வெள்ளி, 31 டிசம்பர், 2010

புது வருட சிந்தனைகள்
ஆங்கில வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் இன்றுடன் முடிந்து புது வருடம் ஜனவரி ஆரம்பிக்கிறது.தேவர்களின் இரவு எனப்படும் மார்கழி மாதத்தின் நடுவில், நள்ளிரவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொர் ஆங்கில நாளும் நள்ளிரவில் தான் பிறக்கிறது. கடந்த வருடம் 2010 பலவித மாற்றங்கள், சாதனைகள், வேதனைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது. வரும் 2011 எல்லாச் சிறப்பையும் பெற்றதாய் இருக்க வேண்டும். நம் நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும், பொருளாதார வளர்ச்சி எல்லோரையும் சென்றடைய வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் இருக்க வேண்டும். உழைக்காமல் பணம் சேர்க்கும் மனிதர்களிடம் உழைத்த பொருள்களைக் கொடுத்து ஏமாறும் கூட்டம் விழிப்போடு இருந்து நல்ல வழியில் பொருட்களைச் சேமிக்க வேண்டும்.


//நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா// கவியரசர் கண்ணதாசன்.

நல்லதை நினைக்க வேண்டும்.கெட்டதை மறக்கத் தெரிய வேண்டும்.

அன்னை எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்படி நினைக்க வேண்டும் என்கிறார்:

//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.ஒவ்வோர் புதிய உதயமும் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறை எடுத்து வருகிறது.எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகம் சிந்திக்காமல்,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ நல்லதோ அதை அமைதியாகச் செய்ய வேண்டும்.//

நம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது.

வாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி:

// ஏழ்மை நோய் விதியென்று எண்ணி ஏமாந்திருந்தேன்
என்னுள்ளுணர் வெனக்கு இயம்பியதென் தெரியுமோ
வாழ்வுதொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துளதே
வறுமை நோய் செயல் விளைவால் வந்தபயன் இவ்வுண்மை
ஆழ்ந்துண்ர்ந்து அனைவருமே அன்போடு வாழவெனில்
அரசு மதம் பொருள் துறைகள் அமைதி பெற முழுமை பெற
ஊழ்வினையை உணர்ந்ததற்கு ஒத்து திருத்தென்றதே
உலகோரே உண்மைநிலை உணர்ந்துவளம் பெற்றுய்வோம்.//

செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.

“சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.

வலைஉலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புதன், 29 டிசம்பர், 2010

பாவை நோன்பு

தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை 1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை, 2. ஆண்டாள் அருளிய திருப்பாவை. 3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு. சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்க வில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல் விருத்தி உரையில் இருக்கிறது.அந்தப்பாடல்:

“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”

திருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும்,ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார். திருவாதவூரர் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார்.

திருவாதவூரர் நீராடப்போவதைக் கண்டார்.அக்காட்சியின் பயனாக விளைந்தது திருவெம்பாவை என்னும் நூல் என்பார்கள்.

பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.

மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.

நீராடுதல் தவமெனக் கருதப்படும்.புற அழுக்கை நீக்குவது நீர்,நம் அக அழுக்கை நீக்குவது
இறைவன் திருநாமம்.

இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம்.

உடல் பிறக்கிறது,வளர்கிறது,நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம்,உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும்.உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.

பாவை நோன்பில் காலையில் சுறுசுறுப்பாய் எழுந்து இறைவனைத் தொழுது பின் கடமைகளை
ஆற்றும் போது உள்ளத்திற்குத் தளர்வு,சோர்வு,சலிப்பு இல்லை. உறுதியுடன்,ஊக்கத்துடன் உழைக்கும் போது உயர்வு நிச்சயம். இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

”சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,”- தாயுமானவர்.

மார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
============

வியாழன், 23 டிசம்பர், 2010

வெங்காயம் வெங்காயம்!
படங்கள் : நன்றி : கூகிள்காயமேயிது மெய்யடா!-இதில்
கண்ணும் கருத்தையும் வையடா

நோயும் நொடியும் வாராமல் காத்து
நுட்பமாக உய்யடா!

