ஞாயிறு, 31 மே, 2020

ஜன்னல் வழியே'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,.

குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நாள் இருந்தது. இன்று பழகி விட்டது.

புதன், 27 மே, 2020

திருக்கேதீச்சரம் திருக்கோயில்

திருக்கேத்தீஸ்வரம் thiruketheeswaram மாதோட்டம் 11.03. 2011 காலையில் நாங்கள் அனுராதபுரத்தில் இருந்து திருக்கேதீச்சரத்திற்குப் புறப்பட்டோம். திருக்கோயிலின் இருப்பிடம்: A17 பெருஞ்சாலையில் வடக்கு நோக்கிச்சென்று மகமாச்சியா என்ற ஊரில் மேற்கு நோக்கித் திரும்பி A14 சாலையில் செட்டிகுளம், முருங்கன் வழியாக மன்னார் செல்லும் வழியில் சுமார் 110 கிமீ தொலைவு செல்லவேண்டும். (மதவாச்சி என்கிற ஊர் வரையில் ரயில் வசதி உள்ளது. )பிரதான சாலையின் வடபுறம் திருக்கோயில் வளைவு உள்ளது அதன்வழியாக 4.5கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது பாலாவி அருகில் பாலாவி என்னும் தீர்த்தக் கரை அமைந்துள்ளது தூயநீர் நிறைந்த பாலாவியில் நீராடும் துறை படிக்கட்டுக்களுடன் உள்ளது.

 பெண்களுக்கென உடைமாற்றும் அறை உண்டு. கரையில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது புராண வரலாறு ஈழத்து சிவாலயங்களில் வரலாற்றுப் புகழ் மிக்கதாகவும், நாயன்மார்களால் பாடல் பெற்று, மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளைத் தாங்கி உள்ளது. ’ஈழத்துத்திருக்கோயில்கள்-வரலாறு மரபும் ’,’திருக்கேதீச்சரத் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர்’ முதலிய நூல்கள் வாயிலாக இத்தலச்சிறப்புக்கள் எங்களுக்குத் தெரியவந்தன //ஆதியில் கேதுவினால் பூசிக்கப் பட்டதால் திருகேதீச்சரம் என்றும், பின் மகா துவட்டா என்னும் தேவதச்சன் பூசித்து திருப்பணி புரிந்ததனால் ’மகாதுவட்டாபுரம்’ என்றும் பெயர் பெற்றது என்று கந்தபுராணம், தட்சிண கைலாய மான்மியம் ஆகியவை கூறுகின்றன..

 மகாதுவட்டாபுரமே காலப் போக்கில் ”மாந்தோட்டம்” ஆனது.// சிவபக்தனான் இராவணனைக் கொன்றதால், இராமன் பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க, முன்னேசுவரத்தில் பொன் லிங்கமும், திருகோணேசுவரத்தில் இரத்தினலிங்கமும், திருகேத்தீச்சரத்தில் வெள்ளிலிங்கமும் , பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் இராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார். திருக்கேதிச்சரம் இராமேஸ்வரத்திற்கு முற்பட்டது என்று வரலாறு கூறுகிறது. மேலும் இத்தலத்து இறைவனை அகத்தியமுனிவர், மண்டோதரி, அருச்சுனன் முதலியோர் வழிபட்டதாய் கூறப்படுகிறது. அருச்சுனன் தீர்த்தயாத்திரையின் போது ஈழநாட்டிலுள்ள இத்தலத்தை வணங்கி, பின் நாகர் இனப்பெண்ணை மணந்தார் என்றும் புராணம் கூறுகிறது.

 கேதீச்சரநாதனை கெளரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர், தென்கயிலாயநாதர், மத்யசேதுநிவசர், நாகநாதர், இராஜராஜேவரர், நித்தியமணவாளர், பெருந்துறை ஈசன், எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறார் இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகிய பாலாவி ஆறு பற்றி சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் “மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே” என்றும், சுந்தரர் அருளிய திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ”பாலாவியின் கரைமேல்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. ”பன்வினை போக்கும் பாலாவி” என்றும், ”பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி”என்றும் திருக்கேதீச்சரப்புராணம் கூறுகிறது. 

