புதன், 30 ஏப்ரல், 2014

கழுகுமலைத் திருக்கோயில்


திருநெல்வேலிக்கு  அருகே உள்ள கோவில்பட்டியிலிருந்து  சங்கரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபது கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.

கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை:-


1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி  திருக்கோயில்

2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்


3. சமணதீர்த்தங்கரர்களினசிற்பங்கள்,சமணர்கல்வெட்டுக்கள் .


கழுகுமலையைப்பற்றி முன்பே பதிவு போட்டு இருக்கிறேன். 2013ல் எழுதிய பதிவில் வெட்டுவான் கோயில், குடைவரைக்கோயில், சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள், சமணர்கல்வெட்டுக்கள் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். படிக்கவில்லையென்றால் படிக்கலாம். 

இந்தப் பதிவில் கழுகாசலமூர்த்தி திருக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளேன், அக்கோயிலில் வரைந்து இருந்த ஓவியங்களையும், காமதேனு, மயில் வாகனங்களையும், அங்கு உள்ள முருகனின் உற்சவ மூர்த்தியையும் எடுத்த படங்களைப் பகிர்ந்து இருக்கிறேன் .

இவ்வூர், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் பற்றி மூன்று திருப்புகழ்ப் பாடல்கள் உள்ளன. முத்துசுவாமி தீட்சிதர் அவர்களும் கழுகாசலமூர்த்தி மீது கீர்த்தனை இயற்றி இருக்கிறார்.

 அண்ணாமலை ரெட்டியார்   காவடிசிந்து பாடி இருக்கிறார். கோவில்பட்டி நீலமணி அவர்கள் ’கழுகுமலை கந்த கவசம்’ பாடி இருக்கிறார்.
கழுகுமலை முருகனுக்கு  ஒரு விளக்கம் சொல்லி இருக்கிறார் புலவர் கீரன் அவர்கள் :-  

ஒருமுகமும் ஆறு கைகளும்
கைகள் இரண்டில் சக்தியும்
ஏனையகைகளில் அட்சமாலை
வரதம் அபயம் சின் முத்திரை
விளங்க, சிவன்(இங்கு அகத்தியர் என்பது நியதி)
எதிரில் மாணவராகக்
கைகட்டி வாய் புதைத்து
நிற்க, பிரணவஉபதேசம்
செய்பவர்.

அருணகிரிநாதரின்  திருப்புகழில் இருந்து  இரண்டு வரிகள் மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்:-

“வேண்டும் அடியர், புலவர் வேண்ட அரிய பொருளை
 வேண்டும் அளவில் உதவும் பெருமாளே”

1989 ல் கோவில்பட்டி நீலமணி எழுதிய கவசத்திலிருந்து  ஒரு பாடல்:-

வணங்கிடத் தலையும் தந்தாய்
வாழ்த்திட வாயும் தந்தாய்
இணங்கிட மனமும் தந்தாய்
இசைத்திட தமிழும் தந்தாய்
மணங்கமழ் மாலை கொஞ்சும்
மார்பனே ! காக்க காக்க
அணங்கொடு வந்தே காக்கும்
அழகனே! காக்க காக்க

கோவிலில் முருகன் சன்னதி முன் நல்ல கூட்டம் அபிஷேகம் முடிந்து அலங்காரம் அப்போதுதான் செய்து இருந்தார்கள் . கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள் பார்த்து விட்டு போய்விடுகிறோம், என்று முன் இருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டு கழுகாசல மூர்த்தியைத் தரிசனம் செய்து வந்தோம்.

                           
                நுழைவு வாயில் கோபுரம் கிடையாது மலையே கோபுரம்


வண்ணத்தில் மின்னும் தூண், மேல் விதானக் காட்சி
பத்தாயம் எனும் நெற்குதிர் மேல் வைத்து இருக்கும் முரசு
மயில் வாகனம்
காமதேனுவின் ஜடை அழகு
கழுகாசலமூர்த்தி உற்சவர்
கோவிலைச் சுற்றி அழகான ஓவியங்கள்

இது கழுகரசன் சம்பாதி முக்தி பெற்ற திருத்தலம்

ஒரு முகமும் ஆறு கைகளும், இடதுபுறம் மயிலின் தலையும் அமைந்த  சிறப்பு அம்சம் , அருணகிரியார் கூப்பிய கைகளுடன்.