என்று பட்டுக் கோட்டை பாடியது போல் இந்த காயத்தைப் பாதுகாக்க வெங்காயம் உதவி இருக்கிறது.வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.
உடம்புக்கு நல்ல ஊட்டச்சத்தைத் தருகிறது.பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாக பயன் படுத்துகிறார்கள்.நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயத்திற்கு முக்கிய இடமுண்டு. பல் வேறு நாட்டு விஞ்ஞானிகளும் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதயத்திற்கு சக்தி தருகிறது.நரை, தலை வழுக்கையைத் தடுக்கும்.உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், வாத நோய்களைக் குணமாக்குகிறது.

இது என்ன! நாட்டில் தலைப்புச் செய்தியாக -தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கையில்- என்று வெங்காயத்தை தோல் உரிப்பதுப் போல் உரி உரி என்று உரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த சமயத்தில் வெங்காயம் பற்றி பேச்சு என்ன வேண்டி இருக்கிறது?

தெருவில் வெங்காய கலரில் புடவை கட்டிப் போகும் பெண் தனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணுடன் பேசும் போது வெங்காயம் விலையை பார்த்தீர்களா! என்னா விலை விக்குது. வெங்காயம் வாங்க கடைக்கு போனா தங்கம் நிறுக்கிற மாதிரி நிறுக்கிறான் கடைக்காரான் என்பது தான்.

வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. அதிக அளவு மழையால் வெங்காயப் பயிர் பாதிக்கப்பட்டதும் வெங்காயவிலை ஏற்றத்திற்கு காரணம்.மக்களுக்கு வெங்காயம் உரிக்காமலே கண்ணில் நீர் வருகிறது, அதன் விலையைக் கேட்டு!

வெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சொல்கிறது அரசாங்கம்.வெங்காயத்தை எவ்வளவு நாள் பதுக்க முடியும்? அழுகி நாறிப் போய் விடாதா?
இநத விலை ஏற்றத்தை தன் டயர் வியபாரத்திற்கு பயன் படுத்திக் கொள்ளும் புத்திசாலி வியாபாரியின் விளம்பரம்: ஜாம்ஜெட்பூரில் உள்ள ஒரு டயர் கடையில் லாரி டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம். கார் டயர் வாங்கினால் 1 கிலோ வெங்காயம். இது எப்படி இருக்கு!

பதவி நாற்காலிகளுக்கும் இந்த வெங்காயத்தால் ஆபத்து. 1996 லில் தில்லியில் முதல்வர் மதன்லால் குரானா காலத்தில் தில்லியில் பரபரப்பாக பேசப் பட்ட வெங்காய விலை ஏற்றம்
அவர் ஏற்றம் மிகு முதல்வர் பதவியைப் பறித்தது. பின் வந்த சுஷ்மா சிவராஜ் காலத்திலும் வெங்காய விலை குறையாததால் 1998லில் தோல்வி அடைந்தார்.

அன்றாடம் கூலி வாங்கி அதில் அரிசி,பருப்பு, காய்கறிகள் வெங்காயம் வாங்கி சாப்பிடும் ஏழை மக்களுக்கு மிகவும் கஷ்டம்.வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றால் என்ன செய்வார்கள்?
பட்டுக்கோட்டை ஒரு பாட்டில் ‘ ஏழைக்கு காலம் சரியில்லை’ என்று பாடுவார். அது சரிதான். ஒரு பச்சை மிளகாய்,வெங்காயம் வைத்துக்கொண்டு ஆனந்தமாய் கஞ்சி குடித்து விடுவார்கள் ஏழைகள். அந்த வெங்காயத்திற்கும் இப்போது வழி இல்லாமல் போகிறது.

இப்போது உள்ள பொருளாதார சூழ் நிலையில் நடுத்தர மக்களே கஷ்டப்படும் போது ஏழைகள் பாடு என்னாகும்? 1960ல் பட்டுக்கோட்டை பாடியபாட்டு இது:

கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே- என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினால் கடன்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான் -வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக் கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே- அது
குட்டியும் போடுது வட்டியிலே

வித விதமாய்த் துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லை-இதை
எண்ணாமலிருக்கவும் முடியல்லே

கன்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?

அவரே இன்னொரு பாட்டில்

சாமிக்கு தெரியும்,பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலமை-அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை- இதைப்
பாடிப் பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்

நாட்டில் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துவோம்.