 திருக்கோயில் வரலாறு மாந்தோட்டம் முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியது.மாந்தை துறை முகமென்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது.உரோமர்,பாரசீகர், அரேபியர், சீனா, இந்தியர் முதலிய பல தேசத்தவர்களுடன் வர்த்தகத தொடர்புகள் மாந்தை துறைமுகத்துக்கு இருந்துள்ளன. //தந்தையால் நாடு கடத்தப்பட்டு மாந்தைத் துறைமுகத்திற்கு வந்த கலிங்க இளவரசன் விஜயன் ”திருக்கேத்தீச்சரர் கோயில் திருப்பணியை திருத்தமுற செய்வித்தான்” என்று மகாவம்சத்திலே கூறப்ப்டுகிறது. 

விஜயன் காலம் கிமு 543. இதிலிருந்து இக் கோயிலின் பழமை தெரியும். திருவாசகம் குயிற்பத்திலுள்ள, ”ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பளித்த பெருந்துறை மேயபிரான்” என்பது மாந்தையை குறிக்குமென்பர். கி.பி1028ல் இராசேந்திரசோழன் ஆட்சிசெய்த போது இவ்வாலயத்தில் ஏழுநாள் விழாவெடுத்து வைகாசி விசாகத்தில் தீர்த்தவிழா நடத்தியதாகவும், அவன் காலத்தில் கோயில் பெயர் இராஜராஜேஸ்வரம் என்றும், ஊர் பெயர் இராஜராஜபுரம் என்றும் வழங்கி பாதுகாப்புக்காக கோயிலை சுற்றி நன்னீர், கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது என்றும் இராசேந்திர சோழன் கல்வெட்டு கூறுகிறது.  

கி.பி 13ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தர பாண்டியன் இவ்வாலயத்தில் சிற்பவேலைகள செய்தான், 4வது மகிந்தனின் ஆட்சிகாலத்தில் திருகேத்தீச்சுவரம் புண்ணியதலம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பின் விஜயநகர பேரரசர் காலத்திலும் திருக்கேத்தீச்சரம் சிறப்போடு விளங்கியது.// //கி.பி 1505 ஆம் ஆண்டு போத்துக்கேயர்கள் கோயிலை அழித்து பொருட்களை கொள்ளை அடித்து கோயில் மதில் ,கோபுரம் ஆகியவற்றின் கற்களை கொண்டு ம்ன்னார் துறைமுகத்தை கட்டினர். இதன் பின் மண் மாரியால் கோயில் மண்ணால் மூடப்பட்டு அடர்ந்த காடாய் மாறியது // //கோயில் நகரம் எனப் புகழ் பெற்ற பெருநகரமாகிய மாதோட்டம் என்னும் நகரமும் பாலாவியாறும் கி.பி 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீசிய பெரும்புயலால் முற்றிலும் அழிந்து சிதைந்தன.

 பாலாவி என்னும் ஆறு மேடாகி குளமாகியது போத்துக்கேயரால் அழிக்கப்பட்டபின் சுமார் மூன்று நூற்றாண்டுகளாகத திருகேத்தீச்சுர ஆலயமும், மாந்தோட்டநகரும் மக்களால் மறக்கப்பட்ட இடமாக மாறியது. // //கி.பி. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் தோன்றி ஞானபானுவாக விளங்கிய ஆறுமுக நாவலர் இலங்கை மாந்தோட்டத்தின் ஒரு பகுதியில் ‘மறைந்து போய் ஒரு மருந்து இருக்கின்றது”, ஒரு திரவியம் இருக்கின்றது”, தேன் பொந்தொன்று இருக்கின்றது” என்று திருக்கேதீஸ்வரத் திருத்தலத்திலெழுந்தருளிய் திருக்கேதீஸ்வர நாதனை இலங்கைச் சைவமக்களுக்கும் சைவ உலகுக்கும் முதன் முதலில் நினைவூட்டி, உணர்வூட்டி, பிரசாரம் செய்து, அறிக்கை ஒன்றையும், துண்டு வெளியீடுகளையும் வெளியிட்டருளினார்கள். இவ்வாறாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நினைவை மக்களுக்கு அறிவித்து உண்ர்த்திய பெருமை ஆறுமுக நாவலர் பெருமான் அவர்கட்கே உரியதாகும். அவர் சைவ அன்பர்கள் பலரையும் கூட்டி திருக்கேதீச்சரத்தை கண்டறியச் செய்தார். அன்பர்கள் நகரின் சிதைவுகளை அகற்றிக் கோயிலை புனர்நிர்மாணம் செய்தனர்.

