திங்கள், 11 ஏப்ரல், 2011

முன்னேஸ்வரம் திருக்கோயில்

Munneswaram


இருப்பிடம்
இத்தலம் கொழும்புவிலிருந்து 82 கி.மீ தொலைவில் உள்ளது. கொழும்புவிலிருந்து வடக்கே A3 நெடுஞ்சாலையில் சிலாபம் (chilaw)சென்று , கிழக்கில் திரும்பி 7 கி.மீ சென்றால் இக்கோயிலை அடையலாம். புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. சிலாபத்தில் இருந்து இங்கு செல்ல நகரப்பேருந்து உள்ளது.

தலச்சிறப்பு

இலங்கையில் சிறப்புப் பெற்ற சிவன்கோயில் ஐந்து. அவை ,முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டேஸ்வரம் ஆகியவை. இவற்றில் முன்னதாகப் போற்றக்கூடியதாக முன்னேஸ்வரம் இருக்கிறது.

புராணவரலாறு:

இலங்கையிலுள்ள புராதன சிவாலயங்களுள் காலத்தால் முற்பட்ட, தொன்மைமிக்க சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது, இந்த முன்னேசுவரம் திருக்கோயில். பிரம்மாவால் உலகம் படைக்கப்பட்டபோதே இவ்வாலயமும் படைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது.. ‘ஈழத்துத் திருக்கோயில்கள்-வரலாறும் மரபும் ’ என்றநூலிலிருந்து சில முக்கிய குறிப்புகளை சேகரித்து எங்களை அழைத்து சென்ற மனோகர் டிராவல்ஸ்க்காரர் கொடுத்து விட்டார் .இல்லை யென்றால் நமக்கு தெரியாது.

முன்னேசுவரம் குபேரன், இராவணன் இராமபிரான் ஆகியோரால் வழிபடப்பட்டதாய் வரலாறு சொல்கிறது. எனவே கி.மு. 4400 ஆண்டுகட்கு முற்பட்டதாகவே இந்தக் கோயில் இருக்க வேண்டும். இராம, இராவண யுத்தத்தோடு முன்னேஸ்வரம் தொடர்புபட்டுள்ளது.

இலங்கை வரலாற்றிலும் முன்னேஸ்வரம் சொல்லப்பட்டுள்ளது

//கலிங்க தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு, இலங்கை வந்த விஜயன் வருகையுடன் இலங்கைச் சரித்திரம் ஆரம்பமாவதாக இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி நூலாகிய மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது. கி.மு. 543 ஆம் ஆண்டு, கெளதமபுத்தர் நிர்வாண தசையடைநத நாளில் இலங்கைக்கு வந்ததாக மஹாவம்சம் குறிப்பிட்டுள்ளது. விஜயன் இலங்கைக்கு வந்து இலங்கையின் ஆதிகுடிகளான நாகர், இயக்கரை வென்று தனது ஆட்சியை நிலைப்படுத்திய காலத்தில் சைவசமயத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவனாகக் காணப்பட்டுள்ளான். //

//விஜயன் இலங்கையின் வடகரையில், கீரிமலைச்சாரலிலே நகுலேச்சுரமென அழைக்கப்பட்ட தம்பலேசுவரம் என்னும் சைவாலயத்தையும், தென்கரையிலுள்ள தெயவந் துறையிலே சந்திரசேகரன் கோயிலையும் , கதிர்காமமாகிய கதிரமலையிலே முருகவேளூக்கோர் ஆலயத்தையும் கட்டுவித்ததுமன்றி, மாந்தோட்டத்திற் சிதைந்திருந்த திருக்கேதீஸ்வரர் கோயிற் திருப்பணியையுந் திருத்தமுறச் செய்வித்தான். திருகேதீச்சரமும் சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரமும் விஜயனுக்கு முன்னுள்ள புராதன ஆலயங்கள். இராவண சம்மாரத்தின் பின் இராமபிரான் முன்னேஸ்வரத்திலிறங்கி அங்குறையும் பெருமானை வணங்கிச் சென்றாரெனச் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூல் கூறுகிறது.//

//ஆலயமூர்த்தியின் பெயர் முன்னைநாதர் என்றும், அம்பாளின் திருநாமம் வடிவழகாம்பிகை என்றும் அழகிய தமிழ்ப்பெயராகக் காணப்படுவது இதன் பழமைக்கு எடுத்துக்காட்டு. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அருள்வாக்கை வெளிப்படுத்தும் அற்புதக் கோயிலாக முன்னேஸ்வரம் காண்ப்படுகின்றது. ஆதியில் தமிழர்கள் பரந்து வாழ்ந்த பிரதேசமாகக் காணப்பட்டது. தற்காலத்தில் பல்வேறு இனத்தவர்களும் வாழும் நிலப்பரப்பாய் உள்ளது.//

//இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெள்த்தர்கள் இவ் ஆலயத்தில்வந்துவழிபடுகின்றனர். திருவிழாவின் போது இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தின் அடிப்படையில் எல்லா மதத்தினரயும் வரவேற்கும் மரபு, இக்கோயிலின் மரபாகும்.. உற்சவ காலங்களில் கோயிலுக்கெனக் கொடுக்கப்படும் பொருட்களைப் பொறுப்பேற்பது,பிரசாதங்களை
கட்டளைக்காரர்களுக்குக் கொடுப்பது போன்ற சிலபணிகளை எல்லா மதத்தவர்களும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். இப்படிப் பொறுப்பேற்றுககொள்ளும் சகல இனத்தவர்களுக்கும் மரியாதை செய்யப்படும்.இந்த நிகழ்ச்சி சமரச சன்மார்க்க உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகக் காணப்படுகிறது//


திருக்கோயில் அமைப்பு விவரம்:









கிழக்கு நோக்கிய கோயில். இராசகோபுரம் இல்லை.கோவிலுக்கு எதிரே திருக்குளம் உள்ளது. அங்கு பிள்ளையார் திருவுருவம் உள்ளது. கோயிலுக்கு வடக்கில் ஒரு வாசல் உள்ளது.

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. வலது புறம் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் சந்நிதிகள் உள்ளன.முன்னேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியும், வடிவாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளன. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,சோமாஸ்கந்தர், பைரவர், மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், நடராஜர் நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் உள்ளன. அறுபத்துமூவர் ஐம்பொன் சிலைகள் பளபளப்பாகவும்.அழகிய புதிய பலவண்ணப் பட்டாடை உடுத்தியும் உள்ளன.

சிறுத்தொண்டநாயனார் , தன்னுடைய தலையில் ஒரு தலையை( சீராளன்) தாங்கி நின்றுகொண்டிருக்கிறார்.

லிங்கோத்பவர் சந்நிதி சிறப்புடையது. போர்ச்சுக்கீசியர்கள் இக்கோயிலைத் தாக்கி அழித்தபோது தப்பிய உருவச்சிலை இது என்கிறார்கள்






கோயிலுக்கு வெளியே வடகிழக்கில் 4 தேர்கள் உள்ளன. தேர்கள் நிற்க உயரமான மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது.




தெற்குத் தேர்வீதி அருகில் அருச்சனைப் பழக்கடைகள் நிறைய உள்ளன. பல வகையான பழங்களைத் தட்டில் வைத்து தருகிறார்கள். நம்மூரில் வீட்டு விஷேடங்களில் வெற்றிலைத் தட்டில் பழங்கள் தேங்காய் வைப்பது போல்
தட்டில் பெரிய பெரிய வெற்றிலைகள் வைத்து (பாக்கு கிடையாது) நடுவில் எல்லாப்பழங்களையும் பாதியாகவோ அல்லது முழுதாகவோ நம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப வைத்துக் கொடுக்கிறார்கள். நம் ஊரில் தேங்காய் வெற்றிலைப் பாக்கு, பழம் வைத்து அர்ச்சனை செய்வோம். பாக்கு இல்லை என்றால் நல்லதல்ல என்பார்கள் அங்கு ஏன் பாக்கு வைப்பதில்லை எனத்தெரியவில்லை.


நாங்கள் சென்ற சமயம் உச்சிக்கால பூசைகள் நடந்துகொண்டிருந்தன. பூசை முடிந்ததும் வெற்றிலையில் விபூதி பிரசாதம் கொடுத்தார்கள்.

தொடர்பு முகவரி:
எஸ். வெங்கடகிருஷ்ண ஐயர், முன்னேஸ்வர தேவஸ்தானம், சிலாபம்
போன் 032-2223341, 0718371655

நடராஜர் மடம்

தெற்கு வீதியில் ஒரு நடராஜர் மடம் இருக்கிறது அதில் திருச்சியிலிருந்து அங்கு குடும்பத்துடன் இருக்கும் ஒரு அடியார் கவனித்து கொள்கிறார். அங்கு நடராஜர் படம் வைத்து வழிபடுகிறார்கள். நாங்கள் அங்கு சென்ற சமயம் அங்கு இருந்த குழந்தை பூஜை செய்தாள். நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்றெல்லாம் அன்பாய் வினவினார்கள்.




மதியவேளை உணவு, கோயில் குருக்கள், தான் நடத்தும் ஒட்டலில் ஏற்பாடு செய்து தந்தார். தெற்குத் தேர் வீதியில் உணவகம் இருந்தது. வாழை இலையில் உணவு படைத்தார். (மற்ற நாட்களில் மதிய உணவு சாப்பிட்ட ஓட்டல்களில் வாழை இலை இல்லை. எவர்சில்வர் தட்டில், மேலே பட்டர் பேப்பர் போட்டு சாப்பாடு வைக்கிறார்கள்.) அவர் சாப்பாடு தயார் செய்யும் வரை, கோவிலில் பணிபுரியும் ஒரு ஐயர் வீட்டில் தங்கி இளைப்பாறினோம்.. அவர் எங்களுடன் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்குத் தெரிந்தவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு வயது முதிர்ந்த அம்மா இருந்தார்கள். அவர் நன்கு பேசினார். வெகு காலமாய் அங்கு தான் இருப்பதாய் சொன்னார்கள். உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்கள் விஷேடம் என்றால் சென்னைக்கு வருவோம் என்றார்கள். அவர்கள் மருமகள் நன்கு உபசரித்தார்கள். செவ்இளனீர் வாங்கி வந்து கொடுத்தார்கள். விடை பெறும் போது வெற்றிலை பாக்கு பூ பழம் தட்சினை எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள் அடிக்கடி வாங்க என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்தது அடிக்கடி வரும் நிலையிலா ஊர் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு
புறப்பட்டோம்.

