திங்கள், 20 மே, 2013

பதிப்பாசிரியர் ச.பவானந்தம் பிள்ளை



எங்கள் வீட்டில் பழைய புத்தகங்கள் சில உண்டு.  தாத்தா கால
புத்தகங்களுமுண்டு. நேற்று என் கணவர் தொல்காப்பிய சொல்லதிகாரம்
என்ற ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டு இருந்தார்கள்  அப்போது
நான் வாங்கி கொஞ்சம் பார்த்தேன். 1941ம் வருடத்தில் வெளிவந்தது.  பவானந்தர் கழக வெளியீடு  என்று இருந்தது. விலை 3 ரூபாய்.



தொல்காப்பியம் -சொல்லதிகாரம்-  நச்சினார்க்கினியம் என்று தலைப்பில் இருந்த அந்தப் புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்த்து கொஞ்சம் படிப்போம் என்று படித்தேன். அதில் பவானந்தர் கழக ஸ்தாபகர் திவான்பகதூர் ச. பவானந்தம் பிள்ளையவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு போட்டு இருந்தார்கள்.  அவர் 1932 ஆம், ஆண்டு மே மாதம் 20 தேதி மறைந்தார் என்று போட்டு இருந்தது.   அவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று படித்தேன். பல நல்ல காரியங்கள செய்து இருக்கிறார்.  அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்களின் தந்தை முத்துசாமி
பிள்ளை என்னும் வேளாண்குடி செல்வர். தாய் சந்திரமதி. சிறு வயதிலேயே
நல்ல குணங்களுடன் வளர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார்.
உயர்கல்வி பயின்றார். வழக்கறிஞராக விரும்பி இங்கிலாந்து சென்று
படிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால்  வைதிக மதப்பற்றுள்ளவராகிய இவரது அன்னையார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் அயல் நாடு போகவில்லை.

அந்நாளில் நகரகாவற்படையின் உயர் அதிகாரி(போலீஸ் கமிஷனர்) கர்னல் டி.வெல்டன் ஸி.ஐ.இ என்பவர், கல்வியில் சிறந்த இவரை நகரகாவற்படையில் சேர்க்க விரும்பினார்.  போட்டி பரீட்சை ஒன்றை வைத்தார். அதில் எழுதியவர்களில் முதன்மையாய் தேறிய இவரை தாம் புதிகாக ஏற்படுத்திய குற்றவர்த்தமான விசாரணை வகுப்பில்(criminal  intelligence  department)தமது நேர்முக காரியஸ்தராக(உதவியாளராய்) நியமித்தார்.

பவானந்தம் பிள்ளை, தான் மேற் கொண்ட பணியில் பலரும் வியக்கும் வண்ணம் புகழ்பெற்றார்.அவர் தமது பணியில், மனம் தடுமாறாமை, நேர்பட ஒழுகல், நிர்வாக சாதுரியம் ஆகியபண்புகளுடன் விளங்கினார்.

இவர் சட்ட நூல்களை ஆராய்வதில் ஏற்பட்ட பெரும் விருப்பத்தால் அவற்றை நன்கு ஆய்ந்துணர்ந்த சட்ட அறிஞ்ராவர். சட்ட நூல்களை ஆராய்ந்து F.L ,B.L , சட்டப்பரீட்சை எழுதுபவர்களுக்காக  30  நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார்.
1904 ஆம் ஆண்டு முதல் 1912 வரை சென்னை நகரக் குற்ற வர்த்தமான
விசாரணை வகுப்பு தலைவராக இருந்திருக்கிறார்.


வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் வந்தபோது மெய்காப்பாளராக
இருந்து திறம்பட செயலாற்றியதால், விருது, பதக்கம் ஆகியவற்றை இளவரசரிடம் இருந்து பெற்றார். மிண்டோ பிரபுவும், ஹார்டிஞ்சு பிரபுவும் சென்னையில் தங்கியிருந்த போது அவர்களுக்கும் மெய்காப்பாளராய் இருந்து பாராட்டுப் பெற்று இருக்கிறார்.

32 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை பற்றி பத்திரிக்கையில் இவரை புகழ்ந்து இருக்கிறார்கள்.1908 ஆம் ஆண்டு போலீஸ் அஸிஸ்டண்ட் கமிஷனராகவும், 1918 ஆம் ஆண்டு டெபுடி கமிஷனராகவும் பொறுப்பேற்றார்.

