திங்கள், 26 ஜூன், 2017

பாடிப் பறந்த பறவை ( புல் புல்)


காகங்கள்  விடாமல்  கரைந்து கொண்டு இருந்தன. என்ன என்று பால்கனி வழியாக எட்டிப்பார்த்தால் புல்புல் பறவை கீழே இறந்து கிடந்தது. 

அன்று காலையில் கூட பறந்து பறந்து தன் இணையுடன் குதூகலமாய் விளையாடிக் கொண்டு இருந்தது. எதிர்வீட்டு மாடிக்கு வருவதும், கேபிள் ஒயரில் அமர்வதும் எங்கள் வீட்டில் வைத்து இருக்கும் உணவைக் கொத்தி விட்டுச் செல்வதும்  என்று குதூகலமாய்ச் சுற்றிப்பறந்த புல்புல் பறவை தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து வருத்தமாய் இருந்தது.




                                                 பூச்சியை பிடித்து செல்கிறது.


மைனாக்கள் புல்புல் பறவையைக் கொத்திக் கொத்தி இழுத்துச் சென்றது. வளாகத்தைக் கூட்டும் பெண் அந்தப்  பறவையை ஓரமாய் ஒதுக்கி அதன் மேல் பழைய துணியைப் போட்டு மூடி வைத்தவுடன் காகம், மைனா எல்லாம் சிறிது நேரத்தில்  அந்த இடத்தை விட்டுச் சென்றன.

நேற்று வரை என்னை மகிழ்வித்த பறவை இன்று இல்லை என்று நினைக்கும் போது மனம் கனத்துப் போகிறது. ஏன் இப்படி ஆச்சு என்ற கேள்விகள் மனதில் . இணையைப் பிரிந்த மற்றொரு புல்புல் பறவையை இரண்டு நாளாகக்  காணோம்.

மாயவரத்தில் இருக்கும்போது புல்புல் பறவை நான் மொட்டைமாடியில் வைக்கும் உணவை எடுக்க வரும். அதிகாலை முதல் மாலை வரை அதனைப்பார்க்கலாம். பக்கத்து வீட்டு தென்னைமரத்தில் ஊஞ்சல்  ஆடும்.
கொடிக் கம்பியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும். எங்கள் குடியிருப்பில் மற்றொரு பக்கம் இருந்த மாடிப்படியின் அருகில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை, காத்திருந்து காத்திருந்து என்று பதிவு போட்டு இருந்தேன் .அப்போது எல்லாம் சின்ன காமிரா. அதிக தூரம் ஜூம் செய்ய முடியாது.


அதிகாலையில் 
மதிய வேளையில்
மதியம் 
மதியம்
மாலை நேரம் தென்னை மர ஊஞ்சல்
மாலை நேரம் உல்லாசமாய் ஊஞ்சல் ஆடும்   புல்புல் 

வாழ்க வளமுடன்

ஞாயிறு, 18 ஜூன், 2017

முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் - பகுதி -3

கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.



நான்கு சக்கரம், இரண்டு சக்கர வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டு எல்லோரும் சேர்ந்து நடந்தோம். 

//முத்துப்பட்டி பெயரே ரொம்ப அழகாக இருக்கு. பெருமாள்மலை போகும் நடைபாதை நல்ல அழகாகவும் ஆசையாகவும் இருக்கு, ஆனா இது குரூப் ஆகத்தானே போகமுடியும்.. தனிக்குடும்பமாக போகப் பயமென நினைக்கிறேன்.//

அதிராவின் பின்னூட்டம்  முத்துப்பட்டி முதல் பகுதிக்கு. 

ஆமாம் அதிரா , குரூப்பாகத்தான் போக முடியும். தனிக்குடும்பாக போவது கஷ்டம் தான்.

 இரு புறமும் முள்காடு -  நடுவில் பாதை - -இடை இடையே வீடுகள்.


