திருவிளையாடல் சினிமாவில் பார்வதி சிவன் விளையாடிய விளையாட்டை,
கோபித்துக் கொண்டு வந்த முருகனுக்குச் சொல்வார் , அதன் பின் முருகனைச் சமாதானம் செய்து அழைத்துப் போவார். போகும் முன் இனி
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார். அப்படிப் புகழ் பெற்ற பழனியில் மாமன் பெருமாளும் இருக்கிறார்.அந்த இடம் தான் கன்னடிய பெருமாள் கோவில்
முற்காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்குச் சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர்த் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையைக் கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைக்காலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .
நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலைச் சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டுப் பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.