சனி, 25 அக்டோபர், 2014

படம் இங்கே ! பதில் அங்கே!

சும்மா என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  திருமதி . தேனம்மை அவர்கள்  தன் வலைத்தளத்தில்  ’சாட்டர்டே ஜாலி கார்னர்’ என்று ஒரு பதிவர் பேட்டியை பகிர்ந்து கொள்கிறார். இந்தமுறை என்னை அழைத்து இருந்தார்.  

 கோலங்கள் போடுதல் தொடர்பான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். என்றும்,

 உங்களுக்குப் பேர்வாங்கித்தந்த கோலம் எது. ?///; இரண்டு கேள்விகள் கேட்டு இருந்தார். கோலங்களும் சில அனுப்பி வைக்க சொல்லி இருந்தார். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. அவரது தளத்தில் என் கோலங்கள் தெரியவில்லை.


 ரோல் காமிராவில் எடுத்து இருந்த பழைய படங்களை ஆல்பத்திலிருந்து டிஜிடல் காமிரா மூலம் எடுத்து அனுப்பினேன்.

 இப்போது படங்களை இங்கு அனுப்பிப் பார்த்தேன் வருகிறது. படங்கள் இங்கே பதில்கள் அங்கே. தேனம்மை அவர்களின் தளத்திற்குப்   போய்ப் படித்து பார்த்துக் கருத்துகளை அங்கு  சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                               









                                
                                                             வாழ்க வளமுடன்.
                                                                       ------------------------

திங்கள், 20 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் !   பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள்   இருக்கும்.  அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம்  பார்ப்போம்.

சிறுவர் சிறுமியாக இருக்கும்போது புத்தாடை எதிர்பார்ப்பு,  வாண வேடிக்கைக்கு என்ன புது மாதிரி மார்க்கட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்று ஆண்டு தோறும் தீபாவளி வருவதற்கு முந்திய மாதமே ஏற்பாடுகள் நடக்கும். சக வயது தோழி, தோழர்களிடம் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது. கேப் வெடிக்க புது மாதிரி துப்பாக்கி , தூக்கத்திலும் கனவில் அதைப்பற்றிய நினைவுதான்.

பத்திரிக்கைகளில் தீபாவளி சமயத்தில் வரும் சிரிப்புகளில் முக்கியம், ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் !”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். எங்கள் வீட்டில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  பெரியவளுக்குப்  பத்தாமல்  போனால் சின்னவள் போட்டுக் கொள்ளலாம்., பெரியவனுக்குப் பத்தாமல்  போனால் சின்னவன் போட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பா பொருத்தமான  அளவில் தான் வாங்குவார்கள் எல்லோருக்கும். வித விதமாக ரெடிமேட் உடைகள் தான் வாங்குவார்கள்.பாவாடை, தாவணி போடும்போது மட்டும் தைக்கப்பட்டது. அதை அக்கா அழகாய்த் தைத்துத் தருவார்கள். இப்போது அதுவும் ரெடிமேட் கிடைக்கிறது.

 இப்போது போல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இல்லை என்றாலும்  வார, மாத இதழ், தீபாவளி  சிறப்பிதழ்  மூலம் நமக்குக் கிடைத்து விடும். வானொலியிலும் தீபாவளிச் சிறப்புத் தேன் கிண்ணம், தீபாவளிப் பாடல்கள் என்று  தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கேட்கலாம்.

இப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும்தான்.  ஏதாவது துணி அதிகப்படியாக எடுத்தது இருந்தால் அது கார்த்திகைக்கும் கிடைக்கும். அதுபோல் தான் வெடிகள் மத்தாப்பு, மற்றும் பூச்சட்டி எனும் புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.( எல்லாவ்ற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு! கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.

 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள்.

தீபாவளிக்கு முன்பே ,தினமும் பலகாரங்கள் சாப்பிடுவது, தீபாவளிக்கு வாங்கிய துணிமணிகளை  வீட்டுக்கு வந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வது என்று மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது தீபாவளித் திருநாள்.

தீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளைக்கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா . இந்த வெடிகளை வெடித்து விட்டு கொஞ்சநேரம் கழித்துச் செல்கிறோம் என்றால் விட மாட்டார்கள் . ”முதலில் கொடுத்து விட்டு வந்து, சாப்பிட்டு விட்டு,அப்புறம் போய் நிதானமாய் வெடிகளை வெடிக்கலாம் ”என்பார்கள்.

சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான்? காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம்  எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

 வட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது. ஓலை வெடியை தனித் தனியாகப் பொருத்திப் போட, ஆளுக்கு ஒரு பாக்கெட் உண்டு.  ஊசி வெடியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உண்டு.. அதுவும் ஆளுக்கு ஒரு பாக்கெட்,

பட்டர்பிளை, பாம்புமாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய  நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம்.  ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும் ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை  ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து  மகிழ்வோம்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து
கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.

பெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரிய சரம் , தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம்  அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. அது எல்லாம் இரவுதான். எல்லோரும் பார்த்து ரசிப்பதற்கும் பாதுகாப்பை உத்தேசித்தும்.

’பார்த்தால் நிறைய பகிர்ந்தால்  கொஞ்சம் ’என்பது போல்  அம்மா செய்த பலகாரங்கள்  மட மட என்று குறைந்து விடும், டின்களில்,  ”என்னம்மா! பலகாரம் கொஞ்சம் தான் இருக்கு போல”  என்றால், ”மறுபடியும் செய்துகொள்ளலாம்.” என்பார்கள் . கொஞ்சத்தை வேறு பாத்திரத்தில் முன்னதாகவே எடுத்து வைத்து இருப்பார்கள் . டின்களில் உள்ளதை காலி செய்தபின் அவை வெளியே வரும்.  கார்த்திகை வரை இந்த பலகாரம் ஓடும் அடுத்து கார்த்திகைக்கு அவல்பொரி, நெல்பொரி, அரிசி பொரி உருண்டைகள் அப்பம் என்று வந்து விடும்.

அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஆனந்தமாகக் கொண்டாடிய தீபாவளி
எப்போதும் மனதை விட்டு நீங்காத மகிழ்ச்சியான தருணங்கள்.. இப்போதும் தம்பி, தங்கைகள் கூப்பிட்டார்கள் ,”  உங்களுக்கு இந்த வருடம் தீபாவளி கிடையாதே! இங்கு  வாருங்கள்  எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்” என்று.

திருமணம் ஆனவுடன், தலை தீபாவளியைப் புகுந்த வீட்டில் கொண்டாடியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் பக்கம் பண்டிகை விழாக்கள் எல்லாம் கணவன் வீட்டில் தான்!  பெண்வீட்டார் , வரிசைகளைக் புகுந்த வீட்டில் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள்.

என் அப்பா தீபாவளிக்கு முன் கோவைக்கு என் மாமனார் வீட்டுக்கு வந்து, சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.. வைலட் கலரில் இளம் மஞ்சள் கலர் பார்டர்-  உடல் முழுவதும் நட்சத்திர ஜரிகை வேலைப்பாடு- கொண்ட பட்டுப்புடவை மற்றும் தேன்குழல், நெய் உருண்டை, காரசேவ், சோமாசி எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்கள் அம்மா.

எங்கள் மாமனார் வீட்டில் ஒவ்வொரு தீபாவளிக்கும் போட்டோ ஸ்டுடியோவுக்குச்  சென்று குடும்பப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அதை மனதில் வைத்துக் கொண்டு  சீர் கொடுக்க வந்த அப்பாவிடம் நான்,
”தீபாவளிக்கு அம்மாவுக்கு என்ன புடவை எடுத்தீர்கள்?  நீங்களும் அம்மாவும் போட்டோ  எடுத்து அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை ஊருக்கு வழி  அனுப்பி வைத்தேன்.  (அப்பா என் கண்ணில் இருந்து மறையும் வரை
பார்த்துக் கொண்டு இருந்தேன். அது தான் அவர்களைக் கடைசியாக நான் பார்ப்பது என்று அப்போது தெரியாது ,) அப்பாவும் ஊருக்குப் போய்  போட்டோ எடுத்து அனுப்பினார்கள். கார்த்திகை சோமவாரத்தில் இறந்து போனார்கள் அப்போது  அவர்களுக்கு வயது 51. தீபாவளி வரும் போதெல்லாம் அப்பாவின் வருகையும் நினைவுக்கு வரும்.
                            

