வெள்ளி, 27 ஜூலை, 2012

குயில் பாட்டு கேளுங்கள்

வசந்தகாலம் வந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. சகலஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சி. மரங்கள், செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கும்.   பறவைகள் கானம் பாடும்.  விடுமுறைக்கு  எங்கள் ( கோவையில் )  வீட்டுக்கு போய் இருந்த போது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும்  தூங்கு மூஞ்சி மரத்தில் குயில் கீதம் பாடியது.  அத்தை நீ  ஊருக்கு வரும் போது மழை பெய்யும், குயில் பாடும் எப்போதும் என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். பாலக்காட்டு கணவாயிலிருந்து மழை  பெய்யும் சீஸன். ஆனால் இந்த முறை மழை எதிர்பார்த்த மாதிரி இல்லை. சிறுவாணி தண்ணீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை  விட்டார்கள். குயில் எல்லா காலத்திலும் பாடினாலும் வசந்த காலத்தில் அதன் பாடல் நன்றாக இருக்கும். நிறைய குயில்கள் வரும்.

என் கணவரிடம்  வீடியோ எடுங்களேன் என்று கேட்டேன் அவர்கள் எடுத்து தந்தார்கள் அதற்கு தான் எவ்வளவு கஷ்டம் நாம் எடுக்கும் போது பாடாது, வீட்டிற்குள் வந்தவுடன் பாடும், முகம் காட்டாது முதுகை காட்டிக்கொண்டு  இருக்கும். நிறைய பொறுமை தேவைப்பட்டது.

நீங்களும் கேட்டு மகிழுங்களேன்.திங்கள், 16 ஜூலை, 2012

குண்டுக் காக்கா கதை

குண்டு காக்காய் பட உதவி ராமலக்ஷ்மி. ராமலக்ஷ்மிக்கு நன்றி.

 நான் குண்டு காக்கா கதையை சொல்வதாய் போன பதிவில் சொல்லியிருந்தேன். அதை இப்போது பதிவிடுகிறேன். இது குழந்தைகள் கதை. அவர்கள்  எந்த கேள்வியும் கேட்காமல் சந்தோஷமாய் கேட்டு மகிழ்ந்தார்கள்.
                  குண்டுக் காக்கா கதை
 ஒரு ஊரில ஒரு மாமாவும், மாமியும் இருந்தார்களாம். மாமா அரண்மனையில் வேலை பார்த்துக்கிட்டிருந்தார் .  அரண்மனைக்குள்ளேயே அவர் குடியிருக்கிறதுக்கு ஒரு வீடு கொடுத்திருந்தாங்க. மாமாவும் மாமியும் அந்த வீட்டிலே நல்லா வாழ்ந்திட்டிருந்தாங்க.

 அந்த மாமிக்கு கொத்தவரங்கா வத்தல்னா ரொம்ப
பிடிக்குமாம். அதனாலே அப்பப்ப கொத்தவரங்கா வாங்கி மொட்டமாடி நெறய காயப்போடுவாங்களாம்.


இப்படி இருக்கும்போது ஒருநாள் அதே மாதிரி, கொத்தவரங்கா
வாங்கி வேகவைத்து  காயப்போட்டிருந்தாங்களாம். நல்லாக்காயட்டும்னு மாடியிலே நாலுநாள் எடுக்காமலே போட்டுட்டாங்களாம்.

தினமும் காலையிலே மாடிக்குப் போய்ப்பார்த்தா கொஞ்சம்
கொஞ்சமா கொத்தவரங்கா கொறஞ்சிக்கிட்டே வந்துச்சாம்.
எப்படி காணாமப் போச்சுன்னு யோசிச்சாங்களாம். யாரோ ராத்ரியிலே வந்து வத்தலைத் திருடீட்டுப் போறாங்க. அதைக் கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணாங்க.

அன்னைக்கு ராத்ரி அந்த மாமா ஒரு பெரிய கருப்புக் கம்பளியை எடுத்துப் போர்த்திக்கிட்டு, கையிலே ஒரு கம்பை எடுத்துக்கிட்டு மாடிக்குப் போய் ஒளிஞ்சுக்கிட்டாராம், யாராவது திருடன் வந்தா ஒரே அடி!   அடிக்க.

நடு ராத்ரீலே மொட்டைமாடீலே ஒரு பெரிய காக்கா வந்து
உக்காந்துதாம். சாதாரணமா இருக்கிறதைவிட நாலஞ்சு மடங்கு பெரிசாம். இவர் அதை அடிக்கப்போற சமயத்திலே,அந்தக்காக்கா
நில்லுங்க  நில்லுங்க என்னை அடிக்காதீங்கன்னுச்சாம். ஏன் எங்க வத்தலைத் திருடறேன்னாராம். என்னோட மனைவிக்கு கொத்தவரங்கா வத்தல்னா உயிரு. அதனாலே எடுத்துட்டுப் போனேன். என்னை அடிச்சிடாதீங்க உங்களுக்கு நான் நிறைய உதவிகள் செய்றேன்னுச்சாம்.

நீ ஒரு காக்கா. நீ எனக்கு என்ன உதவி செய்யப்போறே?ன்னு மாமா கேட்டார். ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வாங்க தெரியும்னு காக்கா சொல்லிச்சாம். வீடா?அது எங்கிருக்குன்னார் மாமா.. பக்கத்துலே ஒரு மலை தெரியுது பாருங்க. அதோட அடிவாரத்துலே என் வீடு இருக்கு. அங்க வந்து குண்டுக்காக்கா வீடு எதுன்னு யாரக்கேட்டாலும் சொல்வாங்க. இப்படிச் சொல்லிட்டுப் பறந்து போயிடுச்சு. இவருக்கு ஆச்சரியமா இருந்துச்சு. மாமியிடம் எல்லாத்தையும் சொன்னார்.

ஒருவாரம் ஆச்சு. மாமாவிடம்  மாமி சொன்னாங்க -அந்தக் குண்டுக்காக்கா எதோ உதவி செய்றேன்னுச்சே.அதைப் போய்ப்பார்த்துட்டு வாங்களேன்னு.. மாமாவும்  புறப்பட்டுப் போனார்.

