குருணை தோசை , முழு உளுந்து தோசை என்பார்கள். முன்பு வீட்டில் நெல் அரைத்து அரிசி எடுப்பார்கள், அப்போது அரிசியை முழு அரிசி தனியாக, குருணை தனியாக எடுத்து வைத்து இருப்பார்கள், அதிலும் சிறு குருணை, தனியாக, பெரிய குருணை என்று எடுத்து வைத்து இருப்பார்கள். அதில் பச்சரிசிக் குருணை, புழுங்கல் அரிசிக் குருணை என்று தனித் தனியாக எடுத்து வைப்பார்கள்.
அந்த குருணைகளில் விதவிதமாய் உணவுகள் செய்வார்கள், காய்ச்சல் வந்தால் குருணைக் கஞ்சி செய்வார்கள், உப்புமா செய்வார்கள். குருணைத் தோசை செய்வார்கள். மீதி குருணைகள் பறவைகள், எறும்புகளுக்கு உணவாகும்.
இப்போது நாம் குருணை, கல் நீக்கிய முனை உடையாத முழு அரிசி வாங்கி கொண்டு இருக்கிறோம். அதனால் குருணைத் தோசை என்று சொல்லாமல் முழு உளுந்து தோசை என்று சொல்கிறோம்.
பச்சரிசி, 1 கப் புழுங்கல் அரிசி 1 கப் கருப்பு உளுந்து அரை கப் வெந்தயம் 1 ஸ்பூன். புழுங்கல் அரிசி மட்டும் போட்டும் செய்யலாம். குழந்தைகள் முறுகல் தோசை கேட்பார்கள். அதற்குப் பச்சரிசி போட்டால் நன்றாக முருகலாய்த் தோசை வரும். எனக்கும் முறுகல்தான் பிடிக்கும்.
இந்த தோசை உடலுக்கு நல்லது. எலும்புகளுக்குப் பலம் தரும் கருப்பு உளுந்து. கருப்பு உளுந்தில் களி, செய்வார்கள் உளுந்தம் புட்டு செய்வார்கள். கஞ்சி செய்வார்கள், உளுந்தம் பருப்பு சாதம் எல்லாம் செய்வார்கள். துவையலுக்குக் கருப்பு உளுந்து வறுத்து சேர்த்து அரைக்கும் போது வாசமாய், சுவையாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இடலி மிளகாய்ப் பொடிக்கு கருப்பு உளுந்து வறுத்து செய்தால் இட்லிப் பொடி மணமாய் இருக்கும், ருசியும் அருமையாக இருக்கும்.
இட்லி பொடியை தூவி பொடி தோசை செய்யலாம்.
கனமாகவும் ஊற்றலாம் சிலருக்கு அப்படித்தான் பிடிக்கும்
//பொத்து பொத்துன்னு ஊத்தி இந்த சட்னிகளோடு கட்டித்தயிர் மேலே சீனி தூவி...
ம்ம்ம்... // என்று முகநூலில் தோசை படத்தை பகிர்ந்த போது நானானி சொன்னது. வலைத்தளத்திற்கு வைத்துக் கொண்ட பேர் , அவர்கள் பேர் கல்யாணி சங்கர்.(பழைய பதிவர்)
இதைவிடவும் கனமாய்ச் சுடுவார்கள். வெந்தயம் போட்டு இருப்பதால் தோசை மெத்து மெத்தாய் இருக்கும்.
மிளகாய் வத்தல், சின்ன வெங்காயம்,, தக்காளி உப்பு வைத்து அரைத்து கடுகு, உளுத்தப்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் , கருவேப்பிலை போட்டு தாளித்து கொதிக்க வைத்து எடுத்தால் சட்னி கெட்டு போகாமல் இரண்டு மூன்று நாள் இருக்கும். முழு உளுந்து தோசைக்கு நன்றாக இருக்கும்.
வற்றல் மிளகாய், பெரிய வெங்காயம் தக்காளி இவற்றை வதக்கியும் அரைத்து கடுகு உளுத்தப்பருப்பு தாளித்து கொட்டியும் சட்னி செய்யலாம்.
சின்னவெங்காயம் சில ஊர்களில் கிடைக்காது. (எனது மகன் ஊரில் கிடைக்காது.)
