வியாழன், 31 மார்ச், 2016

ஓவியரும் , ரசிகரும்

என் பதிவுகள் சிலவற்றுக்கு என் கணவர் ஓவியம் வரைந்து தந்தார். அதை பார்த்தவர்கள் பாராட்டினார்கள்.  அதுவும்   எங்கள் Blog  ஸ்ரீராம் , என் கணவர் வரையும் ஓவியத்தை பாராட்டி விட்டு அடுத்த பதிவில் சார் படம் இல்லை என்றால் ஏன் வரையவில்லை சார்? என்று கேட்பார். நான் சாரிடம் உங்கள் ஓவியத்தை காணோம் என்று உங்கள்  ரசிகர் ஸ்ரீராம் கேட்கிறார் என்று சொல்வது உண்டு.

எழுத்துப்பணி நிறைய இருந்ததால் அவர்களால் வரைந்து தர முடியவில்லை. சமீபத்தில் மதுரை வந்து இருந்த போது எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ஸ்ரீராம் ஸ்ரீராம் மனைவி,  ஸ்ரீராம் அண்ணா  மூவரும் வந்து இருந்தார்கள்.  ஸ்ரீராம் வலைத்தளத்தின் மூலம்  பழக்கம், ஆனால் அவர் மனைவியும் அண்ணாவையும் அன்றுதான் பார்த்தேன் வெகு நாள் பழகியது போல் நன்றாக பேசினார்கள்.  மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்கள் இரண்டு மூன்று இடங்களுக்கு செல்லவேண்டியது இருந்ததால் சந்திப்பு வெகு சீக்கீரத்தில் முடிந்து விட்டது. குறுகியகால இடைவெளியிலும் சாரை படம் வரைய சொல்லி வேண்டுகோள்விடுத்து சென்றார் ஸ்ரீராம்..அடுத்த பதிவுக்கு வரைந்து தருவதாய் சொல்லி இருக்கிறார்கள்.  ஸ்ரீராம் வேண்டுகோள்படி  . 


 ஸ்ரீராம்   எனக்கு அப்பாவின் இரண்டு புத்தங்களை   பரிசாய் அளித்தார்கள். ” இவனும் அவனும்” என்ற சிறுகதை தொகுப்பும்,   ”தூறல்கள் ” என்ற புத்தகமும் .
இன்னும் முழுதாய் படிக்கவில்லை  விருந்தினர் வருகை, உறவினர் மணிவிழா என்று நேரம் சரியாகி விட்டது.

ஸ்ரீராம் அப்பா அவர்களைப்பற்றி துளசிதரன் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றில் தெரிந்து கொண்டேன். கதை எழுதுவார்கள் என்றும் தன் மனைவி மேல் உள்ள பிரியத்தில் அவர்கள் பெயருடன் தன் பெயரை இணைத்து ஹேமலதா பாலசுப்ரமணியம்  என்ற பெயரில் எழுதி வந்தார்கள் என்று அறிந்து கொண்டேன்.

தூறல்கள் புத்தகத்திற்கு  திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்  அளித்துள்ள அணிந்துரையில் மேலும் தெரிந்து கொண்டேன். 

தூறல்களீல் எனக்கு பிடித்த , எல்லோருக்கும் பிடித்த வானத்தைப்பற்றி சொல்லி இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.   படித்துப்பாருங்களேன். 

 டல் அடிக்கும் போதும் மனச்சோர்வின் போதும் வானத்தை நிமிர்ந்து பார்த்தால் போதும் என்கிறார். நமக்கு வானத்தைப் பார்ப்பது பிடிப்பது போல்    வானத்திற்கும் நம்மிடம் பேசப் பிடிக்கிறதாம், காத்து இருக்கிறதாம்.

எனக்கு சிறு வயதில் இருந்தே வானத்தைப் பார்ப்பது பிடிக்கும். மேகங்கள் செய்யும் ஜாலங்கள் அற்புதமாய் இருக்கும். நமக்கு தெரிந்த கற்பனை காட்சிகள் மற்றவர்களுக்கும் தெரிகிறதா என்று கேட்டு அவர்களுக்கும் அது தெரிந்தால் குழந்தையின் குதுகலம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் . காட்சி மட்டும் தான் நாம் கண்டோம்  பாலசுப்பிரமணியம் சார் அது பேசுவதையும் கேட்கச் சொல்கிறார்.  பேசுவதைவிடக் கேட்பது நல்லது என்கிறார். வானத்தை பார்ப்பதையும், வானம் பேசுவதையும்  கேட்டால் அலுப்பு போயே போச்சு.
அப்புறம் என்ன! உலகம் பிறந்தது   எனக்காக என்று பாடத் தொடங்கி விடுவோம்  பாலசுப்பிரமணியம் சார் சொல்வது போல்.

