புதன், 9 டிசம்பர், 2015

மழை! மழை! எங்கும் மழை!

மழை! மழை! எங்கும் மழை!. மழைக்கு ஏங்கித் தவித்து மழைக்காகப் பிரார்த்தனை செய்து மழையைக் கேட்டால், கொடுத்தார் வருணபகவான்.  பெருமழை- கனமழை. தாங்கிக் கொள்ள ஈசன் தான் வந்து இருக்க வேண்டும். கங்கையைத் தன் தலையில் தாங்கி பின் அதை மிதமாய் ஓடவிட்டது போல் இந்த கனமழையைத் தாங்கி மிதமழையாக நின்று நிதானமாய் பெய்யும் மழையாக கொடுத்து இருக்கலாம்.

இருக்கும் ஏரி, குளங்களை, சரிசெய்து கொள்ளுங்கள்,  தூர்வாரி மழை நீரை சேமித்துக் கொள்ளுங்கள்,என்று  சின்ன எச்சரிக்கை விட்டு வந்து  இருக்கலாம். இனியாவது  அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் என்று பாடம் புகட்டி சென்று விட்டது.

எத்தனை பொருள் இழப்பு, உயிர் இழப்பு !   இதிலிருந்து மீண்டு வர எத்தனைக் காலம் பிடிக்கும்?
உதவும் உள்ளங்கள், மனிதநேயம் மிக்கவர்கள் , எல்லாம் செய்யும் தொண்டுகள்  ஏராளம். சாதி  மதம்   கடந்த அன்புள்ளங்களின் சேவை போற்றுதலுக்கு குரியவை, அவர்கள் எல்லோரையும்  வாழ்த்தி வணங்கி மகிழ வேண்டும்.

மழை மீண்டும் வரும் என்கிறார்கள் . இனி வடமாவட்டங்களில்  மழை இல்லை, தென் மாவட்டங்களில் மழை என்கிறார்கள். மணி முத்தாறு நிறைந்து வருகிறது  என்கிறார்கள். மேலும் மக்களை சோதனை செய்யாமல்  இறைவன், இயற்கை காத்து அருள வேண்டும்.

நாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன் (அக்டோபர்)தம்பி மகள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு மாங்காடு போய் இருந்தோம்.   அன்று மாலை நல்ல மழை. அப்போது மெதுவாய் ஆரம்பித்தது மழை. நாங்கள் போன ஊரில் எல்லாம் மழை தான்.
தேவகோட்டை  தாமரைக்குளம்.
தேவகோட்டையில் திருமண வீடு

தேவகோட்டைக்கு  நண்பர் வீட்டுத் திருமணத்திற்குப் போய் இருந்தோம் , அங்கு திருமணத்தின் போது நல்ல மழை. திருமணம் நடத்தும் இருவீட்டாரும். திருமணத்திற்கு வந்தவர்களும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.  திருமணம் அவர்கள் பூர்விக வீடுகளில்தான் நடக்கும் . வீட்டில் மழை நீர் வராதபடி கெட்டிப் பந்தல் அமைத்தாலும்,  குழாயில் வரும் மழை நீர் வேகமாய் வந்ததால் முற்றத்திலும் மழை நீர் வர ஆரம்பித்து விட்டது ,  எல்லோரும் திருமணம் முடியும் வரை மழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார்கள்.  தாலிகட்டும் வரை பொறுத்தமழை, மீண்டும் பெய்ய ஆரம்பித்து விட்டது.

வாசுதேவ நல்லூர் சேவும்மாள்






 தம்பி மகள் திருமணம்  சென்ற மாதம் 29 ம் தேதி  தென்காசியில்.  அதற்கு போகும் போது மதுரையிலிருந்து தென்காசி செல்லும் பாதை எல்லாம் மிக அழகிய பச்சை பசேல் என்று வயல்கள்.  கண்ணுக்கு இனிமையாக இருந்தது. வாசுதேவநல்லூர் என்ற இடத்தில் உள்ள வயலை படமெடுத்துக் கொண்டு இருந்த போது ஒரு அம்மா வந்து என்  வயல்தான் மழையால் என்ன பாதிப்பு என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  ”என் பேர் சேவு அம்மாள், சாத்தூர் சேவு நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என் பேர் மறக்காது ”என்றார் உண்மையில் மறக்கவில்லை. அவர்கள் வயல் மழையால் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.

