வியாழன், 24 பிப்ரவரி, 2011

உன்னையே நீ உணர்!

//மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா//
என்று பெண்ணின்பெருமையைக் கவிமணி கூறினார்.

//பெண் என்பவள் கணவன் , மகன், மகள், மாமா, மாமி, தாய், தந்தை , உடன் பிறந்தோர் என பலகிளைகளைக் கொண்ட விருட்சத்தின் வேர். அவள் ஆரோக்கியமே அம் மரத்தின் நீடித்த வாழ்வின் அஸ்திவாரம். இதனை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். //

பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)

//எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே
வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனைபேர்?//

//ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டுப் பண்பாடு பெரும்பாலும் பெண்களிடத்தில்தான் அப்படியே நிலைத்து, தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.//----------வேதாத்திரி மகரிஷி.

நவராத்திரி போன்ற பண்டிகையின் நோக்கம் பெண்களின் சிறப்பைப் பெண்கள் உணர வேண்டும் என்பது தான். தேவி ,கெட்டதை அழித்து நல்லதை நிலை நாட்டுகிறாள். அது போல் நாம் கெட்ட எண்ணங்களை களைந்து ,நல்ல எண்ணங்களை நம்மைச் சுற்றிப் பரவவிட வேண்டும். மனதிடம் உடையவர்களாய் இருக்க வேண்டும்,எப்போதும் நல்லதையே காண்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும். பெண்மைக்குரிய எட்டுக் குணங்களாகப் பெரியவர்கள் சொல்வது
அடக்கம், பொறுமை, தியாகம், பிறர்நலம், இரக்கம், ஒப்புரவு, தொண்டு, சேவை. தேவைப்படும் போது இந்த பண்புகளை வெளிப்படுத்தி எண்ணங்களையும்,செயல்களையும் நிறைவேற்றுபவர்களாய் இருந்தார்கள்.

இந்த நோக்கத்தைத் தமிழில் தோன்றிய முதல் புதினமாகிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் கூறிவிட்டது. புதினத்தின் கதாநாயகி ஞானாம்பாள் பெண்மைக்குரிய குணங்கள் உடையவளாகவும் ,எண்ணங்களையும் செயல்களையும் நிறைவேற்றுபவளாகவும் இருக்கின்றாள். வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் ஆண் வேடம் பூண்டு அதீத சக்தியுடன் அரசாட்சி உரிமையும் பெற்று அறிவுக் கூர்மையுடனும், திறமையுடனும் ஆட்சி புரிகின்றாள். சோதனைக் காலத்திலும் பெண் மனம் தளராமல் தன் அறிவைப் பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் துணிவுடன் பாதுகாப்பதைப் பெண்களுக்கு உணர்த்துகிறது.

பெண்கள் பிறர் மனதில் பதியுமாறு விஷயங்களைத் திறமையுடன் எடுத்துரைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இத்தகைய பெண்கள் நாட்டுத் தொண்டு, வீட்டுத் தொண்டு, சமயப் பணி, முதலியவற்றில் காட்டியுள்ளார்கள். மொழி வளர்ச்சிக்காவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருக்கும் உறுதுணையாக ஒரு பெண்தான் இருக்கிறாள். அம்மா நிதி மந்திரி,மதிமந்திரி, சமையல் எகஸ்பர்ட்,அலாரம் களாக், சாய்ந்து கொள்ள தூண், குடும்பத்தின் வைட்டமின் டானிக், நல் ஆசிரியர், சிறந்த காரிய தரிசி, பொறுமையின் எல்லை. வாழ்க்கை துணை (வாழ்க்கை கூட்டாளி)-இப்படி ஒருவருக்கு அமைந்து விட்டால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடும்.

நாமக்கல் கவிஞ்ர் இராமலிங்கம் அவர்கள் ’பெண்மை ’ என்ற கவிதையில் சொல்வது:

// தாயாய் நின்று தரணியைத் தாங்கும் ;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும் ;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும் ;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும் ;
அயலார் தமக்கும் அன்பே செய்யும் ;//

// பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுவதற்கு //

இப்படிச் சொல்கிறார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உலகம் முன்னேற ஆண் பெண் இருவரும் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று பாரதி கூறினார்.

//ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்//

என்றார்.

