திங்கள், 29 ஜூலை, 2013

கற்றதும் பெற்றதும்

உங்களுக்கு எல்லாம் நல்லா தெரிந்த கோவை தில்லி என்ற வலைத்தளத்தை வைத்து இருக்கும் ஆதிவெங்கட்  அவர்கள், என்னை என்  கணினி அனுபவங்களை சொல்ல அழைத்து இருக்கிறார்கள். நான் தற்சமயம் என் மகன் வீட்டில் நியூஜெர்சியில் இருக்கிறேன். என் பேரனுடன் பொழுது போவதாலும் என் கணினி அனுபவங்களை முன்பே நான் எழுதி இருப்பதாலும் அதையே உங்களுக்கு கொடுக்கிறேன்.

திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்தபின், தமிழ், ஆங்கில தட்டச்சு படித்தேன்.  என் கணவரும், நானும் தட்டச்சு ஆரம்பத்தில் படிக்க வில்லை,   இருவரும் கற்றுக் கொண்டோம்.  தமிழ் தட்டச்சு வாங்கினால் உபயோகமாய் இருக்கும் என்று நினைத்து இருவரும் கற்றுக் கொண்டோம்,  இருவரும் பாஸ் செய்தோம். தமிழ்  தட்டச்சு   இயந்திரம் வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம் ஆனால் ஏனோ வாங்கவில்லை.

எல்லோரும் தங்கள் கணினி  அனுபவங்களை வெகு அழகாய் சொல்லிவிட்டார்கள் என் அனுபவம் குழந்தையின் அனுபவம் போல். நான் இதில் கற்றுக் கொண்டது மிக குறைவு. ஆனாலும், மகன் , மகளுடன் கணினியில்  பேசுவது- அவர்களைப் பார்ப்பது-  அதுவே பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டு இருந்த காலம். இப்படிஎனக்கு என்று வலைத்தளம் அமைப்பேன் என் எண்ணங்களைப் பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்றெல்லாம் நான் அப்போது நினைத்தது இல்லை. ஒரு வலைத்தளத்திற்கே நான் இப்படி சொல்கிறேன், ஒவ்வொருவர் தனக்கு என்று பல வலைத்தளம் வைத்துக் கொண்டு அதில் திறம்பட எழுதி வருகிறார்கள்.

வலைத்தளம்  அமைத்து எழுத ஆரம்பித்த  மூன்றாவது பதிவு  கணினி அனுபவப்பதிவு :

//கற்றல் நன்றே!

” கற்றல் நன்றே கற்றல் நன்றே
வலைக் கல்வி கற்றல் நன்றே”

நானும் வலைக் கல்வி கற்றுக்கொள்கிறேன். முதல்குரு என் பேத்தி. ஒரு விளம்பரத்தில் ’மெளசைப்பிடி பாட்டி’ என்று பேத்தி சொல்வதும், பாட்டி ’எலியையா?’ என்று பயந்து, பின் சிரிப்பது போல் வரும். அது மாதிரி நானும் என் பேத்தியிடம மெளசை  பிடிக்க முதன் முதலில் கற்றுக் கொண்டேன். மேலும் அவளுடன் கணிப்பொறி விளையாட்டு,ஓவியங்களுக்கு கலர் கொடுத்தல் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

அடுத்த குரு என் மகள். வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுத்தேன் அவளுக்கு. அவள் எனக்கு வலைக் கல்வி கற்றுக் கொடுத்தாள்.

மகள்,மகன், மருமகள் எல்லோரும் நல்ல வலைத்தளங்களை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். ஒரு மாதமேயான என் பேரனும் வருங்காலத்தில் எனக்குக் கற்றுக் கொடுப்பான்.

வலைத்தள நண்பர்களும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
எல்லோருக்கும் என் நன்றி.//
                                                                        *  *  *

பண்புடன் இணைய இதழுக்காக எழுதிய கட்டுரை இளமையின் ரகசியம் தீராக்கற்றல்  என்ற பதிவில்  இருந்து:

//நம்மிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. கற்கும் ஆசை உள்ள தாய்மார்களுக்கு  குருவாக  குழந்தைகள், பேரன், பேத்திகள் சொல்லித்தரத்தயாராய் இருக்கிறார்கள்.  இவர்களிடம் என்ன படிப்பது என்று எண்ணத்தை தள்ளி வைத்துவிட்டு  மாணாக்கர்களாய் சேர்ந்து  நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். முதலில் கணினி இயக்கக் கற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் மிக அவசியமான தேவைகளில் கணினிப் படிப்பும் ஒன்று என்று ஆகி விட்டது. வெளி நாட்டில், வெளியூரில் வாழும் குழந்தைகளை முதலில் நேரில் பார்த்துப் பேச, அவர்கள் நம்மைப் பார்க்க, கணினி இன்றியமையாத தேவை ஆகிறது.  பிறரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் தாமே கற்றுக்கொண்டு அதை இயக்கி அவர்களுடன் உரையாடுகிறார்கள்.