ரொம்பதூரம் போனவுடன் மலை அடிவாரம் வந்தது. அங்கே .பெரிய பெரிய மரமா இருந்துச்சு. குண்டுக்காக்கா வீடு எங்கேன்னு ஒருத்தரக் கேட்டதும் அவர் ஒருமரத்தைக் காட்டினார். அந்த இடத்துக்கு மாமா போனார். மரப்பலகைகளாலே கட்டப்பட்ட ஒரு பெரிய வீடு மரத்து மேலே இருந்துச்சு. மேலே ஏற மரப்படிகள் இருந்துச்சு. அது மேலே ஏறிப் போனார்.  


(குண்டு காக்காவின் மரவீடுகற்பனை இப்படித்தான் இருக்குமென்று படம் அனுப்பிய முத்துலெட்சுமிக்கு நன்றி)

குண்டுக்காக்கா குண்டுக்காக்கான்னு கூப்பிட்டார். வீட்டுக்குள்ளே இருந்து காக்கா வெளியே வந்துச்சு. வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு. குண்டுக்காக்கா அவரைத் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்திச்சு. மனைவிக் காக்காவும் சந்தோஷப்பட்டுச்சு. சாப்பிடறதுக்குப் பலகாரங்கள் எல்லாம் கொடுத்துச்சு.

குண்டுக்காக்காவிடம், சரி எனக்கு ஏதாவது உதவி பண்ணுன்னு கேட்டாராம். அது ஒரு ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்துச்சாம். ஆட்டை வச்சு நான் என்ன செய்றதுன்னு கேட்டார். அது சொல்லிச்சு: இது சாதாரண ஆடில்ல. இது கிட்ட தங்கம் கொடுன்னு கேட்டா வாயைத் திறக்கும். வாயிலிருந்து  தங்கக் கட்டிகளாய் விழும். போதும்னு சொன்னா வாயை மூடிக்கும்னு சொல்லிச்சு. மாமாவுக்கு ரொம்ப சந்தோஷம். நன்றி சொல்லிட்டு ஆட்டை ஓட்டிக்கிட்டு வேகமா வீட்டுக்கு வந்தார்.
 மாமி ஆட்டைப் பார்த்ததும் இது எதுக்குன்னாங்க. குண்டுக்காக்கா கொடுத்த மந்திர ஆடு இது. இது சாதாரண ஆடில்ல. இது கிட்ட தங்கம் கொடுன்னு கேட்டா வாயைத் திறக்கும். வாயிலிருந்து  தங்கக் கட்டிகளாய் விழும். போதும்னு சொன்னா வாயை மூடிக்கும்னு மாமா சொன்னார். மாமிக்கு  சந்தோஷம். நம்ம கஷ்டம் எல்லாம் போயிடுச்சு. இனிமே நமக்கு எந்தக் கவலையும் இல்லேன்னாங்க.

அந்த ஆட்டுக்கிட்டே போய் தங்கம் கொடுன்னு மாமா கேட்டார்.. அது வாயைத் திறந்துச்சு. வாயிலே இருந்து தங்கக்கட்டியாய் விழுந்துச்சாம். அவங்க தங்கம் கேட்டதையும், தங்கம் விழுந்ததையும் அரண்மனை மதில் மேலிருந்த ஒரு காவல்வீரன் பார்த்துட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டான். அவன் ராஜாவிடம் போய் தான் பார்த்த எல்லாத்தையும் சொன்னானாம். ராஜாவுக்குப் பொறாமை. அந்த ஆடு ராஜாவிடம்தான் இருக்கணும்னு சொல்லி அதை வாங்கித் தனக்கே வச்சுக்கிட்டாராம். மாமாவும், மாமியும்  வருத்தப்பட்டாங்க.

மறுபடியும் குண்டுக்காக்கா கிட்டே உதவி கேட்கணும்ன்னு முடிவு
பண்ணினாங்க. மாமா மறுபடி குண்டுக்காக்கா வீட்டுக்குப் புறப்பட்டார். ரொம்ப தூரம் நடந்து அந்த மரவீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார் .
குண்டுக்காக்கா குண்டுக்காக்கான்னு கூப்பிட்டார். வீட்டுக்குள்ளே
இருந்து காக்கா வெளியே வந்துச்சு. வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு.குண்டுக்காக்கா மனைவிக்காக்காவும் வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு. சாப்பிடறதுக்குப் பலகாரங்கள் எல்லாம் கொடுத்துச்சு.

என்ன இவ்வளவு தூரம்னு குண்டுக்காக்கா கேட்டுச்சு. ராஜா ஆட்டப் பிடுங்கிக்கிட்டார்னு சொல்லி வருந்தப்பட்டார் மாமா. அப்படியா சேதி? நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு வேற ஒண்ணு தர்ரேன்ன்னு சொல்லி வீட்டுக்குள்ளே போய் ஒரு இரும்புப்பெட்டிய கொண்டு வந்து மாமாவிடம் கொடுத்துச்சாம். இரும்புப் பெட்டிய வச்சு நான் என்ன செய்றது? எனக்கு எதுக்கு இது?ன்னாராம்.

அதுக்கு அந்தக் குண்டுக்காக்கா இது சாதாரணப் பெட்டியில்ல. இதுல நமக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் கிடைக்கும். வடை,பாயசம் ,சாப்பாடு கொடுன்னு இதுகிட்டே கேட்டா,எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சாப்பாடு தரும். இதை வச்சுக்கிட்டு சந்தோஷமா வேணுங்கிற நேரம் சாப்பிட்டுக்கிட்டிருங்கன்னு சொல்லி மந்திரபெட்டியக் கொடுத்துச்சாம். மாமாவும் அதைச் சந்தோஷமா வாங்கிட்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாராம்.

மாமா இரும்புப் பெட்டியை மாமிக்குக் காட்டினார்.  இந்தப் பெட்டி நமக்கெதுக்கு? இத வச்சு நாம என்ன செய்றது?ன்னு கேட்டாங்க .அதுக்கு மாமா  இது சாதாரணப் பெட்டியில்ல. இதுல நமக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் கிடைக்கும். வடை,பாயசம் ,சாப்பாடு கொடுன்னு இதுகிட்டே கேட்டா,எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சாப்பாடு தரும். இத வச்சுக்கிட்டுக் கவலையில்லாம சாப்பிடலாம் என்றார். மாமிக்கு ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருந்துச்சாம்.
அந்தப்பெட்டிகிட்டே வடை,பாயசம் சாப்பாடு கொடுன்னு கேட்டு
வேளாவேளக்குச் சாப்பிட்டாங்களாம்.

