புதன், 30 மே, 2012

மனசுக்குள்ளே வந்த மாயம் என்ன?
தலைப்பை பார்த்து என்ன இது  ஐம்பதை கடந்த அம்மா 60 நெருங்க சில காலங்களே இருக்கும் மாது எழுத வைக்கும் தலைப்பா இது என்று நினைப்பவர்களுக்கு என் பதில் இருபதோ ,அறுபதோ மனது எல்லோருக்கும் இருக்கே!

மனது சிலநேரங்களில் மகிழ்ச்சியாய் , சில நேரங்களில் சோகமாய் . சிலநேரங்களில் தெம்பாய், சிலநேரங்களில் சலிப்பாய் தோன்றுவது சகஜம் தானே! இப்போது எனக்கு மகிழ்ச்சியாய், தெம்பாய் உள்ளது. வசந்த காலம் போல் உள்ளது . பேரன் பேத்தி . மகள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு, அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி பார்த்தல். என்று பொழுது ஓடுகிறது. தெம்பு இல்லாதது போல் இருந்த உடம்பில் புது தெம்பு வந்து விட்டது. அது தான் அன்பு என்னும் அருமருந்து தரும் தெம்பு.

பதிவுகள் படித்து கருத்திடுவது, பதிவுகள் எழுதுவது எல்லாம் சில நாட்களுக்கு  முடிந்த போது. இந்த மாதம் ஆரம்பத்தில் நாங்கள் சென்ற ஆன்மீக சுற்றுலாப் பற்றிய செய்திகளை உங்களுடன் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் பதிவுகளையும் படித்து கருத்திட வேண்டும்.

இன்னும் என் பயணம் முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் புது வரவாய் இளந்தளிர் ஒன்று வந்து இருக்கிறது. அந்த புது  வசந்தத்திற்கு பெயர் சூட்டுவிழாவிற்கு போக வேண்டும்.(கொழுந்தன் அவர்களுக்கு பேரன் பிறந்து இருக்கிறான்)

வீட்டில் டெல்லி பேரன் இந்தி கலந்த தமிழ் பேசுவதை கேட்டு மகிழ்தல், பேத்தியின் கர்நாடக இசை பயிற்சி பாடலை கேட்டல்., பேரன் மிருதங்க பயிற்சி செய்வதை கேட்பது என பொழுது இனிதாக கழிகிறது.

பேரனுக்காக சர்க்கஸ் சென்று வந்தோம். பேரனுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். சர்க்கஸில் யானைஅவனுக்கு பிடித்த  கிரிக்கெட் விளையாடியது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. கற்பனையில் கிரிக்கெட் விளையாடுவான் அவனே சிறிது நேரம் பவுலிங் ,செய்வான், அவனே பேட்டிங் செய்வான். தாத்தாவுடன் விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டாக்காரராய் மாறி விளையாடுவான். தாத்தாவிடம் சொல்லி பேட் வாங்கி வந்து எப்போதும் கையில் வைத்துக் கொண்டு,  படுக்கும் போதும் தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு மகிழ்கிறான்.
   


இன்னும் கடற்கரை செல்லவேண்டும். தாத்தாவிற்கு ஐபாட் டச்சில்  வெயிலுக்கு ஏற்ற உடை அணிந்து ஊஞ்சலில் அமர்ந்து  தாத்தாவும் பேரனும் விளையாடுகிறார்கள்.இவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள் என்று என் மகனின் மகன் நானும் இங்கு வருகிறேன் என்கிறான். எல்லோருடனும் ஸ்கைப்பில் உரையாடுகிறான். செம்டம்பர் மாதம் வருகிறோம் விடுமுறை கிடைத்தால் என்கிறார்கள். இறைவன் அருளால் எல்லாம் நலமாய் வரவேண்டும்.

குழந்தைகள் வெளிநாட்டில், வெளியூரிலில் இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் வரும் நாள் தானே வசந்த காலம்! எல்லா பெற்றோர்களுக்கும் அந்த வசந்தகாலம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ அது போல் உறவுகளை மறக்காமல், இருக்க பாசம் என்னும் நூல் கயிறு அறுந்து போகாமல் இருக்க உறவுகளின் சந்திப்பு அவசியம். வான் மழையை எதிர்பார்த்து இருக்கும் சாதகப் பறவைகள் பெற்றோர்கள்.

எங்கள் மாமனார், மாமியார் நாங்கள் ஊருக்கு போகும் போது மகிழ்வதும் திரும்பி வரும் போது அவர்கள் முகம் வாடிவிடுவதைப பார்க்கும் போது நாமும் அந்த நிலையில் தானே இருக்கிறோம் என்ற எண்ணம்  வரும்.  இத்தனை வயதிலும் என் அத்தை , மாமா அவர்கள்  மகிழ்ந்து இருப்பது ஆலமரத்தின் விழுதுகள் போன்ற தங்கள் குழந்தைகளின் அன்பால் தான். நாங்கள் நலமாய் இருப்பது ஆலமரத்தின்  நிழலால். விழுதுகளின் அன்பால்.

பதிவுகளே வெளிவரவில்லையே நல்மாக இருக்கிறீர்களா ? என வலையுலக அன்பர்கள் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்வின் பின் பகுதியில் கிடைத்த இந்த புது வசந்தத்தால் வாழ்வு மேலும் இனிமையாக இருக்கிறது.

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.
நலமாக இருக்கிறேன்.  ஊர்ப்பயணங்கள் முடிந்து வந்து உங்களுடன் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.