சனி, 16 ஏப்ரல், 2016

வடக்கு மாசி வீதியிலே!
 சித்திரைத் திருவிழாவைப் பார்க்கக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள் என் தங்கை.  அவள் வீடு வடக்கு மாசி வீதியில் இருக்கிறது,அங்கு தான்  மீனாட்சி கோவில் சித்திரைத் திருவிழாப் பார்க்க எப்போதும் போவோம். இம்முறை நான் போகவில்லை ஐந்து நாளாய். நேற்று வீட்டுக்கு வந்து கையோடு கூட்டி சென்று விட்டாள். ”இன்று ரிஷபவாகனத்தில் சுவாமியும் பிரியாவிடையும், ரிஷபவாகனத்தில் மீனாட்சி வருவதை பார்ப்பது நல்லது” என்று சொன்னாள். போய் தரிசனம் செய்து வந்தோம்.  தினமும் என் தங்கை வீடு,  உறவினர், நண்பர்கள் வருகையால்  விழாக் கோலம் பூண்டு இருக்கும் மகிழ்ச்சி அலைகளைப் பரப்பிக் கொண்டு.

 உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக  சுவாமி கோவிலைவிட்டு கிளம்பி வருவது முதல்  எந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்றும் காட்டிக் கொண்டு இருந்தார்கள். எங்கள் தங்கை வீட்டுக்கு வரும் நேரம் அறிந்து 8.30க்கு நல்ல இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்.(நடை  மேடையில்) நிறைய பேர்  நடு ரோட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். மாலையில் வீதி முழுவதும் தண்ணீர் லாரி பூ மாதிரி நீரைப் பொழிந்து கொண்டு போனது.

குழந்தைகள் வித விதமாய் அலங்காரம் செய்து கொண்டும் கோலாட்டம் செய்து கொண்டும் வந்தார்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்றவைகளும் இருந்தன. மீனாட்சி வேடத்தில்  பெண்கள் நிறைய பேர் பவனி வந்தார்கள், கேரள பாணி உடை அணிந்து ஆடி வந்தார்கள்.சிவன், பார்வதி உடையில், கருப்பண்ணசாமி  மாதிரி வந்து கையில் அரிவாளுடன் அருமையாக ஆடினார்கள். அஷ்டபுஜ துர்க்கை வேடம் அணிந்து வந்தாள் ஒரு பெண்.

முதலில் வந்த கோவில்யானை ’பார்வதி’.

மின் விசிறி விளம்பரமும் ஆச்சு, வந்து இருக்கும் பக்தர்களுக்கு  நல்ல காற்று வீசியது போலவும் ஆச்சு.  
மீனாட்சி அம்மன் கோவில் அம்மனைத் தரிசிக்க வரும் பக்கதர்களுக்கு  பல வருடங்களாய்  விசிறி சேவை செய்து வந்தவர் வீதியில் காத்து இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.

அவர் மகன் என்று சொன்னார்கள். அவர்களும்  இருமருங்கில் இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.
நாராயணா என்று விசிறியால் வீசிச் சென்றார்கள் 
ரமணா தையல் மிஷின் விளம்பரம் செய்த விசிறியால் பக்தர்களுக்கு வீசி சென்றார்கள்.

பக்தர்களுக்கு விசிறிகள் இருப்பது சிறப்புதானே!

சுவாமியும் , அம்மனும் தங்க ரிஷபத்தில்
தங்க ரிஷபத்தில்

அழகிய வேலைப்பாடு நிறைந்த ரிஷபம்.

மீனாட்சி அம்மன் 
வெள்ளி ரிஷபத்தின்  பின்புறம்

பெரிய தொலைக்காட்சி பெட்டியில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டு  போய்க்கொண்டு இருந்தார்கள்>(மினி வேனில்.)


ஜவ்வு மிட்டாய் மூன்று ருசிகளில் --சுக்கு கலந்த மிட்டாய்,  கமர்கட் போன்ற மிட்டாய், ஜவ்வாய் இருக்கும் ஜவ்வு மிட்டாய்(ரோஸ்கலர்)
திருவிழாவில் உள்ள அனைத்தும் அங்கு இருந்தது. ஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய், சூடான நிலக்கடலை, பட்டாணிசுண்டல், குல்பி ஐஸ்கீரீம்  எல்லாம் விற்றார்கள்.  எல்லாரும் வாங்கிக் கொண்டு இருக்கும்போது காவல்துறையினர் விற்பவர்களை  அந்த இடத்தில் நிற்கவிடாமல் விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பாவம் ஓடிக் கொண்டே இருந்தார்கள். தங்கை பெண் வாங்கி தந்தாள்  ஜவ்வு மிட்டாய்கள்.