 மறைந்தாகக் கருதப்பட்ட40 ஏக்கர் நிலம் 3100 ரூபாவிற்கு ஏலத்தில் சைவமக்கள் சார்பாக வாங்கி சைவப்பெரியார்கள் நிலத்தில் புதைந்த திருவுருவங்களை கண்டுபிடித்து திருப்பணிகள் செய்தனர். 1903ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1919 ஆம் ஆண்டு ஆரம்பித்து பலமுறை அன்பர்கள் பலராலும் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்பர் திரு. நமசிவாயத்தின் அயராத முயற்சியால் ஆலயம் சிறப்புடன் 2003ல் கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது// //இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தர்மடம், சுந்தரர் மடம், நாட்டுக்கோட்டை நகரத்தார் மடம், அம்மன் மடம், பசுமடம், பூநகரி மடம், சபாரத்தினசாமிமடம், சிவராத்திரிமடம், திருவாசக மடம், , திருப்பதி மடம், கெளரீசர்மடம், நாவலர்பெருமான் மடம், விசுவகன்ம மடம், திருக்குறிப்புத்தொண்டர் மடம், என பல மடங்கள் 1990ஆம் ஆண்டு வரை காணப்பட்டன. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் அரசுப்படைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, ஒரு மடம்கூட மிஞ்சவில்லை அழகிய வேலைப்பாடு மிகுந்த தேரும் குண்டுவீச்சில் தப்பவில்லை. 2003லிருந்து பூஜைகள் நடந்து வருகிறது// //இலங்கையில் ஆட்சி செய்த சோழ, பாண்டிய மன்னர்களால் சிறப்புடன் விளங்கியது. திருக்கேதீச்சரத்தின் உயர்வு தாழ்வுகளுக்கேற்ப இலங்கை வாழ் மக்கள் வாழ்வும் தாழ்வும் ஏற்பட்டது//என சொல்கிறார்கள் திருக்கோயில் அமைப்பு இக்கோயில் ஐந்து நிலைகளுள்ள இராசகோபுரத்தைக் கொண்டுள்ளது. 

அதன் மேலே ஐந்து கலசங்கள் விளங்குகின்றன. இராஜகோபுரத்தின் அருகில் அமைந்துள்ள உயரமான கோபுரத்தில் இரண்டு டன் எடையுள்ள வெண்கல் ஆலயமணி காணப்படுகிறது.இது இசைக்குறிப்பில் காணப்படும் ’இ’ என்ற நாத ஒலியமைப்பில் இது உருவாக்கப்பட்டதென்கிறார்கள் கோபுரத்தின் உள் நுழையுமுன் வலதுபுறம் குணவாசல் பிள்ளையார்,இடது புறம் குணவாசல் சுப்பிரமணியர் சந்நிதிகள் உயரமாய் அமைந்துள்ளன. நடுவில் நந்திமண்டபம் பெரிதாக இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் ,கோபுரத்தின் இரு புறமும் சூரிய சந்திரர்களின் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம்,பலிபீடம்,நந்தி முதலியவை சுவாமி சந்நிதிக்கு நேரே அமைந்துள்ளன, துவார பாலகர்கள் வாயிலில் இருக்கிறார்கள். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. திருக்கேதீச்சரம் இறைவன் பெயர்- திருகேத்தீச்சர நாதர் இறைவி பெயர்- கெளரிஅம்மை, தீர்த்தம்- பாலாவி. தலவிருட்சம் - வன்னி.. கர்ப்பகிரகம்,அர்த்தமண்டபம்,மகாமண்டபம் ஆகியவை உள்ளன.மஹாமண்டபம் அஸ்பெஸ்டாஸ் கூரையோடு விளங்குகிறது. மூலவர் சிறிய இலிங்கத்திருமேனியுடன் விளங்குகிறார். 


விமானம் 3 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.உள்ளே நுழைந்ததும் தென்பிரகாரத்தில் பதிகம் பாடிய சம்பந்தர், கேதுபகவான், சமயக்குரவர் நால்வர், சேக்கிழார், சந்தானகுரவர், திருமுறைகள் வேதாகமம், பதிகம் பாடிய சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.மேற்குப் பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், சோமாஸ்கந்தர், பஞசலிங்கம், சோமாஸ்கந்தர் ,மகாவிஷ்ணு, மகாலிங்கம், மகாலட்சுமி ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. வடக்குப்பிரகாரத்தில் தெற்கு நோக்கி ஆறுமுகர் வள்ளி தெய்வயானை உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். வடகிழக்கில் யாகசாலை,பைரவர் சந்நிதி,பள்ளியறை,நவக்கிரக சந்நிதி ,நடராசர் சந்நிதி , கருவூலம், அமைந்துள்ளன. கர்ப்பகிரகத்தின் வெளிச் சுவரின் தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோற்பவர், வடக்கில் பிரம்மா துர்க்கா, சண்டேசர். ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.63 நாயன்மார்கள், சேக்கிழார், நால்வர், சந்தானக் குரவர்கள், நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோருக்குச் சிலைகள் உள்ளன. ராசராசனது கையில் திருமுறை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. 