கிராமத்து அழகிய வீடுகள் -  பார்ப்போம், வாருங்கள்!


நாய், ஆடு இவற்றுடன் வீட்டின் வெளியே  பசுமை நடை மக்களைப் பார்க்கும் இல்லத்து அரசி.

//அங்கும் மக்கள் இருக்கிறார்களோ... தண்ணிக்கு கஸ்டமாக இருக்குமே..//
அதிராவின் கேள்வி
என் பதில்:-

அங்கும் மக்கள் இருக்கிறார்கள்.  ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்தும் மக்கள் இருக்கிறார்கள். தண்ணீர் வசதியை
அரசாங்கம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.

கரையான், ஓலைக் கூறையை அரித்து இருக்க, இல்லத்தில்  ஆள் இருக்கா என்று தெரியவில்லை . ஆனால் ஆடு ஓய்வு கொள்கிறது வாசலில்
இப்போது எல்லோர் வீடுகளிலும்   மின் சாதனங்கள்  இருப்பதால் ஆட்டுக்கல் வெளியில் உருண்டு கிடக்கிறது, அம்மி திண்ணையில் ஓய்வு எடுக்குது. டிஷ்  ஆன்டெனா போட்டு இருக்கிறார்கள்.
 இரட்டைத் திண்ணை, கழிவறை, குளியல் அறை வசதி எல்லாம்  இந்த வீட்டில் இருக்கிறது.
 அழகான கூறை வீடு - மண் , சாணம் மெழுகிய தரை  - அடுப்பு எரிக்க முள் சுள்ளி, அம்மி வெளியே 
 வீட்டில் மேல் கூறை  உரச் சாக்கு போல் இருக்கிறது. காற்றில்  பறந்து விடாமல் இருக்கக் கயிறால் கட்டி வைத்து இருக்கிறார்கள்.
  
தூரத்திலிருந்து படம் எடுத்தேன்,  அவர்கள்  அனுமதியுடன் , 
வீட்டையும் அவர்கள் வெளியில் சமையல் செய்வதையும் படம் எடுத்தேன் , அவர்கள் பூரி செய்து கொண்டு இருந்தார்கள்,  
அன்புடன்," சாப்பிட வாங்க "என்று எங்களைக் கூப்பிட்டார்கள்..
அந்த கிராமத்தில் இவர்கள் வீடுதான் கொஞ்சம் பெரிது , டெரேஸ் பில்டிங் 
கிட்டிப்புள் விளையாடிக்
 கொண்டு இருந்த  சிறுவன்  அவனை படம் பிடிக்கச் சொன்னான் 
ஆங்காங்கே  தண்ணீர் குட்டைகள், அதில் கல்லைப் போட்டு தண்ணீர் வட்டமிடும் அழகை ரசிக்கும் சிறுவன்.  எங்கள்பயணக்குழுவில்  உடன் வந்த சிறுவன்.



இயற்கையாக அமைந்த  நீர்த் தேக்கத்தின் கரையில் அமர்ந்து  பேசுவது இனிமைதான். (அலைபேசியில் எடுத்தபடம்)

பாறைகளுக்கு நடுவில் நீர்த் தேக்கம்.


                                                      தண்ணீர் வசதி இருக்கிறது.


பழுது அடைந்த வீட்டிலும் கல் திண்ணை.

பன்றிகளும் உண்டு
 ஆடு மேய்ப்பவர்கள் நாங்கள் வீடு திரும்புவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

 கிராமத்துத் தெய்வம் (ஊதுவத்தி  பொருத்தி வைத்து இருக்கிறார்கள்)
தெய்வத்தின் பாதமே சரணம் என்று இருக்கும் ஆடுகள். தாயின் மடியைக்  குழந்தைகள்   அசுத்தம் செய்தால்  தாய்க்குக் கோபம் வராது தானே!

கிராமத்துக் குல தெய்வம் போல ! பொங்கல் வைத்து வழிபட்டு இருக்கிறார்கள்.


