே இருந்து கவனித்து வருகிறாள். சுஜாதாவை குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, சீருடை அணிவித்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார். எந்தக் கட்டாயமும் இன்றி, மனம் விரும்பியே இத்தனை  உதவிகளையும் சுஜாதாவுக்குச் செய்கிறார். 

பள்ளியிலும் கழிப்பறைக்கு கூட்டிச் செல்வது தொடங்கி அனைத்து உதவிகளையும் செய்கிறார். ‘‘அப்பா, அம்மா ரெண்டு பேரும் வயல் வேலைக்கு கூலியா போறாங்க. சின்ன வயசுல இருந்து சுஜாதாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன். எனக்கு ஒண்ணும் கஷ்டமா தெரியலை. அடுத்தவங்களுக்கு உதவி பண்றத என்னிக்கும் என் லட்சியமா வைச்சுருக்கேன். அவளுக்கு இன்னும் தனியா சாப்பிடத் தெரியாது. வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாது. நான் தினமும் சொல்லிக் கொடுப்பேன். இப்ப ‘அப்பா, அம்மா’ன்னு சொல்றா! நாம பேசறது அவளுக்கு புரியுது. 

பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டாங்கன்னா, இவளையும் கூட்டிக்கிட்டு பக்கத்து கிராமமான தாழ்வீடுக்கு மல்லிகைப்பூ பறிக்க போவேன். அதுக்குக் கிடைக்கிற கூலி எங்களுக்கு உதவியா இருக்கும். இந்த விருது கிடைச்சதுக்கு எங்க ஊர்ல எல்லாம் பாராட்டினாங்க...’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசும் புவனேஸ்வரியின் லட்சியம், ‘டாக்டராகி எல்லோருக்கும் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும். சாதி, மத வேறுபாடில்லாத சமூகத்தை உருவாக்க உழைக்க  வேண்டும்’ என்பதே! //

நன்றி - தின்கரன் நாளிதழ்

உலக அமைதி ஏற்படவும், பசுமைபுரட்சியை வலியுறுத்தியும்  இவர் வரைந்த ஓவியத்திற்கு  கல்வி அமைச்சரிடம் பரிசும் பாராட்டும் பெற்றார்.

--நன்றி தினமலர்.இப்படி நம்பிக்கைகளுடன் வாழும் குழந்தைகளையும் முதியவர்களையும் நல்ல பெண்மணிகளையும் வாழ்த்தி மகிழ்வோம். மகளிர் தினத்தில். மகளிர்தின வாழ்த்துக்கள்.


வாழ்க வளமுடன்.