 கோயிலுக்கென தேர்கள் உள்ளன.வசந்த மண்டபம் உள்ளது திருஞானசம்பந்தர் தேவாரம்: //விருது குன்றமா மேருவி னாணரவாவன லெரியம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றறைபதி எந்நாளும் கருது கின்றவூர்க் கனைகடல் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரம் கைதொழக் கடுவினை யடையாவே.// சுந்தரர் தேவாரம்: //கறையார் கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார்பொழில் வண்டியாழ்செயும் கேதீச்சரத் தானை மறையார்புக ழூரன்னடித் தொண்டன்னுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொல்லக் கூடாகொடு வினையே// விழாக்கள் ஐந்து பெரிய தேர்கள் வைகாசி விசாகத்தின் போது பவனி வரும். மகாசிவராத்திரி சமயம் பாலாவி நீர் எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதனை தீர்த்தக்காவடி என்பர்.

அம்மனுக்குக் கேதார கெளரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாலாவி குளத்தில் குளித்து மக்கள் திருகேத்தீச்சரநாதரை வழிபடுகிறார்கள். நாங்கள் போன போது உச்சிகால பூசை நடந்து கொண்டு இருந்ததது அதனால் நேரே கோவில் போய் விட்டோம். பூசைசெய்யும் கட்டளைக்காரர்கள் மட்டும் தான் உள்ளே அனுமதி நாங்கள் வெளியிலிருந்து –மகாமண்டபத்திலிருந்து இறைவனை வணங்கினோம். இத்தலத்திற்குரிய தேவாரப்பாடல்களை சந்நிதியில் நின்று பாடினோம். உள்பிரகார வழிபாடு முடியவும் கோயில் நடை சார்ர்த்தும் நேரம் வந்தது.. பின் பாலாவி குளத்திற்குச் சென்று தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு அங்கு இருக்கும் பாலாவிப் பிள்ளையாரை வணங்கி வந்தோம். திருகேத்தீச்சர கோவில் வாசலில் புத்தக கடை, மாலைகள்,கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. என் கணவர் திருக்கேதீச்சரம் திருக்குடத் திருமஞ்சனப் பெருவிழா மலர், திருக்கேதீச்சர தலவரலாறு, புத்தகங்கள் வாங்கினார்கள். மதிய உணவுக்காக ,சைவ உணவகத்தை தேடித் தேடி போய் மன்னார் கிராண்ட் பஜாரில் உள்ள கமலா உணவகம் போய் உணவு சாப்பிட்டோம். பிறகு அன்றிரவு தம்பல்ல என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.அடுத்த நாள் நாங்கள் திருக்கோணேஸ்வரம் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்..

                                                                          வாழ்க வளமுடன்.