இப்போது ஒரு வெடி டப்பாவில் இருந்து பலவெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பது போல், எங்கள் தலைதீபாவளியின் போது   ’டபுள்ஷாட் " எனும் வெடிகள் வந்திருந்தது. கணவர் அதை வாங்கி வந்தார்கள். கீழே ஒரு வெடி வெடித்து விட்டு, மேலே போய் இன்னொரு வெடி வெடிக்கும். இலட்சுமி வெடி, சரவெடிகள், அணுகுண்டுகள், ராக்கெட், சாட்டை, பென்சில், வித வித  மத்தாப்புகள்,  என்று வாங்கிவந்தார்கள்.

இப்படி தீபாவளிக்கு வெடித்து  வந்ததில் ஒரு மாற்றம்- நானும் அம்மா ஆனவுடன். குழந்தைகள் நிறைய வெடிக்க வேண்டும் என்பதால் நான் வெடிப்பதைக் குறைத்துக்கொண்டேன்.  அவர்கள் வெடிப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைவதுடன் நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும் என் பிள்ளைகள் கொஞ்சமாவது என்னை வெடிக்க வைப்பார்கள்.

:”வெடி ரோக்கா ”(வெடியின் பெயர், விலை விபரம் உள்ள சீட்டு) வாங்கி வந்து ,
என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று குறித்துக் கொண்டு அப்பாவும் மகனும், மகளும் கடைக்குப் போவார்கள்.  அதன்படி வாங்கி வருவார்கள்.
இப்போது தங்கள் ஊரில் வெடிக்க முடியாது என்பதால், மகன் இங்கு தீபாவளிக்கு வந்தால் இஷ்டம் போல் விதவிதமாய் வெடிகள் வாங்கி வெடித்து மகிழ்வான்.

சிறுவயதில், எங்கள் மகன் பகலில் சாட்டை வைக்க வேண்டும் என்று
”சாட்டை! சாட்டை” என்று அழுதான். அவனது அழுகையைக்  டேப் செய்ய ஆசைப் பட்டு சாட்டையை கொடுக்காமல் பகலில் சாட்டை வைக்க கூடாது என்று சொல்லி மேலும் அழ வைத்து டேப் செய்தார்கள். எல்லோரும் எதுக்கு அழுகிறாய் என்று கேட்டால் மறுபடியும் ஆரம்பிப்பான் ”சாட்டை சாட்டை” என்று  இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து கலாட்டா செய்ததை  டேப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம்.   அடிக்கடி போட்டுக் கேட்டு மகிழ்வோம்.

என் மகன் வெகு நாட்களுக்கு அப்பா மாதிரி சட்டை தான் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்துத் தைக்கக் கொடுப்போம். கல்லூரி சென்றபின் தான் ”அப்பாவுக்கு வேறு வாங்க வேண்டும். எனக்கு வேறு வாங்க வேண்டும். அப்போதுதான்  இரண்டு சட்டைகளையும் நான்  போடலாம்” என்பான்.

என் பெண்ணுக்கு நான் எடுத்துக் கொடுக்கும் துணிகள் பிடிக்கும். அம்மா
செலக்ட் செய்தால் மிக அருமையாக இருக்கும் என்பாள். இப்போது காலம் மாறுது கருத்துகளும் மாறுது . இப்போது சேலை மட்டும் தான் என் தேர்வு. மகள் மருமகளுக்கு எல்லாம்,   மாடல் உடைகள் அவர்கள் தேர்வு.

அத்தையும் அம்மாவைப் போலவே ருசியாக  நிறைய பலகாரங்கள் செய்வார்கள்.  கை முறுக்கு, தட்டை,  மைசூர்பாக், பாதாம் ஸ்வீட் , நெய் உருண்டை என்று எல்லாம்  செய்வார்கள்..

