செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மே தினம்

மே  1 ஆம் தேதி தொழிலாளர் தினம்.

அனைத்துத்  தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  உழைப்பாளிகள் ஆன உழவர்களை வள்ளுவர் போற்றுகிறார் :-

//சுழன்றுமேர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை.//

எந்தத் தொழில் செய்தாலும் அதைத்  தெய்வமாகப் போற்றி,  தன்
திறமையைக் காட்டி முன்னேற வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அழகாய்ப் பாடலாக்கி வைத்து இருக்கிறார்.

அவர் புரிந்த தொழில்கள் பல! முதலில் உழவுத் தொழில்.
17 தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்.
 இதை ப, ஜீவானந்தம் அவர்கள், கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிவைத்து இருந்த கைக்குறிப்பை படித்துச் சொன்னது.
அவை ;
1.விவசாயி
2. மாடு மேய்ப்பவன்
3.மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5.இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத்தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12.தண்ணி வண்டிக்காரன்
13.அரசியல்வாதி
14.பாடகன்
15,நடிகன்
16.நடனக்காரன்
17. கவிஞன்

இத்தனை தொழில் புரிந்த பட்டுக்கோட்டை அவர்களை இந்த தொழிலாளர் தினத்தில் நினைவுகூறலாம்.

அவர் பலதொழில்கள் பற்றிப் பாடி இருக்கிறார்.

தொழிலாளர் தினம் என்றால்,” செய்யும் தொழிலே தெய்வம்” பாடல் எல்லாவானொலியிலும் ஒலிபரப்புவார்கள்
.
இப்போது தொலைக்காட்சிகளிலும் இடம்பெறுகிறது
.
தொழில் செய்யும் போது தூங்ககூடாது என்பதை அழகாய்,” தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடல் மூலம் சொல்லி இருப்பார். திரு எம்,ஜி,ஆர் அவர்கள் நாடோடி மன்னனில் பாடி, அவருக்குப் புகழ் சேர்த்த பாடல்.   விவசாயி எவ்வளவுதான் பாடு பட்டாலும் விவ்சாயிக்கு கையும், காலும் தான் மிச்சம் என பாடுகிறார், எத்தனை தொழிலாள்ர்களைப் பாடி இருக்கிறார். மிகவும் கேட்காத பழைய பாடல்களை தொகுத்து உங்களுக்கு  பகிர்ந்து இருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
                                                                                                                                             
//செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி – கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி                          (செய்யும்)
பயிரை வளர்த்தால் பலனாகும் – அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குலமானமுண்டு
வருங்காலமுண்டு அதை  நம்பிடுவோம்.           (செய்யும்)

சாமிக்குத் தெரியும் , பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை -அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்தபலனை==இதைப்
பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்.                   (செய்யும்)

காயும் ஒரு நாள் கனியாகும் – நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும் – நம்
கனவும் நினைவும் நிலையாகும் – உடல்
வாடினாலும் பசி மீறினாலும் – வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்                           (செய்யும்)//

திரைப்படம் ---- ஆளுக்கு ஒரு வீடு வருடம் 1960

                                                                      ------

                                                          உழைப்பு தேவை

//படிப்பு தேவை --- அதோடு
உழைப்பு தேவை--- முன்னேற
படிப்பு தேவை= அதோடு
 உழைப்பும் தேவை!

உண்மை  தெரியும்
உலகம் தெரியும்
படிப்பாலே --நம்
உடலும் வளரும்
தொழிலும் வளரும்
உழைப்பாலே---எதற்கும்  (படி)

பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
பலப்பல உண்டு --மன
பக்குவம் கொண்டு
மக்கள்முன்னேறக்
காரணம் ரெண்டு---அதுதான்
வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத் தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும்தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிர் விவரம்கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி!--எதற்கும் (படி)

ஜனத்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர் --மேலும்
பணம்சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால் தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்---மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின்நிலைமை
மோசமாக முடியும்---- எதற்கும்     (படி)//

திரைப்படம்--- சங்கிலித்தேவன்.    1960

                                                 -----------------

            கரம் சாயா  விற்பவர்   
                                                             
//சாயா  சாயா கரம் சாயா கரம் சாயா
ஓரணாதான்யா சாப்பிட்டு போய்யா
ஒடம்பை பாருய்யா வாய்யா வாய்யா
வேலைக்கில்லாமே வீண்செலவாகும்
மூளைக்கு மருந்து சாயா
வேடிக்கையான ஜோடிக்கு சீமான்
ஜாலிக்கும் விருந்து சாயா.