முன்னேஸ்வரத்தை ஒட்டியுள்ள பகுதிகள் பறவைகளின் சரணாலயங்களாகக் காணப்படுகின்றன






முன்னேஸ்வரத்தை அடுத்து மறுநாள் நாங்கள் சென்ற தலம் திருக்கேதீஸ்வரம்.அதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஊட்டிக்கு ஒரு சமயச் சுற்றுலா




கோடை விடுமுறைக்காலம் இது. விடுமுறையில் வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டில்கட்டி மேய்க்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கும் நேரம் .
விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு போகலாமா? அல்லது உறவினர்களை அழைத்துக் கொண்டு எங்காவது மகிழ்ச்சியாய் சென்று வரலாமா?- என்று வீட்டில் எல்லோரும் கலந்து ஆலோசிக்கும் நேரம்.அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றமாதிரி விடுமுறையை கழிக்க எங்கு போகலாம் என்று முடிவுசெய்து கொண்டு இருக்கும் காலம் இது. வெயிலுக்கு இதமாய் , கண்ணுக்கு குளிர்ச்சியாய் ,கருத்துக்கு மகிழ்ச்சியாய் செல்ல ஒரு இடம் மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி . மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெறும்.கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.




வாழ்க்கை ஒரே மாதிரி ஓடிக் கொண்டு இருந்தால் (வீடு,வேலை,படிப்பு) சிலநேரம் அலுப்பு தட்டிவிடும்.நம் மனச்சோர்வை அகற்றி, நம்மை மீண்டும் புத்துண்ர்வு மிக்கவர்களாய் மாற்ற உதவுவது சுற்றுலா.
எனக்கு சிறு வயதிலிருந்தே சுற்றுலாவில் மோகம் உண்டு. அப்பா எந்த ஊரில்வேலை பார்த்தாலும் அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போவதற்குள் அந்த ஊரின் சிறப்பான இடங்கள் என்னஎன்று தெரிந்து கொண்டு காட்டிவிடுவார்கள் எங்களுக்கு. நான் பள்ளியில் அழைத்து செல்லும் சுற்றுலாவிற்கு முதல் ஆளாய் பெயர் கொடுத்து விட்டு ,பிறகு வந்து வீட்டிலே சொல்வேன். கெஞ்சி, கொஞ்சி அனுமதி பெற்று விடுவேன்.

பள்ளியில் நான்காவது படிக்கும் போது என் முதல் சுற்றுலா ! பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறுக்கு அழைத்து சென்றார்கள். அதற்கு அம்மா தனியாக அனுப்ப முடியாது என்று பள்ளியில் அனுமதி பெற்று என்னோடு வந்தார்கள் . அப்போது தூத்துக்குடியில் இருந்தோம். காலை அழைத்துப் போய் மாலை வந்து விடுவோம்அதற்கே அம்மா வந்தார்கள். 5 ஆவதிலிருந்து நான் பள்ளியில் சுற்றுலா போவேன். அம்மா வரக் கூடாது என்றுசொன்னதாலும், என் தம்பி,தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டியதாலும் அவர்கள் வரவில்லை.

திருமணம் ஆன புதுதில் தனியாக எல்லோரும் ஊட்டி போவார்கள். நாங்கள் அப்படி போகவில்லை. என் கணவரின்இரு அண்ணன்களுடன் மலர்க் கண் காட்சிக்குப் போனோம். அடுத்த முறை மலர்க்கண்காட்சிக்கு மாமியார், மாமனார்,கணவரின் அண்ணன், அண்ணி, குழந்தைகள் என்று கூட்டமாய்ப் போனோம்.

மூன்றாவது தடவை, என் மகன் சிறுவனாய் இருந்தபோது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் போனோம்.அந்த சமயம் என் மகள் வரமுடியவில்லை. அவள் தனது பெரிய அப்பா வீட்டுக்குப் போய் இருந்தாள். என்னை ரயிலில் கூட்டிப் போகவில்லை என்று வெகு நாட்கள் வரை சொல்லிக் கொண்டு இருந்தாள். மகன் ’ ஆமாம் ! என்னையும் எனக்கு விவரம் தெரியாத வயதில் அழைத்து போய் விட்டு வந்தீர்கள்’ என்பான்.

சென்ற ஆண்டு நாங்கள் இருவர் மட்டும் போனபோது குழந்தைகளையே நினைத்துக் கொண்டுஇருந்தோம். சிறு வயதில் போனபோது தனிமை கிடைக்கவில்லை, இப்போது தனிமையை விரும்பவில்லை மனது. குழந்தைகள்,உறவினர் இல்லாமல் தனியாக போகிறோமே என்று புலம்பும் மனது இப்போது... இரண்டு நாட்கள் ஓட்டலில் தங்கி அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த காரில் மலைகளின் ராணி உதகையின் அழகை காணச் சென்றோம். தொட்டபெட்டா, தாவரயியல் பூங்கா, குன்னூர் சிம்ஸன் பார்க், டால்பின்நோஸ் போய் மலை அழகையும், நதி பாயும் அழகையும் பார்த்தோம். தோடர்கள் குடியிருப்பு பார்த்தோம்ஊட்டியில் குழந்தைகள் ரயிலில் ஏறி குதுகலித்தோம். படகு சவாரி போய் மகிழ்ந்தோம்.





















