மண்டபத்தில் அனந்தசயனத்திலும் அமர்ந்தும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் ஊர் மக்கள்.
கோவில் வாசலில் இருந்து அழகான நடைபாதை
தினமலர் படம் - மூலவர் சீனிவாசபெருமாளும்,
உற்சவர் சீனிவாசபெருமாளும்
அலர்மேலுவள்ளி தாயார்
ஆண்டாள்
பஞ்சமுக ஆஞ்சநேயர்
பெருமாள்
தும்பிக்கை ஆழ்வார்
துளசிமாடம்
பெருமாள் விமானம்
கோவிலின் பின்புறம்
கோவில் பிரகாரம்
இரண்டு மாதங்களுக்கு முன் அழகர்கோவில் போய் இருந்தோம், சித்திரைத் திருவிழா முடிந்து, அழகர் திருவிழாவும் முடிந்து, அழகர் அழகர் கோவில் திரும்பியதும் நடக்கும் திருவிழாவைக் கண்டு வந்தோம். அன்று காலையில் தங்கப்பல்லாக்கு, மாலையில் தங்கக்குதிரைவாகனத்தில் பவனி.
அப்பன் திருப்பதியை சொல்லாமல் அழகர் கோவில் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? அழகர் கோவில் போகும்போது வழியில் இந்த அப்பன் திருப்பதி கோவில் வருகிறது. அழகர் கோவில் போன அன்று அந்தக் கோவிலைப் பார்த்தோம், அழகர்கோவில் போய்விட்டு வரும் போது அப்பன் திருப்பதியை தரிசனம் செய்தோம்.
அழகர் சித்திரை திருவிழாவுக்கு மதுரைக்கு வரும்போது, வரும் வழி எல்லாம் கல் மண்டபங்கள் இருக்கும். அதில் இளைப்பாறி இளைப்பாறி வருவார். அப்போது பூஜை செய்யும் மண்டகப்படிக்காரர்கள் இருப்பார்கள். அது போல் இந்த கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் ஒரு இரவு தங்கிச் செல்வாராம்.
வாசல் முன்பு கருப்பண்ணசாமி இருக்கிறார்., உள்ளே அழகிய நடைபாதை இருமருங்கிலும் அழகிய தூண்கள். நடுவில்நான்கு கல்தூண்நடுவில் பலிபீடம் இருக்கிறது.
சுவாமி சன்னதியில் தூணில் அழகிய சிற்பங்கள் உள்ளன. சுவாமி மூலவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய் காட்சி அளிக்கிறார். சின்னமூர்த்தமாய்.
உற்சவ சுவாமிகளுக்கும் மிக அழகாய் அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள்.
சக்கரத்தாழ்வார், விஷ்வக் சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், ராமர் ஆகியோரின் சிலைகள் உள்ளன.திருமலை நாயக்கர் தன் மனைவியுடன் இருக்கும் சிலை இருக்கிறது.
பட்டரிடம் அப்பன் திருப்பதி என்று ஏன் பெயர் வந்தது என்றால் திருப்பதி பெருமாள் மாதிரி அழகு அதனால் என்று சொல்லிவிட்டார். அவர் வழக்கமாய்ப் பணி செய்யும் பட்டருக்கு உதவிசெய்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன் தலவரலாறு தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை.
தினமலர் கோவில்கள் தலவரலாறு மூலம்படித்து தெரிந்து கொண்டதை இங்கு பகிர்கிறேன். முன்பு ஒரு காலத்தில் ஒரு அழகிய வாலிபன் வழி எங்கிலும் காணப்பட்ட இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக் கொண்டே குதிரையில் மதுரையம்பதிக்கு சென்று கொண்டு இருந்தார். ஊர் மக்கள் எல்லோரும் இவர் யார்?இயற்கையை ரசித்துக் கொண்டு போவதைப்பார்த்தால் கவிஞர், போலவும், கதை எழுதுபவர் போலும் இருக்கிறாரே என்று பேசிக் கொண்டார்கள். அந்த வழியில் இருந்த பெருமாள் கோவிலின் பட்டர்,ஆற்றில் பெருமாளின் திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்து வரும் போது, அவரைப் பார்த்து சிரித்தார் அந்த வாலிபர். அப்போது பட்டர்,” யாரப்பா நீங்கள்?”என்று கேட்டபோதும் பதில் சொல்லாமல் புன்சிரிப்பை பதிலாக தருகிறார், பட்டர் அதையே பதிலாக எடுத்துக் கொண்டு தன் வேலையைப்பார்க்க ஆரம்பிக்கிறார், வாலிபர் அவர்பின்னேயே போய் அவர் இறைவனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம்செய்வதை லயித்துப் பார்க்கிறார். பின் பூஜை ஆனதும் பிரசாதம் பெற்றுக் கொள்கிறார்,
மனநிறைவுடன். அப்போது நினைவுக்கு வருகிறது பட்டருக்கு நாம்
கேட்டகேள்விக்கு இந்த வாலிபன் பதில் சொல்லவில்லையே என்று திரும்பிப்பார்த்தால் மாயமாய் மறைந்து விட்டார். அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது வந்து மாயமாய் மறைந்தவர் மாயவனே !என்று.
அப்பனே என்று தேடியதால், பெருமாள் அப்பன் திருப்பதி சீனிவாசபெருமாள் ஆனார்.
மாயவன் இயற்கையைக் கண்டு ரசித்தது போல் நானும் கோவில் பக்கத்தில் இருந்த மரத்தில் பார்த்த பறவைகூட்டைப்பார்த்து ரசித்தேன்,
இயற்கை அழகும் சீதோஷ்ண நிலையும் நன்கு இருப்பதால் இங்கு வந்து இருக்கும் அயல் நாட்டுப் பறவை.
இன்னொரு கூட்டில் தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் பறவையின் இறக்கை மட்டும் தெரிகிறது.
புரட்டாசி மாதத்தில் எல்லோரும் பெருமாள் கோவில்களை தரிசித்து வருவதால் நானும் பெருமாள் கோவில்ப் பற்றி பகிர்ந்து கொண்டேன். அழகர் கோவில் போகும் போது போகும் வழியில் உள்ள அப்பன் திருப்பதியை கண்டு அவனருள் பெறலாம்
வாழ்க வளமுடன்.