புதன், 18 ஏப்ரல், 2012

உறவோடு உறவாடி-பாகம்-2உறவோடு உறவாடி (இரண்டாம் பாகம்.)

ஒரு கூட்டில் வாழ்ந்தவர்கள் என்றாலும் எல்லோரும் கூடிக் கொள்வது விழாக்களில் தான் என்று ஆகிவிட்டது. அவரவர் குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று முன்பு மாதிரி 10 நாட்கள் யார் வீட்டிலும் சேர்ந்தாற் போல் தங்க முடிவது இல்லை. விழாக்களில் கலந்து கொண்டு ஓடவேண்டியதாக உள்ளது.

திருமணம் நான்கு நாட்கள் நடக்கும். சேர்ந்தாற் போல் உறவுகளுடன் நான்கு நாட்கள் இருந்து கதைகள் பேசி மகிழ்ச்சியாக இருப்போம். மற்ற விழாக்களில் உடனே கலைந்து விடுகிறார்கள். சிலர் ஒருநாளிலேயே திருமணத்தை முடித்து விடுகிறார்கள். எல்லாச் சடங்குகளும் அந்த ஒரு நாளிலே முடித்து விடுகிறார்கள். கேட்டால் விடுமுறை இல்லை, குழந்தைகள் படிப்பு என்று காரணம் சொல்கிறார்கள்.

இந்த முறை பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த என் சின்னத் தங்கை இரண்டு நாள் அதிகமாய் எங்களுடனே இருந்தாள். அவளை அழைத்துக் கொண்டு திருமலை நாயக்கர் மகால் பார்த்து வருஷங்கள் பல கடந்து விட்டன என்று போய்ப் பார்த்து வந்தோம்


திருமலைநாயக்கர் மகால் கி.பி 1636 ஆம் ஆண்டு திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நேரே ஆட்டோவில் போய் விட்டோம். நுழைவுக் கட்டணம் 10 ரூபாய்.

முன்பு எல்லாம் பாதி இடத்தை அரசு அலுவலகங்கள் பிடித்து இருந்தன. இப்போது முழுக்க முழுக்க பொது மக்கள் பார்வைக்கு உள்ளது.

‘திருமலைநாயக்கர் சொர்க்க விலாசம் ‘ என்னும் இந்த மகாலில் நடுவில் ஒரு கல் பீடம் . அதில் யானைத் தந்தத்தால் ஆன மண்டபம் இருந்தது .இதில் இரத்தினத்தால் ஆன அரியணை இருந்தது.

இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்துவராம். இது ஆஸ்தான மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் அழகையும், விஸ்தாரத்தையும், கலைவேலைப்பாட்டையும் , வேறு எங்கும் காணமுடியாது என்றும் ,தொட்டிக் கட்டு அமைப்பில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.


விதானம்மேல் விதானத்தில் உள்ள வேலைப்பாடுகள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
மரக்கதவு போல் உள்ள வேலைப்பாடு அருமை.

அருங்காட்சியகமாய்ச் செயல்படும் அரண்மணையின் உள் தோற்றம் அழகு. வளைவுகள் அற்புதமாக உள்ளன.

உட்புறத் தோற்றம்:
</div
ஓலைச்சுவடிகள், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றிய கல்வெட்டுக்கள், கல்வெட்டுக்கள் உள்ள கற்கள், பழங்காலப் பாத்திரங்கள் , முது மக்கள் தாழி போன்ற அமைப்பு உள்ள மண்பாண்டம் எல்லாம் கண்ணாடிப் பெட்டிக்குள் உள்ளன.

மகாலின் பின் பக்கம் , கலைவேலைப்பாடுள்ள உடைந்த கல்சாளரங்கள்,(ஜன்னல்), நந்தி, துர்க்கை, உடுக்கை அடிக்கும் கோடங்கி ஆகிய உருவங்கள் உள்ளன. கோடங்கியின் காது குண்டலம்(குழை) எல்லாம் அழகு.