//நம் பெண்கள் வெறும் போகப் பொருள்களாக ஆக்கப்படக்கூடாது
பெண்களை ஆண்கள் படிக்க வைக்க வேண்டும்.அவர்களுக்கு உலகப்படிப்பும் பகுத்தறிவும் ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும்//
இப்படி தந்தை பெரியார் சொல்கிறார்.

பெரியார் சொன்னமாதிரி ஒவ்வொரு வீட்டிலும் இப்போது பெண்ணைப் படிக்க வைக்கிறார்கள். பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் சில பெண்கள் எவ்வளவு படித்து இருந்தாலும் சோதனை ஏற்படும் போது அதை எப்படி சமாளிப்பது என்று
யோசிக்காமல் வேறு முடிவு எடுத்து விடுகிறார்கள். அதற்கு காரணம் தன் இரக்கம் தான் . கழிவிரக்கத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பெண்ணைப் பற்றி கூறுகிறார் ,ஒரு பாட்டில்:

//அருமையுடன் வளர்ந்து அறிவுள்ளபெண்ணாக
ஆக்கிதரும் பொறுப்பு அன்னையிடந்தான்-குலப்
பெருமைதனைக் காத்துப்பெற்றவர் மனம் நாடும்
பேரைப் பெறும் பொறுப்பு பெண்ணிடந்தான்.//

திருமணம் ஆன பெண்கள் இரு வீட்டுக்கும் நட்புப் பாலமாக இருந்து பெற்றவர்களுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு தையல் என்று பெயர். புகுந்தவீட்டையும்,பிறந்த வீட்டையும் இணைப்பதால் தான் தையல் என்று பெயர் வந்தது போலும்.

ஒரு வீட்டில் பெண் படித்து இருந்தால் அந்த வீடே பல்கலைக்கழகமாக மாறிவிடுகிறது என்கிறார், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். உலகில் பெண்கள் ஆண்களைப் போல் சரி பங்குடையவர்கள். ஆண்களுக்குச் சற்றும் குறைந்தவர்களல்ல .இப்படி கவிமணி,பாரதி, பாவேந்தர் , திரு.வி.க, தந்தை பெரியார் , மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற சான்றோர்கள் பெண் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டாலும் அவர்களின் நோக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. பெண்கள் தான் மனது வைக்க வேண்டும், முழுமை அடையச் செய்ய. அவர்கள் தான் புறப்பட வேண்டும்.

வாழ்வில் அனைத்து உயர்வுகளையும் தரவல்ல பெண்ணின் பெருமையை உணர்ந்து பெண்கள் இரண்டாவது இடத்தில் உள்ள தன் நிலையை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம். பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டுடைய முன்னேற்றம்.

அந்தக் காலத்தில் மனையறம் புரிதலை மகளிரும், வினையறம் புரிதலை ஆடவரும் செய்தார்கள். ஆனால் இந்தக்காலத்தில் பெண்களுக்கு வீடு,அலுவலகம் என்று இரட்டைப் பளு தூக்குதல்! அதில் உள்ள சிரமங்கள் எவ்வளவு? இரண்டையும் திறம்படச் செய்யும் பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார்கள்.

தன் திறமைகளை முடக்காமல், தன்னைச் சுதந்திரமாய், தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய விடும் குடும்பம் சிலருக்குக் கிடைக்கும் . சிலருக்குப் போராடித் தான் ஜெயிக்க வேண்டும், குடும்பத்தார் ஆதரவு இல்லாமல். இப்படி தன் திறமைகளை வளர்த்துக் கொண்டு தன் குழந்தைகளையும் சிறப்பாய் வளர்த்து சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வழி செய்வதில் பெண்ணின் பொறுப்பு அதிகம்.

பெண்கள் எவ்வளவு கற்றாலும் வாழ்க்கைக் கல்வி கற்க வில்லை என்றால் வாழ்க்கையைத் திறம்பட நடத்தமுடியாது. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் வேண்டும் என்றால் பிறருடைய சுதந்திரத்தை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். எதிலும் வரையறை தாண்டாத கட்டுப்பாடே நாகரிகத்தின் அளவுகோல். இது இரு பாலருக்கும் பொதுவானது- குறிப்பாகப் பெண்களுக்கு.

அன்னை சொல்வது போல் பெண் ஐவகைக் கடமைகளைச் செய்தால் இவ் பூவுலகில் நன்றாக வாழலாம். அவை:

1. தன் உடல் நலம் காத்தல்
2. தன் குடும்ப நலம் காத்தல்.
3. சுற்றத்தார் நலம் காத்தல்
4. நாட்டு நலம் காத்தல்
5. உலக நலம் காத்தல்.

