ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அழகரும், கண்ணனும்

Image may contain: one or more people, people on stage and outdoor
அழகர் வந்தார், மூன்றுமாவடி என்ற இடத்தில் அவரைத் தரிசனம் செய்தோம்.

இன்று காலை 7மணிக்கு அழகரைப் பார்த்து வரலாம் என்றார்கள். இன்று அழகர் மலையிலிருந்து காலை மூன்று மணிக்கு புறப்பட்டு வருகிறார் எதிர்சேவை செய்வோம் என்றார்கள்.  என் மனம் மகிழ்ச்சியில் திளைத்து விட்டது.
10ம் நாள் திருநாள் மீனாட்சி பூம்பல்லாக்கு . அதைப் பார்க்கப் போய் வந்த பின் பல மணி நேரம் நின்றதால் இருவரும் சோர்ந்து போய் விட்டோம், இனி பக்தி மார்க்கம் இல்லை ஞான மார்க்கம்தான் என்று என் கணவர் சொன்னார்கள்,  அதனால் மறு நாள் தேர்பார்க்கப் போகவில்லை. எப்போதும் தங்கை வீட்டுக்குப் போய் வடக்கு மாசி வீதியிலிருந்து தேர் பார்ப்போம் .இந்த முறை போகவில்லை சங்கரா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து விட்டோம்.

 போன வருடம் மீனாட்சி திருவிழா இரண்டு மூன்று நாள் விழா பார்த்தோம் அழகரை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் கண்டு களித்தோம்.

முன்பு அப்பா  இருக்கும் போது மேம்பாலத்திலிருந்து அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்ப்போம். பாஸ் கிடைக்கும். பிறகு சாரின் அண்ணாவின் தயவில் மேம்பாலத்தின் மேலே இருந்து அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை கண்டு களித்து இருக்கிறோம்.

அப்புறம் கூட்டத்திற்கு பயந்து போவது இல்லை. வர வர மக்கள் கூட்டம் அதிகமாகிறது.
அன்பர் கூட்டத்தைப் பார்ப்பதே புண்ணியம் என்பார்கள்.

வழி எல்லாம் அன்பர்கள் கூட்டம், தண்ணீர் பந்தல், நீர் மோர் கொடுப்பவர்கள், பிரசாதங்கள் கொடுப்பவர்கள் என்று வழி நெடுக கூட்டம் தான். போலீஸார் இந்த பக்கம் போகக் கூடாது , அப்படி போகக் கூடாது என்று மக்களை வழி நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு தண்ணீர்ப் பந்தல் இடத்தில் மூன்று மதச் சின்னங்கள் போட்டு இருந்தார்கள், அங்கு பாதிரியார்கள் மூன்று பேர் நீர் மோர் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். வண்டியில் போய்க் கொண்டு இருந்ததால் பாதைக் காட்சிகளைப் போட்டோ எடுக்க முடியவில்லை.காரில் பயணம் செய்து இருந்தால் எடுத்து இருப்பேன்.

  Image may contain: 2 people, people smiling, outdoor

கண்சிமிட்டும் நேரத்தில் தெரியும் அழகரைப் பார்த்துக் கும்பிட்டுப் படம் எடுப்பதற்குள்  விசில் கொடுத்து விடுகிறார் , நகர்ந்து விடுகிறது பல்லாக்கு.

மக்கள் கூட்டத்திற்கு இடையே புகுந்து அழகரைத்
தரிசனம் செய்தோம்.காலை 8மணி என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவு 

Image may contain: 1 person, standing, on stage and outdoor

Image may contain: one or more people, sky, cloud and outdoor
மஞ்சள் துணி சுற்றிய செம்பு மேல் பூ வைத்து கற்பூரம் காட்டி வழிபட்டார்கள். செம்புக்குள் நாட்டுச் சர்க்கரை, பூந்தி வைத்து வழிபட்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்கள்.

Image may contain: 2 people, people on stage, crowd and outdoor
அந்தப் பக்கம் ஒரு பட்டர், இந்தப்பக்கம் ஒரு பட்டர் இருவரும் அழகரை மறைத்துக் கொள்கிறார்கள்.
Image may contain: one or more people, crowd, tree, sky and outdoor
எதிர்வெயில் தூரத்தில் -கையை மேலே தூக்கி அலைபேசியில் எடுத்த படம்.
மக்கள் எல்லோரும் அழகரை எதிர் சேவை செய்த காட்சி அழகு.

Image may contain: 5 peopleமுதுகில் சாட்டையால் அடிக்கும் அப்பா - காசு வாங்கும் மகன்
அவர் மனைவி குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு உருமி மேளத்தைத் தட்டினார்.

