ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஆலயங்களில் நவராத்திரி விழா

நவராத்திரியில் நிறைய பாடல்கள் பாடி மகிழ்வோம். நம் தேசியக் கவி பாடிய பாடலையும்  பாடி மகிழலாம்.

லக்ஷ்மி பிரார்த்தனை

மலரின் மேவு திருவே-- உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவுசெய்யும் முகமும் -காண்பார்
நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும்-தெய்வக்
களிதுலங்கு நகையும்
இலகு செல்வவடிவும்- கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்

திருமகளை சரண் புகுதல்

பொன்னிலும் மணிகளிலும்- நறும்
பூவிலும் சாந்திலும்  விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் -செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் -மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற்  புகழ்பாடி- அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

சரஸ்வதி தேவியின் புகழ்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.

காளி    ஸ்தோத்திரம்

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே

கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.    

   
நவராத்திரி விழா சில நினைவுகள்:-

ஆலயங்களில் கொலு வைத்து  அம்மன் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரத்தில் கொலுவீற்று இருப்பாள். கோவிலில்  கொலு10 நாட்கள் நடைபெறும்
எங்கள் ஊரில் இருக்கும் புனுகீஸ்வரர்  கோவிலுக்கு கொலு பார்க்க நாங்கள் தினமும் குழந்தைகளுடன் போவோம். அங்கு அழகாய் கொலு பொம்மைகள் இருக்கும்.
பின் அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சாரங்கபாணி கோவில் செல்வோம். அங்கும் கொலு பார்த்துவிட்டு அதன் அருகில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவில் போவோம். அங்கும் கொலு வைத்து இருப்பார்கள் .தினம் பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல்,”அந்த பொம்மையைப் பார், இந்த பொம்மையைப் பார் ”என்று பிள்ளைகள் பேசி மகிழ்வார்கள். மயூரநாதர் கோவிலிலும் கொலு நன்றாக இருக்கும். கோவில் கோவிலாக குழந்தைகளுக்காக் கொலு பார்க்கச் சென்ற நினைவுகள் மனதில் மலர்கிறது.

நாங்கள் திருவெண்காட்டில் இருந்தபோது, ஸ்வேதாரண்யர் கோவிலில் நவராத்திரி கொலு மிகச் சிறப்பாக நடைபெறும். கொலு பொம்மைகளை வைத்து தினம் கதைகள் சொல்வார்கள் .ஒருநாள் கைலாயக் காட்சி என்றால் இன்னொருநாள் வைகுண்ட வாசல், ஏழுகதவுகள் திறக்கும்.கடைசி கதவு திறக்கும் போது பாற்கடலில் பரந்தாமன் காட்சி அளிப்பார்.  பெரிய பெரிய பொம்மைகள் அதை மாற்றி மாற்றி வைத்துக் காட்சி அமைப்பார்கள். வெகு அழகாய் இருக்கும். கச்சேரிகளும் உண்டு.பெரிய பெரிய பிரபலமானவர்களின் கச்சேரிகள் நடக்கும். இப்போது அப்படி நடப்பதில்லை.

வீட்டில் கொலு வைத்து இருக்கும்போது இறைவன் புகழைப் பாடி மகிழ்வார்கள். ஆடல்கலையால் இறைவன் புகழை ஆடியும்  மகிழ்வார்கள். தங்களுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த குருவிற்கு விஜய தசமி அன்று குரு காணிக்கை அளித்து மகிழ்வார்கள். எடுத்தக் காரியத்தில் வெற்றி பெற இறைவன் அருளும் குருவருளும் மிகவும் முக்கியம்  இல்லையா?

இந்த ஒன்பது நாளும் தங்களுக்கு இருக்கும் பலகலைகளையும் வெளிப்படுத்தக் கிடைத்த நல்ல வாய்ப்பாக குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் இந்த விழாக்கள் மூலம் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் இவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பாகவும் இருக்கிறது.

இந்த விழா மட்டும்  தான் சாதி மதம் பாராமல் அனைவரும் அவர்கள் தொழில் செய்யும் இடத்தைக் கோவிலாக நினைத்து கொண்டாடும் விழாவாக இருக்கிறது. தொழில் புரிபவர்கள்  தாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் சுத்தமாகத் துடைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூஜை போடும் நாள்.

கொலுவிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் மகிழ்வாய் வந்து கலந்து கொண்டு மகிழ்வதால்  நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழா.

கோவிலோ வீடோ எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியால்தான் விழாக்களை சிறப்பாக செய்யமுடியும். ஒருவர் மட்டும் செய்தால் அதில் அலுப்பும், சலிப்பும் வந்து விடும்.  கூட்டுமுயற்சிக்கு ஒரு விழா நவராத்திரி.

விழா முடிந்த பின் கொலுவை எடுத்து வைத்தவுடன் கோவிலும், வீடும் கொலுவீற்றிருந்த இடம் வெறிச்சோடி இருக்கும். அடுத்த வருடம் வரும் வரை இந்தப் பத்து நாட்களின் மகிழ்ச்சி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.

           
மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு புனுகீஸ்வரர் சமேத சாந்தநாயகி கோவிலில் அம்மன் சாந்தநாயகி.

நவராத்திரி முதல் நாள் சாந்தநாயகி கொலுவீற்றிருக்கும் அழகு
கொலுமண்டபம்
படியில் கொலு பொம்மைகள் அணி வகுப்பு
தெப்பகுளம் அமைத்து அதில் மீன்கள் விடப்பட்டு இருக்கிறது
சாந்தநாயகி - நவராத்திரி இரண்டாம் நாள்


நவராத்திரி மூன்றாம் நாள் - சாந்த நாயகி
காமாட்சி கோவில் கொலு
 (இரு மனைவியருடன் கல்யாண மாப்பிள்ளை ) கல்யாணத்தில் பாட்டுக்கச்சேரி (சாரங்கபாணிகோவில் கொலு)
சாரங்கபாணி  கோவில் கொலு
சாரங்கபாணி கோவிலில் நவராத்திரி விழா   _தாயார் கலசத்தில் இருக்கிறார்
திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் கலைமகள் அலங்காரம்

அன்னையின் புகழ் பாடும் நாட்டிய நாடகம்

மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில்  குழந்தைகள் அம்மன் அலங்காரத்தில் (ந்ன்றி ராஜ் டி.வி)

நவராத்திரி கொலுவில் மும்மூர்த்திகள்
நவராத்திரியில் அன்னையின் புகழ்பாடும் சிறுமியர்

சென்ற வருடம் நவராத்திரி அமெரிக்காவில் - அப்போது அங்கு   மகன் வீட்டில்  என் கணவர் செய்த சரஸ்வதி அம்மன்.


ஆதாரம்  சக்தி யென்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறைத்தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

வாழக வளமுடன்
----------------

புதன், 24 செப்டம்பர், 2014

தேவி கொலுவிருக்கும் வீடு


இந்தப் படம் சுமார் 58 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒரு காலண்டரில் இருந்ததாம். என் அத்தை வீட்டில் பெருங்காயம் வாங்கியபோது அதற்கு அந்தக் காலண்டரைக் கொடுத்தார்களாம்.. அதை அத்தை வீட்டில் பிரேம் செய்து வைத்து இருந்தார்கள். அதை இப்போது நகல் எடுத்துக் கொண்டோம். 

பெருங்காயக் கம்பெனி பெயர்

வரைந்த ஓவியர் பெயர்(ராஜம் )

அந்தக் காலத்தில் வியாபாரத்தில் கூட இறைபக்தியை வளர்த்து இருக்கிறார்கள்.

அத்தை அவர்கள் பின்னிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதி

இந்த முறை கொலு இல்லை . அதனால் படங்கள் மட்டுமே!


2006 ஆம் வருடம் எடுத்த படம்


  2005ஆம் ஆண்டு நவராத்திரி கொலு அம்மன் அலங்காரம் ஒருபுறம்.          குழந்தைகளின் கைவண்ணம் ஒருபுறம்.

 நவராத்திரி என்றால் குழந்தைகளுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துவரச் செய்வோம். வீட்டை அழகுபடுத்தி, வாசலில் விதவிதமாய் அழகிய கோலங்கள் போட்டு  ஒன்பது நாளும் உறவினர், நண்பர்கள் என்று மகிழ்ச்சியாக உறவாடி மகிழ்வோம்.