இல்லத்தை ஆளும் அரசி சிறப்பாக ஆட்சி செய்தால் நாடும் வீடும் நலம் பெறும்.

வாழ்க வளமுடன்.

புதன், 16 பிப்ரவரி, 2011

அமெரிக்காவில் உள்ள சில இந்துக் கோவில்கள்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம். இப்படி எல்லாம் முன்னோர்கள் கூறுவார்கள். நம் மக்கள் எந்த ஊருக்கு சென்றாலும் நம் இறைவனை
அங்கு குடியேற்றி வழிபட்டு இறைவனின் அருளைப் பெற்று மகிழ்கிறார்கள்.

//குந்தி நடந்து குனிந்தொரு கை கோலூன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத்தேறி-வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.//

உடம்பில் நல்ல பலம் இருக்கும் போதே கோவிலை வலம் வந்துவிட வேண்டும் என்பார்கள் அம்மா. அப்பாவுக்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊரில் உள்ள கோவில்களை தரிசித்து விடுவார்கள்.எங்களையும் கூட்டிப் போய் எங்களுக்கும் அது பழக்கம் ஆகிவிட்டது. என் கணவர் அவர்களும் அந்த மாதிரி ஆன்மீக குடும்பத்தில் வந்ததால் எப்போதும் எந்த ஊர் போனாலும் அந்த ஊர் சிறப்புத் தலங்களைப் பார்த்து விடுவோம்.

அமெரிக்காவிறகு மகனின் வீட்டுக்கு போன போது கேட்ட முதல் கேள்வி பக்கத்தில் கோவில் இருக்கா என்பது தான்.ஒரு கோவில் இருக்கு 30 நிமிடத்தில் சென்று விடலாம் என்றார். பிறகு அங்கு இருந்த 75 நாட்களில் சனி, ஞாயிறு நாட்களில் முக்கியமான பார்க்க வேண்டிய இடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்றது சிறப்பான தருணங்கள். ஒவ்வொன்றும் நினைவில் வைத்து மகிழக் கிடைத்த ஒப்பற்ற தருணங்கள். ஊருக்கு போய் உறவினர்களுடன் பண்டிகை கொண்டாட முடியாதவர்கள் இங்கு வேவ்வேறு மொழி பேசினாலும் ஒரே குடும்பம் போல கோவில்களில் தங்கள் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். பண்டிகைகளை அதே நாளில் கொண்டாட முடியாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.எல்லோருக்கும் தங்கள் உறவினர்களுடன் கொண்டாடிய மகிழ்ச்சி கிடைக்கிறது.
நாங்கள் அங்கு சென்ற திருக்கோயில்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.


ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில்,ஸ்வீடிஸ்பரோ.நாங்கள் அங்கு இருக்கும் போது சித்திரை விசு பண்டிகைக்கு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் போனோம். தமிழ் வருடப்பிறப்பை மகன் மருமகள் பேரனுடன் போய் தரிசனம் செய்து வந்தோம். இந்த ராஜகணபதி நல்ல அலங்காரத்தில் கண்ணைக் கவர்ந்தார். நடு நாயகமாய் ஸ்ரீ ராஜ கணபதியும், சஹஸ்ரலிங்கேஸ்வரர் வலது புறமும், யோகதக்ஷ்ணாமூர்த்தி இடது புறமும் வெள்ளி கவசத்தில் அழகாய் அருள்பாலித்தார்கள்.

இக் கோயில் ஸ்வீடிஸ்பரோவில் இருக்கிறது. இங்கு சஹஸ்ரலிங்கேஸ்வரர், ஸ்கஸ்ராம்பிகா, ஸ்வாமிநாதஸ்வாமி, யோகதக்ஷ்ணாமூர்த்தி ஆகியோருக்குச் சன்னதிகள் உள்ளன. பஞ்சலோகத்தில் நவகிரகங்களுக்கு சிலைகள் உள்ளன.