வரலாறு காணாத வெங்காயத்தின் வரலாறு :

//வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவுப் பொருளாகும்.ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன் படுத்தி உள்ளனர்.அராபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறர்கள்.நேபாளத்தில் வெங்காயம் இறைவனுக்கு நிவேதனம் செய்யப் பயன்படுகிறது. யூதர்களும் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர்.மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிர்டேஸ் வெங்காயத்தின் பயனைப்பற்றிக் கூறியுள்ளார்.அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறர்கள்.

வெங்காயத்தின் பிறப்பிடம் வடமேற்கு இந்தியா,ரஷ்யா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளாகும். மேற்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் வெங்காயத்தின் இரண்டாவது பிறப்பிடமாகும். வெங்காயத்தின் தாவர பெயர் ஆலியம் ஸெபா ஆகும்.இது அலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். வெங்காயத்தின் ஆங்கிலப் பெயர் ஆனியன் ஆகும்.
இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘பெரியமுத்து’ என்பது பொருளாகும். வெங்காயத்தின் காரத்தனமைக்கு காரணம் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.சிறிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன, ஒரே பலனைத் தான் தருகின்றன.//

நன்றி:

’தெய்வீக மூலிகை’
Dr.c.k.மாணிக்கவசாகம்

நான் இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது மத்திய மாநில அதிரடி நடவடிக்கையால் வெங்காய விலை சரிவு என்று தலைப்புச் செய்தி சொல்கிறது. இறக்குமதியில் சுங்கவரியை ரத்து செய்தல்,ஏற்றுமதியை ஜனவரி 15 வரை தடைசெய்தல்.பதுக்கல்காரர்களை ஒடுக்குதல் எனப் பல நடவடிக்கைகளை அரசு எடுக்கிறதாம். எப்படியோ ஏறிய விலை இறங்கினால் சரி. 100 விற்ற வெங்காயம் 40 என்கிறது.

பெரியார் அடிக்கடி வெங்காயம் என்று சொல்லி வெங்காயத்திற்குப் பெருமை சேர்த்தார்.
வெங்காய விலை குறைந்தவுடன் வெங்காயத்தைப் பயன் படுத்தி என்னென்ன நன்மை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.

சனி, 18 டிசம்பர், 2010

மார்கழிக் கோலங்கள்

மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. கண்ணபிரான், மாதங்களில் நான் மார்கழி என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார்.தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.இறைவனைத் தொழுவதற்காக சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும்,இனி மேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும்,ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டு பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார்.உலகச் செயல்களைத் தொடங்குவதற்கு பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியை திருவெம்பாவையில் கூறுகிறார்.

உயிர்,கதிரவன்,திங்கள், வான்,வளி,நெருப்பு,நீர்,நிலம் இந்த எட்டு சக்திகளுடன் இறைவனும் சேரும்போது நவசக்திகளாய் மாறுகிறது.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த இந்த உயிருக்கு(நமக்கு) கை,கால்களை அசைத்து இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் (கதிரவன்)கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும்(திங்கள்) இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.வான்வெளியில்(வான்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும்.நல்ல காற்று(வளி) ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் (நெருப்பு )கிடைக்கிறது. கோவிலை வலம் வரும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.

அந்தக் காலத்தில் அரிசி மாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம் கோலம்.கோலங்கள் தீயசக்திகளை,தீயதேவதைகளை வீட்டினுள் வருவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

பித்துருக்கள்(தென்புலத்தார்)வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும்,அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அம்மாவாசை,சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு என்பார்கள்.

ஊருக்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு, என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,அவர்கள் போனபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள்.கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.

இப்படிப் பெரியவர்கள் சொன்னதைக் கடைப்பிடிப்பதில் நல்லதும், சில சங்கடங்களும் எனக்கு அவ்வப்போது வரும். ஊரிலிருந்து வந்து கொஞ்சம் களைப்பாய் படுத்து இருந்தேன் அவ்வளவுதான் பால்காரர் கோலம் இல்லை என்பதால் ஊரிலிருந்து வரவில்லை என்று பால் பாக்கெட் போடாமல் போய் விட்டார்.(கீழே திண்ணையில் கோலம் போடுவேன்) மேலே வந்து பார்க்க அவருக்கு அவ்வளவு சோம்பல். எளிதான வழி, கோலம் இருந்தால் நான் வந்து விட்டதாய் அர்த்தமாம். என்னசொலவது!

