வியாழன், 18 நவம்பர், 2010

தீபத் திருநாள் திருக்கார்த்திகை
கார்த்திகை முதல் நாள் முதல் அந்த மாதம் முழுவதும் மாலையில் வீடுகளில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள்.மார்கழி மாதம் முழுதும் காலையில் கோலத்தில் வைப்பார்கள் தை மாதம் முதல் தேதி வரை.

விளக்கு வழிபாடு மிகவும் சிறந்ததாகும்.வீட்டில் விளக்கு ஏற்ற பெண் வந்தாளா என்று மருமகள் வந்த விபரம் கேட்க வருபவர்கள் மாமியாரிடம் கேட்பார்கள்.

மாலை நேரம் விளக்கு ஏற்றும் போது எங்கெல்லாம் விளக்கேற்றுவார்கள்? ஒருபாடல் மூலம் பெரியவர்கள் சொல்கிறார்கள்.


விளக்கேற்றம்மா விளக்கேற்று
வினயத்துடனே விளக்கேற்று
உள்ளக்கோயிலுக்கு விளக்கேற்று
திண்ணை புரையில் விளக்கேற்று
திருகூடத்தில் விளக்கேற்று
மண்ணில் துளிர்த்து வரும் துளசி
மாடத்தடியில் விளக்கேற்று
கிழக்கு பார்த்து விளக்கேற்று
முகத்தைப் பார்த்து விளக்கேற்று
முழுக்கப் பார்த்து விளக்கேற்று
கிணற்றங் கரையில் விளக்கேற்று
முற்றமெங்கும் விளக்கேற்று
ஆனை முகனின் திருமுன்னே
ஆலிலைக் கண்ணன் திருமுன்னே
சேனாபதியின் திருமுன்னே
சேவித்திருக்க விளக்கேற்று
செல்வப்பெண்ணே நீமுன்னே
விடியும் அளவும் விளக்கேற்று
உள்ளக் கோவிலில் விளக்கேற்று
ஊருக்கு முன்னே விளக்கேற்று


தொட்டிலுக்குப் பிள்ளையும், தொழுவுக்கு பால் பசுவும்,பட்டறைக்கு நெல்லும் பதிந்த மரக்காலும் உனக்கெரிக்க எண்ணெயும் எனக்குண்ணசோறும் தட்டாமல் தந்தருள்வாய் தகவுறவே என்றும் கூறி விளக்கேற்றுவார்கள்.

ஒளிவழிபாட்டின் சிறப்பைப் பெரியோர்கள் பாடியுள்ளனர்:

மாணிக்கவாசகர்: சோதியே சுடரேசூழொளி விளக்கே
சுரிகுழற் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால்கொள் வெண்ணீரற்றாய்
பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறை மலர்க் குருந்தமேவியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்ற ருளாயே

திருமூலர்: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணி விளக்கே.

திருநாவுக்கரசர்: உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படு உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கி
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே


திருமாளிகைத் தேவர்: ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்த தோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவள ருள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

திருமூலர்: விளக்கைப் பிளந்து விளக்கினையேற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத்தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே.சேக்கிழார்: கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவி யோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

பொய்கையாழ்வார்: வையம்தகளியா வார்கடலேநெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக-செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.

பூதத்தாழ்வார்: அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி
ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

திருக்கார்த்திகை விழா:

ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவை ஏன் கொண்டாடுகிறோம்? திருவண்ணாமலை தீபம்,சர்வாலய தீபம், விஷ்ணு தீபம்,கார்த்திகை விரதம் - இவற்றை ஏன் கடைப்பிடிக்கிறோம்?

திருவண்ணாமலை தீபம்:

பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தான்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.

சர்வாலய தீபம்:

சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியை தூண்டி,விளக்கை பிரகாசப் படுத்தியது.
இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவலாயத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவலாயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாக தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.


விஷ்ணுதீபம்

விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.

ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கார்த்திகை விரதம்:

முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும்.
பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலுட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.


விளக்கு வழிபாட்டின் பயன்:

கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.
-தாயுமானவர்

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை.


கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
எல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
                                                                     வாழ்க வளமுடன்
*********************************************************************************
----------

திங்கள், 15 நவம்பர், 2010

கன்னடிய பெருமாள் கோவில்


இத் திருக்கோவில் பழனியிலிருந்து தெற்கு திசையில் கொடைக்கானல் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் அதிகம் செல்லாத சிறு திருக்கோவில்.இக் கோவில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ளது. இதை சிறு குன்று என்றும் சொல்லலாம்.பொதுவாக மலையின் மீது முருகனுக்கு தான் இருக்கும்.இங்கு பெருமாள் இருக்கிறார்.முற் காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையை கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைகாலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலை சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டு பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.