இந்த கிராமத்து வீடுகளில் ஆடு, கோழி,   வான்கோழி, நாய் வளர்க்கிறார்கள், மாடு யாரும் வைத்துக் கொள்ளவில்லை. 


குட்டி நாய்க்கு அந்த செருப்பிடம் கோபமா? பயமா? ( குட்டி நாய்கள் செருப்பைக் கடித்துத் தூக்கிக் கொண்டு போய் எங்காவது போட்டு விடும்)
                             

                                     சமத்தாய் என் பின்னாலேயே வாருங்கள்!.




எல்லோர் வீடுகளிலும் இரவு கோழியை அடைக்கும் கூடு உண்டு.
திண்ணை இல்லா வீடே கிடையாது. 
திண்ணை கட்டவில்லையென்றாலும் செங்கலை  வைத்து அதன் மேல் கற்பலகையை வைத்து திண்ணை தயார் செய்து இருந்தார்கள் சில வீடுகளில்.

அந்தக் காலத்தில்  மட்டும் அல்ல இப்போதும்  திண்ணை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பு திண்ணையில் உட்கார்ந்து ஊர்க் கதைகள் பேசி மகிழ்வார்கள். ஊருக்குள் யார் வந்தாலும் தெரிந்து விடும் எந்த வீட்டுக்கு போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று திண்ணையில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்களிடம் சொல்லாமல்  கடந்து போய்விட முடியாது.
இப்போதும் வீட்டு வாசலிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பக்கத்தில் கடைகண்ணி கிடையாது வெகு தூரம் வந்து தான்  பொருட்கள் வாங்க வேண்டும். கோவில்கள் பக்கத்தில் இல்லை , இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கு அருகில் அமைத்துள்ள தெய்வங்களை வணங்கி திருப்தி அடைகிறார்கள்.

எவ்வளவு வசதிகள் இருந்த போதும் மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும் சிலருக்கு (என்னையும் சேர்த்து தான்)  இங்கு உள்ளவர்கள் குறைந்த வசதியிலும் மன மகிழ்ச்சியுடன்   வாழ்வதைப் பார்த்தால்  நாம்  எவ்வளவு வசதிகளுடன் மனக்குறையுடன் வாழ்கிறோம் என்று வெட்கம் ஏற்படுகிறது.

"மனம் இருந்தால் பறவைக்  கூட்டில் மான்கள் வாழலாம்."  என்ற பாடல்  நினைவுக்கு வருது.

முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் தொடர்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது. 

                                                                வாழ்க வளமுடன்!


சனி, 17 ஜூன், 2017

முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் - பகுதி 2

கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.

மதுரையிலிருந்து 15 கி.மீ   தொலைவில் உள்ளது. 


மலையின் அழகைக் காணீரோ!


பாறையில்  வேப்பமரம்
சமணப்படுக்கையைக் காணப்போகும் வழி
கிரானைட் வெட்டப்பட்ட மலை- இப்போது தப்பிவிட்டது  

பிராமிக் கல்வெட்டு
இது என்ன விளையாட்டு என்று தெரியவில்லை
முரசு போல அமைந்துள்ள பாறை
எங்கள் வீட்டின் பக்கத்தில் சிறிய குன்று இருக்கே!



சமணப்படுக்கை
வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கை என்னும் வெளிச்சக்கீற்று தெரிவது போல பாறையின் நடுவே வெளிச்சக்கீற்று!  - நன்றி ஸ்ரீராம்



பாறையில் தான் எங்கள் விளையாட்டு
 நான் இங்கு  ஒளிந்து  இருப்பதை என் நண்பர்களிடம் சொல்லாதீர்கள்

கீழே விழுந்துவிடுமோ என்று கவலையுடன் பார்க்கும் பசுமைநடை அன்பர்

ஏய்! ரொம்ப ஓரம் போகாதே

காலை  நேர சூரிய ஒளி ரம்யமானது- நாம் மட்டும் அல்ல ,ஆடும் ரசிக்கிறது 

காலை நேர இளம் வெயில் உடம்புக்கு நல்லதாம், சூரிய ஒளிக் குளியல் செய்கிறேன்


நான் வரேன்  , மலை அழகை ரசித்தீர்களா?