இவர் சென்னை ஷெரிப்பாயும் விளங்கினார். நாட்டுமக்களின் நலம் கருதி  பற்பல தொண்டுகள் ஆற்றி  இருக்கிறார். அதனால் அவரை ’பரோபகாரப் போலீஸ் உத்தியோகஸ்தர் “எனப்பாராட்டி இருக்கிறார்கள்.

உத்தியோக உடையில் பவானந்தம் பிள்ளை

இவர் தன் பெயரால் ‘பவானந்தர் கழகம்’ என்னும் கல்விக்கழகம் ஒன்றை
நிறுவி, அதன் வளர்ச்சிக்காகவும், தொண்டுகளுக்காகவும் தாம் ஈட்டிய
பொருளை உயில் எழுதி அர்ப்பணம் செய்து இருக்கிறார்.இவர் ஏற்படுத்திய கழகத்தின் நோக்கம் பலதுறைகளில் ஆராய்ச்சியும், பொது ஜன நன்மைக்கான ஞானத்தையும், கல்வியையும், நீதிநெறியிலும், உடற்கூற்றுத் துறையிலும் மக்களிடையிற் பரப்புதலும் ஆகும்.

இவரால் நிறுவபட்ட நூல்நிலையத்தில் 40 ஆண்டுகளாய் (1941ல்)இவரால் தொகுக்கப்பெற்ற பல்லாயிரம் நூல்கள், ஏட்டு வடிவிலும் கையெழுத்திலும் அச்சிலும் அமைந்தவை.தமிழ் நூல்கள் பலவற்றை இவர் பல வகைக் குறிப்புகளுடனும் ஆராய்ச்சி முகவுரைகளுடனும் பதிப்பித்து  வெளியிட்டு தமிழுலகத்திற்கு தொண்டாற்றியிருக்கிறார்.

தமிழிலக்கணங்களில் தொன்மை வாய்ந்தனவும், சிறந்தனவுமாகிய தொல்காப்பியம் பொருளதிகாரம், (நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையுடன்), யாப்பருங்கல விருத்தியுரை, இறையனாரகப்பொருளுரை , பேரகத்தியத்திரட்டு, இராமானுச கவிராயர் சங்கர நமச்சிவாயப் புலவர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்களின்  உரைகளைத் தழுவி எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை முதலியவற்றை இவர் தம் பொருளைக் கொண்டு வெளியிட்டிருக்கின்றார்.

இவரால் இயற்றப்பட்ட நாடகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் பல. இவர் இயற்றிய நாடகங்கள் இலண்டன் மாநகரத்தில் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி, மேரி மகாராணியார் முன்னிலையில் நடித்துக் காட்டப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழக்த் திராவிட வாசக சங்கத்திற்குத் தலைவராயும்
பல்கலைக் கழக அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட திராவிடச் சொற்றொடராக்கச் சங்கத்தின் அங்கத்தினாராயும் இருந்திருக்கிறார். தென்னிந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் சபாநாயகருக்குப் பிரதிநிதியாய்   இருந்திருக்கிறார். இவர் இயற்றிய நூல்களில் பல பல்கலைக் கழகச் சார்பில் நடைபெறும் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் உயர்தரப் பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கும் பாட புத்தகங்களாக இருந்தன.. இவர் இயற்றிய வாசக பாடங்கள் இளஞ்சிறார்களுக்கு பயன்பட்டு வருகின்றன.

இவர் தலைவராயும், அங்கம் வகித்து தொண்டாற்றிய கலைக் கழகங்களும் சபைகளும் பலவாகும். இவருடைய பக்திமிகுந்த பரிசுத்தமான பிரம்மசரிய வாழ்க்கையும், இனிய குணமும், சிறந்த கலையுணர்வும், வசீகரத்தோற்றமும்,, வணங்கிய வாக்கும், நுணங்கிய கேள்வியும், இவரை எவரும் விரும்பிப் பாராட்டும் பண்புகளாயிருந்தன.’கற்றோருடன் கலந்துரையாடி மகிழ்வதிலும் பேரின்பம் வேறில்லை; என்னும் கருத்துடன் இப்பெரியார்  வாழ்ந்து வந்தமையின் , புலவருங் கவிஞரும் போற்ற வாழ்ந்தவர்,

அறிஞர் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை பவானந்தம்பிள்ளையைப் போற்றிப் பாடிய பாடல்:-

கண்டவர் வியக்கும் கவினுறு வடிவும்
      கலைதெரி புலமையும் சீர்சால்
தண்டமிழ் மொழியில் ஆர்வமும் அதனைத்
       தழைத்திடச் செய்தலின் விருப்பும்
கொண்டநற் பெரியோய்! சரவண பவானந்
       தன்னெனும் கோதிலாய்! கருத்தின்
எண்டகு மிந்நூற் பதிப்பினை யீந்தேன்
       ஏன்றருள் உரிமையா இனிதே.


