வெள்ளி, 25 ஜூன், 2021

தோட்டத்திற்கு வந்த புதிய பறவை



முதலில் முகம் காட்டாமல் அமர்ந்து இருந்தது வெகு நேரம்.
சிறிது நேரம் கழித்து பக்கவாட்டில் திரும்பி முகம் காட்டியது

மகன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த பறவை . இவ்வளவு நாள் பார்க்காத பறவையாக இருக்கிறதே என்று  நினைத்தேன் . பேரனை கூப்பிட்டுக் கேட்டேன்,  "கவின் வா வா வந்து பார் புது பறவை வந்து இருக்கு  இதன் பேர் தெரியுமா?" என்று கேட்டேன்

அவன் "ஆச்சி இது ரோட் ரன்னர் பறவை, அது பக்கத்தில் போகாதீர்கள்" அது கோபமான பறவை என்றான்.

தூரத்திலிருந்து படங்களை எடுத்தேன். 

செவ்வாய், 22 ஜூன், 2021

கோடையிலே இளைப்பாறி


போன மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்த நீர்நிலை பார்க்க  போனோம். அந்த இடம் மிகவும்  அழகாய் இருந்தது. வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் தான் இருந்தது.  அந்த நீர் நிலையில் வாத்துக்களும், பறவைகளும்  நிறைய இருந்தது.

அழகான நீர் நிலையும்,  நிழல் தரும் மரங்களும், பறவைகளும்,விலங்குகளும்,(நாய்கள்) மற்றும் அங்கு பார்த்த  மனிதர்களும் மகிழ்ச்சியாக இருப்பதைப்பார்த்த  போது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.


திருவருட்பா

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீரிடைமலர்ந்த சுகந்த மண மலரே 
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும்பயனே ஆடையிலே யெனைமணந்த மணவாளா பொதுவில் 
ஆடுகின்ற  அரசே என் அலங்கல் அணிந்தருளே.

- இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)

வள்ளலார் பாடல் பள்ளியில் மனப்பாடச் செய்யுள் நமக்கு .
 
இந்த பாட்டில் சொல்வது போல உலக வாழ்க்கையில்   உழலும் போதும்,  கோடை போன்ற துன்பம் ஏற்படும் போதும் நிழல் தரும் மரமாக , கனி தரும் மரமாக  இறைவன் இருக்கிறான்.  நமக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களுக்கும்தான்.

கோடையிலே இளைப்பாற்றி கொள்ள சிறந்த இடமாக இருந்தது இந்த இடம். 


மரத்தின் நிழலில்  இளைப்பாற்றிக் கொள்ளும் வாத்துக்கள்

திங்கள், 21 ஜூன், 2021

அன்புள்ள அப்பா




என் அப்பா நண்பர்களுடம்
என் அப்பா முதலில் அமர்ந்து இருக்கிறார்கள் 
என் அப்பாவின் கையெழுத்து

நானும் அப்பாவும்


மகன் இந்த போன்சாய் மரம் வாங்கி தந்தான்(chinese banyan )  தந்தையர் தினத்திற்கு.எனக்கு பழைய நினைவுகள் வந்து போனது.  மகன் என் கணவர் மாமா, பேரன்.



என் கணவர் தொப்பி அணிந்து முன்னால் போகிறார்கள் இந்த படத்தில் . (2017ல் அமெரிக்கா வந்த போது எடுத்த படங்கள்) 

எவ்வளவு சொகுசாக தந்தையின் தோளின் மேல் மகன், அவர் கரங்கள் தரும் பாதுகாப்பு !  தன் கையால் கழுத்தை கட்டி இருக்கும் மகனின் கைகள் பார்க்க பார்க்க மகிழ்ச்சி தரும். 
மகள் தந்தையின் தோளின் மேல்  
தந்தையின் தோளின் மேல்  பலூன் பிடித்து மகிழ்ச்சியாக செல்லும்  பெண் குழந்தை.
நம் ஊரிலும் திருவிழாக்களை காண தன் குழந்தைகளை தோளில் தூக்கி காட்டுவார்கள் தந்தைகள்.  அந்த படங்களை முன்பு பகிர்ந்து இருக்கிறேன். இந்த முறை வெளி நாட்டு தந்தைகள்.