Image may contain: 4 people, people standing and outdoor
கடவுள் வேடமிட்டவர்கள் உண்டியலைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு வந்தார்கள்
Image may contain: 1 person, outdoor
பலூன் விற்பவர்களிடம் பலூன் வாங்கும் சிறுவர்களை திருவிழா காசு கொடுத்தால் சேர்த்து வைத்தால் என்ன ? பொம்மையும் , பலூனும் வாங்கி காலி செய்யனுமா என்று கேட்டுக் கொண்டு இருந்தார் அம்மா.

ஒரு அம்மா இன்னொரு அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போகிறார், நீ வா, அவ வருவா, பை நிறைய பேரன் பேத்திகளுக்கு பலூன் , பொம்மை என்று சப்பு சவறுகளை வாங்கிக் கொண்டு வருவா  என்று.

என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. திருவிழாக்கு வரும் உறவினர்கள் தரும் காசு, எங்கள் வீட்டில் பிறந்த நாள், சித்திரை விசு, பொங்கல், தீபாவளி என்று கொடுக்கும் காசுகளை உண்டியலில் சேமிக்கச் சொல்வார்கள்.  எங்களுக்கு வேண்டிய விளையாட்டு சாமான்களைப்  பிறகு வாங்கி தருவார்கள்.

அழகரைப் பார்த்து விட்டு வரும் போது  கூட்டத்தில் வண்டி(இரு சக்கர வாகனம் தான்) ஓட்ட முடியாது என்று மாற்றுப் பாதையில் வரும் போது முட்டுச் சந்துகளாய் இருக்கே என்று மாறி மாறி வெவ்வேறு தெருக்கள் வழியாகப் போனோம்.ஐயர் பங்களா அருகில் ஒரு தெரு வில் ஒரு கட்டிடம் இருந்தது. வெளிச் சுவற்றில் "ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே!"
 என்ற வாசகங்களும் கண்ணன் இரு கை நீட்டி அழைக்கும் தோற்றத்தில் கட்டிட முகப்பில் சிலையும் இருந்தது.

கண்ணன்  ' அன்பு குழந்தைகளே என்னிடம் வாருங்கள்  உங்களுக்காகக் காத்து இருக்கிறேன்' என்று போட்டு இருந்தது.

கண்ணன்  அழைக்கும்போது போகாமல் இருக்க முடியவில்லை போய்ப் பார்த்தோம், கண்ணனை. இருவர் ஹரே ராம  மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
நாங்களும்  ஒரு இரண்டு நிமிடம் ராம மந்திரத்தை அமர்ந்து சொன்னோம்.
பின் சுவ்ற்றில் எழுதி இருந்தவற்றைப் படித்துக்கொண்டு இருந்தேன், என்னிடம் வந்தவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்ப மாட்டேன் என்று எழுதி இருந்தது.
வெளியே வரும்போது  தீர்த்தமும், என் கை நிறையும் அளவு பெரிய மாம்பழமும் , மல்லிக்கைப் பூவும்  கொடுத்தார்கள்.  என் கணவருக்கு சாக்லேட் கொடுத்தார்கள்.
கண்ணன் சொன்ன வாக்கின்படி கையை நிறைத்து விட்டார்.

எங்கள் குடும்ப  நன்மைக்கும், உலக நன்மைக்கும் வணங்கி வந்தோம்.


துளசி மாடமும்  கண்ணனும்


பிரார்த்தனை மையத்தின் நோக்கம் நன்றாக இருக்கிறது.

எல்லோர் வீடுகளிலும் அழகான கோலங்கள், காவி கொடுத்து, கலர்ப் பொடியால் கோலம் என்று. அந்த வழியாக வர மாட்டார் அழகர் இருந்தாலும் அழகர் மலையிலிருந்து மதுரை வருவது அவர்கள் வீட்டுக்கே வந்த மாதிரிதானே! 

ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர் வருகை. உற்சாக ஆரவாரம் ஒவ்வொரு வீட்டிலும்.

தங்கை குழந்தைகள், பேத்தி  வந்து போனார்கள் எங்கள் வீட்டுக்கும்.  தங்கை பேத்தி வருகைக்காக நான் வரைந்த முயல் கோலம் வாசலில்

சோம்பி கிடக்கும் எங்களைப் போன்ற வயதானவர்களை சுறுசுறுப்பாக்கும் மழலை செல்லங்கள் வாழ்க வளமுடன்.!