       இப்போது யாரும் கடிதம் எழுதுவது இல்லை. ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுத வீட்டு முகவரி வாங்கிக் கொண்ட காலம் மாறி, உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள் என்று கேட்டு வாங்கும் காலம் ஆகி விட்டது.  அதனால் நமக்கு என்று மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொண்டு  வீட்டுப்பண்டிகைகளில் எடுத்த படங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தபோது அவர்களுடன் எடுத்த படங்கள் என்று தங்கள் பிள்ளைகளுடன் பகிரும் போது அவர்களுக்கும் உறவினர்களிடம்  உள்ள நெருக்கம் அதிகமாவதை உணர்கிறார்கள். //

ஒவ்வொரு பதிவிலும் இணையத்தின் நன்மைகளை எழுதி இருக்கிறேன்.

2007 ஆம் வருடம் என் மகன் அமெரிக்கா சென்றான், வேலை நிமித்தமாய். அப்போது அவன் கணினியை எங்களுக்கு கொடுத்துச் சென்றான்.
 கணினியை இயக்க , பத்திரிக்கைகள் படிக்க எல்லாம் சொல்லிக் கொடுத்தான்.
ஆரம்பத்தில் என் மகள்  அனுப்பும் வலைத்தளங்களைப் படிப்பேன்,  பின் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொடுத்தாள் நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு தினம் ஒரு பக்கம் நோட்பேடில் அடித்துப்பார்த்துக் கொள்வேன்.
அப்புறம் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் கொடுக்க ஆரம்பித்தேன்.

பதிவில் பிடித்த வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்வது சொல்லிக் கொடுத்தாள். அதனால் மிக எளிதாக பின்னூட்டங்கள் கொடுத்தேன்.
தினம் தினம் புதுப்புது சந்தேகங்கள் வரும். அதற்கு என் மகன், மகள் பொறுமையாக பதில் சொன்னார்கள். ஹேங் அவுட் ஆகி  கணினி இயங்காமல் இருக்கும்போது அதிலிருந்து வெளி வந்து கணினியை இயக்க சொல்லிக் கொடுத்தார்கள்.   கூகுளில் நமக்கு தேவையானவைகளைத் தேட, யூ டியுப்பில் சினிமா பாடல்,  பக்தி பாடல்கள் , நல்ல கர்நாடக கச்சேரிகள், எல்லாம் கேட்கப் பழகினேன்.

விடுமுறைக்கு வந்த என் மகள் , அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.

என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

2009 மே மாதம் 31 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்ற கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.

//எண்ணமே இயற்கைதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.//


2010ஆம் வருடம் என் கணவர்,  பேரனைப் பார்க்க நாங்கள் அமெரிக்க சென்ற போது எனக்கு  மடிக்கணினி வாங்கித் தந்தார்கள்.  இருவருக்கும் தனித்தனியாகக் கணினி இருந்ததால் நான் அவர்களுக்கு தொந்திரவு இல்லாமல் படிக்க ,எழுத முடிந்தது. இப்படி எழுத வந்ததில்  பெற்ற அன்பு உறவுகள் அதிகம்.

முதலில் எழுத வந்த போதே குழந்தை தட்டுத் தடுமாறி, தளர் நடை செய்யும் போது அதற்கு உற்சாகம் கொடுத்து நடக்கச் செய்வது போல்  சக பதிவர்கள் பெரும் ஊக்கம் கொடுத்தார்கள், சந்தனமுல்லை, ஆதவன், ஜலீலா,  வேதா இலங்கா திலகம், முத்துலெட்சுமி , திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் எல்லாம் விருதுகள் கொடுத்து மேலும் எழுதத் தூண்டியவர்கள்.
வல்லி அக்கா என்று  அன்பாய் அழைப்பேன் அவர்கள் மற்றும் ஆதவன், சந்தனமுல்லை, ஆசியா, எல்லாம் தொடர் கட்டுரை எழுத அழைத்து ஊக்கப்படுத்தினார்கள்.

கபீரின் கனிமொழி என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் சிறப்பு இடுகைகள் வழங்கினார். அதில் சிறப்பு விருந்தினராய்
கே.ஆர்.எஸ்   என்னும் Kannabiran Ravishankar
இந்த சிறப்பு இடுகை வழங்கினார்.
புதிரா? புனிதமா?? என்னும் வினாடி வினா விளையாட்டு! (கபீர் பற்றி 10 கேள்விகள்)  வினாடி வினா விளையாட்டு நடத்தினார்.  அதில் கலந்து கொண்டு சரியான விடைகளைச் சொன்னவர்கள்:
நா.சொக்கன்
முகிலரசி
கோமதி அரசு

வெற்றிப் பட்டியலில் இடம் பெற்று , ராமகிருஷ்ணவிஜயம்  இதழ்  ஒரு ஆண்டுக்குப் பெற்றேன்.  அதை மறக்க முடியாது.