பச்சைமிளகாய் சின்னவெங்காயம் உப்பு வைத்து அரைத்த சட்னியும் (தண்ணீர் எதுவும் விடாமல் அரைக்க வேண்டும்) நன்றாக இருக்கும், நிறைய நல்லெண்ணெய் ஊற்றி ச்சாப்பிடவேண்டும், அல்லது தயிர் ஊற்றிச் சாப்பிட வேண்டும். இந்த சட்னியைத் தாளிக்க வேண்டாம். என் அப்பாவிற்கு பிடிக்கும் இந்த துவையல்.
பச்சரிசி அரை கப், புழுங்கல் அரிசி அரை கப், ஒரு கப் துவரம் பருப்பு, மிளகாய் வத்தல் நாலு, கொஞ்சம் சின்ன வெங்காயம், கொஞ்சம் தேங்காய் துருவல், கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு செய்யும் அடை.
கருவேப்பிலை, கொத்துமல்லியைக் காணோம் என்று கேட்கக் கூடாது. அன்று தீர்ந்து விட்டது அதனால் இல்லை.
இந்த தோசைக்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும், பச்சை மிளகாய், தேங்காய் பூ, சிறிது புளி உப்பு வைத்து அரைத்து தாளிதம் போட்டால் சட்னி ரெடி.
பிங்க் தோசை :- பிங்க் தோசை என்று என் மகனால் அழைக்கப்பட்ட தோசை.
அவனுக்குப் பிடித்த தோசை. சிறுவயதில் பீட் ரூட் பிடிக்காது அவனை அதை சாப்பிட வைக்க பீட் ரூட் காரட் அல்வா, பர்பி, மற்றும் இந்த தோசை செய்து கொடுப்பேன். அப்போது பீட் ரூட், காரட் , வெங்காயம் மட்டும் லேசாக வதக்கி தோசை மாவில் கலந்து தோசை செய்து கொடுப்பேன் உரைப்பு கூடாது. இப்போது அவனுடைய மகனும் அப்படித்தான் காரம் இல்லாமல் சாப்பிடுகிறான் இந்த பிங்க் தோசையை.
இப்போது பீட் ரூட் பாதி, காரட் 1 ஒரு பச்சைமிளகாய், இஞ்சி, குடைமிளகாய் பாதி, வெங்காயம் ஒன்று போட்டு எங்களுக்கு செய்தது.
இந்த தோசைக்கும் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
குழந்தைகளை கவர ஓட்டலில் நெய் தொப்பி தோசை.
கல் தோசை, செட் தோசை, வெங்காய தோசை, ராகி தோசை, ரவா தோசை கோதுமைதோசை, கார மசாலா தோசை, பனீர் பட்டர் தோசை, உருளை மசாலா என்று எவ்வளவு வகைகள் இருந்தாலும் வயிற்றை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பெரும்பாலோர் விரும்புவது சாதா மாவு தோசை தானே!
தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை!
அரிசி மாவும் உளுந்து மாவும்
அரைச்சு சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை
இன்னும் கேட்டால் பூசை!
அப்போது இன்னும் கேட்டால் பூசை என்று வரும். இப்போது குழந்தை பாடலில் இன்னும் கேட்டால் தோசை என்றே முடிகிறது, பேரன் பாடுகிறான். பேரன் படிக்கும் தமிழ்ப்பள்ளி பாடப்புத்தகத்தில் இப்படி திருத்தி இருக்கிறார்கள்.
தோசைமாவு கொஞ்சம் இருந்தால் அதில் கோதுமை, ராகி, ரவா(ரவையை ஊறவைத்து எல்லாம் கலந்து வெங்காயம் பச்சைமிளகாய் கடுகு தாளித்து தோசை செய்து விடலாம்.
சிறு குறிப்பு :- கட்டி இல்லாமல் கரைக்க சிரமப்படாமல் மிக்ஸியில் மாவுகளை போட்டு தண்ணீர் விட்டு ஓடவிட்டால் அழகாய் மாவு கட்டி, குட்டி இல்லாமல் வந்து விடும் . பின் தோசை மாவில் கலந்து அழகாய் சுடலாம் தோசை.