இலங்கைத் திருக்கோயில்கள்

இலங்கைத் திருக்கோயில்கள்
கதிர்காமம், முன்னேஸ்வரம், கேதீச்சரம், பொன்னம்பலவாணர்
திருக்கோயில் என நான்கு பதிவுகளில் எனது இலங்கைப்
பயணம் குறித்து எழுதியுள்ளேன். அதன் நிறைவுப் பகுதியாக
இக்கட்டுரை அமைகிறது. 1. திருக்கோணமலை. 12.03.2011 Thirukoneswaram நாங்கள் திருக்கேதீச்சரத்திலிருந்து புறப்பட்டு தம்புலா என்ற
இடத்திற்குச்சென்று தங்கினோம். ”ஙிமங்கலா”(Gimengala
hotel)என்ற விடுதியில் தங்கினோம்.
’ஙி’ என்ற தமிழ் எழுத்து பயன்பாட்டில் உள்ளதை இங்கு தான்
பார்த்தோம்.
மறுநாள் திருக்கோணமலை சென்றோம்.
இத்திருக்கோயிலைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
திருக்கோணமலைக் கோயில் ஒரு சிறிய மலைமீது உள்ளது.
வடக்கு,கிழக்கில் நீலக்கடல் சூழ்ந்துள்ளது.
கோயிலுக்கு முன்னே பெரிய பாறை ஒன்று உள்ளது
பாறையின் ஒருபுறம் திருஞானசம்பந்தரின் திருவுருவச்சிலை
சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டு வருகிறது. அவரது கைகளில்
தாளம் உள்ளது. பாறையின் மேலே கல்விளக்குத்தூண்
அமைந்துள்ளது. பாறையின் ஒரு புறம் படிகள் கீழிறங்கி
இன்னொரு புறம் மேலேறி வரும்படியாகக் கட்டப்பட்டு
வருகிறது. அங்கு இராவணன், தன் வீணையைக் கீழே
வைத்துவிட்டு சிவபெருமானை வணங்குவது போல் சிலை
அமைந்துள்ளது.
திருக்கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராசகோபுரம். உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம் அமைந்துள்ளன.
வலது புறம் அலுவலகம் அமைந்துள்ளது. மஹாமண்டபம் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடியது, அதைத் தாண்டியதும் அர்த்தமண்டபம் உள்ளது. கருவறையில்
கோணேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்
விமானம் 3 அடுக்காக அமைந்துள்ளது. அம்மன் திருவுருவம்
தெற்கு நோக்கி உள்ளது. அம்மனின் இடதுபுறம் நடராசர்
திருமேனி அமைந்துள்ளது. தெற்குப்பிரகாரத்தில்
திருமுறைகள், நால்வர், சேக்கிழார் ஆகியோருக்குச் சந்நிதிகள்
உள்ளன. மணிமண்டபம், தெற்குவாசல் ஆகியனவும் உள்ளன.
அம்மன் சந்நிதியில் தனியாகக் கொடி மரம், பலிபீடம்
உள்ளன. மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், லிங்கம், முருகன்
திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள முருகனை
அருணகிரியார் பாடியுள்ளார் .
“நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தொரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்-வருவோனே
நிகழ்த்தும் ஏழ்பவ கடற்சூறை யாகவெ
எடுத்த வேல்கொடு பொடித்தூள தாயெறி
நினைத்த காரியம் அநுக்கூல மேபுரி-பெருமாளே.”
என்று அவர் பாடியுள்ளார்.
வடக்குப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. வடமேற்கில் உற்சவர், பைரவர் சந்நிதி, யாகசாலை உள்ளன. கிழக்குப்பிரகாரத்தில் வாயிலில் வடபுறம்-நாகலிங்கம், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் வாயிலில் தென்புறம்-சந்திரன் சந்நிதி உள்ளது. பூசை நேரம்: காலை 6.30, 11.30, 4.30 நடை சாத்தல்: 11.00, 1.00, 7.00 கோவிலுக்கு வடக்கில் தேர் நிலையுள்ளது. குடமுழுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.கோயிலுக்கு
வெளியே பாறைப்பகுதிகளில் பெரிய பிளவு அமைந்துள்ளது.
இதனை இராவணன் வெட்டு என்கிறார்கள். இராவணன்
வாளால் வெட்டியதால் இது ஏற்பட்டது என்கிறார்கள்.
கோவில் தரிசனம் முடிந்தவுடன் மதியம் உணவு நேரம் வந்து