 
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பவானந்தம் பிள்ளை,1932-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி இம்மண்ணுலகிலிருந்து மறைந்தார்.
வாழ்க அவர்தம் புகழ்!  வாழ்க தமிழ்!


                                                       வாழ்க வளமுடன்

                                                              ---------------
--------------------------------------------------------------------------------------------------------------------


வெள்ளி, 17 மே, 2013

பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோவில்



திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம்,
பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோவில்


இறைவன் -ஆதிமூலேஸ்வரர்
இறைவி -அமிர்தவல்லி
தல மரம் -வில்வம், வன்னி
தீர்த்தம் -வருண தீர்த்தம்
புராண பெயர் -வருண ஷேத்திரம்
கிராமம்/நகரம் -பரங்கிப்பேட்டை
மாவட்டம் -கடலூர்
மாநிலம் -தமிழ்நாடு

காஷ்யப முனிவர் ஒரு முறை  சிவனை எண்ணி யாகம் நடத்தினார்.  அந்த யாகத்தை நிறுத்த வருணன் மழையை ஏற்படுத்தினான். இதனால் முனிவர் வருணனை சபித்தார். வருணன் சக்தி இழந்தான். பின் அவன் சிவபெருமானை வணங்கி சாபம் தீர்ந்தான். வருணன் சிவபெருமானை   இததலத்திலேயே இருந்து அருளும்படி வேண்டினான். அப்படி இங்கே தங்கியுள்ள அந்த இறைவனுக்கு ஆதிமூலேஸ்வரர் என்று பெயர்.

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் .நாமும் மழை வேண்டி இப்போது அவரை வணங்குவோம்.

சித்திர குப்தர் 12 வயதில் இறந்து விடுவார்  என்று விதி இருந்தது. அவரது தந்தை  வசுதத்தன் மிகவருந்தியபோது, சித்ரகுப்தன் இததலத்து சிவனை வழிபடுவோம் என்று தன் தந்தையிடம் சொன்னார். ஆதிமூலேஸ்வரரை வழிபட்டார்கள்.

 மார்க்கண்டேயரை  சிவபெருமானே  வந்து காப்பாற்றினார். இத்தலத்தில்  தன் துணைவியைப் பெருமைப்படுத்த அம்பாளை விட்டு எமனை தடுக்கச் சொல்கிறார்.  அம்பாள் எமனிடம்,  ”சித்திரகுப்தன் சிறந்த சிவபக்தன் -அதனால் அவனை விட்டுவிடு ” என்கிறார். சிவபக்தர்களை அவ்வளவு சீக்கிரம் எமன் நெருங்கமாட்டார் என்பார்கள்.

மார்க்கண்டேயனை கொல்ல வந்த எமனை சிவன் இடது காலால் உதைத்தார் ,அந்த இடது பாகம் பார்வதி தேவியுடையது என்பார்கள். சேய்க்கு இரங்கும் குணம் தாய்க்குத்தான் உண்டு என்று  மார்க்கண்டேயர் வரலாறும், சித்திர குப்தன் வரலாறும் சொல்கிறது. சிவனின் ஆணைப்படி   சித்திரகுப்தனை எமன் கொல்லாமல் விட்டதுடன் தன் உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.

இக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் சித்திரகுப்தன் சன்னதி உள்ளது.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமிர்தம் போல் அருளை அள்ளி வழங்குவதால் அம்பாள்,அமிர்தவல்லி  என்று அழைக்கப்படுகிறார். அம்மன்சிலைக்கு கீழ் ஸ்ரீசக்கரம் உள்ளதாம் . சித்திரை மாதம் சிவன், அம்பாள் இருவர் மீதும் சூரிய ஒளி படுமாம் . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம்.