பதிவை முடித்து போஸ்ட் செய்யப் போனபோது காலை ஜி தமிழ் சேனலில் அவரைப் பிஞ்சு தோசை செய்து காண்பித்தார்கள். அவசர அவசரமாய் எடுத்த படம். செய்முறையை மறுபடியும் சொல்லும் போது எடுத்தபடங்கள்.
அவரை பிஞ்சை தக்காளி, வெங்காயத்துடன் தேவையான அளவு உப்பு,காரம் மஞ்சள் பொடி போட்டு வதக்கி அதை தோசை நடுவில் வைத்து பரத்தி செய்யவேண்டியதுதான். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாம்.
குழந்தைகளுக்கு இதைப் பார்த்தால் பீட்சா போல் இருக்கும் விரும்பி சாப்பிடுவார்கள் என்றார்கள்.
வித விதமாய் தோசை செய்து உண்டு மகிழலாம்.
இது எனது 400 வது பதிவு.
வாழ்க வளமுடன்.
முதலில் 400 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ.
பதிலளிநீக்குதோசைகளில் எத்தனை நிறங்கள் ?
அருமையாக இருக்கிறது.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தோசை இப்பொழுது மீம்ஸில் டிரெண்ட்டி யாக இருக்கிறது . உங்கள் தோசையும் கூட அப்படித்தான்
பதிலளிநீக்குவணக்கம் அபயாஅருணா, வாழ்க வளமுடன்.
நீக்குதோசை இப்பொழுது மீம்ஸில் டிரெண்ட்டியா ?
இந்த தோசையும் அது போலவா? புரியவில்லையே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா நான் வந்தாச்சு!!!! 400 வது பதிவுக்கு வாழ்த்துகள் அக்கா!
பதிலளிநீக்கு//குருணை தோசை , முழு உளுந்து தோசை என்பார்கள். முன்பு வீட்டில் நெல் அரைத்து அரிசி எடுப்பார்கள், அப்போது அரிசியை முழு அரிசி தனியாக, குருணை தனியாக எடுத்து வைத்து இருப்பார்கள், அதிலும் சிறு குருணை, தனியாக, பெரிய குருணை என்று எடுத்து வைத்து இருப்பார்கள். அதில் பச்சரிசிக் குருணை, புழுங்கல் அரிசிக் குருணை என்று தனித் தனியாக எடுத்து வைப்பார்கள்.
அந்த குருணைகளில் விதவிதமாய் உணவுகள் செய்வார்கள், காய்ச்சல் வந்தால் குருணைக் கஞ்சி செய்வார்கள், உப்புமா செய்வார்கள். குருணைத் தோசை செய்வார்கள். மீதி குருணைகள் பறவைகள், எறும்புகளுக்கு உணவாகும்.//
ஆஹா கோமதிக்கா எங்க வீட்டுலயும் இப்படித்தான் எல்லா குருணைகளும் இருக்கும் நான் சிரு வயதில் இயந்திரத்தில் அரிசி போட்டு உடைத்ததுண்டு.
இப்ப கூட நான் சென்னையில் இருந்த வரை குருணை அரிசி வாங்குவோம் வீட்டில். புழுங்கலரிசி குருணை உட்பட. சிறிய குருணை பெருங்குருணை எல்லாம் வாங்கியதுண்டு. பாண்டிச்செரியில் நன்றாகவே கிடைக்கும். பெருங்குருணையில் சாதம் செய்து சாப்பிடுவோம். இங்கு பங்களூரில் தேடிக் கொண்டிருக்கிறேன். இது புறநகர்ப்பகுதி என்பதால் இங்கு மெயின் ரோட்டில் ஒரு நெல் உமி பிரிக்கும் மில் இருக்கிறது. அங்கு கேட்டால் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
இங்கு குருணை கடைகளில் கிடைக்கிறது.
கர்நாடகாவில் அரிசி ரொட்டி, அரிசி உப்புமா எல்லாம் செய்வார்கள் அரிசியில் வித விதமாய் உணவுகள் அவர்கள் செய்வதால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
அரிசி மில்லில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
எங்கள் வீட்டிலும் அம்மா இயந்திரத்தில் உடைப்பார்கள் .
