வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மூத்தோர் சொல் அமுதம்

வாழ்க்கையில் நமக்கு உயர்ந்த குறிக்கோள் இருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த குறிக்கோள்களை அடையப் பாடுபடும் பொழுது அவ் உயர்ந்த இலக்குகளை அடைய முடிய வில்லை என்றாலும் முயற்சியாவது செய்த திருப்தி கிடைக்கும். பெரியவர்கள் எப்போதும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் சொற்களையே சொல்லி வந்து இருக்கிறார்கள்

//சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.//


மூத்தோர் சொல் அமுதம் என்பார்கள். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் ஏதாவது காரண காரியம் இருக்கும். நாம் முழுக்க கடைப்பிடிக்கிறோமா இல்லையோ கொஞ்சமாவது கடைப்பிடிக்கலாம்.

சேது அம்மாள் என்ற எங்கள் குடும்ப நண்பர், தான் எழுதி வைத்த குறிப்புகளை என்னிடம் கொடுத்தார்கள். அதில் அவர்கள் நல்ல விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.1. ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு திருக்குறள் உரையுடன் இருத்தல் வேண்டும்.

2. ஒரு நாளைக்கு ஐந்து குறட்பாக்களையாவது படித்து உணர்ந்து நடத்தல் வேண்டும்.

3. கூடியவரை பிறருக்கு உதவும் வகையில் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளல் வேண்டும்

4.வாழ்வை இனியாதாக்குவது அன்பு. கஷ்டங்களிலிருந்து மீளச் செய்வது அன்பு. குடும்ப வாழ்க்கையை செம்மைப் படுத்துவது அன்பு.

5. ஊக்கமானது இடையறாது உள்ளத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இடையறாது செடி வளர்வது போன்று ஊக்கமுடையவரது உள்ளம் வளர்கிறது.

கூட்டு வழி பாட்டின் நன்மைகள்:
------------------------------


கூட்டு வழிபாட்டின் போது எல்லோருடைய மனமும் ஒன்றி விடுவதால் மனதில் சலனங்கள் - தீய எண்ணங்கள் தோன்றுவதில்லை. கூட்டு வழிபாட்டின் மூலம் இறைவனை வேண்டுதல் செய்கையில் கருணை மழை பொழியக் காத்திருக்கிறான் இறைவன்.

கூட்டு வழிபாட்டின் மூலம் பக்தி செய்ய இறைவன் திருவருள் பெற்ற பரமஞானிகளின் பாடல்கள் துணை செய்யும்.

நடைமுறை வாழ்வில் கூட்டுறவின் மூலம் செயல் பட்டால் நிச்சயம் பலன் உண்டு.
தனி மரம் மழையைக் கொண்டு வருவதில்லை. மழைக்குத தேவையானது பல மரங்கள், அடர்ந்த காடுகள்.

கூட்டு வழிபாடு செய்ய இறைவன் திருவுள்ளம் இரங்கும்.

வேண்டுதல்:
----------

1. எல்லாம் வல்ல பேரா இயற்கை பெருந்தெயவமே! உன்னையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். உலக உயிரினம் வளமுடன் வாழவும் மனித குலம் உடன் பிறப்பாக எண்ணி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவும் அருள்புரிவாய் இறைவா!

2. வானமழை பொழியவும் பயிர்கள் செழிக்கவும் உயிர்க்கூட்டம் பசியாறவும் அறநெறிப்பட்ட உலகமாய் வையகம் வாழ அருள் தருவாய் இறைவா!

3. பொய், பொறாமை, புறங்கூறல்கள், களவு, காமம், சூது, வாது, வஞ்சனை நீக்கி அன்பு, அறிவு, அருள், அறம், உண்மை, உதவி, உயர்வு, ஒற்றுமை, பகுத்துண்ணும் பண்பு, எடுத்துத்தரும் இயல்பு, கனிமொழி உரைக்கும் உணர்வு, சான்றோரைப் போற்றும் சால்பு, தெய்வத்தைப் பராவும் கடமை உணர்வு இவையாவும் பெற்றவர்களாய் வாழ வழி செய்வாய் இறைவா!