மார்கழி மாதம் வரும் முன் வாசலைச் சரி செய்ய வேண்டும். கல்,புல் எல்லாம் சுத்தம் செய்தல், பசுஞ்சாணம் கொண்டு வரச்சொல்லுதல் என்று நிறைய ஆயத்த வேலைகள் எல்லாம் முன்பு இருக்கும். மண் தரையில் கலர்க் கோலம் போட்டால் அடுத்தநாள் போட பழைய கோலத்தை முதல் நாளே அழித்து மறுநாளுக்குத் தயார் செய்வது, அடுத்த நாள் என்ன கோலம் போடுவது என்று சிந்தித்து அதற்குத் தயார் செய்வது என்று எவ்வளவு வேலைகள்! இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அந்தக் கஷ்டம் இல்லை.

கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். இல்லையென்றால் கோலம் அலங்கோலம் தான். நம் மனதைப் பிரதிபலிப்பது கோலம். மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்தில் என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள் என்று காலையில் ஒரு சிறு வலம் வருவோம், முன்பு இருந்த தெருவில். அவர்கள் நம் கோலத்தைப் பார்க்க வருவார்கள்,நாங்கள் அங்கு போய்ப் பார்ப்போம். ஒருத்தருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் அடுத்தநாள் இன்னும் நன்றாகப் போட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது எல்லாம் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் தான் நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. இந்தப்பூவிற்கு இந்தக் கலர் கொடுத்து இருக்கலாம் என்று அபிப்பிராயங்கள் சொல்ல ஆள் இல்லை. பார்வையாளர்கள் அற்ற விளையாட்டுத் திடலில் விளையாடுவது போல் உள்ளது இன்றைய நிலை.

என் அம்மா பெரிய கோலங்கள் போடுவார்கள். தினம் செம்மண் இடவேண்டும். மார்கழி 30 நாளும் சிறப்பு என்பாதால் செமமண் இடவேண்டும் என்பார்கள் அம்மா. அளவாய் நீர்விட்டு கரைத்துக் கோலத்தில் ஓரம் -பூக்களுக்கு நடுவில் -என்று முதலில் செம்மண் இடப் பழுகுவதுதான் சிறுவயதில் பாடம். பின் தான் கோலம் எல்லாம். பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பூசணிப்பூ ,பீர்க்கம் பூ எல்லாம் வைப்பதும் எங்கள் வேலை. என் பக்கத்து வீட்டு ஆண்டாளுக்கும் எனக்கும் யார் வீட்டில் அதிகப்பூ என்று போட்டாபோட்டியாக இருக்கும். அவளுடைய தாத்தா காலையில் அவர்வீட்டுப் பீர்க்கம் பந்தலிலிருந்து நிறைய பூ எனக்குப் பறித்துத் தருவார். இப்போது பூசணிப்பூ பீர்க்கை பூ கிடைக்கவில்லை. பசுஞ்சாணமும் கிடைப்பது இல்லை. அதனால் என்ன பூ கிடைக்கிறதோ அதை வைக்கிறேன், சும்மா கோலத்தின் மீது. பெண் குழந்தை இருந்தால் தினம் பூ வைக்க வேண்டும். சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள் அந்தபெண்கள். அம்மா கோலத்தில் அழகாய்ச் சிறுவீடு வரைவார்கள். சிமெண்டால் சின்னதாய் ஒரு சமயம் சிறுவீடு கட்டித் தந்தார்கள். பொங்கல் முடிந்தபின்னும் நாங்கள் அதில் விளையாடி இருக்கிறோம்.

கோலம் மனமகிழ்ச்சியை தரும்.இப்பொழுது பெரிய கோலங்கள் போட்டு கலர் கொடுப்பதுதெல்லாம் என்னால் முடிவது இல்லை.சின்ன சின்னக் கோலங்கள் தான். முன்பு என் அம்மா, தங்கை எல்லாம் புதுக் கோலங்களைக் கடிதத்தில் வரைந்து அனுப்புவார்கள்.