இங்கு ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும் , நோய் தீரவும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்கிறார்கள்,  சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம்,  செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர் ,அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  சிவன் கோவில்களில் அர்த்தஜாமபூஜை முடிவில் பைரவருக்கு பூஜை நடக்கும். இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சிதராபெளர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம்  நைவேத்தியம் செய்கிறார்கள்.


சுண்ணாம்பு கலப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பாத்திரம்

விமானம்

தெற்குப் பிரகாரம்

துர்க்கையை வலம் வந்து வணங்கலாம்


சித்திரகுப்தர் திருவுருவம்

இக்கோவிலில் ராமேஸ்வரம் ராமலிங்கசுவாமி, காசி விஸ்வநாதர், நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பாதாளலிங்கம், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
திருநள்ளாறில் கிழக்குப் பார்த்துகொண்டு நின்று சனீஸ்வரர் அருள்வது போல் இங்கும் இருக்கிறார். 
                                                                                                          
மேடையில் கிழக்கு நோக்கிய சனீஸ்வரர் சந்நிதி
 மாசி மகத்தன்று தீர்த்தவாரி. அருகில் இருக்கும் கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் விழா நடக்குமாம். தைஅமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களில் தீர்த்தவாரி உண்டாம்.
இக் கோவிலை தரிசிக்கும் நேரம் காலை 7 மணி முதல், 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு எட்டுவரை. நாங்கள் போனபோது 11மணி பக்கம். குருக்கள் வேறு ஏதோவிழாவுக்கு வெளியே போய் விட்டார். போவதற்கு முன் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விட்டு போய் இருந்தார். 
காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது என்று சொல்கிறார்கள்.
நாங்கள் பரங்கிப்பேட்டை கோவில்களை தரிசித்து விட்டு    அப்படியே சிதம்பரம் போனோம். அங்கு  அம்மன்  சந்நிதி பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் சித்திரகுப்தரையும்  தரிசித்தோம்.
சிதம்பரம்-அம்மன் சந்நிதி
ஆயிரக்கால் மண்டபமும் சிவகங்கைத் தீர்த்தமும்

சிதம்பரம் -வடக்குக் கோபுரம்

என்றும் 12வயதாய் இருக்கும் சிவபக்தராகிய  அவரை வணங்கினால் நமக்கும் நல்லது நடக்கும் நம்பிக்கையில் வணங்குகிறார்கள் என நினைக்கிறேன்.
ஒருமுறை அபிஷேகம் பார்த்து இருக்கிறோம். அண்டா அண்டாவாக அனைத்து அபிஷேகங்களும் இருக்கும், இந்த முறை ஏகப்பட்ட தீபங்கள் ஏற்றி வழிபட்டார்கள். பக்தர்கள் தங்கள் கணக்கை சித்திரகுப்தர் நல்லபடியாக எழுதவேண்டும், எமதர்மராஜாவிடம் நம்மைபற்றி நல்லவிதமாக சொல்ல வேண்டும் என்று எடுக்கும்   முயற்சி போலும்!. நல் எண்ணம், நற்செயல், நற்பண்புகளுடன் நாம் வாழ்ந்தால் அவர் நல்லபடியாக நம்மைப் பற்றி நாலுவார்த்தை நல்லதாய் எழுதப் போகிறார்.

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று 
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’ 

என்பது தேவாரம். திருஇன்னம்பர் என்ற பாடல் பெற்றதலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மனிதர்கள் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார் என்று திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் கூறுகிறது. சித்திரகுப்தர் அதற்காக நியமிக்கப்பட்டவர் போலும்!

’பரங்கிப்பேட்டைக் கோயில்கள்’ தொடர்கட்டுரை நிறைவடைகிறது.                             வாழ்க வளமுடன்.
                            ------------

சனி, 11 மே, 2013

அன்னையர் தினம்

மே மாதம் இரண்டாவது ஞாயிறு, அன்னையர் தினம்.

தெய்வம் ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய் தான்.

அம்மா என்றால் அன்பு.  அட்சய பாத்திரமும் அம்மாவும் ஒன்று. அட்சய பாத்திரம் அள்ள  அள்ளக் குறையாமல் வழங்குவது போல், அம்மாவும் அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருவாள். அம்மா என்ற மூன்றெழுத்துக்கு எல்லை ஏது! அப்பாவிடம் ஏதாவது  கேட்டுப் பெற வேண்டும் என்றால்  அம்மாவிடம் தான்  முதலில்  சொல்லி   அப்பாவிடம் சிபாரிசு  செய்ய சொல்லி கேட்போம்.