வேளைக்கு வேளை  வீட்டுக்கு வீடு
வேண்டிய  நண்பன் சாயா
வெளியிலே அறையிலே  கடையிலே கப்பலிலே
சபையில் குடிப்பது சாயா ஏன்யா? ( கரம்சாயா)

கொழுத்துத் தேயிலே குளிரும் பனியிலே
கொழுக்கும் மலையிலே வெளைஞ்சுது;
கொறைஞ்ச வெலையிலே மிகுந்த சுவையிலே
குணமும், மணமும் நிறைஞ்சது

மேடையிலே பேசும் லீடரும் போலீஸ்
வீரரும் விரும்பிக் கேட்பது;
நாடகம் சினிமா நாட்டியமாடும்
தோழரும் வாங்கி சுவைப்பது
மூலையில் தூங்கும் சோம்பலும் நீங்கும்
ஏலமும் சுக்கும் கலந்தது;
இரவிலே பகலிலே ரயிலே, வெயிலிலே
ஏரோப் பிளேனிலே கிடைப்பது     (கரம்சாயா)//

படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
                                                          ------------------

                                     தாயத்து விற்பவர்
                                     ----------------------------        
ஒரு பாட்டில் தாயத்து விற்கும் தொழிலாளியிடம்
பணம் வருமானத்திற்கு ஏதாவது வழி இருக்கா இதிலே என்று கேட்கிறார்  ஒருவர்

அதற்கு தாயத்து விற்கும் வியாபாரி சொல்லும் பதில்:

//ஒடம்பை வளைச்சு நல்லா ஒழைச்சி பாரு - பாரு
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உக்கார்ந்து கிட்டு சேக்கிற பணத்துக்கு
ஆபத்திற்கு அது உனக்கெதுக்கு ?//

என்கிறார்.
திரைப்படம் மகாதேவி  வருடம்1957

நாங்க இதயமுள்ள கூட்டம் என்று சொல்லும்
வாசனை திரவியம் விற்பவர் பாடுவது:

//சட்டையிலே தேச்சுக்கலாம்
சகலருமே பூசிக்கலாம்
கைகுட்டையிலே நனைச்சுக்கலாம்
கூந்தலிலே  தெளிச்சுக்கலாம்.
கொஞ்சம் பட்டாலும் போதுமுங்க
வாடை பல நாள் இருக்குமுங்க//

திரைப்படம்-- சங்கிலித்தேவன் வருடம் 1960
                                            ------

நிழற்படம் எடுப்பவர் பாடும் பாட்டு

//காப்பி ஒண்ணு எட்டணா
கார்டு சைசு பத்தணா
காணவெகு ஜோரா யிருக்கும்
காமிராவைத்தட்டினா

பிள்ளைகுட்டி கூடநிண்ணு
பெரிதாகவும் எடுக்கலாம்
பிரியம்போல காசு பணம
சலிசாகவும் கொடுக்கலாம்.

தனியாக வந்தாலும்
கூட்டமாக வந்தாலும்
சார்ஜ் ஒண்ணுதான் வாஙக- ஒரு
சான்ஸ் அடிச்சுப்பாக்க வாருங்க.//

திரைப்படம்
படித்தபெண் வருடம்-- 1956


இந்தப் பாடல்கள் எல்லாம்  எங்கள் வீட்டில் இருந்த  புத்தகத்திலிருந்து எடுத்தவை.

புத்தகத்தின் பெயர்

‘மக்கள்கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்”

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்   பாடல்களை தொகுத்தவர் பி.இ. பாலகிருஷ்ணன் அவர்கள்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட் வெளியிட்டு இருக்கிறது. அந்தக்காலத்தில் அதன் விலை 10 ரூபாய்.

//உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.//

----வேதாத்திரி மகரிஷி

                                                 வாழ்கவளமுடன்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில்




யோகி ராமய்யா அவர்கள் சென்னை மயிலாப்பூரில் 1952ஆம் ஆண்டில் ’கிரியா பாபாஜி யோக சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவர் அமெரிக்காவில் யோகப் பயிற்சி நிலையங்களை  ஏற்படுத்தி இருக்கிறார். நியூயார்க், வாசிங்டன் ஆகிய இடங்களில் அவரது கோவில்கள் உள்ளன.