மாமா  ஒரு நாள் நினச்சாராம்ராஜா தான் பொறாமையோட நடந்துக்கிட்டாரு..நாம பெருந்தன்மையா நடந்துக்கணும்னு நினச்சாராம். அதனாலே அவர் ஒரு நாள் ராஜாகிட்டே போய், ராஜாவே  நீங்களும் மந்திரிகளும் எல்லாப் படைவீரர்களும் என் வீட்டிற்கு நாளைக்கு  விருந்துக்கு  வந்து  சாப்பிடணும்னு கேட்டுக்கிட்டார் . ராஜாவுக்கு ஆச்சரியம். எப்படி எல்லாருக்கும் இவனாலே சாப்பாடு போடமுடியும்னு நினச்சாரு. இருந்தாலும் சாப்பிடவர்ரோம்னு ஒத்துக்கிட்டாரு.

மறுநாள் ராஜாவும் மந்திரிகளும், ஆயிரம் வீரர்களும் சாப்பிட மாமா வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. எல்லாரும் உக்காருங்க சாப்பாடு கொண்டுவர்ரேன்னு சொல்லிட்டு உள்ளே போனார்.
அப்போது மன்னர் மந்திரியை அழைத்து சாப்பாடு இவ்வளவு பேருக்கு எப்படி செய்கிறான் போய் பார்த்துவா என்று அனுப்பினார். அவர் போய் சமையல் அறையை பார்த்து வந்தார், சமையல் அறையில் சமைக்க எந்த ஏற்பாடும் இல்லை,  அடுப்புக்குள் பூனை தூங்கிக் கொண்டு இருந்தது.

மந்திரி வந்து  மன்னரிடம் சொன்னார். சரி நீ ஒளிந்திருந்து என்ன நடக்குது என்று பார்த்து சொல் என்றார் மன்னன் மாமா மந்திர பெட்டிகிட்டே போய், இங்கு இருக்கிற அத்தன பேருக்கும் அப்பளம்,  வடை,பாயசம்,சாப்பாடு கொடுன்னாராம். அண்டா, அண்டாவாக விருந்து சாப்பாடு  வந்ததாம்.. எல்லாருக்கும் சாப்பாடு வந்துச்சாம். இதை மந்திரி ராஜாவிடம் சொல்ல ராஜாவுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அதே நேரத்திலே பொறாமையும் ஏற்பட்டுச்சு. இத்தன பேருக்குச் சாப்பாடு போடற பெட்டி இவனுக்கு எதுக்கு? இது என்னிடத்தில் தான் இருக்கணும்னு சொல்லி அந்தப் பெட்டிய மாமாகிட்டேருந்து பிடுங்கிகிட்டாராம். ராஜாவுக்கு எதிரா மாமாவாலே என்ன செய்ய முடியும்?மாமா மாமிக்கு வருத்தம். இதுக்கு ஒரு முடிவே கிடையாதான்னு நினச்சாங்க.

ஒரு வாரமாச்சு. மாமாவிடம் மாமி கேட்டார்கள். மறுபடியும் நாம ஏன் குண்டுக்காக்காவிடம்  உதவி கேட்கக்கூடாது? என்று   உடனே மாமா ஒத்துக்கிட்டார்.


மறுநாள் மறுபடி மாமா குண்டுக்காக்கா வீட்டுக்குப் புறப்பட்டார். ரொம்ப தூரம் நடந்து அந்த மரவீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.
குண்டுக்காக்கா குண்டுக்காக்கான்னு கூப்பிட்டார். வீட்டுக்குள்ளே
இருந்து காக்கா வெளியே வந்துச்சு. வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு.   மனைவிக் காக்காவும் வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு.

 சாப்பிடறதுக்குப் பலகாரங்கள் எல்லாம் கொடுத்துச்சு. என்ன இவ்வளவு தூரம்னு குண்டுக்காக்கா கேட்டுச்சு. ராஜா இரும்புப் பெட்டிய பிடுங்கிக்கிட்டாருன்னு சொல்லி அழுதார். குண்டுக்காக்காவும் வருத்தப்பட்டது. ரொம்ப யோசிச்சது. வீட்டுக்குள்ளே போய் இன்னோரு இரும்புப்பெட்டியக் கொண்டுவந்து கொடுத்துச்சு. மறுபடி அந்தப்பெட்டியா? வேண்டாம்னாராம். அதுக்கு அந்தக் குண்டுக் காக்கா இது அந்த மாதிரி பெட்டியில்லே. இது வேறன்னு சொல்லிச்சாம். அப்படியா? இந்தப் பெட்டியிலே அப்படி என்ன விசேஷம்?னு கேட்டார்.

குண்டுக்காக்கா சொல்லிச்சு: - இந்தப் பெட்டியிலே ஒரே ஒரு பிரம்பு மட்டும் இருக்கு. இந்தப் பெட்டிகிட்டேபோய்  தப்பு செய்கிற எல்லாரையும் அடின்னு சொன்னா ஒரே நேரத்திலே எதிரிகள் எல்லாரையும் விளாசு விளாசுன்னு விளாசிரும். விடவே விடாது. நிறுத்துன்னு நீங்க சொன்னாதான் நிறுத்தும். இந்தப் பெட்டிய எடுத்துட்டுப் போய் ராஜாவுக்கு ஒரு பாடம் புகட்டுங்கன்னு சொல்லிச்சாம். மாமா நன்றி சொல்லிட்டு அந்தப் பெட்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவிகிட்டே அந்தப் பெட்டியின் விவரமெல்லம் சொன்னார்.