ஊட்டியில் hotel safire garden view என்ற விடுதியில் தங்கினோம். ஓட்டல் அருகில் ரயில் நிலையம் உள்ளது.

இயற்கை அன்னையின் வழிபாடு முதல் நாள் , மறு நாள் எங்கள் ஊட்டி பயணம் ஆலய வழிபாடு ஆனது. . தங்கியிருந்த ஓட்டலில் பஸ்ஸில் போகலாம்
பக்கத்தில் கோயில் இருக்கிறது என்றார்கள் . நடக்கும் தூரத்தில் பேருந்து நிலையம்.. நாங்கள் பார்த்த கோயில்கள்:

அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் திருக்கோயில்
(vissalakshi viswanathar temple,ooty)









இக்கோயில் ,ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள ”காந்தல் “(காந்தள்?) என்ற ஊரில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. சிவபெருமான் ,அம்மன், பாலதண்டபாணி, நடராசர் முதலிய சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் மன்னன் ’என்ற சினிமாவினால் புகழ் பெற்றது என்றார்கள். ரஜினிகாந்த் பண்டரிபாயை தூக்கிக் கொண்டு படியில் இறங்கிக் கொண்டே பாடுவாரே ’அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ’ என்று ,அந்தக் காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டதாம்.

நாங்கள் போனபோது ஒரு கல்யாணம் நடந்து கொண்டு இருந்தது. கல்யாணங்கள் அங்கு செய்கிறார்கள்.கோவை பேரூர் இளைய சன்னிதானம் திருமிகு மருதாசல அடிகளாரின் பொறுப்பில் உள்ளதாய் சொன்னார்கள். இதைத் தட்சிணாமூர்த்திமடம் என்றும் சொல்கிறார்கள். இங்கு அன்னதானங்கள் நடை பெறுமாம்.
நவகிரகங்களுக்கு அழகாய் ஒன்பது பெரிய விளக்கு வைத்து இருந்தார்கள்.பக்கத்தில் சின்ன பாட்டில்களில் எண்ணெய் வைத்து இருந்தார்கள். அதை காசை போட்டு விட்டு நாமே எடுத்துக்கொள்ளலாம். எடுத்து அந்த விளக்குகளில் ஊற்றி வழிபடுகிறார்கள். கோயிலின் பின்புறம் மலைக் காட்சி அழகாய் இருக்கிறது. முன் காலத்தில் குறிஞ்சி நிலத்தில் காந்தள் மலர்கள் பூக்கும் என்று சொல்வார்கள் காந்தள் என்ற சொல்லே காந்தல் என்று மாறி இருக்கலாம். இக்கோயிலின் அருகில் ஒரு சர்ச் உள்ளது.

மாரியம்மன் கோயில்
(mariamman koil,ooty)




அடுத்து ஆட்டோக்காரரிடம் என்ன கோயில் இருக்கு பார்க்க என்று கேட்டால் மாரி அம்மன் கோயில் இருக்கிறது என்றார்,மான்குன்றம் என்னும் முருகன் கோயிலும் உள்ளது என்றார். சரி என்று அவரது ஆட்டோவில் முதலில் மாரி அம்மன் கோயில்போனோம். உதகை நகர் உள்ளேயே உள்ளது குதிரைப் பந்தய மைதானத்திற்கு அருகில் உள்ளது. மிகவும் வரசித்தியாய் உள்ள கோயிலாம்.பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் மிகவும் அழகாய் அலங்கரிக்கப் பட்டு இருந்தார்.


மான் குன்றம்(elk hill)
















அடுத்து நாங்கள் போனது எல்க்கில்(elc hill) மான் குன்றம். உதகையிலிருந்து 2 கி.மீ தூரத்தில் ஊரின் கடைசியில் மலைமீதுள்ள சிறு கோவில். ஆட்டோ மேலே செல்கிறது. பாதை செங்குத்தாய் இருக்கிறது.போகிறவழியில் ராகவேந்திரா மடம் இருக்கிறது. மலை மீது உள்ள கோயிலுக்கு போக பாதை வளைந்து வளைந்து போகிறது.
குறுக்கே நடந்து செல்ல, படிகளும் உள்ளன. மேலே மலைப்பாறைகளுக்கு இடையே கோயில் அமைந்துள்ளது. அருள்மிகுபாலதண்டபாணி சந்நதி அங்கு உள்ளது. நாங்கள் போனபோது சஷ்டி. சென்னையிலிருந்து ஒரு குடும்பம் அபிஷேகம் செய்ய வந்து இருந்தார்கள். திரை போட்டு இருந்தது . பின் காத்திருந்து அபிஷேகம் அலங்காரம் எல்லாம் பார்த்தோம். குருக்கள் சந்தனகாப்பு செய்து இருந்தார். முருகன் மிக அழகாய் இருந்தார்.