விட்டது. திருக்கோணமலை ஊருக்குள்ளே உணவகங்கள்
உள்ளன. சைவ உணவகத்தைத் தேடித் தேடிக் கண்டு
பிடித்தோம். மண் சட்டியில் தயிர் வாங்கி கொண்டு வந்து
இருந்தோம். அந்த உணவகத்தில் காய் குழம்பு எல்லாம் ஒரு
தட்டில் போட்டு கொடுத்துவிடுகிறார்கள். தயிர் கிடையாது.
நாங்கள் வாங்கிப் போன தயிரை வைத்து மனதுக்கு
திருப்தியாக உண்டோம். உணவகத்தில் கொடுத்த மோர்
மிளகாய் நன்றாக இருந்தது.
சைவ உணவகம் இருப்பிடம்:
அன்னபூரணி சைவ உணவகம், 415 dockyard road,trincomalee Ph.026 5678888, 02656799999
திருக்கோணமலையிலிருந்து கண்டியை நோக்கிப்
புறப்பட்டோம். கண்டி செல்லும் பாதையில் 5.கி.மீ சென்று
மேற்கில் கிளைச்சாலையில் 4 கி.மீ சென்றால் கன்னியா
நீரூற்று அமைந்துள்ளது.
இவ்விடத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் பல உள்ளன.நீர்ப்பரப்பில்
நீர்க்குமிழிகள் உள்ளிருந்து வந்தவண்ணம் இருந்தது.தரை
பாசிபிடித்துவழுக்குகிறது. எச்சரிக்கையாகச் செல்லவேண்டும்.
நீர் சூடாகவே உள்ளது.நீராடலாம். மலைப்பகுதிகளில் நடந்து
வந்த எங்களின் கால்களுக்கு அந்த வெந்நீர் இதமாக இருந்தது.
தம்பூலா என்ற இடத்தில் புத்தர் கோயில் உள்ளது. இக் கோயிலை வெளியிலிருந்து தரிசனம் செய்தோம்.
கண்டியில் குயின்ஸ் விடுதியில் (Queens Hotel)தங்கினோம். >
கொண்டிருந்தது. பெருந்திரளான மக்கள் பார்வையாளராக இருந்தனர்.
பெரும்பாலான மக்கள் குடையைப் பிடித்துக்கொண்டிருந்தனர்.
மழை பெய்யாத அந்த இரவு நேரத்தில் ஏன் குடை பிடித்திருக்
கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் நின்றுகொண்டிருந்த
மரங்களின் எல்லாக்கிளைகளிலும் கொக்குப்போன்ற வெள்ளை
நிறப்பறவைகள் நிறைந்திருந்தன.அவற்றின்எச்சம் மழை
போலப் பொழிந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு கோயில்
திருக்குளம் போல நீர்நிலை உள்ளது. அதன் நீளமான பக்கச்
சுவர்களில் நிறைய விளக்கு மாடங்கள் இருந்தன.விசேஷ
காலங்களில் அதில் விளக்குகள் வைப்பர்களாம்.
கண்டி நகரில் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள கோயிலுக்குச்
சென்றோம். முக்கிய இடமான சந்நிதி எப்போதும் திரையிடப்
பட்டே இருக்கிறது. புத்தரின் வரலாறு,புத்தரின் பல்
அவ்விடத்திற்கு வந்த வரலாறு முதலியவற்றை விளக்கும்
பெரிய ஓவியங்கள் உள்ளன.புத்தரின் திருவுருவம் உள்ள
மண்டபம் உள்ளது.கோயில் அழகிய அகழியால்
சூழப்பட்டுள்ளது. ***
2.கண்டி சிவன் கோயில் 13.03.11 கண்டி கண்டியில் ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோயில் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகர
மூர்த்தி பெருமான் கோயில் என்றும் இதைக்கூறுவர்
திருக்கோயில் அமைப்பு: கோயிலினுள் நுழைந்ததும் பலி பீடம் கொடிமரம் முதலியவை காணப்படுகின்றன. அடுத்ததாக நந்தியின் திருவுருவம் உள்ளது. கல்லில் அமைந்த இந்த நந்தி திருவுருவத்தின் வாயில் ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறது. சோமசுந்தரர் சந்நிதி கிழக்கு நோக்கியும், மீனாட்சியம்மன்
சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. சோமசுந்தரர்
சந்நிதிக்குத் தெற்கில், செல்வ விநாயகர் சந்நிதியும் இடப்புறம்
தண்டபாணி சந்நிதியும் உள்ளன. மீனாட்சியம்மன் சந்நிதியின்
அருகில் தெற்கு நோக்கி பஞ்சமுக விநாயகர் சந்நிதி, பள்ளி
யறை, நவக்கிரக சந்நிதி ஆகியவை உள்ளன.
வடமேற்கு திசையில் பஞ்சமூர்த்திகள் உள்ளனர். சூரியன்,
சந்திரன் ஆகியோரின் சந்நிதிகள் வாயிலின் இருபுறமும்
