புனுகுப் பூனை பூஜை செய்கிறது ஈஸ்வரனை
போன ஞாயிறு (16/07/2017) அன்று மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில்
மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
புனுகீசுவரர்
சுவாமி விமானம், கீழே சண்டேசுவரர்
சுவாமி விமானத்திற்கு கும்பாபிஷேகம்
குருக்கள் குடத்தில்
இருக்கும் புனித நீரைக் கீழே பார்த்துக்கொண்டு இருப்பவர் மேல் தெளிக்கிறார்.
கோவில் வரலாறு:-
அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரர்சுவாமி திருக்கோயில், புண்ணிய நதியாம் காவிரிக்குத் தென்பால், கூறைநாட்டில் அமைந்து உள்ளது. சிவபெருமானை மதியாமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் சாபம் பெற்று, இத்திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் மகிழும் வண்ணம் புனுகுப் பூனை உருவெடுத்துப் பூஜித்து சாப விமோசனம் அடைந்து , இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றார் என்பது இத்தல வரலாறு .
கோயில் சிறப்பு:-
சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. சனிப்
பெயர்ச்சி விழா, வாராவாரம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கும்.
35 வருடங்களுக்கு மேலாய் மயிலாடுதுறையில் இருந்தோம். அந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் வாரவழிபாட்டுக்குப் போவோம்., பிரதோஷம் மற்றும் அனைத்து விழாவிற்கு அங்கு போவோம். வாரவழிபாட்டு
ஆண்டுவிழா புரட்டாசி மாதம் நடக்கும். அதற்குக் காலையில் சிவபூஜை நடைபெறும். பின் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று பெரியபுராணம் ஊர்வலமாக வரும். மாலையில் பக்திச் சொற்பொழிவு நடைபெறும் . அதில் என் கணவரும் பேசுவார்கள்.
தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை லட்ச தீபவிழா நடைபெறும் , இரவு சொற்பொழிவு நடைபெறும். திருவாடுதுறை ஆதீனம் கலந்து கொண்டு தொண்டு செய்பவர்களுக்குப் பொன்னாடை போற்றி கெளரவம் செய்வார்கள்.
விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை என்ற பதிவில் இந்த கோவிலில் நடக்கும் லட்சதீபம் பற்றிப் போட்டு இருக்கிறேன். 2014 ல் நடந்த விழாவைப் போட்டு இருக்கிறேன். இதில் சார் வரைந்த படங்களும் இடம் பெற்று இருக்கும். குருக்கள் செய்த அழகான சந்தனக்காப்பில் சாந்தநாயகி அழகிய படம் இடம்பெற்று இருக்கும். பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உழவாரப் பணி செய்பவர்களால் பள்ளி அறை பூஜை நடைபெறும்.
கும்பாபிஷேக முதல் நாள் படம் எடுத்தேன். வேலை நடந்து கொண்டு இருந்தது பள்ளியறையில். புது வெல்வட் ஊஞ்சல் , சுற்றிவரக் கண்ணாடிகள்.
நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் சிறப்பாய் நடக்கும்
புனுகீஸ்வரர் சுவாமி சன்னதி
கணவர் வரைந்த ஓவியம்
கும்பாபிஷேகம் ஆகும் முன் காலையில் எடுத்த படம்
சாந்தநாயகிக்கு ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி விழாக்களில் செய்யப்படும் சந்தனக்காப்பு அவ்வளவு அழகாய் இருக்கும்.
கும்பாபிஷேகத்திற்குப் பத்திரிக்கை அனுப்பி அன்புடன் அழைத்தார்கள் கூறைநாடு சாலியர் பெருமக்கள். அவர்களும் மெய்யன்பர்களும்
யாகசாலையை மிகவும் சிறப்பாய் அமைத்து இருந்தார்கள். ஒரு வாரமாய் சிறப்பாய் நடத்தி இருக்கிறார்கள். நாங்கள் கும்பாபிஷேகத்துக்கு
முதல் நாள் தான் போனோம், ஒரு வாரம் முன்பே வந்து இருக்க வேண்டியது தானே ? . வீடா இல்லை ,எத்தனை வீடு இருக்கு தங்கிக் கொள்ள என்று கடிந்து கொண்டார்கள்-
பல வருட நட்பு !
அவர்கள் வீடுகளில் நடைபெறும் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வோம்.
அவர்கள் குடியமர்ந்த நான்கு தெருவிலும் பிள்ளையார்கள் உண்டு. பெரிய சாலிய தெருவில் உள்ள
காஞ்சி விநாயகர் பற்றியும் அவருக்கு நடந்த கும்பாபிஷேகம் பற்றியும் முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
வடக்கு சாலிய தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு (அவர் பெயர் "செல்வ விநாயகர்") செவ்வாய் வார வழிபாட்டுக்குப்போவேன் (துர்க்கை வழிபாடு) ஆடிசெவ்வாய் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும்
ஒவ்வொரு அலங்காரம். ஆடிமாதம் அல்லவா? நினைவு அங்கேதான்.