போனமுறை அமெரிக்க வந்த போதுதான் தேவதை இதழ் ஆசிரியர் நவநீதகிருஷ்ணன்  என்னைத்  தொடர்பு கொண்டு,  குருந்தமலை குமரன் என்ற பதிவைத் தேவதையில் போட்டுக் கொள்ளவா ? என்று  அனுமதி கேட்டார் நம் ஆன்மீக கட்டுரை முதன் முதலில் பத்திரிக்கையில் பார்த்ததில்  மகிழ்ச்சி. மூன்று பதிவுகள் அதில் இடம் பெற்றது. மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் மார்கழி கோலங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி வலை உலகத்தில் எதையும் எதிர்பார்க்காது மற்றவர்களை  ஊக்கப்படுத்தி மகிழ்ச்சி கொள்ளும் இதயங்கள்  உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக  வை. கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சொல்ல வேண்டும்.  தொடர் விருதுகளாக நான்கு விருதுகள் கொடுத்து அசத்தினார்.  அவருக்கு 2012 ஆம் வருடம் கிடைத்தவிருதுகள் 12 .  அதை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டார். என் வலைத்தளம் பற்றிய செய்தி  தினகரன் செய்தித்தாளின் இணைப்பான வசந்தம் இதழில் இடம் பெற்ற போது எனக்கு தெரியாது . அதை எனக்கு மெயில் அனுப்பினார். முதல் பாராட்டு, வாழ்த்து அவர்களுடையது.


இப்படி அன்பாய் வந்து தகவல் தெரிவித்து அதைப் பார்க்க அந்தப் பக்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினார்.

 சகோதரி ஜலீலாவும் வாழ்த்துடன் அந்த பக்கத்தை புகைப்படம் எடுத்து  இணைத்து அனுப்பி இருந்தார்.

வலைச்சரத்தில் என் பதிவுகள் இடம் பெறும்போது எல்லாம் முதலில் வந்து தகவல் தந்து வாழ்த்தும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், என் பதிவு சிலருக்கு படிக்கமுடியாமல் துள்ளிகுதித்தபோது தானாக முன் வந்து அதைச் சரி செய்ய ஆலோசனைகள் வழங்கினார் தனபாலன் . ஹுஸைனம்மாவும் அப்படி துள்ளிக்குதிக்கும் துடுக்கை அடக்க உதவியவர்கள். பதிவுகள் வரவிலலை என்றால் நலமா எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கடிதம் வந்து விடும், ஹுஸைனம்மாவிடமிருந்து.

முன்பு எல்லாம் பதிவுகளில் போட்டோ இணைக்க எனக்குத் தெரியாது. கற்றுக் கொண்ட பின், போட்டோவுக்காகப் பதிவு போல் ஆகி விட்டது. ஒரு பதிவுக்கு ஒரு படம் தேவைப் பட்டது - கிடைக்கவில்லை என்றவுடன் ராமலக்ஷ்மி அதை அனுப்பிப் போட்டுக் கொள்ளச் சொன்னார்கள் (குண்டு காக்கா கதையில் குண்டாய் ஒரு காக்காய் தேவைப்பட்டது)

ஆதி சொன்னது போல் எந்த ஊருக்குச் சென்றாலும் இந்த ஊரில் இந்த பதிவர் இருக்கிறாரே  அவர்களை சந்திக்க முடியுமாஎன்று எண்ணத்தோன்றுகிறது. இரண்டு முறை ஆதி ,வெங்கட்  பதிவர் தம்பதிகளை டெல்லியில்  சந்தித்து மகிழ்ந்தோம்.

 ஒருமுறை பெங்களூருக்குச் சென்றிருந்தபோது அங்கு நடந்த பதிவர் சந்திப்பில் என்மகளோடு போய்க்கலந்துகொண்டேன்.அப்போதுதான் நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து இருந்தேன். அப்போது தான் திருமதி .ராமலக்ஷ்மி  அவர்கள்  அறிமுகம் ஆனார்கள். இனிமையான அன்பான  பெண்மணி. இன்றும் மெயில் மூலமும், தொலைபேசியிலும் உரையாடிக் கொள்வோம்.  சென்னை செல்லும் போதேல்லாம் வல்லிசிம்ஹன் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.
அன்பானவர். கோவையில் மங்கை, யாழினி , வின்சென்ட்ஆகியோரைச் சந்தித்து இருக்கிறேன்.

கடகம் என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ஆயில்யன், சென்ஷி, அபி அப்பா, துளசி கோபால் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். மதுரையில் சீனாசார், தருமி, மற்றும் புதிய பதிவர்களை சந்தித்து இருக்கிறேன்.  மயிலாடுதுறையில் ஆயில்யனின்  திருமண வரவேற்பில்  நிறைய பதிவர்களைச் சந்தித்தேன்.

எங்கள் பிளாக் வைத்து இருக்கும் ஸ்ரீராம் ,திருக்கடையூருக்குச் செல்ல மயிலாடுதுறை வந்த போது, அவர்களுக்கு ,கோமதி அரசு ஊர் அல்லவா ! என்ற நினைவு வந்ததாம். சங்கரன் கோவில் கோமதி அம்மனைப் பற்றி பதிவை திருமதி ராஜராஜேஸ்வரி எழுதிய போது கோமதி அரசு நினைவுக்கு வந்தார் என்று கோபாலகிருஷ்ணன் சார் சொல்லி இருந்தார்.  இப்படி எல்லோருக்கும் உறவினர்கள் போல்  வலை உலக நட்பு உறவுகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அடிக்கடி வந்து பின்னூட்டங்கள் இடுபவர்கள் வரவில்லை என்றால் அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது சகபதிவர்களிடம்.   திருமதி.லக்ஷ்மி அவர்கள் நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை அவர்களை அமைதிச்சாரலிடம் விசாரித்தேன்.