மகால் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, பெயிண்ட் செய்து கொண்டு இருந்தார்கள். குடும்பத்துடன் வந்தவர்கள் கொஞ்ச பேர்தான். நண்பர்கள், தோழிகளுடன் வந்தவர்கள் தான் நிறைய. படிக்கும் மாணவ மாணவிகள் , கல்விச் சுற்றுலா வந்தவர்கள் என்று மகால் நல்ல கலகலப்பாய் இருந்த்தது. நான் சிறுமியாக இருக்கும் போது கல்வி சுற்றுலாவில் மகால் வந்த போது ஆசிரியர் தூணை ஒருத்தராய் கட்டிபிடிக்க முடியாது என்று செய்து காட்டினார்.காதலர்கள் ஜோடியாக வந்து அமர்ந்து உலகத்தை மறந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்- கையில் புத்தகம் வைத்து இருக்கும் மாணவர்கள். அன்று விடுமுறை இல்லை. தூண்களின் அழகை ரசிக்காமல் அதன் மேல் தங்கள் காதலை உறுதிப்படுத்த தங்கள் பெயர்களை இணைத்து ’இதயம் அம்பு’ வரைந்து வைத்திருக்கிறார்கள். சுவரில், தூணில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் மதிப்பது இல்லை. ஒரு ஜோடியினர் எழுதிக் கொண்டு இருந்தார்கள். தங்கள் காதலை மகால் தூண் போல் உறுதியாக, காலத்தை வென்றும் இருக்கிற மாதிரி உறுதியாக வைத்துக் கொண்டால் அதுவே போதும்.

ஒலி, ஒளி காட்சிக்கு சேர்கள் எல்லாம் போட்டு இருந்தன. தினம் மாலை நடக்கும் போல. 6.30 என நினைக்கிறேன்.நானும் என் தங்கைகளும் அடுத்தமுறை குழந்தைகளை அழைத்து வந்து காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தோம். விடுமுறைக்கு என் மகள் பேத்தி, பேரன் எல்லாம் வருவதாய் சொல்லி இருக்கிறார்கள்

நாங்கள் சிவகாசியில் இருக்கும் போது அடிக்கடி ஸ்ரீவில்லிப்புத்தூர் போய் வருவோம். அங்கும் ஒரு திருமலைநாயக்கர் மகால் இருக்கிறதாம். அப்போது பார்க்க முடியவில்லை. நீதி மன்றமாய் இயங்கிக் கொண்டு இருந்தது.
2011லிருந்து பொது மக்கள் பார்வைக்கு விடப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். அதை அடுத்தமுறை மதுரை போகும் போது பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டு வெளியே வந்தோம்

வெளியில் திருமலைநாயக்கர் கழுத்தில் மாலை அணிந்து வாளுடன் நின்றுக் கொண்டு இருந்தார். மகாலின் உள்ளே நுழையும்போது அவரைப் பார்த்து ’வணக்கம் வைக்காமல் போனது தப்புதான் இப்போது வணக்கம் சொல்லிக்கிறேன் ’என்று வணக்கம் வைத்து விட்டு வந்தேன்.மகாலுக்கு வெளியில் ஒருவர், அரிசிமாவில் செய்த பிடிகொழுக்கட்டையும், கேழ்வரகு மாவில் செய்த இனிப்பு பிடி கொழுக்கட்டையும், பச்சைப்பயறு சுண்டலும் விற்றார். நல்ல சுகாதாரமாய் மூடி விற்றார். வாங்கிச் சாப்பிட்டு அவரைப் பாராட்டினேன். அவருக்கு மகிழ்ச்சி. உடம்பைக் கெடுக்காத நல்ல சிற்றுண்டி இல்லையா!

மறுநாள் தங்கைகள், அண்ணன் குடும்பத்தார்களுடன் பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, பிரான்மலை எல்லாம் சென்று வந்தோம். அவை அடுத்த பதிவில்.
-----------திங்கள், 16 ஏப்ரல், 2012

உறவோடு உறவாடி

உறவோடு உறவாடி மகிழ்ச்சியாக போன மாதம் 10 நாட்களைக் கழித்து வந்தேன். மதுரையில் திருப்பரங்குன்றம், பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, பிரான்மலை எல்லாம் உறவினர்களுடன் சென்று வந்தேன். திருப்பரங்குன்றத்தில்
என் தங்கை பேரனின் ஆயுசுஹோமம், முடிஇறக்குதல், காதுகுத்துதல் ஆகிய விழாக்களில் கலந்து கொண்டேன்.

நம் முன்னோர்கள் உறவுகள் விட்டுப் போகாமல் இருக்க ஒவ்வொரு விழாவுக்கும் ஒவ்வொருவரை முக்கியப்படுத்தி, அவர்கள் வரவை மற்றவர்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறாற்போல வைத்து இருக்கிறார்கள். குழந்தை பிறந்தால்
பேர் வைக்கும் விழாவில் காப்பு போட அத்தை வரவேண்டும் ,ஆண்டு நிறைவுக்கு அடுத்த நாள் மொட்டையடித்துக் காது குத்தும்போது தாய் மாமன் வரவேண்டும் என்று. முன்னதில் மாப்பிள்ளை வீட்டுச் சொந்தம்- அத்தைக்கு முதல்
மரியாதை. அடுத்து பெண் வீட்டு சொந்தம்- மாமாவிற்கு முதல் மரியாதை.

