எறும்பைப் பற்றி சிறு வயதில் படித்த கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.தண்ணீரில் தத்தளித்த எறும்புக்குப் புறா மரத்திலிருந்து இலையைப் பிய்த்துப் போட, எறும்பு அதைத் தெப்பமாய் உபயோகித்துத் தப்பித்தது.தப்பித்த எறும்பு புறாவை வேட்டையாட வந்த வேடன் காலில் கடித்து புறாவைக் காப்பாற்றியது என்று கதை.. பிறருக்கு உதவும் மனப்பான்மைக்கும், செய்நன்றி மறவாமல் இருக்கவும் சொல்லப் பட்ட கதை.
எறும்பு பூஜித்த கோவில் - எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூரில் இருக்கிறது.
இப்போது என்ன இந்த எறும்பு பற்றி சொல்கிறேன் என்றுபார்க்கிறீர்களா?
என்னைக் கவர்ந்த காய்ந்த இலையின் சேகரிப்பு.
ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்த ஓர்ப்படியின் பேத்தியும்(சிறுமி) என்னுடன் வெகு ஆர்வமாய் எறும்பு ஆராய்ச்சி செய்ய உதவினாள். தூங்குமூஞ்சி மரத்தில் இருக்கும் கூட்டை அவள்தான் மொட்டைமாடியில் போய் பார்த்து வந்து ,’ காமிராவை எடுத்துக் கொண்டு வா ஆச்சி வந்து பார் இங்கும் கூடு கட்டி இருக்கு’ என்றாள்,போய்ப் பார்த்தால் அதுவும் எறும்புக் கூடுதான் அதுவும் புங்க மரத்தில் இலையால் கூடு கட்டிய அதே எறும்பு வகை தான். பின் வேப்பமரத்தை பார்த்தால் அதிலும் கட்டி இருப்பது தெரிந்து கொண்டேன்.
தரையில் நிமிசமாய் மண்ணைக் குவித்து வைக்கும் எறும்புப் புற்றையும், செடிகளில் வெண் பஞ்சாய் கூடு வைத்து செடியை சாகடிக்கும் எறும்புகளை பார்த்து இருக்கிறேன். இப்படி இலைகளை மடித்து கூடு கட்டும் எறும்பை இப்போது தான் பார்த்தேன்.
அமெரிக்கா போனபோது ஒரு படகுத் துறைக்கு அருகில் இருந்த மரத்தில் குளவி இலைகளால் கூடு கட்டியதை பார்த்தேன். அதை என் மருமகள் எடுத்த படம் கீழே பகிர்ந்து இருக்கிறேன் .
என் சின்னக் காமிராவில் எடுத்த படம்
குளவி கூடு கட்டி உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் பரிதியின் ஒளி
கோவையில் எடுத்த எறும்பு கூடு உருவாகும் படங்கள் பின் வருவது. இது நான் எடுத்த படங்கள்.
ஒன்றுக்கு ஒன்று பேசிக்கொண்டு வேலை பார்க்கும் அழகு.
இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு அறிவைக் கொடுத்து இருக்கிறான் என்று வியந்து பார்க்க வைக்கும் காட்சி
மடித்துத் தைக்கும் அழகு. தையல் குருவி இரண்டு இலைகளை தைக்குமே அது போல்
இலைகளில் மடிப்பு இடையே வெண் இழைகள்
பஞ்சு போன்ற இழைகளால் இலைகளை மடித்து பொட்டலம் போல் கட்டும் விந்தை
புங்கமரத்து இலைகளையும் கிளைகளையும்இணைத்து கட்டும் எறும்புகள்
தூங்குமூஞ்சிப் பூவின் காய்ந்த கொப்பை சேர்த்த்து இழை பின்னி , பின் இலைகளை இணைக்கிறது கூடாய்
தூங்கு மூஞ்சி மரத்தின் பூ, இலைகள் மாலையில் மூடிக் கொண்டாலும் விழித்து இருக்கும் பூ.
வேப்பமரத்தில் வேப்பமர இலைகளால் கட்டிய கூடு
என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன் படம்- ’Bug's life ’ நானும் அதை அவனுடன் விரும்பிப் பார்ப்பேன். எறும்பு சுறு சுறுப்பு என்றுதான் தெரியும் ஆனால் அதன் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது, பிற உயிரினங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள எவ்வளவு கஷ்டப்படுகிறது, உணவை சேகரிக்க எத்தனை பாடு படுகிறது என்று எல்லாம் அழகாய் காட்டும் படம்.
அது போல் புங்க மரத்தில் கூடு கட்டும் எறும்புகளின் உழைப்பைப் பார்த்தேன். இலைகளில் விலக்கி, சரியாக பார்க்க முற்பட்ட போது அவை அங்கும் இங்கும் கலைந்து பின் மறுபடியும் தன் வேலையில் கண்ணும் கருத்துமானதை பார்க்கும் போது எறும்புகளின் மேல் தனிப் பாசமே வந்து விட்டது.
நம்மிடம் எறும்புகள் போல் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சின்ன வேலையில் இடைஞ்சல் வந்தால் எவ்வளவு கோபம், எவ்வளவு மனத்துயர் படுகிறோம். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின் வாழ்வில் வெற்றி நிச்சயம்!
வாழ்க வளமுடன்!