கணினி அறிவு அவ்வளவாய் இல்லை என்றாலும் நானும் ஏதோ எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

வலைத்தள நண்பர்களும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
எல்லோருக்கும் என் நன்றி.

ஒரு மாதமேயான என் பேரன் வருங்காலத்தில் எனக்கு கற்றுக் கொடுப்பான் என்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது  அவனுக்கு நான்கு வயது . அவனிடம் நிறைய  கற்றுக் கொள்கிறேன். அவன் எப்போதும் ஐபேடும் கையுமாய் இருக்கிறான். எங்களுக்கு நிறைய வித்தைகள் அதில் காட்டுகிறான். அவன் இங்குள்ள நூலகம் போய் அங்குள்ள கணினியில் அவனுக்கு பிடித்தவைகளைப் பார்ப்பது, புத்தகங்கள் ,  கதை , கார்ட்டூன் சிடிகள் எல்லாம் எடுத்து வருவது செய்கிறான். தாத்தா உனக்கும் புத்தகம் எடுத்துக்கோ என்றான் தாத்தா நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து இருக்கிறார்கள்.
                         புத்தகம் தேடும் தாத்தா

                                 அன்பு பேரன்இப்படி கணினி கற்றுக் கொண்டதால் கற்றதும், பெற்றதும் இனிமையான அனுபவங்கள். எனக்குக் கணினி அறிவு குறைவு,  பெற்றவை நிறைய நட்புகளின் அன்பு.  நம்மாலும் எழுத முடிகிறது , நம் பதிவைப் படிக்கவும் அன்பர்கள் இருக்கிறார்கள் என்ற மனநிறைவு ஏற்படுகிறது.
என்னை தொடர் பதிவு எழுத அழைத்த ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி.

தங்கள் கணினி அனுபவத் தொடரை  எல்லோரும் எழுதி இருப்பார்கள் என நினைக்கிறேன்.   கணினி அனுபவங்களைத் தொடர விரும்புவர்கள் எழுதலாம்.

                                                            வாழ்க வளமுடன்.

                                                  -----------------------------------------------

வெள்ளி, 5 ஜூலை, 2013

சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல் !

இந்த முறை திருச்செந்தூருக்கு என் கணவரின் தம்பி பேரனுக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் விழாவிற்குப் போனோம்.


நாழிக் கிணறு  போகும் பாதையில் புதிய  அலங்கார வளைவு - தோரண வாயில். அதில் ஐயப்ப பக்தர்களை மகிழ்விக்க  இரு புறமும் புலிகளுடன்  அமர்ந்து இருக்கும் திருக்கோலத்தில் ஐயப்பன். ஐயப்ப பக்தர்கள் தலையில் இருமுடியைத் தாங்கி நிற்கும் கோலம்.  மறு பக்கத்தில்  பிள்ளையார், சிவன். பார்வதி, முருகன் குடும்ப சகிதமாய் காட்சி தருகிறார்கள்.
குழந்தைக்கு முடி கொடுக்கும் இடத்தில் குழந்தை அழுதால் பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுப்பார்கள் என்று சுத்தி சுத்தி வரும் பஞ்சு மிட்டாய் பையன். பாவம்.  காலம் மாறி விட்டது இதை வாங்கி கொடுக்காமல் அழும் குழந்தைகளுக்கு  பைவ் ஸ்டார் சாக்லேட்  கொடுக்கிறார்கள் சிலர்.

  இந்த மாதிரி இடத்தில் முடி வெட்டவே தயங்கும் இளைய சமுதாயம் இப்போது,

 புது பிளேடு, தலையில் ஊற்றும் தண்ணீர்

 முடி வெட்டுபவர் ஒரு வாளியில் வைத்து இருக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்று கையில் மினரல் வாட்டரை தலையில் தடவி முடி வெட்டச் சொல்லும்  சிலர்.
பின் குளித்து முடித்து காது குத்தச் சென்றால்.” ஏன் இப்படி குழந்தையை கஷ்டபடுத்துகிறீர்கள்? பேசாமல் அழகு நிலையத்தில் காது வலி இல்லாமல் குத்தி விடுவார்களே என்று சொல்பவர்கள் சிலர்  பெரியவர்களின்  ஆசைக்கு இங்கு வந்து விட்டார்கள். ஆனால் ஆசாரி மிகவும் திறமை வாய்ந்தவர் ஒரு நிமிடத்தில் காது குத்தி விடுகிறார்.


