செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

சின்ன அணிலே சின்ன அணிலே !

சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர் என்று  முன்பு போட்ட பதிவில் அணில் படங்கள் பகிர்ந்து இருந்தேன்.

”அங்குள்ள அணிலுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லைதானே!” என்று கேட்டு இருந்தார் ஜீவி சார்:
//அங்கைய அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லை, தானே? நான் பார்த்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். கீரிப்பிள்ளை மாதிரி தண்டியான அடர்த்தியான வால்.//

 ஜீவி சார் கேள்விக்கு வருண் இப்படி பதில் சொல்லி இருந்தார்:

//இந்த ஊர் அணில்கள் கொஞ்சம் வேறு வகை. கோடுகள் இருக்கா என்னனு தெரியவில்லை. நம்ம ஊர் அணிலில் தெரிவதுபோல பளிச்சுனு கோடுகள் தெரியாது. கவனிச்சுப் பார்த்தால் இருந்தாலும் இருக்கும். பெரியவைகளாக நல்லா ஹெல்த்தியாகவும் இருக்கும். தக்காளிச்செடியெல்லாம் வளர்த்தால் அணிலுக்குப் போக மிச்சம் ஏதாவது இருந்தால்தான் உங்களுக்கு தக்காளிப் பழம் கிடைக்கும். :) //

இரண்டாவது பின்னூட்டத்தில் வருண் தங்கள் தோட்டத்தில் அணில் படுத்தும் பாட்டை சொல்கிறார் பாருங்கள்:

//அணில், முயல் எல்லாம் எங்க வீட்டிலும் டேராப் போடுவாங்க. எங்கெ மேலே ரொம்பப் பிரியமாவும், உரிமையுடனும் நடந்துக்குவாங்க. :)நம்ம ஊரில் பிரிய்ங்கெட்ட பொழப்புனு ஏதோ சொல்லுவாங்க இல்லை. அதெல்லாம் ஞாபகப்படுத்துவாங்க. :)
என்ன நம்ம ஏதாவது ஒரு ப்ளான் பண்ணினால், அணில்களும், முயல்களும் வேற ஒரு ப்ளான் பண்ணி நம்ம ப்ளானை ஒப்பேத்திவிடும். நம்ம வீட்டில் நம்ம குடியிருக்கிற நேரத்தைவிட அவங்கதான் அதிகம் நேரம் இருக்காங்க? என்னவோ போங்கப்பானு அணிலின் கோணத்தில் இருந்து யோசித்து நல்லாயிருனு வாழ்த்திட்டு, போயிடுவேன். :) //

என்று சொல்லி விட்டு  சின்ன அணிலை  பார்த்தநினைவு இல்லை
தேடிப் பிடித்து போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்:

 //நான் இதுவரை அந்த வகை அணில் இங்கே பார்த்ததாக ஞாபகம் இல்லைங்க. முடிந்தால் தேடிப்பிடித்து ஒரு படம் பிடிச்சுப் போடுங்க! :)//

 வருண் இப்படி சின்ன அணிலைப் பார்க்க விருப்பப்பட்டு கேட்கும்போது போடாமல் இருக்க முடியுமா ? அதனால் நேயர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. மருமகள் தேடி எடுத்து கொடுத்து உதவி செய்தாள். மருமகள் தேடி கொடுத்ததற்கு நன்றிசொல்லி உங்களுக்காக பதிவு போட்டு விட்டேன். ஜீவி சாருக்காக்வும் தான்.
                                                    கோடுகள் உள்ள   சின்ன அணில்


                                                      கோடுகள் இல்லாத பெரிய அணில்ஜீவி சார் சொல்வது போல் கீரிப்பிள்ளை மாதிரி பெரிய அணிலும் இங்கு இருக்கிறது. அது இன்னும் அகப்படவில்லை காமிராவிற்குள்.

அணில் ராமனுக்கு பாலம் கட்ட உதவியதால் ராமர் அதை கையில் அன்பாய் எடுத்து முதுகைத் தடவி விட்டதால்  அந்த மூன்று கோடுகள் என்று பெரியவர்கள் ராமர் கதை சொல்லும் போது சொல்வார்கள்.

எல்லா உயிர்களையும் தன்  அன்பெனும் குடைக்குள் காப்பாற்றிய

 கண்ணனுக்கு இன்று பிறந்த நாள்  ,  அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
                                                                                                                  


திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர்

வீட்டுத்தோட்டம்  பற்றியும் அது அளிக்கும் இன்பத்தைப் பற்றியும்  போன பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.  வீட்டுத்தோட்டம் மனதுக்கு மகிழ்ச்சி உடலுக்கு ஆரோக்கியம் , இதய நோயைப் போக்கும்,  தோட்டத்தைப் பார்க்கும் போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது என்று பின்னூட்டம் கொடுத்தவர்கள் எல்லாம்  மகிழ்ச்சியாக தங்கள் கருத்துக்களைப்  பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படி வீட்டுத்தோட்டம் , நலங்கள்  பல தருகிறது எனத் தெரிகிறது.