இது குடைவரைக் கோயில் - குகையை குடைந்து கோவில் கட்டப்பட்டுள்ளதால் கோவிலை சுற்றி வர ,கிரிவலம் வர வேண்டும்.
பெளர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷம்

கோவிலில் நடந்த திருமணவிழா ஒன்று - பாண்டு வாத்தியம்
பெண்ணும் மாப்பிள்ளையும்
வண்ணத்தாள் வாணவெடி மழை எனப் பொழியும் காட்சி

கோவிலில் இருந்து வெளியில் வரும்போது வாசலில் ஒரே ஆரவாரம் திருமண விழாவுக்கு  வெடி வெடித்து  பாண்ட் வாத்தியம்  முழங்க மணமக்கள் வாசலில் நின்று இருந்தார்கள்.

கோவிலில் கல்யாணம் கோவில் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு அந்தக்கால பாடல் ஸ்பீக்கரில் ,”மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” என்று ஒலிக்க,பெண்ணை  ஆரத்தி எடுத்து  வரவேற்றார்கள். இன்னும்  இந்த ஊர்களில் இந்த பழைய பாடல் கல்யாணவீடுகளில் ஒலிப்பது   மகிழ்ச்சியாக இருந்தது. 

அதிகாலையில் நடந்த பங்குனி உத்திரத் தேர்
நிலையில் நிற்கும் தேர்

தேரோடும் வீதி
கிரிவலம் வந்த போது எடுத்தபடங்கள்
மலையுச்சியில் பிள்ளையார் கோயில்

போனமுறை  கந்தசஷ்டி சமயம் போனோம், இப்போது பங்குனி உத்திரம் சமயம் போனோம்.தங்கை மகளை புகுந்தவீட்டில் விட்டு விட்டு கழுகாசல மூர்த்தி தரிசனம் செய்து வந்தோம்.

உறவினர் வீட்டில் எடுத்த படம்:-


 குழந்தைகள் விளக்கைப் பிடித்து இழுத்துப் போட்டுவிடாமல் இருக்க விளக்கு மாடத்திற்கு அழி( கம்பிக் கதவு) எங்கள் பக்கத்தில் இப்படி எல்லோர் வீட்டிலும் இருக்கும்.  

பம்பரம் விடும் சிறுவர்கள்:-


அந்தக்காலம் போல் மரத்தில் அழகிய வண்ணத்தில் இருக்கும் பம்பரங்கள் இல்லை. பிளாஸ்டிக் பம்பரங்கள்! தேரோடும் வீதியில் வெயிலை பொருட்படுத்தாமல் நாலைந்து சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிறுவனிடம் சென்று ”அபீட்” எடுத்துக்காட்டு என்ற உடன் எடுத்துக்காட்டினான். சிறுவனுக்கு நன்றி சொல்லிப்  படம் எடுத்தவுடன் மகிழ்ச்சி,

அவர்களுக்கும் எனக்கும்.

வாழ்கவளமுடன்.
-------------------

திங்கள், 28 ஏப்ரல், 2014

கல்யாணமே வைபோகமே!


பயணங்கள் முடிவதில்லை என்பது போல் என்பயணங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மதுரை, கோவில்பட்டி, வானரமுட்டி,  கழுகுமலை, கோவை என்று பயணம்  சென்று வந்து இருக்கிறேன்.
ஒவ்வொரு ஊரிலும் என் கணவர் உறவினர்கள், என் உறவினர்கள் என்று
உறவுகளுடன் உறவாடி, கல்யாணங்களில் கலந்துகொண்டு,  கோவை போய் கொஞ்சநாள் அத்தையுடன் இருந்து வந்தோம்.

மறுபடியும் போக வேண்டும் பயணம். அதற்குள் கொஞ்சம் உங்களுடன் உரையாடல்.