பிரதோஷம், சத்யநாராயணபூஜை, சங்கடஹரசதுர்த்தி, வைகாசி விசாகம் எல்லாம் சிறப்பாய் நடக்குமாம். நாங்கள் தமிழ் வருடப்பிறப்புக்கு போனபின் வைகாசி விசாகத்திறகுப் போனோம். அன்று என் பேரனுக்கு அன்னம் ஊட்டினோம். என் மருமகளின் தோழியின் கணவர் காவடி எடுத்தார். நிறைய அன்பர்கள் பால்குடம், காவடி எல்லாம் எடுத்தார்கள். முருகன் அழகாய் கோவிலைச் சுற்றி பவனி வந்தார். முருகனுக்கு அபிஷேகம் ஆகும் போது முருகன் பாடல் பாடதெரிந்தவர்கள் எல்லாம் பாடலாம் என்றார்கள் எனக்கு பிடித்த முத்தான முத்துக் குமாரா முருகைய்யா வா வா என்ற பாடலை பாடினேன். அபிஷேகம் செய்வது போல் வரிகள் வ்ரும் அந்த பாடலில் காரைக்குடி பெண் ஒருவர் பாராட்டினார்கள். என் அம்மாவும் இந்தபாட்டு பாடுவார்கள் என்று அம்மாவை நினைவுகூர்ந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

பூஜை முடிந்தவுடன் சில பொருட்களை ஏலம் விட்டார்கள். அதில் வரும் பணம் கோவில் பராம்ரிப்புக்கு என்றார்கள். ஆண் குழந்தை உடை, பெண்குழந்தை உடை, சந்தனம், லட்சுமி படம் போன்றவைகள் ஏலம் விடப்பட்டன. குழந்தை இல்லா தம்பதியர் குழந்தை உடைகளை ஏலத்தில் எடுத்தால் அடுத்த விசாகத்தில் குழந்தை பிறக்கும் என்றார்கள். அதற்கு சான்றாய் ஒரு அம்மா பேசினார்கள், எனமகளுக்கு குழந்தை பிறக்க போனவ்ருடம் ஏலத்தில் உடை எடுத்தேன். இந்த வருடம் பேரன் பிறந்து விட்டான் என்று. மகள் பேரனுடன் முருகனுக்கு நன்றி செலுத்த வந்து இருந்தார்கள். நகரத்தார் மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலிருந்து பிரசாதங்கள் எடுத்து வந்து இருந்தார்கள் அதை அனைவரும் உண்டு மகிழ்ந்தோம். நகரத்தார் பெருமக்களின் வள்ளல் தனமை, விருந்து உபசரிப்பு எல்லாம் எல்லோரும் அறிந்ததே.

கோவிலை திரு. குமாரசுவாமி தீட்சிதர் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். திருமணஞ்சேரியை சேர்ந்த குருக்கள்(தற்போது அவரது குடும்பம் மாயவரத்தில் உள்ளது.)திரு. கார்த்திக் நடராஜன் எனற குருக்கள் அங்கு இருக்கிறார். திருபல்லைவனத்திலிருந்து திரு. ஜெகதீசன் நந்தகுமார் என்ற குருக்கள் இருக்கிறார்.

திருக்கோயில் முகவரி 774, paulsboro road, swedesboro Nj- 08085 ph: 703-815-4850.


ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடம்
வித்யா டெம்பிள் சொசைட்டி, ரஷ்.

இங்கு சிவலிங்க மூர்த்தி, தேவி, கணேஷ்மூர்த்தி, நடராஜர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.

இங்கு சிவராத்திரி, சாரதா நவராத்திரி, குருபூர்ணிமா, கணேஷ சதுர்த்தி, ஸகந்தசஷ்டி ஆகிய திருவிழாக்கள் சிறப்பாய் நடக்குமாம்.

நாங்கள் போன நேரம் உச்சிக் கால பூஜை முடிந்து எல்லோருக்கும் உணவு அளித்தார்கள்.
சாம்பார் சாதம், தயிர்சாதம், ஊறுகாய் கொடுத்தார்கள். கோயிலில் அமைதியும் அழகும் குடி கொண்டு இருந்தது. ஒரு ஓரத்தில் சதயநாராயண பூஜை கதை கேட்டுக் கொண்டு இருந்தார்கள் சில பெண்மணிகள்.

ஜெனிஸ்ஸி நதிக்கரையோரம் ரஷ் நகரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இருப்பிடம்: 6980/6070,east river road, rush,NY 14543
ph: 533-1970


ஸ்ரீ வெங்கடேஷ்வரா லோட்டஸ் டெம்பிள்,Fairfax.Virginia
இங்கு வெங்கடேசப்பெருமாள் -பிரதான தெய்வமாக அருள்பாலிக்கிறார்.ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்தருளியிருக்கிறார். ராம் பரிவாரம், மகாலக்ஷ்மி தாயார், ஆண்டாள், கிருஷ்ணர், சுதர்சன ஆழ்வார் ஆகியோரின் திருவுருவங்கள் பஞ்சலோகத்தில் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 2003-ல் இருந்து பக்தர்களுக்கு அருள் தந்து வருகிறது.