ஒரு பழைய  சினிமாப் பாடல் -குழந்தைகள் பாடுவது போல் இருக்கும்- சிறு வயதில் மணலில் வீடு கட்டி விளையாடும் போது கூட தோட்டம் அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் பாடுவார்கள்:

’ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி,
தோட்டம் இட்டு செடி வளர்த்து ஜோராக குடி இருப்போம்.

 அந்த வீட்டில் வந்தவர்களுக்கு எல்லாம் இடம் இருக்கும் என்று பாடுவார்கள்
வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அந்த வீட்டில் இடம் இருக்குமாம் எவ்வளவு அழகாய் பாட்டு எழுதி இருப்பார்கள்!  சீனிவாஸ் அவர்களும், சுசீலா அவர்களும் நன்றாகப் பாடி இருப்பார்கள்.

  பாரதியாரும் ”அழகாய்   மாளிகை !  அதில்  தென்னைமரங்கள் !அதில் அமர்ந்து கீதம் இசைக்கும் குயிலை எல்லாம் ரசிக்க வேண்டும்!” என்கிறார். இப்படி இயற்கை சூழலில் இருந்தால் கவி பாடக்  கேட்க வேண்டுமா!


//காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.//

என்று அவர் பாடினார்


என்னுடைய போன பதிவைப்படிக்காதவர்கள் படிக்கலாம். அதன்சுட்டி
சின்னஞ்சிறு  தோட்டம்  சிங்காரத் தோட்டம்

மண்,மரம், மழை என்று வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு .வின்சென்ட் அவர்கள் ஆகஸ்ட்  தேதி 25  உலக வீட்டுத்தோட்டத்தினம்  என்று சொல்லி ஒரு சிறு பதிவு போட்டு இருக்கிறார் பாருங்கள்.

//பெருகி வரும் ஜனத்தொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைகேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நம்மாலான  ஒரு மிகச் சிறிய வாய்ப்பு இந்த “வீட்டுத் தோட்டம்”
உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்  4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த  உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் “வீட்டுத் தோட்டம்” என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:
http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html
வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை .//

 இந்தப் பதிவில் வீட்டுத்தோட்டம் அமைக்க இடம் இல்லை என்றால் மாடித்தோட்டம் அவசியம் என்கிறார்.

நான் என் போன பதிவில் என் தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகளைப்பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் என்றேன் .அவர்களை நீங்களும் பாருங்களேன்.
                                          வித்தியாசமான வண்ணத்துப்பூச்சி

                                                தூரத்திலிருந்து எடுத்த மைனா


                                                           தேன் எடுக்கும் கரு வண்டு


                                           தூரத்திலிருந்து எடுத்த மணிப் புறா


தரையின் வண்ணம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று வந்த வண்ணம் குறைந்த  வண்னத்துப் பூச்சி


கும்பிடு பூச்சி, இலை பூச்சி, குச்சி பூச்சி இப்படியும் சொல்லாம் தானே!

பூனையார் ஒளிந்து பார்க்கிறார்

பூ அழகா, நான் அழகா ?

                           சிட்டுக்குருவிகள் ,,  தவிட்டுக் குருவி

தானியங்களை கொறிக்க அணில் செய்யும் சாகசங்கள்
என் மகன் , மருமகள் இருவரும்  தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு  வந்த விருந்தாளிகளை தங்கள்   காமிராவில் எடுத்து வைத்து இருந்தார்கள் . அந்த அணில், குருவி தொகுப்பை கொடுத்து  உதவினார்கள்.


நடனம் ஆடும் வண்ணத்து பூச்சி

இசை நீரூற்றுசமீபத்தில் பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்” என்ற  தோட்டம் போய் இருந்தோம். அதில்  இசை நீர் ஊற்று பார்த்தோம். அது போல் தாத்தாவிடம் வீட்டுத்தோட்டத்தில் நீரூற்று  செய்யவேண்டும் என்று பேரன் .
. சொல்ல அதேபோல் நீரூற்று செய்ய , அதற்கு பேரன் பாட்டுப் பாடுகிறான்.

 
உலக வீட்டுத்தோட்டநாளில்  நம்வீட்டுத்தோட்டத்தில்ஒருரோஜாசெடியாவது 
வைத்து மகிழ்வோம் .வாழ்க வளமுடன்.                                                                                                                       a

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சின்னஞ்சிறு தோட்டம் சிங்காரத் தோட்டம்
நம் வீடுகளில் தோட்டம் போட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சின்ன இடமாக இருந்தாலும் இரண்டு தொட்டி வாங்கி அதில் இரண்டு
பூச்செடிகளை வைத்தால் அதில்  நாம் வாங்கி வந்தபின் இரண்டு இலை
துளிர் வந்தாலே அதைப்பார்க்கும்போது  மகிழ்ச்சி ஏற்படும். மொட்டு விட்டு
விட்டால் அதைவிட மகிழ்ச்சி. மலர்ந்து விட்டால் அளவில்லா மகிழ்ச்சி.
நாம் அவ்வப்போது  கண்டு களிக்க வசதியாக பூச்செடிகளைக் கண்ணில்  படுவது போல்   வைத்து இருந்தால் சந்தோஷத்திற்கு கேட்கவே வேண்டாம்.
நம் தோட்டத்தில் பூத்த மலர்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