இந்த சிறிய கோவிலை கண்ணாடி பெருமாள் கோவில் என்றும் சிலர் கூறுகிறார்கள். கோவில் முன்னே நெடிய விளக்கு தூணைக் கொண்ட மண்டபம் உள்ளது.கோவிலின் முகப்பு பகுதி பழமையான ஓட்டு கட்டிடமாக இருக்கிறது.உள்ளே சிறிய பிரகாரம் அமைந்துள்ளது.நடுவில் உயர்ந்த மேடையில் ஏறி சென்றால் ஒரு முன் மண்டபமும் உள்ளே கருவறையும் இருக்கிறது.மிக சிறிய வடிவில் பெருமாள் இருக்கிறார் அருள்பாலித்துக் கொண்டு.

இக் கோவில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்போடு இருந்தாக கூறப்படுகிறது.

தினமும் ஒரு வேளை பூசை நடைபெறுகிறதாம்.ஒரு பூசாரி சற்று தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு உடனே போயவிடுகிறார்.சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சிறப்பாக பூசை நடை பெறுகிறது. இக் கோவிலுக்கு சனிக் கிழமை காலை செல்வது தான் நல்லது.

நாங்கள் சென்றபோது பூசாரி இல்லை, இப்போது தான் பூசை முடித்து போனார்.என்று காரைக்காலிலிருந்து அடிக்கடி அந்த கோவிலுக்கு வரும் ஒரு அடியார் சொன்னார்.நாங்கள் வெளியூரிலிருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்த பெரியவர் கதவின் ஓட்டை வழியாக பாருங்கள் என்றார்.நாங்கள் பார்த்தோம் வெறும் புகை மண்டலமாக இருந்தது.கவலை தோய்ந்த முகமாய் நாம் நிற்பதைப் பார்த்து கன்னடிய பெருமாள் அந்த பெரியவர் மனதில் புகுந்து கதவை திறக்க வைத்தார்.என்னிடம் சாவிக் கொடுத்து போய்விடுவார் என்று சொல்லி நீங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள் பெருமாளைப் பார்க்காமல் போக வேண்டாம் வாருங்கள் என்று திறந்தார் சினிமாவில் சாமி காட்சி கொடுக்கும் போது முதலில் புகை மண்டலம் வந்து பின் சாமி காட்சி கொடுப்பது போல் வெண்புகையாய் இருந்த்து.பூசாரி பூசைமுடிந்தபின் சாம்பிராணி புகைப் போட்டு பின் கதவை மூடி போவாராம்.
கொஞ்ச நேரம் புகை எல்லாம் அடங்கிய பின் பெருமாள் காட்சிக் கொடுத்தார்.
நல்ல தரிசனம் செய்து மனமகிழ்ச்சியுடன் திரும்பி வந்தோம்.

நீங்கள் போவதாய் இருந்தால் போக வசதியாய் பூசாரியின் போன் நம்பர் வாங்கி வந்தேன்
பாலசமுத்திரம் வீரமணி பூசாரி
செல் நம்பர்- 9965305724

பழனி சென்றால் போய் வாருங்கள் இயற்கையை ரசிக்கலாம்.பெருமாளை வணங்கலாம்.
குழந்தைகளுக்கு பாறையில் (சாய்வாய் இருப்பதால்)ஏறி இறங்க பிடிக்கும்.

செவ்வாய், 2 நவம்பர், 2010

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

திங்கள், 1 நவம்பர், 2010

மோதிரம் வாங்குங்கள்! மோதிரம்!

என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர்
“வைகுந்த அம்மானை” 1904லில் வெளி வந்த புத்தகம். அதை தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னை கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.

இதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:

// விளம்பரம்

சீர்மையிலிருந்து வரவழைக்கப்பட்ட

எங்களுடைய

ரோஜாப்பு மொட்டை

பரிட்சித்துப் பாருங்கள்

ரோஜாப்பு மொட்டு என்பது

ஒரு ஷோக் மோதிரம்

இந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல
பிரகாசிக்கும். பார்வைக்கு மிக்கபகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.
இந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.

8-மோதிரத்திற்கு மல்பீஸ் இனாம்
8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்
(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.

4.மோதிரத்திற்கு இனாம்

4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.

என்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.

வித்தியாரத்திநாகர அச்சுக்கூடத்தலைவர்

பி.நா.சிதம்பரமுதலியார்
பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //வாங்குங்கள் ஷோக்மோதிரம் விரைந்து.

பின் குறிப்பு:
அதில் உள்ளதை அப்படியே போட்டு இருக்கிறேன்.ஸ்கேனர் என்னிடம் இல்லை.இருந்தால் ஸ்கேன் செய்து போட்டு இருப்பேன்.

வைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.