சுற்றுபுறம் அழகாய் அமைதியாய் இருக்கிறது.. கோவிலுக்கு ஒருஅழகிய சிறிய தேர் உள்ளது. சுவரில் சஷ்டிகவசம் எழுதி இருந்தார்கள். காத்து இருக்கும் நேரத்தில் அதைப் பார்த்துபடித்தோம்.1972 ல் இக்கோயில் விரிவாக்கத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டதாக அங்குள்ள அறநிலையத்துறைக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது அடுத்த தடவை குழந்தைகளை அழைத்து வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தோம்.

பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் சென்று குதுகலித்தது ஒரு காலம் , தாய் தந்தையுடன் போனது ஒருகாலம் , கணவர் உறவினர்களுடன் சென்றது
ஒருகாலம், எங்கள் குழந்தைகளுடன் சென்றது ஒருகாலம் இப்போது நாங்கள் மட்டும் சென்றது என்ற காலம்.ஒவ்வொரு சமயத்திலும் வித்தியாசமான உணர்வுகள் ,அனுபவங்கள். . இப்படிப் பலரது பல வகையான உணர்ச்சிக் கலவைகளுக்குச் சாட்சியாய் இருக்கிறது உதகை.பேரன்கள், பேத்தியுடன் எல்லோரும் சேர்ந்து மறுபடியும்போக வேண்டும் என்று பேசிக் கொண்டு வந்தோம்.மூணாறுக்கு ஒருதடவை இப்படி எல்லோரும் சேர்ந்து போனோம்.

குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் அவர்களுக்கு தின்பண்டங்கள் குளிர்பானங்கள் எல்லாம் வாங்கி கொடுத்து விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விடாமல் ஒருபை எடுத்துப்போய் அவற்றை சேகரித்து குப்பைத் தொட்டியில் போடும் நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். நம்மைப் பார்த்து நம் குழந்தைகளும் அதை கடைப் பிடிப்பார்கள். சுற்றுப் புறம் சுத்தமாய் இருந்தால் இயற்கையை ரசிக்கலாம். கோயில்களும் ,இயற்கையும் நம் வருங்கால சந்ததிகளுக்கு உரிய சொத்து. அதை சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்,கொழும்பு

ஐந்து நிலைக்கோபுரம்



உள் மண்டபத்தில் விழாக்கோலம்


பஞ்சமூர்த்திகள் உலா


சோமாஸ்கந்தர்,முருகன்,வள்ளி,தெய்வானை


தீச்சட்டி எடுத்து வரல்


வடக்கு வெளிப்பிரகாரம்




திருவருள் துணையுடன் நாங்கள் சென்னையிலிருந்து 10.03.2011 அன்று இரவு விமானம் மூலம் கொழும்பு சென்றோம்.

நாங்கள் இலங்கை சென்ற உடன் முதலில் போன கோயில் பொன்னம்பலேஸ்வரர் கோயில் ஆகும். கோயிலில் 1960களில் மார்கழி மாத திருவெம்பாவை உற்சவத்தின்போது பூசை நிகழ்ச்சிகளையும் அந்த கோயில் ஓதுவார் பாடுவதையும் இலங்கை வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்வார்கள் என்று என் கணவர் சொன்னார்கள். அதேபோல் சிவராத்திரியின் போது நான்கு கால பூசைகளையும் நேரடி ஒலிபரப்பு செய்வார்களாம்.

கோவில் அழகாக படு சுத்தமாக இருந்தது. தூணில் உள்ள ரிஷபாரூடருக்குக்கூட வெள்ளி கிரீடம் சூட்டி இருந்தார்கள். உமைக்கு வெள்ளிகிரிடம், ரிஷபத்தின் கொம்புக்கு வெள்ளிப் பூண். என்று அழகூட்டி இருந்தார்கள். பொன்னம்பலவாணேஸ்வரர், சிவகாமி அம்மன், நடராசர், விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் உள்ளன. பைரவர் இத்திருக்கோயிலில் மனைவியுடன் எழுந்தருளியிருக்கிறார்.

நாங்கள் சென்றிருந்த சமயம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்ற திருவிழா நடந்து கொண்டிருந்தது. பஞ்சமூர்த்திகள், கோயில் வெளிப் பிரகாரத்தில் உலா வந்து கொண்டு இருந்தார்கள். ஓதுவார்கள் திருமுறைகள் பாடிக்கொண்டு இருந்தார்கள். அடியார்களின் கூட்டம் நிறைந்திருந்தது. பஞ்சமூர்த்திகளின் பின்புறம் உருள்வலம் வந்தார் ஒரு பக்தர். அக்னிக் கொப்பரை ஏந்தி வந்த பெண்கள் பஞ்சமூர்த்திகளை வலம் வந்தார்கள். கோயிலுக்குள் மூர்த்திகள் போன பின் பலவிதமான தூப,தீபங்கள் காட்டப்பட்டன. கோவில் முழுவதும் அலங்கார தொம்பைகள் கட்டப்பட்டு இருந்தன. எல்லா இறைவன் திரு உருவங்களுக்கும் வெள்ளி கவசம் சாற்றி இருந்தார்கள்.குட்டியாய் சின்ன மண்டபத்தில் பஞ்சலிங்கங்கள் இருந்தன.அதற்கு பட்டுகள் சாற்றி அலங்கரித்து இருந்தனர்.

