ஸ்விடிஸ் பரோவில் உள்ள ராஜகணபதி கோவில் போன போது எடுத்த நிலா
ஓரீஸ் என்ற இடத்தில் உள்ள இந்து டெம்பிள் என்ற கோவில் வாசலில் எடுத்த நிலா
லாங்வுட் கார்டனன்லில் இரவு எட்டு மணிக்கு எடுத்த நிலா
நிலாவானில் நீந்தும் வெண்ணிலா
இரவு நடக்கும் வாணவேடிக்கை பார்க்க மடக்கு நாற்காலியைப் போட்டு இடம் பிடிக்கச் செல்லும் என் கணவர்
சேர் போட்டு இடம் பிடித்தபின் மலர்ப்பூங்கா பார்க்கப் போகும் சிறுவர்கள்
வெள்ளை சேர்கள் வாடகைக்கு கிடைப்பது.
கலர் கலராக உள்ளது அவரவர்கள் வீடுகளிலிருந்து கொண்டுவருவது.
நடக்க முடியாதவர்கள் பேட்டரி சேர் காரில் வந்து இடம் பிடித்துக் கொள்கிறார்கள்
இந்த மண்டபத்திற்கு பக்கத்திலிருந்து வாணம் விடுவார்கள்.
வெடிகளின் பின்னணியில் ஒளிரும் நிலா
பெரிய வட்டம்- நிலா
சின்ன மத்தாப்பூக்களுக்கு ஓரத்தில் நிலா
பெரிய புஸ்வாணங்களுக்கு மேலே நிலா
வானத்தில் சிதறும் வெடிகளுக்குள் நிலா
ஒளிரும் வாணமும் நிலாவும்
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா என்று நாம் சிறு வயதில் பாடி இருப்போம்.குழந்தைகளுக்கு நிலா காட்டி உணவு கொடுத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். அன்று என் குழந்தைகளுக்கு, இன்று பேரக்குழந்தைகளுக்கு . அன்றும் அதே நிலா தான், இன்றும் இதே நிலா தான்.
நிலா பாட்டுமட்டும் மாறி விட்டது.
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்ல துதி செய்
என்று பழைய பாடல்
இப்போது கடைசி இரண்டு வரிகள் மாறி உள்ளது.
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுத்தி வா
என்று இருக்கிறது.
சினிமாக்களில் முழுநிலா மிகவும் முக்கியம். அவர் அவர் மனநிலைக்கு ஏற்றவாறு நிலாவும் பாடலும் காட்சி அமைப்புகளும் மாறும். பாட்டு எழுதும் கவிஞர்களுக்கும், படம் எடுக்கும் காமிரமேன்களுக்கும் நிலவின் மீது அத்தனை காதல்.அவ்வளவு அழகாய் இருக்கும் பாடல்கள், காட்சி அமைப்புக்கள், அந்தக் காலம் முதல் இன்று வரை. நிறைய பாடல்கள் எல்லோர் நினைவுகளிலும் வந்துமோதும். யாருக்கு என்ன பாடல் நினைவுக்கு வந்தது என்று பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் ரசிப்பார்கள்.
புராணங்களில் நிலவு வழிபாடு, நிலவு தேய்வது ,வளர்வதற்கு எல்லாம் என்ன காரணம் என்ற கதை உண்டு அதை எல்லாம் திருமதி இராஜராஜேஸ்வரி அழகாய் அந்த அந்த நாளில் விரிவாக விளக்கம் தந்து அப்போது எந்த கோவில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை அழகாய் கண்ணை கவரும் படங்களுடன் நமக்கு தந்து இருக்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள்.
வல்லி அக்கா நிலா ரசிகை. அவர்கள் தன் பதிவில் பெளர்ணமி சமயம் அவர்களே எடுத்த அழகான நிலாப்படங்கள் பகிர்வார்கள். பார்த்து இருப்பீர்கள்.