அடுத்த பதிவில் எங்கள் வீடுகள் எங்களை வளர்ப்பவர்கள் வீடுகள் வருதாம் கோமதி அம்மாவின் அடுத்த பதிவில் மறக்காமல்   வந்து விடுங்கள்.

                                                              வாழ்க வளமுடன்.

செவ்வாய், 13 ஜூன், 2017

முத்துப்பட்டிக் கல்வெட்டுகள்- முதல் பகுதி









கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.

இம் மலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகளும் , மகாவீரர் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் அமைந்துள்ளன.

இங்கு வாழ்ந்து வந்த சமணத் துறவிகளுக்காக மலைக்குகையில்
இருபதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு படுக்கையும் வழுவழுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

குகைத்தள முகப்பில் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள், தென்பகுதியில் மகாவீரர் சிற்பங்கள் அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன.  அருகில் இயற்கையாக அமைந்த மற்றொரு குகையினுள் உள்ள  படுக்கைக்கு மேல் கல்வெட்டொன்று உள்ளது.


"சைஅளன்  வுந்தையூர் கவிய் " என்னும் கல்வெட்டு , மலையிலுள்ள பெரிய குகைத்தளத்தின் முகப்புப் பகுதியில் மூன்று பகுதிகளைக் கொண்ட வார்த்தைகளாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி
முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.  விந்தையூரைச் சேர்ந்த சையளன்  என்பவர் இக்குகைத்தளத்தை அமைத்துத் தந்திருப்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.


"திடிக்காத்தான் (ம) ...னம் எய்..." -என்று  குகைத்தளத்தின்  கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டும் கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்துத் தந்த கற்படுக்கையாக
இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

" நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்" என்றமைந்துள்ளது ஒரு கல்வெட்டு. சிறுகுகைத்தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாகக் காணப்படும் இக்கல்வெட்டு  கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும் . நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி  என்பது சேரர்களின் துறைமுகப்பட்டினத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள  முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும் ,  நாகபேரூரின் தலைவரும்  செய்துகொடுத்த   கொடை எனப் பொருள் கொள்ளலாம்.

குகைத்தளத்தில் தெற்கு நோக்கிக் காணப்படும் இரண்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன.  அரசமரக் கிளைகளின் கீழ் முக்குடைக்கு அடியில்  அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில்   உள்ள தீர்த்தங்கரர்  சிற்பம் உள்ளது. இருபுறமும் இருவர் கவரி வீச அழகாக தீர்த்தங்கரர்  அமர்ந்திருக்கிறார்.  அதன் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை  :-

முதல் கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர்  மாணக்கர் மகாணந்தி   பெரியார் நாட்டாற்றுப்புறத்து  நாட்டார்பேரால்  செய்விச்ச திருமேனி"

.
பராந்தக  பருவதமாயின ஸ்ரீ வல்லவப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின்   மாணக்கர்  மகாணந்திப் பெரியார் என்பவர்   நாட்டாற்றுப்புறத்து நாட்டாரின்  பெயரால்  செய்வித்துள்ளார்

அந்தக்காலத்தில்   ஆவியூர்க்கருகிலுள்ள குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்துள்ளது. அப்பள்ளியில் நிறைய மாணவர்கள்  பயின்று உள்ளனர். குரண்டிமலைக்கு அக்காலப் பெயர்தான் பராந்தக பர்வதம்

 இரண்டாவது கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாசி படாரர்  மாணக்கர் குணசேனதேவர் மாணக்கர் கனகவீரப் பெரியடிகள்  நாட்டாற்றுப்புறத்து அமிர்தபராக்கிரம  நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி  பள்ளிச் சிவிகையார் ரக்ஷ."