அவர் 1954ல் பதரிநாத்துக்கு அருகில் கிரியாயோகாவை, பாபாஜி நாகராஜிடமிருந்து தீட்சை பெற்றார். அவருடைய யோக சங்கமானது இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2006 ஜூலை 12ஆம் தேதி கோலால்ம்பூரில் அவர் சித்தி அடைந்தார்.
அவருடைய ஆசிரமம் தமிழ்நாட்டில் கானாடு காத்தான் என்ற ஊரில் உள்ளது.






பாபாஜி கோவில் பரங்கிபேட்டையில் இருக்கிறது என்று கேள்விப்பட்டோம். சித்திராபெளர்ணமி அன்று  சிதம்பரம் சென்று சித்திரகுப்தரை தரிசிக்க சென்ற போது முதலில் பாபாஜி கோவில் சென்றோம்.  

சிதம்பரத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் பரங்கி பேட்டை என்ற இடத்தில் பாபாஜி அவதரித்தாகக் கூறப்படுகிறது. அவருக்கு இங்கு ஆலயம் உள்ளது. இந்த கோவிலை பாபாஜியின்  நேர் சீடர் ராமைய்யா அவர்கள் கட்டி இருக்கிறார்கள். 


இக்கோயிலில் நடுவில் பாபாஜி மூலவராக அமர்ந்து இருக்கிறார்.  சதுர வடிவத்தில் ஆவுடையார் பீடத்தில் பாபாஜி அமர்ந்து இருக்கிறார். வலது கையில் அபய முத்திரை. இடக்கையை மடியில் வைத்து இருக்கிறார். இவ்வூரில் மட்டுமே பாபாஜி சிலை இருக்கிறது. கோவில் வாசல் அருகில் வலப்பக்கத்தில் பிள்ளையார் திருவுருவம் உள்ளது. 
பாபாஜி கதிர்காமம் சென்ற போது அங்குள்ள ஆலமரத்தில் முருகன் அவருக்கு  காட்சி கொடுத்தராம். அதை விளக்குவது போல்  இடப்பக்கத்தில்  அந்த காட்சியை சிலையாக வடித்து  இருக்கிறார்கள்.
மண்டபத்தில் இரண்டு தூண்களில் அன்னை மற்றும் கிரியா அன்னை என்னும் சீடர்களின் வடிவங்கள் உள்ளன. இந்த தூண்களுக்கு கீழே பஞ்சாங்க கிரியாபீடம் உள்ளது.







கெளரிசங்கர் பீடம்
சன்னதிக்கு முன் கெளரிசங்கர் பீடம் எனும் யாக குண்டம் உள்ளது. கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் இங்கு யாக பூஜை நடக்குமாம். யாக குண்டம் அருகில் பாபாஜியின் பாதம் உள்ளது. தாமரை மலரின் மேல்  பாதம் உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.

 மண்டப விமானத்தில் அவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள், ராமையா சீடராக  பாபாஜியின் காலடியில் இருப்பது  போன்ற உருவம் உள்ளது..அருகே அம்மன் என்கிற சிலையும் அம்மான் என்கிற சிலையும் உள்ளன..







இங்கு இருக்கும் ஆலமரத்தைச் சுற்றிலும் தியான மேடை அமைத்து இருக்கிறார்கள். பக்தர்கள் வந்து அமைதியாக தியானம் செய்து விட்டு ப்போகிறார்கள். கிளியின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருக்கும் அமைதியான இடம்.

இந்தக்கோயிலைத் தற்போது திரு.கார்த்திகேயன் என்பவர் கவனித்துக் கொள்கிறார். எங்களிடம் மிகுந்த அன்போடு பேசினார்.அங்கு தியானம் செய்வதற்கு ஒரு அறை உள்ளது. அங்கு இராமையா சிலை. மற்றும் பாபாஜி படங்கள் உள்ளன. கை கால் , முகம் கழுவிக் கொண்டு அங்கு சென்று தியானம் செய்யலாம் என்றார்கள். அதற்கு ஏற்ற வகையில் குளியல் அறை, கழிவறை நல்ல சுத்தமாக பராமரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.எங்களுக்கு நேரம் நிறைய இருந்த்தால் தியானம் செய்தோம்.

               

வெயில் அதிகமாக இருந்ததால்அந்த அறையில் பாட்டரியால் இயங்கும் மின்விசிறியை போட்டு விட்டார்கள். அமர்ந்து நானும் , என் கணவரும் தியானம் செய்தோம். பின் ஆலமரத்தின் அடியிலும் அமர்ந்து தியானம் செய்தோம். மனதுக்கு நிறைவாக இருந்தது.