உங்கள் கருத்துக்கு நன்றி.
குருணை என்றால் நொய்யரிசிதானேக்கா .இங்கே பாசுமதி அப்புறம் மட்ட அரிசி குருணை பார்த்திருக்கேன் ..ஊரில் எப்பவும் அம்மா கருப்பு முழு உளுந்து வடை தோசை செய்வாங்க .
பதிலளிநீக்குஅந்த நெய் கோபுர தோசை என் மகளுக்கு பிடிக்கும் கோன் தோசைன்னு சொல்வா :)
இப்போ அடிக்கடி தேங்காய் சேர்த்து அரைத்து உடனே சுடும் புளிக்காத தோசைதான் செய்றேன் .
400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்குநொய்யரிசிதான் குருணை ஏஞ்சல். எங்கள் ஊர் பக்கம் குருணை என்பார்கள்.
கருப்பு உளுந்து வடை அனுமனுக்கு செய்வார்கள். சாப்பிட்டு இருக்கிறேன். கோவில் பிரசாதமாய் பல கோயில்களில் செய்வார்கள். நான் செய்தது இல்லை.
தேங்காய் தோசை நன்றாக இருக்கும் செய்து இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
/ அப்போது இன்னும் கேட்டால் பூசை என்று வரும். இப்போது குழந்தை பாடலில் இன்னும் கேட்டால் தோசை என்றே முடிகிறது,//
பதிலளிநீக்குஹாஹா அப்போல்லாம் பூசை ஆனா இப்போ பிள்ளைங்க கேக்கமாட்டாங்களானு இருக்கே :)
அதனால் //இன்னும் கேட்டால் அம்மாவுக்கு ஆசையோ ஆசைன்னு// மாத்திக்கலாம்
ஏஞ்சல் , நீங்கள் சொல்வது போல் மாத்தி பாடலாம்.
நீக்குஇன்னும் கேட்டால் அம்மாவுக்கு ஆசைதானே!
உடம்பு ஒத்துக் கொள்ளாத உணவை கேட்டால் பூசை என்று பாடலாம்
உங்கள் கருத்துக்கு நன்றி.
பச்சரிசி அரை கப், புழுங்கல் அரிசி அரை கப், ஒரு கப் துவரம் பருப்பு, மிளகாய் வத்தல் நாலு, கொஞ்சம் சின்ன வெங்காயம், கொஞ்சம் தேங்காய் துருவல், கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு செய்யும் அடை.//
பதிலளிநீக்குபாண்டிச்சேரியில் இருந்தப்ப பக்கத்துவீட்டில் சுவைத்து அவர் சொல்லிச் செய்ததுண்டு என்றாலும் உங்கள் அளவையும் குறித்துக் கொண்டுவிட்டேன் கோமதிக்கா...
கீதா
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
இந்த அடை கடலைப்பருப்பு ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு நல்லது.
பச்சரிசி, 1 கப் புழுங்கல் அரிசி 1 கப் கருப்பு உளுந்து அரை கப் வெந்தயம் 1 ஸ்பூன். புழுங்கல் அரிசி மட்டும் போட்டும் செய்யலாம். குழந்தைகள் முறுகல் தோசை கேட்பார்கள். அதற்குப் பச்சரிசி போட்டால் நன்றாக முருகலாய்த் தோசை வரும். எனக்கும் முறுகல்தான் பிடிக்கும்.//
பதிலளிநீக்குகோமதிக்கா கருப்பு உளுந்து போட்டாலே தோசை முறுகலாக வரும். எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் முறுகல் பிடிக்கும்.. நான் கருப்பு உளுந்துதான் பயன்படுத்துகிறேன்.
துவையலுக்குக் கருப்பு உளுந்து வறுத்து சேர்த்து அரைக்கும் போது வாசமாய், சுவையாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இடலி மிளகாய்ப் பொடிக்கு கருப்பு உளுந்து வறுத்து செய்தால் இட்லிப் பொடி மணமாய் இருக்கும், ருசியும் அருமையாக இருக்கும்.//
அக்கா அதே அதே! நானும் கருப்பு உளுந்து போட்டு துவையல், பொடி எல்லாம் செய்கிறேன் அக்கா. பிறந்த வீட்டில் எல்லாத்துக்குமே கருப்பு உளுந்துதான் பயன்படுத்துவாங்க. நானும் பல வருடங்களாக அதான்….உளுந்து சாதம் ரொம்பவே சுவையாக இருக்கும். செய்வதுண்டு.
நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா வகை சட்னியும் செய்வதுண்டு க்க்கா...அதுவும் சி வெ ப மி உப்பு போட்டு தண்ணி விடாம அரைக்கும் வண்டிக்காரன் சட்னினும் சொல்வதுண்டு...பழைய சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளவும் நல்லாருக்கும். அது என் மகனுக்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தாளிக்கவே வேண்டாம்...
அதே போல பீட்ரூட் தோசை, காரட் தோசை. மொறு மொறு கோன் தோசை மகனுக்காகச் செய்ததுண்டு. கோன் செய்வதும் ஈசிதான். ஆனால் ஹோட்டலில் செய்யும் ராக்கெட் தோசை தான் என்னால் செய்ய இயலவில்லை. கோன் போலத்தான் சுருட்டணும் ஆனால் ஒல்லியாக நீட்டமாகச் சுருட்டி நிற்க வைத்துத் தருவார்கள். எனக்குச் செய்ய வரவில்லை எனவே சுருட்டி படுக்க வைத்துக் கொடுத்துவிடுவேன் மகனுக்கு அவன் சிறு வயதில்...அவரைப் பிஞ்சு பரப்பிச் செய்வது செய்ததில்லை....நோட் செய்து கொண்டேன்.
சுவையான பதிவு...கோமதிக்கா. அதுவும் தோசை என்றால் ஆசை விடுமோ??!!!!!
கீதா
மாயவரம் பக்கம் சிவப்பு சாந்து என்று சிவப்பு மிளகாய் வெங்காயம், கொஞ்சம்புளி வைத்து அரைப்பார்கள் . ரயி சட்னி, ரோஜாபூ சட்னி என்றும் சொல்வார்கள் அதைதான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குதொப்பி தோசை வரும் எனக்கும் ராக்கெட் தோசை எனக்கும் வரவில்லை.
குழந்தைகளுக்கு குட்டி குட்டியாக ஏதாவது டிசைனில் தோசை செய்து அவர்களை சாப்பிட வைத்து விடுவேன். செம்பு சாமான், இருப்பில் விளையாட்டு சாமான் இருக்கும், தோசைக்கல், இட்லி தட்டு அடுப்பு, அரிவாள்மனை எல்லாம் உண்டு அந்த செட்டில் அது வைத்து விளையாடும் போது சின்னதாக தோசை, இட்லி எல்லாம் செய்து தருவார்கள் என் அம்மா நாங்கள் விளையாட
தோசை பதிவு மற்றவர்கள் தோசை பதிவு போட்டதைப் பார்த்து வந்ததுதான் இந்த ஆசை.
நீங்கள் எங்கள் ஊர் பக்கம் அதனால் எல்லா சமையலும் ஒன்றாக உள்ளது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நிர்தோசையை விட்டு விட்டீர்கஏ வெங்காயம் வரமிளகாய் கொண்டு செய்யும் சட்ன்யை காந்தி சட்னி என்று கூறுவோம் நீர்தோசை கர்நாடகாவில்விசேஷம் பூவையின் எண்ணங்கள் தளத்தில் பதிவிட்டிருக்கிறேனே
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குநீர் தோசை கர்நாடகாவில் விசேஷம் கேள்வி பட்டு இருக்கிறேன்.
உங்கள் பூவையில் எண்ணங்களில் படிக்கிறேன்.
காந்தி சட்னி இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
400வது பதிவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதோசை படங்கள் (ஹோட்டல் படங்கள் அல்ல, மற்றவை) மிக அருமையா வந்திருக்கிறது.
தோசைக்கே புராணம் படித்துவிட்டீர்கள். அருமை.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
ஓட்டலில் எடுத்த படமும் நான் எடுத்த படம் தான் நெல்லைத்தமிழன்.