ஒன்பது நாளும்  மூன்று தேவிகளை வழிபட, பாடல்கள் பாடலாம் அல்லது பாடல்களைக் கேசட்டுகள் அல்லது சிடி போட்டுக் கேட்கலாம்.

நம் தேசியகவி அவர்களின் நவராத்திரி பாட்டு கேட்போம்:-

                  நவராத்திரி பாட்டு

உஜ்ஜயினீ நித்யகல்யாணி!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி    (உஜ்ஜயினீ)
உஜ்ஜய் காரண் சங்கர தேவீ
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா                   (உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)
ஸ்த்ய் யுகத்தை அகத்தி லிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)

                                     பாரசக்தி    (மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலா நீ நிறைந்தாய்
ஆதார முன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே.

                                       வாணி

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போலே அறிவுமுத்து மாலையினள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

                                        
                                       ஸ்ரீ தேவி

பொன்னரசி , நாரணனார்தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற்றாளே சரண் புகுநது வாழ்வோமே.

                                               பார்வதி

மலையிலே தான் பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையிலுயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தரணிமிசை வாழ்வோமே .

நவராத்திரி நாயகியான அம்பிக்கைக்கு ‘சர்வக்ருக ரூபிணி’ என்ற பெயரும் உண்டு சந்திரன், சூரியன் போன்ற நவக்ரகங்களும் அம்பிகையின் உருவம் என்பதால் நவக்கிரக வழிபாடு மூலமும் அம்பிகையை வழி  படலாம். 

தேவிபாகவத்தைக் கேட்பதாலும் , பாராயணம் செய்வதாலும் ஐஸ்வர்யம், ஆயுள், ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, சுகம், விருப்பங்கள் நிறைவேறுதல், துயரம் நீங்குதல் ஆகிய நற்பயன்கள் கிடைக்கும். அதிலும் நவராத்திரி நேரத்தில் தேவி பாகவதம் படிப்பது விசேஷம்.

ஞான சக்தியான சரஸ்வதி, க்ரியாசக்தியான லட்சுமி, இச்சா சக்தியான மகாகாளி   மூவரையும் வணங்கி நலம் பெறுவோம்.

அன்னை, அருள் வடிவானவள். நவராத்திரி நாளில் வழிபட்டு அன்னையின் அருள் பெறுவோம்!

                                                             வாழ்க வளமுடன்!
                                                                       --------------

திங்கள், 22 செப்டம்பர், 2014

யானை ! யானை!

யானை என்றால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தானே!
யானை வரும் முன்னே! மணி ஓசை வரும் பின்னே !என்பார்கள்.

யானை நடந்து வரும் போது தாளலயத்தோடு அதன்மேல் தொங்கவிடப்பட்டு இருக்கும் மணியோசை கேட்கும். அதைக் கேட்டு வீட்டிலிருந்து ”யானை வருது யானை வருது ” என்று எல்லோரும் விழுந்தடித்து ஓடி வருவோம் பார்க்க. பெரியவர்கள் வெல்லம், பச்சரிசி முறத்தில் எடுத்து வருவார்கள். சிறியவர்களை யானை மேல் வைத்து சிறிது தூரம் நடத்திச் சென்று காசு வாங்குவார், யானைப்பாகன். பயந்த குழந்தைக்கு யானைத் துதிக்கையால் மூச்சை வேகமாய் வெளியே விடச்சொல்வார்கள்,  அப்படி, பன்னீர் தெளிப்பது போல் தெளிக்க வைத்தால் பயம் போய்விடும் என்று இன்றும் நம்பப்படுகிறது.

அந்தக்காலத்தில் குழந்தைகளை அட்சராப்பியாசம் செய்து வைக்கும் போது யானை மேல் வைத்து ஊர்வலம் போய் ,அப்புறம் வீட்டில் நல்ல வாத்தியார் வைத்து   அட்சராப்பியாசம் நடைபெறும். என் அப்பா, பெரியப்பாவிற்கு அப்படி நடந்ததாக என் பாட்டி சொல்வார்கள்.