தாயன்பும் இறையன்பும் ஒன்றுதான்.

பகவானின்  பிரேமையைப்பற்றி சொல்லும் போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், ஒரு தாய்க்கு குழந்தையிடம் உள்ள பிரேமை போல் என்று.

//கன்றினுக்குச் சேதா
கனிந்திரங்கல் போலஎனக்கு
என்று இரங்கு வாய்கருணை
எந்தாய் பராபரமே!//

என்று தாயுமானவர் பாடுகிறார்.

//உலகனைத்தையும் ஈன்ற தாயே, என்னை நீ தாங்கிக் கொள்வாயாக, அறியாமையினால் கேடுகள் பலசெய்யும் என்னைக் கருணையோடு நீ காப்பாயாக!

தாயும் சேயும் என்னும் முறையில் கடவுளோடு இணக்கம் வைப்பது சாலச்சிறந்தது. குற்றங்கள் பல செய்தாலும் தாயினிடம் அவைகளைப் பற்றித் தாராளமாகப் பேசலாம், குழந்தையின் மீது படியும் அழுக்கைத் தாய் தானே துடைத்து வைக்கிறாள். பிள்ளையை பிரியத்தோடு பேணுதல்   ஒன்றே அவள் புரியும் பணிவிடையாகும். கடவுள் நமக்கு  அத்தகைய தாயாகிறார்.//என்று சுவாமி சித்பவானந்தர் சொல்லுகிறார்

இறை வழிபாட்டிலும், அப்பன் வழிபாட்டை விட அன்னை வழிபாடுதான்  மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்னை தான் மகவுக்கு உடனே இரங்கி அருள் புரிகிறாள். தாய் எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் குழந்தை தாயின் காலை கட்டிக் கொண்டு தான் அழும்.

பாரதியும் அன்னையிடம் தான் தனக்கு வேண்டியதைக் கேட்கிறார்:-

//எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநலறிவு வேண்டும்
பண்ணிய பாவமெலாம்
பரிதிமுன் பனியே  போல
நண்ணியநின் முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய் ! //

//ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானுந் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.//

அகிலத்தைக் காக்கும் அன்னை, அனைவரையும் காப்பாள்.

இன்றைய சமூகநிலையில் தாய்மார்களின் நிலை எப்படி இருக்கிறது?

இப்போது  இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவர் சம்பாதித்தால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் , குழந்தைகள் படிப்பு, மற்றும்
தேவைகளுக்கு என்று  தாய்மார்கள் இரட்டைபாரம் சுமக்கிறார்கள்.
இது போன்ற தாய்மார்களின் தியாகத்தை  குழந்தைகள் உணரவேண்டும்.

வீட்டையும், பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய் வரும் தாய் படும் அவலம் ஒரு சிறுகதையில் கூறப்படும் சூழ்நிலையைக்காண்போம்.  கதையின் பேர் ”உலகப் பெண்கள் நாள்’ ”.எழுதியவர் தஞ்சை இறையரசன். குடும்பத்தேவைக்காக வேலைக்குப் போகும் ஒரு தாய், தன் துன்பம்  தீர, தன் கல்வி அதிகாரியிடம் உத்தியோக மாற்றல் கேட்பதைப்  பாருங்கள்:-

// அம்மா , என் கணவர்  தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார், குழந்தைகள் பள்ளியில் படிக்கிதுங்க, . தினம் முப்பது மைல் மூனு பஸ் மாறி போய் திரும்ப வேண்டிருக்கு. டவுன்பஸ் ரிப்பேர் ஆகி வராத நாளில் இரண்டரை மைல் நடக்க வேண்டிருக்கு, ஸ்டாண்டில் நிக்கவே முடியலை
கம்பியைப் பிடிச்சிக்கிட்டு நின்னு நின்னு கை கால்வீங்கிடுது. காலைல ஏழு மணிக்குத்தான் திரும்ப முடியுது. பத்து பன்னிரண்டு  வருஷமா டிரான்ஸ்பர் கேட்டு அலையறேன்.//

இப்படிக் கேட்டும் , சிபாரிசின் பேரில் இன்னொருவருக்கு மாற்றல் கிடைத்தது. அந்தத் தாய்க்குத் துன்பம் தொடர்கதையாகிறது.