4. நிலவினிடத்திலே உள்ள அருளையும் (குளிர்ச்சி) உலகங்காக்கும் உத்தமப் பண்பையும் வளரும் தன்மையையும் நான் பெற அருள்புரிவாய் இறைவா!

5.கதிரவனிடத்திலே உள்ள பேரொளியையும் கதிர் வீச்சையும் பேராற்றலையும் நான் பெற அருள் புரிவாய் இறைவா!

6.நட்சத்திர மண்டலத்திலே உள்ள எல்லா சக்திகளையும் நான் பெற அருள் புரிவாய் இறைவா!

7.வானவெளியில் நடமாடும் சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள் அவர்களின் அருளாசியை நான் பெற அருள்புரிவாய் இறைவா!


8. வழிபடு கடவுளாம் தாய் தந்தையர், மூதாதையர் யாவரின் அருளாசியை நான் பெற அருள்புரிவாய் இறைவா!

9.உலகம் நன்றாக இருக்க அருள் புரிவாய் இறைவா!

10 நானும் என் குடும்பத்தாரும் என் உறவினரும் என் நட்பினரும் என்னை நாடியவரும், என்னால் நாடப் பட்டவரும் என்னைச் சார்ந்திருக்கும் பலவகை உயரினங்களும் நலமாக இருக்க அருள் புரிவாய் இறைவா!

அவர்கள் எழுதி வைத்த தினப்படி குறிப்புகள்:
---------------------------
காலை 4.30 துயிலெழுதல்- இறைஉணர்வு- நீதிநூல்படித்தல்
காலைக்கடன்- நடத்தல்- உடற்பயிற்சி- உடல் உழைப்பு- செய்தித்தாள் படித்தல்
ரேடியோ கேட்டல்- வீட்டுவேலை- இறைவழிபாடு- காலை உணவு.

9-1 பணி

மாலை 1-2 இறை உண்ர்வு - மதிய உணவு (முதியவர்கள் சிறிது ஓய்வு)
2-5 பணி
3- 6.30 நடத்தல்- (ஓடுதல்) - உடற்பயிற்சி- விளையாட்டு=- உடல் உழைப்பு- பொழுது போக்கு.
6.30- 8.30 படிப்பு- ரேடியோ கேட்டல் டி.வி பார்த்தல்- இறை வழிபாடு.
8.30. 9 இரவு உணவு.
9- 10 குடும்பக்கணக்கு- அளவளாவுதல் ரேடியோ- அடுத்தநாள் திட்டம்.
அறநூல் படித்தல்- இறையுணர்வு -துயில் கொளல்.

விடுமுறை நாட்களை எப்படி செலவு செய்வது என்பதை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

விடுமுறை நாட்கள்:
-------------------

கோயில் செல்லுதல், குடும்ப கூட்டு வழிபாடு- வீட்டு வேலைகள் அவசியமான அலுவலக வேலை- குழந்தைகள் படிப்பு- விளையாட்டு- முழு ஒய்வு. பொழுதுபோக்கு- அடுத்த் வாரத்திட்டம் -துறைத்தேர்வு -மேல்படிப்பு - திட்டமிடுதல் -வீடுகட்டுதல்- சிக்கனம் - சேமிப்பு- நல்ல முதலீடு.

அவர்கள் எந்த வீட்டு விஷேசங்களுக்கு வந்தாலும் தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்த்து மகிழச்சியோடு செய்வார்கள். அவர்கள் வீட்டுக்கு போனாலும் நமக்கு உணவு செய்து கொடுத்து, வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய் கனிகள் கொடுத்து மகிழவார்கள்.
எங்கள் மன்றத்தில் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி நடந்தால், நடத்தும் ஆசிரியருக்கு உணவு தன் கைப்பட சமைத்து எடுத்து வந்து தானே பக்கத்தில் இருந்து தாயின் பரிவுடன் பரிமாறுவார்கள்.
அவர் ஒருத்தருக்கு மட்டும் உணவு கொண்டு வரமாட்டார்கள்- கூட நாலு பேர் உண்ணும் அளவு தான் கொண்டு வருவார்கள். எப்போதும் யாருக்கும் உதவி செய்ய காத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் வயது 80க்கு மேல். வேலை செய்ய அலுப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்களை நினைத்துக் கொள்வேன் சுறு சுறுப்பு வந்து விடும்.