ஆலமரத்திற்கு பக்கத்தில் துளசிமாடம் அழகாய் இருக்கிறது.

பூத்துக் குலுங்கிய வேப்ப மரம் தபோவனத்திற்கு குளிர்ச்சி தந்து கொண்டு இருக்கிறது.

அவர் சற்று நேரம் இருந்தால் பிரசாதம் ரெடியாகிவிடும் அன்னதானம் வழங்குவோம் என்றார். வெண்பொங்கல் பிரசாதம் செய்து கொண்டு வந்தார்கள் ஒரு அம்மா.. அவர்களும் சிறு வயதிலிருந்து இங்கு தான் சேவை செய்கிறார்களாம்.  பின்  என்னை அழைத்து பாபாஜிக்குப் பிரசாதத்தை  நீர் விளாவி  அளிக்க சொன்னார்.   நானும் மகிழ்ச்சியுடன் செய்தேன்.
கார்த்திகேயனும் அந்த அம்மாவும் உணவு அர்ப்பண பாடல் பாடினார்கள்.அது:

ஆம் ஹ்ரிம் க்ராம் சுவாஆ
சித்ராய சித்ரகுப்தாய
ஒளத் தத் சத்
ஒளம் கிரியா பாபாஜி நம் ஒளம்.

  பின் கற்பூரம் காட்டிவிட்டு வாதாமரத்தின் இலையில் காக்கைக்கு வைக்கச் சொன்னார்கள்.  பொங்கல்  ஆறி இருக்கிறதா என்று பார்த்து வைத்தார்கள்.  அந்த செயல்  பாராட்டப்பட வேண்டிய விஷயம்.பின் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை கார்த்திகேயன் போய் அழைத்து வந்தார், பிரசாதம் வாங்கி செல்ல. காலையில் கிரிக்கெட் விளையாடி களைத்த சிறுவர்கள் வாங்கி சென்றார்கள். சாதுக்கள்,  பிற சமயமக்கள்  வந்து வாங்கி சென்றார்கள்.

திரு.கார்த்திகேயனைப் புகைப்படம் எடுக்கச்சென்றபோது அவர் தடுத்து அன்பு இருந்தால்போதும் என்று பாபாஜி கூறியதை கூறினார். பாபாஜி கூறியபடி எல்லோரிடமும் அன்பு செலுத்தும் உங்களைப் படம் எடுப்பது தவறில்லையென்று கூறி,அவருடைய அனுமதியுடன் எடுத்தோம்.
சிறு தொகையை அன்னதானத்திற்கு என்று கொடுத்த போது  அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என்ற கண்டிப்பு இல்லை. அன்பு செலுத்துங்கள் எல்லோரிடமும் . அது தான் அவருக்கு பிடித்தது என்றார். பாபாஜி இன்றும் ஜீவித்து இருப்பதாய் சொல்கிறார்.

இந்தக்கோயில் காலை 6 மணி முதல் 9 .30 மணி வரையிலும்,  மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை யிலும் திறந்து இருக்கும். வியாழக்கிழமைகளில் காலை முதல்  இரவு வரை  திறந்து இருக்கும். வியாழக்கிழமைகளில் இரவு 7மணிக்கு பாபாஜிக்கு அபிஷேகம் நடக்கும் என்றார்கள்.
 வெளியூர் அன்பர்கள் போன் செய்தால் திறந்து விடுவார்களாம். அங்கு சேவை செய்யும் கார்த்திகேயன் மேலும் சொன்னார். அவர் போன் நமபர் 9994197935. 



 பாபாஜி பற்றி புத்தகம் ஏதாவது இருக்கா? என்று கேட்ட போது இரண்டு மூன்று புத்தகங்கள் கொண்டு வந்து இதில் உங்களுக்கு  தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் இரண்டு பெரிய புத்தகங்கள், ஒரு சிறு புத்தகம் எடுத்துக் கொண்டோம்,  விலை 300 ரூபாய் என்றார். புத்தகத்தில் வரும் பணம் அவர்கள் நடத்தும் ஆஸ்பத்திரிக்குச் செல்லும்  என்றார்.

                              



பாபாஜியின் பெற்றோர்கள்  சுவேதநாதய்யர், ஞானாம்பிகை தம்பதியர்  சுவேதநாதய்யர் பரங்கிபேட்டையில் உள்ள  முத்துக்குமாரசுவாமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார்.அந்த கோவிலையும் பார்த்து வந்தோம்.