உட்புறம் அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கிலிருந்து மேற்காக துர்க்கை,நால்வர்,பெருமாள்
சந்நிதிகள் உள்ளன. தெற்கு திசையில் திருவாயில் ஒன்று
உள்ளது. அந்த வாயிலின் அருகில் மணிமண்டபம் உள்ளது.
கன்னி மூலையில் பிள்ளையார் சந்நிதி உள்ளது. மேற்கு
பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், காசிவிஸ்வநாதர்,விசாலாட்சி,
பஞ்சலிங்கம் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. சிறிய
அழகிய மரத்தேர் ஒன்றும் இங்கே உள்ளது.ஆறுமுகர், ஐந்து
முகங்களைக் கொண்ட பஞ்சலிங்கம், நவக்கிரகம், பைரவர்
ஆகியோருக்கு வடக்குப் பிரகாரத்தில் சந்நிதிகள் உள்ளன. மாசி மாதம் பெருந்திருவிழா நடைபெறுகிறது. பஞ்சரதபவனி,
பால்குடவிழாக்கள் நடைபெறுகின்றன. செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டு சிறப்பாக நிர்வாகம் நடைபெறுகிறது. அரு.லே.சேவு.நா. டிரஸ்ட்டின் நிர்வாக
அறங்காவலர் கோயிலை நிர்வகித்து வருகிறார்.
***
3.பக்த அனுமான் திருக்கோயில்
நுவரேலியாவிலிருந்து கண்டி செல்லும் வழியில் இராம்போத ஸ்ரீ பக்த ஹனுமன் ஆலயம் இருக்கிறது. மேகம் சூழ்ந்த நுவரேலியா
மேகம் சூழ்ந்த இடம் தேயிலைச் செடிகள். இங்குள்ள தேயிலை
நன்றாக இருக்குமாம். பக்த அனுமான் திருக்கோயில் திருக்கோயிலை அடைய, சாலையில் இருந்து சற்றுதூரம்
மலை மேலே சில படிகள் ஏறிச் செல்லவேண்டும்.
திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்து உள்ளது.
இங்கு ஹனுமானின் பேருருவம் வழிபடப்படுகிறது. சீதா,
ராமர், லக்ஷ்மணர் ஆகியோருக்கு விக்ரகங்கள் உள்ளன.
தியானேஸ்வர லிங்கம் ஒரு சந்நிதியில் அமைந்துள்ளது.
சிறப்புப்பூசைகள், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன சின்மயா மிஷன் இத்திருக்கோயிலை நிர்மாணித்து
நிர்வகித்து வருகிறது. இங்கு பள்ளி ஒன்றையும்
இந்நிறுவனம் நடத்திவருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில்
சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பிள்ளைகள் வந்து
பயின்று வருகின்றனர். கோலம்போடுதல் போன்ற தமிழ்க்
கலாசாரங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தையல், கர்நாடக
சங்கீதம், ஆங்கிலம், பகவத் கீதை வகுப்புகள் சனி, ஞாயிறு
நாட்களில் நடைபெறுகின்றன. பவுர்ணமி நாட்களில்
அடியார்கள் பலவிடங்களில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
நாங்கள் போனபோது குழந்தைகளுக்கு கோலம் சொல்லிக்
கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். குழந்தைகள் அழகாய்
கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் கோலம் நன்றாக
இருக்கிறது என்று பாராட்டியவுடன் வெட்கம் கலந்த சிரிப்பால்
அதை ஏற்றுக் கொண்டனர். கோயிலின் கீழ்த்தளத்தில்
தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
இக்கோயிலுக்கு சுவாமி தேஜோமயானந்தர் முன்னிலையில்
08.04.2001ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வருசாபிசேக
விழாக்கள் நடந்து வருகின்றன
சாலைப் பிரிவின் அருகில் அருள்மிகு வரதராஜ
விநாயகர் கோயில் என்னும் சிறு கோயில் உள்ளது.
***
4. சீதா எலியா (அசோகவனம்) 13.03.11 நுவரேலியாவிலிருந்து கண்டி செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் ’சீதாஎலியா’ என்னும் இடம் இருக்கிறது. சீதாதேவி இராவணனால் எடுத்துச்செல்லப்பட்டு
இலங்கையில் சிறைவைக்கப்பட்டாள் என்று இராமாயணம்