அவர்கள் சொல்லும் அறிவுரை தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்தால் மருத்துவ செலவைத் தவிர்க்கலாம்.

எல்லா பக்கங்களிலிருந்தும் தூய்மையான எண்ணங்கள் நம்மை வந்து அடையட்டும் என்று நாம் தினம் வேண்ட வேண்டும் என்பார்கள். நாமும் அந்த மாதிரி வேண்டுவோம்.ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நண்பர்கள் தினம்

இன்று நண்பர்கள் தினம்.

நட்பின் ஆழத்தில் ஒவ்வொருவரும் திளைத்து இருப்பார்கள்.

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

என் அப்பாவுக்கு வேலை நிமித்தம் ஊர் ஊராய் செல்லும் போது, அந்த அந்த ஊரில் கிடைத்த நட்பைப் பிரிந்து வருவது பெரிய வருத்தமாய் இருக்கும். அப்படி தூத்துக்குடியிலிருந்த இரண்டு வருடங்களை மறக்க முடியாது. அதுவும் சந்தன அத்தையின் நட்பை விட்டு பிரிந்து வருவது பெரிய கடினமாய் இருந்தது.

இப்போது சமீபத்தில் தூத்துக்குடிக்கு தங்கையின் பேரனைப் பார்க்க போனபோது அப்படியே சந்தன அத்தையைப் பார்த்து விட்டு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தேன், என் கணவரிடம். மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியெல்லாம்(கோவில்பட்டி, வானரம்பட்டி,) சொந்தங்களை சந்தித்து பேசி மகிழ்ந்து, பின் எட்டையபுரம் பாரதியின் நினைவு மண்டபம், அவர் வாழ்ந்த வீடு எல்லாம் பார்த்தோம். பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை பார்த்து வந்தோம் அப்போது அங்குள்ள மங்கம்மா கோவிலில் உள்ள பூசாரியிடம் பேசிக்கொண்டு இருந்தேன் ” நான் நான்காவது படிக்கும் போது வந்தேன். பிறகு இப்போதுதான் வருகிறேன்” என்று.

என் முதல் சுற்றுலாவில் என் அம்மா,மற்றும் சந்தன அத்தையுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தேன் ( பள்ளி சுற்றுலா தான். ஆனால் என்னைத் தனியாக விடமாட்டேன் என வகுப்பு ஆசிரியரிடம் கேட்டு எங்களுடன் வந்தார்கள் அவர்கள் இருவரும்.) மறுநாள் எனக்கு காய்ச்சல் வந்து பின் பெரிய அம்மை வந்தது. அப்போது அத்தை துடித்த துடிப்பு! தினம் வந்து பார்த்து செல்வார்கள். எனக்கும் என் இரு தங்கைகளுக்கும் அம்மை போட்டு இருந்தது. அதில் ஒரு தங்கை 10 மாத குழந்தை. அந்த ஊரில் பிறந்ததால் ’பாகம்பிரியாள்’ என்று அந்த ஊர் அம்மன் பெயர் வைத்த குழந்தை. அவளை அந்த அம்மனே எடுத்துக் கொண்டாள். அப்போது அத்தை அடைந்த வேதனை சொல்லில் அடங்காது.