பரங்கிபேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர், அமிர்தவல்லி கோவிலில்  , சித்ரகுப்தர் என்றும் 12 வயது தனக்கு இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாராம்.அதையும் தரிசித்தோம். அந்த கோவிலைப்பற்றியும்  அடுத்தபதிவில் பார்க்கலாம்..
                         வாழ்க வளமுடன் !
                        ---------------------



திங்கள், 22 ஏப்ரல், 2013

தரங்கம்பாடி

என்னுடைய தங்கை குடும்பத்தினர்  டிசம்பர் மாதம் இங்கு வந்திருந்தபோது தரங்கம்பாடி கடற்கரைக்குப்  போய் இருந்தோம். அவள்  நிறைய கோவில்களுக்கு போகும் திட்டத்தில் வந்து இருந்தாள் .அவளது விருப்பப்படி கோவில்களுக்குப் போய் வந்தோம். தங்கையின் மகள் கடற்கரைக்குப் போகவேண்டும் என்று விருப்பப்பட்டாள். அதனால்  தரங்கம்பாடிக்குப் போனோம்

தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டத்தில் காரைக்காலிலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும்  மயிலாடுதுறையிலிருந்து 25 கிலோமிட்டர்  தொலைவிலும்  தரங்கம்பாடி அமைந்துள்ளது.

கடல் அலைகளின் ஓசை பாடுவதைப்போல இனிமையாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாம்

தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை,  மியூசியம், மாசிலாமணி கோவில் எல்லாம் பார்க்கலாம்.
தரங்கம்பாடியின் நுழைவாயில்-மெயின்கார்டு கேட்


தரங்கம்பாடி --டேனிஷ் கோட்டை

-கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கியவணிகத் தலமாக இத்தரங்கம்பாடிக் கிராமம் இருந்தது. இங்கு டேனிஷ்காரர்களின் கோட்டை இருந்துள்ளது. கி.பி 1620-ல் தஞ்சாவூர் மன்னர் ரெகுநாதநாயக்கர் காலத்தில் டென்மார்க் அரசின் கடற்படைத்தளபதியான’ ஓவ்கிட்” என்பவர் இக்கோட்டையைக்கட்டியுள்ளார். 19ஆம் நூற்றாண்டு வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் வணிக மையமாக விளங்கியுள்ளது.  1977 முதல்  தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை ,பண்டைய சின்னமாக இக்கோட்டையைப் பாதுகாத்து வருகிறது.

1979 ஆம் ஆண்டு இக் கோட்டையில் இந்தியா. டென்மார்க் நாடுகளுக்கிடையே அரசியல், வணிக, பண்பாடு மற்றும் சமூகத் தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துச்செறிவுள்ள டேனிஷ் அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது.

கோட்டையின் ஒரு பகுதி
நாங்கள் அங்கு போனபோது மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தது. கோட்டைக்குள் நுழைந்த போது பெரும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. 
மழைவிட்ட பிறகு முடிந்தவரை படங்கள் எடுத்தோம். 2009 ஆம் வருடம் ஜூனில் கோட்டைக்கு நன்றாக ரெட் ஆக்ஸைடு அடித்து இருந்தார்கள்.  புதிதாக அழகாய் இருந்தது. இந்தமுறை போனபோது  அது மாறி  பழைய தோற்றம் தருகிறது.





கடலை நோக்கிய பீரங்கி


2009 --  ல்  நாங்கள் போனபோது எடுத்த  படம் -டேன்ஸ்போர்க் கோட்டை



சிறைச்சாலை ,பண்டக அறைகள்



இந்தக் கோட்டையில் ஒருபக்கத்தில், கைதிகளைத் தூக்கில் இட்ட இடம் உள்ளது. தூக்கு தண்டனை நிறைவேறியவுடன் அந்த உடல் கடலில் சென்று சேர்வது போல் அடியில் நீர்வழி இருந்ததாக கூறுகிறார்கள். அதில் இப்போது நம் ஆட்கள் குப்பைகளைப் போட்டு வைத்து இருக்கிறார்கள்.