மறுநாள் மாமா ராஜாகிட்டே போய், ராஜாவே  நீங்களும் மந்திரிகளும் எல்லாப் படைவீரர்களும் என் வீட்டிற்கு நாளைக்கு வந்து வடை பாயசத்தோடு சாப்பிடணும்னு கேட்டுக்கிட்டார். மறுபடி இன்னொரு பெட்டிய வச்சு சாப்பாடு போடப்போறான் போலிருக்கு. போன தடவை மாதிரி போய் சாப்பிட்டிட்டு பெட்டியப் பிடுங்கிக்கிட்டு வந்துட வேண்டியதுதான்னு ராஜா திட்டம் போட்டாரு. சாப்பிடவர்ரோம்னு ஒத்துக்கிட்டாரு.  நல்ல ருசியான உணவு கிடைக்கப் போகுது என்று மகிழ்ச்சியாக.


மறுநாள் ராஜாவும் மந்திரிகளும்,ஆயிரம் வீரர்களும் சாப்பிட மாமா வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. எல்லாரும் உக்காருங்க சாப்பாடு கொண்டுவர்ரேன்ன்னு சொல்லி உள்ளே போனார். இரும்புப் பெட்டிய எடுத்துட்டு வெளியே வந்தான். பெட்டிய எடுத்து எல்லார் முன்னாலேயும் வைத்தான்.பெட்டிக்கு பின்னாலிருந்துக்கிட்டு பெட்டியத் திறந்தான்.முன்னாலெ இருக்கிற அத்தனபேரையும் அடின்னான். 

அவ்வளவுதான். உள்ளே இருந்த பிரம்பு வெளியே வந்து எல்லாரையும் அடி அடின்னு அடிச்சுக்கிட்டே இருந்துச்சாம். எல்லாரும் ஐயோ ஐயோ காப்பாத்துங்கன்னு அலறிக்கிட்டே அங்கெயும் இங்கெயும் ஓடினாங்களாம். பிரம்பு எல்லாரையும் விளாசு விளாசுன்னு விளாசுச்சாம். ராஜாவுக்கும் நல்லா அடி விழுந்துச்சாம். ராஜா மன்னிப்புக்கேட்டுக்கிட்டாராம். அதுக்கப்புறம் தான் மாமா நிறுத்துன்னார்.  பிரம்பு அடிக்கிறதை நிறுத்திட்டு பெட்டிக்குள்ளே போயிடுச்சாம்.

அப்பறம் என்ன? ராஜா மாமாவிடம் வாங்கின ஆடு, பெட்டி எல்லாத்தையும் திருப்பிக்கொடுத்தாராம். மாமாவோட  சமாதானமாய்ப் போயிட்டாராம். ஒரு தொந்தரவும் தரலையாம்.
மாமா குண்டுக்காக்கா வீட்டுக்குப் போய் நன்றி சொல்லிட்டு வந்தாராம். ஆடு,பெட்டி இதயெல்லாம் வச்சுக்கிட்டு மாமாவும் ,மாமியும்  கஷ்டப்படுபவர்களுக்கு உதவி  ரொம்ப காலம் நன்றாக வாழ்ந்தார்களாம். 
                    ----------------
                                                      வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

மெளனம்- பகுதி 2

மெளனம் இருப்பது என்று முடிவு எடுத்த போது எந்த 
கிழமையில் ஆரம்பிக்கலாம் என்று  முதலில் யோசித்தேன்.  ஏனென்றால் மெளன விரதம் என்றால் பொதுவாக எல்லோரும் வியாழக்கிழமைதான் 
இருப்பார்கள். நான் சனிக்கிழமை என்று முடிவு செய்தேன், 
ஏனென்றால் என் கணவர், குழந்தைகள் வீட்டில் 
இருப்பார்கள். அப்போது நான் மெளனம் இருப்பது வசதியாக இருக்கும் என்று. (யாராவது வந்தால் நான் மெளனம் என சொல்லி விடுவார்களே)
மெளனம் விரதம் எடுக்க நினைத்த அன்றே எனக்கு 
சோதனை வந்து விட்டது. முதல் நாளே நாளை 
எழுந்தவுடன் மெளனவிரதம் என்று சொல்லிவிட்டேன்.

காலையிலும் வெற்றிகரமாய் ஆரம்பித்து விட்டேன். 
மாலை 7 மணி வரை வெற்றிகரமாய் போன மெளனவிரதத்திற்கு சோதனை வந்தது.அன்று மாலை என் மகனுக்கு நல்ல காய்ச்சல் அவனை  தொட்டுப்பார்த்த நான் பதறிப் போய்  என் கணவரிடம், " டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.  சீக்கீரம் கிளம்புங்கள் ”என்று பேசி விட்டேன். அவனை டாக்டரிடம் கூட்டிச் சென்று வந்தபின் என் மெளனம் தொடர்ந்தது.
மறுநாள் , ஞாயிறு காலை பேசினேன்.


அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு, சொந்த பந்தங்களுக்கு தெரிந்ததும்,”  இது மிகவும் கஷ்டமே! 24 மணி நேரம் இருக்க முடியுமா! ”என்று கேள்வி 
எழுப்பினார்கள். எனக்கு சிறுவயதிலிருந்தே ஒரு பழக்கம் உண்டு, என்னை எல்லோரும் கொண்டாடிக்கொண்டு இருக்க வேண்டும், ஏதாவது என்னைத் திட்டினால் அல்லது மனம் புண்படும்படி பேசினால் அவ்வளவுதான்! நாள் முழுக்க பேச மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன். “சாப்பாட்டில் என்ன கோபம் ? வா,வந்து சாப்பிடு” என்று  என் அம்மா ,அப்பா கெஞ்சி, சாப்பிட வைக்க வேண்டும். மெளனம் அதனாலும் எனக்குக் கைவரப்பட்டது.