 2015ல்  ஜனவரி மாதம் கங்கை கொண்டசோழபுரம் போன போது.

என் மகன் எப்போதும் சிறு வயதில் அப்பா போடும் சட்டை போல் வேண்டும் என்பான்.  இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்து தைக்க கொடுப்போம் தீபாவளிக்கு.

2015 ல் வந்து இருந்த போது தனக்கும் அப்பாவிற்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்து வந்தான் , அதை அடிக்கடி போட்டுக் கொள்வார்கள் ஆசையாக.

இரண்டு பேரும் பேசினால் காலம் நேரம் தெரியாது நிறைய விஷயங்கள் பேசுவார்கள். (கொடைக்கானல் போன போது)


தங்கை கணவரின்  உறவினர் தன் நண்பர்களுடன்.    தோளில் குழந்தைகளை தூக்கி வைத்து இருக்கும் படம் 
முகநூலில் வந்து இருந்தது, தந்தையர் தினத்திற்கு என்று எடுத்து வைத்தேன். தந்தைகளின்  பெருமை  சொல்ல வேண்டுமோ!

தந்தையின் தோளில் ஏறி இந்த உலகத்தைப் பார்க்காத குழந்தை ஏது? தந்தையின் தோளின்  மீதும் முதுகில் உப்பு மூட்டை,  யானை, குதிரை சவாரி செய்யாத குழந்தைகள் உண்டோ! 

அலைபேசியில்  எனக்கு நிறைய தந்தையர் தின வாழ்த்துக்கள் வந்தது அதில் இது எனக்கு பிடித்து இருந்தது.


அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
 

ஞாயிறு, 13 ஜூன், 2021

ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park)










ஸ்லைட் ராக்  ஸ்டேட் பார்க் 


அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.  சென்ற பதிவு  மலைப் பாதை பறவைகளும்,  மலர்களும்


ஸ்லைடு ராக் ஸ்டேட் பார்க்  அரிசோனாவின் பக்கத்தில் உள்ள செடோனா என்ற ஊரின் வடக்கே 7 மைல்  தூரத்தில் ஓக் க்ரீக் கேன்யானில்  உள்ளது. அரிசோனாவின் மாநில பூங்கா. அரிசோனா மாநில பூங்காக்கள் நிறுவனம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் வன சேவை நிறுவனமும் சேர்ந்து பராமரிக்கிறது.

'ஸ்லைட் ராக்  ஸ்டேட் பார்க்'  போகும் போது"midgley bridge"  இந்த புகழ் பெற்ற பாலம் வழியாக வந்தோம். வழியில் இறங்கி இந்த பாலத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

இந்த பாலத்தின் அடியில் பாதை இருக்கிறது, சுற்றிலும் உள்ள  சிவப்பு மலைகளில்  மலைப்பயணம் (மலையேற்றம் செய்ய)  போக வசதியாக பாதை செல்கிறது.

நன்றி- கூகுள்


இதன் சிறப்பு இரண்டு மலைகளுக்கு இடையில் பாலம் கட்டப்பட்டு இருப்பது.

பாலத்துக்கு அடியில் நீர் தேக்கமும் பாறைகளும் அழகாய் இருந்தது.  பாறைமேல்   ஒரு அழகிய பெண்  தன் இரண்டு வளர்ப்பு செல்லங்களுடன்  "சூரியகுளியல்" செய்து கொண்டு இருந்தார். தண்ணீரில் மரங்களின் நிழல் தெரிவது அழகாய் இருந்தது என்று எடுக்க போனேன் அந்த பெண்ணும் படத்தில் இடம் பெற்று விட்டார்.

பாலத்தின் அருகிலிருந்து சுற்றிலும்  சிவப்பு நிற மலைகளின்    அழகிய தோற்றங்களைப் பார்த்தோம். இந்த இடம் மக்கள் விடுமுறையில் வந்து செல்ல விரும்பும்  சுற்றுலாத்தளம்.

வியாழன், 10 ஜூன், 2021

மலைப் பாதை பறவைகளும், மலர்களும்



பெல்ராக் மலைப்பாதையில்   சைக்கிளில் போக தயார் நிலையில் நிற்கிறார்கள். 


அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.  சென்ற பதிவு மலைதரிசனம்
தலைக்கவசம் அணிந்து பயணம்.  பாதையில் மரங்களின் வேர்களும், கற்களும் கிடக்கிறது. பாதுகாப்பு  தலைக்கவசம் அவசியம்தான்.

மலைக்கு பின் பகுதியில் பட்ட மரம் போல் இருக்கிறது அதில் சின்னக்குருவி
ஓங்கி வளர்ந்த பைன் மரத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் குருவி


பறவையின் மேல் பகுதி இறகு நீலவண்ணத்தில் இருக்கிறது
எங்களுக்கு பிடித்த மரம் என்று சொல்கிறதோ!

கரிச்சான் குருவியும் , இன்னொரு வகை குருவியும்

சூரிய ஒளியில் கரிச்சான் குருவியின் உடல் பள பள வென்று  மின்னுகிறது
ஒவ்வொரு  மரத்திலும் பறந்து பறந்து அமர்ந்த கரிச்சான்
கரிச்சான் குருவி என்றுதான் நினைக்கிறேன்
காற்றில் அதன் தலைமுடி பறக்கிறது




பைன் மரத்தில் கலர்க் குருவி


 காய்ந்த மரக்கிளையில் மஞ்சள் குருவி 

உச்சியில் கொண்டையுடன் ஒரு  குருவி
 பைன்மரத்தின் காய் பறவை போல் தோற்றம் கொடுத்து ஏமாற்றியது என்னை.
பைன் மரத்தில் தேன் சிட்டு அமர்ந்து இருந்தது,  ஜூம் செய்யும் போது  பறந்து விட்டது


இரண்டு Quail   பறவைகள் இந்த மரத்திற்கு கீழ் புதரில் கூடு கட்டி இருந்தது போல! உள்ளே போய் வந்து கொண்டு இருந்தது. படம்  எடுக்கலாம் என்று நினைத்த போது ஒன்று புதருக்குள் போய் விட்டது, ஒன்று மரத்தில் அமர்ந்தது.

பறவைகளை தேடித் தேடி படம் எடுப்பது மகிழ்ச்சியை தந்தது எனக்கு. அதன் ஒலிகள் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.
பெல்ராக் மலையில் இருவர் ஏறி நின்று இருந்தார்கள். மிகவும் ஓரமாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். 

                        வெகு தூரத்திலிருந்து எடுத்த படம். 

மரங்களின் இடைவெளியே தெரியும் சூரிய ஒளி எப்போது மகிழ்ச்சி தரும் காட்சி எனக்கு

மலை அருகே போக இன்னும் நடக்க வேண்டும் போல் இருந்தது, காலை 11 மணிக்கே வெயில் ஆரம்பித்து விட்டது. அதனால் அங்கிருந்து கிளம்பி விட்டோம். காலை உணவாக தோசையை  தக்காளி சட்னி, மிளகாய் பொடியுடன் சாப்பிட்டு விட்டோம். மதியத்திற்கு புளியம்சாதம், தயிர் சாதம் செய்து எடுத்துக் கொண்டோம். (எல்லாம் மருமகள்தான் செய்தாள்)


மலைக்கு போகும் பாதை அருகே  குட்டியாக பூக்கும் ரோஜா  பூச்செடிகள் வைத்து இருந்தார்கள். அதில் குட்டி சிவப்பு ரோஜாவில் தேனீ தேன் அருந்துகிறது.





எங்களை  இங்கு அழைத்து அமரவைத்து  கவின் அன்னையர் தின பரிசுகள் கொடுத்தான், எனக்கும், மற்றும் அவன் அத்தை, அம்மாவுக்கும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிசு கொடுத்து மகிழ்வித்தான்.😍 🎉🎉🎉🎁🎁🎁😍😍


நமக்கு அன்பான ஆதரவான வார்த்தைகள் போதும். ஆனால் அவர்களுக்கு இப்படி பரிசு கொடுப்பதில் மகிழ்ச்சி. அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.


வரும் வழியில்  உணவு சாப்பிட  சென்ற இடம் அடுத்த பதிவில்.
இயற்கை வளம் நிறைந்த இடம். ரசித்து அங்கு அமர்ந்து உணவு உண்டு விட்டு மாலை வீடு வந்தோம்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------