இது போல்  எல்லாம் தன் குடும்ப நலத்திற்காகப் பாடுபடும் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இதே ஆசிரியர் எழுதிய மற்றொரு கதையில் வேலைக்குப் போகும் மனைவி, தன் கணவனுக்கு வண்டி வாங்கி கொடுத்தால் பஸ்ஸில் இடிபடாமல் வேலைக்கு நேரத்திற்கு சென்று வரலாம் என்று நினைக்கிறாள்.சிறு வயதில் தான் தன் கணவனின் தோளைப்பற்றிக் கொண்டு ஸ்கூட்டரில் போக முடியவில்லை. இப்போதாவது போகலாம் என்று கற்பனையில் திளைக்கிறாள். அந்தப்பெண்ணின் கதையைச் சொல்கிறார்,’ஒரே ஒரு நகரத்துக் குள்ளே ‘:என்ற கதையில்.

 தன் மூன்று பவுன் நகை விற்றுப் பணம் ஆக்குகிறாள்.மேலும் தேவைப்படும் பணத்திற்காக,  தன் சம்பளப்பணத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிஎப் பணத்தை பெற , கடன் கேட்டு,விண்ணப்பம் பெறவே லஞ்சம் கொடுத்து , பின் கிடைத்த  பி.எப் பணத்தில்  ஸ்கூட்டர் வாங்கி தன் கணவனுக்கு கொடுக்கிறாள். அதில் அலுவலகத்திற்கு  போகலாம், இனி பஸ்ஸில் இடி வாங்கும் கஷ்டம் இல்லை  என்று  நினைத்தால்,  அந்தப் பெண்ணின் கணவர்  என்ன செய்தார், கதையைப்பாருங்கள்!

//பணம் வந்தது , ஸ்கூட்டர் வந்தது, ஏதோ இரண்டு, மூன்று நாள் அங்கும் இங்கும் இவளை அழைத்து போனான், பிறகு எங்கே? அவ்வளவு தான், பெரியபெண் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ந்தாள். பெரிய பெண்ணுக்கு ஒரு தடவை, மற்ற பிள்ளைகளுக்கு ஒரு தடவை, ஆபீசுக்கு ஒரு தடவை , காலையிலே மூணு முறை . சாயாங்காலம் மூணு முறை அலையறேன், உன்னை நான் டவுன் பஸ்சுக்குக் கொண்டு போய் விட அழைக்க ஏது  நேரம்  என்று அலுத்துக் கொண்டான் //

வண்டி வந்தால் வண்டியில் கணவனுடன் பயணிக்கலாம் என்று நினைத்து அது முடியாமல்,  மறுபடியும் பஸ்ஸில் கூட்டத்தில் இடிபட்டு நசுங்கி வேலைக்குப் போய்த் தன் குடும்பநலத்திற்குப் பாடுபடும்  இது போன்ற தாய்மார்கள் இருக்கிறார்கள்.

துன்பப்படும் இத்தகைய தாய்மார்களுக்கும்  அன்னையர் தின வாழ்த்துக்கள்.

குழந்தைகளுக்கு  அம்மாவின் அன்பு, தந்தையின் பாசம், இரண்டையும் அள்ளித் தந்து, பார்த்துக் கொள்ளும் தாயுமானவர்களுக்கு (தந்தையர்களுக்கு) வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களின்அம்மா, அப்பாவிற்குப்  பொன் ,பொருள் கொடுப்பதற்குப் பதில் அனபையும், கனிவான வார்த்தைகளையும் கொடுத்தால் போதும். தாய் , தந்தை மகிழ்வார்கள்.அதே போல் ஒழுக்கம், நற்பண்பு கொண்டு விளங்கினாலே போதும். வேறென்ன வேண்டும்?

கொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே -அதை 
அள்ளி வளங்கிட நெஞ்சங்கள் ஏதுமில்லே! 