எங்கள் ஊரில் ஐப்பசி முழுக்குத் திருவிழா நடக்கும். அப்போது கடை போடுவார்கள். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சனிக்கிழமைதான் முழுக்குக் கடைக்குப் போவோம். ”ஞாயிறு கூட்டம் அதிகம் 
இருக்கும். சனிக்கிழமை போவோம்” என்பார் என் கணவர்.  போனால் கடையில் பொருள் வாங்கும் போது சாமானை எடுத்து ”இதை வாங்கிக் கொள்ளவா” என்று குழந்தைகள் கேட்கும் போது சைகையில் ”இது வேண்டாம் வேறு எடு” என்று அவர்களிடம் பேசுவதைப் பார்க்கும் 
கடைக்காரர்,”அய்யோ பாவம்! வாய் பேசமுடியாது போல!” என நினைத்து என்னிடம் சைகையில் பேசுவார் அல்லது வாய் பேசமுடியாதவர்களுக்குக்  காது கேட்காது என்று நினைத்து சத்தமாய்ப் பேசுவார். ஒவ்வொரு கடைகாரர் 
ஒவ்வொரு மாதிரி. என் பெண்ணுக்குக் கோபமாய் வரும்.” 
என் அம்மாவுக்கு காது கேட்கும் , அவர்கள் மெளனவிரதம் மெதுவாய் பேசுங்கள்” என்பாள்.

வீட்டுக்குக் காய் கொண்டு வருபவர், பழக்கார அம்மா,  பால்காரர் எல்லாம் முதலில் பயந்து , பிறகு புரிந்து  கொண்டார்கள். ”சனிக்கிழமையா! அம்மா 
பேசமாட்டார்கள்.” என்று சொல்லிக்கொண்டு ’ஜீன்ஸ்’ 
படத்தில் வருவது போல் சத்தமாய் பேசுவார்கள் .

காலங்கள் ஓடின 
என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரம் வந்தது.
இருவீட்டுக்கும் உறவினராக இருந்தவர்கள்,  மாப்பிள்ளை 
ஏதோ திருமணத்திற்கு வந்தவர் இரண்டு நாள்  விடுமுறையில் வந்து இருக்கிறார் என்றும் சனிக்கிழமை இரவு வண்டியில் டெல்லி போய்விடுவார் என்றும் கூறினார்கள்.அதனால் சனிக்கிழமையே  மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொல்லிவிட்டேன்  வாருங்கள் என்றார்கள். கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு பஸ்ஸில் போனோம். என் பக்கத்தில் அமிர்தானந்தமயி இயக்கத்தில் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார்கள். அவர்கள் கையில் அமிர்தானந்தமயி  படத்துடன் கூடிய புத்தகம் வைத்து இருந்தார்கள். 
நமக்குத்தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகமே என்று அதைச் சைகையால் கேட்டேன். அவர்கள், என்னைப்  பரிதாபமாக பார்த்துவிட்டுக் கொடுத்தார்கள். அம்மாவை பார்க்க வரச்சொல்லி அவர்களின் புகழைப்  பேசிக்கொண்டு வந்தார்கள். நான் பஸ்  இடையில் நின்ற போது, ”மெளனவிரதம். இன்று பேச 
முடியாது”  என்றவுடன் அவர்கள் வாழ்த்திப் போனார்கள்.

 மாப்பிள்ளை வீட்டிலும் எங்கள் உறவினர் முதலிலேயே சொல்லிவிட்டார்கள். இன்று பெண்ணின் அம்மா மெளனவிரதம் என்று. அப்படியும் மாப்பிள்ளையின் அம்மா என்னிடம் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டார்கள்  
பேப்பரில் எழுதி காட்டினேன்.

அவர்கள் ஜாதகம் பார்க்கும் போது ’லக்ஷ்மி வருவாள்’ என்று சொல்லி 
இருந்தார்களாம், அவர்களுக்கு  பெண்ணின் பெயர்  கயல்விழி முத்துலெட்சுமி என்று சொன்னவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் அப்புறம் தான் வந்து 
பெண்ணைப் பார்த்தார்கள். மாப்பிள்ளை ஊருக்கு அவசரமாய் போகவேண்டியதால் முதலில் மாப்பிள்ளை பார்த்தல்,பிறகு பெண் பார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இறைவன் அருளால் திருமணம் சிறப்பாய் நடைபெற்றது.

திங்கள் கிழமை திருமணம்.   சனிக்கிழமை வந்த  உறவினர்கள் எல்லாம் என்ன இவள் இன்றும் மெளனத்தை விடமாட்டேன் என்கிறாளே என்று பேசினார்கள்.


எங்கள் வீட்டுக்கு போன் கனெக்‌ஷன் வந்தபின், யாரும் 
இல்லாதபோது போன் வந்தால், தெரிந்தவர்கள் என்றால், 
போனை எடுத்து இரண்டு தட்டு தட்டுவேன். அவர்கள்
புரிந்துகொண்டு  விஷயத்தைச் சொல்வார்கள்.

கார்டுலெஸ் போன் வாங்கித்தந்தான் மகன் . யாரும் 
இல்லாத நேரம் போன் வந்தால் கீழ் வீட்டில் போனைக் 
கொடுப்பேன் அவர்கள் ,” இன்று அவர்கள் மெளனம். 
நாளை பேசுங்கள்” ,அல்லது ”அவர்கள் கேட்டுக்கொண்டு  
இருக்கிறார்கள் விஷயத்தை சொல்லுங்கள் ”என்பார்கள். மாமியார் அவர்கள் சனிக்கிழமை காலை எப்படி மறக்காமல் பேசாமல் இருக்கிறாள் என்று பாராட்டுவார்கள். மாமாவும் ஊருக்கு போனால்,” நாளை சனிக்கிழமை, கோமு பேசமாட்டாள்” என்று நினைவாய்ச் சொல்வார்கள். 

டில்லியிலிருந்து மகள் ஒரு நாள்  சனிக்கிழமை எனக்கு போன் செய்தாள். அவளுக்கு அவசரம் தனக்கு கிடைத்த பேற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆசையால் சனிக்கிழமை அம்மா பேசமாட்டார்கள் என்பதை மறந்து விட்டு எங்களைஅழைத்துவிட்டாள். அவளது அப்பாவும் 
பக்கத்து வீட்டுப் பெண்ணும்  என் மகளிடம் பேசி  அவளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு,” அக்கா பேசுங்கள், பேசுங்கள். அவள்  மகிழ்ச்சி அடைவாள் அல்லவா?” என்றார்கள்.


அவள் தாயாகப் போகிறாள் என்ற செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனக்கு மகிழ்ச்சியில் அழுகை வந்து விட்டது. அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க மெளனத்தைக் கலைத்து பேசினேன், பின் மெளனம் தொடர்ந்தேன்.