மேற்கு நுழைவாயில் உபயோகத்தில் உள்ளது, கிழக்கு நுழைவாயில் உபயோகத்தில் இல்லை. மேற்கு நுழைவாயில் அருகில் பசுமடம் உள்ளது.கிழக்கு வாயிலருகில் உயரமான தேர் மண்டபம் உள்ளது. கோவில், கருங்கல்லால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைக் கோபுரம்.

அழகிய நந்தி மணடபம், கொடிமரம் எல்லாம் உள்ளன .

அடுத்து நாங்கள் சென்றது,முன்னேஸ்வரம் கோயில்.
விவரம் அடுத்த பதிவில்.






வெள்ளி, 1 ஏப்ரல், 2011

கதிர்காமம்














நாங்கள் 09.03 2011 முதல் 15.03.2011 வரை இலங்கைக்கு கயிலை புகழ் ’மனோகர் டிராவல்ஸ்’ மூலம் இலங்கைக்கு ஆன்மிகப்பயணம் மேற்கொண்டோம். பாடல் பெற்ற ஸ்தலங்களாகிய திருக்கேதீச்சுரம், திருகோணமலை ஆகிய கோயில்களுக்கும், அருணகிரிநாதரால் பாடப்பட்ட கதிர்காமத்திற்கும் சென்று வந்தோம்.

முருக பக்தர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கதிர்காமம் சென்றுவர விரும்புவார்கள். சிறு வயதில் முருகன் பக்திப் பாடல்களில்

’ கதிர்காம வேலவனே, வேலையா!,
கதிர்காம வேலவனே, கந்தையா!
வேலனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! ’

என்று பாடுவதுண்டு. அப்படிப் புகழ்பெற்ற கதிர்காமத்தை என் கணவரும் நானும் தரிசித்து வந்தோம். மட்டில்லாத மகிழ்ச்சி அடைந்தோம். அங்கு திரையத்தான் தரிசிக்கமுடியும் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். நம் மனதில் வீற்றிருக்கும் இறைவன் பிறர் கண்ணுக்கு எப்படி தெரியவில்லையோ அது போல் திரை என்பது மறைத்திருந்தாலும் நம் அகக் கண்ணல் முருகனை அங்கு காணலாம். அந்தத்திரையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயிலில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காணலாம்.

இலங்கைத் தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது கதிர்காமம். கொழும்புவிலிருந்து 284 கி.மீ தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. ஹம்பந்தோட்டா,பதுளை ஆகிய ஊர்களில் இருந்து இவ்வூருக்குச் செல்லலாம். இத்தலத்தைச் சிங்களத்தில் ’கதரகம’ என்று கூறுகிறார்கள். இது மாணிக்கக் கங்கை என்னும் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. அங்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடிப் பின் கோயிலுக்கு வருகிறார்கள்.

இக்கோயில் கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதாம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசனால் இது கட்டப்பட்டதாம்.. பூசை, பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டு இக்கோயிலுக்கென 550 பணியாளர்களை நியமித்தானாம். ஆரத்திமாதர்கள் 18 பேரும்
இத்னுள் அடங்குவர். சனிக்கிழமைகளில் ஆரத்தி மாதர்கள் போதிமரத்துக்கு வாச நன்னீரைக் கொண்டுவருவார்களாம்.

பத்து அடி உயரமான மதில்களில் யானைகள், மயில்கள் ஆகியவற்றின் உருவங்கள் வரிசையாக இருக்கின்றன. கோயிலைச் சுற்றி வர ’வட்டாரம்’ எனப்படும் சிறு பிரகாரம் உள்ளது. பக்தர்கள் இதனுள் செல்ல அனுமதிக்கப் படுவது இல்லை. ஆரத்திமாதர் மட்டுமே செல்லலாம். இக்கோயிலின் வாசலில் பரண் போல் ஒரு பந்தல் உள்ளது. அதன்மேல் காய்ந்த இலைகள் இருந்தன. ஆண்டுக்கொரு தடவை யானை பசுமையான இலை, கொம்புகளைக் கொடுக்க ,அதனை வாங்கிப் பந்தல் போடுவார்களாம். இதற்குப் ’பசுமைப்பந்தல்’ என்று பெயராம்.