மாயவரத்தில் தேர் வரும் போது தேர்க் கோலம் போடுகிறார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமாய்க் கோலம் போடுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளார்கள்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி,மார்கழி மாதம் கோலம் போடும்போது அக் கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு ஒரு பாட்டு சொல்லுங்கள் என்று கேட்க, அந்நேரத்தில் உதிக்கும் சில சொற்றொடரைக் கோத்துச் சொல்வாராம் மகரிஷி. அவ்வாறு அவர் கூறிய பாடல்கள் , ‘’ மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்று கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில் உள்ள கவிதைகள் நல் வாழ்விற்கான அறிவு விளக்கங்கள். நான் முதன் முதலில் வலைத்தளம் ஆரம்பித்தபோது’ கிளிக் கோலம்’ ஒன்று போட்டு அதற்கு மகரிஷியின் கவிதை ஒன்று எழுதி என் பதிவை ஆரம்பித்து வைத்தேன். மே 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்தேன்.

அந்த பாடல்:

இயற்கை தரிசனம்
-----------------
எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.

என்பது தான்.

வாழ்க வளமுடன்!
----------------------------------

சனி, 11 டிசம்பர், 2010

கண்ணம்மா என் குழந்தை

இன்று நம் தேசிய கவிக்கு பிறந்த நாள். அவர் பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லியப் பாட்டு.

1. சின்னஞ் சிறுகிளியே,கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏறற்ம் புரியவந்தாய்!

2. பிள்ளைக் கனியமுதே,-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே!

3. ஓடி வருகையிலே,-கண்ணம்மா!
உள்ளங் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் -உன்னைப்போய்
ஆவிதழுவுதடீ

4. உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ;
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

5. கன்னத்தில் முத்தமிட்டல்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ,- கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ.

6. சற்றுன் முகஞ்சிவந்தால்-மனது
சஞ்சல மாகுதடீ
நெற்றி சுருங்க்கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ.

7. உன் கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டுதடீ;
என் கண்ணில் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்னதன்றோ?

8. சொல்லு மழலையிலே,-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

9. இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே -உன்னைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

10. மார்பிலணிவதற்கே -உன்னைப்போல்
வைரமணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப்போல
செல்வம் பிறிதுமுண்டோ?

என்ன அருமையானப் பாட்டு!7வது ’என்னுயிர் நின்னதன்றோ’ வரை குழந்தைகளை தூங்க வைக்க பாடுவேன். 6,8,9,10 எல்லாம் ராகம் தெரியாது பாடமாட்டேன்.எப்போது பாடினாலும் கண்ணில் நீரை வரவழைக்கும் பாட்டு. எந்த குழந்தையை கண்டாலும் குறிப்பாய் பெண் குழந்தையைக் கண்டால் என் மனதுக்குள் ஓடும் பாட்டு. M.L.வசந்தகுமாரி அவர்கள் குரலில் இந்த பாட்டைக் கேட்கும் போது மனதுக்கு இதமாய் இருக்கும். சுதாரகுநாதனும் தன் குரு மாதிரி இந்தப் பாட்டை பாடுகிறார்கள். இந்த மார்கழி உற்சவத்தில் பாடகர்கள் இந்தப்பாட்டை பாடுவார்கள் கேட்கலாம். அந்தக் கால பழைய சினிமா படங்களில் எப்படியும் ஒரு பாரதியார்ப் பாட்டு இருக்கும்.புகழ்ப் பெற்ற பாடகர்கள் எல்லாம் பாடி இருப்பார்கள்.கேட்கவே நல்லா இருக்கும்.


இதேமாதிரி சின்மயி பாடிய ஒரு ’தெய்வம் தந்தபூவே’ பாட்டும் எப்போது கேட்டாலும் கண்ணில் நீரை வரவழைக்கும்.

தேசிய கவிக்கு வணக்கங்கள்.

.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஓடி விளையாடு பாப்பாஓடி விளையாடு பாப்பா என்று பாரதி சொன்னார்.மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் இப்போது குழந்தைகளை நாம் விளையாட விடுகிறோமா என்றால் இல்லை. தினம் ’படி படி’ தான். பள்ளி விட்டு வந்தாலும் சிறிது நேரம் விளையாட விடுவது இல்லை. வீட்டுப் பாடங்கள் முடி,படி என்பது தான் பெற்றோர்களின் தாரக மந்திரம்.

பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கில் குழந்தை வளர்ப்புப் பற்றி வருவதில் விளையாட்டைப் பற்றி குறிப்பிடுகிறார்.குழந்தைகள் தன் பிஞ்சுக் கால்களால் தத்தித் தத்தி ஓடி விளையாடும் போது அம் முயற்சியைப் பாராட்டி அதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிறார்.