என் மகளுக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு திருநாவுக்கரசு நாயனாரின் அம்மாவின் பெயராகிய மாதினியார் என்பதைச் சுருக்கி மாதினி என்று  
வைத்தோம் .அவள்  வளர வளர  அவளுக்குக் கதை கேட்கும் ஆர்வம் 
அதிகமானது. நான் ஊருக்கு போனால்   கதைகள் சொல்வேன்.   ,”சனிக்கிழமை ஆச்சி ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள்?” என்று கேட்பாள்.
இரவு என்னிடம் கதை கேட்கவே வந்து படுப்பாள். அவள் கதை கேட்பதே வெகு அழகாய் இருக்கும். கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்துக்  வைத்துக் கொண்டு கேட்பாள்.  கதையின் போக்குக்கு 
ஏற்ற மாதிரி முகபாவங்களை  மாற்றுவாள்.  கதைகேட்பவர்கள் ஆர்வமாய் இருந்தால் தானே சொல்பவர்களுக்கு உற்சாகம் .அந்த உற்சாகத்தை அவள் தருவாள். 


நான் அவளுக்கு பஞ்சதந்திரக்கதைகள், தெனாலிராமன் 
கதை,  அக்பர் பீர்பால் கதைகள். கண்ணன் கதைகள், அப்பர்,  சம்பந்தர், கண்ணப்பர், குண்டுகாக்காய் கதை, குரங்கும் , இரண்டு பூனைகள் கதை (அப்பத்தை பங்கு போட குரங்கை பூனைகள் கூப்பிட்ட கதை)  ஊசி மூஞ்சி மூடா கதைகள், (குருவியும் ,குரங்கும் ) குரங்கும், முதலையும் வரும் நாவல் மரக் கதை, கஜேந்திர மோட்சகதை,  நரியும், கொக்கும்  பாயாசம் 
சாப்பிட்ட கதை, எறும்பு, புறா, வேடன் கதை, புறாக்கள்  ஒற்றுமையாய் வேடன் விரித்த வலையில் தப்பிய கதை, சிங்கத்திற்கு எலி உதவிய கதை, நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் கதை , என்று தினம் சொல்லி வந்தேன்.

 ”பூந்தளிர்”பத்திரிகையில் வரும் சுப்பாண்டி கதை மிகவும் பிடிக்கும் அவளுக்கு.  பஞ்சதந்திர கதையில் ”புத்திமான் பலவான்” கதைகள் சொல்லும் போது நான் கொடுக்கும் விலங்குகளின் குரல் மிகவும் பிடிக்கும் அவளுக்கு.
கடைசியில் சிங்கமும், நரியும் ஒன்றை ஒன்று  இழுத்துக்கொண்டு ஒடும் என்று கூறும்போது விழுந்து  விழுந்து சிரிப்பாள். கண்ணப்பநாயனார் கதையைக்கூறும்போது,அவர் நல்ல குண்டாய் ”திண்’ என்று 
இருந்ததால் ’திண்ணன் ’என்று சொல்வதை  கேட்டுவிட்டு 
அடுத்ததடவை சொல்லும் போது தின் என்று சைகை 
செய்து சிரித்து திண்ணன் என்று சொல்லுவாள்.

 குண்டு காக்காய் கதையில் வரும் மாமா , மாமி பேச்சை
 நான் சொல்வதை விட அவள் அதை கேட்டு சொல்வது 
அழகாய் இருக்கும். 

 சில சமயங்களில் பாட்டு கேட்பாள். ’தோட்டத்தில் மேயுது 
வெள்ளை பசு,’ ”ஒன்று யாவருக்கும் தலை ஒன்று’   
”பாட்டியின் வீட்டுப் பழம்பானை ’  ’தோ தோ நாய் குட்டி 
துள்ளி வா நாய் குட்டி’ ., ’சின்ன அணிலே மரத்திலே 
என்ன வேலை செய்கிறாய்” போன்ற பாடல்கள் சொல்லிக் 
கொடுத்தால் உடனே பாடுவாள்.  சின்ன சின்ன சாமி 
பாடல்கள் சொல்லிக்  கொடுத்து இருக்கிறேன்.


கதை கேட்பது இப்போதும் அவளுக்கு மிக மிகப்
பிடித்த விஷயம். இப்போதும் காரில்  மதுரைக்கு  போகும் 
போது கதை சொல்லுங்கள் என்றாள். காரைக்கால் 
அம்மையார் கதை, (காரைக்காலில் மாம்பழதிருவிழா  நடை பெறும் அல்லவா! அதற்கு காரணகர்த்தா  காரைக்கால் அம்மையார் தானே!)குண்டு காக்கா கதை மறுபடியும் கேட்டுக்கொண்டாள். இப்போது  பெரிய பெரிய  தடிமனான புத்தகங்களில் ஆங்கில கதைகளை 
அவளே படிக்கிறாள்.

மெளனம் எங்கோ போகிறதே என நினைக்கிறீர்களா? 
எங்கும் போகவில்லை - வருகிறது.   இன்று சனிக்கிழமை,’ஆச்சி மெளனத்தில்  பேசமுடியாது நீ இன்று ஆச்சிக்கு கதை சொல்.  நாளை ஆச்சி  உனக்கு 
கதை சொல்வார்களாம் ’என்று என் மகள் சொன்னால்  கொஞ்சநேரம் அவள் கதை சொல்லுவாள் .அப்புறம்  அழுவாள். அவள் அழுகை பொறுக்க முடியாமல் அவளுக்காக இரவு  கதை சொல்லிவிட்டு அவள் தூங்கிய 
பின் என் மெளனத்தைத் தொடர்வேன். இப்படி  அவளுக்காக மெளனம் விடப் பட்டது தெரிந்து  மற்றவர்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்,  வாரத்தில் 
ஒரு நாள் மெளனம். அது எப்போது இருந்தால் என்ன 
இன்று பேசு நாளை வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

பேத்திக்கு சொன்ன கதைகள் பல .சில கதைகள் நமக்கு 
பாடமாய் படம் பார்த்து கதை சொல் என்று பாடத்தில் 
வந்தவையாயிருக்கும். , பல கதைகள் எல்லோருக்கும் 
தெரிந்து இருக்கும் .ஒரு கதையை தவிர  அது ’குண்டு 
காக்காய்’ கதை. அது என் கணவர் எட்டாவது படிக்கும் 
போது  நண்பர் சொன்ன கதையாம். திருமணம் ஆன 
புதிதில் என் தம்பி, தங்கைகள் உறவினர் குழந்தைகளுக்கு 
இந்த கதையை என் கணவர்  தானே ரசித்து ரசித்து 
சொல்லிக்கொண்டு இருப்பார்கள் குழந்தைகளும் மிகவும் 
ரசித்து கேட்பார்கள். 