எல்லாம் நிறைவான பின்   இறைவனை கண்டு  வணங்கி வெளியில் வந்தால் யானை வந்து சுவாமி மண்டபத்துக்குள் வந்து கால் மடக்கி வணங்குகிறது பின் வெளியில் செல்கிறது.
அதன் பின் ஒருவர் மாட்டை  சுவாமிக்கு கொடுக்க கூட்டி வந்தார். மாட்டுக்கு உடம்பில் கொஞ்சம் வீங்கி இருக்கிறது. அதனால் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம் என கொடுக்கிறாரா தெரியவில்லை.


கடற்கரைக்கு செல்ல எங்களுடன் வந்தவர்கள் வரட்டும் என்று காத்து இருந்த போது   தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், பல நடிகர்களின் குரல்களில் பேசும் திறமையானவரும், புதிய தலைமுறை தொலைக்காட்சியில்  பல ஊர்களின் சிறப்பு, அந்த ஊர்களின்  சிறப்பான சமையல் பற்றி எல்லாம் பேசும் ஒருவர் தன் நண்பருடன் கோவிலுக்கு வந்தார். நாங்கள் அவருடன் பேசினோம் ”சாமி தரிசனம் ஆச்சா ? ”என்று கேட்டார்,” எங்களுக்கு ஆகவில்லை திரை போட்டு இருக்கிறது, அலங்காரம் ஆனவுடன் பார்ப்போம்., அதனால் காத்து இருக்கிறோம்” என்றார். அவரை அவர் நண்பருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் . எங்கள் குடும்பத்தில் அவர் பேரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள்., அவர் கல்யாணத்தை விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டுக் கல்யாணத்தில் காட்டினார்கள்.அவர் யார் என்று  உங்களுக்கு தெரிகிறதா? பாருங்கள். குறுந்தாடி வைத்து இருப்பவர்.
                                                                                                                                                                         இவர் யார் என்று சொல்லுங்கள்  (குறுந்தாடி வைத்து இருப்பவர்)


கடற்கரை செல்லாமல் பயணம் நிறைவு பெறுமா ? உடனே எல்லோரும் கடற்கரை சென்றோம்.


அங்கு கண்ட காட்சி! வரிசையாக ஆண், பெண்கள் கடற்கரை மணலில் இரு கைகளாலும் எதையோ தோண்டிக் கொண்டு இருந்தார்கள்.இறைவனை தேடி தேடி இளைத்தனே என்று கேள்வி பட்டு இருப்பீர்கள் !
இது போல் ஒரு தடவையும் நாங்கள் கண்டது இல்லை.   பெண்களும் ஆண்களும் கைகளாலும், சல்லடைகளாலும் கடற்கரையில் ஏதோ தேடிக் கொண்டே இருந்தார்கள். தேடும் போது அவர்கள் கண்கள் நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே இருந்தன. கடலில் குளிப்பவர்கள் தங்கள் ஆடைகளை வீசி எறியும் போது ஓடி சென்று அதை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் இப்படி யாரும் தங்கள் ஆடைகளை கடலில் வீசி எறிய மாட்டார்கள். திருநள்ளாறில் தான் அப்படிப்பார்த்து இருக்கிறேன். அங்கு அந்த துணிகளை வேறு யாரும் எடுக்க முடியாது அதற்கு உரிமை பெற்றவர்கள் மட்டும் தான் எடுத்து செல்வார்கள், லாரிகளில்.

”ஒரு அம்மாவிடம் என்ன தேடுகிறீர்கள் ”என்று கேட்டால் ”ஒன்று மில்லை சும்மா ”என்றார்கள். ஒரு அம்மா ”சிப்பி” என்றார்கள். அதை இப்படியா தேடுவார்கள்! கைகளால் கடல் மண்ணைத் தோண்டித் தோண்டிக் குழி செய்கிறார்கள். அதில் அலை நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறது உடனே அதில் ஏதாவது இருக்கா எனத் தேடுகிறார்கள். சல்லடை வைத்து இருக்கும் பையன்கள் அலை வரும் போது சல்லடையை நீட்டுகிறார்கள் பின் அதைப் பார்த்து விட்டு மீண்டும் கடலில் விட்டுவிடுகிறார்கள்.  முகம் ஏமாற்றத்தால் சுருங்கி போகிறது. அவர்கள் முகம் மலருமா ஏதாவது அவர்கள் தேடிய பொக்கிஷம் கிடைத்து அவர்கள் முகம் மலருமா அப்போது அந்த மலர்ந்த முகத்தை புகைப்படம் எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஆசை நிறைவேற வில்லை. ஏதோ விலை மதிப்பு உள்ள பொருள் கிடைக்கும் போல! அது தானே இப்படி கைகள் வலிக்க வலிக்க தோண்டுகிறார்கள்.  பழைய சினிமாக்களில் புதையல்  எடுக்க தோண்டுவார்களே கண்களில் ஆசை மின்ன அது போல் அல்லவா தோண்டுகிறார்கள்.