மாப்பிள்ளைஅழைப்பு, , பெரியமனிதர்கள் வரவேற்பில் எல்லாம் யானை மாலையிட்டு வரவேற்கும்.  கோவில் விழாக்களில் தீர்த்தவாரிக்கு, யானைமேல் ஸ்வாமி ஆற்றங்கரைக்குப் போவார். திருவிழாக்களில் யானை மேல் இறைவனுக்கு மாலை மரியாதைகள் வரும்.


 திருச்சி  காவேரி ஆற்றங்கரைக்கு அம்மாமண்டபத்திற்கு வந்து செல்கிறது  ஸ்ரீரங்கத்து யானை

மைசூர் தசரா யானைகளை ராமலக்ஷ்மி அழகாய் படம்பிடித்துக் காட்டி இருப்பார்கள்.

திருச்சூர்  பூரத்திருவிழாவிற்கு யானைகள் அணிவகுப்பு பார்த்து இருப்பீர்கள்.

புராண இதிகாசங்களில் யானை இடம்பெறுகிறது. முருகப்பெருமான் வள்ளியை மணக்க உதவியாக ,விநாயகப் பெருமான் யானையாக வருகிறார்
.
தவமுனிவர் துர்வாசர் கொடுத்த மாலையை, இந்திரன் செருக்கால்  தன் வெள்ளை யானை ஐராவதத்திற்கு அளிக்க, அது அதைக் காலில் போட்டு மிதிக்க, துர்வாசர்  கோபம் கொண்டு  இந்திரனின் செல்வங்கள் அனைத்தும் கடலுக்கு அடியில் போக சாபம் கொடுத்த கதை, அப்புறம் பாற்கடல் கடையப்பட்டது ,செல்வங்கள் எல்லாம் வந்த கதை தெரியும்தானே!

யானைக்கு நினைவாற்றல் அதிகம் என்பதைச்சொல்லும், பழிவாங்கும் கதையை, நாம் சின்னவயதில் பள்ளியில் படித்திருக்கிறோம். ”யானையும், தையல்காரானும்” கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.

யானை, ”ஆதிமூலமே! ”என்று அழைத்தபோது பெருமாள்,  கருடன் மீது பறந்து வந்து யானையைக் காப்பாற்றிய கதை அறிவோம்.

  பெரியபுராணத்தில் இடம்பெற்ற கதை:- புகழ்ச்சோழநாயனாரின் பட்டத்து யானை, சிவகாமி ஆண்டார் எனும் முதிய சிவனடியாரின் பூக்குடலையைப் பறித்து அதில் உள்ள மலர்களை சிதைக்க, யானையின் துதிக்கையை வெட்டி கொன்றார்,எறிபத்தநாயனார்., . தடுத்தபாகர் முதலியோரையும் கொன்றார். எறிபத்தர். சிவனடியார்களுக்கு இடையூறு நேர்ந்தால் அதனைத் தீர்க்கும் பரசு போன்ற ஆயுதம் கொண்டவர் என்பதால் எறிபத்தர் என்ற பெயர் பெற்றார்.

வாரிசு இல்லாத இராஜ்ஜியத்தை ஆள ஆள் இல்லாவிட்டால் பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து நகர்வலம் போக வைத்து யானை யார் கழுத்தில் மாலையைப்  போடுகிறதோ, அவர் அரசராக தேர்ந்து எடுக்கப்படும் நிலையும் சொல்லப்படுகிறது.

இப்படி, சொல்லிக் கொண்டே போகலாம். யானையைப் பற்றி.

//யானை யானை அம்பாரி யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம்
பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்//
இப்படிச் சொல்லி குழந்தைகளை தன் மேல் ஏற்றி மகிழ்ச்சியாக யானை நடை நடந்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள்.


.
நான் எடுத்த யானை புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த ஜூலை மாதம் சிதம்பரத்தில்  பன்னிருதிருமுறை உரை, பதினான்கு  சாத்திரஉரை, திருக்குறள் உரைவளம், ஆகியவற்றை அரங்கேற்றி வெளியிட்ட விழாவில்,  விழாவிற்கு வரும் விருந்தினரை வரவேற்க வந்திருந்த யானைகள் சிதம்பரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 
வைத்திருக்கும் குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தது, பாகன் தண்ணீரைப் பிடித்துக் குளிப்பாட்டினார்.  அதன் படங்கள் கீழே:-யானை ஆனந்தமாய் குளிப்பதைப் பார்க்கும் பள்ளிச் சிறுவன்

யானைக்கு சிறிய கப்பில் எடுத்து ஊற்றினால் அதன் குளியல் ஆசை நிறைவு பெறுமா?