நீக்குதோசை உடனே சாப்பிட வேண்டும் என்கிற ஆவல் வந்து விட்டது...!
பதிலளிநீக்கு400-வது பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்கு//தோசை உடனே சாப்பிட வேண்டும் என்கிற ஆவல் வந்து விட்டது...!//
மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
400வது பதிவுக்கு வாழ்த்துகள். என்ன இன்னிக்கு தோசை பதிவு?! எதாவது உள்குத்திருக்கா?!
பதிலளிநீக்குவணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
குட்மார்னிங் கோமதி அக்கா.. தோசை படங்கள் கவர்கின்றன. அழகு. உடனே சட்னி தொட்டு சாப்பிட ஆசையாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குஞாயிறு பதிவில் நீங்கள் போட்ட டிஸைன் தோசையைப் பார்த்து விட்டுதான் நான் எடுத்து வைத்து இருந்த தோசை படங்கள் நினைவுக்கு வந்தன.
பதிவாக்கி விட்டேன்.
காலை நேரம் இல்லையா ! அது தான் பசியில் தோசை சாப்பிட ஆசை வந்து விட்டது, இன்று பாஸ் என்ன டிபன் செய்தார்கள் ?
நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். இது அட்டண்டன்ஸ் பின்னூட்டம். பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
நீக்குஇது அட்டண்டன்ஸ் பின்னூட்டம். பின்னர் வருகிறேன்.//
வாங்க வாங்க நேரம் கிடைக்கும் போது.
கருத்துக்கு நன்றி.
400 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். தோசைப் புராணம் அருமையாக இருக்கிறது. பீட்ரூட்டில் எல்லாம் தோசை செய்தால் இங்கே சாப்பிட ஆள் இல்லை! போம்மா, ஏமாத்தறேனு சொல்லுவாங்க! :) அநேகமா பீட்ரூட் சாலட் அல்லது பீட்ரூட்டை முழுசாக வேக வைத்துக் கொண்டு பச்சை, மிளகாய், இஞ்சி, தேங்காய் சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாகத் தட்டிக் கொண்டு சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ளும் கறி செய்வேன். இதையே காரட், பீன்ஸிலும் செய்யலாம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குவாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொன்ன பீட்ரூட் பக்குவம் நன்றாக இருக்கே!
நன்றி.
ஆகா..
பதிலளிநீக்குதோசை மஹாபுராணம் அருமை!...
தோசையின் பற்பல அவதாரங்களையும் பசி நேரத்தில் -
(இங்கே விடியல் 6.00 மணி.. ஆனாலும் வேலை முடிந்து வந்ததில் பசி நேரம் தான்..)
சொல்லி விட்டீர்கள்...
இங்குள்ள கடைகளில் பக்குவமாக அரைத்து செய்வது குறைவு...
ஏதோ பேருக்கு தோசை மாவு - அதில் 20% கோதுமை மாவு கலப்படமும் உண்டு!..
சுவையான பதிவு!..
வாழ்க நலம்!..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல் வெளிநாட்டில் தோசைமாவில் வேறு ஏதோ மாவு கலந்துதான் இருக்கிறது. சுவை வித்தியாசமாய் இருக்கும்.
இரவு வேலையா? அப்போது பசி இருக்கும் தான் அதிகாலையில்.ஏதாவது உணவு சாப்பிட்டுவிட்டுதானே தூங்குவீர்கள்?
நானூறாவது பதிவு கண்டு மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஇன்னும் பலநூறு பதிவுகளை வழங்கி பேர் கொள்ள வேண்டும்..
நலம் வாழ்க !..
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நீக்குஉற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி நன்றி.
மதுரையில் சுப்ரீம் ஹோட்டல் என்று நினைவு... வருடந்தோறும் தோசைத்திருவிழா நடத்துவார்கள். விதம் விதமாக தோசை கிடைக்கும்.
பதிலளிநீக்குஸ்ரீராம், மதுரையில் சுப்ரீம் ஹோட்டல் கேள்வி பட்டது இல்லை தங்கையிடம் கேட்க வேண்டும்.
நீக்குஎனக்கு இது புது தகவல்.
பீட்ரூட் தோசை பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறது. இதுவரை அப்படி முயற்சித்தது இல்லை. ஒருமுறை செய்து பார்த்து விடலாம்.