                 
      
                      

தூறல்கள் புத்தகம் விலை 40 ரூபாய்.

இவனும் அவனும் சிறுகதை தொகுப்புக்கு அணிந்துரை திரு. கர்ணன் அளித்து இருக்கிறார். ஜீவி சார்  புத்தகத்தில் (ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை) குறிப்பிட்டுள்ள  பல ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார் திரு. ஹேமலதாபாலசுப்பிரமணியன் அவர்கள்.


//கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.பா ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, -கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி. ஜானகிராமன் மற்றும் பல எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்தில் , உடன் வாழ்ந்தவர். ஹேமலதா பாலசுப்பிரமணியன் அப்போது சிறுவயது.இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரார்  கு.ப. ரா. கு .ப. ரா மனைவியும் பாலசுப்பிரமணியம் மனைவி ஹேமலதாவும் நெருங்கிய சினேகிதிகள் //

என்று குறிப்பிடுகிறார். கர்ணன் அவர்கள்.

இவனும் அவனும் சிறுகதைத் தொகுப்பில் 25 கதைகள் இருக்கிறது. அதில் 12 ஆவது கதையான  .”நாலணா”  கதையில் ஆரம்பத்தில் வரும் வாக்கியம் இது. மாதக்கடைசியைப் பற்றி சொல்கிறார் :- //அப்படி ஒன்றும் கடைசியுமல்ல . தேதி  இருபதுதான். ஆனாலும் என்ன? ஏழுதேதிவரை கையும், பையும் குலுங்கும். அதன் பின் மனம் மட்டும் குலுங்கும் -இது ஒரு வாழக்கை// என்று .//

கலைவாணர் முதல்தேதி படத்தில் பாடுவாரே தேதி  ஒன்னிலே இருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், தேதி 21லிருந்து திண்டாட்டம், திண்டாட்டம். பாடல் நினைவுக்கு வருது.

13 ஆவது கதை - எனக்குப் பிடிச்ச பூ !  என்ற கதையில் 

இரு பெண்கள்  பேசிக் கொள்வது.

உங்களுக்கு என்ன பூ பிடிக்கும்?”

“எனக்கு ரோஜா பிடிக்கும், மல்லிகை பிடிக்கும் ரெண்டும் ரொம்ப கிராக்கி கெடைக்கிறதே இல்லை.”

உங்களுக்கு?
வாழைப்பூ

சமைக்கிறதுக்குக் கேக்கலே...:

நானும் அதைச் சொல்லலே... புடிக்கிறது எதுவா இருந்தா என்ன? கெடைக்கிறது அது இல்லியே ... கெடைக்கிற்தையே புடிக்கிறதாக்கிக்கிறதுதான் நல்லது, இல்லியா! எனக்கு கிடைக்கிறது வாழைப்பூதான்.!”
ஏன் வாழைப்பூவும் நல்லது தானே - உடம்புக்கு ரொம்ப நல்லதும்பாங்க!:

வாழைப்பூவை கவனிச்சிருக்கீங்களா கீழே மட்டும்தான் விரிஞ்சிருக்கும் ....மேலே முகம் கூப்பி குறுகி  இருக்கும். மத்த பூ மாதிரி அதுக்குச் சிரிக்கவே தெரியாது //  
இப்படி பேசி முடித்தவுடன்  சிரிக்கிறார்கள். இருவரும் உரக்கச் சிரிக்கிறார்கள் மனம் லேசாகி விட்டதாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்.

 நிறைய பெண்கள் தங்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையை பிடித்ததாய்  ஆக்கி க்கொண்டு வாழ்வதைச் சொல்கிறது கதை.

 படித்த இரண்டு கதையும் எனக்குப் பிடித்து இருக்கிறது. மற்ற கதைகளை நிதானமாய் ப்படிக்க வேண்டும்.