அத்தையின் நட்பு கிடைத்தது பெரிய கதை. அத்தையின் அண்ணன் எங்கள் பக்கத்து வீடு அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். அப்படி ஒரு நாள் வந்த போது வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த என் தங்கையைக் காணவில்லை என்று நாங்கள் தேடிக்கொண்டு இருந்தோம்.அப்போது அவர்கள் எங்களுடன் சேர்ந்து தேடினார்கள். அப்போது அவர்கள் அழுத அழுகை நினைவை விட்டு அகலாது. பின் ஒரு கூடைக்கார அம்மா தன்கூடையில் வைத்து அவளைத்தூக்கிக் கொண்டு சென்றதை பார்த்துப் பிடித்து விட்டோம் அந்த அம்மாவிடம் ஏன் குழந்தையை தூக்கி சென்றாய் என்று கேட்டால் அவர்களுக்கு குழந்தை இல்லையாம் வெளியில் தனியாக விளையாடி கொண்டு இருந்தாள்.பார்த்தவுடன் ஆசை ஆகி விட்டது தூக்கி வந்தேன் என்றாள்.தரமாட்டேன் என்றாள்.காவல் நிலையம் போய்த்தான் மீட்டோம். அத்தை ”பெற்ற வயிறு எப்படி துடிக்கும்? நீ தூக்கி வந்து விட்டாயே” என்று திட்டினார்கள். பிறகு தான் எங்களுக்குத் தெரியும் அந்த அத்தைக்கும் குழந்தை இல்லை என்பது.

பிறகு எங்களுடன் நல்ல நட்பாய் ஆகி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை எல்லாம் அவர்கள் வீட்டுக்குக் கூட்டி சென்று தின்பண்டங்கள் வாங்கித் தந்து , சடையில் பூ தைத்து விட்டு அலங்காரம் செய்து அனுப்புவார்கள். எங்கள் வீட்டில் கொலு வைக்கும் போது தினம் ஒரு அலங்காரம் செய்து, வீடு வீடாய்க் கொலுவிற்கு நாங்கள் அழைக்கச் செல்லும்போது சின்ன குழந்தையின் குதுகலத்துடன் அவர்களும் உடன் வருவார்கள். அப்பாவை அண்ணச்சி என்றும் அம்மாவை மதினி என்று அழைப்பார்கள். எங்களை யார் என்று கேட்பவர்களுக்கு என் அண்ணாச்சி குழந்தைகள் என்பார்கள். பாசம்! பாசம்மட்டுமே காட்டத் தெரிந்த நல்ல உள்ளம்.

அவர்கள் வீடு கோகுலம் மாதிரி இருக்கும் நிறைய மாடுகள் தொழுவத்தில் உண்டு. அவர்கள் வீட்டைச் சுற்றி நிறைய வீடுகள். அதை வாடகைக்கு விட்டு இருந்தார்கள்.நாங்கள், அவர்கள் வீட்டு குழந்தைகள் என்று தினம் அத்தை வீடு கோலாகலமாய் இருக்கும். அத்தை வீட்டில் சீதை பொன் மானை ராமரிடம் கேட்கும் அழகிய படமிருக்கும்.ஐரோப்பாவில் அக்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வண்ணப்படம். கண்ணன் வெண்ணை உண்ணும் படம் இருக்கும் மிக அழகாய்.

அவர்கள் குழந்தைகளை அழைத்து வந்து கொஞ்சி அனுப்ப வேண்டியதாய் உள்ளதே வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ? தெரிந்தவர் வீட்டில் இருந்த ஒரு மனநிலை சரியில்லாத குழந்தையை வீட்டில் வைத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள்
.
மனநிலை சரியில்லாத அந்தக் குழந்தையை அவளுடைய பெற்றோர் திரும்ப அழைத்து செல்ல- அந்தக் குழந்தையும் அத்தையை விட்டுப் பிரிந்த ஏக்கத்தில் இறந்து விட்டது. இதனால் அத்தை விரக்தியின் எல்லைக்குச் சென்று, தனக்கே தனக்கென்று குழந்தை வேண்டும் என்று முடிவு எடுத்து தன் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை தன் குழந்தைகளாய் வளர்ந்த்தார்கள். பின் அந்த சின்ன அத்தையும் இறந்து விட முன்னிலும் அன்பாய்ப் பாசமாய் குழந்தைகளை வளர்த்து எல்லோரையும் நன்கு படிக்க வைத்து ஆளாக்கினார்கள்.


