நாங்கள் திருவருள் துணையுடன் அண்மையில் மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.
என் கணவர் பல வருடங்களாய் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பார்த்து வருகிறார்கள். அதில் அவர்கள் பார்க்க வேண்டிய இன்னும் இரண்டு தலங்கள் தான். அதில் ஒன்று கோகர்ணம் என்பதால் தான் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையத்தில் எங்களை அழைத்துச் செல்ல மனோகர் டிராவல்ஸ் கைடு ராஜா அவர்கள் வந்து இருந்தார், எங்களுடன் மேலும் இருவர் ஈரோட்டிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஐவரும் ஈரோட்டிலிருந்து மாலை 5 மணிக்கு வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் மங்களூர் புறப்பட்டோம். திருப்பூரில் 11 பேர் , கோவையில் நான்கு பேர் சேர்ந்து கொண்டார்கள் சென்னையிலிருந்து ஒருவர் ஆக 21 பேர் ஆன்மீகச் சுற்றுலாவிற்கு ரயிலில் பயணித்தோம். காலை மூன்று மணிக்கு போய் சேர்ந்தோம் மங்களூர். அங்கு எங்களைத் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்ல 21 பேர் அமரும் மினி பஸ் ஏற்பாடு செய்து இருந்தது . அதில் ஏறி விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்தோம்.
இப்படி சுடவைக்கப்பட்ட தண்ணீர் வெந்நீராக குழாய் மூலம் அறைகளுக்கு வருகிறது. எல்லா ஓட்டல்களிலும் இப்படித்தான் வெந்நீர் தயார் ஆகிறது.
என் கணவரும், எங்களை அழைத்துச் சென்ற கைடு திரு. ராஜாவும்
தங்கும் விடுதி வாசலில் மலர்ந்த ரோஜா
பாக்கு மரங்கள் சூழ நாங்கள் தங்கி இருந்த விடுதி
சுப்பிரமணியாகோவில் போகும் வழியில் தர்மஸ்தலாவில் உள்ள மணிக் கூண்டு
ஓட்டலில் போய் காலை உணவை முடித்துக் கொண்டு சுப்பிரமணியா கோவில் தரிசனம் செய்ய சென்றோம். கர்நாடக மாநிலத்தில் குக்கி சுப்பிரமணியா கோவில் மிக சிறப்பு வாய்ந்தது. ஐந்து தலை நாகருடன் சுப்பிரமணியர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்; இங்கு கால பைரவர் இருக்கிறார். ராகு, கேது தோஷநிவர்த்தி தலம் என்கிறார்கள்.
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.
தேருக்குப் பின் புறம் தெரியும் கட்டிடம் தான் அன்னதானக் கூடம்.
கோவிலின் முகப்புத் தோற்றம்.
கோவில் வாசலில் அழகிய தேர்கள் இருந்தன. வரிசையில் காத்திருந்து முருகனை வணங்கினோம். நம்மை கோகி , கோகி என்று விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வணங்கி வந்த பின் எல்லோருக்கும் உணவு உண்டு. கூட்டம், வரிசை அதற்கும். நாங்கள் அங்கு சாப்பிடவில்லை. ஓட்டலில் தயிர் சாதம் சாப்பிட்டோம்.
நாக தோஷநிவர்த்தி கோவில் ,பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு வரமளிக்கும் சுவாமி.
சகல பிரார்த்தனைகளும் நிறைவேறக் கட்டணம் கட்டி வழிபடுவோர்களுக்கே பிரசாதங்கள். மற்றவர்கள் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
தேங்காய், கல்கண்டு பிரசாதம்
மூட்டை மூட்டையாகத் தேங்காய்கள்
குமாரதாரா நதியும், ஆதி சுப்பிரமணியா கோவிலும்.
ஆதி சுப்பிரமணியா என்று இந்த பெரிய கோவிலின் அருகில் குமாரதாரா எனும் நதி ஓடிக் கொண்டு இருக்க, அதன் அருகில் அழகான கேரள பாணியில் கோவில் இருக்கிற்து. கோவிலின் உட்பிரகாரத்தில் ஒரு அழகிய கிணறு இருக்கிறது. கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பி அதில் அழகான ஓவியங்கள் வரைந்து இருக்கிறார்கள்.
ஆதி சுப்பிரமணியா கோவில் வாசலில் இப்படி அறிவிப்பு பலகை வைத்து இருக்கிறார்கள்.
தலவரலாறு:-
சுப்பிரமணியருக்கு வாசுகி எனும் ஐந்து தலைப் பாம்பு குடை பிடித்து இருப்பதற்கு சொல்லப்படும் கதை:-
காசியப முனிவரின் மனைவிகளான கத்ரு, வினதா ஆகிய இருவரும் குதிரைகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட , யார் கருத்து சரியானதோ அவர் வெற்றிபெற்றவர் என்றும், தோற்பவர் வெற்றிபெற்றவருக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அப்படி தோற்று அடிமையான கத்ருவின் குழந்தைகளான நாகங்களுக்கு, வினதாவின் பிள்ளையாகிய கருடனால் தொந்திரவு ஏற்பட்டது, அதனால் வருந்திய பாம்புகள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா நதியின் அருகில் இருந்த குகையில் தங்கி. சிவபெருமானிடம் தங்களைக் காக்கும்படி வேண்டின. சிவபெருமான் அவர்களுக்கு காட்சி அளித்து மகன் சுப்பிரமணியம் உங்களை காப்பாற்றுவார் என்று சொன்னார், நாகங்கள் குமராதாரா நதியில் நீராடி சுப்பிரமணியரை வழிபட, பாம்புகளை அவர் காப்பாற்றியதால் நன்றிக் கடனாக வாசுகி என்ற ஐந்து தலைப் பாம்பு அவருக்குக் குடைவிரித்து இருக்கிறது.
நாங்கள் போன போது தங்க கவசத்தில் ஐந்து தலைப் பாம்பும், முருகனும் தந்த அழகான காட்சி கண்டு மகிழ்ந்தோம்.
கோவிலுக்கு வந்த பக்தர்களை ஆசீர்வதிக்கும் கோவில் யானை
இது போல் தான் உள்ளே சுப்பிரமணியா இருப்பார்.
வாழக வளமுடன்.
----------------