மதுரையில் என் தங்கை வீட்டில் பேரனுக்கு ஆயுசு ஹோமம் முடித்து மாலை கேக் வெட்டும் விழா.அதைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துக் கொண்டார்கள். மறுநாள் மொட்டை, காதுகுத்து விழா இருப்பதால் முதல் நாளே கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்து அதில் மாலை கேக் வெட்டும் விழா நடந்தது.

மறுநாள் திருப்பரங்குன்றமே ஒரே விழாக் கோலம்! எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூட்டம்! நான் என் தங்கையைக் கேலி செய்து கொண்டு இருந்தேன் -”என்ன பேரன் காது குத்துக்கு திருப்பரங்குன்றம் ஊரையே அழைத்து விட்டாயா? ”என்று. அன்று நல்ல முகூர்த்தநாள். கல்யாணம், காது குத்து எல்லாம் தடபுடலாய்
அமர்க்களமாய் நடந்து கொண்டு இருந்தது. எங்கள் பக்கம் ஆண்டு நிறைவுக்கு மறுநாள் மொட்டை அடித்து காது குத்தி விடுவார்கள். ஏதாவது தவிர்க்க
முடியாத காரணம் இருந்தால் தான் தள்ளி வைப்பார்கள்.

கிராமத்து மக்கள் இந்த விழாவை வைப்பதற்கு சரியான நேரம் எல்லாம் பார்ப்பார்கள். அதாவது உறவினர்களுக்கு எந்த நேரம் -குறிப்பாக- தாய் மாமனுக்கு ஏற்ற நேரம்(கையில் பணம் உள்ள நேரம்) பார்த்து வைக்க வேண்டுமாம். மொய் வைக்கும் உறவினர்கள் வீட்டுக்கு தேவையான அளவு பொருட்கள், பணம் எல்லாம் செய்து விடுவார்களாம். காது குத்து விஷேசம் தன் அவர்களுக்கு பெரிய விழாவாம். பத்திரிக்கையில் பேர் கட்டாயம் போட வேண்டுமாம். விழாவிற்கு பெரிய பேனர்கள் வைத்து இருந்தார்கள், குலதெய்வ கோவில்களிலும் மொட்டைஅடித்து காது குத்துவார்களாம்.என் தங்கை பேரனுக்கு மொட்டை போடப் போகும் போது,அந்த இடத்தின் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் காது குத்து விழா நடந்துகொண்டிருந்தது. அதற்கு, வெடி, வான வேடிக்கை, மேளதாளம் ! சீர் வரிசை எல்லாம் இரண்டுஇரண்டாய் ! கூடைகளில் பழங்கள், தட்டு தட்டாய் சீர்வரிசைகள், பித்தளை அண்டா . வெண்கல, பித்தளை
விளக்குகள் என்று தலையில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வந்தனர். கல்யாணமண்டபத்திலிருந்து பாரதி ராஜா படத்தில் வரும் தாய் மாமன் சீர் கொண்டு வரும் பாட்டு நல்ல சத்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தது..ஒரு படத்தில் கவுண்ட மணி ”காது எப்போ குத்துவார்கள் ? எப்போ கடா வெட்டுவார்கள் ”என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அது போல நான் என் அண்ணன் மகனிடம் கல்யாணமண்டபத்தில் காது குத்துகிறார்களே இங்கே கடா வெட்டுவார்களா என்று கேட்டவுடன் ஒரே சிரிப்புதான் , ”ஆமாம் அத்தை உங்களை கூப்பிடுகிறார்கள், சாப்பிட ”என்று ஒரே கேலிதான்.

மொட்டை அடிக்கும் இடத்தில் ஒரு அம்மா பணம் வாங்கி கொண்டு வெந்நீர் தருகிறார்கள். அங்கேயே குழந்தையை குளிப்பாட்டி விட்டு சரவணப் பொய்கையில் தண்ணீரை மேலே தெளித்துக் கொள்வோம் என்று அங்கு போனோம்.

அம்மாடி ! என்ன கூட்டம், என்ன கூட்டம்! எங்கு பார்த்தாலும் மொட்டை. குழந்தைகள்.ஆண் குழந்தைகள், பெண்குழந்தைகள் என்று கழுத்தில் மாலையும் காதுக்கு வித விதமாய் கம்மலும் போட்டுக்கொண்டு , குழந்தைகள் எல்லாம் புது உடையில் மொட்டைத் தலையுடன் அழகுதான். எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் தான்.

