ஞாயிறு, 14 மார்ச், 2010

தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்



துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.


உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை உணபவர்களுக்குத்
தானும் உணவாக இருப்பது மழையாகும்.

மழை நீர் அமிழ்தமாக உயிர்களை வாழவைக்கிறது.இத்தகைய நீரை மாசு படுத்துவதை மக்கள்
உணரவில்லை.குளங்கள் எல்லாம் தாமரையும்,அல்லியும் மலர்ந்துகாணப்படவில்லை.பாலீதீன் கவர்களும்,மற்றும் வீட்டுக் கழிவு குப்பைகளும் தான் நிறைந்து காணப்படுகிறது துர் வாடை வீசி சுற்றுப்புறத்தை நாசமாக்கிக் கொண்டு இருக்கிறது.சில குளங்களில் ஆகாசத் தாமரை படர்ந்து குளத்து நீரையே மறைத்துள்ளது. ஏரி, குளங்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுத்து அவற்றைத் தூர்வாரி, மழைக் காலத்தில் மழை நீரை சேகரித்து கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாகுறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீர் சுத்தமாய் இல்லை என்று காய்ச்சி வடிகட்டிய தண்ணீருடன் பயணம் செய்கிறோம்.
குடி தண்ணீர் மூலம் தான் நோயகள் பரவுகின்றன. பஞ்சபூதத்தையும்கெடுத்து விட்டோம்.
சுற்றுச் சூழலைமாசு படுத்துபவர்களைத் தண்டிக்க வேண்டும் தொழிற்சாலைக் கழிவுகளைஆறு,குளங்களில் கலக்காமல் பார்த்துக்கொள்ள தீவிர கண்காணிப்புத் தேவை.நீர் மேலாண்மை பற்றிய விழிப்புண்ர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

7 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை.இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்.இயற்கை வளத்தை பாதுகாக்கா விட்டால் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாமல் போய்விடும் இந்த உலகம்.

சிலர் தண்ணீரை வீணடிப்பதை பார்த்தால் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே பாடல் நினைவுக்கு வருகிறது.சிக்கனத்துக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்கள் தங்கை வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்தாராம் சாப்பிட்டு முடிந்தவுடன் தங்கச்சி மகன்(ஈரோடு சாமி)மாமாவுக்கு கை கழுவ தண்ணீரை நிறைய ஊற்றிக்கொண்டே இருந்தாராம் பெரியார் பொட்டுன்று ஒர் அடி அடித்து ஏன் அடித்தேன்னு கேளு அப்படின்னாராம் “ஏன் அடிச்சிங்க?”ன்னு கேட்டார் தங்கச்சி மகன். அதுக்கு பெரியார்”இது தண்ணியா இருக்கிறதுனாலே தானே இப்படி தாராளமாக ஊத்தறே. நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா? தண்ணியா இருந்தாலும் அதை அளவோடதான் செலவு பண்ணனும் வீணக்கப்புடாது” என்று சொன்னாராம். இந்தக்காலத்துக்கும் எந்தக் காலத்துக்கும் தேவையான் ஒர் அறிவுரை.

பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள் என்பார்கள். அதை மாற்றி தண்ணீரை பணம் மாதிரி செலவு செய் என்று சொல்ல வேண்டும். நிலத்தடிநீர் என்பது உலகமக்களின் சொத்து. ஆறுகள் வரண்டு போனால் நிலத்தடி நீர் எங்கு இருக்கும்.குழாய்ப் போட்டு உறிஞ்சி எடுத்து கொண்டே இருந்தால் ’சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ நிலத்தடி நீர் வளத்தை பெறுக்க மரங்கள் வளர்ப்போம்.மரம் வளர்த்து மழை பெறுவோம்.மழை நீரைச் சேமிப்போம்.நீர் இல்லாத ஏரி குளங்களில் வீடு கட்டுவதைத் தவிர்ப்போம்.

இரசாயன் உரத்தைக் கொட்டி, உயிர்க்கொல்லிகளைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கி விட்டோம் இயற்கை உரங்களைப் போட்டு நிலத்தை நல்ல நிலமாக மீட்டால் நந்நீர் பெறலாம்.
நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும்.மழை பொழிந்தால் தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.

விவசாயத்திற்குச் சொட்டு நீர்ப் பாசனம் இருந்தால் நீர் தேவையின்றி ஆவியாவது தடுக்கப் படும். வேருக்குச் சொட்டு நீர்ப் பாசனம், நீர் சிக்கனத்தைத் தருவது போல இலைகளுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம் நன்மை தரும். நீர்ப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்,நகர் ஆக்கம்,காலநிலை மாறுபாடு,மாசுபாடு,வணிகம் ஆகியவை காரண்ம்.