இங்கு ஆண்டாள் திருக்கல்யாணம், நம்மாழ்வார் அவதார திருநட்சத்திர விழா ஆகியவை நடக்கினறன. நாங்கள் போனபோது நம்மாழ்வார் திருநட்சத்திர விழா நடந்து கொண்டு இருந்தது.’ ஸ்ரீராமானுஜர் நூற்று அந்தாதி’ பாடல்களைப் பாடிக்கொண்டு இருந்தார்கள்.
மாலையில் சாமி வீதிஉலா நடைபெறும் என்றார்கள். ஹனுமான் சாலீசா பாராயணம், ராமபஜனை முதலியன அப்போது நடைபெறும் என்றார்கள். அங்கு புளியோதரை ,பக்கோடா பிரசாதங்கள் விலைக்கு விற்றார்கள். வாங்கி கோவில் அருகிலில் இருந்த பார்க்கில் அமர்ந்து உண்டோம். பத்மஸ்ரீ பாலசுப்பிரமணியன் அவர்கள் அங்கு வந்து கச்சேரி செய்தார்களாம். தாமரை வடிவில் இனி மேல்தான் கோயிலை கட்டப் போகிறார்கள். இப்போது வீடு மாதிரிதான் இருக்கிறது.

கோயில் முகவரி: 12501,braddock road,fairfax,V.A 22030
ph:703-815-4850.


ஸ்ரீ துர்க்கா மந்திர்,Brunswick

அழகான பளிங்குச் சிலைகள். அம்மன் வெகு கம்பீரமாய் காட்சி தருகிறார். இங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ துர்க்காதேவி வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள்.

சிவன், கணேஷ், ஹனுமான், விஷ்ணு, லக்ஷ்மி, ராதாகிருஷ்ணா, சீதாராம் ஆகியோருக்கு சந்நதிகள் அமைந்துள்ளன. நாங்கள் போனது அன்னையர் தினத்தன்று. குழந்தைகள் ஒரு வாழ்த்துப் பலகையில் தங்கள் அன்னைக்கு வாழ்த்து எழுதிக் கொண்டு இருந்தார்கள். ஆரத்திப் பாட்டு ஆங்கிலத்தில் டைப் செய்து கொடுக்கிறார்கள். ஆரத்தி நேரம் எல்லோரையும் ஆரத்தி செய்ய சொன்னார்கள். வரிசையாக சென்று, வந்தவர்கள் எல்லோரும் ஆரத்தி எடுத்தார்கள். எல்லோருக்கும் தேங்காய், ஆப்பிள் பழம் பிரசாதமாய்க் கொடுத்தார்கள்.

பின் சாப்பாடு கொடுத்தார்கள். அன்னையர் தினத்திறகு மகனும் மகளும் சேர்ந்து சர்ப்ரைஸ்ஸாக எனக்குப் பரிசு அளித்தார்கள் காலையில். மதியம் அன்னை துர்க்கா தேவி ஆரத்தி எடுக்க வைத்து இனிப்பு பணட்ங்கள் மற்றும் வயிறார உணவு கொடுத்து என் அம்மாவை நினைவூட்டினாள். இந்த கோயிலுக்குச் சென்ற போது மிகவும் குளிராக இருந்ததால் காரை விட்டு இறங்கி கோயிலுக்குள் ஓடிவிட்டதால் போட்டோ எடுக்க முடியவில்லை.

இக் கோயிலின் முகவரி: 4240 RT 27north,south,brunswick,NJ 08824 ph:609-3760


சமர்ப்பண்- வடநாட்டுக் கோயில்,Philadelphia.

