ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

டிஸ்னியின் கனவுலகம்


குழந்தைகளின் கனவு உலகம்  - ஒரு முறை பார்த்து விட ஆசைப்படும் இடம்



அற்புத பூங்காவை அமைத்த அற்புத மனிதர்  வால்ட் டிஸ்னி

ஜூலை 1955 இல்,  கலிபோர்னியா மாநிலத்தில் ஆனஹிம் என்னும் ஊரில் 160 ஏக்கர் நிலப்பரப்பில்  டிஸ்னிலாண்ட்  வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்டது.

சாகஸம் செய்ய நிறைய விளையாட்டுக்  கூடங்கள், நடன , நாடகஅரங்குகள் நிறைந்த பொழுதுபோக்குப் பூங்காவை அமைத்தார்.

 இதற்குக் கிடைத்த வரவேற்பில் மீண்டும் பெரிய 27,258 ஏக்கரில்  புளோரிடாவில் இடம் வாங்கி  பெரியபூங்கா அமைக்கத் திட்டம் வகுத்தார்  ஆனால் 1966ல் இறந்து விட்டார். அதற்குப் பின் 1971ல் இந்த பிரமாண்ட பூங்கா அமைந்து  மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு இடமாய் அமைந்து விட்டது.

தேவதைக் கதைகள், டிஸ்னி கதையின் பாத்திரங்கள் அடிப்படையில் இந்த பொழுது போக்குப் பூங்கா உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அவரின் கற்பனைப் பாத்திரங்களுடன் குழந்தைகள், பெரியவர்கள்
 மகிழ்ச்சியாய் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.

பறக்கும் ரயில். லேசர் ஓலிக் காட்சிகள், வாணவேடிக்கைக்காட்சிகள், நீர்ப் புகைத் திரையில்   'ஸ்நோஒயிட்டும் , ஏழு குள்ளர்களும்'  கதை காட்டப்படுவது பார்க்க வேண்டிய ஓன்று.

 மிக்கி மவுஸ்  பெரிய கொடை ராட்டினத்தில் நடுநாயகமாய் இருக்கும் இரவு ஓளி விளக்கில் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

ஒரு அரங்கில் ஷேக்ஸ்பியர் நாடகம் காட்டப்பட்டது. நாடக  காட்சி அமைப்புகள் மேடையில் கண்சிமிட்டும் நேரத்தில் வேகமாய் மாற்றப்படும். அந்தக் கால மேடை நாடகத்தில் படுதா ஏற்றி இறக்கும்போது காட்சி மாறுவது போல் அப்படியே நடத்திக் காட்டினர். பெரிய கதவுகள் மேலே இருந்து அப்படியே இறங்கும். காதல் காட்சிகளுக்கு அழகான பூங்கா, நீரூற்று, மலர்கள் நிறைந்த தோட்டம் எல்லாம் தத்ரூபமாய் காட்சி அளித்தது.

பெரிய பெரிய கட்டிடங்களுக்குள் அதிசய நிகழ்ச்சிகள் காட்டப்படுகிறது

முக்கியமான எட்டு இடங்கள்   பார்க்கவேண்டியது உள்ளது. ஓவ்வொன்றுக்கும் அழைத்துப் போக டிராம்கள் பூங்காவிற்குள் அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருக்கிறது.

எட்டு இடங்களில் ஒன்றான "மெயின் ஸ்ட்ரீட்"





பார்க்க வந்த மக்கள் எல்லோரும் வித வித உடைகள் அணிந்து வருகிறார்கள். அதைப் பார்ப்பதே நமக்கு நல்ல பொழுதுபோக்காய் உள்ளது. அந்தக்கால உடை அணிந்து நடந்து போகிறார்கள்.

எழுத்தாளர் சாவி அவர்கள் எழுதிய  "வாஷிங்டனில் திருமணம்" கதையில்
 வரும் சீமாட்டிகள்  போல் (ஓவியர் கோபுலு வரைந்த கதாபாத்திரங்கள் போல்) அலங்காரம் செய்து கொண்ட பெண்கள், அந்தக் கால தொப்பி, கோட், சூட் கைத்தடி வைத்துக்கொண்டு சீமான்கள்  போல் அலங்காரம்செய்து கொண்ட ஆண்கள் . அங்கே இங்கே போய்க்கொண்டு இருந்தார்கள்.

பூங்காவின் நுழைவாயிலில் இருப்பவர்கள், "இன்றைய பொழுது அருமையான பொழுதாய் இருக்கட்டும்" என்று வாழ்த்தி பூங்காவின் மேப் கொடுக்கிறார்கள். எப்படிப் போக வேண்டும் ,முதலில் எதைப்பார்க்கலாம் என்று நமக்கு முடிவு எடுக்க வசதியாக உள்ளது.