நேற்று போட்ட பதிவு அமெரிக்கா நிலாப் பற்றி. பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது நானும் நிறைய நிலா படமெடுத்தேன் என்று போட்டு இருந்தேன். உடனே எனக்கும் ஆசை வந்து விட்டது , நான் செல்லும் இடம் எல்லாம் எடுத்த நிலா படம் போட .
பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்” என்ற என்ற இடத்திற்கு போன மாதம் போய் இருந்தோம் அங்கு மலர்த் தோட்டம், அழகான புல்வெளிகள், நீர் ஊற்று நடனம், வாணவேடிக்கை எல்லாம் உண்டு ஒரு பதிவில் நீரூற்று நடனத்தை பகிர்ந்து கொண்டேன்.
இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை ஆரம்பம். அதற்கு கட்டணம் 38 டாலர் ஒருவருக்கு. கையில் திருப்பதிக்குபோகும் போது அடையாள் டோக்கன் கட்டுவதுபோல் சிவப்பாய் ஒரு அடையாள அட்டையைக் கட்டி விடுகிறார்கள். அரைமணி நேரம் வாணவேடிக்கை, பின்னணியில் இசை ஒலிக்க நடை பெறுகிறது. கடைசி நேரத்தில் மட்டும் டாம்டூம் என சத்தத்துடன் சட சட வென்று வெடி அதிர்கிறது. அதற்கு முன்பு எல்லாம் சிறிய சத்தத்துடன் பூவாண சிதறல்கள்தான். வட்டமாய், நட்சத்திரம்போல்,வால்நட்சத்திரம் மாதிரி.
வெள்ளையாக தெரியும் அழகிய நீரூற்றுக்குள் வாணவேடிக்கையின் போது கலர் கலராக தெரிகிறது.
நம் ஊரில்( மதுரையில் ) அழகர் எதிர் சேவையின் போது தல்லாகுளத்தில் இரவு வாணவேடிக்கை வைப்பார்கள். வித விதமாய் அதை எல்லாம் பார்த்து விட்டு இதைப்பார்க்கும் போது ஆச்சரியமாய் இல்லை எனக்கு. ஆனால் பின்னணி இசையும் ஒவ்வொரு வெடி வெடித்தபின் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதும் பார்க்க கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.
இங்கு அவர்களுக்கு நம்மைப் போல் சுதந்திரமாய் வெடி வெடிக்கமுடியாதே! குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தான் அவர்கள் வாணவேடிக்கை செய்வார்கள் . அப்போது தான் ரசிக்க முடியும். இந்த கார்டனில் மாதம் இரண்டு தடவை உண்டு. மதியம் மூன்று மணிக்கே வந்து வாணவேடிக்கை பார்க்க இடம் பிடிக்க சேர்களை போட்ட பின் மக்கள் தோட்டத்தின் அழகை ரசிக்க போகிறார்கள். தோட்டத்தின் அழகை, மலர்களின் அணி வகுப்பைக் கண்டு ரசித்து பார்க்கில் விளையாடி பின் ஆறு மணிக்கு நீர் நடனத்தை கண்டு மகிழ்கிறார்கள். வாணவேடிக்கையை நன்கு இருட்டியவுடன் தான் ஆரம்பிப்பார்கள்.
எட்டு மணி வரை போன மாதம் இருட்டவில்லை. சின்னவர்கள், பெரியவர்கள் என்று எவ்வளவு கூட்டம் வருகிறது இந்த வாணவேடிக்கையை ரசிக்க.
வாணவேடிக்கை சமயம் நிலா வானத்தில் சின்ன வெளிச்ச பந்தாய் இருந்ததையும் காட்ட வாண வேடிக்கை வீடியோ எடுத்ததையும் போட்டு விட்டேன், எங்கள் சின்ன காமிராவில் எடுத்தது ரொம்ப எதிர்பார்க்க முடியாது.
மலர்த் தோட்டம் - எனது அடுத்த பதிவில் .
வாழ்க வளமுடன்.