நீராடியபின் ஒரு யானைக்கு திருநீற்றுப் பட்டை அலங்காரம்
மற்றொரு யானைக்கு ஓம் என்றும், அங்குசம் போன்றும் வரைந்து அலங்காரம்
ஆயிரம்கால் மண்டபத்தின் வாசலில் இரண்டு யானைகளும்  அலங்கரிக்கப்பட்டு வருபவரை  வரவேற்க எதிர் எதிராக நிறுத்தப்பட்டன.
பட்டை போட்ட யானை ஓம் போட்ட யானையைப் பார்த்து பிளிறிய ஒலி பக்கத்தில் இருக்கும் ஒலிபெருக்கியில் கோவில் வளாகம் முழுவதும் எதிரொலித்தது.

இரண்டும் போடும் சத்தம் கேட்டு, ஒருவர் காதை அடைத்துக் கொள்கிறார் பாருங்கள்.


யானையின் முதுகில் இடப்பட்டுள்ள இரண்டு மணிகளும் அதன் நடைக்கேற்ற மாதிரி அழகாய் தாளலயத்தோடு ஒலி எழுப்பியது.

திருக்கடையூரில் முன்பு மணிவிழா செய்பவர்கள், கோபூஜை, கஜபூஜை செய்வார்கள் திருமணத்திற்கு முன்பு. திருமணத்திற்கு வரும் தம்பதியர்களை யானை கோபுர வாசலிருந்து வரவேற்று, கோவிலுக்கு உள்ளே கூட்டிப்போகும். இப்போது இல்லை. அந்த யானை ’அபிராமி’ இறந்து விட்டது. இப்போது கோவிலில் யானை இல்லை.

யானை அபிராமி

போனமாதம் பேரூரில்(கோவை) எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு போய் இருந்தோம். அங்கு உள்ள யானையைப் பெரிய தண்ணீர்த் தொட்டியில் படுக்க வைத்து உடல் தேய்த்துக் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அம்மன் சன்னதி எதிரில் அதன் குளியல் தொட்டி இருந்தது நான் அம்மன் சன்னதி வாசலில் இருந்து(தூரத்தில் இருந்து) எடுத்தேன்.
பக்கத்திலிருந்து எடுக்கலாம் என்று போனபோது குளிப்பதை எடுக்கக் கூடாது என்று செல்போனில் எடுப்பவர்களிடம்  சொல்லிக் கொண்டு இருந்தார் கோவிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்.   அதனால்  பக்கத்தில் எடுக்கவில்லை. யானை மேல் ’கரட்டு கரட்டு; என்று தேய்த்துக் கொண்டு இருந்தார்கள். யானை தன் காதுகளை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக கொடுத்துக் கொண்டு இருந்தது . யானையை ஆற்றிற்குக் கூட்டிப் போய் உடம்பு தேய்த்துக் குளிப்பாட்டி வருவார்கள்,  முன்பு.  இப்போது  ஆற்றில் தண்ணீர் இல்லை .அதனால் மோட்டார் போட்டுத் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் குளிப்பாட்டுகிறார்கள். யானை  ஆற்றுத் தண்ணீரில் குளித்தபின் ஆற்று மணலை உடல் முழுவதும் தூற்றிக் கொள்ளும்,ஆனந்தமாய்.என் மாமியார் அவர்கள், சிறுமியாக இருக்கும்போது பின்னிய யானை படம் இது. அவர்கள் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது  பின்னியதாம். (80 வருடங்களுக்கு முன்) காட்போர்ட் என்ற அட்டையில் ஓட்டை ஓட்டையாக இருக்கும். அதில் கம்பிளி நூலால் பின்னியது. மண்டபம் பின்னி அதில் சரஸ்வதி படம் வைத்து இருப்பார்கள். என் அம்மாவும் இதுபோல் கன்னியாகுமரி, தாஜ்மஹால் எல்லாம் பின்னி இருப்பார்கள். அது தம்பியிடம் இருக்கிறது. அவற்றைப் பின்னர் காணத்தருகிறேன் .