திருமதி ஹேமலதா பாலசுப்பிரமணியன் அவர்கள் பெயரில்  அறப்பணிச்சேவைகள்  எப்படி உருவானது அதனால் யார் யார் பயனடைகிறார்கள் என்று பாருங்கள்.

 ஸ்ரீராமின் தாயார் தன் சேமிப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். ஸ்ரீராமின் அப்பா தன் ஓய்வூதியத்தில்  50 சதவீதம் கொடுக்கிறார்,  அது ஒரு பெரிய செயல் நல்ல செயல். ஸ்ரீராம் அப்பா வணக்கத்துக்குரியவர். மருத்துவத்துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது படைப்புகள் 1950 முதல் 1980 வரை பல்வேறு பத்திரிக்கைகளில் வந்து இருக்கிறதாம்.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டதுதான்  ”இவனும் அவனும் ” சிறுகதைத்  தொகுப்பு. 


இவனும் அவனும்  - புத்தகம் கிடைக்குமிடம்  மணிவாசகர் நூலகம். விலை 90 ரூபாய்.

நல்ல பெற்றோர்கள் பெற்ற மகன் நல்லவைகளை பதிவிடுகிறார் . ஒவ்வொரு சனிக்கிழமையும் பாஸிட்டிவ் செய்திகளை தொகுத்து வழங்குவார்.


                                                                      *      *      *

பல பதிவுகளுக்கு என் கணவர் வரைந்த ஓவியங்கள்

பாலீதீன் மறுசுழற்சி



அபிராமி பட்டர் கதை





கோவிலில் லட்சதீபம் ஏற்றுதல் 
இலட்சதீபம்


கழுகுமலை வெட்டுவான் கோவில்




கழுகுமலை

ஜல்லிகட்டு



மாட்டுப் பொங்கல்



மின்சாரமே ! மின்சாரமே!!



பொங்கலோ பொங்கல் -- பாகம் - 2




டிக் டிக் கடிகாரம் அன்பை கூறும் கடிகாரம்

இளமையின் ரகசியம்  - தீராக்கற்றல்


ஆஹா உருளை !



சிக்குபுக்கு ரயிலே ரயிலே!


KUMKUM school

home

ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால்  என் கணவரின் படங்கள் இங்கு பகிர பட்டு இருக்கிறது. ஸ்ரீராமுக்கு நன்றி.

                                                                   வாழ்க வளமுடன்.

