புதன், 31 டிசம்பர், 2014

புதுவருட வாழ்த்துக்கள்!

என் கணவர் வரைந்த   புத்தாண்டு வாழ்த்து
நான் வரைந்த புத்தாண்டு கோலங்கள்








அன்னையின் அருள்மலர்களில் இருந்து சில சிந்தனைகள்.
கடமை:-
ஒருவர் தியானத்தின் மூலம் முன்னேற முடியும், ஆனால் நல்ல சரியான மனப்பான்மையுடன் கடமையைச் செய்வதன் மூலம்  அது போன்று பத்துமடங்கு முன்னேற முடியும்.

உங்கள் வாழ்க்கை:-

உங்கள் வாழ்வு பயனுள்ளதாக அமையட்டும்.

சரியானதைச் செய் :-
பிறரிடம் அன்பை எதிர்பார்க்கிறாயா? அன்புள்ளவனாய் இரு.
உண்மையை எதிர்ப்பார்க்கிறாயா? உண்மையாக இரு.

நோயை வெல்லும் மனத்திட்பம்:-

உன் உடல் நலக்குறைவை நேசிக்காதே, உடல் நலக்குறைவு உன்னை விட்டு விட்டுப் போய்விடும்.

நிகழ்காலம்:-
வாழ்க்கையில் நிகழ்காலம் ஒன்றே மிக முக்கியமான காலகட்டம் ஆகும்.

எதிர்காலம்:-

எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ  நல்லதோ அதை நாம் அமைதியாகச் செய்ய வேண்டும். என்று கேட்டுக்  கொள்கிறேன்.

கர்மயோகம்:-

நன்றியுணர்வும் கடமையுணர்வும் ஒன்றிணைந்து
நலம்விளைக்கும் செயல்களையே விளைவறிந்து ஆற்ற
ஒன்றுமதம் இது “கர்மயோகம்” எனும் வாழ்வாம்.
உயிர்கட்கு உறுதுணையாம் உலகுக்கும் அமைதி.
-= வேதாத்திரி மகரிஷி

அனைவருக்கும்   புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.!

                                        வாழ்க  வையகம்! வாழ்க வளமுடன்!
                                                           
                                                                    =============

திங்கள், 29 டிசம்பர், 2014

மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து

நான் முதல் முதலில் வலைத்தளம் ஆரம்பித்த போது இந்த கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் ”மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி என் பதிவுகளை ஆரம்பித்தேன். 

1953  ஆம் ஆண்டுமுதல் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் மனைவியின்  விருப்பப்படி, கோலத்தை சுற்றி எழுதுவதற்காக  எழுதிய கவிதைகளை  1958ல் சிறு நூலாக வெளியிட்டார்களாம், அந்த நூலின் முன்னுரையில் உள்ள அவருடைய கவிதைகள் :-

1’ மார்கழி மாதங்களிலே என் துணைவி
மாக்கோலம் காலையிலே தெருவிலிட்டு
ஆர்வமுடன் எனை நோக்கி அகம் பூரித்து
அக்கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு 
ஓர் பாட்டு சொல்லும் என்பாள் அந்நேரத்தில்
உதிக்கும்சில சொற்றொடரை கோத்துச்சொல்வேன்
ஊர்ந்து செல்லும் அவளின்கை விரல்கள்மாவை
உதிர்த்தெழுத்தாய் மாற்றும் பலர் கண்பார்கள்.

அன்றன்று இந்தவிதம் தோற்றமான
அனுபவ ஆராய்ச்சிகளின் குறிப்பனைத்தும்
ஒன்றொன்றின் உட்கருத்தை விவாதம் செய்து
ஒத்துணர்ந்து உள்ளத்தில் நிறைவு பெற்று
என்றென்றும் பலர் படிக்க உதவுமென்று
எண்ணிஎழுதித் தொகுத்து அச்சிலிட்டு
இன்றுஇப்போ நாம் கண்டு இன்பம் காண
ஏற்றபடி இதைத்தந்தோர்க் கெனது நன்றி.


வித்தியாசமான கோலம்  என்று  ’எங்கள் Blog’ ல் பகிர்ந்து இருந்தார்கள். அதில் “மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி  இருந்தார்கள் அதைப் பார்த்தவுடன் உங்களிடம் அதிலிருந்து சிலவற்றை பகிர ஆசை வந்து விட்டது.  எங்கள் Blogக் குழுமத்திற்கு  நன்றி.