புது மணத் தம்பதிகள் கூட்டம் வேறு. புதுக் கல்யாணத் தம்பதியர் பேண்ட் வாத்தியங்களுடன் வெயிலில் ஊர்கோலம் வந்தார்கள். பேண்ட் வாத்தியம் வாசித்தவர்கள் பெண்கள். வித்தியாசமாக இருக்கிறதே என்று அவர்களைப் படம் எடுத்தேன்.அவர்கள் ”எங்களை உங்கள் வீட்டு விழாவிற்கு கூப்பிடுங்கள் வந்து வாசிக்கிறோம்” என்று சொல்லி அவர்கள் விசிடிங் கார்டு கொடுத்தார்கள்.

//கவிதா பேண்ட்
வடக்குத் தெரு, மார்த்தாண்டம் 629165
கன்னியாகுமரி மாவட்டம்.//


பலூன் விற்பவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் சவ்வு மிட்டாய் விற்பவர். நீண்ட கைத்தடியில் சவ்வு மிட்டாய்கள் சுற்றப்பட்டு இருக்கும். அதைப் பாலிதீன் கவரால் சுற்றி வைத்து இருந்தார். கைத்தடியின் மேலே உள்ள பொம்மை கூலிங்கிளாஸ் அணிந்து, தலையில் ஸ்கார்ப் அணிந்து இருந்தது .வெயில் காரணமாய், பொம்மைக்கு இந்த அலங்காரம் போலும். குழந்தைகள் அந்த மிட்டாயை விதவிதமாய் வாட்ச், செயின் என்று செய்து வாங்கி அணிந்து கொண்டார்கள்.செயின் பெரிதாக பெரிதாகக் காசு அதிகம் கொடுக்க வேண்டி இருக்குமே என்று பெற்றவர்கள் ”பிள்ளைகளை போதும், போதும் வாங்க” என்று அழைத்துக் கொண்டு இருந்தார்கள்


சரவணப் பொய்கை அருகில் இருக்கும் மலையில் பிள்ளைகள் மகிழ்ச்சியாகச் சறுக்கி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.கோவிலுக்கு வந்திருந்தவர்களில் ஒரு அம்மா காது வளர்த்து, பாம்படம் என்று சொல்லும் நகையை அணிந்து இருந்தார்கள். ரொம்ப நாளாக அவர்கள் காதை வளர்த்தார்களாம். ஒருபக்கப் பாம்படத்தின் எடை 4 பவுனாம்.

என் தங்கை பேரனுக்கு திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் காது குத்து விழா நடைபெற்றது. வைகாசி விசாகத்திற்கு முருகனுக்கு என் தங்கையின் கணவரின் குடும்பத்தார்கள் தாம் பரம்பரை பரம்பரையாக முதல் பால் குடம் அபிஷேகம் செய்வார்கள். அதனால் அவர்களுக்குக் கோவிலில் எல்லோரையும் தெரியும் என்பதால் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். உறவினர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் அழைத்து சென்றால் வரிசையில் காத்து நிற்கும் பக்தர்களுக்கு மனம் நோகும் என்பதால் இடை இடையே அழைத்து சென்று சண்முகரைத் தரிசிக்க வைத்தார்கள்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை கண்விழித்தவுடன் இநத மங்கல பொருட்களைப் பார்த்தால் ஆண்டு முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள். எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.
வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப்புத்தாண்டில் இனிப்பு, கசப்பும் என்று எல்லா சுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் என்பார்கள். அதை ஒழுங்காய் கடைபிடிப்பது தமிழ்ப்புத்தாண்டில் தான். இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல், புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம் என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.வெயில் காலத்தில் வேப்பமரத்தின் காற்று எல்லோருக்கும் மிக தேவையாக இருக்கிறது. கிராமப்புரத்தில் கோடைக்காலத்தில் வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது, கயிற்றுக் கட்டிலை மரத்தடியில் போட்டு தூங்குவது என்று இயற்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.

சித்திரை மாதத்தில், புளி, மாங்காய், மாம்பழம், பலா, வாழை மஞ்சள், இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். வேப்பம்பூ இப்போது தான் கிடைக்கும். அதைக் காயவைத்து, மோரில்உப்புடன் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள், அதன் மருத்துவப்பயன் அறிந்தமையால். வேப்பம்பூவை வெந்நீர் விட்டு டீ டிகாக்ஷன் போல் இறக்கி, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால், வாதம், பித்தம், அகலும். வாய்க்கு ருசி, வயிற்றுக்கு பசி ஏற்படும், சரும நோய்கள் விலகும் என்பார்கள்.

சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள். இந்த சமயத்தில் பூக்கள், பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும். அதைய நாம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக்கொள்ளலாம்

பழங்கள்:

சமைக்காத உணவுகளாக பழங்கள் பச்சைக் காய்கறிகள், சாப்பிடலாம். அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்பது நல்லது. சமைக்காத உணவாக பழங்களை, பச்சைகாய்கறிகளை உண்ணலாம். இந்த சீஸனில் மா, பலா, வாழை பழங்கள், மற்றும் எல்லா பழங்களும் நிறையகிடைக்கும். “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்.”

நாம் தமிழ்ப்புத்தாண்டில் இறைவனுக்கு என்று வழங்கும் பிரசாதங்கள் எல்லாம் என்ன பயன்களைத் தருகின்றன, உணவில் கசப்புச் சுவையை ஏன் கலந்து உண்ணச் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன?

நம் வீட்டை அலங்கரிக்கும் மாவிலை, வாழை மரத்தின் பயன்கள் என்ன என்பதையும் ஏன் அதை நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள் என்பதை எல்லாம் எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் என்ற புத்தகம் மூலம் சொல்கிறார் Dr. C.K.திரு. மாணிக்கவாசகம். அவர்கள் எழுதியதைப் படித்தேன் அதில் சில பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:-

பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள் :

நிலம் - அருகம்புல்

நீர் - மாவிலை,

நெருப்பு வாழைஇலை

காற்று வேப்பிலை.

ஆகாயம் வெற்றிலை

அருகம்புல்:

அருகம்புல் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கிறோம். அது நோய்களை நீக்கும் “ஆகாதது அருகம்புல்லில் ஆகும்என்பது பழமொழி.வாரம் ஒரு முறை கஷாயம் வைத்து குடித்தால் வலியும், வியாதியும் இன்றி

வாழலாம். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தோல் நோய்கள், புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களையும் போக்கும் குணம் அருகம்புல்லுக்கு உண்டு.

மாவிலை:

மாவிலை கஷாயம் நீரின் மூலமாகப் பரவும் நோய்களைப் போக்குகிறது.கங்கை நீர் என்று கலசங்களில் நீரை எடுத்து

மாவிலை வைத்து கும்பாபிஷேகங்களிலும், புதுமனை புகுவிழாவிலும், மற்றும் விழாக்களிலும் வைத்து வணங்கி, அந்த நீரை மாவிலைகளால் தெளித்துத் தூய்மைப்படுத்தி, பின் மக்கள் மீதும் வீடுகள் மீதும் மற்றும் எல்லா இடங்களிலும், தெளிப்போம். தூய்மையான நீரை தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்கிறோம். வீட்டில் மாவிலை கட்டுவதும் காற்றில் உள்ள நீரைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள நீர் நிலைகளையும் சுத்தம் ஆக்கும்.

வாழைமரம் கட்டும் காரணம் :

விஷமுறிவுக்கு வாழை என்பார்கள். திருமணம், கோயில் விழாக்கள் வாயில்களில் வாழை கட்டுவதற்கு காரணம், விழாக்களின் போது தீங்கு இழைக்க கூடிய ஜந்துக்களை விரட்டவும், தவறி விஷஜந்துக்கள்

தீண்டிவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேறு எங்கும் தேடிக்கொண்டு இருக்காமல் உடனே அருகில் கட்டி இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழைப்பட்டையை எடுத்து தீமூட்டி அனலில் வாட்டி,வதக்கி சாறு எடுத்து அரை டம்பளர் உள்ளே கொடுத்து, பின் சாறு எடுத்து உடல் முழுக்க பூசிவிட்டால் விஷக்கடியிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள். இப்படிநல்லது கெட்டது என்று மக்கள் கூடும் இடங்களில் வாழைமரம் கட்டும் காரணம் இது தான் என்பார்கள். ஆதிகாலத்தில் வீடுகள் கோயில்கள் எல்லாம் காட்டுப் பகுதி சூழ்ந்த இடங்களில் தானே இருந்தன!

