கடல் அழகு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடல் ஒரு அலுக்காத பொழுது போக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும். கடல் அற்புதமான இதம் தரும் மருந்து. மனதை மகிழச் செய்யும் குழந்தை. அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான்.
இந்தத் கோடை வெயிலுக்கு இதம் தரும் இடம். காசு செலவில்லாமல்
காற்றை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கி வரலாம், காற்று
வாங்கப் போய் கவிதையும் வாங்கி வரலாம் என்று கவிஞர்களும் பாடி
இருக்கிறார்கள். வெயில் காலத்தில் கடற்கரை இருக்கும் ஊரில்
உள்ளவர்கள் எல்லாம் மாலை நேரம் அங்கு கூட ஆரம்பித்து
விடுவார்கள். சுகமான காற்று வாங்கி மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக்
களிப்பார்கள். கடலைப்பார்த்தவுடன் சிலருக்கு கவிதை, பாட்டு எல்லாம் வருகிறது. எனக்குக் கடலை ரசிக்கத் தெரியும், அதைக் கண்டு குதூகலிக்கத் தெரியும். இதில் பாரதியின் பாடலையும், புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் ஒரு பெண் பாத்திரம் கடலில் போகும் போது பாடிய பாடலையும் பகிர்ந்து இருக்கிறேன்.
பாரதி கடல் நீர் ஆவியாகி மழை பொழிந்தால் நல்லது என்கிறார்.
மக்கள், பறவைகள் பகல் பொழுதில் வெயிலின் கொடுமையால்
படும் துன்பம், குறைய இன்ப மழையை அழைத்துப் பாடுகிறார். நாமும் அவருடன் சேர்ந்து இன்ப மழையை அழைத்துப் பாடுவோம்.
//வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மைகுன்றிய
பிரதேசங்களுக்கு காற்று ஓடி வருகிறது.
அங்ஙனம் ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடற்பாரிசங்களிலிருந்தே
வருகின்றது.
காற்றே , உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
மழை கொண்டு வா.
உனக்குத் தூபதீபங்கள் ஏற்றி வைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்ய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய் விட்டன்.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று
காலிகளுக்கும் நோய் வருகிறது. அதனை மாற்றியருள
வேண்டும்.
பகல்நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை
மனம்” ஹா ஹா” வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப்
பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன.
பலதினங்களாக, மாலை தோறும் மேகங்கள் வந்து
கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,ஓரிலைகூட
அசையாமல்,புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து
மேகங்களை அடித்துத் துரத்திக் கொண்டு போகின்றன.
இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள்
கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
இன்ப மழை பெய்தல் வேண்டும்.//
--இவை கடலை பார்த்தவுடன் பாரதிக்கு தோன்றும் எண்ணம்.
அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான் என்று முன்பு
சொன்னது போல் ஒரு மங்கைக்கு இந்த கடலைப் பார்த்தவுடன் இப்படி
மனது பொங்கிப் பாடுகிறாள்.- யார் என்று சொல்லுங்களேன்!
//அவளுடைய கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி
ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள
மெள்ள தவழ்ந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களுமிலை
அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன
போலும்! வானமும் பூமியும் அந்த கானத்தைக் கேட்டு மதி மயங்கி
அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்த கானத்தை
முன்னிட்டே மூலைக்கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி
நிற்கிறான் போலும்!
தேனில் குழைத்து வானில் மிதந்து வந்த பாடலை நாமும் சற்றுச் செவி
கொடுத்துக் கேட்கலாம்.
“அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே!
வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பது மேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்று சுழன்றடிப்பதுமேன்?”//
யார் என்று தெரிந்து விட்டதா?
எல்லோருக்கும் தெரிந்த பெண் தான். இந்தப் பெண் எந்தக்கதையில் வரும் பாத்திரம் என்று தெரிகிறதா?
----------