புதன், 25 ஏப்ரல், 2018

மதுரை விளக்குத்தூண், பத்துத்தூண்

பசுமை நடை இயக்கத்துடன் இந்த மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை  அன்று (8/4/2018) மதுரையில் உள்ள விளக்குத்தூண், பத்துத்தூண், திருமலைநாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களுக்குப்போய் இருந்தோம்.

திருமலைநாயக்கர் அரண்மனைக்குப் போய் வந்ததைப் பற்றி இரண்டு பதிவு முன்பு எழுதி இருக்கிறேன். அதனால் இந்த முறை பசுமை நடை இயக்கத்தின் கைஏட்டில் உள்ளதைப் படித்து பாருங்கள்

காலை 6மணிக்கு விளக்குத்தூண் அருகில் காத்து இருக்கச் சொன்னார்கள்.  200 பேர்  வந்து இருப்பார்கள் நல்ல கூட்டம்.

தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் சென்னையிலிருந்து வர காலதாமதம் ஆனதால் 
விளக்குத்தூண் வரலாற்றை விளக்குத்தூண் அருகிலிருந்து பசுமைநடை இயக்கத்தின்   ஒரு அன்பர் சொன்னார்.


காலையில் என்ன கூட்டம் இங்கு என்று பார்த்த காகம்

விளக்குத்தூண் அருகே நம் கர்மவீரர்  காமராஜ் அவர்களுக்குச் சிலை

விளக்குத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து  பத்துத்தூண் நோக்கி எங்கள் நடை  ஆரம்பம் ஆனது.
பத்துத்தூண் பற்றிய விவரங்கள் அடங்கிய கல்வெட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் . பாதுகாப்புக்குக் கம்பித் தடுப்பு வேலி போட்டுக் காணப்படுகிறது.

தூண்களுக்கு இடையே வீடுகள், கடைகள்.
பத்தாவது தூண்

ஒரு தூணில் மணி கட்டி இருந்தது

பத்துத்தூண் பற்றி   தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள்  பேசுகிறார்
ஞாயிறு என்பதால் கடைகள் அடைத்து இருந்தது,

ஒரு தூணில் விளக்குமாடம் . பத்துத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து  எங்கள் நடைப் பயணம் தொடர்ந்தது.

குதிரைலாயத் தெருவழியாக எங்கள் நடைப் பயணம் போகும் வழியில் பழைய சத்திரம் ஒன்று இருந்தது. இப்போது வாசல்படி கூட இல்லை மூடப்பட்டு இருக்கிறது.


கடைத்தெருவிலிருந்து அரண்மணை மேல் மாடக் காட்சி
காலை 8மணிக்கு இடியாப்பம், புட்டு விற்றுச் செல்கிறார்.
அடுத்த பதிவில்  திருமலை நாயக்கர் அரண்மனை .
                                                                 வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

புத்தக வாசிப்பும் அனுபவங்களும்


என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னைக் கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.


//மோதிரம் வாங்குங்கள்! மோதிரம்!// 2010 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி எழுதிய பதிவு.


இதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:

// விளம்பரம்

சீர்மையிலிருந்து வரவழைக்கப்பட்ட

எங்களுடைய

ரோஜாப்பு மொட்டை

பரிட்சித்துப் பாருங்கள் 

ரோஜாப்பு மொட்டு என்பது

ஒரு ஷோக் மோதிரம்

இந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல
பிரகாசிக்கும். பார்வைக்கு மிக்க பகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய 
சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.
இந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.

8-மோதிரத்திற்கு மல்பீஸ் இனாம்
8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்
(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.

4.மோதிரத்திற்கு இனாம்

4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.

என்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.

வித்தியாரத்திநாகர அச்சுக்கூடத்தலைவர்

பி.நா.சிதம்பரமுதலியார்
பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //வாங்குங்கள் ஷோக்மோதிரம் விரைந்து.

வைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.

வல்லி அக்கா பின்னூட்டத்தில்  //எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)// வேண்டும் என்றார் பழைய பதிவில்.


அத்தை பெயர் அத்தையின் கையெழுத்து.

No automatic alt text available.
என் அம்மா சேகரித்து வைத்து இருக்கும் பழைய கதை புத்தகத்தில் இடையில் வரும் ரேடியோ விளம்பரம்.


                       குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள்.

No automatic alt text available.
ஒரு கதை இரு ஓவியர் அன்று, இன்று என்ற கதை களத்திற்கு அன்றுக்கு "ம.செ," இன்று நடைபெறும் கதைக்கு "ஜெ"
தொடர்கதைகளை சேகரித்து பைண்ட் செய்வதில் சில கஷ்டங்கள்   முடிவு  அடுத்த இதழில் இருக்கிறது முடிவுப் பக்கத்தைக் காணோம்.
மீண்டும் படிக்கும் ஆவல் போச்சு.