வேப்பிலை:

வேப்பிலை சக்தி கடவுளுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு வேண்டிய சக்திக்கும் தான். வேப்பிலை கஷாயம் அருந்தி வந்தால், உடலிலுள்ள நோய்க் கிருமிகள் அழிவதுடன் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் அன்றாட உடல் உறுப்பு தேய்மானத்தை தடுத்து உடலைப் புதுப்பிக்கிறது. பிணியின்றி வாழ வைக்கிறது. கசப்பு சுவை பிடிக்காது என்பதால் அதைச் சாப்பிடாதவர்

களுக்கு உடலில் இருக்கும், எலும்பு மூட்டுக்கள், பாதங்களின் தசைகள், பற்கள், என்று பல உறுப்புக்கள் தேய்மானம் ஆகிறது. கசப்பு உண்டு வந்தால், தேய்மானம் தடுக்கப் படுகிறது. பாவைக்காய், சுண்டைக்

காய், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெற்றிலை:

கடவுளுக்குப் படைப்பதற்கு மட்டும் அல்ல வெற்றிலை ,அறுசுவை உணவை அளவோடு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொள்வதால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உடலுக்கு சக்தி கிடைக்கும். அதனால்.இப்படி பண்டிகையில் சேர்த்து கொள்ளும் பொருட்கள் எல்லாம் காரண காரியமாய் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த நந்தன ஆண்டு, அச்சம், கவலை, நோய், நொடி முதலியவற்றை போக்கி மனநிறைவாய், மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.

எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று வாழ இந்த

இனிய புத்தாண்டில் வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன்!

வாழ்க நலமுடன்.


சனி, 7 ஏப்ரல், 2012

உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் ஏப்ரல், 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக சுகாதார தினத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவது முதுமையும் ஆரோக்கியமும்.

மூத்த குடி மக்கள் வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தோடு இருக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பது , அரசு மருத்துவமனைகளில் முதுமக்களுக்கு ஏற்படும் உடல்,மனம் சார்ந்த கோளாறுகளைப் போக்க தனிப் பிரிவு ஏற்படுத்தி அவர்களைப் பாதுகாப்பது போன்ற திட்டங்களை அமுலாக்குதல் இவை எல்லாம் உலக சுகாதார தினத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் 7.5 சதவீதம் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அதிகமாய் இருப்பது, தமிழ்நாடு, கேரளா, இமாசல்பிரதேசம்.

உடலை நலமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி, மனதை நலமாக வைத்துக் கொள்ள, மனதை ஒருநிலைப்படுத்த தெய்வ வழிபாடு, தியானம் சொல்லப்படுகிறது. இவைகளை கடைப்பிடித்தால் மறதி நோயிலிருந்து விடுபடலாம். முதுமையில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்ற செய்திகள் வலியுறுத்தப்படுகிறது.


சுத்தம் சோறு போடும் என்பார்கள். கூழானாலும், குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பார்கள். நம்மை-நாம் வாழும் வீட்டை- சுற்றுப்புறத்தை சுத்தமாய் வைத்துக்கொள்ளவேண்டும். குப்பைகளை மூடிவைத்து குப்பைக்காரார் வரும் போது அந்த வண்டியில் போட வேண்டும். நம் வீடு சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா நேரமும் குப்பைகளைத் தெருவில் கொட்டக்கூடாது. அது காற்றில் பறந்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும்.

இந்த வெயில் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வரும் . அந்தக்காலத்தில் உள்ள பெரியவர்கள் அம்மை நோய் வந்த வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே கொட்டமாட்டார்கள். அந்தக் குப்பைகளை சேர்த்து வைத்து இருப்பார்கள். தலைக்குத் தண்ணீர் விட்டபின் தான் அதை, புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள். ஏனென்றால் அம்மை புண் ஆறும்போது அதன் மேல் பாகம் உதிரும். அதை வெளியில் போட்டால் அதன் மூலம் நோய் பரவும் அதைத் தடுக்கத்தான் சாஸ்திரம் மாதிரி, அம்மை போட்ட வீட்டில் குப்பையை வெளியில்கொட்டக் கூடாது என்றனர். நோய் கண்டவர்களைப் பார்க்கப் போகும் ஆண்கள் ,வீட்டில் உள்ளஆண்கள் சவரம் செய்து கொள்ளக் கூடாது என்பர். அதற்கு காரணம் சவரம் செய்து கொள்ளும்போது ஏதாவது காயங்கள் ஏற்பட்டு இருந்தால் அதன் வழியாக நோய் பரவி விடும் என்றுசொன்னார்கள்.