கோயிலின் மேற்கூரை செப்புத்தகடுகளால் ஆனது. வாயிற்கதவுகள் பித்தளையால் செய்யப்பட்டு வேலைப்பாடுகளுடன் அரண்மனைக் கதவு போல் உள்ளன. அதனுள் நுழைய சந்திரவட்டக்கற்களால் ஆகிய இரண்டு படிகள் உள்ளன. உள்ளே மரவேலைப்பாடு கொண்ட அழகிய தூண்கள் உள்ளன. வெண்கல மணிகள் பல இரண்டு பக்கமும் உள்ளன. மேற்பகுதிகளில் திரைகள் உள்ளன. தாமரைப்பூவேலைப்பாட்டோடு அவை காணப்படுகின்றன. வெண்கலத்தால் ஆன பெரிய சேவல் விளக்குகள் இரண்டு புறமும் நிற்கின்றன. முருகனைப் பற்றிய புராணக் காட்சிகள் படங்களாகச் சுற்றிலும் காணப்படுகின்றன. ஒரு மேடையின் மீது சந்நிதியுள்ளது. பூசைசெய்யும் குருமார்கள் ஏறுவதற்குச் சில படிகள் உள்ளன. மேலே உள்ளது லதாமண்டபம் எனப்படும். .ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும் யானைத் தந்தங்கள் அங்குள்ளன .மேடையில் ஒரு பள்ளம் உள்ளது. அதில் பாதம் நனைத்த பின்னர் அவர்கள் பூசை செய்யத் திரைக்குள் போகிறார்கள். திரைக்குள் என்ன இருக்கிறது என்பது ரகசியமாகவே உள்ளது. விழாக்காலங்களில் யானைமீது முருகன்
உலாவரும் போது கூட அலங்கரிக்கப்பட்டு, துணியால் மூடப்பட்டே இருப்பதால் முருகனின் உருவத்தை யாராலும் பார்க்க முடியாதாம். முருகனுக்கு நைவேத்தியம் துணியால் மூடப்பட்டுக் காவடிபோல் குருமார்களால் தோளில் கொண்டுவரப்படுகிறது. பக்தர்கள் இறைவனுக்குப் பலவிதமான பழ்ங்கள், சிவப்பு செயற்கை மாலை, சிவப்புத்துணி இவற்றைத் தட்டில் வைத்துப் பட்டுத்துணியால் மூடிப் பயபக்தியுடன் கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து மீண்டும் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள். மூடிய திரைக்குள் பூசை நடைபெறுகிறது. அந்த நேரத்தில் மணிகள் ஒலிக்கப்படுகின்றன.

பூசை முடிந்ததும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விபூதி, தீர்த்தம் வழங்கப்பட்டன. தேங்காயில் சூடம் ஏற்றி அவருக்குக் காட்டிவிட்டு தங்கள் தலையையும் சுற்றித் தேங்காயை உடைக்கிறார்கள். அங்கிருக்கும் ஒரு பெரிய அரச்மரம், ஒரு சிறிய அரச மரம் (போதி மரங்கள்) ஆகியவற்றையும் வணங்குகிறார்கள். இங்குள்ள போதிமரம் சங்கமித்திரை கொண்டுவந்த கிளையிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது. புத்தர் கோயிலும் அங்கு உள்ளது. பெளத்தர்களுக்குரிய 16 முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாம்.

கோயிலுக்கு அருகில் பைரவர் சந்நிதி, தேவானை சந்நிதி, ஆகியவை திரைகளுடன் உள்ளன. பைரவர் சந்நிதிக்கு எதிரில் சிறிய விஷ்ணு உருவம் உள்ள சந்நிதி உள்ளது. அது திறந்து உள்ளது. திரை இல்லை.

தண்டபாணிக்குச் சந்நிதி உள்ளது. இத்னைப் பழனிக்கோயில் என்கின்றனர். இங்கு திரைக்கு முதலில் பூசை நடை பெறுகிறது. திரையில் தண்டபாணிக் கடவுளின் ஓவியம் உள்ளது. பின்னர் திரையைத் திறந்த பின்னர் உள்ளே உள்ள பிள்ளையார்க்குரிய கற்சிலையும், முருகனுக்கு பஞ்சலோகத்தில் ஆன சிலையும் உள்ளன. அங்கு தண்டபாணிக்கு எதிரில் வேல் பீடம் உள்ளது. 1936-ல் மலையாள, தமிழ் மக்களால் கார்த்திகை தீபத்திற்கென திருவிளக்கு ஒன்று செய்து வைக்கப்பட்டுள்ளது.
குருக்கள் தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு முதுகில் ஒரு பட்டுத் துண்டைத் தொங்க விட்டுக்கொண்டு பூசை செய்கிறார். தூப தீபங்கள் காட்டுகிறார். பூசை நேரத்தில் சந்நிதியின் இரண்டு புறமும் இருக்கும் மணிவரிசைகளைப் பக்தர்கள் ஒலிக்கச் செய்கிறார்கள். வலது பக்கத்தில் ஒரு சிறிய சிவலிங்கமுள்ள சந்நிதி உள்ளது. அதற்கும் பூசை நடைபெறுகிறது. பூசை முடிந்ததும் சுண்டல் பிரசாதமாக வழ்ங்கப்பட்டது.

கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்தி ஒயிலான தோற்றத்தில் இருக்கிறாள் வள்ளி. அருகில் ஒரு அம்மன்கோயிலும் ஒரு மசூதியும் உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் புத்தரிசிப் பொங்கல் நிகழ்வு நடைபெறுமாம். மாணிக்கக் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து அடுப்புகளைக் கட்டிப் புதுப்பானைகளில் பொங்கலிடுவார்களாம். வள்ளியம்மை தேவாலயத்திலும் இது நடைபெறுமாம். ஆண்கள் தான் பொங்கலை இடுவார்களாம்.