முதலில் முக்கிய கதாபாத்திரங்களாக உலவிக் கொண்டு இருக்கும் மிக்கி, மினி, டொனால்ட் டக் இவைகளுடன் படம் எடுத்துக் கொள்ள  வரிசையில் நிற்கும் பெரியவர், சிறியவர், குழந்தைகள் . 
.

 மின்னி, மிக்கி, டோணால்டக் இவர்களுடன் நாங்களும்
 படம் எடுத்துக் கொண்டோம்.












ஆட்டோ கிராப் போடுகிறது

பொது மக்களுடன் ஆட்டம்

தந்தையின் தோளில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் சிறுவன்


டிஸ்னி டான்ஸ் உலகம் என்ற அரங்கத்தில் வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரங்களுடன் ஒரு சிறு யுவனும், யுவதியும் ஆடும் ஆட்டம்  அருமையாக இருக்கிறது. அரங்கத்தில்  தேவையான ஆட்கள் வந்தவுடன்  நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது.


முன்னாடி உட்கார்ந்து இருக்கும் குழந்தைகளை ஆட அழைக்கும்  மின்னி, மிக்கி

குழந்தைகளும் நடனம் ஆடினார்கள்


பேரனும் ஆடினான்


வீதி நாடகம் 
செய்தித்தாள்போடும் பையன்களாய் அன்றைய முக்கிய தலைப்புச் செய்தியைச் சொல்லிக் கூவி விற்கும் காட்சி 
அவ்வளவு வேகம் ஆட்டத்தில்
காணொளி எடுத்தேன் பதிவில் வேலை செய்யமாட்டேன் என்கிறது 


டிஸ்னி பதிவு தொடரும் 

வாழ்க வளமுடன்.

வியாழன், 22 பிப்ரவரி, 2018

அந்தி வானமும் ஏரியும்

அந்திவானம்

மகனுடைய ஊரில் தினமும் 
காலை மாலை வானத்தின் அழகைப் பார்ப்பது மிகவும் பிடித்த பொழுது போக்காய் இருந்தது . காலைக் கதிரவனின் தோற்றத்தையும், மாலை சூரியன் மறையும் போது வானம் செவ்வானமாய் மாறுவதையும் கண்டு மகிழ்ந்தேன் . அதில் சில உங்கள் பார்வைக்கு.

இங்கே கொடுக்கப் பட்டு இருக்கும் படங்கள் எல்லாம் மாலையில் எடுத்த படங்கள்.
சிறு பறவைகள்   கூடு திரும்புது
சிவக்கத் தொடங்கி விட்டது
நடைப்பயிற்சி செய்யும் போது எடுத்த படம்


காரில் போகும் போது எடுத்த படம்

மகன் வீட்டுக்கு எதிபுறம் உள்ள வீடு


மஞ்சள் வெயில்  மாலை

கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைக் கண்டு
மலை வாயில் சூரியன்
அந்தி வானமும் அந்தி விளக்கும்

இருளும் ஒளியும்
உதிக்கிறதா? மறைகிறதா ? என்ற மாயத் தோற்றம் தருகிறது

மஞ்சளும் கறுப்பும் சேர்ந்த இருட்டு ,நடைபாதையை  ஆக்கிரமித்த காட்சி.



கடை வளாகத்தின் அருகில் இருந்த மலையையும் அந்தி வானத்தையும் நான் ரசிப்பதைப் பார்த்த என் மகன்  பக்கத்தில் ஒரு இடம் இருக்கு . அங்கு சென்று
சூரியன் மறைவதைப் பார்க்கலாம் என்றான். உடனே லேக் ப்ளெசெண்ட்
 ( LAKE PLEASENT ) என்ற இடத்திற்குச் சென்றோம்

இந்த இடம்  பீனிக்ஸிலிருந்து 35 மைல் தூரத்தில் இருக்கிறது.

சூரியன்  மறைவதைப் பார்க்கவே அந்த இடம் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. மக்கள், குடும்பத்துடன் நட்புகளுடன் வந்து இருந்தார்கள். நாங்கள் கொஞ்சம் தாமதமாய்ப்போய் விட்டோம். சூரியன் மறைய ஆரம்பித்து விட்டது.      சூரியன் மறையும் நேரம் ஏரியைச் சிவப்பாய்க் காட்டுமாம். நாங்கள் தாமதமாய்ப் போனதால் கொஞ்சம் சிவப்பபாய்
இருந்தது.

இங்குள்ள எரி 10,000 ஏக்கர் நீர்ப் பரப்பு  உள்ளது. கொலராடோ ஆற்றிலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டு  அணைகட்டித் தேக்கி வைத்து இருக்கிறார்கள்.
260 அடி ஆழம் இருக்கிறது. 700 வண்டிகள் (கார்கள்) நிறுத்த வசதி உள்ளது.