தண்ணீர் மூலம் பரவும் வியாதி காலரா:

குடிதண்ணீர் சுத்தமாய் இருக்க வேண்டும், மூடிஇருக்க வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும். இதையே முன்னோர்கள், நீரைச் சுருக்கிக் குடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்போது மாம்பழம், பலாப்பழ சீஸன் . ஈக்கள் நிறைய மொய்க்கும் காலம் . அதனால் உணவுப்பொருட்களை மூடி வைத்து உண்ண வேண்டும். அதற்கு பெரியவர்கள், ”கரண்டியை சாதபாத்திரத்தில் இருந்தால் சொக்கார் வீட்டுக்கு செல்வம் போய்விடும்” என்று அச்சுறுத்தி கரண்டியை வெளியே எடுத்து நன்கு மூட வைத்தார்கள். சிறு குழந்தைகளுக்கும், திறந்து

இருக்கும் உணவு பொருட்களை வாங்கி உண்ணக் கூடாது என்று சொல்லி வளர்க்கலாம்.வெயில் காலத்துக்கு ஏற்ற உணவை உண்ண பழக்க வேண்டும். இளநீர், நுங்கு,, மோர்,எலுமிச்சை ஜீஸ், தர்பூசணி, மற்றும், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தவேண்டும். குளிர்பானங்கள், ஜஸ்கீரீம், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஏர்கூலர் உபயோகிப்போர் தண்ணீரை தினம் மாற்ற வேண்டும். அதில் கொசு முட்டையிட்டு காய்ச்சல் பரவும் நோய் கிருமிகளை உற்பத்தி செய்து விடும்.

அகச்சுத்தம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்தறன்
ஆகுல நீர பிற. -திருக்குறள்.


//ஆசை ய்றுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசையறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.// -திருமந்திரம்.


நோய் வராமல் இருக்க,மனச்சுத்தமும் தேவை. ஆசை, சினம், கவலை, எல்லாவற்றையும் சீர் செய்தால் நோய் வராமல் தவிர்க்கலாம்.
ஆசைக்கோர் அளவில்லை, ஆனால் நாம் நினைப்பதை எல்லாம் அடையமுடியவில்லை. நாம ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். ’நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்தெய்வம் ஏதும் இல்லை , நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை. ’

கைஅளவு உள்ளம் வைத்து கடல் போல ஆசை வைத்து என்று கவிஞர் சொன்னது போல்ஒவ்வொருவருக்கும் ஆசைகள் அளவிட முடியாத அளவில் இருக்கிறது. ஆசை நிறைவேறாத போது அல்லது தடை ஏற்படும் போது கோபம் ஏற்படுகிறது. ’கிட்டாதாயின் வெட்டெனமற’ என்ற முதுமொழிக்கு ஏற்ப ஆசையை முறைப்படுத்தி விட்டால் நலமாய் , வளமாய்வாழலாம். போதுமென்ற மனம் இருந்தால் வாழ்வில் நிறைவு வரும். அமைதியாய் ஆனந்தமாய் வாழலாம்.


//மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போதறியா வொண்ணா(து )
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே.//

திருநாவுக்கரசு தேவாரம்.

சினம் நம்மையும் பாழ்படுத்தி, நம்மை சேர்ந்தவர்களையும் பாழ்படுத்திவிடும்- குடும்பம், அக்கம்பக்கம் நண்பர்கள், நாம் வேலை செய்யும் இடம், உற்றார், உறவினர் என்று . கோபத்தில் நம்உடலும் கெடுகிறது. அல்சர், இரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் வருகிறது. கோபத்தால்,படபடப்பு, வார்த்தைகள் தடித்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட்டு பின் வருத்தப்பட்டு பலன் இல்லை. வள்ளுவர், சினத்திற்கு முதலில் நா காக்க வேண்டும் என்கிறார்.
இனிமையும் மகிழ்ச்சியும், வேண்டும் என்றால் -அதுவும் முதுமையில் எல்லோர் நட்பும்,உதவியும் வேண்டும் என்றால் -சினம் தவிர்க்க வேண்டும்.
கவலையும் ஒரு நோய் தான் .

கவலைக்கு கவலை கொடுக்க வேண்டும். இவனை, இவளைக் கவலைப்பட செய்யமுடியவில்லையே என கவலை நம்மை பார்த்து ஓட வேண்டும் .அப்போது நம்மிடமிருந்த நோய் ஒடிவிடும். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். கவலையைப் போக்க வழி - வேண்டாத சிந்தனை,எல்லோரிடமும் ஏதாவது எதிர்ப்பார்ப்பு ஆகியவற்றை விட்டுவிடுவது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்
முடிந்தால் கவலை. அப்படி ஆகி விடுமோ, இப்படி ஆகி விடுவோம் என்ற அச்சத்தால் கவலை உருவாகிறது. கவலைப்படாமல் இருந்தால் நலமாக வாழலாம்.

முதியோர்கள் எல்லோரிடமும் நல் உறவு வைத்துக் கொண்டால், ஒவ்வொருவருக்கும் ஏற்ற முறையில் பேசி பழகினால் நல்லது. உதாரணம்- குழந்தைகளிடம் குழந்தைகள் மாதிரி பேசுவது. இளவயதுக்காரர்களிடம் அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட், மற்றும் பல விஷயங்களை பேசுவது.

