நவராத்திரி என்றால் 9 நாளும் கொலு வைத்து மூன்று தேவிகளையும் மனம் மொழி மெய்யால் போற்றி துதித்து குதூகலத்தோடு கொண்டாடுவோம், முன்பு. ஆனால் இப்போது நாங்களும் கொலு வைத்து இருக்கிறோம் என்றுதான் வைக்கிறோம். படிகள்
அமைத்து வைக்க அந்த காலத்தில் வீட்டில் உள்ள டிரங்க் பெட்டிகள் அட்டைகள், புத்தகங்கள் வைத்து அழகாய் 5 படிகள் அமைத்து கொலு வைப்போம். கோதுமை, வெந்தயம், கேழ்வரகால் புற்கள் உண்டாக்கி பார்க் அமைப்போம். இந்துக் கோவில் ,கிறித்துவக்கோவில் மசூதி என்றும்(எங்களுக்கு எல்லா மதத்தவரும் எங்கள் காலனியில் இருந்ததால் அவர்களையும் மகிழச்சிப் படுத்த அப்படி வைப்போம்) அமைத்து, கிராமங்கள் ,நகரம், சினிமா கொட்டகை, கடைகள், மணிக்கூண்டு என்று கொலுவில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி அமைப்போம். உறவினர், நண்பர்கள், குழந்தைகளின் நண்பர்கள் என்று அழைத்து குதூகலமாய்க் கொண்டாடிய நாட்களை நினைத்துக் கொண்டு இப்போது நவராத்திரியைக் கொண்டாட வேண்டி உள்ளது. பண்டிகைகள் அலுப்புத் தட்டும் வாழ்விலிருந்து நம்மை மாற்றி அமைக்க உதவுதால் அதை விடவும் மனசில்லை.
நாங்க்ள் செப்டம்பர் 2ம் தேதி கிளம்பி ,22ம் தேதிதான் திருக்கயிலாயம் தரிசனம் முடித்து திருவருள் துணையுடன் திரும்பி வந்தோம்.(காட்மாண்டுவில் நாங்கள் இருக்கும் போது 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து பாதிப்பு ஏற்படாமல் வந்து சேர்ந்தோம்) பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கொலு சமயத்தில் வந்து விடுவீர்களா என்றுதான் கேட்டார்கள் வந்து விடுவோம்: வந்து கொலு வைப்போம் என்று சொல்லிச் சென்றோம்.
10 வருடமாய் இரும்புக் கொலுப் படி செட்டில் கொலு வைத்தோம். நல்ல அகலமாய் இரண்டு வரிசைகள் பொம்மைகள் வைக்க வசதியாக பிரித்யேகமாய் செய்யச் சொல்லி வாங்கி அதை இரண்டு மணி நேரம் செலவழித்து பிரித்து மாட்டி வைத்து கொண்டு இருந்தோம்.
இப்போது அதுவும் போச்சு, அப்படியே 5 தட்டு உள்ள அந்த அலமாரியைப் படியாக்காமல் அப்படியே வைத்து கொண்டு இருக்கிறோம். குழந்தைகள் திருமணமாகி தூரா தொலைவில் இருக்கிறார்கள், அக்கம்பக்கத்தில் உதவிய குழந்தைகளும் வளர்ந்து திருமணம் ஆகிப் போய் விட்டார்கள்.
நாங்கள் இருவரும் தான் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. எவ்வளவுதான் உற்சாகத்தை வளர்த்து கொண்டு செய்தாலும் போதும் போ என்ற எண்ணம் வந்து விடுகிறது. என் மகன் நேற்று அடுத்த முறை கொலுவுக்கு வருகிறோம், படி அமைத்து நன்றாக சிறப்பாக பழைய மாதிரி நவராத்திரி கொலுவை சிறப்பாக செய்து விடுவோம் என்றான். இறைவன் அருளால் அப்படியே நடக்கட்டும். மருமகள் வந்த முதல் நவராத்திரி மகனும் மருமகளும் சேர்ந்து சிறப்பாய் செய்தார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியில் இணையம் குடும்பத்தை இணைத்து வைக்கிறது. ஸ்கைப் மூலம் குழந்தைகள் எங்கள் வீட்டு கொலுவுக்கு வந்தார்கள், தினம் வாருங்கள் என்றேன். நியூஜெர்சியில் இருக்கும் பேரனிடம் பாடு என்றவுடன் நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்து தொடையில் தட்டி தாளம் போட்டு, தேர்ந்த பாடகர் மாதிரி ச ரி க ம பா பாடி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான். டெல்லியில் உள்ள பேத்தி, மாலையில் அவள் வீட்டு கொலுவிலும், பின் எதிர் வீட்டு கொலுவிலும் பாடி விட்டு எங்கள் வீட்டு கொலுவிற்கும் ஸ்கைப்பில் வந்து இரண்டு பாட்டு பாடினாள். பேரன் அவனுக்கு தெரிந்த தேவாரம் பாடி அசத்தினான். அடுத்த முறை தன் அக்காவின் பாடலுக்கு பக்க வாத்தியம் வாசிப்பான், ஏனென்றால் குழந்தை இப்போது மிருதங்கம் கற்றுக்கொண்டு இருக்கிறான். குருவிடம் நன்றாக வாசிக்கிறான் என்று இப்போதே பாராட்டு பெற்று விட்டான். அவனுக்கு பிடித்த சர்க்கரை பொங்கலை கொடுத்தேன் ஆஹா! இதை சாப்பிட முடியவில்லையே என்று சொன்ன போது தான் பாடலை வீட்டிலேயே வந்து பாடுவது போல் மகிழந்த என் மனது குழந்தைக்கு விருப்பமான உணவை கொடுக்க முடியவில்லையே என வருந்தியது. என் மகளின் மாமானார், மாமியார் டெல்லி வந்து இருக்கிறார்கள் என் மகள் வீட்டுக்கு அவர்கள் நேற்று எங்கள் வீட்டு கொலுவைப் பார்த்தார்கள்.