பின் போனமுறை திருச்செந்தூர் போய் வந்த பதிவில் நட்சத்திர மீன் படம் போட்டு இருந்தேன். முன்பு கொஞ்சம் பெரிய சிறுவர்கள் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் கடலில் விட்டு விடுங்கள் உயிர் இருக்கிறது என்றேன். விட்டு விட்டார்கள். இந்த முறையும் ஒரு அண்ணன், தங்கைகளுக்கு கிடைத்தது நட்சத்திர மீன். அவர்களிடமிருந்ததை புகைப்படம் எடுத்துக் கொண்டு கடலில் விட்டு விடுங்கள் என்றால் இருவரும் மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்.


பிறகு  வேறுஒரு இடத்தில் நட்சத்திர மீன், கரும்பின் அடி பாக துண்டு போல் வேர் எல்லாம் நீட்டிக் கொண்டு இருப்பது போல் ஒரு ஜீவராசி, பெயர்
தெரியவில்லை,அப்புறம் முள் முள்ளாக  ஒரு ஜீவராசி. எல்லாம் பார்த்தோம்.  காதணி விழாவிற்கு வந்த அனைத்து தரப்பினரும் (எல்லா வயதினரும்)கடலில்  காலகளை நனைத்து அலைகள் வரும் போது எல்லாம் சிரித்து மகிழ்ந்தோம். பெரிய அலை வருது என்று கத்தும் போது அருகில் வரும் போது சின்னதாகி விடும் ஏமாற்றம் ஆகி விடும். சின்னதாக வருகிறது என்று நினைக்கும் போது வேகமாய் நம் இடுப்புவரை நனைத்து செல்லும். கடல் குழந்தை நம்மிடம் ஓடி பிடித்து விளையாடியது. எல்லை இல்லா  மகிழ்ச்சி கொடுத்தது. சிறிது நேரம் என்றாலும் அது கொடுத்த இன்பம் ஏராளம்.
மயிலாடுதுறைக்குக் கிளம்பியாச்சு


விழாவுக்கு வந்த அனைவரும் மயிலாடுதுறை வந்தார்கள், திருக்கடையூர் போக வேண்டும் என்று. பேரன்  ”பிறந்த நாள், ஆயுஸ் ஹோமம் , மொட்டை அடிக்கிறது, காது குத்து என்றுமூன்று நாளாய் என்னைப் படுத்தி விட்டீர்கள் நான் ஜாலியாக பெரிய தாத்தாவீட்டில் ஊஞ்சலில் ஆடுகிறேன் யாரும் என்ன தொந்திரவு செய்யாதீர்கள் ”என்று  சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல்.


                                                         வாழ்க வளமுடன்.

திங்கள், 1 ஜூலை, 2013

நாலும் ஐந்தும் !


மாமனார் அவர்கள்


அம்மாவீடு - புதுப்பொலிவுடன்


எங்கள் வீடு

தற்காலிக பூஜை அறை

தங்கை கொடுத்த  மாவில்   தோசை

சாதம் குக்கரில்


என்ன ஆளையே காணோம் என்று நினைத்தீர்களா?

 இந்தப் பதிவு, நான் பதிவுலகிற்கு வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது ஆண்டு துவக்கத்தில் வருகிறது.. 

2009 ஜுன் 1ஆம்  தேதி என் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. 

ஊர்ப்பயணங்களால் ஆண்டு நிறைவையும் , ஆரம்பத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

கோவை,  மதுரை,  திருச்செந்தூர், திருநெல்வேலி, என்று பயணங்கள். அதனால் தான் வலைப் பக்கமே  வரவில்லை.  கோவையில் மாமனார் அவர்களைப் பார்க்கப் போனோம்.  பின் அங்கிருந்து மதுரையில் எங்கள் சொந்தவீட்டில் கொஞ்சம் புதுக் குடித்தனம். 

புதுக்குடித்தனமா? என்று கேட்பவர்களுக்கு -

1986 ல்   நாங்கள் மதுரையில் வீடு வாங்கினோம்.  வாங்கியதிலிருந்து வாடகைக்கு விட்டு விட்டதால்   அதில் இருந்ததே இல்லை. மாடியில் ஒரு அறை எங்களுக்கு என்று கட்டி வைத்து இருப்பதால், மதுரை போனால் அதில் தங்கிக் கொள்வோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எனது தம்பி, தங்கைகள், அண்ணன் வீடுகளில்  நன்றாக மகிழ்ச்சியாக சாப்பிட்டுக் கொள்வேன்.

இந்த முறை மழை பொய்த்துப் போனதால் வீட்டில் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை, கார்ப்பரேஷன் தண்ணீரும் வரவில்லை. நாங்களே தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் தொட்டியில் ஏற்றி பயன்படுத்தினோம்.   அதனால் வாடகைக்கு விட வேண்டாம், பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம்.    வீடு காலியாக இருக்கும்போது நாம் போய் சமைத்து சாப்பிடலாம் என்று முடிவுசெய்தார் என் கணவர்.  எனக்கு அதிர்ச்சி! பின் இத்தனை நாளும் ,ஊரிலிருந்து வந்து இருக்கிறேன் என்றால்   உறவினர்கள் எல்லாம் ஆளுக்கு ஒவ்வொரு நாள் என் வீட்டில் இன்று சாப்பாடு என்று முறை வைத்துக் கொண்டு நம்மை உபசரிப்பது வழக்கம். நானும் ஜாலியாக இருப்பேன் அது முடியாமல் என்னை அங்கு போயும் சமைக்க சொன்னால் அதிர்ச்சி வராதா?

 பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று , போனவுடன் இரவு உணவு நம் வீட்டில் என்று சொல்லி விட்டார்கள். அவசரத்திற்கு தண்ணீர் சுடவைக்க  என்று  இண்டக்ஷன் ஸ்டவ் வாங்கி வைத்து இருந்தேன். அதில் முதலில் பால் காய்ச்சினோம். சாமி படம் ,விளக்கு என்று கொண்டு போனதை வைத்து வணங்கினோம். ஒரு தங்கை கோலம் போட்டாள். ஒரு தங்கை விளக்கு ரெடி செய்தாள்  முன்பே தங்கை, வீட்டைச் சுத்தம் செய்து வைத்து இருந்தாள்  நல்ல முறையில் பால்காய்ச்சி எல்லோருக்கும் கொடுத்து, பிள்ளையார் சுழி போட்டு விட்டேன், என் சமையலுக்கு. கரண்ட் அடுப்புக்கு இலவசமாய்,ஒரு தோசைக்கல், குக்கர், ஒரு வாணலி கொடுத்து இருந்தார்கள்   அதுபோக  ரைஸ் குக்கர் மற்றும் கொஞ்சம் தட்டுமுட்டு  சாமான்கள் எடுத்து சென்று இருந்தேன். பலசரக்கு சாமான்கள் வேறு வாங்கி  ஆரம்பித்து விட்டேன், வெற்றிகரமாய் என்  நளபாகத்தை.

இரவு தேங்காய் சட்னி , தோசை சுட்டு கொடுத்து விட்டேன்.பழைய மிக்ஸி ரிப்பேர் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.

அண்ணி,தங்கைகள் எல்லாம் ஊரிலிருந்து வந்த என்னை  ஏன் சிரமப்படுத்துகிறீர்கள் ஜாலியாக இருந்து விட்டு போகட்டுமே! என்று என் கணவரிடம் கேட்ட போது,   புன்சிரிப்பாய் எப்போதும் தான் உங்கள் வீடுகளில் சாப்பிடுகிறோமே! இப்படி  ஒரு மாறுதலுக்கு என்று சொல்லி விட்டார்கள்,  என்னால் தப்பிக்க முடியவில்லை.

கரண்ட் கட் ஆகுமே !  கரண்ட் அடுப்பை மட்டும் நம்பி பயனில்லையே  ! என்று என் தங்கை, கையில் எடுத்து செல்லும்  சிலிண்டர் அடுப்பை  கொண்டு வந்து தந்தாள். அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கரண்ட் இல்லாத போது அதில் இட்லி செய்தேன்.

இப்படி இரண்டு நாள் போயிற்று என்  மேல் கருணை வைத்த மின்சாரம், ஒரு நாள் எங்கள் வீட்டில் மட்டும் போய்விட்டது!  பியூஸ்!-- 

 வீட்டிற்குள் என்றால் என் கணவரே பார்த்து விடுவார். அது கம்பத்தில் போய் விட்டது. அன்று  சனிக் கிழமை இரவு. மின்துறையில் இருந்து யார் வருவார்கள்? அடுத்த நாள் ஞாயிறு -யாரும் வரமாட்டார்கள். எதற்கும்   வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் எழுதி வைக்க வேண்டும் என்றார்கள். அப்போது தான் பழுது பார்ப்பவர்கள் வந்து பார்ப்பார்கள் என்றார்கள்.   

யாரும் வரவில்லை அப்படியும். மறுநாள் போய் கேட்டால், இப்போது எல்லாம் இந்த கடைக்கு வந்து பார்க்க வருவதே இல்லை  என்றார் கடையில் இருந்த  ஒரு பணியாள்.

 மின்சார அலுவலகத்திற்கு சென்று எழுதி வைத்து விடுங்கள் என்று சொன்னார்கள் .எனக்கு வழியே தெரியாது. ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டு போனால், ”மேல் மாடியில் நோட்டு இருக்கும் அதில் என்ன கோளாறு  என்று எழுதி வைத்து விட்டுப் போங்கள்” என்றார்கள். நோட்டை எடுத்துப் பார்த்தால், அதில் பலர் , ”எங்கள் வீட்டில் மின் இணைப்பு தடை பெற்று மூன்று நாட்கள் ஆகி விட்டது,  தயவு செய்து  மின்சாரம்  இயங்க உதவ வேண்டும்” என்று எழுதி  முகவரி போன் நம்பர் எல்லாம் கொடுத்து  இருந்தார்கள். அதைப்பார்த்து நானும் காப்பி அடித்து அதேபோல் எழுதி வைத்து விட்டு வந்தேன்.  அப்படியும் அதற்கு மறுநாள் வந்து தான் சரி செய்தார்கள். 


மின்துறையில் இருந்து வந்தவர் ”எல்லாம் பழைய காலத்து ஒயர். அதை எல்லாம் மாற்ற வேண்டும். அப்போது தான் போஸ்டில் மின்தடை ஏற்படாது ”என்றார்.  புது ஒயர் போடப்பட்டது. பியூஸ் போனதும் ஒரு நன்மைக்குத்தான். அதனால் தான் புது ஒயர் மாற்றப்பட்டது.