வியாழன், 24 மார்ச், 2016

ஸ்ரீ மல்லிகார்ஜுனர் திருக்கோவில் ஸ்ரீசைலம் பகுதி--- 2

ஸ்ரீசைலத்தில் மூலவரைத்  தொட்டு வணங்க வில்லையே என்ற குறை மறுநாள் நீங்கியது.
அது எப்படி என்பதைப்பற்றியும், கோவிலின் சிறப்பு, நந்தியின் சிறப்பு பற்றியும்  நாளை தொடரும். ( அதுதான் முடியவில்லை ) என்று சொல்லி இருந்தேன் அல்லவா? போன பதிவில்
காலை  நந்தியால் கிளம்ப டாக்ஸி பிடித்தோம்,  மல்லிகார்ஜுனர்சதன் சத்திரத்திற்கு பக்கம் இருந்த ஒரு கடையில்  டாக்ஸி ஏற்பாடு செய்து தந்தார்கள்.
அதற்குள் எனக்கு மறுபடியும் மல்லிகார்ஜுனரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது   சரி போய் வரலாம் என்று கிளம்பினோம், அங்கு டிக்கட் கொடுக்கும் இடத்தில் யாருமே இல்லை  கூட்டமும் இல்லை அதனால் டிக்கட் எடுக்காமல்  போனோம், அங்கே போனால் இன்ப அதிர்ச்சி.
 நேரே கருவறைக்குள் போங்கள் போங்கள் என்று விரட்டினார்கள் எங்களுக்கு முன் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அதனால் போகும் போதே பார்த்துக் கொண்டு போனோம் கவசம் எதுவும் சாற்றாமல் சிவன் அழகாய் தெரிந்தார். நம்மை அபிஷேகம் செய்ய வைத்து  தலையை சிவன் மேல் வைத்து வணங்கி எழ சொன்னார்கள்.  என் கணவர்  நம் தலையை வைத்து  வணங்க தயங்கிய போது குருக்களே என் கணவரின் தலையை  கீழே அமுக்கி வணங்க வைத்தார்.  இறைவனை கண்களில் நீர் ததும்ப வருடி , வணங்கி மகிழ்ந்தோம்.
காலையில் பணம் இருப்பவர், இல்லாதவர் என்று பேதம் இல்லாமல் அனைவரும் இறைவனைக் கட்டித் தழுவி வணங்க வைத்ததைப் பாராட்டத்தான் வேண்டும். 
கருவறைக்கு போகும் வழியில்  சுவரின்  இருபக்கமும் அடியார்களின் வாழ்க்கை வரலாறு செதுக்கப்பட்டு இருந்தது.தெலுங்கில் இருந்ததால் ஒன்றும் புரியவில்லை.  ஒரு பெண் கண்களில் கண்ணீருடன் இறைவனை வணங்கும் காட்சி , சிவன் அடியார்கள் வணங்கிய காட்சி எல்லாம் இருந்தது.
வெளியில் வந்தால் விபூதி கவர் , அல்லது விபூதி கட்டி சின்னது முதல் பெரிய பெரிய லிங்கம் அளவு இருந்தது.  பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.
விபூதி கட்டி விற்கும் பக்கத்தில்  சதுரமாய்  கல் இருந்தது. அதில் கட்டங்கள் இருந்தது அதில் எல்லோரும் காசை நிற்க வைத்தார்கள் நிற்க வைக்க மிகவும் பிரயத்தனப் பட்டுக் கொண்டு இருந்தார்கள். நானும் வைத்து பார்த்தேன். நாம் இங்கு நகர்ந்தவுடன் காசை எடுத்து உண்டியலில் போட்டு விட்டார் விபூதி விற்பவர். காரணம் தெரியவில்லை.
பாலில் பழம் சீனி போட்ட பிரசாதம் கொடுக்கிறார்கள்  சில சன்னதிகளில். ஸ்ரீராமரும், பாண்டவர்களும், சத்ரபதி சிவாஜியும் வணங்கியதாக  சொல்கிறார்கள்.

12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று ஸ்ரீசைலம், சகதி பீடத்தில் ஒன்று அம்மன் பிரமராம்பாள் கோவில். 
மல்லிகாபுரி இளவரசி, மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா(மருதமரம்) மலர்களால் வணங்கியாதல் மல்லிகார்ஜுனர் என்று அழைக்கப்பட்டாராம்.  ஸ்ரீசைலத்தை வணங்கியவர்களுக்கு மறுபிறவி இல்லையாம். (மிகவும் நல்லதுதான் ) 
மருதமரத்தைத்  தலவிருட்சமாகக் கொண்டு மூன்று தலங்கள் உள்ளன.
வடதிசையில் உள்ளது-மல்லிகார்ஜுனம்=ஸ்ரீசைலம்
மத்தியில் உள்ளது-மத்தியார்ஜுனம்=திருவிடைமருதூர்(மகாலிங்கேஸ்வரர்)
தெற்கில் உள்ளது-புடார்ஜுனம்=திருப்புடைமருதூர்,    நாறும்பூநாதர் 
                                                  திருக்கோயில்,நெல்லை                                                                                  மாவட்டம்,முக்கூடல் அருகில்

கோவில் வாசல் பக்கம் நாகலிங்க மரம் இருக்கிறது,  அதை அம்மன் சினிமாவில் வரும் அம்மன் போல்  மஞ்சளால் அழகு படுத்தி இருக்கிறார்கள்.
          கோவில் தெப்பக்குளம் சீர் செய்து கொண்டு இருக்கிறார்கள் 
அம்மன் மரத்திற்கும் குளத்திற்கும் நடுவில் ஒரு கோவில் இருக்கிறது அங்கு வீரபத்திரர் கோவில் உள்ளது. ( கோவில் மதிலில் எழுதி இருக்கும் வாசகம் பாருங்கள்) இது மட்டும் தான் ஆங்கிலத்தில் நல்லவேளை தெலுங்கு தெரியாத   வெளியூர் பயணிகளுக்கு வசதியாக  இருக்கிறது. 
  