No automatic alt text available.
பதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் பொன்னியின் செல்வன் வாங்க ஆரம்பித்தோம். (87ம் வருடம்.) அதற்கு முன் சர்குலேஷன் புத்தகம் வாங்கி படித்து கொண்டு இருந்தேன் மாதா மாதம் பணம்  கொடுத்து விட்டு  எல்லா மாதா, வார இதழ்கள் படித்துக் கொண்டு இருந்த காலம். பொன்னியின் செல்வன் புத்தகம் சேகரிக்க எண்ணி வாங்க ஆரம்பித்த போது பதின்மூன்று அத்தியாயம் ஓடி விட்டது. பழைய புத்தகக் கடையிலும் கிடைக்கவில்லை.அப்புறம் 2014ம் ஆண்டு மீண்டும் கல்கியில் வந்தது பொன்னியின் செல்வன் ஆனால் படம் மணியம் இல்லை, வேதா என்ற ஓவியர். ( பொன்னியின் சித்திர கதைக்கு வேதா அவர்கள்தான் வரைந்து வருகிறார்.)

12 அத்தியாயம் மட்டும் வாங்கித் தொகுத்து தனியாக வைத்து இருக்கிறேன். கல்கி புத்தகம்  அகலமாக  வித்தியாசமாய் வந்தது பழைய புத்தகம் போல் இல்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு இந்த புத்தகங்கள் 10 ரூபாய் தான்.   இந்த புத்தகங்களை முன்பு ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொள்ளும் போது வாங்கி வந்தவை, தினம் ஒரு பக்கம் படிப்பேன்.

Image may contain: 3 people, people smiling

திருக்குறள், பாரதியார் கவிதைகள் என் கணவர் எனக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் "வாழ்க்கை மலர் " புத்தகம்  வருடம் முழுவதும் படிக்க  (நாள் ஒரு நற்சிந்தனை)

'அன்னையின் அருள்மலர்கள்'  புத்தகம் அன்னையின் பொன்மொழிகள் தொகுப்பு .

தினசரி தியானம் புத்தகம் கைலாயம் போன போது எங்களுடம் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த மூன்று சாமியார்களும் வந்து இருந்தார்கள் அவர்களில்  ஒரு சுவாமி  பக்தானந்தா அவர்கள் கொடுத்த புத்தகம்.

ஒரு கல்யாண வீட்டில் கொடுத்த புத்தகம்   'மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை  பாதை ' சுவாமி சிவானந்தா ' அவர்கள் அருளுரை நர்மதா வெளியீடு.

இதுதவிர சிவானந்தலஹரி பாஷ்யம் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு புத்தகம் எல்லாம்  படிப்பேன்.

அம்மா கொடுத்த 'ஸெளந்தர்ய லஹ்ரி"  (சகுந்தலை நிலையம் வெளியீடு)
 மாமா கொடுத்த "ஸ்ரீ மஹா பக்த விஜயம்" (லிப்கோ பதிப்பகம் வெளியீடு)

எல்லாம் தினம் கொஞ்ச நேரம் படிப்பேன்.

முக நூலில் புத்தகப் பகிர்வு  நடந்து வருகிறது. படித்தபுத்தகம் அட்டைப் படம் மட்டும் போட்டால் போதும். விளக்க வேண்டாம். படிப்பதில் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டு இருந்தது , இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டு வேலைகள், வலைத்தளங்களை படித்தல் என்பதுடன்  புத்தகங்கள் படிக்க எண்ணம் வந்து இருக்கிறது.

 அப்பாவின் ஆன்மீக புத்தக  சேகரிப்புகள் (உபநிஷத்துக்கள்)
அனைத்தும் ஆங்கிலம்  அவை எல்லாம் என் கணவர் படிக்கிறார்கள். 
நான் தமிழாக்கங்களைத்தான் படிக்கிறேன்.

வல்லி அக்கா, ஆதிவெங்கட் இருவரும் புத்தக்ப் பகிர்வுக்கு அழைத்தார்கள் இருவர் அழைப்பையும் ஏற்று இரண்டு வாரங்கள் புத்தகம் பகிர்ந்து கொண்டு விட்டேன். நாள்தோறும் படித்துக் கொண்டு இருப்போம்.

 நான் யாரையும் அழைக்கவில்லை. நம் வலை அன்பர்கள் பலர் நல்ல நல்ல புத்தகப் பகிர்வை முன்பே செய்து விட்டார்கள்.


                                                          வாழ்க வளமுடன்.