அப்புறம் என் சமையல் என்னாயிற்று என்று கேட்டீர்களா? அது அவ்வளவுதான். மறுபடியும் ஜாலியாக அண்ணி வீடு, தங்கை வீடு , தம்பி  வீடுதான்.

அண்ணி  அம்மா வீட்டை வாங்கி  மறுபடியும் கொஞ்சம்  ரிப்பேர் செய்து மாடி கட்டி இருக்கிறார்கள். பின்னால் உள்ள பரண் அறையில் அம்மாவின் பழைய சாமான்கள் , பழைய போட்டோக்கள், பழைய மர்பி ரேடியோ எல்லாம் இருந்தது. நாங்கள் விளையாடிய பழைய இரும்பில் செய்த விளையாட்டு சாமான்கள்,   நிறைய இருக்கும்.  ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தான் இருக்கிறது. செப்பு சாமான்கள்  இருந்தன.  எல்லோரும் எடுத்துக் கொண்டது போக மீதி இருந்தன.  அது என் பெரிய தம்பிக்குரிய  பங்கு.  அவன் வேறு ஊரில் இருப்பதால் அண்ணி அதைப்  பின்கட்டில் ஒரு அறையில் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். அதை எல்லாம் அந்த அறை வெள்ளை அடிக்கப் படுவதால் வெளியே எடுத்து வைத்தார்கள் . அதை எல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டேன். அம்மாவின் அந்தக்கால  இலட்சுமி படம் போட்ட தகர உண்டியல்,  அதில் சேமித்து வைத்து இருந்த பழைய நாணயங்கள், பழைய டெலிபோன், பழைய விளக்குகள், அம்மா பயன்படுத்தும் தட்டு, சீனிச்சம்புடம், டபரா , கிண்ணங்கள் என்று அவற்றை போட்டோ எடுத்துக் கொண்டேன்.  என் அப்பாவின் அலுவலக போட்டோக்கள், தாத்தா, பாட்டி, போட்டோக்களை எல்லாம்  எடுத்துக் கொண்டேன் எனது கேமராவில் .

ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டியதை நினைவாக  வைத்து இருக்கும் போது நாம் அதை எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லவா ?  எனக்கு தேவையானதை அம்மா இருக்கும் போதே  ஆலபத்திலிருந்து கேட்டு வாங்கி கொண்டேன்.  அவரவர்கள் (தம்பி,தங்கைகள்) அம்மா அப்பாவுடன் இருக்கும் போட்டோக்களை ,அம்மா முன்பே அவரவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்..


அப்புறம் திருந்செந்தூருக்கு  என் கணவரின் தம்பி பேரனுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவிற்கு போய் இருந்தோம்.  அங்கு உள்ளதை தனிப் பதிவாய் போடலாம் என நினைத்திருக்கிறேன்.. கடற்கரை அனுபவம் மிக அதிகம்  இந்த முறை.அங்கு செப்பறை  கோவில் , இராஜவல்லிபுர அகிலாண்டேஸ்வரி கோவில்  எல்லாம் போனோம் .  அழகிய கோவிலகள்.  இயற்கை வனப்பு மிகுந்த இடம்.

இப்போது மீண்டும் கோவை பயணம் - ஒரு  மணிவிழாற்கு போகப் போகிறேன். அதற்கு இடையில் உங்களுடன் இந்த சந்திப்பு. 

                                      அம்மாவின் பொக்கிஷங்கள்.

இரும்பு விளையாட்டு  சாமான்கள் நாங்கள் சிறு வயதில் விளையாடியது

அப்பா கீழ் வரிசையில் முதலில் அமர்ந்து இருக்கிறார்கள்எங்கள் வீட்டு பழைய ரேடியோ பெட்டி
மரத்தில் செய்த பாத்திரம் திருவனந்தபுரத்தில் தாத்தாஅம்மாவுக்கு கொடுத்தது, மரவை என்று பேர்


அம்மா வைத்து இருந்த விளக்குகளில் கொஞ்சம், தம்பியின் பங்கு

அம்மாவின் கூஜா
அம்மா பயன்படுத்தும் தட்டு, சீனிச்சம்புடம், டபரா , கிண்ணங்கள் 
அப்பா நாலாவது வரிசையில்  நாலாவதாக நிற்கிறார்கள்


அப்பாவின் அப்பா
அப்பா

அப்பாவின் அப்பா, அம்மா

தம்பி வைத்து இருந்த உண்டியலில்  பழைய நாணயங்கள்

உண்டியல்

மதுரையில் எங்கள் பகுதி முழுவதும் தண்ணீர் கஷ்டம் . எங்கு பார்த்தாலும் காணப்படும் காட்சி.

நல்ல மழை பெய்து மதுரையில் தண்ணீர் கஷ்டம் நீங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு திருநெல்வேலிப் பயணம் தொடர்ந்தோம்.


                                                வாழ்க வளமுடன்