 கோவிலுக்கு வெளியே இருபுறமும் சிவலிங்கங்கள்.  முன் புறம் நந்தி. எல்லா சிவலிங்கங்களுக்கும் தேங்காய் உடைத்து வைத்து இருக்கிறார்கள்.  தொன்னையில் பிரசாதம் வைத்து இருந்தார்கள். 

பிறகு கோவில் தரிசனம் முடித்து வந்தபின் சத்திரம் பக்கத்திலேயே உணவை முடித்து விட்டு டாக்ஸி டிரைவரிடம் ஸ்ரீ சைலத்தில் பார்க்க வேண்டிய கோவில் எல்லாம் கூட்டிப் போங்கள் என்றோம். முதலில் சாட்சி கணபதி கோயிலுக்குக்கூட்டிப் போனார்.

ஸ்ரீசைலம் போகும் முன் இந்த கணபதியை வணங்கி விட்டுத் தான் போவார்களாம் ஆனால் நாங்கள் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனரை வணங்கி விட்டு இறங்கும் போது தான் வணங்கினோம் தெரியாமல் செய்த தப்பை மன்னித்து விடுவார் விநாயகர் !

கடையில் விபூதி கட்டிகள், குங்குமம்
ஷேர் ஆட்டோக்கள் ஊர் முழுவதும் 
காலை நீட்டிக்கொண்டு சுகமான பயணம்

ஊர் முழுவதும்  இந்த அம்மா கையில் உள்ளது போல் பிளாஸ்க், கூடையில் மிகவும் சின்ன கப்பில் டீ, அல்லது காப்பி வைத்துக் கொண்டு விற்கிறார்கள் ஒரு வாய் காப்பி தான் இருக்கும் 10 ரூபாய்

ஆந்திரா மிளகாய்  சிவப்பாய் காயப்போட்டு இருப்பதே ஒரு அழகு.


பாதாள கங்கை செல்லும் வழி
சாட்சி கணபதிக்கு பின் பாதாள  கங்கை  கூட்டி போனார்  ஆனால்  வெகு தூரம் போகும் படியும், குரங்குகள் படுத்தின பாடும் அங்கு போகும் ஆசை இல்லாமல் செய்து விட்டது. கீழே போய் பார்த்தாலும் த்ண்ணீர் இல்லை என்றார்கள் அதனால் போகவில்லை.


அடுத்து சிகரம் என்ற இடத்திற்கு கூட்டிப் போனார். நல்ல உயரமான  இடம் அங்கு இருந்து பார்த்தால் ஊரின் அழகு தெரிகிறது. அங்கு போக படிகளும் இருக்கிற்து , வாகனங்களும் போகிறது. கார் மேலே போகவும்  டிக்கட் உண்டு. அங்கு இருக்கும் கோவிலுக்குள் கீழே சிவலிங்கமும், கொஞ்சம் படிகள் ஏறி ப்போனால் கைலாயம் மலை போல்  மலை முழுவதும் சிவலிங்கள் போல் அமைத்து இருந்தார்கள்.

                             
குரங்குகள் நம் கையில் இருக்கும்  கைப் பைகளை பிடுங்க வருகிறது குரங்களை அங்கு உள்ள பாதுகாவலர் கவண்கல் வீசி விரட்டி நம்மை மேலே போக வைக்கிறார்.

                 

அதற்கு மேல் கொஞ்சம் படிகள் ஏறி போனால்  ஒரு கல்லின் மேல் நாகம் சுற்றியது போல் இருந்தது.  அந்த வட்டகல்லின் மேல் நந்தி இருந்தது நந்திக்கும் அந்த வட்டகல்லுக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. அதில் எள்ளும் அரிசியும் போடுகிறார்கள், (சிறு கவரில் இரண்டு ரூபாய்க்கு  விற்கிறார்கள்)   பின் நந்தியின் இரண்டு கொம்புகளைப் பிடித்துக் கொண்டு கொம்புகளுக்கு இடையில் தூரத்தில் தெரியும் ஸ்ரீசைலத்தை வணங்குகிறார்கள்.

நந்தி தவம் இருந்து  நீண்ட ஆயுளைப் பெற்று சிவனுக்கு வாகனமானது இங்குதான்.  நந்தி தவம் இருந்த இடம் நன்தியால். நந்தி கோவில்கள் ஒன்பது இருக்கிறதாம்.. நாங்கள் ஒரு ஐந்து பார்த்தோம்.