அமிழ்தே அமிழ்தே ஓடிவா அன்பின் விளைவே ஓடிவா
கமழும் பூவே ஓடிவாஎன் கண்ணின்மணியே ஓடிவா
பச்சைக் கிளியே ஓடிவாஎன் பாடும் தும்பி ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவாஎன் விரியும் சுடரே ஓடிவா

என்றெல்லாம் குழந்தையை வருணித்து அதே நேரத்தில் ஓடியாடி விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வகைசெய்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் பொன்னூசல்(ஊஞ்சல்) அம்மானை,பூப்பந்து ஆகிய விளையாட்டுக்களைப் பாடிக் கொண்டே ஆடுவார்கள்.பந்தாடிப் பாடும் பாடலைக் கந்துகவரி என்பார்கள்.

இந்த விளையாட்டுக்கள் எல்லாம் மனதுக்கும் உடலுக்கும் நல்ல உரம் அளிக்கும்.

ஓடி,ஆடி விளையாடினால் தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம்.மாலை சூரியஒளியில் ’டி’ வைட்டமின் இருப்பதாய்ப் பெரியவர்கள் சொல்லி விளையாட விடுவார்கள்.
இயற்கையில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளி மிகச்சிறந்த கிருமிக் கொல்லியாகும். உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ’டி’ சத்தைத் தோல் மூலமாகப் பெறுவார்கள்.சூரிய ஒளியில் விளையாடினால் நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம். எங்கே குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்கே இருட்டிவிடும் என்றால் விடுமுறை நாட்களில் ஆவது விளையாட விட வேண்டும்.

’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு,கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.

என் அம்மா தன் டைரிக்குறிப்பில் பாண்டி விளையாட்டுக்கு ஒரு பாட்டு எழுதி வைத்து இருந்தார்கள்.

அது:

பாண்டிவிளையாடு


------------------
பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ
பாட்டி எனக்குப் பரிசளித்த
பல்லாங்குழியைப் பாரிதோ

மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ

சேரருக்கு மங்கலங்கள்
செப்பி விளையாடலாம்
சோழருக்குச் சோபனங்கள்
சொல்லி விளையாடலாம்

இன்னும் பாண்டி யாடலாம்
ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்
கட்டும் பாண்டியாடலாம்
களைத்து விட்டால் நிறுத்தலாம்

எய்யாப் பாண்டியாடலாம்
ஏய்த்து விட்டால் நிறுத்தலாம்
பசும் பாண்டியாடலாம்
பசித்தவுடன் நிறுத்தலாம்

பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ.

பாண்டி விளையாடினால் நல்ல பசி எடுக்கும். பசி எடுத்தவுடன் விளையாட்டை நிறுத்திவிட்டு
சாப்பிடப் போய் விடுவார்கள் போலும். அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியமாக குழந்தைகள் இருந்தார்கள்.இப்போது ஒரு மழை விழுந்தால் போதும், உடனே சளி பிடித்து விடுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
நல்லா சிரித்து,ஓடி விளையாடி குழந்தைகள் எல்லாம் குதூகலமாய் இருக்க வேண்டும்.

பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சம்மாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல் உதவி செய்யும் குணம்,எல்லாம் தானாக வரும்.நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.


இப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்டது. அதை அளவோடு விளையாடிவிட்டு வெளியே சென்று விளையாடினால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
பசங்க கிரிக்கெட்,வாலிபால்,கபடி,என்று விளையாடலாம்.நாகர்கோவில்,கன்னியாகுமரி பக்கமெல்லாம் பெண்களும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.அங்கு பெண்கள் தற்காப்புக் கலையும் பயில்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஒரே மாதிரி வேலைகள் சலிப்பூட்டும்.இதையே குழந்தைகள் ’போர்’ என்று குறிப்பிடுவர்கள்.இதை போக்குவதற்கு விளையாட்டு துணை புரியும்.

ஓடி விளையாடி,கூடி விளையாடி உடல் நலத்தோடும்,மனநலத்தோடும் குழந்தைகள் எல்லாம் வாழவேண்டும்.

வாழ்க வளமுடன்!
வாழக நலமுடன்!.