தெற்கு சாலிய தெரு விநாயகர், "வெற்றி விநாயகர்". அவரை வணங்கித்தான்
எங்கும் போவோம். தெருவின் நடுவில் டிராபிக் போலீஸ் போல் இருந்தார். மக்களைச் சரியாக வழி நடத்திக் கொண்டு. அவரை சாலையை அகலப்படுத்த மக்கள் தடுத்தும் கேட்காமல் ஓரம் கட்டி விட்டார்கள். ஆனால் முன்பை விட தாராளமான - அவருக்கு சொந்தமான இடத்தில் இப்போது
அழகாய் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார்.
சாலியர்களுக்கு சொந்தமான கோவில்கள்:
1.முதன்மையான் கோவில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த விநாயகர் கோவில் ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம்
2.கீழஒத்தசரகு சித்தி புத்தி விநாயகர்
3.வடக்கு சாலிய தெரு ஸ்ரீ செல்வவிநாயகர்
4செங்கழுநீர் விநாயகர் ஆலயம்
5.ஸ்ரீ வெள்ளந்தாங்கி ஐயனார் ஆலயம்
6.கல்லக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
7.காவிரிக்கரை காசி விஸ்வநாதர் ஆலயம் (கூறைநாடு)
8.குருக்கள் பண்டாரத்தெரு, ஸ்ரீ கனக மாரியம்மன் ஆலயம்
9. தனியூர் சாலியதெரு தாமோதர விநாயகர் ஆலயம்
10. தெற்கு சாலியதெரு ஸ்ரீ வெற்றி விநாயகர்.
ஆண்டு தோறும் எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடக்கும்.
எல்லா விழாக்களுக்கும் அழைப்பு உண்டு.
புனுகீஸ்வரர் கும்பாபிஷேகம் மட்டும் அல்லாமல் நட்புகளைப் பார்த்து வந்ததும் ஆனந்தம். மயிலாடுதுறையை விட்டு வந்து ஒரு வருடம் தான் ஆச்சு ஆனால் பல வருடங்கள் கழித்துப் பார்ப்பது போல ஒரு நினைவு. அவர்களின் அன்பின் மழையில் நனைந்து இறைவனை வணங்கி வந்தோம்.
அறுபத்துமூவர் உற்சவம் நடைபெறும். உழவாரத் திருப்பணி அன்பர்களால் புதிது போல் ஜொலிக்கும் பஞ்சலோக சிலைகள்
கல்லில் வடித்த அறுபத்து மூவர் சிலைகள்
உற்சவ சுவாமிகள்.
இங்குள்ள உற்சவ முருகன் கையில் வில் வைத்து இருப்பார்.
மூலவர் முருகன்
ஒரு காலத்தில் தண்ணீர் இருந்த தெப்பக்குளம் - இப்போது நீர் வற்றி உள்ளது.
புறாக்கள் தங்கிக் கொள்ள அதற்கு வீடு மதில் மேல் அமைத்து உள்ளார்கள்.
ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்குச் சிறப்பாகக்
குருபூஜை செய்வார்கள்.
துர்க்கைக்கு ராகுகால வழிபாடு,
ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பாய் நடைபெறுகிறது..
தட்சிணா மூர்த்திக்கு வியாழன் வழிபாடு சிறப்பாய் நடைபெறும்
நவகிரகங்களுக்கு
புதிதாகக் கூண்டு அமைத்து உள்ளார்கள் ,
மக்கள் விளக்கேற்றுகிறார்கள் சுவாமி பக்கத்தில் -அதைத் தடுக்க
சுவாமி விமானம், சண்டேசுவரர் விமானம்,
ராஜ கோபுரம், நடராஜர் விமானம் , தலவிருட்சம் -பவளமல்லி.
சகஸ்ரலிங்கம், நர்த்தன விநாயகர் , பைரவர், சூரியன், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி, இருக்கிறார்கள். ஐயப்பன், அனுமன் பஞ்சலோகத்தில் இருக்கிறார்கள். ஐயப்பனுக்கு மாதா மாதம் உத்திரத்தில் பூஜை
நடைபெறும்.
.
அனுமனுக்கு அமாவாசை விஷேட அபிஷேகம் உண்டு. புரட்டாசி மாதம் அனுமன் விக்கிரகத்தைத்திருப்பதிக்கு எடுத்துப் போய் வந்து பெருமாளுக்குச் சனிக்கிழமை தளிகை போடுவார்கள் சிறப்பாய்.
இப்படி எல்லா விழாகளும் சிறப்பாய் நடக்கும் கோயில்
வாழ்க வளமுடன்.