மழை பெய்து மரங்களும், செடி, கொடிகளும் செழிப்பாக வளர்ந்தவுடன் பறவைகள் நிறைய வருகிறது.
பறவைகளுக்கு பிடித்த சூழல் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பதிவில் குருவிகள் மற்றும் புல் புல் பறவைகள், ஆண் குயில் இடம்பெற்று இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------
இரண்டு வித குருவிகள் இருக்கிறது
நிறைய கூட்டமாய் மரக்கிளை முழுவதும் அமர்ந்து இருந்தது, நான் படம் எடுக்கும் போது கொஞ்ச குருவிகள்தான் இருந்தது.
என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது இந்த மரம். பறவைகளை ஓரளவு ஜூம் செய்து எடுத்து இருக்கிறேன்.
புல் புல் பறவைகள்
புல் புல், குருவிகள், கருங்குயில் (ஆண் குயில்)
ஆண்குயில்
இயற்கை செழித்தால் உயிர்கள் செழிக்கும் .
எங்கள் குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் காலி மனையில் முன்பு இருந்த மரங்களை , செடி, கொடிகளை அழித்த போது பறவைகள் வரத்து குறைந்து விட்டது. மரங்களை அழிப்பதை படம் எடுத்து முன்பு பதிவு போட்டது நினைவு இருக்கும்.
இப்போது மழை பெய்து காலி மனையில் மீண்டும் செடி, கொடிகள் துளிர்க்க ஆரம்பித்தவுடன் பறவைகள் வரத்து அதிகமாகி விட்டது.
//இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் //
"கவலை இல்லா மனிதன்" படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலில் சந்திரபாபு இப்படி பாடி இருப்பார்.
மழை பெய்து துளிர்த்து இருக்கும் புற்கள்.
புற்களை படம் எடுக்கும் போது இரட்டை வால் குருவி(கரிச்சான்) வந்து அமர்ந்தது சரியாக விழவில்லை படத்தில்
புள்ளிச் சில்லை பறவைக்கும், திணைக்குருவிக்கும் கூடு கட்ட பசும்தளைகள் கிடைக்கிறது, அதற்கு உணவு கிடைக்கிறது, அதனால் கூட்டம் கூட்டமாய் வருகிறது. இந்த புற்களைதான் எடுத்து வரும் கூடு கட்ட. கதிர் போன்றவைகளை கொத்தி தின்னும்.
இந்த மரம் எங்கள் குடியிருப்பை கட்டி கொடுத்தவர் வீட்டு தோட்டத்தில் இருக்கும் மரம். பறவைகளுக்கு பிடித்த மரம்.
முன்பு கோயில்களில், மசூதிகளில் கொண்டு போய் தானியங்களை கொடுத்து வருவார்கள் பறவைகளுக்கு உணவாக.
தினதந்தியில் படித்த செய்தி. (பழைய செய்தி 7 வருடங்களுக்கு முன்பு எடுத்து வைத்து இருந்தேன்) மாநகராட்சி பூங்காவில் பறவைகளுக்கு உணவாக உலர் தானியங்கள் வைக்க இடம் ஒதுக்கி இருப்பது பற்றி படித்தது.
‘//உலர் தானியங்கள்’
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மூதாதையர்கள், இறந்தவர்கள் நினைவாக திதி கொடுப்பவர்கள் மொட்டை மாடி, சாலையோரம் உள்பட பல்வேறு இடங்களில் வைத்து பறவைகளுக்கு உணவு அளித்து வருகிறார்கள். பறவைகளுக்கு உணவளிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பூங்காக்களில் ‘உலர் தானியங்கள்’ போடுவதற்காக தனியாக இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் பறவைகள் விரும்பி சாப்பிடும் கம்பு, தினை, சாமை, அரிசி, நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், நவ பருப்பு வகைகள் பொதுமக்கள் போடலாம். சாதம் உள்ளிட்ட சமைத்த உணவு பொருட்கள் வைக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.//
இப்படி செய்வது நல்லதுதான்.
கோவையில் இருக்கும் தோழி நேற்று பேசி கொண்டு இருந்தார், அவர் சென்னைக்கு மகன் வீட்டுக்கு தீபாவளிக்கு போய் விட்டு திரும்பிய போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சொன்னார்.
அவர் இருக்கும் குடியிருப்பில் அதை பராமரிப்பவர் (புதிதாக வந்து இருப்பவர்) குடியிருப்பில் வசிப்பவர்கள் வைத்து இருக்கும் வாழை மரம், துளசி, ஓமவல்லி எனறு அனைத்தையும் அழித்து விட்டு ஒன்று போல குரோட்டன்ஸ் தொட்டிகளை வைத்து விட்டாராம். அப்போதுதான் குடியிருப்பு பார்க்க அழகாய் இருக்கும் என்று.
தோழி ஒரே புலம்பல் வாழைமரம் புலம்புவது போல எழுதி அனுப்பினார் எனக்கு. குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வளவு பயனாக இருந்தேன் என்று புலம்பியது வாழை.
வெட்டபடும் மரங்களும் செடிகளும் இப்படித்தான் அவர் சொல்வது போல புலம்பும் என்று நினைத்து கொண்டேன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------