பதிலளிநீக்குநீங்கள் வித விதமாய் தோசை பதிவு போடும் போதெல்லாம் நான் இந்த பீட்ரூட் தோசை, கோதுமை, மற்ற மாவுகளை மிச்ஸியில் போட்டு எளிதாக கரத்து தோசை சுடுவது, முழு உளுந்து தோசை விவரம் எல்லாம் பின்னூட்டங்களில் பகிர்ந்து இருக்கிறேன்.
நீக்குநன்றாக இருக்கும் ஸ்ரீராம் பீட்ரூட், காரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி உரைப்புக்கு மிளகாய் தூள் எல்லாம் போட்டால் தொட்டுக்க கூட எதுவும் இல்லாமல் சாப்பிடலாம், மகன் கல்லூரி படிக்கும் போது கொண்டு போனபோது நண்பர்கள் இவனுக்கு இல்லாமல் தோசையை சாப்பிட்டு விட்டார்களாம். தோசை காய்ந்து போகாது நன்றாக இருக்கும்.
முயற்சி செய்து பாருங்கள்.
மூன்றாவது படத்தில் உள்ள தோசை நல்ல ஷேப்பில் மொறுமொறுவென்று மிகவும் அழகாக இருக்கிறது!
பதிலளிநீக்குமொறு மொறு தோசை முழு உளுந்து தோசை முன்பு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?
பதிலளிநீக்குஆந்த தோசையை நங்கு உற்றுப்பார்த்தால் சின்ன பூனைகுட்டியின் முகம் தெரியும்.
அதிராவின் பூனை செல்லம் சிறு வயதில் இருந்த மாதிரி சின்ன பூனைக்குட்டி தெரியும்.
ஸ்ரீராம் உங்களின் எல்லா கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
பதிலளிநீக்குதோசை பதிவு நானூறாவதா. அருமை கோமதி மனம் நிறை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீங்கள் நானூறு பதிவுகள் மட்டுமா எழுதி இருக்கிறீர்கள்.
மேலே இருக்கும் பா.
அப்பாடி எத்தனை தோசைகள் மா. அத்தனையும் அரைத்து வார்த்துப் படங்கள் எடுத்து
அதிசயம் என்னை அசத்துகிறது.
கூடவே தொட்டுக்க எத்தனை துகையல் வகையறா. மிக மிக நன்றி.
உளுந்து சேர்த்தாலே எனக்கு வாய்வுத் தொல்லை.
பிடித்ததை எல்லாம் விட கடவுள் செய்யும் ஏற்பாடு போல.
எப்பொழுதும் இனிமையாகிப்
பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க என் வாழ்த்துகள் அருமைத் தங்கைக்கு.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்கு400 பதிவுதான்.
தோசைகள் ஒவ்வொரு சமயம் எடுத்த படங்கள்.சேமிப்பில் இருந்த படங்கள்
எல்லாவற்றையும் தேடி எடுத்து போட்டு இருக்கிறேன்.
எனக்கும் வாயு தொல்லை உண்டு என்ன செய்வது, சீரகம், ஓமம் , பெருங்காயம் என்று இடை இடையே கை வைத்தியமும் நடைபெறும்.
//பிடித்ததை எல்லாம் விட கடவுள் செய்யும் ஏற்பாடு போல.//
சரியாகும் . உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
400-வது பதிவுக்கு வாழ்த்துகள் மா...
பதிலளிநீக்குஅம்மம்மா எவ்ளோ தோசை..
திண்ண திண்ண திகட்டா தோசை ...
எங்க பசங்க சாதா தோசையை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ...விதம் விதமா சட்னி செய்வேன்..நீங்க போட்டு இருக்குறதும் நாங்க வழக்கமா செய்றது
இந்த காய்கறி தோசை செஞ்சு பார்க்கணும் அழகா இருக்கு..பீட்ரூட் அப்படியே போடலாமா மா..
குருணை அரிசி வாங்குவேன் ஆன தோசை செஞ்சது இல்ல..அதில் பொங்கல் , கொள்ளு கஞ்சி தான் செய்வேன்..
