புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு மிக அழகானது ,ஆழமானது. என் மாமா பெண்ணின் (மதினி) பக்கத்து வீட்டு இனிய தோழி ,எங்கள் குடும்பத்திற்கும் நட்பானார்கள். என் மதினி வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போதேல்லாம் அவர்கள் வீட்டில் தான் பொழுதைக் கழிப்போம் நல்ல கை வேலைகள் செய்வார்கள். நானும் என் அக்காவும் நிறைய அவர்களிடம் கற்றுக் கொண்டோம்.
எங்கள் அப்பாவிற்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊருக்கு வருவார்கள்.
அவர்களுடன் அந்த ஊர்க் கோவில்கள் , சினிமா என்று அவர்கள் வந்தால் பொழுது மகிழ்ச்சியாக போகும். அம்மாவிற்கு பின் எங்கள் சகோதர சகோதரி வீடுகளுக்கும் அவர்களின் வரவு தொடர்ந்தது.அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் ’உங்கள் வீட்டுக்குப் புரட்டாசி மாதம் தான் வரவேண்டும், இல்லையென்றால் கத்திரிக்காய் , வாழைக்காய் போட்டு நாக்கு செத்து விடும் என்பார்கள். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருந்து தளிகை படைத்து அக்கம் பக்கத்தில் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்து சாப்பிடச் சொல்வார்கள்.
நாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா, பூரி மசால், புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம் என்று கொண்டு வந்து கொடுத்து அன்பாய் நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வார்கள். குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் இறைவன் அவர்களுக்கு அருளவில்லை. எப்படி அருள்வான் அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது! நிறைய பக்கத்துவீட்டு குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் அவை தங்களின் அம்மா வந்தவுடன்
இவர்களை விட்டுப்போய்விடுவார்கள். அதனால் அக்கா மனம் சோர்ந்து போய் வேறு முடிவு எடுத்தார்கள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்று எந்த குழந்தை தன்னைப் பார்த்து மகிழ்ச்சியாக கையை பிடித்துக் கொள்கிறதோ அதை எடுத்துவந்து வளர்ப்பது என்று முடிவு செய்து அது போல் தன்னைப் பார்த்து சிரித்த பெண் குழந்தையை எடுத்துவந்து வளர்த்தார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பெற்ற தாய் விட்டுச் சென்ற குழந்தையை எடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும்! அந்தப் பெண்ணைப் படிக்க வைத்து ,திருமணம் செய்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்
இறைவன் தன் பக்தைக்கு பிடித்த மாதத்திலேயே அவர்களை அழைத்துக் கொண்டான். போன செப்டம்பரில்,மகிழ்ச்சியாக தன் மகள் வீட்டுக்கு கிளம்பி பஸ்ஸுக்கு காத்து இருக்கும் போது காரில் வந்த எமன் அவர்களை அடித்துச் சென்று விட்டான். அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது அவர்களைப் பார்க்க வந்தவர்களில், அவர்கள் வளர்த்த அக்கம் பக்கத்து குழந்தைகள், நட்பு வட்டம் தான் அதிகம். அவர்கள் இறந்ததற்கு நான் போனபோது எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். மதுரைப் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா என்று . மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம். குழந்தைகள் இல்லையென்றால் என்ன ?அன்பால் பெற்றுக் கொண்ட குழந்தைகள் எவ்வளவு? அவர்கள் நினைவுகளில் அவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் . போன சனிக்கிழமை அவர்களின் முதல்வருட நினைவு நாள்.
காது கேட்காத குறை இருந்தாலும் அதைக் குறையாக எண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒருமுறை ’கோமு எப்படி இருக்கே? தம்பி நல்லாருக்கா? என்று கேட்டுவிடுவார்கள். நீ சொல்வதை இவளிடம் சொல் கேட்டுக் கொள்கிறேன் ”என்று யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிவிடுவார்கள்.
அவர்கள் நட்பு வட்டத்தில் நமக்கும் இடம் உண்டு. எல்லோரிடமும் நம்மைப்பற்றி சொல்லி அவர்களைப் பற்றி நம்மிடம் சொல்லி நெடுநாள் பழக்கமானவர்கள் மாதிரி ஆக்கி விடுவார்கள். சின்ன டைரியில் போன் நம்பர் அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு முகவரி வைத்துக் கொண்டு தனியாக எந்த ஊருக்கும் சென்று விடுவார்கள். முன் பின் தெரியதவர்களும் அவர்களின் அனபான பேச்சால் அவர்கள் வசம் இழுக்கபட்டு விடுவார்கள்.
அன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.
அன்பே தெய்வம்!
அன்பே அனைத்தும்.
அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.