இரண்டாவது  கல்வெட்டில் கீழக்குயில்குடி ஊராரின் பெயரால் கனகவீரப் பெரியடிகள் செய்வித்துள்ளார்.  இவர்  குணசேனதேவரின்  மாணக்கர் ஆவார்.  முதல்மாடத்திலிருந்த சிற்பத்தினைச் செய்வித்த மகாணந்திப்பெரியாரின் ஆசிரியர் குறண்டி அஷ்டோபவாசிப் படாரரின் மாணாக்கர் ஆவார்.

அந்தக்காலத்தில் சமணத்தைப் பின்பற்றிய மக்கள் இதை நேர்த்திக்கடன் போல் செய்திருக்கலாம்.


மேலே உள்ளவை பசுமை நடைக் குழுவினருடன் 18. 12. 2016 ல் முத்துப்பட்டி என்ற சமணகுடவறை கோவிலுக்குப் போனபோது  அவர்கள் கொடுத்த கோவிலைப்பற்றிய விவரங்கள் அடங்கிய கையேட்டில் உள்ளதை இதில் கொடுத்து இருக்கிறேன்.

பசுமைநடை அமைப்பாளர்களுக்கு நன்றி.

மலைகளை, இடங்களை, கல்வெட்டுகளை, படுக்கைகளை ,வட்டெழுத்துக்களை, பாறை ஓவியங்களை நாம் அறிந்து கொள்ள இது போன்ற  பயணம் தொடர்கிறது நமக்கு பயணம். எல்லா நேரமும்  நாம் இதில் கொள்ள முடியவில்லை.

இங்கிருந்து பசுமை நடைக் குழுவினர் பெருமாள் மலை நோக்கிப் பயணம்
பசுமைநடை  வெளியிடும் புத்தங்கங்கள்  விற்பனைக்கு -

 மலைகள், சிலைகள், ஓவியங்கள் இடையேயான வரலாற்றை அறிய பயணங்களின் தொகுப்பு 
போகும் பாதை 
ஒற்றையடிப் பாதையாகத் தொடர்கிறது

பெருமாள் மலை

சமணச்சின்னம்  அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள்

பசுமைநடை அமைப்பாளர் திரு. முத்துகிருஷ்ணன்  பேசுகிறார்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்
இவர் கிராமிய   பழம் பாடல்களை சேகரித்து வருகிறார் 
சமணக்குகை ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கும் பசுமை நடைக் குழுவினர்

சமணப்படுக்கை உள்ள இடம்

சமணப்படுக்கையில் குழந்தை அமர்ந்து எழுத்துக்களை ரசிக்கிறது


பாறைகளுக்கு இடையே குனிந்து வெளி வருதல்


இதற்குள் சமணப்படுக்கையில் உள்ள எழுத்துக்களைப் பற்றி ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

சமணப்படுக்கையில் பக்கவாட்டில் சமணர்கள் வட்டெழுத்துக்கள் இருக்கிறது.
நடுவில் நம்  இளைய தலைமுறைகள் கல்வெட்டில் தங்கள் பெயர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.




முக்குடைக்கு அடியில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்.


இன்னும் படங்கள்  இருக்கிறது. மலையின் அழகு. போகும் பாதையில் கண்ட காட்சிகள் எல்லாம் அழகு.

 சமணப்படுக்கையை கண்டு களித்தபின் காலை டிபன் இட்லி, சட்னி, சாம்பார்  அடங்கிய   பொட்டலங்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து மலைக் காட்சிகளை படம் எடுத்து வந்தோம்.

அழகிய  முத்துப்பட்டி ஊரின் காட்சிகள் அடுத்த பதிவில்.
                                                             

வாழ்க வளமுடன்.