 மார்கழி மாதங்களில் நான் கோலம் போடும்போது கோலங்களுக்கு கீழே அல்லது மேலே மகரிஷி அவர்களின்  அருளுரையிலிருந்து சில வாசகங்களை எழுதினேன். அந்தக் கோலங்களும் வாசகங்களும் இங்கே. (சில படங்களில் வாசகங்கள் போட்டோவுக்குள் அடங்கவில்லை).

இயற்கைச் சக்தியே விதி,
இதையறிந்த அளவே மதி 
உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை
 எண்ணி யுண்ணிடல்  என்றும் உன் கடன்.
உடையில் ஒழுக்கம் உள்ளத்தில் கருணை ,
 நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு

நினைவை யடக்க நினைத்தால் , நிலையா
நினைவை யறிய நினைத்தால் , நிலைக்கும்
உழைப்பினால் உடலும், உள்ளமும், 
உலகமும், பயன் பெறும் உணர்வீர். 
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து,
ஊக்கத்துடன் உழை, உயர்வு நிச்சயம் .
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் ,
நினைப்பதும் , செய்வதும் நித்தியகடன்.

அவனில் அணு, அணுவில் அவன் 
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை
எண்ணு , சொல், செய், 
எல்லோருக்கும் நன்மை தர,
எண்ணும்படி செய்,
செய்யும்படி எண்ணு>

                                                      உலகமே ஒரு பெரிய பள்ளி,
                                      ஒவ்வொருவருக்கும் தினம் புதிய பாடம்.
                                     பலகலைகள் கற்றோர்க்கும் பாமரர்க்கும்,
                                      பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு


வாங்கும் கடனும் , தேங்கும் பணமும்
 வளர வளர  வாழ்வை கெடுக்கும்
கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை
உண்ணாடிப் பார்க்க உணராலாம் உயிர்நிலை

                                        வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
                                                                 ---------------------

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கூடு செல்லும் பறவைகள்


மாலையில் கூடு திரும்பும் பறவைகள் பூங்காவில் உள்ள மரங்களில், ரயில்நிலையத்தில் உள்ள மரங்களில் எழுப்பும் ஒலியைக் கேட்டு இருப்பீர்கள் தானே! . 

                  
எங்கள் ஊர் ரயில்நிலையத்தில் உள்ள இந்த அரசமரத்தில் தான் பறவைகள் மாலையில் எழுப்பும் ஒலியை எடுத்தேன்.


கோயில் கோபுரங்கள், ஆலமரம், அரசமரம் இவைதாம் பெரும்பாலும் பறவைகளின் இருப்பிடம். 
வேப்பமரக் கிளி
தென்னைமரத்தில் புல் புல் பறவை
மாமரத்துக் கிளி
வேப்பமரக் கொக்கு

                                     

எங்கள் ஊர் ரயில் நிலைய அரசமரத்தில் மாலை நேரம் பறவைகள் எழுப்பிய ஒலியைத் தான் இப்போது இங்கு கொடுத்து இருக்கிறேன்.

வீடு திரும்பிவிட்டோம் என்று  மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஒலி எழுப்புகிறதா அல்லது,’என் இடம், உன் இடம்’ என்கிறதா? தெரியவில்லை. அமராமல் அங்கும் இங்கும் பறந்து கூச்சல் எழுப்புவதைப்பார்த்தால் அப்படி ஒரு சந்தேகம் வருகிறது.
                                                             வாழ்க வளமுடன்.
                                                                    ==============

வெள்ளி, 26 டிசம்பர், 2014

பழைய கோலங்கள்

மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி?   அதற்குள் என்ன இருக்கிறது?  என்று நினைக்கிறீர்களா? அந்த கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல  சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.

பொக்கிஷத்தை  பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன். நான் சின்ன வயதில்  கோலங்கள் போட்ட நோட்டு தொட்டாலே கிழிவது போல் உள்ளது.   வார மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள்  சேகரித்து வைத்து இருக்கிறேன்.

என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள்  என்று இருக்கிறது.  இப்போது  இணையத்தில் கோலங்களை பார்த்து  பிடித்த கோலத்தை போடுகிறேன்.