மகாநந்தி எனும் இடத்தில் உள்ள நந்தி பார்க்கில் மகா நந்தியை தரிசனம் செய்தோம். நாம் போட்டோ எடுக்க கூடாது. அவர்கள் ஆள் வைத்து இருக்கிரார்கள். அவர்கள் எடுத்து தருவார்கள் . நாங்கள் உள்ளே போய் பார்த்தோம் போட்டோ எடுக்க வில்லை.  வெளியே போய்  அலைபேசியில் எடுத்தபடம்.


                               பக்கத்து கடை வாசலில் இருந்து எடுத்த படம்.

பிறகு நவபிரம்மா கோவில் பார்த்தோம்.  தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ளது, அழகிய  கலை வேலைப்பாடு நிறைந்த  கோவில், அது  அடுத்த பதிவில்.

                                                          வாழ்க  வளமுடன்.








































































































































திங்கள், 21 மார்ச், 2016

ஸ்ரீ மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்











                                                                கோவில் உள் வாசல்

ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஜனவரி மாதம் போய் வந்தோம். என் கணவர்  பல வருடங்களாய் பார்க்க எண்ணிய கோவில்.  என் கணவர் 42 வருடமாய் தேவாரப் பாடல் பெற்ற தலங்களைத் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இக் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடியது. (தேவார பாடல்பெற்ற தலங்கள் 274) . இறையருளால்   ஸ்ரீசைலம் கோவிலுடன்  தேவாரப்பாடல் பெற்ற தல யாத்திரை நிறைவு பெற்றது.

                                           கர்நூல் ரயில் நிலையம்

கச்சிகுடா ரயிலில்  மதியம் 12 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி  மறுநாள் காலை  9 மணிக்குக்  கர்நூல் போய்சேர்ந்தோம்.. பின் அங்கிருந்து டாக்ஸியில் ஸ்ரீசைலம் பயணம் செய்தோம். ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் டாக்ஸி கேட்டால் இல்லை. ஆட்டோ தான் இருக்கிறது என்றார்கள். எல்லோரும் இந்தி, தெலுங்குதான் பேசுகிறார்கள். என் மகள் உடன் வந்து இருந்ததால் அவள் இந்தியில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தாள். அவர் ஒரு போர்ட்டரை அழைத்து,  பக்கத்தில் இருக்கும் ஒரு டிராவல்ஸ்க்கு  அழைத்து செல்லச் சொன்னார். ஆட்டோ டிரைவருக்கு நன்றி சொல்லி  டிராவல்ஸ் இருக்கும் இடம்   சென்றோம் நடக்கும் தூரம் தான் இருக்கிறது. அவர் ஆபீசைக் காலையில் திறக்கவில்லை . பக்கத்துக்கடைக்காரர் போனில் பேசி வரவழைத்தார். 

                               
டிராவல்ஸ் ஆபீஸ்

                                 
                          டிராவல்ஸ் நடுத்தும்  இஸ்லாமிய பெரியவர்

உடனே சுறுசுறுப்பாய்  ஸ்கூட்டரில் வந்து விட்டார். போனில் பேசி டாக்ஸியை வரவழைத்து   நம்மை வாழ்த்தி அனுப்பினார். திரும்பி வருவதற்குப் போன் செய்யுங்கள் இங்கிருந்து வண்டி அனுப்புகிறேன் என்று  சொன்னார்.  உரையாடல் எல்லாம் இந்திதான். எல்லாம் என் பெண் தான் பேசினாள்.

சின்னவயது டிரைவர். அதிகம் பேசாமல் கர்மமே கண்ணாய் மலைப் பாதையில் கவனமாய் வண்டி ஓட்டினார். போகும் பாதையின் இருபுறமும் மூங்கில் காடுகள். மரத்தைச் சுற்றிப் புற்றுகள் பெரிது பெரிதாக வளர்ந்து இருந்தது.

