ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

என் வீட்டு ஜன்னல் வழியே

 







புறாக்கள் இரண்டு கூடு கட்ட தினம் குச்சிகளை கொண்டு வந்து எதிர்வீட்டு பாத்ரூம் ஜன்னலில் வைத்தது, அவை எல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது. (கூடு கட்ட இடம் வசதி இல்லை) சரி விழுந்த இடத்திலேயே முட்டையிட்டு அடைகாப்போம் என்று அடைகாத்து வந்தது தாய் பறவை.

நானும் குஞ்சைப்பார்க்க ஆவலாக இருந்தேன். குஞ்சு வந்ததும் ஒரு நாள் உணவு ஊட்டுவதைப் பார்த்து விட்டேன்.

அதன் பிறகு என் கண்ணில் காட்டாமல் தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு என்னை கவனித்து கொண்டே இருந்தது.

பாதுகாப்பு இல்லாத இடம் மற்ற பறவைகளால் இடையூறூ ஏற்படும் இடம். அதனால் அது தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு இருந்தது. (அந்த காணொளியும் இதில் இருக்கிறது பார்க்கலாம்.)


இளம் மஞ்சள் கலரில் குஞ்சு இருந்தது,




காணொளி எடுக்க வசதி இல்லாமல் இருந்தது. ஒரு பால்கனியில் வலை வைத்து தடுத்து இருக்கிறேன், அதன் வழியாக கஷ்டப்பட்டு எடுத்தேன்.


//அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் // 
இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது.


நேற்று தாய் , சேய்கள் அந்த இடத்தில் இல்லை, பறந்து போய் விட்டது.

3 அல்லது 4 வாரங்கள் கழித்து தான் பறந்து போகும் என்று படித்து இருக்கிறேன். மகன் வீட்டிலும் பார்த்து இருக்கிறேன்.

வருத்தமாக இருக்கிறது, ஏதாவது இடையூறு நிகழந்து இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது.

நன்றாக இருந்தால் சரி. இறையருளால் நன்றாக இருக்க வேண்டும்.


என் வீட்டுக்கு வந்த அமைதி புறா.

ரஷ்யா- உக்ரைன் 4 வது நாள் போர் நீடிக்கிறது. போர் விரைவில் முடிவடைய வேண்டும். மக்கள் உணவு கிடைக்காமல் கஷ்டபடுவதும், கை குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடுவதை பார்க்கும் போது மனது கனத்து போகிறது. போர் இல்லா உலகம் வேண்டும்.

அமைதி நிலவ வேண்டும். அமைதிக்கு பிரார்த்தனை செய்வோம்.

இந்தியர்கள் இந்தியா திரும்பி வருகிறார்கள்.படிக்க போன மாணவர்கள் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் நலமாக ஊர் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
(15,000 பேர் திரும்ப வேண்டுமாம்.)

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

-----------------------------------------------------------------------------------------

புதன், 23 பிப்ரவரி, 2022

பழமையும், புதுமையும்


கல் உருளியில் பூக்கள், இலையால் அலங்காரம்.


"Heritage Madurai " மதுரை கோச்சடையில் பாரம்பரிய முறையில்
உணவும், தங்கும் வசதியும் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்.

ஆலமரம் சூழ்ந்த அழகிய பழமையான உணவு விடுதி.
"ஹெரிடேஜ் மதுரை" ஒரு அழகான விடுதி. மதுரையை சுற்றி பார்க்க வருபவர்கள் பழமை, புதுமை இரண்டையும் விரும்புபவர்களாக இருந்தால் இந்த விடுதியில் தங்கி மதுரை ஊரை சுற்றி பார்க்கிறார்கள்.

திங்கள், 7 பிப்ரவரி, 2022

விழுதுகள் தாங்கும் ஆலமரம்

   மதுரை கோச்சடையில் பாரம்பரிய முறையில் உணவும், தங்கும் வசதியும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ( Heritage Madurai) உள்ள ஆலமரம். மகன் அழைத்து சென்ற உணவு விடுதி. இதை பற்றிய பதிவு பின்பு வரும்.


ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் போல என் குழந்தைகள் பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள்.


வல்லி அக்கா சொன்னது போல இனிய நினைவுகள்  தந்த படம்


// அன்பின் கோமதி அரசுவின் திருமண நாள்
ஃபெப்ரவரி ஏழாம் தேதி.

மனம் நிறைய இனிய நினைவுகளுடன்
ஸாரின் அன்புடனும் 
நல் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.
சுற்றம், குடும்பம் என்று 
எல்லோரும் கோமதியின் மீது பரிவுடன் இருப்பதற்கு
அவரின் ஆழ்ந்த புரிதலே காரணம்.
வாழ்க வளமுடன்.//

ஒரு நாள் என்ற அக்காவின் பதிவில் இப்படி என்னை வாழ்த்தி இருக்கிறார்கள்.

