நாங்கள் எந்த வருடத்திலிருந்து கொலுவை வைக்க ஆரம்பித்தோம் என்று பேசிக் கொண்டு இருந்தோம். முதலில் கொலு வைக்க ஆரம்பித்தபோது திருவெண்காட்டில் இருந்தோம்.1980 ம் வருடம் ஆரம்பித்தோம்.
பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம் பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.
ஒரு வயதான தாத்தா பண்ருட்டியிலிருந்து பொம்மைகள்
கொண்டு வருவார், அவரிடம் முதன் முதலில் பிள்ளையார், சிவலிங்கம்
நந்தி மூன்றும் 12 ரூபாய்க்கு வாங்கினேன்.
எங்கள் அம்மா வீட்டிலும் கொலு உண்டு, மாமியார் வீட்டிலும் கொலு
வைப்பது உண்டு. விடுமுறை இல்லை என்று நவராத்திரிக்கு ஊருக்கு
வரமாட்டார்கள் என்னவர். குழந்தைகளுக்கு நவராத்திரி கொலுவைப் பற்றி
தெரிய வேண்டுமே! இப்போது போல் காமிராவில் கொலுவை படம் எடுத்து
உடனே அனுப்பும் வசதி எல்லாம் கிடையாதே! கொலு வைக்க வேண்டும்
என்ற எண்ணம் திடீர் என்று தான் வந்தது.பக்கத்து வீட்டில் ஒரு மாமி வீட்டில் முன் வாசலில் மண் கொட்டி வைத்து இருப்பார்கள். அதில் குழந்தைகளை விளையாட அழைத்து செல்வேன். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும்போது பண்ருட்டி தாத்தா பொம்மைகளுடன் வந்தார். பொம்மை வேண்டுமா? கொலு பொம்மை என்று கேட்டு மாமியின் வீட்டு திண்ணையில் ஓய்வாய் உட்கார்ந்து தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். அப்போது சும்மாதான்
பொம்மைகளைப் பார்வை இட்டேன். மாமி, தாத்தாவிடம் ’நாங்கள் கொலுவைப்பது இல்லை எங்களுக்கு வேண்டாம்’ என்றார்கள்.
நான் ’எங்கள் அம்மா வீட்டில், அத்தை வீட்டில் எல்லாம் கொலு வைப்பார்கள்’ என்றவுடன் மாமி,’ நீயும் தான் வையேன்’ என்றார்கள். உடனே ஆசை தொற்றிக் கொண்டது. மூன்று பொம்மைகளை எடுத்து வைத்து விட்டேன். என்
கணவரிடம் கேட்க வேண்டுமே! கொலு வைக்கலாமா என்று கேட்க
வேண்டுமே என்ற தயக்கம் இருந்தாலும் ஆசை வென்றது.என்ன சொல்லப்
போகிறார்கள் சம்மதித்து விடுவார்கள் என்று எனக்கு நானே சமாதானம்
செய்துகொண்டு வாங்கிவிட்டேன்.
தாத்தாவும் ’மூன்று போதுமா ’என்று கேட்டார், ’அடுத்த வருடம் தான் இனி
வருவேன்’ என்றார். ’போதும் அடுத்தவருடம் வாங்கிக் கொள்கிறேன்’ என்று
சொல்லி விட்டேன், நிறைய வாங்கும் ஆசையை அடக்கிக் கொண்டு.
எல்லாப்பொம்மையுமே அழகு. ’என்னை வாங்கிக் கொள்’ என்றது.
மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த அப்பாவிடம், குழந்தைகள் அப்பா
கொலுபொம்மை கொலுபொம்மை என்று குதித்து கும்மாளமிட்டனர். பெண்ணுக்கு விபரம் தெரியும்: பையனுக்கு விவரம் புரியாது இருந்தாலும் அக்காவுடன் சேர்ந்து குதித்து மகிழ்ந்தான்.என் கணவர் பொம்மைகளைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி,’ இவ்வளவு பெரிதா?’என்றுதான்.
’எங்கள் வீட்டில் இவ்வளவு பெரிய பொம்மையே கிடையாது. நீ என்ன
இவ்வளவு பெரிதாக வாங்கி இருக்கிறாய்?’
’நாலு ரூபாய் தான் ஒரு பொம்மை’ என்றேன். ’நான் ரூபாய்க்கு சொல்லவில்லை இவ்வளவு பெரிதாக வாங்கிவிட்டாயே என்று தான் கேட்டேன்’ என்றார்கள்.
எப்படியோ தாத்தாவும் ’பொளைச்சு கிடந்தால் வரேன் தாயி அடுத்தவருடம் என்று சொல்லிச் சொல்லியே வருட வருடம் பொம்மைகளை கொண்டு வந்து கொடுத்தார். நான்கு வருடங்கள்.
ராமர், லக்ஷ்மணர்,சீதை,அனுமன்செட், மயில்பீலியுடன் பெரிய கிருஷ்ணர்(மயில்பீலியை தனியாக கழற்றி மாட்டலாம்) தங்க கலரில் இரண்டு பாவை விளக்குகள் , பெருமாள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை , கடிகாரம், செட்டியார், புத்தர், வெங்காடஜலபதி என்று அவரிடம் வாங்கியது எல்லாம் மிக அழகு.
அப்புறம் நாங்கள் மாயவரம் வந்து விட்டோம்.அங்கு வந்த பின் கைலாய குடும்ப செட் -சிவன், பார்வதி, பிள்ளையார்,நாரதர் மாம்பழம் கொடுக்கும் காட்சி. மற்றும் மீனாட்சி வாங்கினேன். நால்வர் செட் வாங்கினேன்.
(அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்.)
முன்பு வாங்கிய சிவலிங்கம் மதுரை சொக்கநாதர் ஆனார். ஆமாம்! மீனாட்சி பொம்மை வாங்கி அதன் அருகிலே வைத்து மீனாட்சி சொக்கநாதர் ஆனார்.
என் கணவரின் அண்ணா வீட்டில் முன்பு கொலு வைக்க மாட்டார்கள்
அவர்கள் மூன்று வருடம் எங்கள் கொலுவுக்கு வந்தார்கள்( அப்புறம் அவர்கள் வீட்டிலும் கொலு வைக்க ஆரம்பித்து விட்டதால் வரவில்லை) அவர்கள் வாங்கி தந்த அன்ன படகில் சரஸ்வதி, லட்சுமி, ராதாகிருஷ்ணர் ஊஞ்சல் ஆடும் காட்சி, நாதஸ்வர செட் இவைகளுடன் பொம்மைக் குடும்பம் பெரிதானது.
அம்மா, தங்கைகள் ஒரு முறை வந்தார்கள் அவர்கள் சிவன், பார்வதி. ஆறு
முகர் ஆறு தாமரைகளில் இருக்கும் பொம்மை, கார்த்திகை பெண்கள்
அறுவர் வாங்கி வந்தார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன போது நம் வீட்டில் செட்டியார் மட்டும் இருக்கிறாரே! என்று செட்டியார் அம்மாவும் வாங்கினேன் பலவருடங்களுக்கு பிறகு செட்டியாருக்கு வாழ்க்கைத் துணை கிடைத்தார்.
தெரிந்தவர்கள் கொலுப் பார்க்க வரும்போது குபேர பொம்மை,
பிள்ளையார், சரஸ்வதி, கிருஷ்ணர், பெரிய யானைகள் எல்லாம் வாங்கித்
தந்தார்கள். அவை வாசலில் வரவேற்பது போல் நித்திய கொலுவானது.
அதை வைக்கப் பெட்டியில் இடமில்லை. அந்த நித்தியகொலு படம் துளசி கோபால் அவர்கள் மாயவரம் பதிவர் சந்திபைப் பற்றி எழுதிய இடுகையில் இடம் பெற்றது.
இனி வருபவர்களிடம் தயவு செய்து வரும்போது பூ வாங்கி வாருங்கள்
போதும் பொம்மைகள் வேண்டாம் வைக்க இடமில்லை என்று அன்புக்
கட்டளை இட்டேன். அப்படியும் சிலர் ,’பெரிதாக வாங்கினால் தானே வைக்க
இடமில்லை சின்னதாக வாங்கி வருகிறோம் ’என்று வாங்கி வருவார்கள்.
நான் போகும் ஊர்களில் எல்லாம் கொலுவுக்கு என்று சேர்த்த கலைப்பொருட்கள் ஏராளம்.
நீ பொம்மை வாங்கி விடுகிறாய் அதை எடுத்து அடுக்குவது, படிகளை செட்
செய்வது, மீண்டும் அதை பேக் செய்வது எல்லாம் பெரிய வேலை என்று
வேலை அதிகமாகிறது என்று என் கணவர் அலுத்துக் கொண்டதால்
இப்போது வாங்குவது இல்லை. அப்படி வாங்கினாலும் கொலுவில்
பொம்மை கொஞ்சமாய் இருக்கும் வீடுகளுக்கு கொடுத்து விடுவது என்று
இருக்கிறேன்.
அம்மா ஒயரில், கம்பளி நூலில் செய்த பொம்மைகள் புதிதாக செய்து
கொடுப்பார்கள் வருட வருடம். அவை கொலுவில் இடம்பெற்று நெஞ்சில்
அவர்களின் நினைவை எப்போதும் தந்து கொண்டு இருக்கிறது .
மகனின் ஓவியங்கள், மருமகள், மகள், பேரன், பேத்திகள் என்று அவர்களின்
கைவேலைகள் கொலுவை அலங்கரிக்கிறது.
சென்ற வருடம் மாயவரத்தில் மகன் மருமகள், பேரன் வந்து உற்சாகமாக கொண்டாடிய கொலு படங்கள் இவை:-
மகன் செய்த சாக்பீஸ் கோவில், அப்பா செய்த மலைக் கோவில் அருவியுடன்.
மகன் , மருமகள் சேர்ந்து செய்த பூங்கா ரயில்
கணவர் செய்த சரஸ்வதி அம்மன்
நவராத்திரியில் போட்ட கோலங்கள்
பன்னீர் தெளித்து விட்டேன் . சந்தனம், குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள் !
கொலுவுக்கு வந்து கொலு பார்த்தவர்களுக்கு ஜூஸ், பிஸ்கட் , எடுத்துக் கொள்ளுங்கள். மற்றும் வெற்றிலைபாக்கு ,மஞ்சள் குங்குமம் கூடையில்.
பெற்றுக் கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் சுண்டல் சாப்பிட்டு இருப்பீர்கள் அதனால் ஒரு மாறுதலுக்கு பிஸ்கட், மிட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள்.
நியூஜெர்சியில் இன்று சரஸ்வதி பூஜை!
எல்லோருக்கும், சரஸ்வதிபூஜை, விஜய தசமி வாழ்த்துக்கள்!
இன்று படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு கலைமகள் கல்விச் செல்வத்தை அள்ளித் தர வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
----------------