அவர்கள், ’இந்த பெரிசுக்கு வேலை இல்லை, நம்மை அறுக்கிறது” என்று சொல்ல மாட்டார்கள்.’அந்த தாத்தா, பாட்டிக்கு எல்லா உலக விஷயங்களும் தெரியும்,
மிக நன்றாகப் பேசுவார்கள், நேரம் போவதே தெரியாது அவர்களுடன் பேசினால்’
என்று கூறுவார்கள். சிறியவர்களிடம் பெரியவர்களும் உலக விஷயங்களை அறிந்துகொள்ளலாம். சிறியவர்களும் அதனால் மகிழ்வார்கள்.

முதியவர்கள் பொருளாதாரத்தில் தன்நிறைவு பெற்று இருந்தால் எந்த கவலையும்
இல்லாமல் சந்தோஷமாய் இருக்கலாம், அதற்கு முதுமைக்கு வேண்டிய பொருளை இளமையில் சேமித்து வைத்து இருக்க வேண்டும் . பிறர் கையை எதிர்பார்த்து இருப்பதே முதுமையில் நோயாகிவிடும்.

இப்போது எல்லா முதியவர்களும் தனியாகத் தான் வாழவேண்டி உள்ளது. அது காலத்தின் கட்டாயம் ஆகி விட்டது. பிள்ளைகள் வெளி நாட்டில் பெற்றோர் இங்கு என்று இருக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். நாம் தன்னம்பிக்கையுடன் வாழ்வை நடத்தி சென்றால் அவர்கள் அங்கு நலமாய் வேலை செய்வார்கள். முன்பு இருந்த முதியவர்களுக்கு குழந்தைகளை அடிக்கடி பார்க்கவோ, பேசவோ வசதி வாய்ப்பு இல்லை .ஆனால் இப்போது நமக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. அதில் திருப்தி பெற்று கொள்ளவேண்டியது தான்.

முதியவர்களும் குழந்தை போல:-

முதியவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்கள் ஏதாவது உதவி செய்ய முன் வந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு தெம்பை கொடுக்கும். தினம் சிறிது நேரம் அவர்களுடன் பேசுவது நல்லது. சாப்பிட்டீர்களா என்று கேட்பது, அவர்களுடன் உணவு அருந்துவது , மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களாய் இருந்தால் அதை நேரத்திற்குச் சாப்பிட்டார்களா என்று கேட்பது நல்லது. அப்போது நம் மேல் எல்லோரும் பாசமாய், அன்பாய்
இருக்கிறார்கள் என்பதே அவர்களை மேலும் உற்சாகப் படுத்தும்.

ஏதோ முதுமை காரணமாக, அல்லது நோயின் தாக்கத்தால் கோபமாய் வார்த்தைகளை பேசினால் அவை கேட்காதது போல் நடந்து கொள்ள வேண்டும். குழந்தை போல் பிடிவாதம் பிடிக்கும் முதியவர்களை (குழந்தைக்கு தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காகக் குறும்புகள் செய்யும்) ஏதாவது நோயை சொல்லி தன்னை எப்போதும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கும் முதியவர்களுக்கு எதைப் பற்றியும் யோசிக்க இடம் கொடுக்காமல்
அவர்களை வேறு பொழுது போக்குகளில் ஈடுபடச் செய்து அவர்களை சுறுசுறுப்பாய் இயங்க வைத்தால் நலமாக இருப்பார்கள்.

உலக சுகாதார தினத்தில் தாய் சேய் நலமும் பாதுகாக்கப்படவேண்டும் என்று
சொல்லப்படுகிறது.

குழந்தைகளை அன்பாய் நல்ல மனவளம், உடல் நலம் மிக்கவர்களாக வளர்த்தால் அவர்கள் பெற்றோர்களை நன்கு மதித்து சமூகத்தில் பிறர் போற்றும் மக்களாய் வாழ்வார்கள்.தாய் கருவுற்று இருக்கும் போது ஊட்டம் மிகுந்த உணவுகள் சாப்பிட்டு, நல்ல சிந்தனையுடன், மகிழ்ச்சியுடன் இருந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டால் அந்த குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல குழந்தைகளாய் வளர்வார்கள். ஆரோக்கியமான சூழலில் வளரும் குழந்தைகள் மன உறுதியும், திறமையும் உடையவர்களாய் வளருவார்கள்.
பெரியோரை மதித்தல், இறை பக்தி, கீழ்ப்படிதல் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் தானாக வரும்.

நாளைய சமுதாயம் நலமாக வளமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!