அந்தக் கதை  உங்களில் யாருக்காவது தெரியுமா? 
சொல்லுங்கள் பார்ப்போம்.

மகனுக்கு பெண் பார்க்க போனோம்.அப்போது திங்கள் கிழமைகளில் மெளனம் இருந்தேன்.  வெள்ளிக்கிழமை பெண்ணை ஒருமுறை பார்த்து பேசி விட்டேன் மகளுக்காக  மறுமுறை போகும் போது மெளனம் . 
மகனுக்கு திருமணம் ஆனவுடன் அவன் ஊருக்கு போனால் அம்மா விடுமுறைக்கு இங்கு வந்து விட்டு பேசவில்லை என்றால் எப்படி பேசுங்கள் என்பான்.  அவன் ஆபீஸில் பணிபுரியும் குஜராத்தி பெண்ணிடம் என் அம்மா மெளனவிரதம் இருப்பார்கள் என்றானாம் , அதற்கு அவர்கள் நான் எல்லா விரதமும் இருந்து இருக்கிறேன் மெளன விரதம் இருந்தது இல்லை அது எப்படி இருக்க வேண்டும் அம்மாவிடம் கேட்டு சொல் என்றார்களாம்.

என்  தோழிகள் என்னைப் பார்த்து திங்கள் கிழமை, வியாழக்கிழமை என்று  மெளனம் இருந்து விட்டு காலை முதல் மாலை வரைதான் இருக்க முடிகிறது. மாலை பிள்ளைகள் பள்ளி விட்டு வந்தால் அவர்களை சமாளிக்க முடியவில்லை என  சொன்னார்கள்.

கார் வாங்கிய பின்பு காரில் என் கணவர் சைடை பார், 
பின்னாலே பார் என்று சொல்லும் போது சைகையால் 
எப்படி சொல்ல முடியும்?  இது ஒரு அவஸ்தை.

இன்னும் ஏன் மெளனம் எல்லா கடமைகளையும் முடித்து
விட்டீர்கள் என்று ஒரு பக்கம், ஒரு பக்கத்தில் பிள்ளைகள் 
வீட்டில் இல்லாமல் பேச ஆள் இல்லாமல் கஷ்டப்படும் 
கணவர். பிள்ளைகள் இருந்த போது அவர்களிடம் பேசிக் 
கொண்டே இருப்பார்கள். நம்மை கவனிக்க மாட்டார்கள்.

 கணவர் ஓய்வு பெற்ற பின்னும் வேறு கல்லூரியில் வேலை பார்க்கிறார்கள். இப்போது நாளில் பாதிநேரம் மெளனம் தான். தனியாக மெளனம் எதற்கு என்று மெளனத்தை பூர்த்திசெய்து விட்டேன்.  இப்போது சிலர் கேட்பது உங்களுக்கு எவ்வளவு எனர்ஜி, சேவாச்சு, இப்படி விட்டுவிட்டீர்களே என்பதுதான். இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி என்ன செய்வது! 

வாய் பேசாமல் இருப்பது மெளனம் இல்லை, மனமும் பேசாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்

 ”மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தல் அடங்கும் என்கிறார். மகரிஷி . ”

மெளனமாய் சில நிமிடங்கள்  கண்மூடி  மூச்சை கவனித்தாலே போதும்  என்கிறார்கள் ஞானிகள்.

காசு செலவு இல்லாமல், மூச்சை கவனித்து(உள் இழுத்து, 
வெளிவிடுவது) வந்தாலே போதும். 
மெளனத்தில் நம் ஆற்றல் சேமிக்க படுகிறது.   மாதம் ஒருதடவை மெளனம் இருக்கலாம். நம்மிடம் உள்ள வேண்டாத சிந்தனைகளை  களையலாம். 
நீ பேசாமல்  இருக்கும் போது இறைவன் உன்னிடம் பேசுகிறான் என்கிறார்கள். மெளனம் சிறந்தது தான்.முடிந்தவரை கடைபிடிக்கலாம்.


வாழ்க வளமுடன்.
வெள்ளி, 6 ஜூலை, 2012

மெளனம்


                                                     

நலம் விசாரித்தல்:

”நலமாக இருக்கிறீர்களா?  செளக்கியமா? எப்படி

இருக்கிறீர்கள்?  சுகம் தானே! ”இப்படி எல்லாம் கேட்பது

ஒரு மரபு .


ஊரில் தான் இருக்கிறீர்களா? எங்கே ஆளயே காணோம்

பெண் வீட்டுக்கா, மகன் வீட்டுக்கா? கோயில் குளமா?,

அல்லது அத்தை மாமாவைப் பார்க்க போனீர்களா?

ஊரிலேயே இருப்பு இல்லையே என்பது தான்

ஊர்க்காரர்கள் கேட்கும்  கேள்வி.

கோவில் கும்பாபிஷேகம், உங்களை பார்க்கவில்லையே!

ஊரில் இல்லையா?  பிரதோஷத்தில் பார்க்கவில்லையே!

என்று விசாரிப்புக்கு பதில் சொல்லிக் கொண்டே

வரவேண்டும். என் மகள் சொல்வாள் ”உன் கூட வந்தால்

தேர் நகர்வது போல் தான் வரவேண்டும்.

விசாரிப்புக்களுக்கு நின்று நிதானமாய் பதில் சொல்லி

வருவாய், பின் நீ நலம் விசாரிப்பாய் ”என்பாள்.

இப்போது சொந்தம், பந்தம், ஊர்க்காரர்கள், மட்டும்

இல்லாமல் பதிவுலக அன்பர்களும்  கேட்கிறார்கள்.