கோட்டையின் உட்புறத் தோற்றம்


சுரங்கப் பாதை


குதிரைலாயம்



அகழ்வைப்பகம்





மியூசியத்தில் உள்ள பழைய காசுகள்




மியூஸியத்தில் உள்ள கண்ணாடி ஓவியம்



 மன்னர்  ரெகுநாதநாயக்கர்



கோட்டையை சுற்றி அகழி இருந்தாகவும், கோட்டையில் நுழைய தூக்குப்பாலம் இருந்ததாகவும் கூறுகிறார்கள். அது இப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

மாசிலாமணிநாதர் கோயில்

இடிவதற்கு  முன் இருந்த மாசிலாமணிநாதர் கோயிலின் படம்-மியூசியத்தில்


மாசிலாமணி கோவில் பழைமையானது.,அக்கோயில் காலத்தாலும், கடல் சீற்றத்தாலும் சமீப காலத்தில் முற்றிலுமாக அழிந்து விட்டது. அதை இப்போது மீண்டும் புதிதாகக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.   கடல் அரிப்பைத் தடுக்க நிறைய கற்பாறைகளை கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள்.  அனுமன் இலங்கை செல்வதற்குப் பாலம் கட்டியது போல் -நீண்ட பாதை போல் -கற்பாதைகள் அமைத்து இருக்கிறார்கள்.


மாசிலாமணிநாதர் கோயில்-புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்குக்காகக் காத்திருக்கிறது.

எப்போது திறக்கும்?
கோவில் கும்பாபிஷேகம் ஆகும் முன்பே துவாரபாலகர் கை உடைக்கப்பட்டு இருக்கிறது.


கரைப்பாதுகாப்பு அரண்

கடற்கரை

போனமுறை (2009-இல்),என்னுடைய மகள் வந்து இருந்தபோது, கோட்டையை  விட்டுத்  தள்ளி தூரத்தில் கடல் அலைகள் இருந்ததால் பிள்ளைகளுக்கு மணலில விளையாட நிறைய இடம் இருந்தது. இப்போது கடல், கோட்டையின் அருகில் வந்து விட்டது. அங்கு விளையாட மணல் பரப்பு இல்லை, கோட்டை வாயில் எதிரில் நடைபாதை அமைத்து  இருக்கிறார்கள். அழகிய விளக்குத்தூண்கள் இரண்டு புறமும் இருக்கிறது. மரக்கன்றுகள்  புதிதாக நட்டு இருக்கிறார்கள். அடுத்தமுறை போகும்போது அவை வளர்ந்து நிழல் தரும் என்று நினைக்கிறேன்.



கிளிஞ்சல்களைச்  சேகரிக்கும் பெண்

கடல்,  கிளிஞ்சல்களை (சிப்பிகள்)  அள்ளி வந்து குமிக்கிறது . அங்கு பெண்கள் வலைக்கூடை வைத்துக்கொண்டு அந்த கிளிஞ்சல்களை  அள்ளிக் குமிக்கிறார்கள். அந்தக்  கிளிஞ்சல்கள் சுண்ணம்பு தயார் செய்யப்  பயன்படுகிறது.

சேகரிக்கப்பட்ட கிளிஞ்சல் குவியல்

நடைபாதை


       கடற்கரை விடுதி


முன்பு கோவில் இருந்த இடத்தில் - இடிந்த கோவில் கட்டிடப்பகுதிகள் இருக்கும் இடத்தில் - இயற்கை அற்புதம் செய்துகொண்டு இருக்கிறது. இடிபாடுகளுக்கு இடையில் கடல் அலை மேலே எழுந்து கீழே இறங்கும்போது சொல்லமுடியாத அழகு! பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகு!  அந்த இடத்தை விட்டு வரவே மனம் வரவில்லை.


                                                    





கடற்கரைக்கு வரும் மனிதர்களை நம்பி இருக்கும் உயிரினங்கள்


சுடச்சுட கடலை வியாபாரம்


         சீகன்பால்கு
சீகன்பால்கு

இவர் ஜெர்மனி நாட்டில் பிறந்து, டென்மார்க் நாட்டின் திருச்சபை சார்பாக கிறித்துவ சமயப்பிரச்சாரம் செய்ய கி.பி 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தார். முதன்முதலில் இந்தியாவில் தமிழில் அச்சு இயந்திரம் செய்து அச்சிட்டார்.  அந்த அச்சு இயந்திரம் மியூசியத்தில் உள்ளது. சீகன்பால்கு பைபிளை தமிழில் முதலில் மொழிபெயர்த்தார். தரங்கம்பாடியில் ’ஜெருசலம் சர்ச்’சைக் கட்டினார்.  

காணும்பொங்கல் அன்று இங்கு மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். அச்சமயம் இவ்வூரில் ரேக்ளா ரேஸ் நடைபெறும்.நாங்கள் ஒருமுறை கண்டு களித்தோம்.
என் தங்கை மகளுடன் நாங்களும் கடற்கரையை ரசித்து வந்தோம்.
---------------