இங்கு மகன் வீட்டில் சிறிய தோட்டம், புல்வெளி என்று அழகாய் அமைத்து
இருக்கிறான் சில பூச்செடிகள் தொட்டியில் வைத்து இருக்கிறான்.  தோட்டத்திற்கு போயும், வீட்டில் இருந்தே  கண்ணாடிக்கதவு வழியாகப்பார்க்கலாம், காலையில் மலர்களை மொய்க்கும் வண்டு வரும்.  சின்ன பட்டாம்பூச்சிகள் வரும். காய்ந்த புற்களை எடுத்துச் சென்று குளிர்காலத்துக்கு படுக்க மெத்தை அமைத்துக் கொள்ள மணிப்புறாக்கள், குருவிகள், அணில்கள்   வரும். தானியங்கள் போட்டு இருக்கும் தொங்கும்  கண்ணாடி  ஜாடியிலிருந்து தானியங்களை சாப்பிடப் பறவைகள்,அணில்கள் வரும்.  நாம் படம் எடுக்கப் பக்கம் போனால் கண்சிமிட்டும் நேரத்தில் சிட்டாய் பறந்து விடும் பறவைகள். அணில் குடுகுடு என்று ஓடி ஒளிந்து கொள்ளும்.

கன கம்பீரமாய், கறுப்புப் பூனையார், இளம் ஆரஞ்சும், வெள்ளையும் கலந்த பூனையார் எல்லாம் வருவார்கள். இரவு மின்மினிப் பூச்சிகள் வந்து அழகு சேர்ப்பார்கள் தோட்டத்தை.

மகன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையில் இருக்கும் தடுப்புத்  தட்டி பக்கத்தில், வைலட் கலரில் பூக்கும் ஒரு செடி இருந்தது. அதில் மஞ்சளும், கறுப்பும் கலந்த வண்ணத்துப் பூச்சி காலையிலிருந்து இரவு வரை தேன் குடிக்க வரும். பார்க்க அழகாய் இருக்கும்.  நாள் முழுவதும் அதைப்  பார்த்துக் கொண்டு இருந்தாலும் அலுக்கவே அலுக்காது.  ஊரிலிருந்து வந்த  நாட்களாக பார்த்து ரசித்த அந்தக்காட்சி இரண்டு நாட்களுக்கு முன் கலைக்கப்பட்டது. பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வந்து இருப்பவர்கள் தோட்டத்தை முற்றிலும் அழித்து விட்டார்கள். வண்ணத்துப்பூச்சி  சிறகடித்து பறக்கும் அழகைக் காணமுடியவில்லை. ஒரே ஏமாற்றம் தான்.  ஏதோ இவ்வளவு நாள் பழகிய நட்பைப் பிரியும் வேதனை.இதனால் தான் சித்தர்கள் ஆசை அறுமின் என்றார்களோ!

அக்டோபர் வரைதான் இந்த வசந்தம். அதன் பின் பனி விழுந்து மலர் வனம் இருக்காது. மரங்கள் இலைகளை உதிர்த்தும், வண்ணம் மாறியும் இருக்கும். வந்ததில் இருந்து பூக்களையும், வண்டுகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் நிறைய படம்பிடித்து இருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் ரசியுங்கள்.


                     ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்

                                                          மலர்ந்தும் மலராமலும்


                                        மொட்டும்      இருமலர்களும்

                                                                   மூன்றானோம்இறைவன் பாதத்தில் 
இலைகளே மலர்களாய்


கொடி மலர்
அடுக்குப் பூ
மழையில் நனைந்த கொடிமலர்
அரளி போல் இல்லே!


இந்த பூவில் மஞ்சள் இதழில் மட்டும் எப்போதும் தேன் குடிக்கிறது இந்த வண்டு

வாழை  -  பனிக்காலம் வருமுன் பலன் தருமா ?
குடைபிடித்து இருக்கும் காளான்
முடி வெட்டி அழகு செய்து கொண்டு இருக்கிறது
திராட்சைக்கொடி கூட இனிக்கிறது போல
பக்கத்து வீட்டுத் தோட்டத்திற்கு வந்த வண்ணத்து பூச்சி
தோட்டத்தை இந்த ஊஞ்சலில்  இருந்து  ரசிப்போம் தரையை என் மகனும்,மகளும் சேர்ந்து  வண்ணம் தீட்டி அழகுபடுத்தி இருக்கிறார்கள். மழை விடாமல் பெய்து கறுப்பாய் இருந்த தரையை அழகிய வண்ணத்தரைஆக்கி விட்டனர். பேரனுடன் விளையாடும் இடமும் இது தான். தோட்டத்தில் மணல் தொட்டி இருக்கிறது ,பேரன் விளையாடடுவான்   எங்களுடன்.

மலர்  கண்காட்சி எப்படி இருக்கிறது? தோட்டத்திற்கு வந்த  மற்ற விருந்தாளிகளை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

மலர்த் தோட்டம் போல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவோம்

அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------------------------