எங்கே உங்களை வெகு நாட்களாய் காணோம்? பதிவுகள்

வரவில்லையே என்று அக்கறையாகக் கேட்கும் போது

அளவில்லா ஆனந்தம்  ஏற்படுகிறது.


நான் இந்த பதிவுலகம் வந்தது 2009 ஜூன் 1ஆம் தேதி .

ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி எழுதி வருகிறேன். எழுத

ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பதிவு

என் 100 ஆவது பதிவு. என் பதிவுகளை வாசித்துத் துணை

நிற்கும் நட்புகளுக்கு நன்றி.


இன்று நான் எழுத எடுத்துக் கொண்ட தலைப்பு:-

’மெளனம்’.
நான் 15 வருடங்கள்  விடாமல் வாராவாரம் சனிக்கிழமை

மெளனம் இருந்தேன்., ஞாயிறு காலைதான் பேசுவேன்.

மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தது, (மாப்பிள்ளை

டெல்லியிலிருந்து விடுமுறையில் வந்து இருப்பதால்

சனிக்கிழமை பார்க்க முடிவு செய்யப்பட்டது) மகனுக்கு

பெண் பார்க்க போனபோது எல்லாம் மெளனத்தில் தான்.


என் சித்தி ஒருவர் வியாழக்கிழமை மெளனம்

இருப்பார்கள். அதை சிறுவயதில் பார்த்ததால் ஆசை வந்து

விட்டது எனக்கும். என் சித்தியின் கண்ணும், கையும்

பேசும். பார்க்கவே நன்றாக இருக்கும்.
நான் மெளனம் இருந்த போது பெற்ற அனுபவங்கள், என்

மெளனத்தால் என் வீட்டார் பெற்ற அனுபவங்கள்,

அவஸ்தைகள் எல்லாம் சொல்கிறேன், அடுத்த பதிவில்.
நீங்களும் மவுனமாய் அதுவரை காத்து இருங்கள்.

மெளனத்தைபற்றிப் பெரியவர்கள், ஞானிகள் என்ன

சொல்கிறார்கள் ?

”எல்லா நேரங்களிலும் பேசிக் கொண்டே இருக்காமல்,

மெளனமாக இருக்கும் பண்பை வளர்த்துக்

கொள்ளவேண்டும். மெளனத்தை விட பெரிய ஆயுதம்

எதுவும் இல்லை ”-- அன்னை.

”தண்டிப்பவர்கள்பால் நான் செங்கோல்;

வெற்றிவேண்டுபவரிடத்து நான் நீதி;
ரகசியங்களுள் நான் மெளனம்;
ஞானிகளுடைய ஞானமும் நானே.”
‘ஸ்ரீமத் பகவத்கீதையில்  --- ஸ்ரீ கிருஷ்ணன்.

”ஓசை யொடுங்குமிடம் ஓங்காரத் துள்ளொளிகாண்
பேசாதிருக்கும் பிரமமிது என்றாண்டி.”---- பட்டினத்தார்.

                    சிவ மோனம்
”பொங்கிநின்ற மோனமும்
பொதிந்துநின்ற மோனமுந்
தங்கிநின்ற மோனமுந் தயங்கிநின்ற மோனமுங்
திங்களான மோனமுஞ் சிவனிருந்த மோனமே.”              

                  --சிவவாக்கியர்

”சும்மா இரு சொல்லற ” ,
”பேசா அநுபூதி பிறந்ததுவே.”---அருணகிரிநாதர்

                   சும்மா இரு
                         ---------------------
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே.

சும்மா இருக்கச் சுகம்சுகம்
 என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங்
  கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மெளனி மொழியையுந்
  தம்பியென் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன்
   அந்தோ! என் விதிவசமே.
------தாயுமானவர்
தாயுமானவரை  சின்னஞ்சிறு வயதிலேயே

ஆட்கொண்டவர் ஒரு முனிவர் .அவர் பேசுவது மிகக்

குறைவு. இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல்

அவருடைய வாயினின்று சொற்கள் வெளியே வரமாட்டா.

ஆதலால் அவரை மெளனகுரு எனக்கருதி  தாயுமானவர்

அவருக்கு சிஷ்யர் ஆகி தன் ஐயங்களை அகற்றிக்  கொண்டார். 
 அவருக்கு குரு உபதேதித்தது “சும்மா இரு” என்பது

தான்.இந்த உபதேச மொழிதான் தாயுமானவரின்

பாடல்கள் பலவற்றிலும் பீஜமந்திரமாய் அமைந்து

இருக்கிறது.


ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும்

அல்லது ஆண்டு தோறும் இருப்பிலுள்ள பொருள்களை

கணக்கெடுப்பது போல் எல்லோருமே மாதத்திற்கு ஒரு

நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக்

கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளனநோன்பு

அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

மெளனநோன்பு இருவகைஉண்டு.  1. ஒரு செயலைச்

செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு

சங்கற்பம் செய்து கொண்டு  அவ் வேலை முடியும்

வரையில் பேசமால் இருப்பது. இது மனதையும்

உடலாற்றலையும் சிதறாமல்காத்து, தான் விரும்பும்

செயலை வெற்றியோடு முடிக்கத் துணை செய்யும்.

2. ஆன்ம தூய்மைக்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி

வைத்துக் கொண்டு , குடும்பம், பொருளாதாரம், வாணிபம்,

இவைகளிலிருந்து விலகி கொண்டு மெளனமாக இருந்து

அகத்தாய்வு செய்து கொள்ளுதல்.
----------வேதாத்திரி மகரிஷி.


சஷ்டி விரதம் இருப்பவர்கள் உண்ணாநோன்புடன்

மெளனநோன்பு இருப்பார்கள்.
இயற்கை வைத்தியத்தில் மெளன சிகிட்சை என்று ஒன்று

உண்டு.  மெளன கட்டளைக்கு  மதிப்பு அதிகம், மகான்கள்

சித்தர்கள் கட்டளையிட்டே நோய்களை விரட்டி உள்ளனர்.


எல்லா மதங்களை சேர்ந்தவர்களும்  மெளனத்தை கடைபிடிக்கிறார்கள்.