விழாக்காலங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்களாம். கரகாட்டம், மயிலாட்டம், தீப்பந்த ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம், தீமிதி, தீச்சட்டி ஏந்தல், உருள்வலம் ஆகியனவும் நடைபெறுமாம்.

கதிர்காமத்திற்குச் சற்று வடக்கில் செல்லக்கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. இதனை முன்னர் ’வள்ளித்தீவு ’என்று அழைத்தார்களாம். இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர். இங்கு மாணிக்கக் கங்கையாற்றின் கரையில் மாணிக்கவிநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள காட்டில்தான் முருகனுக்கு உதவியாக விநாயகர் யானைவடிவில் வந்து வள்ளியைத் துரத்தியதாகவும் பின்னர் இங்கு தான் வள்ளி திருமணம் நடந்ததாகவும்
கூறுகிறார்கள். இந்த காட்சிகள் எல்லாம் மனத்திரையில் விரிகிறது. இயற்கை அள்ளி தந்த வளங்கள் எல்லாம் நிறைந்த இடம். //குறிஞ்சியிலே பூமலர்ந்து குலுங்குதடி-தேன் இருக்குது தினை இருக்குது ,// என்ற பாடல் நினைவுக்கு வரும். வள்ளி பரண்மேலிருந்து ஆலோலம்பாடி கிளிகளை ஓட்டிய காட்சி கண்ணில் நிறைகிறது.

நீர் வளம் நிலவளம் எல்லாம் நிறைந்த இடம். அன்று மழை பெய்து சிவப்பு கலராய் வெள்ள பெருக்காய் தண்ணீர் ஓடி வந்துகொண்டு இருந்தது. திருக் கோயிலில் பஞ்சமுக விநாயகர் உற்சவர் சிலையும் உள்ளது. ஐந்து தலை நாக உருவம் சிமெண்டினால் செய்யப்பட்டுள்ளது. கார் வாங்க வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறிய பின் காரின் நம்பர் பிளேட் ஒன்றை இங்குள்ள ஒரு மரத்தின் மீது அடித்து வைக்கின்றனர். இப்படி அடிக்கப்பட்டுள்ள பல நம்பர் பிளேட்டுக்களை அங்கு காணலாம். அருகில் ஒரு புத்தர் கோயிலும் உள்ளது.

இக்கோயிலுக்கருகில் வள்ளி விளையாடிய குகை ஒன்று உள்ளது. வள்ளியின் சிலை ஒன்று இதனுள் உள்ளது. ஒரு துவாரத்தின் வாயிலாக இதனைப் பார்க்கலாம். வள்ளி இங்கு தயிர் கடைந்ததாகக் கூறுகிறார்கள். ஒரு பாறையின் மீது வள்ளியின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன.

கதிர்காமத்திற்கு அருகில் 4 கி.மீ தூரத்தில் கதிரைமலை உள்ளது.படிகள் மேலேறிச் சென்றால் முருகனுக்கு சந்நிதி உள்ளதாம்.அங்கு வேலாயுதம் இருக்கிறதாம்.முருகனால் ஸ்தாபிக்கப்பட்டதாம்.இந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்செல்லவில்லை இரவு நேரம் ஆனதால் அழைத்து
செல்லவில்லையோ என்னவோ தெரியவில்லை.

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
//கதிரை மலைகாணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாக் கண் என்ன கண்ணே//
என்று பாடியுள்ளார்



அருணகிரிநாதர் கதிர்காம முருகனைத் தம் திருப்புகழில் 13 பாடல்களில் பாடியுள்ளார்.அவற்றுள் ஒன்று:

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறைவாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையிலாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப் பெருமாளே.

திருக்கோணமாமலை வைத்தியர் திரு.சி.ஆறுமுகம் பிள்ளைஅவர்கள் கதிர்காம முருகன் மீது,கதிரைமலைப் பதிகம்,கதிர்காமமாலை ஆகியநூலகளை இயற்றியுள்ளார்கள்.1904ல் இவை வெளிவந்துள்ளன.

கதிரைமலைப்பதிகத்தில் ஒரு பாடல்:

அற்புதஞ் செய்கின்ற ஆறுமுகவேலவனே யடியனேன்
மீதிலன்பாய் அமரர் தன் இடர்தனை யகற்றியது
போலவே யைய வென்னிடர்களெல்லாம்
பொற்புடன் கரிமீது வந்தே தொலைத்து நற்
புனிதனாக்கிட வேண்டியே போற்றினேன்
பாதமலர் புண்ணியாசமயம் புறங்காட்டி யகலாமலே
சிற்சபையில் மாதர்கள் சிறந்த வாலாத்திகள்
சீராயெடுத்து நிற்கச் சிறியனேன் தீவினைகள்
சீக்கிர மகற்றிடச் சித்ர வடிவேலேந்தியே
கற்பகன் பூசைகள் கருத்தாய் நடத்திடக்
கதிரமலைதன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள் புரிவையே

கதிர்காமம் சென்று வந்தது எங்களுக்கு மிகுந்த மனமகிழ்வைத்
தந்தது.

-------------------