மார்கழி மாதம் நான் வரைந்த யானைக்கோலம் (சிரிக்க வேண்டாம்)
இந்த யானை படம் ஒரு மஞ்சப்பையில் இருந்தது. அதைப் பார்த்துக் கோலம் வரைந்தேன்.

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில் 
தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். வளம் பெறுவோம்.
வாழ்க வளமுடன்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

விருது வரும் நேரம்

”THE VERSATILE BLOGGER AWARD ”

இந்த  விருதை மூன்று  அன்பு உள்ளங்கள் எனக்கு  அளித்து 

இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த விருதைச் சிலவருடங்களுக்கு முன் 

 தெய்வீக பதிவுகளை மணிராஜ் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் 

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்துபெற்றுக்கொண்டு 

இருக்கிறேன். வல்லி அக்கா என்று நான் அன்புடன் அழைக்கும் 

திருமதி. வல்லி சிம்ஹன்  அவர்கள்,  திருமதி . துளசி கோபால் அவர்கள்,


திருமதி. கீதாசாம்பசிவம் அவர்கள், திருமதி. ராமலக்ஷ்மிஅவர்கள், திருமதி.

 ஹுஸைனம்மா அவர்கள், திருமதி. சித்ரா அவர்களுடன்  விருதைப் பகிர்ந்து 

கொண்டு இருக்கிறேன்.


அரட்டை என்று தன் தளத்திற்கு  பேர் வைத்து  நம்மை அவர் தளத்திற்கு 

அன்புடன்  அரட்டைக்கு  அழைக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்,

 பல்சுவை பதிவுகளை எழுதுவார் குறிப்பாக  நல்ல நகைச்சுவை எழுத்தாளர். 

இரண்டு வலைத்தளம் வைத்து இருக்கிறார். தன்பதிவுகளை மின்னூல் ஆக்கி

 இருக்கிறார்.திறமைவாய்ந்தவர் . உங்கள்எல்லோருக்கும் தெரியும் 

அவரை. அவர்கள் அளித்த இந்த விருதுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.காலையில் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் விருது கொடுத்தார்கள்.

 தஞ்சையம்பதி  என்று வலைத்தளம் வைத்து இருக்கும் 

 திரு.துரைசெல்வராஜூ அவர்கள் மாலையில் இந்த விருதை எனக்கு 

அளித்தார்கள்.  தன் தளத்தில்   ஆன்மீகப் பதிவுகள் பதிந்து  வருவது 

 எல்லோருக்கும்தெரியும் தானே!  சார் எனக்கு அளித்த  விருதுக்கு நன்றி.

 வாழ்த்துக்கள்.இருவருக்கும் நன்றிகள்! இந்த விருதைத் துவக்கி வைத்த திருமதி. ரஞ்சனி 

நாராயணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,  நன்றிகள்.ஒரு சமயத்தில் நிறைய விருதுகள்  அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர்

 கொடுத்துக் கொண்டார்கள்.  எல்லாவற்றிலும் சாதனை படைக்கும் 

 திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார், விருதுகள் கொடுப்பதிலும் சாதனை 

படைத்தார். எனக்கு ஒரே  நேரத்தில் மூன்று விருதுகள் கொடுத்தார். அவற்றை

வலைத்தளமுகப்பின் ஓரத்தில் போட்டுகொண்டுள்ளேன், நன்றி சொல்லி.

 எல்லோர் கொடுத்த விருதுகளும் அதில் இடம்பெறுகிறது.விருது கொடுப்பது நல்லதுதான். எழுதுவதில் தொய்வு ஏற்படும்போது 

 உற்சாகம் தந்து மீண்டும்எழுத வைக்கும்

திருமதி . ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் கொடுத்த விருது

 

திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கொடுத்த விருது
எனனைப் பற்றி  ஏழு விஷயங்கள்.:-

1. எனக்கு நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும்.
2. எனக்கு சினிமா பாடல்கள் பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.
    புதுப் பாடலும் நல்ல பாடலாய் இருந்தால் பிடிக்கும்.
3. இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
4. நல்ல புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.
5. கள்ளமில்லா குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும்.
6 .இறைவனைத் துதிக்கப் பிடிக்கும்.
7. தொலைக்காட்சி, இணையம் , பாடல், புத்தகங்கள் என்று இவற்றோடும்,
   உறவினர்கள் மற்றும் நண்பர்களோடும் உரையாடியபடி இருக்கவேண்டும்.