நீர்ப் பற்றாக் குறை காரணமாக அண்டை வீடுகளுக்கும், அண்டை வயல்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகினறன. கி.மு 2500ல் சுமேரியாவில் இருந்த லகாஷ்,உம்மா ஆகிய நாடுகளுக்கு இடையே நதி நீரைப் பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதே நிலமை இப்படி இருந்தால் இப்போது கேட்கவா வேண்டும்?


ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கபப்டுகிறது. இந்த வருடம் சுத்தமான் நீரின் அவசியம் பற்றி மக்களிடையே”சுத்தமான் நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்”’ என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தர உள்ளனர்.

” ஏரி, குளம்,கிணறு,ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க”
வாழ்க வளமுடன்!!

இப்பதிவினை மண் மரம் மழை மனிதன் பதிவில் மரவளம் வின்சென்ட் அவர்கள் எழுதியிருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

மகளிர் தின வாழ்த்துக்கள்

” பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்னபெருமை
இதைவிடப் பேசுதற்கு”
-மாக்கோலம்.

” மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”
கவிமணி தேசியவினாயகம் பிள்ளை அவர்கள்.

காதலொருவனைக் கைபிடித்தே யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்

பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா

என்றெல்லாம் பெண்மையை ஆண்கள் போற்றி புகழ்ந்து சொல்கிறார்கள்.
பெண் முதலில் தன் பெருமையை உணர வேண்டும்.ஆண்களுக்கு உடல்
பலம் என்றால் பெண்களுக்கு மன பலம்.சின்ன விஷயங்களுக்கும் உடைந்து போகாமல்
தன்னைக் காத்துக் கொண்டு,தன் குடும்பத்தையும் பேணுபவளே பெண்.

பெண்கள் சமமாக எல்லாத் துறையிலும்முன்னேறி வர வேண்டும்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் குடும்பத்தினுடைய முன்னேற்றம்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!

புதன், 3 மார்ச், 2010

இளமைப் பருவம்

பருவங்கள் பலவகைப் படும் அவை: காப்பு பருவம்,செங்கீரை பருவம்,தாலப் பருவம் சப்பாணிப் பருவம்,முத்தப் பருவம்,வருகை பருவம்,அம்புலிபருவம்,அம்மானை பருவம்,நீராடற்பருவம்,ஊசற்பருவம் ஆகியவை பெண்களுக்கு உரியவை.ஆண்களுக்கு கடைசியில் உள்ள மூன்று பருவத்திற்கு பதிலாக சிற்றில் பருவம்,சிறுபறை பருவம் சிறுதேர்பருவம் ஆகிய மூன்றும் உரியவை.இவை எல்லாமே இளமை கொஞ்சும் பருவங்கள்.

குழந்தைப் பருவம் மிகவும் அற்புதமானது,கள்ளம் கபடு தெரியாத பருவம்.என்றும் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று ஒவ்வொருவரும் நினைக்க வைக்கும் பருவம்.

பாரதியார் பாப்பா பாட்டில் பாடியது போல் மாலை முழுவதும் விளையாட்டு தான்.

என் இளமை பருவம் முழுவதும். மிகவும் இனிமையானது,அந்த பொழுதுகள் இனி திரும்பி வராது,ஆனால் நினைத்து மகிழலாம்.

எங்கள் வீடு எப்போதும் அண்ணனின் நண்பர்கள்,என் தோழிகள்,தம்பி,தங்கைகள் விளையாட்டு சகாக்கள் என்று நிறைந்து இருக்கும். வீட்டில் கேரம் போர்டு,டிரேடு,சீட்டு எல்லாம் விளையாடுவோம்.கோவையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு முன்பு பெரிய விளையாட்டு திடல் உண்டு.அதில் நெட் கட்டி ரிங்பால் விளையாடுவோம்.ஓட்ட பந்தையம்,உயரம் தாண்டுதல் போட்டி எல்லாம் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சேர்த்து வைத்த காசில் பரிசுகள் வாங்கி கொடுப்போம். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதும் அங்கு தான்.14 வீடுகள் உள்ள குடியிருப்பு எல்லோருக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்ற விளையாட்டு துணை கிடைத்தது.பெரியவர்களும் நாள் கிழமைகளில் தங்கள் வீட்டு பலகாரங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து மகிழ்வார்கள்.(தீபாவளி பண்டிகை,கிறிஸ்துமஸ்,ரம்ஜான்)கோவையில் இருந்த 5வருடமும் பொற்காலம் தான்.

மாலை 6 மணி ஆகிவிட்டது என்று அம்மா கூப்பிடும் போது சிணுங்கலுடன் தான் வீட்டுக்குள் ஆஜர்.(இப்போதும் என் பேத்தியை பார்த்து என் மகள் கேட்கும் கேள்வி, விளையாட்டு முடித்து வீட்டுக்கு வா என்று கூப்பிட்டால் ஏன் மூஞ்சியை தூக்குகிறாய்? என்பதுதான்)

பள்ளியில் தோழிகள் அமராவதி,புவனேஸ்வரி,யோகேஸ்வரி,சரஸ்வதி,பிரேமா என்று அறுவர்
கூட்டணி வைத்திருந்தோம்.நாங்கள் எப்போதும் சேர்ந்தே விளையாடுவோம்,சாப்பிடுவோம்.