அம்மாவைப் போல நானும் தீபாவளி சமயம்  பலகாரங்கள் நிறைய செய்தகாலம் உண்டு. இப்போது  ஏதோ கொஞ்சம் செய்கிறேன்.  புதிது புதிதாக
செய்த  ஆர்வம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் தீபாவளி அன்று புதுவகையான இனிப்புதான் ஒவ்வொரு வருடமும். இறைவன் அருளால் அது நன்றாக அமைத்து விடும்.

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு  என்ற பதிவில் எங்கள் வீட்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றி ஆதவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருப்பேன்.  எங்கள் வீட்டுத் தீபாவளி எப்படி இருக்கும் என்பதை படிக்க விரும்பினால் படிக்கலாம்.

புத்தகத்தில் படித்த  தீபாவளி கருத்துக்கள்  :-

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. துலாமாத மகாத்மியத்தில் தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் போது “தையலே லட்சுமி! ஜல கங்கா” என்றுவருகிறது.அன்று எந்த இடத்தில்   குளித்தாலும்  கங்கையில் குளித்த பலன் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் தீபாவளியை ”எண்ணெய்த் திருவிழா ”என்றே குறிப்பிட்டார்களாம்.

தீப ஒளி வழிபாடு நம் பண்பாடு, இறைவன் இசையால் மகிழ்பவன். இசையின் மூலம் ஒலி  இசையாக மாற்றாமல் ஒலியையே இறைவனுக்கு சமர்ப்பிப்பது வெடி வழிபாடு. ஒளி வழிபாட்டோடு  ஒலி வழிபாடும் இறைவனுக்கு உகந்ததே! கோவில் திருவிழாக்களில் வெடி வெடித்தும் பல்வண்ண வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.

தீபாவளி என்பது இறைவனுக்கு நாம் செய்யும் ஒளி, ஒலி வழிபாடு. எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலவித பக்ஷணங்கள், பெரியவர்களிடம்
 ஆசி பெறுதல், வெடி வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், ஆலயம், செல்லுதல், அனைத்தும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பண்டிகை..

பெரியவர்களிடம் ஆசி பெறுதல் எனும்போது என் மாமனார் அவர்களின்  நினைவு வந்து விட்டது.  முன்பு எல்லாம் அவர்கள் கடிதம் எழுதும் போது ”தீபாவளிக்கு முன்னதாக  வந்து சேருங்கள் ”என்று எழுதுவார்கள். போன தீபாவளிக்கு மகனுடன் அவனது ஊரில் கொண்டாடியதால்  கோவையில்  இருக்கும் மாமாவிடம் ஸ்கைப் மூலம்  ஆசி பெற்றோம். இந்த வருடம் தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள். அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


மகன், மருமகள் பேரனுடன் கொண்டாடடிய போன தீபாவளியை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம் இப்போது.   குழந்தைகள் வரும் நாளே தீபாவளிப் பண்டிகை  போல் மகிழ்ச்சி தரும் நாள்.

காலையில் இறைவனை வழிபட்டு,  தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு,  பின் பலகாரங்கள் சாப்பிட்டு,  வாணங்களைக் கவனமாய்  வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                    -----------------

வியாழன், 2 அக்டோபர், 2014

நவராத்திரி வாழ்த்துக்கள்.

 சகலகலாவல்லி மாலை :-

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளம் தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

நாடும் சொற் சுவை பொருட் சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொலோ உளம்கொண்டு
தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

 தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

 பஞ்சு அப்பு, இதம் தரும், செய்ய, பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகலகலாவல்லியே!

சொற்விற்பன்னமும்,  அவதானமும், கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலா வல்லியே!

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்ட மன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே!

                                                          -குமரகுருபரசுவாமிகள்
காமாட்சி அலங்காரம்
கஜலக்ஷ்மி அலங்காரம்

சரஸ்வதி அலங்காரம்

கொலுவில் தேச பிதா, பாரதமாதா, நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள், இந்தியமக்கள்

                           வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம்
                          தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
                                   பாழ்பட்டு நின்ற தாம் ஓர் பாரத தேசம் தன்னை
                          வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!

                           அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
                                                         வாழ்க வளமுடன்.
                                                                   ==========