           ஸ்ரீ சைலம் போகும் பாதை  இருபுறமும் எல்லாம் மூங்கில் காடுகள்


                                                             மூங்கில் காடு

வழியில்  ஒரு கடையில்  மதியம்  உணவை முடித்துக் கொண்டோம். சப்பாத்தி ஆர்டர் செய்தால், மைதா ரொட்டிதான் வந்தது  நல்லா இல்லை. அதை பேருக்குச் சாப்பிட்டோம்.  மலைப்பாதையில் கொண்டை ஊசிகளை கொண்ட பயணம் என்பதால் கொஞ்சமாய் உணவு  உட்கொண்டோம்.

மூன்று மணிநேரம் பயணம் செய்து ஸ்ரீசைலம்  வந்தடைந்தோம். மல்லிகார்ஜுனா சதன் என்ற தேவஸ்தான சத்திரத்திற்குச் சென்றோம்..  சாப்பாட்டு மேஜை, நாற்காலிகள் , சோபா செட்கள்,  முன் அறையில் இருந்தன. அடுத்ததாக படுக்கை அறை,டிவி,ஏசி கெய்சர்,கண்ணாடி அலமாரி என சகல வசதிகளுடன் நன்றாக இருந்தது.  வெந்நீரில் குளித்துவிட்டு    பக்கத்தில்  இருக்கும் ஓட்டலில்  பால், காப்பி,  டீ  பருகி விட்டு  நடக்கும் தூரத்தில் உள்ள   கோவிலுக்கு ஆட்டோவில் போனோம். (பக்கத்தில் என்று தெரியாது) டிக்கட் 100 , 500 .  காமிரா, செல்போன் அனுமதி இல்லை என்று போட்டு இருப்பதைப் பார்த்து காமிராவையும் , செல்போனையும் அறையில் கொண்டு போய் வைத்து விட்டு 100 டிக்கட் எடுத்து உள்ளே சென்றோம்.

போகும் வழியில் பெரிய நந்தியை தரிசனம் செய்தோம், அதன்  எதிரில் உற்சவ அம்மனும் சுவாமியும் அலங்காரமாய்  இருக்கிறார்கள்   அர்ச்சனை  சாமான் என்று  10 ரூபாய்க்கு ஒரு மஞ்சள் பையில் கொஞ்சம் பூ போட்டு தருகிறார்கள். அதை சுவாமிக்குப் போட்டு விட்டு ஆரத்திக் காட்டி  . அர்ச்சகரே நமக்கு நெற்றியில் பொட்டு வைத்து விடுகிறார். (கையில் தருவது இல்லை)

அப்புறம் கோவில் வாசலின் நடைப் பக்கம், இரண்டு பெரிய திண்ணைகள் இருக்கிறது. இருபக்கமும் இரண்டு அர்ச்சகர் அமர்ந்து கொண்டு எல்லோருக்கும் சந்தனம் தீட்டி விடுகிறார் நெற்றியில்.  சுவாமி தரிசனம் செய்ய உள்ளே போகிறோம். வெகு தூரத்திலிருந்து சாமியைப் பார்க்க முடிகிறது. சிறிய சிவலிங்கம் சுயம்பு வடிவம். அதற்கு பெரிய  தங்க நாகாபரணம் சாற்றி வைத்து இருக்கிறார்கள். 500 ரூபாய் கட்டியவர்கள் இறைவனைக் கட்டித் தழுவி  வணங்கி வெளி வந்தனர். நாமும் 500 ரூபாய் கட்டி இருக்கலாமோ என்ற நினைப்பு வந்து போனது.

                   
                                          மல்லிகார்ஜுன சுவாமி தங்க கோபுரம்

                    

                            அம்மனைத் தரிசிக்கச்செல்லும் படிக்கட்டுகள்
                                             
. அடுத்து அம்மன்  சன்னதி  போய் அம்மன்  பிரமராம்பாள் தரிசனம், கீழே சிவபெருமான். மேலே 30 படிகள் ஏறிப் போனால் அம்மன்  வெகு அலங்காரமாய் இருக்கிறார்,  கருவறைப் பக்கம் வரை வரிசையாய் சென்று தரிசிக்கலாம். அம்மன் முன் ஸ்ரீ சக்கரம் உள்ளது  அதற்கு பணம் கட்டி குங்குமார்ச்சனை செய்கிறார்கள்.  அம்மனை தரிசித்து விட்டு வெளியே வந்தால்  பச்சைப்பயிறு சுண்டல் கொடுத்தார்கள்.