பள்ளியில் சுற்றுலா சென்றால் முதலில் பேர் கொடுப்பது இந்த அறுவர் கூட்டணி தான்.பள்ளி விழாக்களில் ஆடுவதற்கும், மாறு வேட போட்டியில் கலந்துகொள்வதற்கும் பேர் கொடுப்பதில் நான் தான் முதல். படிப்பில் முதல் இல்லை! பிரேமா வீடு பள்ளி பக்கத்தில் இருக்கும். அதனால் மதியம் உணவு முடிந்த வுடன் அவள் வீட்டுக்கு போய் அரிநெல்லிக்காய் பறித்து உண்போம்.கோவையில் பள்ளியின் வாசலில் மாங்காய் அழகாய் வெட்டி, மிளகாய்ப் பொடிதூவி விற்பார்கள். வாங்கி தோழிகள்எல்லோரும் கண்சிமிட்டாமல் உண்போம் (இப்போது முடியுமா) பிரேமாவின் வீட்டில் ஞாயிறு தோறும்” சின்மயாமிஷனின் பாலவிஹார்’நடை பெறும். பஜனைப் பாடல்கள்,திருப்புகழ்,பஜகோவிந்தம்,பகவத்கீதை எல்லாம் சொல்லித்தருவார்கள். என் அப்பாவும் அவள் அப்பாவும் சின்மயாமிஷன் நண்பர்கள். தோழிகள் சாப்பாடு கொண்டு வரவில்லை என்றால் நான் தனியாக சாப்பிடமாட்டேன். பிரேமா வீட்டிற்கு போய்விடுவேன். அங்கு அவள் அம்மா அவர்கள் வீட்டு உணவைத் தருவார்கள்.பிரேமாவின் பக்கத்து வீட்டில் பின்னணிப் பாடகி கோவை கமலா இருந்தார்கள். சுந்தராம்பாள் மாதிரி பாடுவார்கள்.நாங்கள் பிரேமா வீட்டுக் கொலுநிகழ்ச்சியின் போது பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வோம்.

என் அண்ணன் சபர்பன் பள்ளியில் படித்தார்கள்.அவர்களுடன் ரெங்கராஜ் என்பவரும் படித்தார். பள்ளியின் அருகில் தான் அவர் வீடு. அண்ணனும் அவரும் பள்ளி விட்டதும் அரட்டை அடித்து விட்டு தான் வருவார்கள்.அவர் தான் பின்னாளில் சத்தியராஜ் என்ற நடிகரானார்.

என் இளமைப் பருவம் கோவையில் உள்ள ஐயப்பன் சமாஜம், ராமர்கோவில், பாலவிஹார் என்றுதான் கழிந்தது.ஐயப்பன் சமாஜத்தில் நடக்கும் பாட்டு கச்சேரி,சிவானந்தவிஜயலட்சுமியின்
தொடர் சொற்பொழிவுகள், சின்மையானந்தர்,தயானந்தர்,கிருபானந்தவாரியார்,பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோரின் சொற்பொழிவுகள் என்று ஆன்மீகம் சார்ந்தே இருந்தது.

சிறியவயதிலே திருமணம் ஆகிவிட்டது.திருமணம் ஆனபின் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.நான் 11வது படிக்கும் போது துணை முதல்வரின் மனைவி துர்க்கா அவர்கள், 10வது படித்தார்.பிறகு நான் B.A பொருளாதாரம் படித்தேன்.மதுரை காமராஜர் திறந்த வெளி பல்கலை கழகத்தில்.புள்ளியியல் எடுக்கும் ஆசிரியர்,என்னிடம் மேடம்,மேடம் இந்த கணக்கை போட்டு காட்டுங்கள் என்று கேட்பார், நான் பெரிய மேதைஎன்று நினைத்து.புள்ளியியலில் கணக்குகள் அதிகம் வரும்.கணக்கிற்கும் எனக்கும் வெகுதூரம்.அதனால் புள்ளியியலும் எனக்கு தூரமாகிவிட்டது.முதலாம் ஆண்டு படிப்புடனே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.


பிறகு ஆங்கிலத் தட்டச்சு,தமிழ்த் தட்டச்சு,தையல் என்று படித்து ,பின் யோகாவில் ஆசிரியர் பயிற்சி என்று என் கற்றல் தொடர்கிறது.இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது. அதனால் இன்றும் என் இளமைப்பருவம்
நீடித்துவருகிறது.

பதின்மப் பருவமே ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டமாகும்.


வல்லி அக்கா அவர்கள் இளமைப் பருவத்தைப் பற்றி எழுதுங்கள் என்றார்கள். எழுதி விட்டேன்.