எனக்கு திருமதி. ராஜலக்ஷ்மி அவர்கள் கொடுத்த விருதை   இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


பன்முக திறமைகள் உடையவர்கள்:-

”சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  திருமதி. ஜலீலா அவர்கள் 

”அடிசில்” என்ற வலைத்தளத்தில் அம்மாவின் கைவண்ணம் என்று வைத்து இருக்கிறார், திருமதி சுந்தராமுத்து அவர்கள்.

”காகிதப்பூக்கள்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி. ஏஞ்சலின்  அவர்கள் .

தோழி பூவிழி , “பூவிழி” என்ற வலைத்தளம்  வைத்து கவிதை, பொன்மொழி விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதியவர் மீண்டும் எழுத வரவேண்டும். ஒருவருடமாய் அவர்களிடமிருந்து பதிவுகள் இல்லை.
திரு. தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் முகநூலில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் போலும்.

திருமதி. விஜி பார்த்திபன் அவர்கள், விஜிபார்த்தி என்ற வலைத்தளத்தில்  சமையல் குறிப்பு, கைவேலைகள், (பின்னல், தையல்கலை)நல்ல கட்டுரைகள் என்று எழுதுவார்.

அடுத்து எனக்கு  திரு. துரைசெல்வராஜூ அவர்கள்  கொடுத்த விருதை  இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பன்முக திறமைகள் உடையவர்கள்:-

முருகானந்தம் சுப்பிரமணியன்  அவர்கள் , தன் வலைப்பூவை ஆனந்த தாண்டவநடராஜமூர்த்திக்கு  அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ என்கிறார்.
ஆன்மீக யாத்திரை போக விரும்புவர்கள் இவரது வலைத்தளத்தைப் படித்துப் பயன்பெறலாம்.

கற்கை நன்றே, கபீரின் கனிமொழிகள் என்ற வலைத்தளங்கள் வைத்து அருமையான ஆன்மீக பதிவுகளை எழுதி வரும் கபீரன்பன் அவர்கள்

வடுவூர் குமார்  தன் மடவிளாகம் என்னும் வலைப்பூவில் அவர்கள்  பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகிறார். தன் தொழில் சார்ந்த பதிவுகளும் வரும் என்று எச்சரிக்கிறார்.

குறள் காட்டும் பாதை,  இன்றையபழமொழி,,  பயனுள்ள கட்டுரைகள் என்று  தன் அந்திமாலை என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.  இ.சொ.லிங்கதாசன் அவர்கள். 


”எல்லாப்புகழும் இறைவனுக்கே! ”என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி ஸாதிகா அவர்கள், பலவகையான பதிவுகளை எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவதில் வல்லவர்.

இன்று காலை இரண்டு பேர் கொடுத்த இரண்டு விருதுகளுக்கு நன்றி சொல்லி பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் போது  ரூபன் அவர்கள் இரண்டு விருதுகளை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.  ரூபனின் எழுத்து படைப்புகள் என்று கவிதைகள் , கட்டுரைகள், கதைகள் எல்லாம் எழுதி வருகிறார். தன் தளத்தில் கவிதை போட்டிகள் எல்லாம் நடத்தி வருகிறார்.

அவர் கொடுத்த விருதை பெற்றுக் கொண்டேன் இத்தளத்தில்  பதித்து விட்டேன். ரூபன் அவர்களின் அன்புக்கு நன்றி. என் பதிவுகள் வலைச்சரத்தில் இடம்பெறும் போதெல்லாம் முதலில் வந்து  வாழ்த்து தெரிவித்துவிடுவார். அவரைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

உடனே பதிவு போட்டு இருந்தால் நான் இந்த விருதை வாங்கியது தெரிந்து இருக்கும். மறுபடியும் கொடுத்து இருக்க மாட்டார்கள்.

ரூபன் அவர்களின் விருதுகளை  வலைத்தளத்தில் எழுதி வரும் அனைவரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.

                                        ரூபன் அவர்கள் கொடுத்த  இரண்டு விருதுகள்.

                                                        வாழ்க வளமுடன்