இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய நீர்நிலைகளையும் வணங்கினர். இப்போது நீர்வளங்களைத் தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன. அதனால் ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில் பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப் பார்த்து எழுதிய பதிவு இது.
கொள்ளிடக்கரையில் (வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழாவைப் பார்க்க போனோம். கொள்ளிடம் பாலம் விழா கோலம் பூண்டு இருந்தது. தென்னை ஓலை, குறுத்தோலை, கலர் பேப்பர்களால் அலங்காரம் என்று பாலம், கார்கள், பஸ்கள், வேன்கள் என ஜே ஜே என்று இருந்தது.
கொள்ளிடக்கரை போகும் வழி எல்லாம் கடைகள் இருந்தன,
ஆற்றுக்குப் போகும் பாதையில் வரவேற்புக்கு வாழைமரத்தோரண வாயில்
குழந்தைகளுக்குப் பலூன்
ஆலமரத்தின் நிழலில் குடைராட்டினம்
பலூன், ஐஸ்கிரீம், பழங்கள் , (வரலக்ஷ்மி பூஜைக்கு) முறம் விற்பவர்கள்.
எங்கும் குதூகலம்! கோலாகலம்!
பூஜைப் பொருட்கள், கறுப்பு, சிவப்புக்கயிறுகள் விற்பனை
மாங்காய், தேங்காய் பட்டாணி சுண்டல் , கொண்டைக்கடலை சுண்டல்
அழகிய பீங்கான் பொம்மைகள், ஜாடிகள், பூத்தட்டு ,சின்ன உரல் என்று விற்பனைப் பொருட்கள்
குல்பி ஐஸ்
போகும் வழி எங்கும் வேப்பமரம்- சித்ரான்னங்களை அங்கு வைத்து சாப்பிடுகிறார்கள்
பஞ்சுமிட்டாய்
ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.
எல்லோரும் மங்கலமாக இருக்கவும், ஊர் செழிக்கவும் மழை வேண்டியும் வேண்டிக் கொண்டோம்.
ஆற்று மண் எடுத்து காவேரி அம்மனாக பிடித்து வைத்து காப்பரிசி, மாவிளக்கு, கனிவகைகள், காதோலை, கருவளையல், மஞ்சள் கயிறு, பூக்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
வழிபட்டபின் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறுகள் கட்டிக் கொள்கிறார்கள்.
படைத்து ஆற்றில் விட்ட காசு போன்ற பொருட்களை எடுக்கும் சிறுவர்கள்
தூரத்தில் கொள்ளிடம் ரயில் பாலம்
இன்னொரு புறம் -கொள்ளிடம் சாலைப்போக்குவரத்துப் பாலம்
புனிதநீராடும் பக்தர்கள்,
அந்தக்காலத்தில் ஆடிப்பெருக்கு சமயத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும் . மரங்கள் செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்கும். சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாம் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்வார்கள் . ஆற்றில், அருவியில் குளித்தால் நல்ல பசி எடுக்கும் . அப்போது கொண்டுவந்திருக்கும் கட்டுசாதம், சித்ரான்னங்களை குடும்பத்துடனும் நட்புகளுடனும் சாப்பிட்டுக் களித்து இருப்பர். ஆடி மாதம் நல்ல காற்று வீசி உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும்.
ஆனால் இப்போது மரங்கள் குறைந்து மழை குறைந்து வளம் குன்றிக் காணப்படுகிறது. ”ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்” என்பார்கள். இப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மரங்களும் அசையவேமாட்டேன் என்கிறது . ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் காற்று வேகமாய் வீசும் என்பார்கள்.மீண்டும் அந்தக்காலம் வரவேண்டும். ஆறுகள் நிறைய வேண்டும்.
ஆடிப் பட்டம் தேடி விதை என்று மரங்களும் செடிகளும் நட்டு வளப்படுத்த வேண்டும்.
’நீரின்றமையாது உலகு’ என்பது போல் அந்தக்காலத்தில் கனவுகளின் பலன்களிலும் ஆறு, குளம் இடம் பெற்று இருக்கிறது அவற்றில் சில:-
‘ஆற்றில் ஓடி வருகின்ற நீரைஅதில் வெள்ளமாகக் கண்டாலும் நன்மை உண்டாகும்.”
“குளங்கள், கிணறுகள், ஆறுகள் முதலியவை வற்றிப்போகுமாறு கனவு கண்டால் வறுமை வந்து சேரும் .
“ஆறுபெருகிக் கரைகளை உடைத்துச்சென்றால் வெகுவிரைவில் நாட்டின் மீது பகைவர் படையெடுப்பர் ’
கடலைத் தாண்டுதல், ஆற்றைத் தாண்டுதல் போல் கனவு கண்டால் நினைத்த காரியம் முடியும்
இப்படி அந்தக் காலத்தில் நீர் நிலைகளைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை பின்னப்பட்டு இருந்தது..
அக்காலத்திலும் காவிரி நதி பாயும் சோழநாட்டில் கடும் பஞ்சம் வந்த போது திருநனிபள்ளி என்ற ஊர் பாலை நிலமாக் இருந்தது என்றும், அதை மருதநிலமாக மாற்றினார் திருஞானசம்பந்தர் என்றும் புராணங்கள் மூலம் அறிகிறோம். இந்தக்காலத்திலும் அப்படி மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பு வருகிறது.
ஆறு, குளங்களில் நீர் இல்லை இப்போது. ஆடி பெருக்குவிழாவை மக்கள் மழை வேண்டியும் குடும்ப நலம் வேண்டியும் வணங்கி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காவேரி அன்னை! கருணை மழை பொழிய வேண்டும்!
வாழ்க வளமுடன்!
-------------------
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் !
-------------------------