பழைய கோலங்கள் சேகரிப்பிலிருந்த சில உங்கள் பார்வைக்கு.:-





                               மாமியார் வரைந்து தந்த கோலங்கள்

 எங்கள் வீட்டுக்கு எனது மாமியார் வந்திருந்தபோது சில கோலங்கள் வரைந்துகொடுத்தார்கள்.  சர்க்குலேஷன் புத்தகத்தில் உள்ள கோலத்தை எனது கோலநோட்டில் வரைந்துகொண்டுவிட்டு மறுநாள் புத்தகத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். அப்போது,”அதை நான் வரைந்து தருகிறேன்” என்று மாமியார் அதைப் பார்த்து வரைந்து தந்த கோலம். அவர்கள் அழகாய் சிக்கு கோலம் போடுவார்கள்.

சிக்குக் கோலம் போடுவது பெரிய விஷயமா? நானும் போடுவேன் என்று என்கணவர் ஸ்கேல் வைத்து அழகாய்  வரைந்து தந்த கோலம்.  

பெட்டிக்குள் இருக்கும் கோலநோட்டுக்கள், பத்திரிக்கை கோலங்கள் சேகரிப்பு


சிறு வயதில் நான் போட்ட கோலங்கள்

10 வயதில் கை பழக, அம்மா சொல்லிக் கொடுத்த கோலம் . ( பாலபாட கோலம்)
+ போட்டு அதை இணைக்கும் கோலம்.
எளிதான கோலங்களாய் சொல்லிக் கொடுத்து பின் சிக்கு கோலம் சொல்லிக் கொடுத்தார்கள், அதுவும் எளிதாக போடும் சிக்கு கோலம்.
 பள்ளிவாசல் கோலம் எனும் ஆறு  ஆறு புள்ளிகளாய் விரிவு படுத்தும்கோலம்

 சின்ன பூக் கோலம் - 5 பைசா கோலம் என்று இதற்கு பெயர்

மிக எளிதாக போடும் துளசி மாடம்
இதை சந்தன கும்பா என்பார்கள்.

தொட்டில், சோபா
அலங்காரக் கண்ணாடி
தொட்டில்

நாற்காலி (இன்னும் இரண்டு கால் எங்கே என்று கேட்காதீர்கள்?( நானும் அம்மாவிடம் கேட்டவள்தான்)
ஸ்வஸ்திக் கோலம்

கோலங்கள் வைத்துப் பாதுகாக்கும் பெட்டி
தினமலர் பத்திரிக்கை கோலங்கள்



 புலி நகக்கோலம், மாட்டுக்கொம்பு கோலம், கொடிமலர், முக்கண் கோலம், நட்சத்திர கோலம், கஷ்டமான துளசி மாடக் கோவில், ஸ்வஸ்திக் கோலதேர்க் கோலம், வரிக் கோலம்,  என்று வித விதமான கோலங்கள்.அம்மாவிடம் போட்டுக் காட்டுவேன். கொஞ்ச நாள் தான் சிக்கு கோலம் எல்லாம் போட்டேன். அப்புறம் எல்லாம் பூக் கோலம் தான். கேட்டால் குழந்தைகளுக்கு அது தான் பிடிக்கிறது என்று சாக்கு. சிக்கு கோலம் தப்பாய் போட்டு விட்டால் திருத்தி அமைப்பது கஷ்டம், பூக்கோலம் என்றால் சரி செய்து விடலாம்.

சித்திரமும் கைபழக்கம் என்பது போல் கோலம் போட போடத்தான் எனக்கு அழகாய் வர ஆரம்பித்தது.

என் மாமியாருக்கு சிக்கு கோலம்தான் பிடிக்கும். பொங்கலுக்கு வீடு முழுவதும் சிக்கு கோலம் போடுவார்கள். அம்மா வெள்ளிக்கிழமை படிக்கோலம், மனைக்கோலம்  என்று சொல்லும் வரைக் கோலங்கள் போடுவார்கள். சின்ன கட்டங்கள்  போட்டு அதை இணைக்கும் வரிக்  கோலம்  உண்டு.  
  
கஷ்டமான வரிக்கோலமும் எளிதான வரை கோலமும் இருக்கிறது.வரைக்கோலங்களுக்கு  காவி கட்டும் போது கோலம் அழகாய் இருக்கும். சனிக்கிழமைகளில்  சங்குக்கோலம் போடுவார்கள். தேர்த்திருவிழா அன்று தேர்க்கோலம், போடுவார்கள். இங்கும் வீதியில் தேர் வரும் போது அழகான தேர்க்கோலங்களை எல்லோர் வீடுகளிலும் போடுவார்கள்.
அம்மா போட்ட கோலங்கள் இப்போது என்தங்கையிடம் இருக்கிறது.  
பழைய கோலங்கள் தொடரும்.

வாழ்க வளமுடன்.

====================