365  நாளும் திறந்து இருக்கும் . 24 மணி நேரமும் உண்டு . குடும்பத்துடன்
 பிக்னிக் போக  ஏற்ற இடம்.வேகமாய் மோட்டார்ப் படகு ஓட்டுபவர்களுக்கு இந்த ஏரி மிகவும் உற்சாகம் தருமாம். காரில்  படகைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.  சொந்தப் படகு இல்லாதவர்களுக்கு வாடகை போட் கிடைக்கும். மீன் பிடிக்கலாம், பிடித்த மீனை அங்கே சமைத்து சாப்பிடுவார்களாம்.பாதுகாப்பான இடம் என்பதால் கூடாரம் அமைத்து அங்கே தங்குவார்களாம். இரவு நிலவொளியில் படகு சவாரி செய்வார்களாம்.

காலை முதல் மாலை வரை அங்கு இருக்க ஒரு காருக்கு 6 டாலர் வசூல் செய்கிறார்கள்.

கழுகு போன்ற பறவைகள் நிறைய இருக்கிறது என்கிறார்கள் . நாங்கள் போனபோது பறவைகளைப் பார்க்க வில்லை,  கூடு திரும்பும் நேரம் ஆகி விட்டதால் போலும்.


 .அங்கு எடுத்த படங்கள் அலை பேசியில் எடுத்த படம். காமிரா கொண்டு போகவில்லை, திடீர் என்று போனதால்.





குடும்பத்துடன் வந்து இருந்தார்கள் 
ஏரியின் அழகு, நீலவானம், செவ்வானம், நிலவும் தெரிய ஆரம்பித்து விட்டது.
மலை, செவ்வானம், ஏரி

இருட்ட ஆரம்பித்தவுடன் வீடு திரும்பினோம்.
                                                                           வாழ்க வளமுடன்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

துள்ளித் திரிந்த முயலொன்று


மகன் ஊரில் (பீனிக்ஸ்) தினம் காலை  மகன் வீட்டைச் சுற்றி உள்ள நடைபாதையில்   நடைப்பயிற்சி மேற் கோள்வோம் நாங்கள் இருவரும். பறவைகள், முயல்கள் இவற்றைப் பார்ப்போம் நாள் தோறும் அவற்றின்  ஒலியும் காலைச்சூரியனின் வருகையும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நாள் தோறும்.

பாலைவனப் பகுதியில் பறவைகள், முயல்கள் எல்லாம் மண் கலரில் தான் இருக்கும். நம் ஊரில் வீடுகளில் வளர்க்கும் வெள்ளை, கறுப்பு முயல்களைப் பார்க்கவே  இல்லை அங்கு. இயற்கை அமைப்புக்கு ஏற்றாற் போல் இறைவன் 
  அவற்றின் பாதுகாப்புக்கு கருதி  அந்த நிறத்தில் படைத்திருக்கிறார்.

தினம் படம் எடுக்க நிற்காது. நாம் வரும் சத்தம் கேட்டதும் புதரிலிருந்து துள்ளி ஓடும்.

தள்ளி போய் ஒரு பார்வை பார்க்கும் மீண்டும் ஓடி புதரில் மறைந்து விடும்.

தினம் ரோட்டை  கடந்து ஓடும்
அந்த பக்கம் போய் பார்வை பார்க்கும்
ஒரு நாள் காலை நடைப்பயிற்சிக்கு போனபோது   ரோட்டில் அடிபட்டு இறந்து போய் முயல் கிடந்தது. காலை போன ஏதோ காரில் அடி பட்டு இருக்கிறது.
பார்த்து மிகவும் மனது கஷ்டப்பட்டது. நேற்று வரை  துள்ளிக் குதித்து ஓடி எங்களுக்கு மகிழ்ச்சி அளித்த முயல் இப்படிக் கிடப்பதைப் பார்த்து மிகவும்   வேதனை ஆகி விட்டது.  அதை அடித்து சென்ற முக தெரியாத ஆளின் மேல் கோபம் வந்தது, கவனமாய் போய் இருக்கலாம் என்று.

முயலும் அவர் எதிர்பார்க்காத நேரத்தில் பாதையை கடந்து இருக்கலாம்.


தினம் பார்த்து கொண்டு இருந்த நண்பனைப் பிரிந்த சோகம் மனதில் குடி கொண்டது.  மறு நாள்  நடைப்பயிற்சி போகும்போது இறைவா! அந்த முயலுக்கு ஏற்பட்டது போல் மற்ற முயலகளுக்கு ஏற்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டு போனேன்.