நாங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊருக்கு அவர்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு விடுமுறைக்கு வந்து விடுவார்கள். வரும் போது கைமுறுக்கு, வத்தல், வடகம் எல்லாம் கொண்டு வருவார்கள். என் அக்கா திருமணத்தில் ஆரம்பித்து என் கடைசித் தங்கை கல்யாணம் வரை வந்து வாழ்த்திய அன்பு உள்ளத்தை கொண்டவர். எங்கள் ஊர்ப்பக்கம் நான்கு முகம் விளக்கு(பெரிய வெண்கலக் குத்து விளக்கு ) திருமணத்திற்குக் கொடுப்பார்கள். அதை அம்மா, அவர்களைத் தான் வாங்கி வரச் சொல்வார்கள். அவர்கள் வாங்கி வந்த விளக்கை ஏற்றி நாங்கள் எல்லோரும் நலமாய் இருக்கிறோம். என் மகளுக்கும் அவர்கள் தான் வாங்கி வந்தார்கள். என் மகள் பிறந்த போது ஆஸ்பத்திரியில் வந்து உதவிக்கு இருந்தார்கள்.” ஜப்பசி முழுக்கு விழா” விற்கு வந்து இருந்தவர்களை பக்கத்தில் இருக்கும் கோவில் எல்லாம் அழைத்து போனேன். மகிழந்து வாழ்த்தினார்கள்.

என் மகன் திருமணத்தின் போது உடல் நலம் சரியில்லாமல் போனதால் வரவில்லை. தூத்துக்குடியில் சைவசித்தாந்த சபையில் என் கணவரைப் பேச அழைத்து இருந்தார்கள். அப்போது போனோம் அவர்கள் வீட்டுக்கு என் மருமகளின் கணவர் பேசுகிறார் என்று எல்லோரிடமும் பெருமையாய் பேசி உடல்நிலை சரியில்லாத போதும் பேச்சை கேட்டு என் கணவரை வாழ்த்தி சென்றார்கள்.

இந்த முறை ஊருக்கு போனபோது அத்தையின் நினைவாய் அவர்களைப் பார்க்க குழந்தையின் குதுகலத்துடன் மலரும் நினைவுகளுடன் அத்தையின் வீட்டுக்குச் சென்றேன். என்றும் அடைக்காத கதவு அத்தையின் வீடு கதவு அடைத்து இருந்த்தே மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பக்கத்தில் கேள் என்றார்கள் என் கணவர். அத்தைஇல்லையா எங்கு போய் இருக்கிறார்கள் என்று கேட்டேன். ”அவர்கள் இல்லை இறந்து போய் மூன்று மாதம் ஆகிவிட்டது” என்றார்கள். கேட்ட எனக்கு அதிர்ச்சி. மாமா எங்கு இருக்கிறார்கள் என்றோம் பெண் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள் என்றார்கள். செல்வம் எங்கே என்றேன் (மூத்தமகன்) மாடியில் இருக்கிறார்கள் என்றார்கள் மேலே போனால் அத்தை பெரிய படத்தில் நம்மை வரவேற்கிறார்கள் சிரித்தமுகமாய். ”என்ன செல்வம்? அத்தை இறந்ததை தெரிவிக்க வில்லை” என்று கேட்டதற்கு” அதிர்ச்சியில் சொல்ல மறந்து விட்டது” என்றார். ” தம்பி தங்கை என்று யாருக்காவது சொன்னால் அவர்கள் என்னிடம் சொல்லி இருப்பார்களே” என்றேன். எவ்வளவு ஆவலாய் வழி எங்கிலும் அவர்கள் பேச்சு தான் பேசி வந்தேன் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தப்பட்டு வந்தேன். படி இறங்கும் போது செல்வம், ”கோமக்கா! வத்தல்(கூழ்வடகம்) கொண்டு போங்கள்” என்று தன் மனைவியை எடுத்து வரச்சொல்லியபோது அந்த அன்பில் அத்தையின் முகம் தெரிந்தது.அத்தையின் அன்பு வளர்ப்பை காட்டியது.

நட்பு என்பது இன்ப துன்பத்தில் பங்கு கொள்வது. எப்போதும் எங்கள் இன்ப துன்பத்தில் பங்கு கொண்ட என் அத்தையை மறக்க முடியாது. என்றும் என் நினைவில் வாழ்வார் சந்தன அத்தை.