இப்படி அன்பான நட்புகளை கொடுத்த இறைவனுக்கு நன்றி.
அக்கா சொல்வது போல என்னை என் குழந்தைகள்  புரிந்து கொண்டார்கள் அது தான் உண்மை. என்னை வழி நடத்துகிறார்கள் நாளும். உறவுகளும், இருபக்க உடன்பிறப்புகளும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள்.

 என் கணவர் என்னை குழந்தையை போல பார்த்து கொண்டார்கள். தானே எல்லா பொறுப்புகளையும் செய்தார்கள். நான் அவர்களை சார்ந்தே வாழ்ந்து விட்டேன்.
ஆனால் குழந்தைகள் என் காரியங்களை  நானே செய்து கொள்ள  திடமான மனதுடன் தெளிவான முடிவுகள் எடுக்க கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.


//நெல்லைத்தமிழன் எனக்கு ஆறுதல் சொல்லும் போது நல்ல பயிரை வளர்த்திருக்கிறீர்கள் அவங்க உங்களுக்கு துணையிருபார்கள் நலமே விளைக ! என்றார்.//

அது போல நல்ல குழந்தைகள் என் அறியாமையை போக்கி  எனக்கு நிறைய கற்று கொடுத்து இருக்கிறார்கள். நிறைய விஷயங்கள் மகன் மருமகள், மகள் , மருமகன், பேரக்குழந்தைகள் எல்லாம் வாழ்க்கையை சுலபமாக எதிர் கொள்ள கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். 

நாள்தோறும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு இருக்கிறேன்.

இங்கு நமக்கு வீட்டு பக்கமே கடைகள் நினைத்த போது வாங்கி கொள்ளலாம். மகன்  மகள் இருக்கும் ஊரில் நினைத்த போது பொருட்களை வாங்கி கொள்ள முடியாது.  பால் முதல் கொண்டு  காய்கறி வரை முன்பே தேவையானதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அழகாய் தட்டுபாடே இல்லாமல்  வாங்கி வைத்து கொள்கிறார்கள். தேவையானதை வெளியே போனில் ஆர்டர் செய்து விடுகிறார்கள் வீடுதேடி பொருட்கள் வந்து விடுகிறது.
நான் அவர்களை பாராட்டி கொண்டே இருப்பேன்.எப்படி இப்படி திறமையாக எல்லாம் செய்கிறார்கள் என்று வியந்து போய் விடுவேன். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. வீட்டு வேலைகளை அவர்களே தான் செய்கிறார்கள்.

இங்கு ஒரு மாதம் இருந்து விட்டு போகும் போது வீட்டுக்கு போவதற்குள் மளிகை, காய், பழங்கள் வீட்டுக்கு முன் இருப்பது போல் போனில் ஆர்டர் செய்து விட்டாளாம் மருமகள். நண்பர் வீட்டிலிருந்து இட்லி, சட்னி, சாம்பாரும் வந்து கொடுத்து விட்டு போனார்களாம். 

 இங்கும் காய்கறி மளிகைபொருட்கள் தேவையானதை  போனில் சொல்லி வாங்கி வைத்துக் கொள்ள பழக்கி விட்டு விட்டார்கள்.

கணவரும்  நானும் லிஸ்ட் போட்டு கடையில் கொடுத்து வருவோம் வீட்டுக்கு பொருட்கள் வரும். இப்போது தனித்து செய்ய பழகி கொண்டு இருக்கிறேன்.

பதட்டம் இல்லாமல் நிதானமாய் செயல்படுங்கள் இதைதான் திரும்ப திரும்ப சொல்கிறார்கள் குழந்தைகள். பேரன் அமைதி அமைதி என்கிறான்.

இறை நம்பிக்கை வாழ்க்கையில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் அப்புறம்
உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து  மனவளக்கலை படித்தாலும் அதில் ஆசிரியராக இருந்து வகுப்புகள் நடத்திய  போதும். கவலை , பயம் எல்லாம் என் கணவர் இறைவனடி சேர்ந்தவுடன் வந்து ஒட்டிக் கொண்டது. அதை குழந்தைகள் நினைவு படுத்தி கவலை ஒழித்தல், சினம் தவிர்த்தல், எண்ணம் ஆராய்தல், நான் யார்? என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நேரம் இது என்று உணர்த்தினார்கள்.



நேற்று எங்கள் குலதெய்வம் கோவிலில்  (அருள்மிகு ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர்  தர்ம சாஸ்தா) மகா கும்பாபிஷேகம்  நடந்து இருக்கிறது.

குலதெய்வ அருளால் குடும்பத்தினர் அனைவரும் நோய் நொடி இல்லாமல் மனநிறைவுடன் வாழ வேண்டும். 

