அரிசோனா அருகில் உள்ள ஆன்டிலோப் கான்யன் என்ற இடத்திற்கு 2017ல் டிசம்பர் மாதம் நாங்கள் மகன் வீட்டுக்கு போய் இருந்த போது இந்த ஆற்றுக்குடைவு பள்ளதாக்கிற்கு அழைத்து போனான். மகன் குடும்பத்துடனும் குடும்ப நண்பர் குடும்பத்துடன் சென்று வந்த இனிய பயணம்.
(கணவரும் அப்போது உடன் இருந்தார்கள் அந்த நினைவுகள் மனதில்.)
இந்த இடம் அமெரிக்க பூர்வகுடியினர் நவஹோ பழங்குடியினரின் நிலத்தில் அமைந்து இருக்கிறது. அவர்கள் ஆறுகளின் அருகில் தான் தங்கள் குடியிருப்பை வைத்து இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு (இரண்டு, மூன்று இடங்கள்.) அழைத்து போனான் மகன் முடிந்த போது அவைகளை பகிர எண்ணம் உள்ளது. இறையருள் ஒத்துழைக்கவேண்டும்.
(அமெரிக்க செவ்விந்திய குழுவில் பழங்குடியினர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர்கள் இந்த நவஹோக்கள். பேசும் மொழி நவஹோ அதை வைத்து அவர்களை அவ்வாறு அழைக்கிறார்கள். இன்றும் அந்த மொழியை பேசுகிறார்கள். இரண்டாம் உலக போரில் ரகசிய தகவல் பரிமாற்றம் செய்ய நவஹோ மொழியினர் உதவினர். பழங்குடியினர் பேசிய மொழியால் அமெரிக்கா இரகசிய தகவல் பரிமாற்றம் தயாரித்தது. பழைமையான மொழிகளில் நவஹோ மொழியும் ஒன்று. முத்து காமிக்ஸ், லைன் ரசிகர்களுக்கு நவஜோ என்று தெரிந்து இருக்கும். நவஹோவை நவஜோ என்று அந்த கதையில் வரும்.)
இரண்டு தனி கான்யன்கள் உண்டு . மேல், கீழ் கான்யன்கள் என்று. நாங்கள் மேல் கான்யன் போய் பார்த்து வந்தோம்.
பள்ளதாக்கு பகுதிக்குள் போக குறுகிய பாதை அமைப்பு இதன் வாசலிலிருந்து உள்ளே சில நூறு அடி தூரம் செல்ல வேண்டும்.