சூப்பரான தோசை பதிவு..
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குகுழந்தைகளுக்கு வித விதமாய் செய்து கொடுப்பது அறிந்து மகிழ்ச்சி.
பீட் ரூட், காரட்டை துருவி , வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய், இஞ்சி லேசாக வதக்கி தோசை மாவில் கலந்து செய்ய வேண்டும்.
குருணை தோசை நன்றாக இருக்கும்.
செய்து பாருங்கள் அனு.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ஆஆ கோமதி அக்கா, நிறைய தோசை வகையில் ரெசிப்பி போட்டிருக்கிறீங்க.. நான் புதிய தலைப்பு வரமுன் வரோணும் என இருந்தேன்.. நேற்று ட்றுத்தின் மனக் குழப்பத்தால் எங்கும் போகாமல் விட்டிருந்தேன் ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குகறுப்பு உழுந்து தோசை மீயும் செய்தேனே:)) ஹா ஹா ஹா விரைவில் போடுவேன் படம் பாருங்கோ.. ஆனா உங்களோடது வெள்ளையாக இருக்கே அது எப்படி? என்னுடையது கறுப்பூஊஊஊஉ ஹா ஹா ஹா.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குஎல்லோருக்கும் மன வருத்தம் ஏற்படுத்தி விட்டது அந்த நிகழ்வு. எனக்கும் மனது கஷ்டமாய் இருந்தது. அவருக்காக இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தேன்.
பல்லாண்டு வாழட்டும் குடும்பத்துடன்.
நாட்டு உளுந்து அதனால் மிக கறுப்பாய் இல்லை , ஒருவர் வீட்டிலிருந்து கொடுத்தார்கள்.
கடையில் மிக அருப்பாய் சைனியாக இருக்கிரது அதை வாங்கி போட்டால் கருப்பாய் இருக்கும்.
மிக கருப்பாய் இருக்கும்
நீக்குவிதம் விதமான சட்னி அழகு. அந்த அடையும் அழகு.. தக்காழி பீட்டூட் போட்டது பார்க்க கலஃபுல்லா சூப்பராக இருக்குது.
பதிலளிநீக்குபீட் ரூட் , காரட், வெங்காயம், கொடை மிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய் மட்டும் தக்காளி போட வில்லை.
நீக்குஅனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.
குருணை எனில் பச்சரிசிக் குருணையா? புழுங்கலரிசிக்குருணையா? கறுப்பு உளுந்து உடைத்தது போட்டுத் தான் என் அம்மா வீட்டில் இட்லி, தோசை, அடை எல்லாம். மாமியார் வீட்டில் அடைக்கு மட்டும் போடுவாங்க! மாமியார் வீட்டில் குருணையாக இருக்காது. நொய் என்று சொல்வார்கள். பெரிதாக இருக்கும். அதில் தான் அரிசி உப்புமா, புளிப் பொங்கல் பண்ணுவாங்க! பெரிது பெரிதாகச் சாதம் மாதிரியே இருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குபச்சரிசிக் குருணையும் , புழுங்கலரிசியும் போடலாம், தனியாக புழுங்கலரிசி மட்டுமே போட்டும் செய்யலாம்.
கறுப்பு உளுந்தை முழுதாக ஊறவைக்காமல் கழுவி விட்டு அரைக்கவேண்டும் வெந்தயம் சேர்த்து.
பெரிதான குருணை தோசை செய்யலாம், சிறிய குருணை தான் உப்புமா,கொழுக்கட்டை ,கஞ்சி எல்லாம் செய்வார்கள்.
நான் "தால் மக்கனி" செய்யும்போது மட்டும் கொஞ்சமாகக் கறுப்பு உளுந்து வாங்குவேன். அது என்னமோ நம்மவருக்குக் கறுப்பு உளுந்து பிடிக்கிறதில்லை. :(
பதிலளிநீக்குசாருக்கும் கறுப்பு உளுந்தில் செய்யும் தால் மக்கனி பிடிக்காது.
நீக்குவட நாட்டில் ரொட்டிக்கு அதுதான் ஓட்டலில் வைப்பார்கள் வேறு தொட்டுக்க வாங்கி கொள்வார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்கு400 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.