இன்னும் எங்கள் வீட்டு கொலு வைக்கும் வேலை முடிவடையவில்லை. நிறைய வேலை பாக்கி உள்ளது,பார்க் அமைக்க வேண்டும், மலையிலிருந்து அருவி கொட்டுவது போல் வைக்க வேண்டும் கொலு பார்க்க வரும் குழந்தைகள் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.
கொலுவில் என் அம்மாவின் கைவண்ணத்தில் உருவாகிய பொம்மைகள்,பூவேலைப்பாடுகள், மகனின் ஒவியங்கள், மகள், மருமகள் கைவேலை, பேரன், பேத்தியின் ஒவியங்கள் என்று அணி வகுக்கிறது. கண்மேட்டியில் நான் பின்னிய பிள்ளையார் இருக்கிறது.கை எம்ப்ராய்டரில் பூங்கொத்துக்களுடன் ’வெல்கம்’ என்று பின்னிய கர்ட்டன் இன்றும் வரவேற்கிறது. என் கணவர் சரஸ்வதி பூஜை அன்று அம்மன் முகம் செய்து தன் பங்கை பூர்த்தி செய்து கொள்வார்கள்.என் அண்ணன் பேரன் ஐஸ் குச்சியால் அவனே செய்த அலங்கார தோரணத்தை கொலுவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் ஆச்சி என்று கொடுத்தான். அதுவும் இந்த வருடம் இடம்பெறுகிறது.
பண்டிகை என்றாலே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பங்கு எடுத்துக் கொண்டு செய்யும் போது அளவில்லா ஆனந்தம் கிடைக்கும். ரொம்ப பெரிய வேலை என்று இல்லை: மாவிலைத் தோரணம் கட்டுதல், சுவாமி படங்களுக்குப் பொட்டு வைத்தல், பூ வைத்தல் என்று செய்தாலே போதும். இதெல்லாம் என் குழந்தைகள் செய்வார்கள். இப்போது அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறேன். நாம் அவர்களை இதில் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கும் நம் பழக்க வழக்கத்தை சொல்லிக் கொடுத்தது போல இருக்கும், நமக்கு அவர்கள் உதவி செய்தது போலவும் இருக்கும். ஒருவர் மட்டும் எல்லா வேலைகளையும் செய்வது என்றால் அதில் வெறுப்பும் ஏன் தான் இந்த பண்டிகை வருகிறதோ என்ற எண்ணமும் தான் ஏற்படும். பண்டிகை என்றாலே குதூகலத்திறகுத் தான். அதனால் முடிந்ததைச் செய்து முடியாததைக் குறைத்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
பண்டிகை என்றாலே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பங்கு எடுத்துக் கொண்டு செய்யும் போது அளவில்லா ஆனந்தம் கிடைக்கும். ரொம்ப பெரிய வேலை என்று இல்லை: மாவிலைத் தோரணம் கட்டுதல், சுவாமி படங்களுக்குப் பொட்டு வைத்தல், பூ வைத்தல் என்று செய்தாலே போதும். இதெல்லாம் என் குழந்தைகள் செய்வார்கள். இப்போது அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறேன். நாம் அவர்களை இதில் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கும் நம் பழக்க வழக்கத்தை சொல்லிக் கொடுத்தது போல இருக்கும், நமக்கு அவர்கள் உதவி செய்தது போலவும் இருக்கும். ஒருவர் மட்டும் எல்லா வேலைகளையும் செய்வது என்றால் அதில் வெறுப்பும் ஏன் தான் இந்த பண்டிகை வருகிறதோ என்ற எண்ணமும் தான் ஏற்படும். பண்டிகை என்றாலே குதூகலத்திறகுத் தான். அதனால் முடிந்ததைச் செய்து முடியாததைக் குறைத்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.