தென்காசியில் தம்பிமகள் கல்யாணத்தன்று மாலை முதல் தொடர் மழை. தென்காசி அருகில் உள்ள இலஞ்சி கோவில் அருகே மழையால் ஒரு குளம் நிரம்பி  மறுகால் பாய்ந்தது.  அங்காங்கே மடை வழியாக நீர் சல சலத்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.



தென்காசி ஏரியில் பறவைகள். (முக்குளிப்பான்கள்)    ஏரியும் நிறைந்து இருக்கிறது.

 தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கோபுரமும், ஏரியும்.

வானவில் மனிதன் என்ற வலைதளம் வைத்து இருக்கும் திரு . மோகன் ஜி அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் ஜெயராஜ்  மணி அவர்கள் எழுதிய கவிதையை  வாழ்த்துக்களுடன் பகிர்ந்து இருந்தார்கள்.  நான் இருவரையும் வாழ்த்தி அதை இங்கு பகிர்கிறேன்,  படித்துப் பாருங்களேன், படித்து இருந்தாலும் மறுமுறை.

அழைத்ததால் தானே வந்தேன்?

(ஜெயராஜ் மணி எனும் அன்பர் எழுதியதாய் ஒரு கவிதை வந்தது. உள்ளம் தொட்டதால், அவருக்கு வாழ்த்துக்களுடன் பகிர்கின்றேன் )

நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்
பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காக கீழ் இறங்கினேன்.
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே
என்னை அழைத்து விட்டு ..

வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்
சுரண்டி அவள் மேனியெல்லாம்
சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர சுகம் கொள்வாள்
அனைத்தும் நிராகரித்து
கடல் சேரவே வழி செய்தாய்
குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்
வளம் கொளித்த அத்தனைக்கும்
பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்
உனக்கு வழி வேண்டி
சாலைகள் நீட்டினாய்,
தொழிற்சாலைகள் கட்டினாய்,
காண்கிரீட் கட்டடமாய்
நிலமெல்லாம் நிரப்பினாய்.
நான் செல்லும் வழியடைத்து
திட்டமிட்டு துரத்தினாய்.
பூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்!
மண் பார்க்க முடியாமல்
அவள் முகமெல்லாம்
மறைத்து விட்டாய்.
எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு
உறவுகள் தானே குளமும் குட்டையும்.
கண்மூடித்தனமாக
மண் போட்டு மூடி விட்டாய்.
என்னையே நம்பியிருந்த
கடைசி உறவுகளையும்
கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து
கொல்ல வைத்தாய்.
பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே
வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே?
உள்ளம் என்று இருந்திருந்தால்
கள்வன் போல் வசப்படுத்தி
கல் மண் கொட்டி குப்பை நிரப்பி
 மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?
என்னை வந்த வேகத்திலே
விரட்டி விட்டு
மண்ணை துளையிட்டு
நானூறு அடியில் என்ன தேடுகிறாய்?
நாற்பது அடியில்
கிணற்றின் மடியில்
நாளும் சுரந்தேனே !
ஊற்று, கால் என்றெல்லாம் நீ
முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!
நினைவில்லையா?
எனக்கான இடத்தை நீ
உனக்காக வளைத்த மடத்தை
செய்யாமல் இருந்திருந்தால்
உன் கால் சுற்றி
கட்டிய வீட்டை சுற்றி
தேங்கி கிடக்கும் மடமையை
நானா செய்திருப்பேன்?
அவமானம் வேறு
வெகுமானமாக தருகிறாய்.
நீர் வடியும் இடமெல்லாம்
நீயாக அடைத்து விட்டு
பேரிடர் என்கிறாய்,
வெள்ளப்பெருக்கு என்கிறாய்,
மக்கள் அவதி என்கிறாய்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்.
அலுவலகம் செல்வதற்கு,
தொழில் நிற்காமல் நடப்பதற்கு,
மழை நிற்க வேண்டுகிறாய்.
பிழையாக குழி
நீ உனக்கே தோண்டுகிறாய்
உன் வாழ்வாதாரம் வேண்டியே
உன்னைத் தேடி நான் வந்தேன்.
உனக்கே வேண்டாம் என்ற போது
நான் கடலுக்கே போகிறேன்.
இனியாவது நீ திருந்துவாயா
உனக்காக நான் வந்தால் ?


வான்மழை கேட்கும் கேள்வி சரிதானே!
ஏரி ,குளம் ,ஆறு எல்லாம் நிரம்பி வழிய ,
மாரி அளவாய்  பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.