கூறுகிறது.
அசோகவனம் என்று சொல்லப்படும் இடம் இதுதான் என்று கூறுகின்றனர். இலங்கைச் சுற்றுலாக்கழகம் இதன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இக்கோயிலில் சீதை, இராமன், இலக்‌ஷ்மணன்
ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு
முன் சீதை முதலியோரின் பஞ்சலோகச் சிலைகள்
கண்டெடுக்கப்பட்டு அவை இங்கு வைக்கப்பட்டுள்ளன.
அவை கருத்த நிறத்தைக் கொண்டிருக்கின்றன.இங்கு
குரங்குகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அசோக மரங்கள்
அதிகமாக இருக்கின்றன .
ஒரு அசோகமரம் தனியாக உள்ளது. சீதாதேவி
அமர்ந்திருந்த இடம் அதுதான் என்று கூறுகிறார்கள்.
அருகில் ஒரு நீரோடை இருக்கிறது. அனுமானின் பாதங்கள்
ஒரு பாறையில் காணப்படுகின்றன. அனுமன் மரத்திலிருந்து
குதித்த கால் தடங்கள் என்றார்கள். அருகில் உள்ள பாறை ஒன்றில் சீதை தியானம் செய்ததாகக்
கூறப்படுகிறது. கல்கத்தா மனோஜ் மோடி ஃபவுண்டேஷன், இத்திருக்கோயில் அமைய உதவியிருக்கிறது. மாமல்லபுரம் ரவிஷங்கர் ஸ்தபதி உருவாக்கிய சிற்பங்கள் இங்கு அமைந்துள்ளன.
தூண்களில் உள்ள சிற்பங்களில் ராமாயணக்காட்சிகள் உள்ளன.
நடை திறக்க நேரம் ஆகும் போல் இருந்தது அதனால்
கிளம்பலாம் என்று கிளம்பினால் எங்களை காரில் ஏறவிடாமல்
குரங்குகள் தடுத்தன. பயந்து போய் சந்நிதிக்குள் திரும்பிவந்த
போது பார்த்தால் அர்ச்சகர் கோவிலைத் திறந்து
கொண்டிருந்தார். மெய் சிலிர்த்து விட்டது. இவ்வளவு
தூரம் வந்து சீதாதேவியைப் பார்க்காமல் போவதா என்ற
எண்ணத்தைப் பூர்த்தி செய்யத்தான், சீதைக்கு உதவி செய்த
அனுமன் எனக்கும் உதவி செய்து இருக்கிறார்.
5.மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் Matale muthu mariyamman thirukkoyil
மாத்தளையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் சிறப்பு
வாய்ந்தது. கோவிலின் அருகில் மாவலிகங்கை ஓடுகிறது. 108 அடி உயரமான கோபுரம் உள்ளது. மாசிமகத்தில் திருவிழா
நடைபெறுகிறது. அப்போது ஐந்து தேர்களில் பவனி
நடைபெறுமாம்.
6.கொழும்பு ,சம்மங்கோடு பம்பலப்பிட்டிய, மாணிக்கவிநாயகர்
திருக்கோயில். Sammangodu bampalappittiya sri maanikkavinaayakar thirukkoyil,Lawrence road ,Colombo
தண்டாயுதபாணி, பஞ்சமுக விநாயகர், ஆறுமுகர், துர்க்கை,
இடும்பன் சந்நிதிகள் இங்கு உள்ளன.சிறிய மரத்தேர் உள்ளது. இங்கு எங்கள் வழிபாட்டை முடித்ததும் இலங்கையில்
கோயில்வழிபாடுகள் நிறைவடைந்தன.
***
பம்பலப்பிட்டியில் சிறந்த சைவ உணவுக்குரிய இடம்:
அமிர்தா ஹோட்டல்.
கொழும்புவில் வாணி விலாஸ் என்னும் உணவு விடுதியும்
நன்றாக இருக்கும் என்றார்கள்.
இலங்கையில் ஹிக்குடுவா கடற்கரை,பெண்டொட்டா
கடற்கரை ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.
ஹிக்குடுவா கடற்கரை
பெண்டொட்டா கடற்கரையிலிருந்து கார்,ரயில்,படகு இவற்றின்
தோற்றம். பெண்டொட்டா இலங்கையில் பார்த்த சில இடங்கள்:
அநுராதபுரம்,புத்தஸ்தூபி
இது எங்கள் பயணத்தில் இல்லாவிட்டாலும், பயணித்த வழியில்
இருந்ததால் இதையும் பார்த்தோம்.
இலங்கை மன்னார் அருகில் ஓரிடத்தில் பெருக்கமரம்
என்று குறிக்கப்படும் மரம் பார்த்தோம்.உலகில் உள்ள
பெரியமரங்களில் இதுவும் ஒன்றாம். சுற்றளவு பெரிதாக உள்ளது.
மறுநாள் 15.03.2011காலை விமானம் மூலம் புறப்பட்டோம்.
இலங்கைப் பயணம் இறையருளால் இனிதே நிறைவேறி
இந்தியா திரும்பினோம். இலங்கை பயணக்கட்டுரை
இத்துடன் முற்றுப் பெற்றது.
************