திங்கள், 13 ஜூலை, 2009

குழந்தைகள் பாட்டு வேதாத்திரி மகரிஷி

சின்ன வயதுக் குழந்தைகளே!
சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்!
அன்னை தந்தை இருவருக்கும்
அன்பாய் வணக்கம் செலுத்துங்கள்!
பல்லைத் துலக்கி முகங்கழுவி
பரமனை மனதில் நினையுங்கள்!
எல்லை இல்லா ஆன்ந்தம்
எழுந்திடும் உங்கள் இளம்நெஞ்சில்.


உள்ளத்தன்பால் உருக்கமுடன்
உங்கள் ஆசான் போதித்த
பள்ளிக்கூடப் பாடத்தைப்
படிக்கவேண்டும் இருதடவை.
வீட்டுக்கணக்கைப் போட்டுப்பின்
விடைகள் சரியா எனப்பாரீர்!
நாட்டுக்குழைத்த நல்லோரின்
நினைவை என்றும் மறவோமே!

அம்மா கொடுக்கும் ஆகாரம்,
அளவாய் உண்ணவேண்டும் அதை.
சும்மா அதிகம் சாப்பிட்டால்
சுகத்தைக் கெடுக்கும் அறிந்திடுவோம்.
நேரம் தள்ளிப்போகாமல்
நினைவாய்ப் பள்ளிக்கூடம் போய்
ஆரம்பிக்கும் முன்னாலே
அமர்ந்திட வேண்டும் இடத்தினிலே.

ஊக்கத்தோடு படித்தோர்கள்
உயர்ந்தோர் ஆனார் பலர் அந்த
நோக்கத்தொடு கல்வி தனை
நன்றாய்க் கற்றுத்தேர்ந்திடுவோம்!
தினமும் மாலை வேளையிலே
திறமையாகப் பலர்கூடி
மனமுன் உடலும் நலமடைய
மகிழ்ச்சியோடு ஆடிடுவோம்.

அந்தி வேளை மேற்குப்புறம்
ஆகாயத்தைப் பார்த்திடுவோம்!
விந்தையாக மேகங்கள்
விதவிதமாகத் தோன்றிடுமே!
இரவு வேளை வானத்தில்
எங்கும் நட்சத்திர மயமே
பரவி மினுக்கு மினுக்கென்று
பார்க்க அழகாய்க் காட்சிதரும்.

நிலவு இருக்கும் இரவுகளை
நினைக்க நினைக்க ஆனந்தம்!
உலவி மேகம் சில நாளில்
உள்ளக் கருத்தை விளைவிக்கும்!
அம்மா அப்பா வளர்க்கின்றார்!
ஆசான் படிப்பைத்தருகின்றார்!
சும்மா வானம் பூமி இவை
சுகத்தைத் தருகிறது எல்லோர்க்கும்.

இறைநிலை என்ற பேராற்றல்
எங்கும் உள்ளது நீக்கமற.
மறைவாய் நின்று அது ஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்!
உணவை உண்போம் நாள்தோறும்
உடலாய் அதனை மாற்றுவதார்?
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவதார்?

உலகம், நிலவு, சூரியன்கள்,
உயிர்கள் அனைத்தும் படைத்தவர் யார்?
பலவும் ஒழுங்காய் முறை பிறழாப்
பாங்கில் இயக்கி வருவது யார்?
அவரே தெய்வம்! பேராற்றல்!
அறிவைக்கொண்டே வணங்கிடுவோம்!
எவரும் அவரின் அருளாலே
இன்பம் பெற்று வாழ்கின்றார்.

குழந்தைகள் ,கடவுளையும், பெற்றோர்களையும் வழிபட வேண்டும் என்றும்,
பாடம் கற்கும் முறை,உணவு உண்ணும் முறை,கூடி விளையாடும் முறை ஆகியவற்றை நன்கு உணரவேண்டும் என்றும்,இயற்கையைக் கண்டு மகிழவேண்டுமென்றும்,நீக்கமற நிறைந்த இறையாற்றலைத் தங்கள் அறிவைக்கொண்டு வணங்க வேண்டுமென்றும் மகரிஷி கூறுகிறார்.இவற்றைப் பின்பற்றிக் குழந்தைகள் வளர்வது நல்லது.