                     அம்மனை தரிசிக்க சென்று கொண்டு இருக்கும் பக்தர்கள்



அம்மனை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் இருக்கும் சிவனும் நந்தியும்.


எட்டு நந்திகள் வரிசையாய்  நந்திகளுக்கு முன் சிவலிங்கங்கள் எட்டு இருக்கின்றன..


                         சிவலிங்கங்கள் கீழே இருக்கின்றன.அவற்றிற்கு விமானங்கள்.



நடராஜர் சன்னதி

சிவலிங்கங்களும் நந்திகளும் இருக்கும் மண்டபமும், அம்மன் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளும்.


எதிர்ப்புறம் பூக்கள் அழகாய்த் தொங்குவது  பள்ளியறை. அதற்குக் கட்டணம்  உண்டு உள்ளே செல்ல , அழகான தங்க ஊஞ்சலில்  பட்டு மெத்தை போடப் பட்டு இருக்கிறது,  நம் கைகளால் ஆட்டி விட்டவுடன்  பூ தருகிறார்கள் அதை அதில் தூவி வணங்கி வெளியே வரவேண்டும். 

வலது கை பக்கம் ஒருவர் போகிறார் அல்லவா அவர் பக்கத்தில் தெரியும் கம்பி தடுப்புக்கு கீழே சரஸ்வதி ஆறு போகிறது. (அந்தர் வாகினி என்று சொல்கிறார்கள்)

படிகளில் இறங்கிக் கீழே வந்தால் ஒரு இடத்தில்  சுவாமி, அம்மன், உற்சவர்கள் அழகான  அலங்காரத்தில் காட்சி அளித்தார்கள். அந்தக் காட்சியைப் பெண் காவலர்கள், ஆண் காவலர்கள், மற்றும்  முக்கிய பிரமுகர்கள் எல்லாம் சாமியைக் கட்டிபிடித்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள். 

நம்மை  செல் கொண்டு போக வேண்டாம் என்று சொல்லி விட்டு இவர்கள் எல்லாம் கொண்டு வந்து இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

( செல்போன் கொண்டு போக வில்லியே பின் இப்படி இந்த படங்கள் என்று வியப்பது  தெரிகிறது மறுநாள் கொண்டு போய் எடுத்தோம் காலை யாரும் கொண்டு போக வேண்டாம் என்று சொல்ல வில்லை டிக்கட்டும் எடுக்க வில்லை, தர்மதரிசனம் தான்.)


கீழே ஆதி மல்லிகார்ஜுனர்  ஒரு கம்பி கதவு போட்ட அறையில் இருக்கிறார் .அவரைப் பார்த்தால் மரத்தை வெட்டிய பின் மீதி இருக்கும பாதி பாகம் போல்  இருந்தது..  அந்த சுவாமிக்கு ஒரு குடும்பத்தினருக்கு 200 கொடுத்தால் நாமே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள்.  அந்த மல்லிகார்ஜுனரைத்தான் தொட முடியவில்லை,  ஆதி மல்லிகார்ஜூனரையாவது தொட்டு வணங்குவோம் என்று 200 கொடுத்து டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.

நம் கையை சுவாமிக்கு நேரே வைத்துக் கொள்ளச் சொல்லி நம் கையில் முதலில் தண்ணீர், பின் பால் என்று மாற்றி மாற்றி ஊற்றிப் பின்  சந்தனம் கொடுத்து பூசச் சொல்கிறார்கள்,

  பூ ,பொட்டு எல்லாம் நம்மை வைக்கச் சொல்கிறார்கள். அதன் பின் தலையை சுவாமி மேல் வைத்து வணங்கச் சொல்கிறார்கள்.  ஆரத்தி காட்டிய பின்  நம்மை வெளியே போகச் சொல்கிறார்கள்.

கோசாலை,ஒன்று அங்குள்ளது. சிவாஜி வணங்கிய  பவானியை வணங்கி வெளி வருகிறோம்.

மூலவரைத்  தொட்டு வணங்க வில்லையே என்ற குறை மறுநாள் நீங்கியது.
அது எப்படி என்பதைப்பற்றியும், கோவிலின் சிறப்பு நந்தியின் சிறப்பு பற்றியும்  நாளை தொடரும்.

                                                                  வாழ்க வளமுடன்
                                                                    ------------------