இக்கோயில் பில்டெல்பியாவில் அமைந்திருக்கிறது.
இங்கு கணேஷ்,மஹாவீர்ஸ்வாமி,ஷிவ பார்வதி,ராதாகிருஷ்ணா,துர்க்கா,ஆகியோரின் திருவுருவங்கள் பளிங்கில் உள்ளன. ராம் தர்பார் உள்ளது. அனுமான் ஆகியோர் உள்ளனர். காலை, மாலை வேளைகளில் ஆர்த்தி நடைபெறுகிறதாம். திங்கள் கிழமைகளில் மாலை வேளைகளில் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மாதமொருமுறை பஜன் உண்டாம். பக்தர்களின் வேண்டுதலுக்குகிணங்க சத்ய நாராயாணா பூஜை செய்து வைக்கப்படுகிறதாம்.
தீபாவளி, ஜன்மாஷ்டமி, நந்தமஹோத்சவம் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றனவாம். நாங்கள் போன நேரம் மாலை ஆரத்தி நேரம் .ஆங்கிலத்தில் டைப் செய்யபட்ட ஆரத்தி பாடல்களை எல்லோருக்கும் கொடுத்தார்கள் எல்லோரும் பாட, ஆரத்தி ஆனது. பிறகு இனிப்புகள் வழங்கினார்கள். அன்று என் மருமகளுக்குப் பிறந்தநாள். கோயிலில் மருமகளுக்கு எல்லா வளங்களும் தரும் படி வேண்டிக் கொண்டு வந்தேன்.

முகவரி: samarpan kindu temple,6515 bustleton avenue,philadelphia,PA,19149,215-537-9537.


ஸ்ரீ வெங்கடேஷ்வரா (பாலாஜி) கோயில் :பிரிட்ஜ்வாட்டர்,நியூஜெர்ஸி
நம் ஊரில் கோவில் பார்த்த திருப்தி இங்கு தான் ஏற்பட்டது. கோபுரம், கொடிமரம் எல்லாம் இருந்தது. ராஜகோபுரம் அழகாக உள்ளது. துவ்ஜஸ்தம்பம் முன்னதாக அமைந்துள்ளது. பெருமாள், திருப்பதி பெருமாள் மாதிரி இருப்பார். பக்கத்தில் யாரும் விரட்டாமல் நல்ல மனத்திருப்தியாய் வணங்க முடிகிறது.

கருடன், ம்ஹாகணபதி, அம்பிகை, நந்தி, சிவலிங்கம், அய்யப்பன், சுப்பிரமணியன்,
ஆகியோருக்குத் திருவுருவங்கள் உள்ளன. சத்யநாராயணா, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, ல்க்ஷ்மிநாராயாணா, ராதாகிருஷ்ணர், ராமர், ஆஞ்சநேயர், நவக்கிரஹம், ஆகிய சந்நதிகள் உள்ளன. கல்யாணமண்டபம் உள்ளது.

உபநயனம், ஹோமம், 60,80 பூர்த்திவிழா எல்லாம் செய்து வைக்கப்படுகிறதாம்.
கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட ஆண்டு -1998. ஜனவரி 1ம் தேதி ஆங்கில புது வருட பிறப்புக்கு சிறப்பு தரிசனம் உண்டாம். அன்று கூட்டம் நிறைய வருவதால் வெகு தூரத்தில் காரை நிறுத்திவிட்டு கோயில் ஏற்பாடு செய்துள்ள பஸ்ஸில் ஏறி வரிசையில் நின்று பாலாஜி பக்கத்தில் போய் அவரை சுற்றி வந்து வணங்கலாமாம். குளிருக்கு அணிந்து வந்த ஜாக்கெட் எல்லாம் பாதுகாக்க டெண்ட் வசதி உண்டாம்.மற்றும் நம் தேவைகளை பூர்த்திசெய்ய சேவை செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்களாம். பட்டுப்புடவை மற்றும் பல பொருட்கள் கல்யாண மண்டபத்தில் ஏலம் விடப்படுமாம். பாலாஜியை தரிசிக்க வந்த எல்லோருக்கும் பலவிதமான பிரசாதங்கள் வழங்குவார்களாம். நாங்கள் போனபோது சத்யநாராயணபூஜை முடித்தவர்கள் பிரசாதம் வழங்கினார்கள்.

முகவரி:
sri venkateswara temple
780,old farm road
bridgewater,NJ 08807
ph 908-725-4477.

இப்படி நாங்கள் பல திருக்கோயில்களுக்குச் சென்றோம்.

ஆன்மீகப் பயணம் மனதுக்குத் தெம்பு, உடலுக்கு ஆரோக்கியம்.

//நம் வாழ்க்கை முழுவதுமே இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்படும் பிரார்த்தனையாகும்.// அன்னை வாக்கு.

நாம் இறை வணக்கம் செய்வோம்.இறை உணர்வு பெறுவோம்.