என் கணவரும் தெய்வமாக இருந்து அருள்புரிய வேண்டும்.  தினம் தினம் அவர்களின் ஒவ்வொரு செயல்களின் நினைவுகளும் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் அவர்களின் இருப்பை உணர்கிறேன். அக்கா சொன்னது போல அவர்களுடன்  நாங்கள் இனிமையாக களித்த நாட்களை எண்ணிப்பார்த்து  வாழவேண்டும்.
அவர்கள் ஆசிகள், அன்பு குடும்பத்தினரை வழி நடத்தும்.




1974 ல் என் கணவர்  எனக்கு தெரியாமல் என்னை வரைந்த ஓவியம். நான் படிக்கும் போது இப்படி அமர்ந்துதான் படிப்பேன், எழுதுவேன்.

பேரன், மகனிடம் உங்கள் ஊரில் தினம் பறவைகளை கண்டு மகிழ்ந்தேன் என்றவுடன்
அமேசானில் பறவைகளை  வரவழைத்து விட்டார்கள். மகனும், மருமகளும் சேர்ந்து இரவு சுவற்றில்ஒட்டி காலையில் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார்கள். தினம் பறவைகளை வீட்டுக்குள் பார்க்கலாம்.

இங்கு தினம் பறவைகளை பால்கனி சென்று பார்த்து கொண்டு இருக்கிறேன். மகன் ஊரில் வீட்டுக்குள் இருந்தே தோட்டத்திற்கு வரும் பறவைகளை பார்க்கலாம்.


பேரன்கள், பேத்தி, எல்லோரும் மகிழ்ச்சி படுத்த பாடியும் ஆடியும் , பெரிய பேரன் மிருதங்கம் வாசித்தும் மகிழ்வித்தார்கள்.  ஆன் லைனில் வகுப்பு என்பதால் எனக்கு போனஸ் வாய்ப்பு. பெரிய பேரன்,பேத்தி எல்லாம்  அடிக்கடி பேசவில்லை என்று நினைப்பேன், அவர்கள் உடன் இருக்கும் போதுதான் தெரிகிறது அவர்களுக்கு எவ்வளவு படிக்க எழுத என்று வேலைகள் இருக்கிறது என்று. இதற்கு இடையில் நம்மிடம் பேசுகிறார்கள் அதை பாராட்டி மகிழ வேண்டும்.

பேத்தி  அன்பு தோழியாக, தாயாக இருக்கிறாள்.
என்னால் இந்த தடவை அவர்களுக்கு பிடித்தமானதை செய்து கொடுக்க முடியவில்லை. ஊரிலிருந்து வந்த படியால் சில உடல், மன பாதிப்புக்கள். 

ஒரு வருடமாய் நான் சமைக்கவில்லை அதுவும் ஒரு காரணம். மகள், மருமகள் தினம் சுவையாக சமைத்து கொடுத்தார்கள்.
இங்கு வந்த போது விருந்தினர் வருகை போது மருமகள் சமைத்தாள்.


அடுத்த தடவை வரும் போது அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.

 இந்த ஆண்டு பொங்கலுக்கு  மகன் , மருமகள், பேரன் இருந்தார்கள். மீனாட்சி அம்மன் கோயில் போனோம். சில  ஓட்டல்கள் அழைத்து சென்றான். வேகமாய் நாட்கள் ஓடி விட்டது.


பேரன் கவின்  மகன், மருமகள் ஊருக்கு போய் விட்டார்கள். மகள், பேத்தி பேரன் இருக்கிறார்கள். பொழுதுகள் வேகமாய் ஓடுகிறது. ஸ்கைப்பில் விளையாடுகிறான் உரையாடுகிறான்.  அவன் வரைந்த ஓவியங்களை அனுப்புகிறான். அதை ஒரு நாள் பதிவில் போட வேண்டும்.


வலைத்தளத்திற்கு அடிக்கடி வர முடியவில்லை, பகிர நிறைய விஷயங்கள் இருக்கிறது.

விரைவில் வருவேன் இறைவன் அருளால். 




வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 2 பிப்ரவரி, 2022

கருட சேவை உற்சவம்

 தை அமாவாசையை  ஒட்டி  மூன்று நாட்கள் சீர்காழி

அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை
நடக்கும்.

108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதன் அருகில்  11 ஆலயங்கள் இருக்கிறது. மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் கோயிலில் 11 கோயில்களில்  உள்ள சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார்கள்.   இரண்டு , மூன்று மூறை பார்த்து இருக்கிறோம் மாயவரத்தில் இருக்கும் போது. அந்த நினைவுகள் இன்று மாலை 6 மணிக்கு புதுயுக தொலைக்காட்சியிலும், வேந்தர் தொலைக்காட்சியிலும் ஒளி பரப்பிய போது வந்து போனது.

 முன்பு நாங்கூர்  கருட சேவை பார்த்த நினைவுகளும் வலைத்தளத்தில் பகிர்ந்த நினைவுகளும் வந்தது.

பழைய பதிவு மீண்டும் மீள் பதிவாக இங்கு.