                                                             
                                                                     பஞ்சு மிட்டாய்

அலங்காரக் குடைகள்
கோலாட்டங்கள் 
பொய்க்கால் குதிரை போல் பொய்க்கால் மாடு --அப்பாவின் தோளின் மேல் இருந்து பார்க்கும் குழந்தை பின்புறம்.

அஷ்டபுஜ துர்க்கை அலங்காரம்

சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வந்தார்கள் இரண்டு சிறுவர்கள்.

               
கோலாட்டம் ஆடிக் களைத்துப் போய் அப்பாவின் தோள் மீது இளைப்பாறும் குழந்தை.

உயரமாய்    கட்டைக்காலை வைத்துக் கொண்டு ஆடிய இருவர். நான் படம் எடுக்கும் போது ஒருவர்  யாரிடமோ பேச குனிந்து  விட்டார்.

                                                
                           கடைசியில் தேவாரம் பாடிக் கொண்டு போனார்கள்.

                                                       
காவல்துறை வாகனத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டு வந்தார்கள் ’பெண்கள் அணிந்து இருக்கும் நகைகள் பெயர் சொல்லி பத்திரம், பத்திரம்! கவனம்! கவனம்!’ என்று.

ஊர்கூடி திருவிழாவைச் சிறப்பாய் நடத்தி மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

                                                                 வாழ்க வளமுடன்.
                                                                        -----------------------

வியாழன், 14 ஏப்ரல், 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்.                                                         
                                                           வாழ்க வளமுடன்.

திங்கள், 11 ஏப்ரல், 2016

ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பகுதி -- 2

கோவில் நகரம் என்று அழைக்கப்படும்  ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பற்றி முந்திய பதிவில்  சில படங்களைப் பகிர்ந்து இருந்தேன். இந்தப் பதிவில் அந்தக் கோவிலில் உள்ள அழகான ஜன்னல்கள், கலையம்சம் உள்ள சிலைகள் பகிர்வு.

இங்கு உள்ள சிற்பங்கள் இரண்டு காலத்தில்  உள்ளவர்களின் கலைப்பாணி என்கிறது விக்கிமீடியா.  சில சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டை சார்ந்த  சாளுக்கியர்கள் கலை ,  சிலசிலைகள் 12ம் நூற்றண்டை சேர்ந்த காகதீயர்கள் காலத்தை சேர்ந்தது    என்கிறது.  இருவர் காலத்து சிற்பங்களும் அழகுதான்.

   


                                                                                           
                                                                 


                                               

                                                                         


இங்கு உள்ள சந்நிதிகளில் சிவலிங்கங்கள் உள்ளன   கருவறையில் எல்லா   சிவன் அருகிலும் எண்ணெய் டின்கள் அடுக்கப்பட்டு இருக்கிறது. அதையும் சேர்ந்து தான் வணங்க வேண்டும். படம் எடுக்க வேண்டும்.

கோவில் வளாகத்தில்  தர்க்கா இருக்கிறது.  ஹஸரத் சையது ஷா பயில்வான்  அவர்கள் தர்க்கா.  அந்த தர்க்காவில் நடக்கும் திருவிழாவில் சாதி மதம் பாராமல் அனைவரும் கலந்து கொள்வார்களாம் என்று  எங்கள் டாக்ஸி  டிரைவர் அந்த தர்க்காவை பற்றி சொன்னார்.   அங்கு உள்ளே போய் வணங்கி வந்தோம் அங்கு இருந்தவர் வீபூதி மாதிரி (பாபா கோவில் உதி போல்)   கொடுத்து பூசிக்கொள்ளுங்கள் என்றார்  இந்தியில். நினைத்தது நடக்கும் அமர்ந்து வேண்டிச் செல்லுங்கள் என்றார்.

நம் ஊர்ப் பக்கம் கோவில்களில்  தாங்கள் வீடு கட்ட வேண்டும்  என்று வேண்டிக் கொண்டு கல்மேல் கல் வைத்து அடுக்கி வைத்து இருப்பார்களே அது போல் இந்தக் கோவிலிலும் அடுக்கி வைத்து இருந்தார்கள்.

நாம் கோவிலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது  நம்மைச் சிறிது நேரம்  நின்று  தன்னைப் பார்க்க வைத்த அழகிய நாய்.    

அடுத்து கர்நூல் பயணம்.   அங்குள்ள  கொண்டாரெட்டி கோட்டையைப்  பார்த்தோம். அடுத்த பதிவில். அதை பார்ப்போம்.

                                                                வாழ்க வளமுடன்.
                                                                    -----------------------