என்று ஒரு பாட்டு சொல்கிறது. ஊற்று, தோண்டத் தோண்டத் தான் நீர்
ஊறும் . அது போல் அன்பு கொடுக்கக் கொடுக்கத் தான் பெருகும்.
அன்புக்குப் பஞ்சமில்லை என்று பஞ்சமில்லா நிலையை உருவாக்க வேண்டும். நாளை  மறுநாள் அட்சய திருதியை .அன்று நல்லசெயல்களைச் செய்வோம், அன்பைப் பரிமாறிக் கொள்வோம். அன்றைய நாளில் , ஒன்று செய்தால் அது பன்மடங்காய்ப் பெருகி வாழ்வில் எல்லோருக்கும் நன்மையை நல்கும் என்பார்கள். அவ்வாறே பெருகட்டும். அட்சய திரிதியை வாழ்த்துக்கள்!

தாய்மை உணர்வு உடைய அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் நினைவில் வாழும் என் பெற்றோர்களுக்கு வணக்கங்கள்.

தாயாகி , தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

அன்புத் தாயும் நானும்
தந்தையும் நானும்
பெற்றோருடன் நான்
ஏன் இந்த சோகம் கண்ணே !

                                                            வாழ்க வளமுடன்!
                                                                           --------



புதன், 8 மே, 2013

அருள்மிகு முத்துக்குமரசாமி திருக்கோவில் (குமரக்கோவில்)

இராஜகோபுரம்

யாகசாலைக்கான கட்டுமானப்பணி

முத்துக்குமரர் சந்நிதியில் ஓவியம் தீட்டும் பணி

பரங்கிப்பேட்டை, முத்துகுமரசாமி கோவில்.

பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் பற்றிய எனது பதிவில் முத்துக்குமரசாமி கோவில்பற்றி எழுதப்போவதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை இங்கு காணலாம்.

இது பாபாஜியின் அப்பா  சுவேதநாதய்யர்பூஜை செய்த  கோவில் என்று சொல்கிறார்கள்.நாங்கள் சென்றபோதுஅக்கோவிலில் கும்பாபிஷேக வேலைகள்  நடந்து கொண்டு இருந்தது. 1.5.2013இல் நடைபெறும் என்று சொன்னார்கள்.  பத்திரிக்கை கொடுத்தார்கள். பத்திரிக்கையில் முத்துகிருஷ்ணபுரி எனும் பரங்கிப்பேட்டையில் என்று குறிப்பிட்டிருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளித்து காப்பவர் இக் கோவிலில் குடி இருக்கும் முத்துகுமரசுவாமி என்கிறார் குருக்கள்.இக்கோயில் குமரக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திரனால் பிரதிஷ்டை செய்து  பூஜிக்கப்பட்டஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ 
விசாலாட்சிஅம்மன்  இவர்கள் தான் முன்பு பிரதான தெய்வங்களாய்  இருந்து இருக்கிறார்கள். 

 கோவில் உண்டான கதை: 

நமுசி என்ற அசுரன் பலமான ஆயுதங்களால் தனக்கு அழிவு  வரக்கூடாது என்று வரம் பெற்று இருந்ததாகவும், தேவர்களை போரிட்டு வென்றதாகவும்,  அவரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல்  இந்திரன் சிவனிடம் வேண்டியதாகவும், அவர் கடல் நுரையால் கொல்லும்படி ஆலோசனை சொன்னதாகவும் வரலாறு கூறுகிறது. அதன்படி கடல்நுரையால் இந்திரன் அசுரனைக் கொன்று  அதற்கு உதவிய இறைவனுக்கு  சிவலிங்கம் அமைத்து  பூஜித்தார். முதலில்  இந்திரலிங்கம் என்று அழைக்கப்பட்ட இறைவன் , பின்பு விஸ்வநாதர் என்று அழைக்கப்பட்டார்.

இக் கோவிலில் உள்ள முத்துக்குமரசுவாமி (முருகன்) சன்னதி எதிரில் கோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டதால்,   நாளடைவில் கோயிலும் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.

திருவிழாக்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறுமாம். விழாவில் எல்லா வாகனங்களிலும் முருகன் வந்தாலும் இந்திரன் பூஜை செய்ததால் அவரின் ஐராவத வெள்ளை யானை வாகனத்தில் விழாக்காலங்களில் வருவது சிறப்பு. மாசி மகத்தில் வெள்ளாறு சென்று தீர்த்தவாரி கொடுப்பது சிறப்பாம்.

  பிரகாரத்தில் உள்ள ஐந்து தலை நாகராஜரும், அவரது இருபுறமும் நாககன்னிகையரும்     உள்ளனர் . இவர்களை வணங்கினால் நாகதோஷம், களத்திர தோஷம் நீங்கி  திருமணத் தடை நீங்கி   விரைவில் திருமணம் நடைபெறுமாம். வேண்டியது நடந்து விட்டால் நாகருக்கு தாலி, மற்றும் சிவப்பு வஸ்திரம் சாற்றுகிறார்கள்..சில பெண்கள் நாகருக்கு மஞ்சள் பொடி போட்டு வணங்கி கொண்டு இருந்தனர்.

 வேலைஇழந்தவர்கள், பதவி இறக்கம் பெற்றவர்கள் சிவனை வணங்கினால் இழந்த வேலை கிடைக்குமாம், இழந்த பொருட்களை (காணாமல் போன பொருள்)  சிவனை வேண்டினால் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
 சிவனுக்கு  வஸ்திரம் சார்த்தி, சாம்பார் சாதம், அல்லது பொங்கல் படைக்கிறார்கள்.அம்மனுக்கு வடை, பொங்கல் படைத்து, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்கிறார்கள்.

கார்த்திகை சோமவாரம் சிவனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்திரன், பிரம்மா எல்லாம் கார்த்திகை முதல் ஞாயிறு அன்று வணங்கினார்களாம். இங்குள்ள பிரம்மா அமர்ந்த நிலையில் இருகைகளையும் கூப்பிய நிலையில் இருப்பது சிறப்பு.  பிரம்மாவின் அருகில் இருக்கும் துர்க்கை  எட்டுகைகளுடன் காட்சி அளிப்பது சிறப்பு.வளர்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம் உண்டு.

முத்துக்குமரசாமி இந்திர மயில் மீது ஆறுமுகங்களுடன் வள்ளி. தெய்வானையுடன் காட்சி தருகிறார். செவ்வாய் தோறும் சத்ரு சம்ஹார திரிசதி நடக்குமாம். அப்போது ஆறுமுகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து ஆறு பிரசாதங்கள் படைத்து வழிபாடு சிறப்பாய் நடைபெறுமாம்,. தேன்   முக்கிய பிரசாதம். கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம் உண்டாம்.

முருகனுக்கு முன் இருக்கும் மண்டபம் அமாவாசை பூஜை மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.  இதில் 18படிகளுடன்  ஐயப்பன்  சன்னதி உள்ளது. மாதப்பிறப்பு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐயப்பன் அன்று கோவிலை வலம் வருவார்.

அமாவாசை மண்டபத்தில் உள்ள படம்:
முத்துக்குமரசாமி, விசுவநாதசுவாமி,விசாலாட்சிஅம்மன்,பாபாஜி

முன் மண்டபத்தில் உள்ள நடராஜருக்கு  ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம்  மற்றும்  சாமி புறப்பாடும் உண்டாம்.

 பைரவருக்கு .தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேகம் நடக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம்.   இங்குள்ள பைரவருக்கு அமாவாசை அன்று இரவு சிறப்பு பூஜை நடக்கிறதாம்.

பிரகாரத்தில் ஆதி விநாயகர்,  பாலசுப்பிரமணியர்,  சனீஸ்வரர், மகாலட்சுமி, நவகிரகங்களுக்கு சன்னதி உள்ளது.

நாங்கள் போன போது கும்பாபிஷேக வேலை நடந்து கொண்டு இருந்ததால் முருகன் சன்னதியை மட்டும் திறந்து காட்டி கோவில் வரலாறு சொன்னார், முருகன் படம், விபூதி பிரசாதம்  கும்பாபிஷேக பத்திரிக்கை  எல்லாம் கொடுத்தார்.

கோவில் காலை எட்டுமணி முதல் மதியம் 12 மணிவரை, மாலை 5 மணி முதல் இரவு  எட்டு மணி வரை. பக்கத்தில் அர்ச்சகர் வீடு இருப்பதால் வெளியூர் அன்பர்களுக்கு தரிசனம் உண்டு.

நாங்கள் போனபோது கும்பாபிஷேக வேலை நடந்து கொண்டு இருந்தது. எங்களை பார்த்த குருக்கள் வீட்டுக்கு போய் சாவி கொண்டு வந்து தரிசனம் செய்து வைத்தார்.

1.5.2013ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கும்.இனி அங்கு செல்பவர்கள் புதிய பொலிவுடன் கண்டு தரிசித்து மகிழலாம்..

                                                             வாழ்க வளமுடன்!
                                                                          -----